அத்தியாயம் 8:
நடந்த எதையும் நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் அபி.ரிஷியின் முகம் பார்க்கவே அவளுக்கு பயமாய் இருந்தது.இந்த திடீர் திருமணத்திற்கான அவசியம் என்ன வந்தது…? காலையில் ஏன் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டான்…? என்று யோசித்து யோசித்து அவளுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.எதுவும் புரியவில்லை.
அவளின் மனதில் ஓடும் எண்ணங்கள் புரிந்தாலும்….எதுவும் தெரியாத மாதிரி காட்டிக் கொண்டான் ரிஷி.அவனுக்குமே நடந்து முடிந்த விஷயங்களால் கொஞ்சம் பாதிப்பு இருக்கவே செய்தது.
யார் இவள்…? பார்த்து இரண்டு நாட்கள் கூட ஆகாத ஒரு பெண் தனக்கு மனைவியாய் தன் அருகில் நிற்பதை அவனால் எண்ணிக் பார்க்க கூட முடியவில்லை.ஏற்கனவே நடந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருந்தவன்… இப்பொழுது முழுமையாய் கல்லாய் மாறிப் போனான்.
என்னதான் தந்தை சொல்லை மதித்து அவள் கழுத்தில் தாலியைக் கட்டினாலும்…. அவளை மனைவியாய் ஏற்றுக் கொள்வதில் நிறைய தயக்கங்கள் இருந்தது அவன் மனதில்.
“ரிஷி…எதைப் பற்றி இப்ப ஆழ்ந்த யோசனை..?” என்றார் சுரேஷ்.
“அப்பா…..இதெல்லாம் சரியா வருமா…? எனக்கென்னமோ அவசரப் பட்டுவிட்டோமோ என்று தோணுது…!” என்றான் யோசனையுடன்.
“இதில் யோசிக்க ஒண்ணுமில்லை ரிஷி….உன்னுடைய வேலைக்கும் களங்கம் வரக் கூடாது…..அபிராமிக்கும் களங்கம் வரக் கூடாது….அதுக்கு இருந்த ஒரே வழி இதுதான்….நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன்…!” என்றார் சுரேஷ்.
“அவ யார்ன்னு தெரியாம….!” என்று ரிஷி இழுக்க…
“மறுபடியும் இப்படி பேசாத ரிஷி.இப்ப அவ உன் மனைவி.யார்ன்னு தெரியலைன்னா என்னா…? நீ ஒரு போலீஸ்காரன் தானே….இதெல்லாம் உனக்கு ஒரு பெரிய விஷயமா…?” என்றார் சுரேஷ்.
“ஓகேப்பா…இனி நான் என் வழியில் இதை டீல் பண்ணிக்கிறேன்…” என்றான் தெளிந்தவனாய்.
“இதோ பார் ரிஷி…டீல் பண்ண இது கேஸ் இல்லை.உன் வாழ்க்கை.அதில் இப்ப ஒரு பொண்ணு வாழ்க்கையும் சம்பந்தபட்டிருக்கு.சோ…கண்டதையும் போட்டு மனசைக் குழப்பாம..அவ கூட சந்தோஷமா வாழ்வதற்கான வழியைப் பார்..!” என்று மொழிந்தவர் நகர..
“சந்தோஷமா…நான்….அவளோட…ம்ம்க்கும்…” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் திரும்ப….
சித்ராவின் அருகில் பவ்யமாய் நின்று கொண்டிருந்தாள் அபிராமி.
“அபி…பெருமைக்குன்னு சொல்லவில்லை.உண்மைக்குமே என் பையன் ரொம்ப தங்கமான பையன்மா…என்ன கொஞ்சம் முன் கோபம் அதிகமா வரும்…ஆனா தப்புன்னு தெரிஞ்சா அவனே இறங்கி வந்துடுவான்…பொய் சொல்றது அவனுக்கு அறவே பிடிக்காது…நீதான் கொஞ்சம் பார்த்து நடந்துக்கணும் அபி…” என்று மாமியாராய் மாறி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.
