அத்தியாயம் 20:
குமாரை ஜிப்பை எடுத்துக் கொண்டு… வெளியே சென்று காத்திருக்க சொன்னான்.விடை தெரியாத கேள்விகளுக்கு இன்று விடை கண்டே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தான்.
அங்கிருந்த மரத்தின் பின்னால் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்தான். ஒருவழியாக தேர்வு முடிந்து ஒவ்வொரு அறையில் இருந்தும் மாணவர்கள் வெளிவர….அபியின் வரவுக்காய் காத்திருந்தான் ரிஷி.
வெளியே வந்த அபியோ…தனக்காக ரிஷி காத்திருப்பதை அறியாது….தனது தோழி லட்சுமியின் கோபம் தீர்க்கும் பொருட்டு அவளுடன் கெஞ்சிக் கொண்டு வந்தாள்.
சரியாக ரிஷி அமர்ந்திருந்த மரத்தின் அருகில் வந்த அபி…”லட்சு…இப்ப என்கூட பேசப் போறியா இல்லையா…?” என்றாள்.
“நான் யாருடி உனக்கு….என்கிட்டே பேச உனக்கு நேரம் இருக்குமா…?நீங்கதான் இப்ப பெரிய ஆள் ஆகிட்டிங்க….பெரிய அதிகாரியோட மனைவி வேற…..” என்று லட்சுமி குத்த…
“ஏண்டி இப்படி எல்லாம் பேசுற…?” என்று அபி கண்கலங்க….
“அப்பறம் எப்படி பேச சொல்ற….? உங்க அக்காவுக்கு கல்யாணம் என்று லீவ் போட்டுட்டு போன….அப்பறம் ஆளையும் காணோம்…பேரையும் காணாம்…சரின்னு போன் செய்து பார்த்தா….அதுவும் சுவிட்ச் ஆப்….பிறகு என்னை என்ன செய்ய சொல்ற…?
திடீர்ன்னு பார்த்தா மேடம் கல்யாணம் பண்ணிகிட்டிங்கன்னு செய்தி வருது…! என்கிட்டே சொல்லனும்ன்னு கூட உனக்கு தோணலை…அப்பறம் என்னடி பிரண்ட்ஸ்…..” என்று லட்சுமி கழுவிக் கழுவி ஊத்த…அபியின் கண்களோ கலங்கி நின்றது.
“இல்லடி…நடந்த எல்லாமே கனவு மாதிரி நடந்து முடிந்துவிட்டது…. உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு எல்லாம் ஒண்ணுமில்லைடி…” என்று கலங்க…
அவளின் கலங்கிய முகத்தைப் பார்த்த லட்சுமி மனம் இறங்கினாள்.”சரி விடு…எப்படியோ காதலிச்சவரையே கல்யாணம் செய்துகிட்ட….அது வரைக்கும் சந்தோசம்….” என்றவள்…
“எதுக்காகடி…புக்ஸ என்னை போய் எடுத்து வர சொன்ன….வீட்டில் என்ன பிரச்சனை….பாவம்டி…உங்க தாத்தா முகத்தைப் பார்க்கவே முடியலை…” என்றாள் லட்சுமி.
“அது வந்து…..அங்க போனா….அவருக்கு பிடிக்காதுடி…அதான் உன்கிட்ட சொல்லி எடுத்திட்டு வர சொன்னேன்..!” என்றாள்.
“என்னமோ போ..! எனக்கு ஒண்ணுமே புரியலை…சரி அதை விடு…எக்ஸாம் எப்படி எழுதின….இத்தனை நாள் படிக்காம வேற இருந்திருப்ப…?” என்றாள் கவலையாய்.
“ஏற்கனவே படித்தது தானே…அதனால் சிரமமா இல்லை…!” என்றாள்.
ஆனால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரிஷியின் முகத்தில் ஈயாடவில்லை.
“காதலித்தவனையே கல்யாணம் பண்ணிகிட்ட…” என்ற வார்த்தைகள் அவன் காதில் வண்டாய் ரீங்காரமிடத் தொடங்கின.
அவள் கல்லூரிப் படிப்பையே முடிக்கவில்லை என்ற அதிர்ச்சியையே அவனால் தாங்க முடியவில்லை.அதற்குள் மற்றொன்றும் சேர்ந்து கொண்டால் எப்படித் தாங்குவான்.
