கண்ணுக்கெட்டிய திசையெங்கும் துரோகத்தால் சூழ்ந்து கரை இருக்கும் திசையறியா ஆழத்தில் மூழ்கி உயிரை தக்கவைத்துக் கொள்ள தத்தளிப்பவனாய் மீராவை பற்றிக்கொண்டவன் அவளை நகரவிடவே இல்லை. முயன்று மிரட்டி அவனை மெத்தையில் அமரச் சொன்னவள் அவன் மறுக்க மறுக்க கேட்காது தட்டில் பிரியாணி எடுத்துவந்து அவனிடம் நீட்டினாள்.
வார்த்தையின்றி இடவலமாய் தலையசைத்து மறுப்பு தெரிவித்தவன் வீடுவந்து சேர்ந்துவிட்ட திருப்தியில் அப்படியே கண்களை மூடி சாய்ந்து அமர்ந்துவிட, குனிந்து தன் கையில் இருந்த தட்டை பார்த்தாள். இதுநாள் வரை அவளைத்தான் அனைவரும் கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி சாப்பிட வைத்துக்கொண்டிருந்தனர். இன்றோ இவள் அதனை மற்றவனுக்கு செய்து கொண்டிருக்கிறாள் என்ற நினைப்பே சிரிப்பை வரவழைத்தது.
“ரெண்டு நாளா சாப்பாட்டையே பார்த்த மாதிரி தெரியலையே… ஒழுங்கா சாப்பிடுங்க.” என்று சிரிப்புடனூடே மிரட்டினாள்.
அவள் சிரிப்பு அவன் செவியை எட்டவும் கண்களைத் திறந்து உதட்டை சுழித்தவன், “என்ன சிரிச்சிட்டு இருக்க?”
“இதுவரை என்னைத்தான் இப்படி மிரட்டி சாப்பிட வைப்பாங்க. இன்னைக்கு என்னையே அதை செய்ய வச்சிட்டீங்க…” என்றாள் புன்னகை மாறாமல்.
மறுகிக் கொண்டிருந்தவன் அவளின் புன்னகையில் சற்று இளகி அவள் கையை பிடித்துக்கொண்டான் மீண்டும்.
“நாள் முழுக்க இப்படியே பிடிச்சிட்டே இருக்கப் போறீங்களா?” என்று அவன் கரத்தை சுட்டிக்காட்ட, அதற்கு மட்டும் ஆமாம் என்று சம்மதமாய் தலையசைத்தான்.
“அப்போ எப்படி சாப்பிடுவீங்களாம்?” என்ற அவளது கேள்விக்கு அவன் அதரங்களை பிரித்து ஆவென்று வாய் திறந்து காண்பிக்க, அவனை முறைத்தவள், ஒரு பிடி எடுத்து ஊட்டிவிட்டாள், “இன்னைக்கு ஒருநாள் மட்டும்தான்.” என்ற மிரட்டலுடன்…
அவன் அதை காதில் வாங்கிய மாதிரியே காட்டிக்கொள்ளாமல், “கடைசியா டெண்ட்த் எக்ஸாம் எழுதுனப்போ என் அம்மா ஊட்டிவிட்டாங்க.” என்றான் நினைவுகளில் உழன்றபடி.
