அத்தியாயம் 4:
ரிஷியை ரசித்துக் கொண்டே சென்ற அபிக்கு...ஏனோ தைலா அவனிடம் உரிமையாய் பழகுவது ஒரு வித பொறாமையைத் தூண்டியது.
“உனக்கு ஏன் இப்ப இப்படி ஒரு எண்ணம் தோணுது...! இந்த தைலா மட்டும் இல்லைன்னா இவன் இந்நேரம் உன்னைத் துரத்தி விட்டிருப்பான்...! நீ என்னடான்னா அவள் மேலேயே பொறாமைப் படுற...?” என்று மனசாட்சி சொல்ல.…
“அதுவும் உண்மைதான்...” என்று மூளை ஏற்றுக் கொள்ள,மனம் மறுத்தது. ரிஷி இவர்களை விட்டு கொஞ்சம் முன்னே செல்ல.…
“நாம இப்போ எங்க போறோம்..?” என்றாள் அபி.
“இங்க எங்களுக்கு சொந்தமான எஸ்டேட் இருக்கு அபி.…அங்கதான் போறோம்..!” என்று தைலா பேச்சை முடிக்க.…
“நீங்க ரெண்டு பேரும் நண்பர்களா..?” என்றாள் சிறிது பொறாமையுடன்.
அவளை ஒரு மார்க்கமாய்ப் பார்த்த தைலா...”பின்னே...எங்களைப் பார்த்தா உனக்கு எப்படித் தோணுது...?” என்று கிண்டலுடன் கேட்க...
“இல்லை...அப்படியில்லை…கேட்கணும்ன்னு தோணியது கேட்டேன்... அவ்வளவு தான்..!” என்றாள் அபி.
“நாங்க ரெண்டு பெரும் நல்ல நண்பர்கள் தான் ..ஆனா இவன் என்னோட நண்பன் கிடையாது.இவனுக்கு வருண்..வருண்னு ஒரு மாங்கா மடையன் தம்பியா இருக்கான்.அவனும் நானும் கிளாஸ்மேட்ஸ்.…அவன் ஒரு டாக்டர்.… ஹிஹி…நானும் ஒரு டாக்டர்.…அது போக...நாங்க பேமிலி பிரண்ட்ஸ்….. அவ்வளவு தான்..!” என்றாள் தைலா.
அவளது பதிலில்..எதிர்பார்த்த அளவு பதில் கிடைக்காவிட்டாலும்…. ஏதோ ஒரு வகையில் திருப்தி பட்டுக் கொண்டாள் அபி.
“நான் கேட்கறேன்னு தப்பா நினைக்காத அபி...நீ ஏன் உன்னைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேன்னு அடம் பிடிக்கிற... என்கிட்டே சொல்லக் கூடாதுன்னு நினைச்சா சொல்ல வேண்டாம்..!” என்று ஒரு பிட்டைப் போட்டாள் தைலா.
“அப்படியெல்லாம் இல்லை தைலாக்கா.…சொல்லக் கூடாதுன்னு இல்லை. இருந்தாலும்...உங்களுக்கு நான் இங்க இருப்பதில் சிரமம் இருந்தா சொல்லுங்க... நான் கிளம்பிடுறேன்...!” என்று பட்டும் படாமல் பேசினாள் அபிராமி.
“எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை அபி.…இருந்தாலும் உங்க வீட்ல உன்னைத் தேடுவாங்க தானே..! அவங்களுக்கு கஷ்ட்டமா இருக்காதா...?” அதுக்காகத்தான் கேட்டேன் என்றாள்.
அதற்கு அபிராமியின் மௌனமே பதிலாய் கிடைக்க.…மேற்கொண்டு அவளிடம் பேச்சை வளர்க்க விரும்பவில்லை தைலா.அவளாக மனம் திறந்து சொல்லும் போது சொல்லட்டும் என்று விட்டு விட்டாள்.
“தைலாக்கா...அந்த குடிசைக்குள் இருந்து புகை வருது.…தீ ஏதும் பிடித்திருக்குமோ...!” என்றாள் அபி...அங்கிருந்த குடிசையை கைகாட்டி.
“அது குடிசை இல்லை அபி.…அங்க யூகலிப்டஸ் இலைகளை கலனில் வைத்து அவிப்பாங்க.…அதிலிருந்து கிடைக்கிற படிமங்களைத்தான்... தைலமாக எடுப்பாங்க...ஒரு வகையில் குடிசைத் தொழில் மாதிரி..” என்று விளக்கம் கூறினாள் தைலா.
