தன்யா எதையோ பேப்பரில் வரைந்து கொண்டிருக்க தினேஷ் உறங்கிக் கொண்டிருந்தான். காலை உணவை சாப்பிட்டு பரத் அலுவலகம் கிளம்பி இருந்தான். பாத்திரத்தை எல்லாம் கழுவி ஒதுக்கி விட்டு வீட்டைப் பெருக்கித் துடைத்துக் கொண்டிருந்த அனு டெலிபோன் சிணுங்கவும் சென்று எடுத்தாள்.
“அனு… அத்தை இறந்துட்டாங்க… எல்லாருக்கும் போன் பண்ணனும்… வரும்போது உங்க வீட்ல இருந்து அந்த ரிலையன்ஸ் போனை எடுத்திட்டு வா…” என்றார் எதிர்த்த வீட்டில் இருந்து அனுவுக்கு போன் செய்த பரத்தின் அத்தை
அப்போது அலைபேசி அதிகம் இறங்காத காலம். ரிலையன்ஸ் தற்காலிக தொலைபேசி இணைப்பைக் கொடுத்து வந்தது. அந்த போனை சார்ஜ் செய்து மொபைல் போல நெட்வொர்க் உள்ள எந்த இடத்திற்கு கொண்டு சென்றாலும் லைன் கிடைக்கும். அதை தான் அத்தை எடுத்து வருமாறு அனுவிடம் கூறினார்.
அதற்குள் விஷயம் தெரிந்து அனுவுக்கு அழைத்த பரத் அவளை குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் உடனே கிளம்பி செல்லுமாறு கூறிவிட்டு தான் அலுவலகத்தில் இருந்து அங்கே வந்துவிடுவதாக சொல்ல அனுவும் குழந்தைகளுடன் கிளம்பி ஆட்டோவில் சென்றாள்.
தினேஷுக்கு ஆறு மாதம் முடிந்திருக்க தன்யா UKG படித்துக் கொண்டிருந்தாள். அதற்குள் அங்கே பரத்தின் மாமா, சித்தி, அம்மா எல்லாரும் குடும்பத்துடன் வந்திருக்க அருகில் இருந்த சுற்றத்தாரும் கூடத் தொடங்கி இருந்தனர். அவர்கள் அனைவரின் வீடும் அந்த ஏரியாவிலேயே இருந்தது.
அனுவிடம் போனை வாங்கிய பரத்தின் மாமா யார் யாருக்கோ போன் செய்து விஷயத்தை சொல்ல அவரது மகன் அனாவசியமாய் யாருக்கெல்லாமோ அழைத்து பேசிக் கொண்டிருந்தான். அதற்குள் பரத்தும் அங்கே வந்துவிட அவனிடம் இறுதி காரியத்துக்கு வேண்டிய விஷயங்களை எல்லாம் “பந்தலுக்கு சொல்லு, வண்டிக்கு ஏற்பாடு பண்ணு…” என்று சொல்ல அவனுக்கு கடுப்பாகியது.
அந்த நேரத்தில் எதையும் காட்டிக் கொள்ள விரும்பாமல் ஏற்பாடு செய்தான் பரத். பாட்டியை எந்த மகனுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் பிடிக்காவிட்டாலும் பரத்தின் அன்னைக்கும் அவனுக்கும் பிடிக்கும்… மற்றவர்களை திட்டிக் கொண்டு இருந்தாலும் பரத்தை எதுவும் சொல்ல மாட்டார்.
பாட்டியும் அத்தனை மோசமில்லை. இங்கே மகளிடம் சிரித்துப் பேசி அவர் செய்ததை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு அந்தப் பக்கம் போனதும் மகளையே குற்றம் சொல்லும் சுபாவம். அதனாலேயே எந்த மருமகள்களுக்கும் அவரோடு ஒத்து வரவில்லை. இளைய மகனும் மருமகளும் மட்டும் கொஞ்சம் பரவாயில்லாமல் பார்த்துக் கொண்டனர். அவருடைய சுபாவத்தில் சிறிது மகள் அமிர்தவள்ளிக்கும் அவரைத் தொடர்ந்து நந்தினிக்கும் வந்திருந்தது.