அவள் ஊட்டிவிட்ட உணவை உணர்ந்து ரசித்து நிதானமாய் உண்டவன், “செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுப்பாங்க, திட்ட வேண்டிய நேரத்தில் செமத்தையா திட்டுவாங்க. அடிக்கக்கூட செய்வாங்க. அம்மா இருந்த வரை எனக்கு எல்லாமே அவங்கதான். அப்பப்போ சின்னதா அப்… பா என்கூட அதிக நேரம் இல்லையேன்னு ஏக்கம் வரும். அப்போலாம் நினைச்சிப்பேன் ஏதாவது சாதிச்சு அவரை என் பக்கம் திரும்ப வைக்கணும்னு… எவ்வளவு மட்டியா மடமான இருந்திருக்கேன் நானு…
இப்போ அவரை நினைச்சா உடம்பெல்லாம் கூசுது. அவர் ரத்தம் என் உடம்புலேயும் ஓடுதுன்னு நினைக்கும் போதெல்லாம் தோத்து போயிட்டே இருக்கேன். இத்தனை வருஷம் பாசம் வச்சித் தொலைச்ச மனசு அவரோட சுயரூபத்தை ஏத்துக்க மறுக்குது. அவர் செய்யுற கண்றாவி எல்லாத்தையும் கண்ணால பார்த்த பிறகும் இந்த பாழாய் போன மனசு அவரை மரியாதை இல்லாம கூட பேச விடமாட்டேங்குது. எனக்கு இது பிடிக்கலை. எமோஷனலா அவரை என்னால ஒதுக்கி வச்சு குற்றவாளியை ட்ரீட் பண்ற மாதிரி பண்ண முடியல… எனக்குள்ளேயே தோத்து போயிட்டே இருக்கேன். இப்படி எமோஷனை கூட கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பலகீனமா இருக்கேன்னு நினைக்க நினைக்க என்னோட நம்பிக்கையெல்லாம் உடையுது. நான் யாருன்னு எனக்கே பயமா இருக்கு… நீ… நீ பார்க்கிற தானே… ஐ காண்ட் (I can’t) இதைத்தான் சொன்னேன் நீ… நீ ஸ்டாராங்டா… என்னால இந்த ஏமாற்றத்தை துரோகத்தை கூட கடந்துவர முடியல… ஆனா நீ… உன்னோட தைரியம் அழகு. பொண்ணுங்களுக்கு கண்ணு மூக்குன்னு ஏதேதோ அழகுன்னு சொல்லுவாங்க ஆனா அவங்களோட உண்மையான அழகு தைரியம் தான். அந்த தைரியம் எங்களுக்கு இல்லை. அதுதான் இப்படி தோல்வியை மறுப்பை ஏத்துக்க முடியாம தவிச்சிட்டு இருக்கோம், உங்களை அடக்கப் பார்க்கிறோம் போல…” மனபாரத்தை கொட்டிய திருப்தியின்றி அவன் சுவற்றை கசங்கிய முகத்துடன் வெறித்திருக்க, அவன் தாடை பிடித்து தன் புறம் திருப்பியவள் மற்றொரு வாய் சோறு ஊட்டிவிட்டு,
“முடிஞ்சுதா இல்லை இன்னும் மிச்சம் ஏதாவது இருக்கா?” என்று கேட்டுவைக்க, முகத்தை சுருக்கியவன் பிரயத்தனப்பட்டு உணவை மென்று உள்ளே தள்ளினான்.
“அவ்வளவு மோசமாவா இருக்கு என் சமையல்… இப்படி கஷ்டப்பட்டு முழுங்குறீங்க?”
“நீயே செஞ்சீயா?” பரிவாய் வந்து விழுந்தது அவன் கேள்வி.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் வராம உங்க கேள்விக்கு பதில் வராது.” என்று கறார் பிடித்து இன்னும் கொஞ்சம் ஊட்டிவிட்டாள்.
“அம்மாக்கு அப்புறம் முத்தம்மா தான் எனக்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்வாங்க ஆனா அவங்க ஒரு கட்டத்துக்கு மேல நுழைய மாட்டாங்க, உரிமை எடுத்துக்க மாட்டாங்க. எங்ககிட்ட வேலை செய்யுறவங்கிற எண்ணம் எப்போதுமே அவங்களுக்கு இருக்கும். அதை மெய்ண்டைன் செய்வாங்க. அந்த மாதிரி கட்டுப்பாடு எதுவும் இல்லாம என்னை நெருங்கி எனக்காக இப்போ இருக்குறது நீ மட்டுந்தான். நீ எது செஞ்சாலும் எனக்கு பிடிக்கும்.” என்றவனை குறுகுறுவென பார்த்தவள்,
“அப்போ வேற வழியில்லாம நான் செய்யுற, செய்யப்போற எல்லாத்தையும் சகிச்சிப்பீங்களா?” என்று கேட்க, அவளை தீர்க்கமாய் பார்த்தவன் ஆமோதிப்பாய் தலையசைத்து அவளின் முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டான்.