“ஹோ...அது தான் உங்களுக்கு தைலான்னு பெயர் வச்சிருக்காங்களா...?” என்று அபி கேட்க...நொந்து போனாள் தைலா.
“அம்மா தாயே...! என் முழுப் பெயர் தையல் நாயகி...சுருக்கமா தைலான்னு கூப்பிடுவாங்க.…இந்த விளக்கம் போதுமா...இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டுமா...?” என்று பாவமாய் சொல்ல...
“கிளுக்…” என்று சிரித்தாள்.அவளின் சிரிப்பில்...முத்து பல் வரிசையும்.. அவளின் தெத்துப் பல்லும் அழகாய் வெளிப்பட...அந்த சிரிப்பு சத்தத்தில் திரும்பிய ரிஷி.…அவளையே இமைக்காமல் பார்த்தான்.
ரிஷியைப் பார்த்த அபி தனது சிரிப்பை நிறுத்திக் கொள்ள.…”என்ன பண்ற ரிஷி...” என்று தனக்குத் தானே சொன்னவன்...கண்களை ஒரு முறை இருக மூடித் திறந்தான்...
“தைலா எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு...நான் கெஸ்ட்ஹவுஸ் போறேன்...நீங்க வந்திடுங்க...” என்றபடி விருவிருவென்று நடந்து சென்று விட்டான்.
நடந்த அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள் தைலா. அப்படியாவது அவனுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது அவளால்.
கெஸ்ட்ஹவுசை அடைந்தவனது மனம் நிலை கொள்ளாமல் தவிக்கத் தொடங்கியது.
“என்ன இது...அந்த பெண்ணைப் பார்க்கும் போது...என்னை நானே கண்ட்ரோல் பண்ண முடியாமத் தவிக்கிறேன்...இது தப்பு.…ஏற்கனவே இப்பதான் ஒரு பிரச்சனை முடிந்திருக்கு...மறுபடியும் மீண்டும் ஒரு பிரச்னையை ஆரம்பிக்க விடமாட்டேன்...” என்று தனக்குள் உறுதி பூண்டான் ரிஷி.
அவனுக்குத் தெரியவில்லை...அவனின் உறுதி...வெகு நேரம் நீடிக்கப் போவதில்லை என்று.
பொள்ளாச்சி நகரம்.…பசுமைக்கும் இளநீருக்கும் பெயர் போன ஊர். நகரத்திற்கு வெளியே.…தென்னை மரங்கள் நிறைந்த அந்த தோப்பிற்குள் அமைந்திருந்தது அந்த அழகிய வீடு.
பழமையை தன்னுள் கொண்டிருந்தாலும்.…பார்ப்பவர்களை வசீகரிக்கும் ஒரு கலைநயம். மரத் தூண்கள் அந்த வீட்டினை தாங்கி நிற்க...வேலையாட்கள் தேங்காய்களை இறக்கிக் கொண்டு இருந்தனர்.
மரத்தின் அடியில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டில் ஒய்வாக அமர்ந்திருந்தார் கோவிந்தன்.வயது எழுபதைத் தொட்டிருந்தாலும்.…எந்த நோய் நொடியையும் அண்ட விடாமல் திடகாத்திரமாய் இருந்தார்.
“அமிர்தவள்ளி… அமிர்தவள்ளி.…” என்று தன் மனைவியை அழைத்தார்.
“இதோ வரேன்.…” என்று வீட்டினுள் இருந்து குரல் வர...தனக்குள் சிரித்துக் கொண்டார்.
“என்னங்க…? அவ்வளவு அவசரமா கூப்பிட்டிங்க..!” என்றபடி வந்தார் அமிர்தம்.
“சரண்யா எங்க...? பொழுது விடிஞ்சதில் இருந்து பார்க்குறேன்..! ஆளையே காணோம்.…!” என்றார்.
“வீட்டுக்குள்ள தான் இருக்கா...கல்யாணம் நின்ன கோவத்துல இருக்கா.…நான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா.… ம்ம்ம்ம்.…பெத்தவ போயிட்டா.…இதுகளை காப்பாத்தி கண்ணும் கருத்துமா வளர்த்தா...வளர்த்த கிடா மாருல பாயுது...” என்றார் பெருமூச்சு விட்டபடி.
“இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நாம என்ன கனவா கண்டோம்...யார் கண்ணுப் பட்டுச்சோ..என்னவோ..நல்லாயிருந்த குடும்பம் இப்ப நாதியிழந்து கிடக்குது...” என்று கோவிந்தனும் தன் பங்குக்கு மனபாரத்தைக் கொட்டினார்.
“யார் கண்ணும் படலை.…உன் பேத்தி கண்ணு தான் பட்டுடுச்சு.…அதான் என் வாழ்க்கை இப்படி அந்தரத்துல ஆடுது...” என்ற ஆதங்க குரலுடன் வந்தாள் சரண்யா.
“அந்த கழுத மட்டும் என் கண்ணுல படட்டும்.….அப்பறம் இருக்கு அவளுக்கு...எந்த நேரத்துல பொறந்தாலோ...நடக்குறது எதுவும் சரியா நடக்கிறதில்லை...” என்று புலம்ப ஆரம்பித்தார் அமிர்தம்.
“எல்லாம் இந்த தாத்தாவை சொல்லணும் பாட்டி...அவளுக்கு செல்லம் குடுத்து கெடுத்ததே இவர் தான்….” என்று கோவிந்தன் மேல் பழியைத் திருப்பினாள் சரண்யா.
“கொஞ்சம் வாயை மூடு சரண்யா.…இப்பவும் எனக்கு என் பேத்தி மேல் நம்பிக்கை இருக்கு...எந்த தப்பான காரியமும் அவளால் செய்ய முடியாது.…என்ன நடந்ததுன்னு தெரியாம...நாக்கு மேல பல்லைப் போட்டு பேசக் கூடாது...” என்று அந்த அனுபவஸ்தன் பேச...
“அவ பேசுறதுல என்ன தப்புங்கறேன்.…அவளால தான இவ கல்யாணமும் நின்னது.இவ கோபப் படுறதுல என்ன தப்பு...” என்று அமிர்தம் சரண்யாவிற்கு வக்காலத்து வாங்கினார்.
“நடந்த பிரச்சனையைப் பத்தி யாரும் பேச வேண்டாம்.…அதைப் பத்தி பேசி என்ன ஆகப் போகுது...இனி என்ன நடக்கணுமோ..அதை பத்தி பேசுங்க...”என்று துண்டை தோளில் போட்டவாறு வந்தார் கணபதி.
கோவிந்தன்–அமிர்தவள்ளியின் மகன் கணபதி.கோவிந்தன் பரம்பரை பரம்பரையாகவே பெரும் நிலக் கிழார்.தனது சொத்துக்களுக்கு வாரிசாக நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவரது ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டார் கடவுள்.
கணபதி மட்டுமே அவர்களுக்கு மகனாய் பிறக்க...அவருக்கு பிறகு எந்த வாரிசும் இல்லாமல் போக...அவர் ஒற்றைப் பிள்ளையாகிப் போனார்.அதில் பெரியவர்கள் இருவருக்கும் ஒரு மனவருத்தம்.
தங்கள் காலத்திற்கு பிறகு தங்கள் மகன் மட்டும் ஒற்றை மரமாய் நிற்க வேண்டுமே என்று அவர்கள் என்னாத நாளில்லை.அதனால் அவருக்கு திருமணத்தை தடபுடலாக முடித்தனர்.
முதல் குழந்தையாய் சரண்யா பிறக்க...அந்த குடும்பமே கொண்டாடி மகிழ்ந்தது.வீட்டிற்கு மூத்த பெண்...தலை மகள்.…மகாலட்சுமி...என்று மகிழ்ந்தனர்.
கணபதியின் மனைவி இரண்டாம் முறை கருத்தரிக்க...தங்கள் குலத்திற்கு வாரிசு வரப் போகிறதென்ற ஆவல் அனைவரின் நெஞ்சிலும் வேரூன்றியது.
அமிர்தவள்ளி தன் மருமகளை தாங்கு தாங்குவென்று தாங்க...கணபதியும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.
அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி...இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்தது.அதில் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றம்.
இரண்டாவது குழந்தை மிகவும் கஷ்ட்டமான சூழ்நிலையில் …அறுவை சிகிச்சை செய்து பிறந்ததால்.…அடுத்த கர்ப்பத்தை தாங்குவது கடினம் என்று மருத்துவர்கள் கை விரிக்க...இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் போதுமென்று விட்டு விட்டார் கணபதி.