மாமன் மகன் தேவையில்லாமல் யாருக்கோ போன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட பரத், “போன் பில் யாரு கட்டுவா… போன் கிடைச்சுதுன்னு இஷ்டத்துக்கு யாருக்கெல்லாமோ கூப்பிட்டு பேசிட்டு இருக்க…” என்று திட்டவும் அவன் போனை வைத்துவிட்டு சென்றான்.
இறுதி காரியம் நல்லபடியாய் முடிய அனைவரும் குளித்து முழுகி அடுத்து செய்ய வேண்டியதை ஆண்கள் வெளியே அமர்ந்து பேச பெண்கள் வீட்டுக்குள் இருந்தனர்.
அமிர்தவள்ளியும் அவரது தங்கையும் அன்னையை நினைத்து அழுது ஓய்ந்து படுத்திருக்க நந்தினியும் அவர்களுடன் அமர்ந்திருந்தாள். பதினாறு நாள் முடியும் வரை அவர்கள் அங்கே தான் தங்குவார்கள் என்பதால் இரவு உணவை முடித்து விட்டு அடுத்தநாள் வருவதாகக் கூறி பரத் அனு, குழந்தைகளுடன் வீட்டுக்குக் கிளம்பினான்.
அடுத்த மூன்று நாட்களும் காலையில் அங்கே வந்துவிட்டு இரவு வீடு திரும்பினர். செலவை அனைவருமாய் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் வழக்கப்படி பதினாறு நாள் முடியும் வரை தீட்டு உள்ளவர்கள் யாரும் மது அருந்தக் கூடாது. பரத் ஒரு வருடமாய் குடிக்காமல் இருந்ததால் அனுவுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தாலும் காரியம் முடிந்து அங்கே உள்ளவர்கள் குடிக்கத் தொடங்குகையில் இவனும் பாட்டிலைத் தொடுவானோ என்ற பயமும் இருந்தது.
விசேஷம் நல்லபடியாய் முடிய மகன், மகள், பேரன், பேத்தி என்று ஒருத்தர் விடாமல் எல்லாரும் பாட்டிக்கு செய்ய வேண்டிய கர்மங்களை செய்து முடித்தனர்.
இரவு உணவு முடிந்து குடிப்பவர்கள் வீட்டின் பின்பக்கமாய் ஒதுங்க அனுவுக்கு பக்கென்று இருந்தது. அங்கே சென்ற பரத் நல்ல விதமாய் வந்ததும் தான் நிம்மதியானது. அன்று இரவு அங்கே தங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் எல்லாரும் அவரவர் வீட்டுக்கு கிளம்புவதாய் இருந்தது. பரத்தின் சித்தி மகன், மாமா மகன் பரத் எல்லாம் குடிக்காதவர் லிஸ்டில் இருந்ததால் அவர்கள் நேரமே ஹாலில் விரித்துப் படுத்தனர். பெண்கள் அறைகளில் படுத்திருந்தனர்.
ஆனால் பரத்தின் தம்பி மற்றவர்களுடன் சேர்ந்து மூக்கு முட்டக் குடித்திருந்தான். குடித்ததோடு நில்லாமல் முழு போதையில் வீட்டுக்கு வந்தவன் படுத்திருந்தவர்களை காலால் தட்டிக் கொண்டே செல்ல பரத்தின் காலில் மிதித்ததும் அவன் காலில் அடித்தான். உடனே கோபத்தில் வெறி இளகியது போல் ஆடத் தொடங்கினான் தம்பி.
“எதுக்குடா என்ன அடிச்ச…” என்று அண்ணனை காலை ஓங்கிக் கொண்டு மிதிக்க செல்ல பரத்துக்கும் கோபம் வந்தது. எழுந்து கொண்டவன் தான் சரி பண்ணிக் கொடுத்த காலால் தன்னை மிதிக்க வந்தவனை கோபத்துடன் தள்ளி விட போதையில் இருந்தவன் சோபாவில் சென்று விழுந்து எழுந்து வந்தான். அதற்குள் சத்தம் கேட்டு அனைவரும் எழுந்திருந்தனர்.