ஏற்கனவே நடந்த திடீர் திருமணத்தில் இருந்தே வெளி வராதவள்…. சித்ராவின் பேச்சுக்கு தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தாள்.
தன் தாய் ஏதோ அவளிடம் சொல்வதும்…அதற்கு அவள் பூம் பூம் மாடு போல தலையாட்டுவதையும்,அவளது முகத்தையும் பார்த்த ரிஷிக்கு….ஏனோ அவளை அருகில் சென்று அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி…அவ சின்ன பொண்ணு…,யார்ன்னு தெரியாது…? அப்படின்னு சொன்ன பையனை இங்க பார்த்திங்களா…?” என்று அவன் மனசாட்சி அவனைக் கிண்டல் பண்ண…
“இப்ப அவ என் பொண்டாட்டி…!” என்று தனக்குத் தானே உரிமையாய் சொல்லிக் கொண்டான்.
அனைவரும் வீட்டிற்கு கிளம்ப….வரும் போது சித்ராவின் அருகில் அமர்ந்து வந்தவள்…போகும் போது ரிஷியின் அருகில் அமர்த்தப்பட்டாள்.
ரிஷி எப்பொழுதும் போல் சாதரணமாய் அமர்ந்திருக்க….அபியால் அவன் அருகில் மூச்சு விடவும் சிரமமாய் இருந்தது.அவனின் அருகில்…இப்படி அவனின் மனைவியாய்….அவளால் நினைத்தே பார்க்க முடியாத ஒரு நிஜம்….இன்று நடந்திருக்கிறது.அந்த நெருக்கம் அவளுள் பல கலவையான எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
“இதெல்லாம் தனது பாட்டிக்கு தெரிந்தால்…?” என்ற ஒற்றை வரி அவள் மூளைக்குள் ஓட…சட்டென்று அப்பொழுது இருந்த மனநிலை மாறியது அவளிடம்.
முகம் இறுக்கம் கொள்ள….மனம் படபடக்க…கண்கள் கலங்க…தன்னைக் கட்டுப்படுத்த வெகு பிரயத்னப்பட்டாள்.
அவளின் முகமும்….உடலும் ஒரே சேர இறுகிப் போயிருப்பதைக் கண்ட ரிஷிக்கு…மனதிற்குள் ஏகத்திற்கும் எரிச்சல் கிளம்பியது.
“என்னைப் பார்த்தால் இவளுக்கு எப்படித் தெரிகிறது….அவ்வளவு பிடிக்காமல் ஏன் சம்மதித்தாள்…?” என்று தனக்குத் தானே அவன் கேட்க…
“அவளை எங்கடா சம்மதம் கேட்டிங்க…? நீங்களா கூட்டிட்டு வந்திங்க..மாலையைப் போடுன்னு சொன்னிங்க…தாலியை நீ கட்டுன…இதில் எங்க இருந்து அவகிட்ட சம்மதம் கேட்டிங்க..?” என்று அவன் மனசாட்சி மீண்டும் அவனுக்கு கவுண்ட்டர் கொடுத்தது.
“உண்மைதானோ…! நடந்த தவறை சரி செய்வதாய் நினைத்து….அவள் சம்மதம் கேட்காமல் அவள் வாழ்க்கையை என்னுடன் பிணைத்து விட்டார்களோ…? அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லையோ….?” என்று அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே வீடு வந்து சேர்ந்தார்கள்.
வீடு வந்தவுடன்….”அப்பாடா….” என்று அபி பெருமூச்சு விடவும்….தன் சந்தேகத்தை உறுதிப் படுத்தினான் ரிஷி.
