அத்தியாயம் 3:
அவளின் அலறல் சத்தத்தில் திரும்பினான் ரிஷி.அவள் மயங்கி கீழே சரிந்திருக்க…அதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்.
“ஹேய்.…இங்க பார்...இங்க பார்.…” என்று சொல்லியபடி...ஜக்கில் இருந்த தண்ணீரை எடுத்துத் தெளித்தான்.
மான் விழிகள் உருள.….மெல்ல கண்களைத் திறந்தாள் அபிராமி.கண் விழித்தவள்.…சுவற்றில் இருந்த அந்த உருவத்தைக் கண்டு மருண்டு விழிக்க...அவள் பார்வை போகும் திசையைக் கொண்டு..நடந்ததை ஊகித்தான் ரிஷி.
“சுவற்றில் இருக்கும்...எருதுத் தலைகளைப் பார்த்து தான் இந்த கத்து கத்தியிருக்கா...என்ன கொடுமைடா இது...?” என்று மனதில் நினைத்தவன்...
“இங்க பார்…இப்ப எதுக்காக இப்படி கூப்பாடு போட்டு.…எல்லாரையும் பயமுறுத்துற.…உன்னை யார் இங்க வர சொன்னது.…?” என்று கத்தத் தொடங்க.…அவளது கண்களில் கண்ணீர் குளம் கட்டத் துவங்கியது.
“அம்மா தாயே..! போதும்.…எதுக்கெடுத்தாலும் அணையை திறந்து ….அழுக ஆரம்பிச்சுடுற...? இப்ப நான் என்ன கேட்டுட்டேன்...!” என்று எரிச்சலுடன் சொல்ல.…
“இல்லை...கீழ...யாரும்.…அக்கா...தேடி.…மேல...இங்க..இங்க...” என்று வார்த்தைகள் தந்தியடிக்க.…..அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் இமைகளைத் தாழ்த்திக் கொண்டாள்.
அவளது முகத்தில் தெரிந்த ஏதோ ஒரு அறியாமை, இயலாமையில்.… அதற்கு மேல் அவன் கேள்விக் கணைகளைத் தொடுக்கவில்லை.
“சரி.…போ..!” என்று அவன் சொல்ல.…
விட்டால் போதும் என்ற ரீதியில் அவள் உடனே செல்வதைக் கண்டவனது முகம் லேசாக இளகியிருந்தது.
“என்ன மாதிரியான பெண் இவள்...? மாதிரி உருவத்திற்கே பயந்து நடுங்கும் இவள் எப்படி இங்கே வந்தாள்...? எந்த ஊராக இருக்கும்...? இயல்பிலேயே மெல்லிய மனம் படைத்தவள் போல இருக்கிறாள்.…? எப்படி தனியாக வந்து மாட்டிக் கொண்டாள்...?” என்ற கேள்விகள் வரிசையாக அவன் மனதில் படையெடுக்க.…சிந்தனையில் ஆழ்ந்தான் ரிஷி.
கீழே சென்ற அபிராமியின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வட்டமிடத் தொடங்கின.அவனை எதிர்பார்த்து அவள் செல்லவில்லை என்றாலும்.…தன் மயக்கத்தினால் கிடைத்த அவன் அருகாமை...தன்னை எங்கோ அழைத்து செல்வதைப் போல் உணர்ந்தாள்.
“அடிப் பைத்தியக்காரி...?உனக்கு எதுக்கு இந்த வேண்டாத நினைப்பு...? நீ யார்...? உனக்கு இந்த நினைப்பு வரலாமா...?வரத்தான் நீ விடலாமா...?” என்று மனசாட்சி எள்ளி நகையாட.…தன் விதியை நினைத்தவள்.….தன் மனதைத் தன்னுள்ளே புதைத்தாள்.”
“எனக்கும் கொஞ்சம் உணவிடேன்..!” என்று அவள் வயிறு கெஞ்ச.… அப்பொழுது தான் தன் பசி உணர்ந்தாள் அபிராமி.
சிறிது தயக்கத்துடன்...அங்கிருந்த டைனிங் டேபிளை நோக்கி சென்றவள் …யோசனையுடன் அதன் அருகிலேயே நின்று விட்டாள்.
