அத்தியாயம் 14:
நடப்பது கனவா…? இல்லை நனவா…? என்ற ரீதியில் பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள் அபி.
“ரிஷி தான் மாப்பிள்ளையா…? ஆனா நான் ஒரு தடவை கூட பார்த்ததில்லையே…?” என்று தனது மனதை சமாதானப் படுத்த…அவள் தனக்குத் தானே கேட்டுக் கொண்ட கேள்விகள் அனைத்தும்…இறுதியில் கண்ணீரை மட்டுமே பரிசளித்தன.
“என்ன தான் கவனத்துல இருப்பியோ தெரியல…இப்ப எதுக்கு இப்படி காபியை கொட்டின…?” என்று வள்ளி வசை மாரி பொழிந்து கொண்டிருக்க…அது எதுவும் அவள் காதில் விழுந்தபாடில்லை.
“என்ன மாப்பிள்ளை திடீர்ன்னு…?” என்றார் கோவிந்தன்.
“அது ஒண்ணுமில்லை தாத்தா….நிச்சயம் செய்தப்பவும் கொஞ்ச நேரம் தான் இருக்க முடிந்தது…அதுக்கப்றம் உங்க எல்லாரையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவேயில்லை.அதான் ஒரு எட்டு வந்துட்டு போகலாம்ன்னு வந்தேன்…!” என்றான் ரிஷி.
தாத்தாவின் கேள்வியும்…ரிஷியின் பதிலும் அபியின் காதுகளில் தெளிவாய் விழுந்தது.
ஆக…..அவனுக்கு வர நேரம் இல்லை.நான் தான் அவன் தம்பியை மாப்பிள்ளை என்று நினைத்து….என்று தனக்குத் தானே கூசியவளாய்…. யாரையும் பார்க்க விரும்பாது…சமையலறையின் தோட்டக் கதவு வழியாக தோட்டத்திற்குள் சென்று புகுந்து கொண்டாள்.
ரிஷியின் வருகையின் காரணமாக…வள்ளியும் கவனிக்கவில்லை. தோட்டத்திற்குள் சென்று ஒரு தென்னை மரத்தின் அடியில் அமர்ந்த அபிக்கு…தன் மீதே கழிவிரக்கம் தோன்ற….
ஆற்றுவார் தேற்றுவார் இன்றி வாய் விட்டு அழத் தொடங்கினாள்.மனதில் உள்ள பாரங்கள் எல்லாம்…அழுகையாய் வெடிக்க….எவ்வளவு நேரம் அழுதாளோ….ஒரு கட்டத்தில் கண்ணீர் வற்றிப் போய்….வேதனைகள் படிந்த முகமாய் அமர்ந்திருந்தாள்.
“அபி….ஏய் அபி…எங்க இருக்க…?” என்ற பாட்டியின் குரலில் நினைவுக்கு வந்தவள்…முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு சென்றாள்.
“எங்க போன…?”
“இங்கதான் பாட்டி தோப்புக்குள்ள இருந்தேன்..!” என்றாள்.
“வீட்டுக்கு மாப்பிள்ளை வந்திருக்க சமயம்..நீ பேசாம போனா என்ன அர்த்தம்…? ஒரு காபி டம்ளரை கீழ போட்டா….நான் திட்டக் கூடாதா..? அதுக்கு போய் ஏன் அழுதுருக்க..?” என்றார்.
அவள் முகமே அவளைக் காட்டிக் கொடுக்க….”காபி டம்ளர் மட்டுமா கீழ விழுந்தது…என் இதயமும் சேர்த்து தான்…” என்று மனதிற்குள் கூறியவள்… பாட்டிக்கு ஒரு புன்னகையைப் பரிசளித்தாள்.
“எதையும் வெளியில் காட்டிக் கொள்ள கூடாது…” என்று நினைத்தபடி வீட்டிற்குள் செல்ல….அங்கு சரண்யாவோ…முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தாள்.
அவளைப் பார்த்த அபிக்கு ஆச்சர்யமாய் இருந்தது.”இப்ப இவ எதுக்கு இவ்வளவு கோவமா இருக்கா..?” என்று எண்ணியவள்…அவளிடம் கேட்கலாம் என்று அருகே செல்ல…பின் தன் முயற்சியை கைவிட்டவளாய்…தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
அறைக் கதவை அடைத்து விட்ட அவளால்…ஏனோ இதயக் கதவை மட்டும் அடைக்க முடியவில்லை.எவ்வளவு தான் மனதை தேற்றிக் கொண்டாலும்….வாழ்க்கையே சூனியமானதைப் போல் உணர்ந்தாள்.
மறுநாள்……
சேலத்தில் மண்டபத்திற்கு செல்வதற்காக….அனைவரும் பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
“ஏய் அபி….என்ன இன்னமும் கிளம்பலை…?” என்றார் வள்ளி.
“எனக்கு தலைவலி அதிகமா இருக்கு பாட்டி..!” என்றாள்.
“அதுகென்ன…ஒரு மாத்திரையைப் போட்டா எல்லாம் சரியாகிவிடும்… சீக்கிரம் கிளம்பு..” என்று தோரணையாய் உரைத்தவர்…
இந்த வீட்ல எல்லாமே நான் தான் பார்க்கணும்.போட்டது போட்டபடி இருக்கு…என்று புலம்பியபடி சென்றார்.