இறங்கியவன் வேகமாய் விடுவிடுவென்று உள்ளே செல்ல முற்பட….”நில் ரிஷி…!” என்று ஒரு அதட்டல் போட்டார் சுரேஷ்.
அவரின் வார்த்தைகளில் தேங்கியவன்…”அபியையும் சேர்த்து அழைச்சுட்டு போ…நீ பேசாம போற…இப்ப நீ தனி மனுஷன் இல்லை…புரியுதா…?” என்று தந்தை சொல்ல….பல்லைக் கடித்தான் ரிஷி.
“ஐ நோ ப்பா…என்னோட பொறுப்புகளில் இருந்து நான் எப்பொழுதும் விலகியது கிடையாது…” என்றவன்…அபியின் கையைப் பிடித்து அழைத்து செல்ல….அவன் பிடித்த பிடியிலேயே தெரிந்தது அவனின் கோபம்.
தீபிகா ஆரத்தி சுற்ற…..தன் கணவனுடன் காலடி எடுத்து வைத்தாள் அபிராமி.
“முறையா சேலத்துக்குத் தான் கூட்டிட்டு போயிருக்கனும் அபி….சூழ்நிலை அப்படி….இதுவும் நம்ம வீடு தான்… அதனால் தயக்கமில்லாமல் உள்ளே வா..!” என்று சித்ரா அழைக்க….
“அவ உள்ளே வந்த இரண்டு நாள் ஆகிவிட்டது…” என்று வருணின் காதைக் கடித்தாள் தைலா.
வருண் அவளை முறைக்க….”டேய் டாக்டர்…உன் மூஞ்சிக்கு இந்த முறைப்பு செட் ஆகலை…அதான் உங்க அண்ணன் ரூட் கிளியர் ஆகிடுச்சுல்ல…. அடுத்து நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே..!” என்று தைலா சொல்ல…
“கல்யாணம் எப்ப செய்யனும்ன்னு எனக்கு தெரியும்…நீ உன் வேலையைப் பார்…!” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“ஹிஹி…நல்லதுக்கே காலமில்லை….ம்ம்ம்…எப்படியோ போ…விதி வலியது…” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு தைலா உள்ளே செல்ல…தலையில் அடித்துக் கொண்டான் வருண்.
“எல்லாரும் ஊரில் திருமணம் முடிச்சுட்டு ஊட்டிக்கு ஹனி மூன் வருவாங்க…ஆனா… ரிஷி நீ மட்டும் தான்…இங்கயே கல்யாணம் முடிச்சு…இங்கயே…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்.. அவள் வாயைப் மூடினான் வருண்.
“நீ அடங்கவே மாட்டியா…?” என்று அவன் கடிந்து கொள்ள…
“இங்க பாருங்க ஆன்ட்டி…உங்க சின்ன பையன் என்னை ரொம்ப மிரட்டுறான்….அப்பறம் நான் எங்க அப்பாகிட்ட சொல்லிடுவேன்…” என்று சிறு பிள்ளை போல் கண்ணைக் கசக்க…
“டேய்..! ஏண்டா பிள்ளையை மிரட்டுற…நீ வாடா தங்கம்….!” என்று சித்ரா அழைத்துக் கொள்ள….வருணுக்கு பழிப்புக் காட்டியபடி அவரிடம் தஞ்சம் அடைந்தாள்.
இதையெல்லாம் நிறைவாய் பார்த்துக் கொண்டிருந்தார் சுரேஷ்.மூன்று நாட்களுக்கு முன்னால்…..எப்படியிருந்த குடும்பம்….இப்பொழுது போன மகிழ்ச்சி எல்லாம் திரும்ப வந்துவிட்டது என்றே எண்ணினார். இதற்கெல்லாம் அபி வந்த நேரமே என்று முழுமையாக எண்ணினார்.
ரிஷி ஆப் செய்திருந்த தனது செல்போனை ஆன் செய்த நிமிடம்…மீண்டும் வரிசையாக அழைப்புகள் வரத் துவங்கியது.