அவன் மனதில் மின்னல் வெட்ட….வேகமாய் தனது அலைபேசியை எடுத்தவன்….சங்கர் கேஸில் தொடர்புடைய பைலில் இருந்து…அன்று தனக்கு போன் செய்த நம்பரை எடுத்தான்.
யோசனையுடன் அந்த எண்ணிற்கு அழைக்க….
தனது பேக்கிற்குள் போனின் வைபிரேட் உந்துதலில் செல்லை எடுத்தாள் லட்சு.
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ரிஷி…லட்சுமி செல்லை எடுப்பதை பார்த்ததும்…அன்னைக்கு போன் செய்தது இந்த பெண்ணா…? என்ற யோசிக்க…
“என்னடி எடுத்து பேசு…! எதுக்கு பார்த்துட்டே இருக்க….” என்று அபி சொல்ல…
“இல்லடி ஏதோ புது நம்பரா இருக்கு…!” என்று லட்சுமி தயங்க…
“குடு பார்ப்போம்.!” என்று அபி வாங்கி …அதைப் பார்க்க….
“லட்சு…இது அவர் நம்பர்டி….” என்றாள் அபி.
“எவர் நம்பர்…?” என்று லட்சு புரியாமல் கேட்க…
“அடியேய்…” என்று பல்லைக் கடித்தவள்…”இது ரிஷி நம்பர்டி…” என்றாள்.
“ஐயோ…!இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன்…தேவையில்லாத விஷயத்தில் தலையிடாத என்று….இப்ப நான் என்னன்னு பேசுறது…. சுத்தம்…இனி கேஸ்…விசாரணைன்னு நம்மளை அலைய விடப் போறாங்க….!” என்று லட்சுமி புலம்ப…
லட்சுமியின் புலம்பல்…ரிஷியின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
அழைப்பு துண்டிக்கப்பட…”அப்பாடா…!இங்க பாருடி…சொல்லி வச்சுடு உன் புருஷன்கிட்டே…என்னால கோர்ட் கேஸ்ன்னு அலைய முடியாது…என் போனை வாங்கி…நீதான் அன்னைக்கு கால் பண்ணினன்னு சொல்லிடு ஆமா…” என்று லட்சுமி சொல்ல…
“எல்லாம் என் நேரம்டி…” என்று தலையில் அடித்துக் கொண்டாள் அபி.
“சரி கிளம்பலாமா…?” என்று லட்சு கேட்க…
“கிளம்பலாமே..” என்றாள் அபி.
“உனக்கு கஷ்ட்டமா இல்லையா அபி…?” என்றாள் லட்சு.
“எனக்கென்ன கஷ்ட்டம்…?”
“அங்க இருந்து தினமும் வந்து வந்து போறதுன்னா…? அப்பறம் எப்படி படிப்ப…?” என்றாள்.
“அதெல்லாம் ஒரு கஷ்ட்டமும் இல்லை…எக்ஸாம் தானே நடக்குது…இதோ மதியமே கிளம்பி போய்டுவோம்….நாளைக்கு எக்ஸாம் இல்லை…அடுத்து திங்கள் தான் எக்ஸாம்….சோ இதில் எந்த கஷ்ட்டமும் இல்லை…அப்பறம் காலேஜ்க்கு ஒரு டாட்டா சொல்லிட்டு போயிடலாம்….”என்று அபி இலகுவாய் சொல்ல….
“உன்கிட்ட பேச முடியுமா…?” என்றாள் லட்சுமி.
தன்னிடம் ஒரு வார்த்தை பேச…அவ்வளவு தயங்குபவள்…இங்கு சரிக்கு சரி பேசுவதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான்.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே…அவர்கள் பேசிக் கொண்டே கேட்டை தாண்டி வெளியே செல்ல….
தன்னை ஒரு முறை சீர் செய்து கொண்டவன்…பழைய மிடுக்கை முகத்தில் கொண்டு வந்தவனாய்….நடக்கத் தொடங்கினான்.
வெளியே சென்ற அபி…அங்கு ஜீப்புடன் குமார் நிற்பதைப் பார்த்தவள்…. தயங்கியபடி…”என்ன அண்ணா…இங்க நிற்குறிங்க..?” என்றாள்.
அபியை அங்கு பார்த்து திகைத்தவர்…”அது சார் உள்ள இருக்கார்மா…” என்றார்.
