சொல்லிவிட்டு ப்ரணவ் ஆட ஆரம்பித்தான். தன் குட்டி ‘டையப்பர் பாட்டமை’ ஆட்டி ஆட்டி..
அமுதாவும் ப்ரணவும் பாடம் படித்துக் கொண்டிருந்த அழகு அது. குட்டி பையன் ஆடவும் அமுதா சிரிக்க அவனுக்கு இன்னுமே ஜோராகி விட.. நன்றாக ஆட ஆரம்பித்தான். அவள் விழுந்து சிரிக்க அவள் வயிற்றின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு..
“ம்மா.. சிரிச்சி.. ம்மா சிரிச்சி” என்று அவளை உற்சாக படுத்தி அவள் கழுத்திலும் வயிற்றிலும் இன்னும் கிச்சு கிச்சு மூட்டி அவனும் சிரிக்க, பார்க்கவே நூறு கண்கள் வேண்டும் அந்த பரவசத்தை.
“டேய் குட்டி பையா, அம்மாவ விடுடா… இரு உன் கிட்ட வருது பார் டிக்கிள் மான்ஸ்டர்.. வருது வருது..” என்று அவள் விரல்களைக் காற்றில் மாவு பிசைவது போல் பிசைந்து கொண்டே அவன் வயிற்றருகில் செல்ல…
“நேனா.. நேனா.. ப்பா.. டிக்கி மான்சர்..” என்று அர்ஜுனிடம் அவன் உருண்டு புரண்டு ஓட.. இவள் துரத்த..
குழந்தையின் மழலை பேச்சும் சிரிப்பும் வீட்டை வீடாக மாற்றியது. அர்ஜுனுக்கு வீட்டில் இருப்பதில் அலாதி பிரியம். சோஃபாவில் அமர்ந்திருந்தாலும் கண்ணும் காதும் மகனையும் அவன் புது அம்மாவையும் தான் நோட்டமிட்டுக் கொண்டிருக்கும்.
அமுதா வந்து மூன்று மாதங்களாயிருக்க முதலில் அவள் மேல் எரிச்சலிலிருந்தவன் அவள் பார்த்துப் பார்த்து வீட்டுக் காரியங்களையும், ப்ரணவோடு அவனையும் கவனிக்க அவனுக்கு அவளைப் பிடிக்க ஆரம்பித்தது.
அவனுக்கு அவளைப் பற்றிச் சொல்லப்பட்ட விஷயம் அனைத்தும் பொய் என்பது தெளிவாய் புரிந்தது.
அவனுடைய எந்த வேலையும் தடைப் படுவதில்லை. அவன் ஓடி முடித்து வந்ததும் க்ரீன் டீயும் பேப்பரும், ரெடியாக கையில் வந்துவிடும். குளித்து முடித்து வெளிவந்தால் அன்றைக்குப் போடவிருக்கும் சட்டையும் பேண்டும் இஸ்திரி போடப்பட்டு அதன் பெல்டோடு மெத்தையில் அவனைப் பார்த்துச் சிரிக்கும்.
சாப்பிட வந்தமர்ந்ததும் சிரித்த முகமாய் மகனும் கூடவே அமர்ந்து உணவருந்துவான். ருசியாய் வயிறு நிறைய உண்பான். உள்ளமும் உடலிலும் புது உற்சாகத்தை தழுவியது. வேலையில் நிம்மதியாய் கவனம் செலுத்தினான். இப்படியே போனால் இந்த வருடம் அடுத்த உயர் பதவியை அடைந்துவிடலாம்.
ஆஃபீஸ் போகும் போது சிரித்த முகமாய் மகனை இடுப்பில் வைத்துக் கொண்டு, “அப்பாக்கு டாட்டா சொல்லுங்க” என்று அவனோடு ‘டாட்டா’ காட்டுவாள். மாலை வீட்டிற்கு வரும் போதும் அதே பளிச்சென்ற புன்னகை முகத்தோடு கதவைத் திறப்பாள். முகம் கழுவி உடை மாற்றி வந்ததும் சூடாக ஃபில்டர் காபி வந்துவிடும்.
எப்பொழுதும் அவளிடம் மல்லிகை மணம் இருக்கும். புது பொலிவுடனே காணப்படுவாள். காட்டன் சேலை தான் தினமும். பார்க்கவே ஆசையாய் இருக்கும் புன்னகை முகம்.
