நீதான் முன்னின்று செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டாலும் பரிமளம் புது மருமகள் அருகிலேயே நின்று எல்லாம் எடுத்துக் கொடுத்து எப்படி செய்ய வேண்டும் என்று பொங்கல் வைக்க உதவியதால் சச்சரவுகளோ பிணக்கோ இன்றி அமைதியாய் பொங்கல் வைத்து நிமிர்ந்தாள் கீர்த்தனா.
“இறக்கி வச்சிட்டு அஞ்சுவை போய் கூட்டியா அப்படியே எல்லாரையும் வரச் சொல்லு நல்ல நேரத்துல சாமி கும்புடனோம்.” என்று கீர்த்தியை அனுப்ப,
பானையை கீழே இறக்கி வைத்த கீர்த்தி பார்வையை சுழற்ற, பெரிய நங்கை மட்டும் பூஜை செய்ய ஏதுவாய் அனைத்து ஏற்பாடுகளையும் அம்மன் முன் நின்று செய்து கொண்டிருந்தாள். மற்ற அனைவரும் சற்று தள்ளி ஆளுக்கு ஒரு திசையில் நிற்பது கண்ணில் பட்டது.
முதலில் நேராக மாமனாரிடம் சென்றவள் அவரை அழைக்க, தெரிந்தவருடன் பேசிக்கொண்டிருந்தவர் பேச்சை முடித்துக்கொண்டு நகர்ந்து, “பெரியவன்ட்ட சொல்லிட்டு நீ அஞ்சுவை கூப்புடு கண்ணு. எல்லாரையும் பெரியவன் கூட்டியாந்துடுவான் நீ அலையாத…” என்க, சுவாமிநாதனைத் தேடி அவள் செல்லும் போது அவனே நேரில் வந்தான் அருண் தோளில் கைப்போட்ட வண்ணம்.
அருணைக் கண்டதும் அவள் நடை தன்னால் நின்று விழி விரிந்தது. இதயத்தின் வேகம் கூடி தடதடக்க, அவனையே வெறித்துப் பார்த்தாள் கீர்த்தி. அதற்குள் அவளை சமீபித்திருந்த அருணின் பார்வை இவள் மீது விழுந்ததும் அவன் நடையும் தடைபட்டது.
அவள் முகத்தை சந்திக்க திராணியற்று பார்வையை விலக்கி இலக்கின்றி எங்கோ பதித்தவன், “அதான் எல்லாம் மூஞ்சிடுச்சே நான் கிளம்புறேன் அண்ணா. ஊருபட்ட சோலி இருக்கு நம்ம இடத்துல…” என்று கிளம்புவதில் குறியாய் இருந்தான்.
அவனின் அவதி புரியாத சுவாமிநாதனோ, “இப்படி நெருக்க வந்து உடனே கிளம்புனா எப்புடி? உன்ற தோஸ்து கண்ணாலத்துக்கு எட்டிக் கூட பாக்கல… நான் லீவு கொடுக்கலைன்னு உன்ற தோஸ்து மூஞ்சயை தூக்குறான். அவனைக் கூட பாக்காம கிளம்புனா எப்படி?” என்று அவனை அஞ்சன் இருக்கும் புறம் இழுத்துச் சென்றான்.
விழி பிதுங்கி குனிந்த தலை நிமிராது லாவகமாய் அருண் கீர்த்தியை தவிர்த்து நகரப் பார்க்க, சுவாமிநாதனோ கீர்த்தியை கண்டவுடன் அவனை அவளிடமே அழைத்துச் சென்று, “இவன் அஞ்சுவோட சிறுசுலேந்து ஒண்ணா வளந்தவன்… நம்ம தொழிலையே வேலை போட்டு பக்கத்துல வச்சிருக்கோம். அஞ்சுகிட்ட ஏதாவது காரியம் ஆகணும்னா இவனைத் தான் உருட்டுவோம்.” என்று சொல்லிச் சிரிக்க, அதை கேட்டுக்கொண்டிருந்த இரு இதயங்களும் வலியில் வெம்பியது.
ஆணி படுக்கையில் இருப்பது போல் உடல் முழுதும் ரணமாய் குத்த அருணால் அங்கு நிற்கவே முடியவில்லை. கீர்த்தியோ சுவாமிநாதன் சொன்ன செய்தியை அசைபோட்டபடி, “பொங்கல் வச்சாச்சு சாமி கும்பிட கூப்பிட்டாங்க.” என்று செய்தி சொல்ல,
“நீ போ மா… நாங்க எல்லாரையும் கூட்டிட்டு வரோம்.” என்றவன் அருண் தோளில் இருந்து கை எடுக்காது தன் தம்பிகளுக்கு போன் போட்டு அழைத்தான்.