“என்னது ரிஷி இங்கதான் இருக்காரா….அது தான் எனக்கு அப்படி ஒரு உணர்வு தோன்றியதா….?” என்று எண்ணியவள்….
“என்ன இந்த பக்கம்….?” என்றாள்.
“ஒரு கேஸ் விஷயம்மா வந்தோம்மா..!” என்றார்.
“இப்ப இங்க என்னைப் பார்த்தா என்ன செய்வார்….நான் இங்க காலேஜ் வரதா அவர்கிட்ட சொல்லவே இல்லையே…சும்மாவே ஆடுவான்… இன்னைக்கு நானே வேப்பிலை அடிச்சு விட்ட மாதிரி ஆகிவிட்டதே..!” என்று கவலை சொல்ல….
“போகலாம் வண்டியை எடுங்க..!” என்ற அவன் கணீர் குரலில்…சட்டென்று திரும்பினாள் அபி.
அவனை அங்கு எதிர்பார்க்காத ஆச்சர்யம் அவள் கண்களில் தெரிய…
‘இவ ஒருத்தி…நேரம் காலம் தெரியாமல்…கண்ணால் பார்த்தே ஆளை முழுங்கிடுவா…’ என்று எண்ணியவன்..
“நீ எங்க இங்க…?” என்றான்.
“இல்லை அது…வந்து…காலேஜ்..நான்…இங்க…படி…” என்று திக்கித் திணற…
‘இன்னேர வரைக்கும் வாய்கிழிய நல்லாத்தான் பேசிட்டி இருந்தா…என்னைப் பார்த்தா மட்டும் பயமா…?’ என்று எண்ணியவன்…
“போதும்…நீ தந்தியடிச்சு முடிக்க….அதைக் கேட்க எனக்கு நேரமில்லை…. வண்டியில் ஏறு…” என்றவன்….அவள் பின்னால் அமர கதவைத் திறந்து விட்டவன்…தான் குமாரின் அருகில் அமர்ந்து கொண்டான்.
லட்சுமியை எட்டிப் பார்க்க…..அவர்களை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவள்…தனக்கான பேருந்து வரவும் ஏறிக் கொண்டாள்.
‘ஐயோ அபி…உனக்கு வந்த சோதனையா…? ஏற்கனவே நீ உண்மை சொல்லவில்லை என்று உன்மேல் கோபம்…இப்ப இதுவும் சேர்ந்துகிட்டதா…’ என்று மருகியபடி வர….அவளைப் பார்த்தவன் முகத்தில் அவனையறியாமல் சிரிப்பு தோன்ற…கஷ்ட்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
“வீட்ல டிராப் பண்ணிட்டு போங்க…நாளைக்கு வந்தா போதும்…” என்று குமாரிடம் சொல்ல…”சரி சார்…” என்று கேட்டுக் கொண்டார்.
வீட்டின் முன்னால் வண்டி நிற்க….மனதில் ஆயிரம் யோசனைகளுடன் இறங்கினாள்.அவன் என்ன சொல்ல போறான்…? என்ற கேள்வியே மனம் முழுதும் தொக்கி நின்றது.
அமைதியாக வீட்டினுள் சென்றவன் எதுவும் பேசவில்லை.அபி அப்படியே ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
ரிஷி…யூனிபார்மை மாற்றியவன்…குளித்து சாதாரண உடைக்கு மாறி வர….அபி விழிகளில் கலக்கத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தவனின் மனம் சற்று இறங்கத்தான் செய்தது.
அவள் அருகில் சென்று அவளுக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தவன்…டிவியை உயிர்பித்து….செய்தி சேனலில் ஆழ்ந்தான்.
அபியோ ‘என்ன இவர்…என்கிட்டே ஒன்னும் கேட்கலை…என்னாச்சு….இப்ப நான் என்ன பண்றது’ என்று எதுவும் புரியாமல்…அவன் முகத்தை அடிக் கண்ணால் பார்ப்பதும்…டிவியைப் பார்ப்பதுமாய் அமர்ந்திருந்தாள்.
‘அவள் அடிக்கடி தன்னைப் பார்ப்பதை உணர்ந்தே இருந்தான் ரிஷி….ஆனால் வாயைத் திறக்கவில்லை….அவளே பேச வேண்டும் என்று எதிர்பார்த்தானோ என்னவோ…?’