தானும் ஒரு குளியலைப் போட்டுவிட்டு.…உணவு அருந்துவதற்காக...கீழே வந்தான் ரிஷி.வந்தவன்.…சாப்பாட்டு மேஜை அருகே யோசனையுடன் நின்றிருந்த அபிராமியக் கண்டு “என்ன சாப்பிடலையா அபி..?” என்றான்.
ஆனால் அவனின் அழைப்பை உணராமல் தன் நிலையிலேயே அவள் இருக்க.…”ஆத்தா அபிராமி.…” என்று அவன் கத்த.…அந்த சத்தத்தில் உலுக்கியவள்...நிஜத்திற்கு வந்தாள்.
“சாப்பிடலையான்னு கேட்டேன்...!” என்று ரிஷி மீண்டும் ஒரு அழுத்தத்துடன் கேட்க...
“இல்லை….பசிக்குது..” என்றாள் அப்பாவியாய்.
அவளின் பதில் ஏதோ ஒரு விதத்தில் அவனைத் தாக்கியது.
“சரி..உட்கார்..!சாப்பிடலாம்..!” என்றபடி அவளுக்கு ஒரு இருக்கையை இழுத்து போட்டவன்.…எதிர்புறம் தானும் அமர்ந்து கொண்டான்.
“இல்லை...அந்த அக்கா.…!” என்று அவள் இழுக்க...”அக்காவா..?” என்று ஒரு நிமிடம் விழித்தவன்...பிறகு புரிந்தவனாய்..
“தைலா கொஞ்சம் வெளிய போயிருக்கா.…கொஞ்ச நேரத்துல வந்திடுவா...! அதுவரைக்கும் நீ பசியோட இருக்க போறியா...வந்து சாப்பிடு..!” என்றான் தன்மையாய்
பூம்பூம் மாட்டைப் போல் தலையை ஆட்டியவள்.…அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள்.அதற்கு பிறகு தான் தெரிந்தது பசியின் கொடுமை.தன்னை மறந்து ..தன் எதிரில் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவனும் அவளை கவனித்தும் கவனிக்காததும் மாதிரி சாப்பிட்டு முடித்தான்.அவளும் சாப்பிட்டு முடித்து கை கழுவ...அது வரை பொறுமையாய் காத்திருந்தவன்...
“இப்ப சொல்...நீ யார்..? இந்த காட்டுக்குள்ள எப்படி வந்த...? உன் ஊர் எது...?” என்று காவல்துறை அதிகாரியாக ..தன்னுடைய கடமையை செய்ய ஆரம்பித்தான்.
அதுவரை நன்றாக இருந்தவள்.….அவனின் ஒவ்வொரு கேள்வியிலும்... முழிக்க ஆரம்பித்தாள்.அவனைத் தவிர்க்க எண்ணி.…தன் பார்வையை மாற்றவும்,எதுவும் சொல்லாமல் தவிப்புடன் இருப்பதுமாக.…இருந்தாள்.
“நீ இப்ப விபரம் சொன்னாதான்…நாளை உன்னை உன் வீட்டில் சேர்க்க வசதியாய் இருக்கும்...!” என்று அவன் விடாப்பிடியாய் இருக்க...
எதை,எப்படி சொல்வது என்று அவள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில்.…அவளைக் காக்க வந்த கடவுளாய் வந்து சேர்ந்தாள் தைலா.
“ஒருவழியா எல்லாரையும் ரிஸீவ் பண்ணி...ஹோட்டல்ல தங்க வச்சாச்சு ரிஷி...அவங்களோட சேர்ந்து டின்னரையும் முடுச்சுட்டேன்...! நீங்க சாப்பிட்டிங்களா…?” என்று பட்டாசாய் பொரிந்து முடித்தாள் தைலா..”
ரிஷி அவளைப் பார்த்து முறைக்க......”என்னடா இது...நாம ஒன்னும் தப்பா சொல்லலையே...? அப்பறம் ஏன் இப்படி முறைக்கிறான்...?” என்று எண்ணியபடி அபிராமியின் முகம் பார்த்தாள் தைலா.