இதெல்லாம் மற்றவருக்குச் சாதாரண விஷமாக இருக்கலாம் ஆனால் அர்ஜுன் வாழ்க்கையில் இது அவனுக்குக் கிடைத்த வரம்.
மொட்டை மாடியில் பாய் விரித்து கையை தலைக்கு வைத்து படுத்திருந்த அர்ஜுன் நெஞ்சில் ப்ரணவ் அமர்ந்து ஏதோ மழலையில் கதை அடிக்க, அமுதா மாடியில் ஓரத்தில் இருக்கையில் அமர்ந்து வெளியே தெரு விளக்கின் வெளிச்சத்தில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன டா உன் பொண்டாட்டி.. ஒரு வேல செய்யரது இல்ல.. விடியா மூஞ்சி.. சோம்பேரி.. எந்நேரமும் தூங்கியே கழிக்கரா..” மாலை அவன் வந்ததும் அம்மா புகார் வாசித்தாள்.. என்றும் போல் அன்றும்!
நினைத்தவன் கண் மாடியைத் தான் பார்த்தது. பெருக்கி சுத்தமாய் வைத்திருந்தாள். மாடியைக் கூட பெருக்குவார்கள் என்று இவள் வந்த பின் அறிந்து கொண்டான்.
“எங்க இருந்து டா பிடிச்ச இந்த விடியா மூஞ்சியா? ஒரு வேலை செய்யரது இல்ல.. சமையல் வாய்க்கு விளங்கலை.. கூப்பிட்டா என்னனு திரும்பி பாக்கரது இல்ல.. என்னதான் கண்டியோ?” அம்மா தான்.. வேறு யார்?!
“அம்மு.. டின்னர் ஆச்சா?” அவன் கேட்கவும், எழுந்து அவன் அருகில் வந்தவள், “ம்ம்.. மாவு பெசஞ்சு வச்சிருக்கேன். குர்மா ரெடி. சாப்பிட உக்காரதுக்கு ஐஞ்சு நிமிஷம் முன்னாடி போனா சூடா சப்பாத்தி போட்டுடுவேன்… ப்ரணவுக்கு பால் சாதம் கொடுத்துட்டேன். உங்களுக்கு பசிக்குதா? நான் கீழ போய் சப்பாத்தி போடவா?”
“ம்ம்.. நீ ஆரம்பி. நான் சொன்னதில்ல.. இப்போ சொல்லணும்னு தோணுது.. நீ ரொம்ப டேஸ்ட்டா சமைக்கர. நிறைய வெரைட்டீஸ் பண்ற.. உன் சமையல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! எல்லாத்தையும் விட முகம் கோணாம சாப்பாடு பரிமாறுர!”
முகமலர “தாங்க்ஸ்” என்றாள்.
“என்ன தாங்கஸ்? உன்னால இந்த மூனு மாசத்தில ரெண்டு கிலோ போட்டிருக்கேன். நாளையில இருந்து எக்ஸ்ட்ரா டூ கிலோமீட்டர்ஸ் ஓடணும்… இல்ல அன்னத்தை சமைக்க சொல்லணும்!”
சோழி சிதறியது போல் அவன் மனம் கவரச் சிரித்தாள்.
“நான் ஒரு பத்து நிமிஷத்தில வந்துடுறேன்… உனக்கும் சேர்த்தே போடு சேர்ந்தே சாப்பிடலாம்” சொல்லி முடித்து அவள் முகம் பார்க்காமல் மகனோடு விளையாட ஆரம்பித்தான்.
அவள் அவனையே பார்த்து நின்றாள். கண் ஈரமாவதை அவளால் தவிர்க முடியவில்லை. ‘இவனா? என்னையா? நிஜம் தானா?’ உள்ளுக்குள் எழுந்த கேள்விகள் அவளை அசைய விடவில்லை.
“என்ன பார்த்துட்டு நிக்கர.. போ போய் சப்பாத்தியைப் போடு.. இருக்கரது ரெண்டு பேர்.. எதுக்கு தனித் தனியா சாப்பிட்டுட்டு.. அது தான் உன் கூட.. போ போ..” என்றான் புன்னகை முகமாய்.