“ம்ம்க்கும்…” என்றாள்.
ரிஷியோ அசைவேனா என்று அமர்ந்திருக்க…”ஏங்க..” என்றாள்.
சுற்றும் முற்றும் பார்த்தவன்…மீண்டும் தொலைக்காட்சியில் கண்களை பதியவிட….
“உங்களைத்தான்…” என்றாள்.
“என்ன..?” என்றான் பார்வையால்.
“ஏன் ஒரு மாதிரி அமைதியா இருக்கீங்க…?” என்றாள் ஒரு வழியாக தைரியம் வரப் பெற்றவளாய்.
அவன் பல்லைக் கடிக்க…முயன்று தன்னைக் கட்டுப் படுத்துவது அவன் முகத்தில் தெரிந்தது.
அபியும் விடாமல்…”உங்களைத்தான் கேட்டேன்..” என்று அவன் கைகளைப் பிடிக்க….
அடுத்த நிமிடம் தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.ஆம் ரிஷி அவளை அறைந்திருந்தான்.
கன்னத்தை கைகளால் பிடித்துக் கொண்டு…பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்க்க….என்ன தோன்றியதோ…சட்டென்று இழுத்து அணைத்துக் கொண்டான்.
எலும்புகள் நொறுங்கி விடும் அளவிற்கு அவன் அணைப்பின் வேகம் கூடிக் கொண்டே போக….மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டாள் அபி.
“ப்ளீஸ் விடுங்க..” என்று அவள் மெதுவாய் கூற….
தனது அணைப்பில் இருந்து அவளை விடுவித்தான் ரிஷி.அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் அறைக்குள் சென்று கதவை அடைக்க….அபிக்கு ஒன்றும் புரியவில்லை.
கண்கள் கலங்க…’ஏதோ ஒரு வகையில் அவனைக் காயப்படுத்தி விட்டோம்…’ என்று நினைத்தாள் அந்த பேதைப் பெண்.இல்லையில்லை அப்படி நினைக்க வைத்து அவள் காதல்.
அறைக்குள் சென்றவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.’என்ன செய்ற ரிஷி..? இப்ப எதுக்காக அவளை அடித்தாய்…?’ என்று மனம் கேள்வி கேட்க…
‘அவள் மட்டும் என்னிடம் பொய் சொல்லலாமா…?’ என்று எதிர் கேள்வி கேட்டான்.
‘அவள் சொல்லவில்லை என்றால் நீ அவளைப் பற்றி தெரிந்து கொண்டு அவளின் கழுத்தில் தாலியைக் கட்டியிருக்க வேண்டியது தானே….அதை விடுத்து எல்லாம் ஒரு வேகத்தில் செய்து விட்டு…அவளை மட்டும் குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்…’ என்று மனம் கேள்வி கேட்க…
‘உண்மைதானோ….தவறு என் பக்கமும் இருக்கிறதோ….அவளை அறியாமல் விட்டது என் தப்புதானே..!’ என்று அவன் யோசிக்க….அவன் மூளைக்கு ஒவ்வொன்றாய் நிழற்படம் போல் விரிந்தது.
ஊட்டியில் அவளை முதன் முதலில் பார்த்தது…..முதலில் பயந்து ஒடுங்கியவள்….தன்னைப் பார்த்ததும்…..அதிர்ந்து விழித்தது….அவள் பாதுக்காப்பிற்காய் அவனை ஒண்டி நடந்தது….அவனை அணைத்தது…அவனை அவள் பார்த்த பார்வைகள்…. ஆயிரம் கதை சொன்ன அவள் விழிகள்….இப்படி அனைத்தும் அவனுக்கு காட்சிப் படமாய் விரிய…..
அவள் விழிகள் சொல்ல நினைத்த கதைகள்…அவனுக்கு லேசாய் புரிவதைப் போல் இருந்தது.லட்சுமி சொன்ன…’காதலித்தவனையே…’ என்ற வார்த்தையும் சேர்ந்து கொள்ள….அவனுக்கு அப்படியே வானத்தில் மிதப்பது போன்று இருந்தது.