மீண்டும் தலையில் பாரம் ஏறிக் கொள்ள..கண் மூடி ஒரு நிமிடம் சிந்தித்தவன்….தனது மேலதிகாரியின் அழைப்பைக் கண்டவுடன்… அவனையும் மீறி அட்டர்ன் செய்திருந்தான்.
“ஹலோ…!”
“மிஸ்டர் ரிஷி….!என்ன நினச்சுட்டு இருகீங்க உங்க மனசுல…உங்களால டிப்பார்ட்மென்டுக்கே அவமானம்…..” என்று அவர் இரைய…
“என்ன சார் அவமானம்…?” என்றான் ரிஷி.
“எதுவும் நடக்காத மாதிரி பேசுறிங்க…நியூஸ் பார்த்திங்களா இல்லையா…? இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறிங்களா..?” என்றார்.
“சார்…நடிக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்கு கிடையாது…! என் மனைவியோட நான் ஓடி பிடிச்சு விளையாடுவேன்…இல்லைத் தூக்கிப் போட்டுக் கூட விளையாடுவேன்…எனக்கு வேண்டாதவங்க இதையெல்லாம் திரிச்சு நியூஸா போட்ட….அவங்க மேல ஆக்சன் எடுக்கறதை விட்டுட்டு….என்னைக் கூப்பிட்டு பேசிட்டு இருக்கீங்க…!” என்றான் தெனாவெட்டாய்.
“உங்க மனைவியா….?” என்றார் அவர் சற்று அதிர்ச்சியுடன்.
“ஆமாம்..! என் மனைவிதான்…! நான் ஹனிமூன் வரதுக்கு தான் ஒரு மாசம் விடுமுறையே எடுத்தேன்……”என்று அசால்ட்டாய் சொல்ல….அதிர்ந்தவள் அபி தான்.
பொய்யே சொல்ல மாட்டான்னு சொன்னாங்க…! இப்படி புளுகுறான்..! என்று தனக்குள் நினைத்தபடி அமர்ந்திருந்தாள்.
அவன் தனது திருமணத்திற்கு எடுத்த விடுப்புதான் என்று பாவம் அவளுக்கு எங்கே தெரியப் போகிறது.
யோசித்துக் கொண்டிருந்தவளின் முன் ரிஷி காலையில் வெறித்த நாளிதழ் இருக்க….அப்பொழுதுதான் அபியின் கண்ணில் பட்டது அந்த விஷயம்.
அதில் இருந்த புகைப்படங்களையும்,செய்தியையும் பார்த்தவளுக்கு அதிர்ச்சி….தங்களுக்கு நடத்தப்பட்ட அவசர திருமணத்தின் காரணம் அறிந்தால் அபி.
“சார்..எங்க மேரேஜ் நடந்ததுக்கான எல்லா ஆதாரமும் இருக்கு.இப்படி தப்பான செய்தியை போட்டதுக்காக….நான் மான நஷ்ட வழக்கு போட போறது உறுதி.இதுக்கு பின்னாடி இருக்குறவங்க யார்ன்னு நான் கண்டுபிடிச்சா….அவன் முடிவு கண்டிப்பா என் கையில் தான்…!” என்று கடுமையாய் சாடி விட்டு போனை வைத்தான்.
சுரேஷ் அவனை மெச்சுதலாய் பார்க்க….தொப்பென்று அமர்ந்தான் ரிஷி.
அருகில் ஒருவன் அமர்ந்ததே தெரியாமல்…..அந்த புகைப்படங்களையே வெறித்துக் கொண்டிருந்தாள்.
அவளின் பார்வை போன திக்கைப் பார்த்தவன்…”ஹோ…இவளுக்கு விஷயம் தெரியாது இல்லை…இப்ப தெரிந்து விட்டதே….இவ மனநிலை என்னவா இருக்கும்..!” என்று யோசித்தபடி அவள் முகத்தையே பார்த்திருந்தான்.