அபிராமியோ இவளை நன்றி நவிலும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.. “என்னடா இது...? இவ எதுக்கு இப்ப நன்றி பார்வை பார்க்குறா...? சம்திங் ராங்...!” என்று மனதில் நினைத்தவள்...
“அபிராமி.…நீங்க தூங்க வேண்டுமென்றால் அந்த அறையில் தூங்குங்க..!” என்று தைலா சொல்ல...”தெய்வமே..! இதற்காகத்தான் காத்திருந்தேன்...” என்ற பாவனையில் …ரிஷியைப் பார்த்துக் கொண்டே...தயங்கியபடி அந்த அறைக்குள் சென்று மறைந்தாள்.
அவள் செல்வதையே ரிஷி பார்த்துக் கொண்டிருக்க...அவனை மார்க்கமாகப் பார்த்து வைத்தாள் தைலா.
“டேய்..! உண்மையைச் சொல்லு.…என்ன பேசிட்டு இருந்த அந்த பொண்ணுகிட்ட... அவளை பிடிச்சிருக்கா உனக்கு.…! நான் வரும் போது என்ன சொல்லிட்டு இருந்த.….அவ பாவமா பார்த்துட்டு இருந்தா...?” என்று கண்ணடிக்க...
அவளை முறைத்தவன்..”நானும் எத்தனையோ லூசைப் பார்த்திருக்கிறேன்...!” என்றபடி நிறுத்த...”ம்ம்ம்...அப்பறம்...” என்று எடுத்துக் கொடுத்தாள் தைலா.
“உன்னை மாதிரி ஒரு அரை லூசை பார்த்ததேயில்லை...” என்று தலையில் கைவைத்தபடி அமர்ந்து விட்டான்.
முதலில் அவன் ஏதோ தன்னை பெருமையாக சொல்ல வருகிறான் என்று எண்ணிய தைலா...இறுதியாக அவளை அரை லூசு என்று சொல்லவும்... அவனை மொத்தத் துவங்கினாள்.
“ஏய் தைல டப்பா...விடு என்னை...” என்றபடி அவன் அவளை விலக்க...
“நானே அவகிட்ட விசாரிச்சுகிட்டு இருந்தேன்.…நீ மட்டும் என்ட்ரி கொடுக்காம இருந்திருந்தா…ஏதாவது ஒன்னை அவள் வாயிலிருந்து வர வச்சிருப்பேன்...!” என்று ரிஷி சொல்ல...
“ஹோ..சாரிடா.…என்ன சொன்னா.…எதுவும் சொல்லலையா..?” என்றாள் அவன் அருகில் அமர்ந்தபடி.
“எங்க..? ஒண்ணுமே சொல்லலை...!இருக்கிற பிரச்சனையில் இவ வேற...நாளைக்கு முதல் வேலையா இவளை அனுப்பிடணும்...” என்றான்.
“உன் விருப்பம் போல செய்டா...இப்போ நான் செம்ம டயர்ட்...சோ நான் போய் தூங்குறேன்...!” என்றபடி சென்றாள் தைலா.
தைலாவிற்கு நன்றாகத் தெரியும்...ரிஷி அவ்வாறு செய்ய மாட்டான் என்று.இயற்கையில் அவன் அப்படிப்பட்டவன் கிடையாது.நடந்து முடிந்த சம்பவங்களின் விளைவால் கொஞ்சம் இறுகியிருக்கிறான் என்றே நினைத்தாள்.
அங்கே அறையில் தனித்து இருந்த அபிராமிக்கு...கொஞ்சம் பதட்டத்துடன் கூடிய பயம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.தைலா தன்னுடன் இருப்பாள் என்று என்ன...அவளோ...வேறு ஒரு அறையில் இருந்து கொண்டாள்.
தனிமையும்...சுற்றியிருந்த இருளும்...ஏதோ ஒரு வித அச்சத்தை அவளுக்கு ஏற்படுத்த.…கண்களை இருக மூடியவாறு படுத்துக் கொண்டாள். நடந்து முடிந்திருந்த சம்பவங்களின் விளைவால்... உடல் அவளை உறக்கத்திற்கு அழைக்க...தன்னையும் மீறி உறங்கிவிட்டாள்.