“டேய் நன்றி கெட்ட நாயே… உன்ன விட மாட்டேன்டா… என் அப்பாவோட வேலையை எனக்குக் குடுக்காம நீ எடுத்துகிட்ட… நல்ல வீட்டையும் கடன்னு வித்துட்ட… உனக்கு மட்டும் வண்டி வாங்கிகிட்ட… எனக்குன்னு என்னடா பண்ண… என் அம்மா இங்க அடுப்புல விறகு வச்சு ஊதிட்டு இருக்கா… உன் பொண்டாட்டி மட்டும் கேஸ் அடுப்புல சமைக்குறா…” மற்றவர்கள் அவனைப் பிடித்து வைத்திருக்க திமிறிக் கொண்டிருந்தவன் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் பரத்தின் இதயத்தில் கூர்த்த அம்புகளாய் தைத்துக் கொண்டிருந்தது.
அமிர்தவள்ளி சின்ன மகனைப் பிடித்துக் கொண்டு, “டேய், போகட்டும் விடு… நீ அமைதியாரு…” என்று சொல்ல பரத் நொந்து போனான்.
தம்பி சொன்னதெல்லாம் உண்மை போல, போகட்டும் விடு என்று சமாதானப்படுத்தி சொல்லவும் அதிர்ந்தான்.
“டேய், ராத்திரி நேரத்துல எதுக்கு இப்படி சத்தம் போடற… கேக்கறவங்க என்ன நினைப்பாங்க…” என்று மாமாக்கள் வந்து அதட்ட, “அவன… எனக்கு கொல்லணும்… எங்க அவ…” என்றவன் அவர்களைத் திமிறிக் கொண்டு விடுவித்து அறைக்குள் நின்றிருந்த அனுவிடம் வந்தான்.
“ஏய்… உனக்கும் தான், ரெண்டு பேரும் சேர்ந்து எங்களுக்கு எதுவும் இல்லாமப் பண்ணிட்டீங்கள்ள… உங்கள சும்மா விட மாட்டேன்…” என்றவனை தன்யா பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அதிர்ந்த அனு மகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் ஒடுங்கி நின்றாள்.
அதைக் கண்டதும் பரத்துக்கு கோபம் தலைக்கேற வேகமாய் தம்பியிடம் சென்றவனை மாமா பிடித்துக் கொண்டார்.
“டேய் பரத், வேண்டாம்… அவன் ஏதோ போதைல இப்படிப் பேசிட்டு இருக்கான்… நீ அடிச்சா தாங்க மாட்டான், எதுவும் பண்ணிடாத… கொஞ்சம் அமைதியா இரு…” என்று சொல்லி தம்பியை அங்கிருந்து இழுத்துக் கொண்டு அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் சில நேரம் கத்திக் கொண்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தவன் மெல்ல மெல்ல அடங்கிப் போனான்.
அனுவிடம் வந்த பரத் பயந்திருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு, “ஒண்ணும் இல்ல தனும்மா… பயப்படாத…” என்று சொல்ல அவன் தோளில் ஒட்டிக் கொண்டாள் குழந்தை. தினேஷ் நல்ல உறக்கத்தில் இருந்தான். கண்ணில் நீருடன் கணவனைப் பார்த்த அனுவுக்கு பதில் சொல்ல முடியாமல் கலங்கி நின்றான் பரத். அதற்குள் அத்தை, மாமா வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.
அடுத்த நாள் காலையில் அவரவர் வீட்டுக்கு கிளம்பினர். அன்னையோ, இல்லை வேறு யாருமோ தம்பியிடம் முன்தினம் நடந்ததைப் பற்றி “ஏன் இப்படி சொன்னாய்…” என்று கேட்கவே இல்லை. அவனுக்கும் அதெல்லாம் நினைவிருப்பதாய் தெரியவில்லை. பரத் யாருடனும் முகம் கொடுத்துப் பேசாமல் இருக்க அமிர்தவள்ளி, நந்தினி யாருமே முன்தினம் அப்படி ஒரு சம்பவம் நடந்தது போலவே காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் இருந்தனர்.