புருவம் சுருக்கி தெளியாத பார்வை பார்த்துவிட்டு கீர்த்தி அடி மேல் அடி வைத்து அங்கிருந்து நகர, அகம் முழுதும் அருணின் வருகையால் சஞ்சலம். அவனுடனான பழக்கமும் பிணக்கும் பிரிவும் வரிசையாய் மனதில் உலா போனது.
“என்னாச்சு? ஏன் சோர்வா இருக்க கீர்த்தி? பசிக்குதா?” என்றபடி அவளை நெருங்கி வந்தாள் குருங்கை. அவளது கேள்விக்கு இவள் மறுப்பாய் தலையசைக்க, பின்னோட ஒவ்வொருவராக வர அஞ்சனும் அவள் அருகில் வந்து நின்றான். உடன் அருண் அவன் அருகில்.
அருணை அஞ்சன் அருகில் பார்த்ததும் கீர்த்தியின் மனம் வெதும்பி கண்ணில் ஈரம் சுரப்பது போல் இருக்க இமைகளை பட்டென மூடிக்கொண்டாள்.
அவர்களுக்கான சிறப்பு பூஜை என்பதால் கீர்த்தி முதலில் நிற்க வைக்கப்பட்டிருக்க உடன் அஞ்சன், அருண், சுவாமிநாதன் என குடும்பம் நீண்டு நின்றது.
பூசாரி தீபாராதனை காட்டியதும் வீட்டுப் பெண்களை அழைத்து படைக்கச் சொல்ல அனைத்தையும் கீர்த்தியையே செய்ய வைத்தார் பரிமளம்.
அருணை காணும் முன்பு இருந்த தெளிவு பின் சென்றிருக்க, மாவிளக்கு ஏற்றி நைவேத்தியம் செய்யும் போது அவளது கை நடுக்கம் கொண்டது. நடுக்கம் தடுமாற்றையும் சேர்த்து கொண்டுவர தவிப்புடன் சுற்றிப் பார்த்தாள்.
“பொறுமையா செய் கண்ணு… ஒன்னும் அவசரமில்லை.” என்று பரிமளம் ஊக்க, எச்சில் கூட்டி விழுங்கியவள் தவிப்புடன் அனைத்தையும் செய்து முடித்து வர, அடுத்த சஞ்சலம் காத்திருந்தது.
“மாலை மாத்தி வகுட்டுல தாலில குங்குமம் வச்சிவிடு அஞ்சு.” உத்தரவு பறக்க, அஞ்சன் தன் முன் நீட்டப்பட்ட மாலையை வாங்காது கீர்த்தியை ஆராய்ச்சியாய் பார்த்தான்.
இருக்கும் இடம் உணர்ந்து அவன் மாலையை வாங்கிக்கொள்ள, கீர்த்தியின் கையிலும் மாலை கொடுக்கப்பட்டது.
ஆராயும் பாவத்தை விடாது அவள் விழிகளை நோட்டமிட்டபடி அவள் கழுத்தில் இவன் மாலையிட, கீர்த்தியின் பார்வை அவன் புறம் இருந்தாலும் அது அவனின் பின்னால் நின்ற அருணிடம் நிலைத்து பின் அஞ்சனிடம் வந்தது. தன் முன் லேசாய் தலை சாய்த்து மாலை வாங்க குனிந்தவனை காத்திருக்க விடாது கீர்த்தி அஞ்சன் கழுத்தில் மாலை இட, பார்வை மீண்டும் அருணிடம் குற்றம்சாட்டும் பாவத்துடன் பதிந்தது.
குங்குமம் நீட்டப்பட, அதை விரலில் ஒத்தி அவளது நெற்றியில் பட்டும்படாமல் வைத்துவிட்ட அஞ்சன் அவள் வகுட்டிற்கு வரும் போது அழுத்தம் கொடுத்தான். பாவையின் பார்வை தன்னிடம் இல்லாது வேறு எங்கோ இருப்பதை உணர்ந்ததே அந்த அழுத்தத்திற்கு காரணம். ஆனால் துளியும் அவள் தன் பின் நிற்கும் அருணைத் தான் பார்க்கிறாள் என்ற எண்ணம் தோன்றவே இல்லை அவனுக்கு.
“தாலியில வச்சிவுடு…” என்று பரிமளம் அருகில் வந்து உதவ, கீர்த்தியின் கவனம் தாலிக்கொடியில் சென்றது.