ஹாலில் அமர்ந்து சற்று நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்த ரிஷியின் கண்களும் தூக்கத்திற்கு அழைக்க.…டிவியை ஆப் செய்தவன்...சோம்பல் முறித்தபடி எழுந்தான்.
தன் அறைக்கு செல்ல முற்பட்டவனின் கால்கள்..அவனையும் மீறி...அபிராமி அறைப் பக்கம் திரும்ப..அவளது அறையில் இன்னமும் விளக்கு எரிவதைக் கண்டு …யோசனையுடன் சென்றான்.
“அபிராமி.…அபிராமி..அபி...” என்று அவன் கதவைத் தட்ட...கதவு தானாய் திறந்து கொண்டது.
தயக்கத்துடன் அவன் லேசாய் எட்டிப் பார்க்க...அங்கு கால்களைக் குறுக்கியபடி...அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
“என்ன இவ...? ரசாயைக் கூட போர்த்தாம தூங்குறா...?” என்று யோசித்தவன் அப்பொழுதான் கவனித்தான்...அவள் இன்னும் தான் கொடுத்த ஜெர்கினை அணிந்து கொண்டிருப்பதை.
காட்டில் பார்த்ததை விட அவள் முகம் அதிக ஜொலிப்புடன் இருப்பதைப் போன்று தோன்றியது அவனுக்கு.கள்ளம் கபடாமில்லா அவள் முகத்தை.…சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான்.
ஒரு பெண்ணை அவள் அறியாமல் பார்ப்பது தவறு என்ற அவனின் அடிப்படை குணம் தலை தூக்க.…
புருவங்களின் மத்தியில் விழுந்த சிந்தனை முடுச்சுடன்.…அங்கிருந்த ரசாயை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டவன்...அந்த அறையின் ஹீட்டரையும் ஆன் செய்தான்.
கதவை சாற்றிவிட்டு தனது அறைக்கு சென்று படுத்தவனுக்கு…உறக்கம் ஏனோ வரவில்லை.இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் அணிவகுத்து.…அவன் மூளையில் வரிசையாய் நிற்க.… இருளை வெறித்திருந்தான் ரிஷி.
சேலம் நகரில்...அந்த பெரிய வீட்டினுள் ஒரு பெரிய பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது.தீபிகா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“தீபி உனக்கு இப்போ என்ன பிரச்சனை..?” என்றான் வருண்.
“ஆமாடா.…உனக்கு என்ன பிரச்சனை...ஏன் முகத்தை இப்படி உம்முன்னு வச்சிட்டு இருக்க...?” என்று சுரேஷும் அவரது மனைவி சித்ராவும் ஒரே சேரக் கேட்டனர்.
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.…நீங்க எல்லாரும் தான் எதுவும் நடக்காத மாதிரி இருக்கிங்க…!”என்று குறைபட்டுக் கொண்டாள் தீபி.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லமா...!” என்று சுரேஷ் சொல்ல...
“போங்கப்பா...நான் உங்ககூட பேசமாட்டேன்.…பாவம் அண்ணா...” என்றவள் கண்கலங்க...
அனைவரது முகமும் சோகத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டது.நடந்த சம்பவம் அவர்களுக்கும் மனக்கஷ்ட்டத்தை தராமல் இல்லை.ஆனால் அதை வெளிக்காட்டாமல் இருந்தனர்.
“நடந்த எல்லாத்தையும் அவ்வளவு சீக்கிறம் மறக்க முடியலைன்னாலும்... அவன் சீக்கிரம் மறந்திடுவான் தீபி.…” என்றான் வருண்.
“போடா...உனக்கு கொஞ்சம் கூட அண்ணா மேல அக்கறையே இல்லை...அதான் இப்படி பேசுற...!” என்று சிலுப்ப.…
“உன்ன மாதிரி முகத்தை தூக்கி வச்சு உட்கார்ந்திருந்தா …அக்கறை இருக்குன்னு அர்த்தமா..? மண்ணாங்கட்டி.…எதுக்கு தேவையில்லாம பாசமலர் சீன் போட்டு...எங்க உயிரை எடுக்குற...” என்று எரிந்து விழுந்தான் வருண்.