அனைவரும் இங்கிதம் கருதி…அவர்களை தனியே விட்டு செல்ல….
“இதுக்குதான் இந்த அவசர திருமணமா…? இவனுடைய நல்ல பெயர் கெட்டு விடக் கூடாது என்பதற்காகவா….? இவன் வேலை இவன் கையை விட்டு போய் விடக் கூடாது என்பதற்காகவா…? என்று அவள் மனம் சரியான பாதையில் தப்பு தப்பாய் யோசித்தது.
“என்னைப் பற்றி யாரும் யோசிக்கவில்லையா….?” என்று நினைத்தவளுக்கு தெரியவில்லை….அவளைப் பற்றி யோசித்ததால் தான் இந்த திருமணமே என்று.
ஒரு நிமிடத்தில் உடலில் உள்ள சக்தியெல்லாம் வடிந்து விட்டது போல் உணர்ந்தாள்.
அவளின் முகத்தையே பார்த்திருந்தவனுக்கு….என்ன தோன்றியதோ…. அவளின் கைகளை எடுத்து தனது கைகளுக்குள் வைத்தவன்….”அபி….” என்றான் ஆழ்ந்த குரலில்.
உணர்வின்றி அவனின் முகத்தைப் பார்த்தவளுக்கு நெஞ்சிற்குள் ஏதோ பிசைவதைப் போல் இருந்தது.காலையில் அவன் அடித்த அடியை விட இப்பொழுது அதிகமாய் வலிப்பதைப் போல் உணர்ந்தாள்.
மெல்ல அவனின் கைகளில் இருந்து தனது கைகளை உருவ முயல…அவளின் எண்ணம் புரிந்தவன் போல்….அவளின் கைகளை விடாமல் இறுக்கிப் பிடித்திருந்தான்.
“இப்ப எதுக்காக இவ்வளவு சீன் போடுற…? நான் ஒன்னும் உன்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணவில்லை.இப்போ நீயும் நானும் இருக்கிற இந்த உறவுக்கு அடித்தளம் போட்டதே நீதான்.நேற்று மட்டும் நீ அப்படி ஒரு காரியம் செய்யாமல் இருந்திருந்தா…இப்ப இவ்வளவு பிரச்சனையில்லை.” என்று அவளுக்கு புரியவைக்க….
அவன் சொல்ல வருவது புரிந்தாலும்…அதை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை.
“இந்த கல்யாணம் தான் அதுக்கு தீர்வுன்னு யார் சொன்னா…?” என்றாள் முதன் முறையாக வாயைத் திறந்து.
“வேற என்ன செய்திருக்கணும்…?” என்றான்.
“ஏன் உங்களுக்கு தெரியாது…தி கிரேட் ஐபிஎஸ் ஆபீசர்…நீங்க நினைச்சிருந்தா இந்த பிரச்னையை ஈசியா முடிச்சிருக்கலாம்….மனசுல காதல் இல்லாம நடக்குற கல்யாணம் எத்தனை நாளைக்கு நிலைக்கும்…” என்றாள் நேர் பார்வையாய் அவனைப் பார்த்து.
அவனின் மனதில் காதல் இல்லை என்பதை அவள் சொல்ல….அவளுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று முடிவே செய்து விட்டான் ரிஷி.
“ஆமா காதல் இல்லை தான்….அதுக்காக புருஷன்கிற கடமையை எல்லாம் விட்டுட மாட்டேன்…நீ பயப்பட தேவையில்லை…” என்று ஒரு மார்க்கமாய் சொல்ல…
அவனின் வார்த்தைகள் நெருப்பாய் சுட்டது அவளை.”போதும் நிறுத்துங்க…!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே….அங்கு வந்தாள் தைலா.