“ரெண்டு பேரும் அம்மனை வேண்டிட்டு மூணு முறை சுத்தி வாங்க…” என்ற பூசாரியின் சொல்லை ஏற்று இருவரும் கோவிலைச் சூற்ற, நிசப்தம் சூழ்ந்து கொண்டது இருவருக்கிடையில்.
இடைவெளி விட்டு நடந்த இரு உள்ளங்களின் இடைவெளி பெரிதாய் இருக்க அதை குறைக்க முற்படவில்லை இருவருமே. முன்பாவது அஞ்சன் நெருக்கம் கூட்ட நேரம் பார்த்து காத்திருந்தான். இப்போதோ இந்த திருமணமே கட்டாயமாக இருக்குமோ என்ற எண்ணம் அவனை தள்ளி நிறுத்தியது. அடுத்து என்ன செய்ய என்ற புரிதல் இல்லை.
ஏக்கம் ஏகத்திற்கு இருந்து அவளை படுத்தியது எல்லாம் இப்போது அவனை படுத்தியது. அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற எண்ணமே அவனை உருக்க அதற்கு மேல் யோசிக்க மாட்டேன் என்று முரண்டியது மனமும் சிந்தையும். அது ஒரு அழுத்தத்தை குழப்பத்தை தர, அந்த தவிப்பில் எத்தனை முறை கோவிலை சுற்றினோம் என்பதை மறந்து நான்காம் முறையாய் சுற்றப்போக,
“மூணு முறை சுத்தியாச்சு… நில்லுங்க.” என்றாள் கீர்த்தி.
மனம் போன போக்கின் யோசனையில் இருந்தவன் அதை கவனிக்காது அடி எடுத்து வைக்க, வேகமாய் அவன் கை பற்றி நிறுத்தினாள்.
என்ன? என்பதாய் அஞ்சன் திரும்பி கேள்வியாய் பார்க்க, கீர்த்தியின் பார்வையோ எதர்ச்சியாய் சற்று தொலைவில் நின்று தங்களையே பார்த்துக் கொண்டிருந்த அருண் மீது பதிந்தது.
அதற்குள் சுற்றம் உணர்ந்து அவள் எதற்கு நிறுத்தினாள் என்பதை யூகித்து புரிந்து கொண்ட அஞ்சன் “மூணு முறை சுத்தியாச்சா?” என்றபடி மாலையை கழட்டி அவளிடம் கொடுத்துவிட்டு நகர, கீர்த்தி தன்னுடைய மாலையையும் கழட்டி அங்கிருந்த கட்டைப்பையில் வைத்துவிட்டு ஒரு முடிவுடன் அஞ்சனிடம் சென்றாள்.
அருணிடம் பேச அப்போதுதான் நேரம் கிடைத்திருக்க, “எங்குட்டு போயி தொலைஞ்சு? கண்ணாலத்துக்கு கூட வரல…” என்று அஞ்சன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அஞ்சனை நெருங்கிய கீர்த்தனா உரிமையாய் அவன் கை கோர்த்து லேசாக தோள் சாய்ந்து அவனை நிமிர்ந்து பார்த்து, “எனக்கு பசிக்குது… சாப்புடலாமா?” என்று கேட்க, புரியாது அதிர்ந்து பார்த்தான் அஞ்சன்.
அவன் அதிர்வில் இருப்பதை உணர்ந்த கீர்த்தி, கோர்த்திருந்த கரத்தினுள் அழுத்தம் கூட்ட, தொண்டையை செறுமியவன், “சாப்பாடு வந்துடுச்சு. சாப்பிடலாம் வா…”
பதில் கூறியபடி அவளுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தவன் அருணின் நினைவு வந்தவனாய் திரும்பி, “நீயும் வா சாப்புட்டு போகலாம்.” என்று அழைக்க,
கீர்த்தியும் புருவம் உயர்த்தி அருணைத் தான் பார்த்து நின்றாள். கூடவே பார்வையில் ஒரு எள்ளல். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என்ற பார்வை அருணை நிலைகுலைய வைக்க, அவனை இன்னும் இன்னும் படுத்தி வைத்தாள் பாவை. பாவையின் செயலில் அருணிற்கு சாப்பாடு தொண்டைக் குழியில் இறங்க மறுத்தது.
சாப்பிட அமர்ந்தவளுக்கு இலை போட்டு தானே உணவை எடுத்து வந்து அஞ்சன் பரிமாற, சங்கடமாய் நிமிர்ந்த கீர்த்தி, “இன்னும் யாரும் வரலையே?”