“என்ன வருண்..? அவதான் சின்ன பொண்ணு..புரியாம பேசுறா...! அதுக்காக நீயும் இப்படி கடிந்து பேசணுமா...?” என்றார் சுரேஷ்.
“இல்லைப்பா...நீங்களே பாருங்க...!நடந்ததை மறக்க அவன் பேசாம ஊட்டி கிளம்பி போய்ட்டான்.போனது தான் போனான்...இந்த பாச மலரையும் இழுத்துட்டு போயிருக்கலாம்.…இவளுக்கு என்ன பிரச்சனை.…ரிஷி அண்ணா இங்க இல்லைங்கிறதா.…?இல்லை ஊட்டிக்கு இவளையும் கூட்டிட்டு போகலைங்கிறதா...?” என்று அவளைப் பார்த்துக் கொண்டே சொல்ல...
கையில் கிடைத்ததை எடுத்து அவனை மொத்தத் தொடங்கினாள் தீபிகா...”பக்கி..பக்கி...என்னைப் பார்த்தா உனக்கு எப்படிடா தோணுது..?நான் உன்னைக் கூப்பிட்டேனா...எனக்கு ஆறுதல் சொல்ல.…சொல்லுடா கூப்பிட்டேனா...” என்று மொத்த..
“அம்மா பாருங்க...உங்க பிள்ளையை எப்படி அடிக்கிறான்னு.…பாவம் இவளைக் கட்டிக்க போறவன்...இந்த பிசாசு அடிச்சே விரட்டிடுவா அவனை...!”என்றான் வருண்.
“அப்பா..” என்று சுரேஷிடம் சென்றாள் தீபி.
“என் பொண்ணு அப்படியெல்லாம் அடிக்க மாட்டா.…ஏன்னா அவ என்னை மாதிரி …உங்கம்மா மாதிரின்னா கொஞ்சம் யோசிக்கலாம்..” என்று சொல்ல...
“என்னை பேசாட்டி உங்க யாருக்கும் தூக்கம் வராதே..!” என்றபடி சிரித்துக் கொண்டார் சித்ரா.
இது தான் ரிஷியின் குடும்பம்.அப்பா ஓய்வுபெற்ற காவல் துறை ஆய்வாளர்.சித்ரா அன்பான குடும்ப தலைவி.வருண் மருத்துவ படிப்பை முடித்து விட்டு…இப்பொழுது பயிற்சியில் இருக்கிறான்.தீபிகா...இவர்கள் அனைவருக்கும் செல்லம்.…கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறாள்.
ரிஷிக்கு சிறு வயதிலிருந்தே தன் தந்தையைப் போல் காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்ற கனவு. தனது விடா முயற்சியால் அதை நிறைவேற்றியும் கொண்டான்.அதை நினைத்து பெற்றோருக்கு சிறு கர்வம் கூட உண்டு.
ரிஷி விஷயத்தில் கொஞ்சம் நிதானத்தை கடை பிடித்திருக்கலாம் என்று காலம் கடந்து யோசித்துக் கொண்டிருக்கின்றனர்...சுரேஷும் ,சித்ராவும்.
அவனது திருமண விஷயத்தை கொஞ்சம் ஆறப் போட்டிருக்கலாம் என்று இப்போது நினைப்பவர்கள்...அப்பொழுது யோசிக்க மறுத்து விட்டிருந்தனர். விளைவு... அவமானங்களும்...மனக் கஷ்ட்டமும் மட்டுமே...!
இரவு வெகு நேரம் உறக்கம் வராததால் நேரம் கழித்து தான் உறங்கினான் ரிஷி.காலை வெகு நேரம் கழித்து கண் விழித்தவன்.…நடப்பை உணர ஒரு நிமிடம் ஆனது.
எழுந்து பிரெஷ் ஆனவன்...அபிராமியை மறந்தவனாய் கீழே இறங்க...
அங்கே புத்தும் புது மலராய்.…குளித்து முடித்து தைலாவுடன் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள் அபி.