“எங்க இருந்து டா இவளை பிடிச்ச.. நாலு பேர் முன்ன மானமா இவ தான் மருமகனு சொல்ல முடியுதா? அவளும் அவ உடுப்பும்.. ஒரு வேல செய்யரது இல்ல.. துணி மட்டும் எப்பவும் அழுக்கு.. மாத்தி தொலைச்சா என்ன? விடியா மூஞ்சி..” இப்படி தான் அவன் அம்மா பேசுவாள் எப்பொழுதும். அம்மாவிற்கு அவன் மனைவியைச் சுத்தமாய் பிடிக்காது. அவள் ஏழை என்பதாலா? இருக்கலாம்.
‘அவளும் அம்மாவுக்குப் பிடித்த மாதரி கொஞ்சம் மாறி இருக்கலாமே? உடையிலும் பழக்கத்திலும்! என்றும் பழையதைத் தான் கட்டுவாள். ‘வாங்கி கொடுத்த புதிதைக் கட்டேன்.. முகம் கழுவி தலை வாரி பூ வைத்தால் என்ன?’ என்று எத்தனை முறை கேட்டிருப்பான்? எனக்கே அவள் மனைவியாய் மாறவில்லை.. பின் தானே மற்றவர்களுக்கு.. ரொம்ப பேராசைடா உனக்கு..’ அவனுக்கே சொல்லிக் கொண்ட நாட்கள் நினைவில் வந்து போனது.
அவளை எங்கிருந்து கூட்டிவந்தான்? மனக் குதிரை சீரி பாய்ந்தது 24 மாதங்கள் முன்.
தோழன், அன்புக்கரசு ரெயில்வே க்ராசிங்கில் இறந்து விட, அவனை மூட்டையாய் கொண்டு அவன் வீட்டிற்குச் சென்றவர்களில் இவனும் ஒருவன். அங்கு தான் பார்த்தான் அவன் மனம் கவர்ந்தவளை, அன்புக்கரசின் சகோதரி! இன்னும் அவளுக்கு விஷயம் தெரிந்திருக்கவில்லை. அவள் அப்பா மட்டுமே அறிந்திருந்தார் மகன் நிலையை!
அன்புக்கரசு பொள்ளாச்சியைச் சேர்ந்தவன். அவன் உடல் வந்த வாகனம் முன் இவனும் இன்னும் மூன்று தோழர்களும் அன்பு வீட்டை அடைந்து விட்டனர். முகம் கழுவ வீட்டின் பின் அர்ஜுன் போக அங்கு தான் பார்த்தான் அவளை. குளித்து முடித்து வெளியில் வந்தவள் அங்கு தான் முடியை உலர்த்திக்கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும் அழகாகப் புன்னகைத்தாள்.. “வாங்க.. அண்ணன் ஃப்ரெண்டு தானே?” என்றாள். அவனுக்குத் தான் பாவமாய் போனது. சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் ஒரு விரக்தியான சிரிப்பைச் சிந்தினான் அவளுக்காக.
இருதினம் அங்கிருந்து எல்லாம் முடிந்தபின் தோழர்களோடு கிளம்பினான்.
அவளின் முடியே ஒரு தனி அழகு. அழகான நீள நீளமான சுருள்கள். பார்த்ததும் கொன்றை கொத்து கொத்தாய் தொங்குவது போலிருந்தது அவனுக்கு.
சற்று பூசின உடல் வாகு, வசிகர முகம். சுண்டி இழுக்கும் புன்னகை. மஞ்சள் தாவணியை அழகாய் உடுத்தியிருந்தாள். அப்பொழுது தான் விரிந்த மலர் போலிருந்தாள்.
அவனோடு வந்த பின் தான் ஒழுங்காகத் தன்னை பராமரித்து கொள்ளவில்லையோ.. அன்பு வீட்டில் வசதி எல்லாம் இல்லை. ஏழை விவசாயி குடும்பம்! அவன் படிப்பில் தான் அப்பா காசை எல்லாம் கொட்டினார். மகன் தலை எடுத்து குடும்பத்தை தூக்கி நிறுத்துவானென்று!
அர்ஜுன் நினைத்ததைச் சாதிக்கும் ரகம். அவன் வீட்டில் செய்த ரகளையில் அடுத்த மாதமே திருமணம் முடிந்தது. அவளுக்கு அண்ணன் மறைவே தாங்க முடியாத நிலையில், திருமணம் மனதில் பதியவில்லை. அப்படி தான் நினைத்தான். அர்ஜுனுக்கு அவள் நிலை புரிய ஒரு மாதம் அவளை அவள் போக்கில் விட்டுவிட்டான். அப்பொழுது அவன் வேலை கோயம்புத்தூரில்.. அதனால் குடும்பத்தோடு ஒன்றாய் வசித்து வந்தான்.