தனக்காக ஒரு பெண்…தன்னை நேசிக்கும் ஒரு பெண்…தன்னை மட்டுமே நேசிக்கும் ஒரு பெண்….என்று எண்ணியவனுக்கு…அவன் அடி மனதில் இருந்த காதல்….அவனை அறியாமல் வெளி வரத் தொடங்கியது.
‘அபியைப் பார்த்து முதன் முதலில் நான் சலனப் பட்டது உண்மைதானே…’ என்று ஒப்புக் கொண்டான்.
ஊட்டியில் அவளை தன் விழிகளால் பருகியது முதற்கொண்டு… கணவனாய் தன் வீட்டில் அவளை முகம் சிவக்க வைத்தது வரை…அவன் மனம் எடுத்துக்காட்ட….தன் காதலை உணர்ந்து கொண்டவனின் முகம் செவ்வானமாய் சிவந்தது.
‘ஆனா ஏன் என்கிட்டே மறைத்தாள்…?’ என்று என்ன…
‘அப்பா சாமி…அதை அவகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோ…இதுக்கு மேல இதே கேள்விய பிடிச்சுகிட்டு தொங்குன…நானே உன்னைக் கொன்னுடுவேன்…(வாசகர்களும் தான்…) என்று மனம் கூவ…அறையை விட்டு வெளியே வந்தான்.
அவள் அழுது கொண்டிருப்பாள் என்று அவன் என்ன….அவளோ அங்கிருந்த சோபாவில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
‘அடிப்பாவி…’ என்று நினைத்தவன்…அவள் தூக்கத்தை கலைக்க முயற்சிக்கவில்லை.அவளை அப்படியே தூக்கியவன்…அறைக்குள் சென்று கட்டிலில் கிடத்தி விட்டு….அவள் நன்றாய் உறங்க வழிவகை செய்து விட்டு வந்தான்.
உடலில் இருந்த அசதியும்…மனதில் இருந்த அலுப்பும் சேர்ந்து கொள்ள….நன்றாய் உறங்கிப் போனாள் அபி.
அவளையே இமைக்காமல் பார்த்திருந்தவனின்…தனது அலைபேசியின் அழைப்பில்….மீண்டான்.
எடுத்து காதில் வைத்தவனின் முகம் இருண்டது.”அப்படியா…உடனே வரேன்..!” என்றவன் சற்றும் தாமதிக்காது…யூனிபார்மிற்கு மாற…
தூங்கிக் கொண்டிருக்கும் தன் மனைவியைப் பார்த்தவன்…ஒரு சாவியை அவள் அருகில் வைத்து விட்டு…மற்றொரு சாவியால் கதவை வெளியில் பூட்டி விட்டு சென்றான்.
அவனின் வருகைக்காக காத்திருந்த அனைவரும்…அவனுக்கு வழி விட….அங்கு சென்று பார்த்தவனின் விழி நிலை குத்தி நின்றது.
சங்கர் அவன் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெயில் அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான்.
“என்ன ஆச்சு..எப்ப நடந்தது…?” என்றான்.
“கோர்ட்ல இருந்து வந்ததில் இருந்தே அமைதியா தான் சார் இருந்தான்…எதுவும் பேசலை…சாப்பாடு கூட வேண்டாம்ன்னு சொல்லிட்டான்…” என்று அந்த ஜெயிலர் சொல்ல…
வெளிய பிரஸ் நிற்குறாங்க…அவங்களுக்கு என்ன பதில் சொல்வது …? என்று யோசித்தவனுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.
“சாரி ஏதோ லெட்டர் மாதிரி இருக்கு சார்..” என்று அவன் பாக்கெட்டில் இருந்ததை அந்த ஜெயிலர் எடுக்க போக…
“அதை எடுக்காதிங்க…!” என்றவன்…பிரஸ் பீப்புல உள்ள வர சொல்லுங்க..!” என்று சொல்ல…
“என்ன ரிஷி புரிந்து தான் பேசுறிங்களா…? அவங்க உள்ள வந்தா இந்த விஷயம் எவ்வளவு பெரிதாகும்ன்னு உங்களுக்கு தெரியும்…அப்பறம் ஏன் இப்படி…?” என்று அவன் மேலதிகாரி கேட்க…
“சோ வாட் சார்…எப்படியும் அவங்க பெரிசாக்க போறது உறுதி.சோ இதை நேர்ல பார்த்திட்டே எழுதட்டும்…அவங்களுக்கு தேவை ஒரு பரபரப்பான நியூஸ்….” என்றான் விட்டேறியாய்.