ஒரு நிமிடம் புரியாமல் பார்த்தவன்.….பிறகு நியாபகம் வந்தவனாய்...”என்ன இவ...விட்டா இங்கயே டேரா போட்டுடவா போல...இந்த தைலாவும் அவ கூட சேர்ந்து கும்மியடிச்சுகிட்டு இருக்கா...!” என்று எரிச்சல் பட்டவன்.…
“சரசம்மா எனக்கும் காபி..!” என்றபடி அவர்கள் எதிரில் சென்று அமர்ந்தான்.
“என்ன ரிஷி..நல்ல தூக்கமா...?இவ்வளவு நேரம் தூங்க மாட்டியே நீ..!” என்றாள் தைலா.
“ம்ம்ம் வேண்டுதல் …” என்றபடி அபியைப் பார்க்க.….அவள் விழி விரித்து இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரம் அவளையே பார்த்தவன்...அவள் விழியின் வீச்சை தாங்க முடியாமல் பார்வையை மாற்றிக் கொண்டான்.“யப்பா சாமி...கண்ணுலையே கதை சொல்லுவா போல இருக்கே...!” என்று மனதிற்குள் சொன்னவன்...
“தைலா.…எங்க போகணும்...விலாசம் என்ன...எல்லாம் கேட்டு வை.…பத்திரமா அவங்க வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டியது நம்ம பொறுப்பு..!” என்றான் அவளை பார்த்தும் பாராததும் போல்.
“டேய் ரிஷி.…ஏண்டா எப்பவும் போலீஸ்காரன் மாதிரியே பேசுற..! அவங்களுக்கு இங்க இருந்து போக விருப்பன்னா போகட்டும்.அப்படி இல்லைன்னா இங்கயே இருக்கட்டும்.எப்படியும் நாம ஒரு மாசம் இங்க தான இருக்க போறோம்..!” என்றாள் அபியை ஆராய்ந்தபடியே.
முதலில் அவளின் முகம் அதிர்ந்து பின் தெளிந்து.…பிறகு மகிழ்ச்சியடைவதைப் பார்த்த தைலா முடிவே செய்து விட்டாள்...அவள் விருப்பப்பட்டால் போகட்டும் என்று.
ஆனால் ரிஷியோ அவளை அனுப்புவதிலேயே குறியாக இருந்தான்.“என்ன சொல்ற தைலா...ஒரு வயசுப் பெண்ணை எப்படி நாம இங்க தங்க வைக்க முடியும்.…நாளைக்கு அவளை சார்ந்தவங்க வந்து கேள்வி கேட்டா...நாம என்ன சொல்வது...!” என்றான்.
“ரிஷி..என்னை கொலைகாரி ஆக்காத...ஏன் என்னைப் பார்த்தா சார்க்கு வயசுப் பெண்ணா தெரியலையோ...!” என்றாள் இடக்காய்.
“தைலா..நீயும் அந்த பொண்ணும் ஒண்ணா...!” என்று ரிஷி பட்டென்று கேட்க...அபிராமியின் விழிகள் சட்டென்று அவனின் விழிகளை சந்தித்தது.அது என்ன மொழி பேசியதோ தெரியவில்லை.…
“அதுக்கு மேல உன் விருப்பம்...நான் ஒரு வாக் போயிட்டு வரேன் !” என்றபடி செல்ல எத்தனிக்க...
“அதென்ன நீ மட்டும்...நாங்களும் தான் வருவோம்...ஏன் நாங்கல்லாம் நடக்கக் கூடாதா என்ன..?” என்றாள் தைலா.
“அம்மா தாயே..நீங்க நடக்கலாம்..ஓடலாம்..குதிக்கலாம்..ஏன் என்ன வேண்டுமென்றாலும் பண்ணலாம்...நான் எண்ணு கேட்டா...அப்ப சொல்லு..” என்று சொல்ல..
“அது...!” என்று கெத்தாய் உரைத்த தைலா.…”வா அபி..! அப்படியே ஒரு வாக் போயிட்டு வரலாம்..!” என்றபடி அவளையும் அழைத்துக் கொண்டு செல்ல எத்தனித்தாள்.
தான் உடன் சென்றால் அவனுக்கு பிடிக்காதோ என்று எண்ணிய அபி..ஒரு நிமிடம் யோசிக்க...அவள் எண்ணம் புரிந்தவளாய்.…”அதெல்லாம் அவன் ஒன்னும் சொல்ல மாட்டான்...நீ வா..!” என்றபடி அழைத்து சென்றாள்.