“பந்தி போட்டாச்சு எல்லாரும் வருவாங்க… நீ முதல்ல சாப்புடு. அருண் நீயும் உக்காரு…” என்று அருணையும் கீர்த்திக்கு எதிர் பந்தியில் அமர வைத்து அஞ்சனே இருவருக்கும் பரிமாறினான்.
அஞ்சன் சொன்னது போல் ஒவ்வொருவராய் வர அனைவருக்கும் அவனே பரிமாறினான்.
“இன்னைக்கு என்ன அதிசயம் எல்லாம் நடக்குது… கொழுந்தனார் பரிமாற செய்றார்? இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?” என்று நடுநங்கை அஞ்சனை ஏறிட,
“வேண்டாமா… நீங்களே போட்டுக்கோங்க…” என்றவன் அவள் இலையில் வைக்கப்போன இட்லியை அதன் செம்படத்திலேயே போட்டுவிட்டு கீர்த்தியின் அருகில் சென்றுவிட்டான்.
‘என்ன இப்படி முறுக்கிக்கிறான்.’ என்று பார்த்த கீர்த்தி சாப்பாட்டைத் தொடரும் முன் மீண்டும் அருணை தொட்டு மீண்டது விழிகள்.
“இம்புட்டு ஏத்தம் ஆகாது உனக்கு…” என்று முணுமுணுத்த பரிமளம் சாப்பாட்டில் கை வைக்காது அவரே பரிமாற எழ,
“நீங்க சாப்புடுங்க அத்தை…” என்ற கீர்த்தி அஞ்சனை ஏறிட்டு, “ஏனுங்க நாங்களே பசியில இருக்கோம்… கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.” என்றிட, அவளின் வார்த்தைக்காய் அனைவருக்கும் மூன்று இட்லி கொஞ்சம் அதிகப்படியாகவே பொங்கல் என்று ஒரே முறையில் அனைத்தையும் வைத்துவிட்டு மீண்டும் கீர்த்தியிடம் வந்து அமர்ந்து கொண்டான்.
அருகில் இருக்கும் தன்னவளை மனதிற்குள் நிறைத்த அஞ்சன், “எல்லாரும் பசியில இருக்காங்கனு தெரியுது… ஆனா…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் உதட்டை இனிப்பு தீண்டியிருந்தது.
அனிச்சையாய் இதழ் பிரித்து அதை வாங்கிக்கொண்டவன் இன்ப அதிர்வுடன் கீர்த்தியை ஏறிட, இம்முறை சட்னி சாம்பாரில் நனைத்த இட்லி அவன் இதழ் திறக்க காத்திருந்தது.
“பசி தாங்க மாட்டீங்க நேரத்துக்கு சாப்டுடுவீங்கன்னு தெரியும்… இருந்தாலும் எனக்காக கொஞ்சமா இப்போ வாங்கிக்கோங்க.” என்று இன்னும் இரு கவளம் ஊட்டிவிட்டு, தன் இடையில் இருந்த கர்சீப்பால் அவன் வாயை துடைத்துவிட, ஓஹோ என்ற ஆரவாரம் அனைவர் செவியையும் தீண்டியது.
ஆரவாரத்தில் லேசாக வெட்கப் புன்னகை உதிர்த்த அஞ்சன் அவள் இலையிலிருந்து கொஞ்சம் சக்கரை பொங்கல் எடுத்து அவளுக்கு ஊட்டிவிட, அருணிடம் பார்வையை நிலைக்க விட்டபடி இதழ் பிரித்து அஞ்சன் ஊட்டியதை வாங்கிக்கொண்டாள் கீர்த்தனா.
அருண் நிமிர்ந்து பார்க்க முடியாது கைக்கும் வாய்க்கும் மட்டும் வேலை கொடுக்க
“நான் உங்களுக்கு இட்லியும் ஊட்டிவிட்டேன்… நீங்க கொஞ்சோண்டு இனிப்பு கொடுத்துட்டு போங்கடிக்குறீங்க…” என்று கீர்த்தி போலியாய் சலிப்பது போல் முகம் சுருக்க, அவளின் உரிமையில் சிலிர்த்த அஞ்சன் அவள் இலையில் இருந்த அனைத்தையும் தானே ஊட்டிவிட்டான்.
அவளின் இந்த உரிமையான பேச்சில் தூண்டிவிடப்பட்ட இன்னொரு ஜீவனான அருண் நிமிர்ந்து அவளைப் பார்த்திட, வெற்றிப் புன்னகை கீர்த்தியிடம்.