“அவங்க அப்பாவுக்கு கட்சியில் நல்லா செல்வாக்கு இருக்கு…இப்ப இப்படி ஒரு செய்தி வெளிய போனா….நம்ம டிப்பார்ட்மென்ட் மானம் தான போகும்…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே….மீடியாக்கள் வருகை தந்தது.
வந்தவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்க….அப்பொழுது தான் அந்த லெட்டரை எடுத்தான் ரிஷி.
“இது தான் அவனுடைய மரண வாக்கு மூலம்.நாங்க யாரும் பிரிக்கலை…இதை நீங்களே பிரிச்சு படிங்க…..அதில் இருக்கும் கையெழுத்து அவனுடையதா என்று ஆராய்ச்சி பண்ணுங்க….அது உண்மையானதாவே இருந்தாலும்…..அதுக்கு நான்கு பேரை வைத்து விவாதம் பண்ணுங்க…ஐ டோன்ட் கேர்…இப்ப எங்க கடமையை செய்ய விடுங்க…!” என்றவன்…
அதற்கடுத்து துரிதமாய் செயல்பட்டான்.சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செல்ல….
தன் மகனின் சாவு தற்கொலையில்லை…அது கொலை…அதுவும் அந்த ரிஷி வர்மா தான் என் மகனை திட்டம் போட்டு முடித்து விட்டான்…” என்று சங்கரின் தந்தை அனைத்து மீடியாக்களிலும் பேட்டி கொடுக்க….
அந்த விஷயம் காட்டுத் தீ போல்…பரவத் தொடங்கியது.அந்த ஒரே நாளில் ஓய்ந்து விட்டான் ரிஷி.நள்ளிரவு மூன்று மணியைக் கடந்த போதிலும் அலைந்து கொண்டிருந்தான்.
அவன்தான் அந்த கேஸை விசாரித்தவன் என்ற முறையிலும்…சங்கரின் தந்தை அவன் மேல் கொடுத்த புகாரின் முறையிலும்…அவனுக்கு விசாரணை கமிஷன் வைக்கப் பட்டது.
அந்த கடிதத்தில் இருந்த கையெழுத்து அவனுடைது அல்ல…என்று ரிப்போர்ட் வர….ரிஷிக்கு எல்லாப் பக்கமும் அடைத்ததை போல் இருந்தது.
சோர்ந்து போய் வீட்டிற்கு வந்தான் ரிஷி.அந்த நிலையிலும் அவன் மூளை சிந்தித்துக் கொண்டே இருக்க….கதவைத் திறந்து உள்ளே செல்ல…அபியோ ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
அதிகாலை ஐந்து என கடிகாரம் காட்ட….தொப்பென்று மெத்தையில் விழுந்தான் ரிஷி.அந்த வேகத்தில் கட்டில் அதிர…திடீரென்று அதிர்ந்து விழித்தாள்.
அவன் யூனிபார்மைக் கூட கழட்டாமல் படுத்திருப்பதைப் பார்த்தவள் குழம்பினாள்.
‘இவர் எப்ப டியூட்டிக்கு போனார்….நான் எப்படி இங்க வந்தேன்..!’ என்று யோசிக்க…கடிகாரத்தைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.
‘இவ்வளவு நேரமா தூங்கியிருக்கோம்….’ என்று எண்ணியவள்…அவசர அவசரமாய் எழுந்து கொள்ள….ரிஷியின் போனோ விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது.
‘என்னாச்சு….இவ்வளவு நேரம் போன் அடிக்குது…எடுக்காம இருக்கார்…?’ என்று எண்ணியவள்…தயங்கியபடி…அதை எடுக்க போக…
“வேண்டாம் அட்டென் பண்ணாதே..!” என்றான்.
விக்கித்து திரும்பினாள்.அவன் தூங்கவில்லையென்று அவன் கண்கள் அளைப்புருதலில் தெரிந்தது.
கோபத்துடன் எழுந்து அமர்ந்தவனின் கண்கள் கோவைப் பழமாய் சிவந்து போயிருக்க….அவனைப் பார்க்கவே அஞ்சினாள் அபி.