“அபி…ஆன்ட்டி உன்னைக் கூப்பிடுறாங்க…!” என்றவள்….ரிஷியின் புறம் திரும்பி….
“நாங்க எல்லாரும் கிளம்புறோம் ரிஷி..!” என்றாள்.
ரிஷி அதிர்ந்தான் என்றால்…… அபி அதிகமாய் அதிர்ந்தாள்.
“என்ன சொல்ற…? இப்ப என்ன அவசரம்….அப்பறமா எல்லாருமே கிளம்பலாம்…” என்றவன் தன் தந்தையை சந்திக்க சென்றான்.
அவன் சென்ற பிறகு அபியின் அருகில் அமர்ந்த தைலா….”அபி உனக்கு ரிஷியைப் பிடிச்சிருக்கு தானே…!” என்றாள் கேள்வியாய்.
அபி புரியாமல் பார்க்க….”இல்லை உன்னோட முகமே சரியில்லை. அதான்…சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத அபி..ஏற்கனவே அவனுக்கு நிறைய பிரச்சனைகள்…மன அமைதிக்காகத்தான் அவன் இங்க வந்ததே….இங்க வந்து…அதுக்கப்பறம் என்ன நடந்துன்னு உனக்கே தெரியும்…அதனால்…” என்று அவள் இழுக்க…
“நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு எனக்கு புரியுது…!” என்று மட்டும் பேச்சை முடித்துக் கொண்டாள் அபி.
இதற்கு மேல் பேசினால் தவறாக எடுத்துக் கொள்வாளோ…என்று நினைத்த தைலா அதோடு அந்த பேச்சை முடித்தாள்.
ஒருவேளை பேசியிருந்தால் அபியின் மனம் திறந்திருக்குமோ…..?
“அப்பா..! இப்ப என்ன அவசரம் உடனே கிளம்புறிங்க….?” என்றான் ரிஷி.
“புரியாம பேசாத ரிஷி…தீபிக்கு எக்ஸாம் நடக்குது.வருண் டியூட்டிக்கு போகணும்…எல்லாரும் இங்க இருந்து என்ன பண்றது…?” என்றார்.
“அப்ப நாங்களும் வரோம்…!” என்றான் பிடிவாதமாய்.
“இல்லை ரிஷி….நீ இங்க ஒரு வாரமாவது இருந்திட்டு வா….உங்க ரெண்டு பேருக்கும் இடையில் புரிதல் ஏற்பட இது ஒரு வாய்ப்பா அமையும்ன்னு நினைக்கிறேன்…நானும் அபியைப் பற்றி விசாரிக்கிறேன்…!” என்று முடிவாய் சொல்ல…
அவர் விசாரிக்கிறேன்…என்று மனதில் ஒன்றை வைத்து சொல்ல…அதை வேறு விதமாய் எடுத்துக் கொண்டான் ரிஷி.
அதற்கு மேல் அவனால் ஒன்றும் முடியவில்லை.ரிஷி அப்படியே சுரேஷ் குணத்தை உரித்து பிறந்திருந்தான்.எதிலும் தீர்க்கமான முடிவு எடுப்பதில்… தந்தையும்,மகனையும் அந்த வீட்டில் அடித்துக் கொள்ள யாராலும் முடியாது.
“நான் சொல்லும் போது…நீங்க கிளம்பி வந்தா போதும்…!” என்று மகனை அர்த்தத்துடன் பார்த்தார் சுரேஷ்.
“சரிப்பா…!” என்பதோடு முடித்துக் கொண்டான்.
சற்று நேரத்தில் அனைவரும் கிளம்ப….”அண்ணி எங்க அண்ணாவை கண்கலங்காம பார்த்துக்கோங்க…!” என்று தீபி கிண்டல் அடிக்க….ஒரு வெற்று புன்னகையை பரிசளித்தாள் அபி.