“ஆனா நீ சொன்ன மாதிரி அதுக்கான பேர் சகிக்சுக்கிறது இல்லை விட்டுக்கொடுத்து போறது. நமக்கு நெருக்கமானவங்களுக்காக எதுனாலும் செய்யலாம்.” என்றவனுக்கு கடைசி உருண்டையை ஊட்டிவிட்டவள் தட்டை எடுத்துக்கொண்டு எழ,
“உனக்கும் எடுத்துட்டு வா… நீயும் இன்னும் சாப்பிட்டலதான…”
“இப்போவாச்சும் நியாபகம் வந்துச்சே… ஒருத்தி அக்கறையா ஊட்டிவிடுறாளே அவள் சாப்பிட்டாளான்னு கேட்போம், அப்படியே ஒருவாய் அவளுக்கும் ஊட்டிவிடுவோம்னு கிடையாது… இதுதான் சாக்குன்னு மொத்த பிளேட்டையும் காலி பண்ணியாச்சு.” என்று அவள் கழுத்தை வெட்ட, அவளை இழுத்து முத்தமொன்று வைக்கவேண்டுமென முதல்முறையாய் தோன்றியது அவனுக்கு.
அவ்வெண்ணம் வந்ததும் இதுவரை இருந்த பார்வை முற்றிலும் மாறி விழிகளில் ஏக்கமும் மையலும் போட்டிப் போட்டுக்கொண்டு வெளிப்பட, அதை நின்று கவனிக்க அவள்தான் அங்கில்லை. சமையலறை வந்து தட்டில் தேவையானவற்றை நிரப்பிக்கொண்டு மீண்டும் அறைக்குச் செல்ல நடை போட,
“பிரச்சனை ஒன்னும் இல்லையே அம்மு… மாப்பிள்ளை ஏன் ஒருமாதிரி இருக்காரு?” என்று மகளை மறித்தார் அம்புஜம்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை.” என்று சமாளித்தவளின் எண்ணம் என்னவோ கார்த்திக் புலம்பித் தள்ளிய விஷயங்களில் நிலைத்தது.
“நீ எப்போ சாப்பிடுறதா உத்தேசம்…” என்று அதட்டல் போட்டவன் தானே அவளுக்கு ஊட்ட, அலட்டலின்றி வாங்கிக்கொண்டாள் அவள்.
“எல்லாமே கனவு மாதிரி இருக்கு கண்ணம்மா… இத்தனை வருஷத்துல அனுபவிக்காத வேதனையை அதிர்ச்சியை இந்த பத்து நாளில் அனுபவிச்சிட்டேன். எல்லாத்தையும் பார்த்துட்டேன். எதுலையும் தோற்காதவன் இப்போ மொத்தமா தோத்துட்டேன்.” என்று பேச்சுனூடே திரும்பத் துவங்க, ஊட்டிவிடவென நீண்டிருந்த அவன் கரத்தை பிடித்துத் தடுத்தாள் மீரா.
அவன் கேள்வியாய் பார்க்க, போதும் என்று சொன்னவள் எழுந்து சென்று கை கழுவ அவனும் அவள் பின்னோடு அறையினுள் இருக்கும் குளியலறை சென்றான்.
“கொஞ்சம் தானே சாப்பிட்ட? போதுமா உனக்கு?” என்ற அவனது கேள்விக்கு தீர்க்கமாய் பார்த்து வைத்தவள் புருவம் சுருக்கி, “சாப்பாட்டை கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு மத்ததை பேசுவோமா? எனக்கு உங்ககிட்ட சொல்ல நிறையா இருக்கு, கேட்கவும் நிறைய இருக்கு. சீக்கிரம் ப்ரெஷ் ஆகிட்டு வாங்க. வந்ததிலிருந்து முகம் கூட கழுவல…” என்றதற்கு,
“டவல்?” என்று அசடு வழிந்தான் கார்த்திக். சென்ற முறை அவனது உடமைகளை சுத்தம் செய்யத்தான் என்னென்ன பேச்செல்லாம் வாங்கினான், அதெல்லாம் நினைவு வந்து மனசை இன்னும் லேசாக்கியது.