பரத்தை அப்படிப் பேசியதை அவர்களும் உள்ளே ரசித்தார்களோ என்னவோ… அன்னையும், நந்தினியும் இவர்களைப் பற்றிப் பேசாமல் தம்பி இப்படிப் பேசியிருக்க வாய்ப்பில்லை என்றே பரத்துக்கும் தோன்றியது.
அமைதியாய் இருந்தவனிடம் தம்பி சாதாரணமாய் வந்து பேச இவன் முகம் கொடுக்கவில்லை. ஆனாலும் அதன் காரணத்தை சொல்லவும் இல்லை.
அனு, குழந்தைகளுடன் வீட்டுக்குக் கிளம்பி விட்டான். அவர்கள் குவார்ட்டர்சில் இருந்து மாறி இருந்தாலும் வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை அங்கே சென்று மீன், இறைச்சி என்று வாங்கிக் கொடுத்து அவர்களுடன் இருந்து விட்டு இரவு தான் வீட்டுக்குக் கிளம்புவார்கள் பரத், அனுவும்.
அமிர்தவள்ளி இங்கிருந்து கிளம்பும்போது கேஸ் அடுப்பை வைத்து செல்லக் காரணம் கூட குவார்ட்டர்சில் அடுப்பு எதுவும் இல்லை, அங்கே கேஸ் ஸ்டவ் தான் பயன்படுத்த வேண்டும் என்றுதான்… இந்த கேஸ் ஸ்டவ் கூட அனு கல்யாணம் ஆகி வந்த புதிதில் அடுப்பு பத்த வைக்கத் தெரியாமல் தனது வளையலை பரத்திடம் கொடுத்து தான் வாங்கி இருந்தாள். இப்போது தம்பி அதையெல்லாம் சொல்லிக் காட்டிப் பேசவும் நிச்சயம் இந்தப் பேச்சு வீட்டில் வந்திருக்கும் எனப் புரிந்து கொண்டனர்.
இருந்தாலும் அதைப் பற்றி கேட்கவோ காட்டிக் கொள்ளவோ இல்லை. முதன் முதலாய் அந்தக் குடும்பத்தில் தான் யாரோ என்பதைப் போல் உணர்ந்தான் பரத். தன்னை அவர்கள் வேறாகத்தான் பார்க்கிறார்கள்… தன்னால் காரியம் நடக்க வேண்டும் என்றுதான் அன்பைக் காட்டுகிறார்களோ என்று கூட பரத்துக்குத் தோன்றியது.
அடுத்து வந்த நாட்கள் பிரச்சனை இன்றிக் கழிய பைனான்சில் பணம் அடைக்க முடியாமல் பரத் அலுவலகத்துக்கு ரெக்கவரி நோட்டீஸ் வந்தது. எனவே அதற்கும் ஒரு தொகை சம்பளத்தில் பிடிக்கத் தொடங்க மேலும் கடன் வாங்கும் சூழ்நிலை வந்தது.
கடனும், கான்சரும் ஒன்று தான்… இரண்டையும் முழுமையாய் முற்றிலும் தீர்க்காவிட்டால் விட்ட இடத்தில இருந்து மீண்டும் பரவி அதிகமாகி ஆளையே இல்லாமல் ஆக்கிவிடும். பரத்தின் நிலமையும் அது தான். பணத்துக்காக அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்தான்.
அனு பரத்திடம் வீட்டுக்கு ஏதேனும் அவசியப் பொருள் வேண்டுமென்று கேட்கக் கூடத் தயங்கினாள். கேட்டால் அதற்கும் சிடுசிடுத்தான் பரத். அவளும் முடிந்த வரையில் செலவை சுருக்கி ஒவ்வொரு தினத்தையும் ஒப்பேற்றிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் சின்னக் குழந்தைகள் என்பதால் அவ்வப்போது சளி, காய்ச்சல் என்று வந்து அதற்கு செலவு செய்ய வேண்டி வந்தது.