அவளின் முகத்தைப் பார்த்தவனுக்கு கோபம் தலைக்கு ஏற…”என்ன…? என்னைப் பார்த்தா எப்படி இருக்கு உனக்கு…? என்னவோ பேயைப் பார்த்து பயப்படுற மாதிரி பயப்படுற…” என்று எரிந்து விழ…
‘என்னாச்சு இவருக்கு….’ என்று யோசித்தவள்….அவன் அருகில் சென்று ‘எதாவது பிரச்சனையா..’ என்று கேட்க முற்படும் முன்….
அவளை இடுப்போடு அணைத்துக் கொண்டான்.அவன் மனம் ஒரு நிலையில் இல்லை.அந்த நேரத்தில் அந்த அணைப்பு அவனுக்கு தேவையாய் இருந்தது.சிறிது நேரத்தில் அவளை விடுவித்தவன்….குளியல் அறைக்குள் சென்று புகுந்து கொண்டான்.
‘முகமே சரியில்லையே…என்ன பிரச்சனையாய் இருக்கும்…?” என்று வெளியே வர….விடியலைத் துவங்கியிருந்தான் கதிரவன்.
கதவைத் திறத்து பால் பாக்கெட்டை எடுத்தவள்…அன்றைய நாளிதழை எடுக்க…அன்றைய பக்கங்கள் அனைத்திலும் சங்கர் தற்கொலை இடம் பெற்றிருக்க….அதிர்ந்தாள்.
“இந்த பேப்பர்னால என் வாழ்க்கையில் எவ்வளவு அதிர்ச்சி…” என்று எண்ணிக் கொண்டவள்….அதை ரிஷியின் கண்களில் படாதவாறு வைத்தாள்.
அவன் முகத்தில் இருந்த கோபத்திற்கான அர்த்தம் புரிந்தது.ஆனால் இந்த விஷயத்தில் அவள் என்ன செய்ய முடியும்…? இதையெல்லாம் ரிஷி எளிதில் கடந்து விடுவான் என்று நம்பினாள்.
வேகமாய் காபிக் கலக்கிக் கொண்டு போக…அவனோ…குளித்து முடித்தும் குழப்பத்துடனே அமர்ந்திருந்தான்.எந்த ஒரு நூலும் கிடைக்கவில்லை என்ற கோபம்.
அவன் கண்டிப்பாய் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று நம்பினான்.ஆனால் கொலையை யார் செய்தது…என்று மண்டையைப் போட்டு குழப்ப….
“இந்தாங்க காபி….சூடா குடிச்சுட்டு யோசிங்க…” என்றாள்.
‘இவளுக்கு எப்படி தெரியும்; என்று யோசிக்க…
’ஊரே தெரிந்து இருக்கு… இவளுக்கு எப்படி தெரியாம இருக்கும்..’என்று எண்ணியவன்… மறுக்காமல் காபியை வாங்கிக் கொண்டான்.
இன்னும் சற்று நேரத்தில் தன் குடும்பமே அழைக்கும் என்று எண்ணியவன் சோர்ந்து போனான்.அவனை அப்படிப் பார்க்க சகிக்கவில்லை அவளுக்கு.
“இப்ப என்னாச்சுன்னு இப்படி உட்கார்ந்திருக்கிங்க…?உங்க வேலையில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா…? இல்லை உங்களால் முடியாதுன்னு எதுவும் இருக்கா…? இந்த பிரச்னையை நீங்க ஈசியா ஹேண்டில் பண்ணுவிங்க…” என்று அவனின் அருகில் அமர்ந்து…அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு சொல்ல…அவளை ஆச்சர்யமாய் பார்த்தான் ரிஷி.
“ம்ம்ம் அப்பறம்….” என்றான் அவளைப் பார்த்துக் கொண்டே..!
அவனின் பார்வை புது அவஸ்தையாய் இருக்க….”அப்பறம் ஒண்ணுமில்லை…” என்று முனுமுனுத்தாள்.
“ஒண்ணுமேயில்லையா…?” என்றான் மீண்டும்.
“என்னாச்சு இவருக்கு…பேச்சே ஒரு மார்க்கமா இருக்கு…”என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க…
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன்…..”உன்னைக் கடத்தியது யார்…?” என்றான் சம்பந்தமில்லாமல்..
“இவருக்கு எப்படி தெரியும்…?” என்று அவள் அதிர..
“அதெல்லாம் எனக்கு தெரியும்…சொல்லு உன்னைக் கடத்தியது யார்…?” என்றான்.