“ஊரிலிருந்து ஜாலியா வெறுங்கையை வீசிட்டு வந்தாச்சு… போன முறை வந்தப்போ துவச்சு காயவச்ச ட்ரெஸ்சை இங்கேயே விட்டுட்டு போயிட்டீங்க. அதை போட்டுக்கோங்க.” பதில் கூறியவள் தன் அலமாரியில் இருந்து அவன் உடைகளை எடுத்துவந்து கொடுத்தாள்.
அதனை வாங்கிக்கொண்டவன் அவளின் உரிமையில் நெகிழ்ந்து சீக்கிரமே தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்தான். முகத்தை துடைத்தபடி வெளியே வந்தவன் பார்வையில் விழுந்து கருத்தில் பதிந்தது இரண்டு நாள் முன்னர் உடுத்தியிருந்த அதே இளம்பச்சை சில்க் காட்டன் புடவையில் இருந்தவளைத்தான். அன்று அவளது முகம் மட்டுமே அவனிடத்தில் பதிந்திருக்க, இன்றோ தயக்கமின்றி விழிகள் அவளது இடக்கழுத்தையும் அதன் கீழும் கூர்மையாய் பாய்ந்தது. இடப்பக்க கன்னமும் தாடையும் மட்டுமே அமிலத்தால் சிதைந்திருக்கிறது என்று அவன் சிந்தையில் ஏறியிருந்த எண்ணத்திற்கு மாறாய் பார்வைக்கு அப்பால் கழுத்துப் பகுதியையும் தாண்டி வடு அவள் உடையின் பின் மறைந்திருப்பது போன்று தெரிய இளகியிருந்த மனம் இறுகி அவளுக்காய் தவித்து துடித்தது.
குளியறைக் கதவு திறக்கும் அரவம் கேட்டவுடனேயே அவன் புறம் திரும்பியவள் அவனின் பார்வை செல்லும் திசையுணர்ந்து பேச நினைத்து காத்திருக்கும் அனைத்தையும் மறந்தவளாய் தன்போல் புடவை முந்தியை எடுத்து முக்காடு போட்டாள். இதயம் இத்தனை நாள் பழகிய வழக்கத்தை விடாது தன் வேகத்தை கூட்டியிருந்தது. அவளது இதயத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாய் விரைவாய் அவளை நெருங்கியிருந்த கார்த்திக் அவளது முக்காடை தள்ளிவிட்டான்.
அவனை ஏறிட்டு பார்த்த மங்கை தவிப்புடன் மீண்டும் முந்தியை தலையில் போட்டு குறுகி அமர்ந்தாள்.
“ம்ச்… ஒழுங்காதானே இருந்த… இப்போ என்னடா…” என்று சலித்தவன் மீண்டும் அவளது முந்தியை பிடித்திழுத்து தலையிலிருந்து விலக்கிவிட, அவன் கையில் சுள்ளென்று அடி போட்டவள் அப்படியே பின் நகர்ந்து மார்ப்பை மறைத்தபடி கால்களை குறுக்கிக்கொண்டு அமர்ந்தாள்.
நன்றாக பேசிக்கொண்டிருந்தவள் திடுமென அவள் கூட்டிற்குள் ஒடுங்கவும் அவன் இருந்த மனநிலையில் அவளை அப்படியே விட மனமில்லை. அவளை நெருங்கி அவள் எதிரே அமர்ந்தவன் அவள் முகத்தை வலுக்கட்டாயமாய் பற்றி நிமிர்த்த, அதுவரை விழாமல் திரண்டிருந்த உப்புநீர் மளுக்கென்று அவள் கன்னத்தில் இறங்கியது.
“என்னடா கண்ணம்மா இப்போதானே நீ தைரியமானவன்னு சொல்லிட்டு இருந்தேன் அதுக்குள்ள இப்படி உட்கார்ந்து அழற?” என்று வருந்தியவன் அவள் கன்னத்தில் விழியும் நீரை தன் விரல் கொண்டு உதறித்தள்ள, அவளோ அவனின் கரத்தை தள்ளிவிட்டாள்.