தன்யா படித்தது பிரைமரி ஸ்கூல் என்பதால் ஒன்றாம் வகுப்புக்கு வேறு ஸ்கூலில் சேர்த்த வேண்டி வந்தது. அருகில் இருந்த பெரிய ஸ்கூலிலேயே இண்டர்வியூவில் முதலில் வந்து இடமும் கிடைத்தது.
ஆனால் ஒரு வருடத்திற்கான தொகையை அடைக்க சொல்லவும் பரத் திணறினான். தந்தை போனில் அனுவை அழைத்த போது அனு விஷயத்தை சொல்ல அவர் அதற்கான பணத்தை அனுப்புவதாகக் கூறினார். அனுவின் தம்பியும் அப்போது படிப்பு முடிந்து வேலைக்கு செல்லத் தொடங்கி இருந்தான்.
அவர் அனுப்பிய பணத்தில் தன்யாவை ஸ்கூலில் சேர்த்தனர். வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் வீட்டுக்கு பரத்தைத் தேடி வரத் தொடங்க அனுவுக்கு கஷ்டமாய் இருந்தது. சில நேரம் பரத் இல்லாவிட்டால் அவர்கள் வீட்டுக்கு முன் காத்திருந்து அவனைக் கண்டு விட்டே செல்ல அக்கம்பக்கம் ஒரு மாதிரி பார்த்தனர்.
தினேஷுக்கு ஒண்ணரை வயது ஆனதும், அனு தானும் வேலைக்குப் போவதாக சொல்ல பரத் தெரிந்தவர்களிடம் சொல்லி வைக்க ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை கிடைத்தது. பரத்தின் அம்மா தினேஷைப் பார்த்துக் கொள்வதாக சொல்லவே அவளுக்கும் நிம்மதி. அவர் குழந்தைகளை நன்றாகவே கவனித்துக் கொள்வார்.
காலையில் தன்யா ஆட்டோவில் ஸ்கூலுக்கு கிளம்பியதும், தினேஷை அன்னையின் வீட்டில் விட்டுவிட்டு அனுவை அவளது ஆபீசில் விட்டுவிட்டு தனது அலுவலகத்துக்கு செல்வான் பரத். மாலையில் ஆட்டோவில் வரும் தன்யா அங்கே இருந்த கிரச்சில் இறங்கிக் கொள்வாள்.
அந்தக் குவார்டர்சில் ஐநூறு வீடுகளுக்கு மேல் இருந்தது. பல்வேறு துறையில் இருக்கும் அரசு அலுவலர்களுக்கும் பொதுவான குவார்டர்ஸ் அது. அநேகம் வீட்டிலும், கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே இருந்ததால் அவர்களின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள அங்கேயே கிரச்சும் இருந்தது. ஒரு சின்ன ஹெல்த் சென்டரும் அந்த காம்பவுண்டுக்கு உள்ளேயே இருந்தது.
எனவே மாலையில் அனு வேலை முடிந்து பரத்துடன் அம்மா வீட்டுக்கு சென்று குழந்தையை அழைத்துக் கொண்டு குவார்டர்சுக்கு வந்து மகளை அழைத்துக் கொள்வாள். உண்மையில் மிகவும் சிரமமாக இருந்தாலும் தங்களின் முன்னேற்றதுக்காய் உழைப்பதில் சந்தோஷமே தோன்றியது.
பால் குடிக்கும் குழந்தையை விட்டுச் சென்றதால் அடிக்கடி மாரில் பால் கட்டிக் கொண்டு கஷ்டப்பட்டாள். ஆபீசில் இருக்கும்போது பிளவுஸ் எல்லாம் நனைந்து போகையில் என்ன செய்வதென்று புரியாமல் கலங்கிப் போனாள். முதலில் அன்னையைக் காணாமல் அழுத தினேஷும் போகப் போக அமிர்தவள்ளியின் கவனிப்பிலும் அஸ்வினுடன் சேர்ந்து விளையாடவும் செய்வதால் புதிய மாற்றத்தை ஏற்று பழகிக் கொண்டான். எனவே ஒண்ணே முக்கால் வயதில் தாய்ப்பாலையும் நிறுத்தி விட்டாள்.