“அபி பார்த்துக்கோம்மா….!” என்றபடி சித்ராவும்….”வரோம் அபி…” என்றபடி தைலாவும்….”கங்கிராட்ஸ் அண்ணி…” என்றபடி வருணும் கிளம்பினர்.
அனைவரும் கிளம்பி சென்று ஒரு மணி நேரம் ஆனா நிலையிலும் அபி ஒரே நிலையில் அமர்ந்திருந்தாள்.அவளுடைய கவலையெல்லாம்…அந்த செய்தியை பற்றியதாகவே இருந்தது.
“தாத்தா எப்படியும் பார்த்திருப்பார்…சும்மாவே பாட்டிக்கு என்னைக் கண்டால் ஆகாது…இப்ப என்னை என்ன நினைப்பாங்க…?” போன்ற சிந்தனைகள் சிந்தையில் உதிக்க….ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாள்.
“வாழ்க்கையில் எதுவும் எனக்கு முறைப்படி நடக்காது போல…” என்று தன்னைத் தானே நொந்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் ரிஷி அங்கு இல்லாததை.
திடீரென்று தனித்து விட்டதைப் போல் உணர்ந்தாள் அபி.கஷ்ட்டப்பட்டு தன் கால்களைப் பிரிக்க முடியாமல் பிரித்து எழுந்தவளுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.
பசி வயிற்றைப் பிரட்ட…அப்பொழுது தான் சாப்பிடாததே நியாபகத்திற்கு வந்தது.கல்யாணம் முடிந்து…ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிடாத மணப்பெண் நானாகத்தான் இருப்பேன்…என்று தனக்குள் சிரித்துக் கொண்டவள்….தன் கழுத்தில் தொங்கிய..அந்த புது மஞ்சள் சரடை நக்கலாய்ப் பார்த்தாள்.
“வந்தாங்க….புடவை கட்ட சொன்னங்க…மகனை தாலி கட்ட சொன்னங்க…கிளம்பிப் போய்ட்டாங்க…என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்…என்னைப் பற்றி..என் மனம் பற்றி யாருக்கும் கவலையில்லையா..?” என்று நினைக்க…
“உன்னை யாரும் கை கால்களைக் கட்டி தூக்கிக் கொண்டு போய் தாலியைக் கட்டவில்லை.சுய நினைவோடு தானே இருந்தாய்…அப்பொழுதே மறுத்திருக்க வேண்டியது தானே…காதலன் கையில் தாலியைப் பார்த்ததும் மயங்கிப் போய் நின்றாய் தானே…!” என்று அவளின் மனசாட்சி எள்ளி நகையாட…
அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள் அபி.
மெல்ல சமையல் அறைப் பக்கம் செல்ல….அங்கே சாம்பார்,ரசம், பாயாசம்,கூட்டு,பொரியல் என்று ஒரு விருந்தையே தயார் செய்து வைத்து விட்டு தான் சென்றிருந்தார் சித்ரா.
பசியின் வேகத்தில் சாப்பிட அமர்ந்தவளுக்கு அப்பொழுது தான் ரிஷியின் நியாபகம் வந்தது.அவனும் சாப்பிடவில்லையே…? என்று நினைத்தவள்… அவனைத் தேடி சென்றாள்.
அவனின் அறையை நோக்கி சென்றவள்…கதவைத் தட்ட கையை எடுக்க….கதவு தானாக திறந்து கொண்டது.
மெதுவாக உள்ளே செல்ல…..தனது நெற்றியின் மேல் கைகளை வைத்திருந்தவன்….இமைகளை மூடியிருந்தான்.உடையைக் கூட மாற்றாமல் படுத்திருந்த அவனின் தோற்றம் கண்டு…பழைய அபி விழித்துக் கொள்ள….அவனுக்காய் வேதனைப்பட்டாள்.