ஆனால் இதில் அமிர்தம் அம்மாளுக்கு விருப்பம் இல்லாமல் போக...இதற்கெல்லாம் காரணம் இரண்டாவது பிறந்த பெண் தான் என்று...கண் மூடித் தனமாக அந்த குழந்தையை வெறுக்க ஆரம்பித்தார்.
அப்போது ஆரம்பித்த வெறுப்பு இன்று வரையிலும் தொடர்கிறது.ஆனால் இதில் கோவிந்தன் விதி விலக்கு.எந்த குழந்தையாக இருந்தாலும்...அது கடவுள் கொடுத்தது என்று எண்ணி அகம் மகிழ்ந்தார்.
ஏனோ அந்த குழந்தையின் முகத்தைப் பார்க்கும் போது வெறுக்கத் தோன்றவில்லை அவருக்கு.குண்டு கன்னமும்...கொழு கொழுவென்று இருந்த முகமும்...பளீரென்ற நிறத்தில் இருக்கும் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம்...மனக் கவலைகள் தொலை தூரம் விலகி சென்று விடுவது போல் உணர்வார் கோவிந்தன்.
அமிர்தவள்ளி அந்த குழந்தையை ஒதுக்கினாலும்.…கோவிந்தன் ஒதுக்கவில்லை.கணபதியோ விருப்பையும் காட்டவில்லை... வெறுப்பையும் காட்டவில்லை.
தாய்க்கும்,தாத்தாவிற்கும் செல்லமாகிப் போன குழந்தை.…விரைவில் தனது பாசமான தாயையும் இழக்க.…அன்றிலிருந்து தன்னுடைய தாத்தா மட்டுமே எல்லாமுமாகிப் போனார்.
தந்தையோ இருந்தும் இல்லாதது போல் இருக்க.….சரண்யாவிற்கு மட்டும் ஏனோ தன் தங்கையை பிடிக்காமலேயே போனது. அது பாட்டியின் போதனையா...? இல்லை தனக்கு பிறகு பிறந்தவள் தன்னை விட அழகில் சிறந்தவளாக இருக்கிறாள் என்ற பொறாமை உணர்வா...என்று யாராலும் பிரித்தறிய இயலாத ஒரு பிம்பமாக இருந்தாள் சரண்யா.
அவள் வளர வளர ….அமிர்தவள்ளிக்கும், சரண்யாவிற்கும் பிடிக்காதவளாகவே மாறிப்போனாள்.
கண்மூடித்தனமான மூடநம்பிக்கையின் வெளிப்பாடாக வரும் வெறுப்பு...அவளையும் விட்டு வைக்கவில்லை...அவள் தான் அபிராமி.
பெண்ணாய் பிறப்பதாலோ என்னவோ…..கூடவே சில வெறுப்புக்களையும் சம்பாத்தித்துக் கொள்ள முடிகின்றது.பழமையில் ஊறிப் போன சில மனிதர்கள்….இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
“அதெப்படி அப்படியே விட முடியும் கணபதி.…!போனவ எங்க போனாளோ...யார் கூட போனாளோ...! குடும்ப மானத்தை பறக்க விட்டுட்டுப் போய்ட்டா..!” என்று அமிர்தவல்லி புலம்ப.....
“என் பொண்ணு அப்படி எல்லாம் செய்வான்னு எனக்கு தோணலை...!” என்று முதன் முதலாய் அபிராமிக்கு ஆதரவாய் பேசினார் கணபதி.
“இன்னைக்கு தான் கணபதி நீ சரியாய் பேசியிருக்க.…அபிராமி அப்படி செய்யக் கூடிய பொண்ணு இல்லை.…என்ன நடந்ததுன்னு தெரியாம நாம ஒரு முடிவுக்கு வருவது தப்பு.…” என்று கோவிந்தன் எடுத்து சொல்ல...
“தாத்தா...உங்களுக்கு என்னைப் பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்லையா...? இப்பக் கூட அவளைப் பத்தியே பேசிட்டு இருக்கிங்க...!” என்று சரண்யா எரிச்சலுடன் சொல்ல...
“தப்பு சரண்யா.…முதலில் இப்படி பேசுவதை நிறுத்து...! அவள் உன் தங்கை.….! அவள் மேல் உனக்கு இவ்வளவு வெறுப்பு ஆகாது...நானும் உனக்கு பலமுறை சொல்லியிருக்கிறேன்..!” என்று தாத்தாவாய் மாறி அதட்டினார் கோவிந்தன்.