அனுவுக்கு பெரிய சம்பளம் இல்லாவிட்டாலும் அருகில் இருந்த டியூஷன் சென்டருக்கு கொஸ்டின் பேப்பர் டைப் செய்வது DTP வேலை என்று கஷ்டப்பட்டு சம்பாத்யத்தை உயர்த்த முயன்றாள். வீட்டு செலவுகளை எல்லாம் அவள் சம்பளத்தில் சமாளித்துக் கொண்டாலும் பரத்தின் சம்பளம் அவனுக்கு வட்டி கட்டவே போதவில்லை. ஆபீசிலும் வீட்டிலும் கடன் கொடுத்தவர்கள் தொல்லை அதிகமாகவே எப்போதும் கோபம், சிடுசிடுப்பு என்று மாறிப் போனான் பரத்.
அலுவலகத்தில் ஒரு பார்ட்டியில் மீண்டும் குடிக்கவும் தொடங்கி விட்டான். எத்தனை பிரச்சனை வந்தாலும் தாங்கிக் கொள்ளும் அனுவால் அவன் குடிப்பதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பற்றிக் கேட்டாலும் சண்டை போடுவானே ஒழிய நிறுத்த மாட்டான்.
அவன் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாலும் அனுவால் தாங்க முடிவதில்லை.
நாட்கள் அதன் போக்கில் வாழ்க்கையை நகர்த்தி செல்ல வீட்டுக்கு வரும் பைனான்ஸ்காரர்களின் எண்ணிக்கை அதிகமானது. அனு செல்லும் கம்ப்யூட்டர் சென்டரிலும் சம்பளம் குறைவாக இருக்கவே அனு யோசித்தாள்.
கணவனின் குடியும், கடன்காரர்களின் தொல்லையும், பரத் இல்லாத நேரத்தில் அவர்களின் வரவும் எதுவும் கெட்ட பெயரைக் கொடுத்து விடுமோ என்ற பயமும், வருமானத்தின் பற்றாக்குறையும், குழந்தைகளின் எதிர்காலமும் அவளை பயமுறுத்த தனது ஊருக்கே சென்றால் என்னவென்று யோசிக்கத் தொடங்கினாள். அங்கே நிச்சயம் தனது நட்புகள் மூலம் நல்ல வேலைக்கு செல்ல முடியும் என்று நம்பியவள் பரத்திடம் கூறினாள்.
தன்யாவுக்கு அந்த வருடப் படிப்பு முடிந்து கோடை விடுமுறை தொடங்கியது.
அனுவின் யோசனை ஒரு நல்ல மாற்றத்தைக் கொடுக்காதா என பரத்தும் நினைத்தான். அவனுக்கும் சற்று முயற்சி செய்தால் அனுவுக்குப் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஆபீசுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும் என நினைத்தான்.
அவர்களைப் பிரிந்திருக்க மனமில்லா விட்டாலும் அவளுக்கு சம்மதம் சொல்ல அனைவரும் கிளம்பத் தயாராகினர். அவர்களை ஊரில் விட பரத்தும் கிளம்பினான்.
வீட்டுக்கு சென்று அமிர்தவள்ளி, நந்தினியிடமும் விஷயத்தை சொல்ல அவர்கள் வேண்டாமென்று எதுவும் சொல்லவில்லை. அந்த வருட சித்திரக்கனியை அங்கே கொண்டாடிவிட்டு ஊருக்கு கிளம்பினர். அந்த மாதத்தோடு தான் அனுவின் தந்தையும் வேலையில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்தார்.
மாற்றத்துக்கான நல்ல வழி தேடிக் கிளம்பியவர்களுக்கு தெய்வம் என்ன வழி வைத்திருக்கிறதோ… தெரிந்து கொள்ளக் காத்திருப்போம்…