‘அனுபவி ராஜா அனுபவி… இதுக்குத் தானே என்னோட அன்பை கொன்ன…’ என்று பழிவாங்கும் விதமாய் இருந்தது அவளது எண்ணமும் செயலும்.
“எங்குடும்பம் இதே மாதிரி எப்போதும் இருக்கணும் அம்மா…” என்று வாயார வேண்டிவிட்டு பழனிவேல் வேனில் முதலில் ஏற, பூஜை சாமான்கள் அனைத்தையும் வேனில் ஏற்றினான் அருண். அஞ்சன் கீர்த்தியின் பின்னோடே சுற்றி அவளுடன் வேனில் எறியபின் நண்பனிடம்,
“ஒழுங்கா வூட்டுக்கு வா…” என்ற கட்டளையுடன் விடைபெற, ஏன் இங்கு வந்தோம் என்று புறப்பட்ட வண்டியை பார்த்தபடி நொந்தான் அருண்.
அம்மனுக்கு சாத்த நம் கடையிலிருந்து புதிதாய் ஒரு புடவை எடுத்து வா என்று சுவாமிநாதன் கட்டளை போல் சொன்னதால் மறுக்க முடியாமல் கோவிலுக்கு வந்த அருணுக்கு அந்நாளை அச்சந்திப்பை மறக்க முடியாத சந்திப்பாய் மாற்றியிருந்தாள் கீர்த்தனா.
வலி வேதனை அவளுக்கு மட்டும் என்று உழன்றவளுக்குத் தெரியவில்லை அவளுக்கு நிகராய் அவனும் துடித்துக் கொண்டிருக்கிறான் என்று. நம்பி இருந்த பெண்ணை எக்காரணம் கொண்டும் விடக்கூடாது என்ற உறுதி இல்லாதவன் துடித்து என்ன பயன்?
அருணின் எண்ணத்திற்கு முரணாய் இருந்தது அஞ்சனின் எண்ணம். வீட்டிலிருந்து கிளப்பி வந்தபோது இருந்த மனநிலை முற்றிலும் மாறி கீர்த்தியின் செயலால் இதயத்தில் இதம் புகுந்து கொள்ள, இந்த நிமிடம் இன்னும் நீளாதா என்ற ஏக்கத்துடன் அவள் விரலிடுக்கில் தன் விரல்களை புகுத்தி அழுந்த பற்றிக்கொண்டான்.
‘ச்ச கொஞ்ச நேரம் நங்கைங்க பேச்சை கேட்டு எங்கண்ணை என்னெல்லாம் நினச்சிட்டேன்.’ என்று மானசீகமாய் தலையில் கொட்டிக்கொண்டவன் அவளை நன்கு உரசியபடி நெருங்கி அமர்ந்தான்.
மனையாளின் செயலில் உரிமையில் நெகிழ்ந்த நெஞ்சம் உடலையும் நெகிழ்த்த அவளை சீண்டத் துடித்தது அகம். கோர்த்திருந்த விரல்களை பிரித்தெடுத்தவன் ஒரு கையை அவள் தோள் சுற்றி போட்டு அணைக்க, மறு கரத்தால் அவள் கரத்தை பிடித்துக்கொண்டான்.
கீர்த்தி அவனை ஏற்க முடியாமல் அவனை தள்ளிவிடவும் முடியாமல் என்ன செய்வது என்று புரியாமல் திணற, அவன் இருந்த மனநிலையில் இதெல்லாம் கருத்தில் பதியவில்லை. மாறாக அந்த இலகிய மனநிலை துள்ளலை கொண்டுவர,
“ட்ரைவர் அண்ணா பாட்டை போட்டுவிடுங்க…” என்று குரல் கொடுக்க, முன்பு நிறுத்திய இடத்திலிருந்து மீண்டும் ஓலித்தது பாடல்.
என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும்
நான் கண்ண தொரக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்
பாடல் வரிகளுக்கு ஏற்ற வண்ணம் அவள் விரல்களுக்குள் மீண்டும் தன் விரல்களை கோர்த்து இறுக்கி பிடித்துக்கொண்டான் அஞ்சன். அகம் முழுதும் தன் அம்மணிக்கு தன்னை பிடிக்கும் என்ற எண்ணம் பலமாய் வந்து ஒட்டிக்கொண்டது. பார்வையும் உரியவளிடத்தில் காதலாய் அழுத்தப் பதிந்தது. இதழும் விரிந்து இன்பத்தை பகிரங்கமாய் வெளிச்சம் போட்டு காட்டியது.