“ம்ம்க்கும்...அவளுக்கு அறிவுரை சொல்றதை விட்டு விட்டு …உங்க செல்ல பேத்தி.…அந்த ஓடுகாலிக் கழுதை எங்க இருக்குறான்னு கண்டுபிடிக்கிற வேலையைப் பாருங்க...!” என்று கழுத்தை நொடித்தபடி வீட்டினுள் சென்றார் அமிர்தவள்ளி.
“போலீஸ்ல புகார் குடுக்கலாமாப்பா...!” என்று கணபதி தன் தந்தையிடம் வினவ...
“போலீஸ் எல்லாம் வேண்டாம்ப்பா.…நம்ம ஆளுங்களை விட்டே தேட சொல்லு...என் மனசுக்கு ஏதோ தப்பா நடக்க போகுதுன்ற ஒரு உணர்வு தோணுது...” என்றார் ஆயாசமாய்.
“நீங்க சொல்றபடியே செய்றேன்ப்பா...!” என்றபடி சென்றார் கணபதி.
இது தான் கணபதி.…தன் தந்தையின் சொல்லுக்கு மறு சொல் சொல்லுவதில்லை.சில சமயம் கோவிந்தனே எரிச்சல் படும் அளவிற்கு தலையாட்டி பொம்மையாய் இருப்பார்.இப்படி இருப்பவர் ஒரு விஷயத்தில் மட்டும் அவரை மறுத்துப் பேசியிருந்தார்.
அபிராமியின் அன்னையின் மறைவிற்கு பிறகு...அமிர்தவள்ளி–கோவிந்தன் எவ்வளவு எடுத்து சொல்லியும் இன்னொரு திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்.
இதில் அமிர்தவள்ளிக்குத் தான் மிகுந்த மனஸ்தாபம்.மகனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பதின் மூலம்...குடும்பத்திற்கு ஒரு ஆண் வாரிசை கொண்டு வந்து விடலாம் என்ற எண்ணத்தை நிறைவேற்றி வைப்பதில் கணபதிக்கு உடன் பாடு இல்லை.தனி மரமாகவே இருந்து விட்டார்.
ஊட்டியின் குளிர்….புது ஏகாந்த மனநிலையைத் தர….கெஸ்ட்ஹவுஸ் வெளியே போடப்பட்டிருந்த மூங்கில் சோபாவில் அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள் அபிராமி.
தைலா லேப்டாப்பில் ஏதோ வேலையாக இருக்க…ரிஷியோ வெளியில் சென்றிருந்தான்.
என்ன செய்வதென்று தெரியாமல்…வெளியில் வந்து அமர்ந்தவள்….சுற்றுப் புறத்தில் தன்னைத் தொலைத்தவளாய் ரசனையுடன் அமர்ந்திருந்தாள்.
திடீரென்று அவளுக்கு வீட்டு நியாபம் வர….சுற்றியிருந்த மோன நிலை முற்றிலும் விடுபட்டு போனது.
பாட்டியின் நியாபகமும்,அக்காவின் நியாபகமும் வர….அவளையும் மீறி கண்கலங்கினாள்.
தன்னை அவர்கள் ஒதுக்குகிறார்கள் என்ற விஷயமே சில காலம் கழித்து தான் அவளுக்கு தெரியவந்தது.
ஏனோ அவளுக்கு அவளின் தாத்தாவின் நியாபகமும் வர..முகம் பூவாய் மலர்ந்தது.
“எல்லாரும் எப்படி இருப்பாங்க..? என்னைத் தேடுவாங்களா….? என்ன நடந்திருக்கும்….? இப்ப நான் போனா பாட்டி எப்படி எடுத்துப்பாங்க…!” என்று யோசித்தவளுக்கு தலையை வலிக்க ஆரம்பித்து.
நடந்த எதற்கும் அவள் காரணமாய் அமையாமல் ….வெற்று காரணி ஆகிப்போனாள்.
நடந்தவற்றை நினைத்துப் பார்த்தவளுக்கு….அதை கிரகிக்க நேரம் எடுத்துக் கொண்டது.
இருளாய் இருந்த அவள் மனம் சட்டென்று பிரகாசம் ஆனது.அவள் முன்னால் ரிஷி வந்து கொண்டிருந்தான்.தன் மனம் அலைபாய…. படபடவென்று அடித்துக் கொண்ட தன் இதயத்தை….சீராக இருபது போல் பார்த்துக் கொண்டாள்.