வேலை விஷயமாய் அதிகம் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் என்று சென்றுவருவான். முதல் ஒரு மாதம் அவளுக்கு ஆருதலாய் இருக்க வேண்டிய தருணம் அவன் அதிக வேலையாய் சுற்றித் திரிந்தான். நேரத்திற்கு வீட்டிற்கு வருவதற்கு அவனுக்குக் காரணம் இருக்கவில்லை. எப்படியும் மனைவி அழுது கொண்டு, இரவில் ஏதாவது முக்கில் முடங்கி இருப்பாள்… அவனைப் பார்த்தால், எங்கே அறைக்குக் கூப்பிட்டு விடுவானோவென்று! அறைக்கு வராமல் இருக்க ஏதாவது காரணம் கூறிவிடுவாள்.
அவளிடம் பேசக் கூட முடியாது. ஒன்று வீட்டில் அம்மாவிற்கு இல்லை பாட்டிக்குச் சேவை செய்து கொண்டிருப்பாள். அவன் கிளம்பும் நேரம் வீட்டைச் சுற்றி ஏதாவது வேலையில் இருப்பாள். புல்லை பிடுங்குவதோ.. நாயைக் குளிப்பாட்டி விடுவதோ. ஏதோ ஒன்று இருந்துகொண்டே இருக்கும் அவள் செய்ய!
சனி ஞாயிரானால்.. எப்பொழுதும் அடுப்பங்கரையில் வேலை. இல்லை மதனியின் மூளை வளர்ச்சி குன்றிய மகளோடு சுற்றிக் கொண்டிருப்பாள். கேட்டால் அது தன் கடமை என்பாள்.. ‘அப்பொழுது நான்? உன் கடமையில் நான் இல்லையா?’ அவனுக்குக் கேட்க ஆசைதான்.. அதற்குத் தனிமையில் அவள் அவனிடம் மாட்டவேண்டுமே?
வீட்டிற்கு வரும் தருணம் எல்லாம் அம்மாவும், மதனியும் மனைவியைப் பற்றி புகாராய் வாசித்தனர். எல்லா கூட்டுக் குடும்பத்திலும் இது ஒரு பிரச்சினை என்பதால் முதலில் அவன் கண்டு கொள்ளவில்லை.
அன்று அப்படி தான்.. ஒரு மாதம் தாண்டவும் அவள் அறைக்கு வருவாள் என் அவன் காத்திருக்க.. அவன் அம்மாவிற்குக் காலில் வலி என்று கீழே அம்மா துணைக்கு சென்றவள் பதினைந்து நாள் அறை பக்கம் வரவே இல்லை. கொஞ்சம் ஏமாற்றமாய் உணர்ந்தான்.
அதற்குப் பின் மாதவிடாய் என்றாள். அடுக்களைக்கு அடுத்த பாத்திரம் அடுக்கும் அறை ஓரத்தில் பாயில் படுத்திருந்தாள். அவள் வீட்டுப் பழக்கம் என்றாள். அவன் கணக்கில் நாட்கள் ஏழு தாண்டிவிட அவனுக்குப் புரியவில்லை.. அவனுக்குத் தெரிந்து மூன்று நாள் தானே கணக்கு.. ஏனோ அவளுக்கு அந்த இடம் தான் பிடித்திருந்தது.. முதல் மாதமும் அங்கு தான் கிடந்தாள்.. அண்ணன் நினைவில்.
திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆக அவனும் தான் என்ன செய்வான்? அன்று இரவு அவன் அறையில் தண்ணீர் தீர்ந்திருக்க அடுக்களைக்குச் சென்றான். அடுக்களை வெளிச்சத்தை உயிர்ப்பித்தவன் பக்கத்து அறையில் விசும்பல் சத்தம் கேட்கவே எட்டிப் பார்த்தான். மங்கிய ஒளியில் அவன் மனைவி கண்மூடி படுத்திருந்தாள். அவன் மனைவியா? அழுக்கு புடவையும், அழுக்கு போர்வையும்.. ஏன் அவளை வருத்திக் கொள்கிறாள்? அவனுக்குப் புரியவில்லை?