தைலாவிற்கு ஏனோ அபிராமியை மிகவும் பிடித்து போயிருந்தது.காரணம் என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை.அவளின் அமைதி..அவளின் அழகு...அவளின் சுபாவம் என்று மொத்தத்தில் அவளைக் காணும் போது …ஏதோ ஒரு இனம்புரியாத பாசம் அவளுள் தோன்றி மறைவதை அவளால் உணர முடிந்தது.
செவ்வானம் தன்னுடையை கதிர்களை உலகிற்கு பரப்ப.…யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த அந்த காட்டினுள்...அங்கொன்றும் இங்கொன்றுமாய் காலைக் கதிர்கள் பட.…அதைப் பார்க்கவே ரம்யமாய் இருந்தது அபிக்கு.
மிதமான வெப்பமும்...அதிகமான குளிரும் உடலை ஊடுருவ.…சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்தாள் அபி.
“இந்த இடம் ரொம்ப அழகாயிருக்கு..” என்றாள் தானாகவே வாயைத் திறந்து.அவளின் குரலில் ஈர்க்கப் பட்டவனாய் சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான் ரிஷி.
அங்கொன்றும்,இங்கொன்றும் திமிறிய கூந்தல் கற்றைகள்... ஒப்பனையில்லாத பளிங்கு முகம்.…அவள் அணிந்திருந்த ஸ்கேர்ட்டும், டாப்பும் சற்று லூசாக இருந்தாலும்...அவளை மிக அழகாக காட்டியது.
டாப்பிற்கு மேல் அவனினின் ஜெர்கினை விடாமல் அணிந்திருக்க...”இதை முதல்ல இவகிட்ட இருந்து வாங்கணும்..!” என்று மனதிற்குள் நினைத்தபடி நடந்தான் .
“ம்ம் உண்மைதான் அபி.இந்த இடம் ரிஷிக்கு ரொம்ப பிடிக்கும்...ஊட்டி வந்தாலே அவன் இங்க வந்திடுவான்...” என்றாள் தைலாவும்.
அப்பொழுது தான் அபிக்கு நியாபகம் வந்தது.நேற்று இந்த இடத்தில் தானே அவனைப் பார்த்தோம் என்று.ரிஷியைப் பார்த்த போது தான் இருந்த கோலத்தை நினைத்துப் பார்த்தவளுக்கு….உடல் கூசத் தொடங்கியது.
எப்பேர்பட்ட ஆபத்தில் இருந்து தப்பியிருக்கிறோம் என்று எண்ணியவளுக்கு... நடந்த நிகழ்வுகள் கண் முன் வர.…கண்கள் கலங்கி.…தடுக்கி விழப் போனாள்.
முன்னால் சென்று கொண்டிருந்த ரிஷியின் மீதே மோத.…”ஹேய் பார்த்து..பார்த்து...” என்று அவளை விழாமல் தாங்கினான்.
எல்லாம் ஒரு நிமிடம் தான்...”ஹேய் பார்த்து வா...நேத்து இருந்து உனக்கு இதே வேலையா போய்ட்டது.…எப்பப் பாரு ஒன்னு வந்து மோதுற.…இல்லைன்னா கத்தி மயக்கம் போடுற.…உன்னைப் பெத்தாங்களா.…இல்லை செஞ்சாங்களா...!” என்று கடுப்புடன் சொன்னவன்...
அவள் சுதாரிக்கும் முன்னரே.…பட்டென்று விட்டு விட்டு சென்றான்.அவள் கலங்கி நிற்க...
“தப்பா எடுத்துக்காத அபி...அவன் கொஞ்சம் முரட்டுத் தனமா பேசுவான்.. ஆனா மனசில் ஒன்னும் இருக்காது.அவன் வேற டென்சன்ல இருக்கான்... அதான் அப்படி பேசுறான்...!” என்று நண்பனுக்கு வக்காலத்து வாங்கினாள் தைலா.
அபியின் முகத்தில் வெற்று புன்னைகையே குடியிருந்தது....!
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்