“ம்ம்க்கும்…” என்ற செருமலில்…கைகளை விலக்கி…கண்களைத் திறந்தான் ரிஷி.அங்கு வாடிய மலராய் நின்றிருந்த அபியைக் கண்டவன்….வேகமாய் எழுந்து…
”என்ன..?” என்றான்.
“சாப்பிட….பசிக்குது…” என்று சொல்ல வந்ததை முழுமையாய் சொல்லாமல் திணற…
“ஷிட்…எப்படி மறந்தேன்….” என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவன்…
“ஒரு நிமிஷம்..நான் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்…!” என்ற படி எழுந்தான்.
அதற்கு மேல் அங்கு நிற்காமல் அங்கிருந்து வெளியேறினாள் அபி.
ரிஷியும் சிறிது நேரத்தில் கீழே செல்ல…அவள் சாப்பிடாமல் அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு எதிரில் அமர்ந்தவன்….”பசிச்சா சாப்பிட வேண்டியது தானே…!” என்றபடி அவளுக்கும் சேர்த்து பரிமாறினான்.
“இல்லை வேண்டாம்..” என்று அவள் தடுக்க…அவளை முறைத்தவன் சாப்பிடு…என்றான் கண்டிப்புடன்.
அதற்கு பிறகு அங்கு வார்த்தைளின் தேவை இருக்கவில்லை.அவர்களின் பசியே அவர்களை பேசாமல் சாப்பிட வைத்தது.
ரிஷி அவளையே பார்த்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க….அவனின் பார்வை புரிந்தவளாய் தலையை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் அபி.
“இவளுக்கு என்னால் நல்ல கணவனாக இருக்க முடியுமா..?” என்ற சந்தேகம் முதன் முறையாய் அவன் மனதில் தோன்றியது.
ஒரு வழியாக சாப்பிட்டு முடிக்க….தனது அறைக்குள் சென்று அடையலாம் என்று அபி செல்ல…
“ஒரு நிமிஷம் அபி….கிளம்பு…கொஞ்சம் வெளிய போகணும்..!” என்றான்.
“நான் வரலை..!” என்றாள்.
“வறியா..? வரலையான்னு கேட்கலை..! கிளம்புன்னு தான் சொன்னேன்..!” என்று அதிகாரமாய் உரைத்து விட்டு சென்றான் ரிஷி.
“அதிகாரம் தூள் பறக்குது…இவன் சொன்னா நான் கிளம்பனுமா…?” என்று நினைத்தவள் நகராமல் நிற்க….
கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தவன்..அவள் அதே இடத்தில் நிற்பது கண்டு….
“என்ன நான் சொன்னது கேட்கலையா…?” என்றான்.
“நானும் வரலைன்னு சொன்னேன்..உங்களுக்கு கேட்கலையா…?” என்றாள் பதிலாய்.
அவளின் அருகில் வந்து அவளை ஊன்றி பார்த்தவன்….சட்டென்று அவளை அல்லேக்காய் தூக்கினான்.
“என்ன பண்றிங்க…? விடுங்க என்னை…!” என்று அவள் திமிர… அதையெல்லாம் சட்டை செய்யாதவன் போல்..அவளைத் தூக்கிக் கொண்டு சென்று காருக்குள் கிடத்தியவன்…கதவை லாக் செய்தான்.
மறுபுறம் வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்தவன்….காரை எடுக்க….வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அபி.
வெள்ளிப் பனி மேகங்கள்…செல்லும் ஊர்கோலங்கள்…
அவள் பாதத்தில் என்னை சேருங்கள்…
அந்த மழை மேகங்கள்…எந்தன் எதிர்காலங்கள்…
காதல் தீர்வுக்கு வழி காட்டுங்கள்…
நெஞ்சில் அலைமோதும் கடல் போல ஓசை…
வந்து கரையேறும் அலைகென்ன ஆசை…
இன்ப மயக்கமென்ன…சின்ன தயக்கமென்ன…
இந்த காலங்கள் தவக் கோலங்கள்….!