அவ்வளவு பெரிய வீட்டில் அனைவரும் ஏ.சி அறையில் உறங்க அவளுக்கு மட்டும் ஏன் இந்த வேண்டுதலோ? அதுவும் எங்கிருந்து தான் வந்ததோ அந்த கிழிந்த பாய்.. கேட்டால் அதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பாள்.
கண்மூடி படுத்திருந்தாலும் அழுந்து கொண்டிருந்தாள். தூக்கத்தில் அழுகிறாளா? இல்லை தூக்கமில்லாமல் கண் மூடி அழுகிறாளா? அவனுக்குத் தெரியவில்லை.
உள்ளே சென்றவன் அவள் தோள் தொட்டு, “டேய்… என்ன டா.. ஆச்சு? ஏன் அழுர?” என்று அவளை மெதுவாய் உலுக்க, மிரண்டு எழுந்தவள் “வேண்டாம் என்னை விட்டுடு.. ப்ளீஸ்..” அவனைத் தள்ளிவிட்டு கை கால் உதற இரண்டடி பின்சென்ற பின் தான் அவனை கவனித்தாள்.
அவனைப் பார்த்ததும் அழுகை நின்று பயம் மாறி முகத்தில் அப்படி ஒரு கோபம். அவனைப் பார்த்த அனல் பார்வையில் அவனுக்கு ஏதோ போல் ஆகிவிட்டது. கலைந்திருந்த புடவை பகுதியில் கண் போக.. வேண்டுமென்றே செய்யவில்லை.. பாவம் கண் கட்டுப்பாடு இல்லாமல் மேய.. அவளுக்கு அப்படி ஒரு சீற்றம். புடவையை இழுத்து மூடிக்கொண்டாள்.
மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது. அது அவனை இன்னுமே சித்திரவதை செய்ய, அவளைப் பார்க்கவே பாவமாய் போனது அவனுக்கு. அவன் மனைவி இப்படி நடு நிசியில் பேயைக் கண்டது போல் பயந்து நடுங்குவதா? அவளை அணைத்து ஆறுதல் சொல்லும் எண்ணத்தோடு அவளை அணைக்க, அவனை ஒரே தள்ளாய் தள்ளிவிட்டு, “நீ எல்லாம் ஒரு ஆம்பளை?” என்று கத்திவிட்டாள்.
அவள் தூக்கத்தில் உளறுகிறாளோ?’ என்று அவளை அவன் மீண்டும் நெருங்க.. “இங்க இருந்து போ..ய்..டு” என்று அவள் அலற அவனுக்கு அசிங்கமாய் போய்விட்டது.
அவளுக்கு என்ன ஆனது என்ற எண்ணத்தோடு அந்த அறையை விட்டு வெளியே வர அங்கு முழு குடும்பமும் கூடி இருந்தது. ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு பாவனை! அவர்களெல்லாம் எங்கிருந்து தான் வந்தார்களோ?
மானக்கேடாய் போனது. போதாக்குறைக்கு அம்மா, “இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையாடா உனக்கு..? அவ உன் பொண்டாட்டி தானே.. ஆம்பளையானு கேக்கரா?” என்று ஏளனமாய் பார்த்துச் செல்ல அவனுக்குக் கோபம் முட்டிக் கொண்டு வந்தது.
அடுத்த நாள் அவன் வேலைக்குச் சென்றதாய் அவள் எண்ணி அவர்கள் அறைக்கு வந்து கதவைப் பூட்டி குளிக்கச் சென்றாள். அவன் அறையை ஒட்டிய சிறு அறையில் வேலையாய் இருந்தான். அவள் குளித்து உடை மாற்றி கதவைத் திறக்கும் சத்தத்திற்கு வெளிவந்தான். அவள் எதிர்பார்க்கவில்லை.
“நான் இருந்தா நம்ம ரூமுக்கு கூட வரமாட்டியா? நான் ஆம்பளையானு கேட்ட? வா காட்றேன்” என்றான். அவள் நா வறண்டு, “சாரி.. நான் ஏதோ.. தெரியாம..” என்று திக்கித் திணறினாள்.
“பரவால உன் மேல தப்பில்ல.. நான் தான், நீ சோகமா இருக்கேனு உன்ன தள்ளி வச்சுட்டேன்.. வா” என்றான்.
அவள் கண்ணில் வெறுப்பு தெரிந்தது.
கணவன் என்ற ஆசை அவளுக்கு வரவே வராதா? என்றிருந்தது அவனுக்கு.