அவள் அமைதியாக இருக்க…”சொல்லு சங்கர் அப்பாவோட ஆட்கள் கடத்தினார்களா…??” என்றான்.
“இல்லை…” என்று அவள் தலையை ஆட்ட…
“அது…அந்த ஜான் தான் என்னைக் கடத்தினான்.அப்பறம் என்கிட்டே தப்பா நடந்துக்கப் பார்த்தான்….நான் தப்பிச்சு வந்தப்ப தான் உங்களைப் பார்த்தேன்…” என்றாள் மென்று முழுங்கிக் கொண்டு.
“ஜான்…உங்க கிளாசா…” என்றான்.
“ஆமா…”
“அவன் கேரக்டர் எப்படி…?” என்றான்.
“சங்கரை விட இவன் தான் மோசமானவன்…..என்னைக் கூட லவ் பண்றேன்னு சொல்லிட்டு பின்னாடியே தெரிஞ்சான்.ஆனா நான்…நான்…” என்று அவள் திணற…
“நீ..” என்று எடுத்துக் கொடுத்தான்.
எதையோ சொல்ல வந்தவள் மறுத்து…” நான் அவனை திட்டி.. பிரிசின்சிபால் கிட்ட புகார் பண்ணி….சார் அவனை கண்டித்து அனுப்பினார்…” என்றாள் மென்று முழுங்கி.
“நான் இந்த கேஸ் விஷயமா உங்க காலேஜ்க்கு வந்தப்ப…என்னைப் பார்த்திருக்கியா..?” என்றான் அவளை ஆழம் பார்த்தபடி.
“இல்லையென்றும்,ஆமாமென்றும்” அவள் தலையாட…
“ஏதாவது ஒரு பக்கம் ஆட்டு…” என்றான்.
“ஆமாம்..!” என்றாள்.
“அப்பறம் ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லல…?”
“பயமா இருந்தது அதான்…” என்று இழுக்க…
‘நல்லா சமாளிக்கிறடி…என் பொண்டாட்டி..’ என்று மனதிற்கு எண்ணியவன்….
“இன்னைக்கு நீ காலேஜ் போக வேண்டாம்..” என்றான்.
“இன்னைக்கு காலேஜ் இல்லை…” என்றாள்.
“அப்ப சரி..ரொம்ப நல்லது…போ..போய்..வீட்ல எல்லாருக்கும் சேர்த்து சமைச்சு வை….இன்னும் கொஞ்ச நேரத்துல குடும்பமே இங்க படையெடுக்கும்…” என்றான்.
அவனை ஆச்சர்யமாய் பார்த்தபடி அவள் செல்ல…மீண்டும் யோசனைக்குத் தாவினான்.
அவன் வீட்டில் இருந்து கிளம்பி சென்றது முதல்…அங்கு நடந்தது வரை அனைத்தையும் அசை போட…..
“சார்..பாக்கெட்ல லெட்டர்..” என்று அந்த ஜெயிலர் சொன்னது நியாபகம் வர…மீண்டும் மீண்டும் அதை யோசித்துப் பார்த்தான்.
அப்பொழுது தான் மூளையில் மின்னல் வெட்டியது.”எஸ்…” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்…..வேகமாய் கிளம்பினான்.
கிளம்பி வந்தவனைப் பார்த்த அபி…”என்னங்க…அதுக்குள்ள கிளம்பிட்டிங்க…? சாப்பிடலை..?” என்று கேட்டுக் கொண்டே வர…
அவளை அதற்கு மேல் பேச விடாமல்…அவளை இறுக அணைத்து… செவ்விதழ்களை சிறை செய்தான்.
“ஓகே…பாய்…இப்பதிக்கு இது போதும்..” என்று அவள் கன்னத்தில் தட்டி விட்டு செல்ல…முழித்துக் கொண்டு நிற்பது அபியின் முறையாயிற்று.
ஒத்த நொடியில தான்…எனக்கு சித்தம் கலங்கிடுச்சே…!
மொத்த உலகமுமே…அடடா சுத்த மறந்திடுச்சே…!
நெத்தி நடுவுல லங்கரம் சுத்துது…நெஞ்சு குழியில கவுளி கத்துது…
தீ கங்குல…பால் சட்டியை போல் போங்குறேனே..!