அவனைக் காணாதவளைப் போல் திரும்பிக் கொள்ள….அவளின் ஒவ்வொரு செய்கையும் அவன் கண்களில் இருந்து தப்பவில்லை. அவளைக் கண்டும் காணாததும் போல் அவளைக் கடந்து உள்ளே சென்றான் ரிஷி.
“ஸ்ப்ப்பா….! என்ன பார்வை …அப்படி ஒரு ஊடுருவும் பார்வை..!” என்று தனக்குள் பேசிக் கொண்டவள்….சீரான மூச்சை வெளிவிட்டாள்.
ஒரு சிலர் மட்டுமே பார்த்தவுடன் மற்றவரின் கவனத்தை ஈர்ப்பர்.ரிஷி அந்த வகை.அவனை முதன் முதலாய் பார்த்த அந்த தருணம்…. மழைச்சாரலாய் அவள் கண் முன் வந்தது.
பொள்ளாச்சி அரசுக் கலைக் கல்லூரி….
ஆம்…அபிராமி படித்த(படிக்கும்) கல்லூரி.சரண்யா…மிகப் பெரிய தனியார் கல்லூரியில் படிக்க…அபிராமிக்கு அரசுக் கல்லூரியில் படிக்க மட்டுமே வாய்ப்பும்,அனுமதியும் கிட்டியது பாட்டியிடமிருந்து.
கல்லூரியே பரபரப்பாய் இருக்க….சரட்டென்று வந்து நின்றது போலீஸ் வாகனம்.
“என்னடி நம்ம கல்லூரிக்குள் போலீஸ் வண்டி வருது..!” என்றாள் ஒருத்தி.
“உனக்கு விஷயமே தெரியாதா…? நம்ம இங்க்லீஷ் டிபார்ட்மென்ட் பொண்ணு ஒருத்தி மேல…நம்ம டிப்பார்ட்மென்ட் பையன் ஒருத்தன் ஆசிட் ஊத்திட்டானாம்…அதான் விசாரணைக்கு வந்திருப்பாங்க..!” என்றாள் மற்றொருத்தி.
இதைக் கேட்ட அபிராமிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.வக்கிர மனமும்,அடைந்தே தீர வேண்டும் என்ற கடிவாள எண்ணமும் கொண்ட ஆண்கள் எப்பொழுதுதான் திருந்த போகிறார்களோ…! என்று நொந்து கொள்ள மட்டுமே அவளால் முடிந்தது.
“வாவ்….செம்ம ஹேண்ட்சம்..” என்று பல பெண்கள் வாயத் திறக்க….மனம் பாரமாய் இருக்க..…வேண்டா வெறுப்பாய் அந்த காவல்துறை வாகனத்தைப் பார்த்தாள்.
அந்த நிமிடம் அவனைப் பார்த்து திகைத்து தான் போனாள் அபிராமி.
அதிலிருந்து மிடுக்காய் இறங்கினான் ஒருவன்….காவல்துறை பயிற்சியின் போது திமிறேறிய புஜங்களும்….ஆறடி உயரமும்….இருகிய முகமும்… இருக்கிறதோ..இல்லையோ என்று உணரவைக்கும் அளவிற்கு உடலோடு ஒட்டியிருந்த வயிறும்…கண கச்சிதமான யூனிபார்மில்…தனது தொப்பியை தலையில் இருந்து எடுத்து விட்ட அந்த நிமிடம்….தலையைக் கோதியபடி திரும்பினான் ரிஷி….
காரணமில்லாமல் அவள் கண்கள் அடிக்கடி அவனையேத் திரும்பிப் பார்க்க…இமைகளை அடக்க முடியாத இயலாமை அவள் முகத்தில் தெரிந்தது.
என்ன இது…? என்ன ஆச்சு எனக்குள்....? யார் இவன்... ? எதற்காக என் கண்கள் அவனை அலைபுறுதலுடன் காண வேண்டும்..?
சுற்றியிருந்த அனைத்தும் மறைந்து….யாருமில்லா இடத்தில் அவனை தான் மட்டும் நின்று பார்ப்பது போன்ற பிரம்மை அவளுள்…
ஒரு நொடி என் இதயமே நின்று துடித்தது இன்று…
எனக்குள்ளே பேசும் பழக்கம்…. இது எப்படி வந்தது எனக்கும்…
விழிகளுக் ஏனிந்த புழுக்கம்….
அவன் குளிர் முகம் பார்த்தும் துளிர்க்கும்…..