“இவ்வளவு தான் இல்ல? இது மட்டும் தானே ஆம்பளை வேலை?” என்றாள்.
அவள் பார்வை அவனை எரித்தது. அவள் கதவைத் திறக்க, அவள் அலட்சியம் வெறுப்பு.. அவனை நிதானமிழக்க செய்தது. அவளை இழுத்து சுவரோடு சாய்த்தவன் நிதானமிழந்தான். அவள் உடல் கூசியது. அவன் கைப்பட்ட இடம் எரிந்தது. முழு பலம் கொண்டு அவனை தள்ளி அறைந்துவிட்டாள்.
அவள் கண் நீரால் நிரம்பி இருக்க.. மூக்கு விடைக்க, இதழ் துடிக்க, நின்றாள். அப்பொழுது தான் கவனித்தான் அவன் மிருக தனமான அத்துமீறலை. கீழே கிடந்த புடவை எடுத்து அவள் கிழிந்த ரவிக்கை மேல் போர்த்தி, “சாரி” என்று விட்டு சென்றவன் தான். அவள் அருகில் அதன் பின் செல்லவில்லை.
அவளாய் மனம் மாறும் வரை காத்திருக்க முடிவு செய்தான். ஆனால் அவன் நினைத்தது நடக்கவில்லை.
அவள் யாரோ ஒரு சொந்தக்காரனோடு சென்றுவருவதாய் அம்மாவும் மன்னியும் புகார் வாசித்தார்கள். அவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று விட்டுவிட்டான்.
ஒரு நாள் வீட்டில் 50,000 பணம் அவள் அலமாரியிலிருந்து எடுத்து அவனிடம் காட்டினார்கள். ‘அவன்’ கொடுத்ததாய் ஒத்துக் கொண்டாள்.
“அவன் ஒருவன் அவள் வாழ்வில் இருக்க உன்னை எதற்கு மணக்க சம்மதித்தாள். உன் பணத்தை சுருட்டிட்டு போகப் போரா பாரு?” பாட்டி கூறினாள்.
வெளியூர் சென்று ஒருவாரம் கழித்து வந்தவனை என்றும் போல் காலி அறை வரவேற்றது. ஆனால் அம்மா, அவன் அவளுக்குக் கட்டிய தாலியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு மூக்கை சீந்தி. “இத நல்லவ மாதரி கொடுத்திட்டு.. வீட்டில இருந்து ஐஞ்சு லட்ச பணமும் நாப்பது பவனும் எடுத்துட்டு போய்டா” என் கூறிவிட்டே சென்றாள்.
‘அவள் தள்ளி தள்ளிப் போக மனம் விட்டுப் பேசி இருக்க வேண்டுமோ? ஏன் பாரா முகம் என்று கேட்டிருக்க வேண்டுமோ? பிடித்துத் தானே தாலி வாங்கினாய்.. இன்று என்னவாயிற்று என்று கேட்டிருக்க வேண்டுமோ? ஏன் பிடிக்காமல் போயிற்று? நீ என் மனைவி தானே.. நம் அறையில் தூங்கு.. அடுக்களையில் உனக்கென்ன விடிய விடிய வேலை? அதற்கு வேலையாள் இல்லையா.. என்றிருக்கவேண்டுமோ?’ பேச வேண்டிய நேரத்தில் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல்.. கேட்காமல் வாழ்வைத் தொலைத்துவிட்டான்.
மூன்று மாதத்தில் அவன் கனவோடு, கட்டிய தாலியும் அவன் கையில்.. அவள் தந்ததாய்.. ‘ஏன் என்னைப் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு என்னிடமாவது கொடுத்திருக்கலாமே’.. என்று விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தவன் தான்…
இதோ இன்று வானில் நிலவு தெரிந்தது. “சர்.. சப்பாத்தி ஆறுது.. வரிங்களா?” அவன் அருகில் வந்து நின்றாள் அமுதா! அவள் அவன் தலை மாட்டில் நின்றிருந்தாள். படுத்திருந்தவன் கண்கொட்டாமல் அவளையே பார்த்துப் படுத்திருந்தான். குனிந்து அவன் மார்பில் தூங்கிவிட்ட மகனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
முதல் முறையாக அவளைப் பார்த்த இந்த மூன்று மாத்தில் அந்த மார்பில் எனக்கு அடைக்கலம் கிடைக்காதா என்று நெஞ்சம் ஏங்கி நின்றான்.