அபி ஏனோ தானோவென்று கிளம்பி வர….சரண்யாவும் முகத்தில் டென்சனுடன் கிளம்பி வந்தாள்.
அவளின் முகத்தைப் பார்த்த அபி…இதற்கு மேல் கேட்காமல் இருந்தால் சரிப்படாது என்று எண்ணியவள்…
“எதுவும் பிரச்சனையாக்கா…?” என்றாள்.
அபியின் கேள்வியில் நிமிர்ந்த சரண்யா..”ஏன் நீ வந்து தீர்த்து வைக்க போறியா…? போடி வேலையைப் பார்த்துட்டு..” என்றாள் வெடுகென்று.
அதற்கு அடுத்த நிமிடம் அபி அங்கு நிற்கவில்லை.
ஒரு வழியாக அனைவரும் கிளம்ப…இவர்கள் குடும்பம் காரிலும்…சொந்த பந்தங்கள் எல்லாம் வேனிலும் சேலத்திற்கு கிளம்பினர்.
“அண்ணா…நான் எப்படி இருக்கேன் இந்த டிரஸ்ல…?” என்றபடி வந்தாள் தீபி.
“சூப்பரா இருக்கடா….!” என்று ரிஷி தங்கையைக் கொஞ்ச…
“கொஞ்சியதெல்லாம் போதும்..! கிளம்புங்க..மண்டபத்துக்கு நேரம் ஆச்சு…!” என்று சித்ரா அனைவரையும் விரட்டிக் கொண்டிருந்தார்.
வருணும்…ரிஷியும் ஒரே மாதிரியான சட்டை அணிந்து வர….”என் கண்ணே பட்டுடும் போல இருக்கு…!” என்று இருவருக்கும் திருஷ்டி கழித்தார் சித்ரா.
“பார்த்து ஆன்ட்டி….உங்க பசங்க ரெண்டு போரையும் பார்த்து கண்ணு வச்சிடப் போறாங்க…” என்றபடி வந்தாள் தைலா.
அவளின் காதைப் பிடித்து திருகினார் சித்ரா..”இப்பதான் உனக்கு நேரம் கிடைச்சதா..?” என்றார்.
“நான் என்ன ஆன்ட்டி பண்றது….வர முடியாத இடத்துல சிக்கிட்டேன்…எல்லாம் இந்த வருண் குரங்குனால தான்.அவன் போக வேண்டிய கேம்புக்கு என்னை அனுப்பிட்டான்.போனப் பிறகு தான தெரிந்தது…அது ஒரு மலை கிராமம்ன்னு…இவன் திட்டம் போட்டு என்னை பழிவாங்கிட்டான்…” என்றாள்.
“நான் உனக்கு குரங்கா…?” என்று பல்லைக் கடித்தான் வருண்.
“இல்லையாப் பின்னே…!” என்று தைலா வார…..
“உன்னை அப்பறம் வச்சிக்கிறேன்…!” என்றான் வருண்.
“சீச்சி…..எதுக்கு வச்சுக்கணும்….கட்டிக்கோயேன்…” என்று அவனை கட்டிக் கொள்ள போக..
“அம்மா…” என்று சித்ராவின் பின் தஞ்சம் அடைந்தான்.
“அது…அந்த பயம் இருக்கணும்…” என்று தைலா சொல்ல…ரிஷி அமைதியாய் நின்றிருந்தான்.
“என்ன ரிஷி சார்..? கோவமா இருக்கீங்க போல…” என்றாள் தைலா.
“இல்லை ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..!” என்றான் ரிஷி.
“டேய் போதும் நிறுத்துடா…உன் கல்யாணத்துக்கு நீயே நேத்து இருந்து தான் பிரி…இதுல என்னைக் கோவிக்கிறியா..?” என்று தைலா வாரிவிட…
“போதும்…விட்டுடுமா தாயே….இனி உன்னை பேச விட்டா மானம் கப்பல் ஏறிடும்…” என்று சரண் அடைந்தான் ரிஷி.
இப்படி கலகலப்பாக ரிஷியின் குடும்பமும் மண்டபத்திற்கு சென்றனர்.
சுரேஷ் இவர்களுக்கு முன்னமே மண்டபத்திற்கு சென்றிருக்க…இவர்கள் மட்டும் கிளம்பினர்.
“என்னடா ரெண்டு பெரும் ஒரே கலர் ஷர்ட்..?” என்றாள் தைலா.
“ஏதாவது விசேஷம் என்றால் அப்படித்தானே போடுவோம்..!” என்றான் வருண்.
“அதுக்காக கல்யாணத்துக்குமாடா…?”என்று தைலா சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டனர்.
அவ்வப்போது ரிஷியின் மனம் மட்டும் சிந்தனைக்கு சென்று மீண்டது.
அனைவரும் மண்டபம் செல்ல…அவர்களுகென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் புகுந்தனர்.வள்ளி எவ்வளவோ சொல்லியும் அபி சரண்யாவுடன் தங்க மறுத்து விட்டாள்.
“அக்காவுக்கு கல்யாணம்ன்னு கொஞ்சமாவது சந்தோசம் இருக்கா…? எதையோ பறிகொடுத்த மாதிரியே திரியிற…ஏன் அவ கூட ஒண்ணா ஒரே அறையில் இருந்தா….என்ன பிரச்சனை உனக்கு…?” என்று வள்ளி பாட்டி வந்த இடத்திலும் அபியை திட்டிக் கொண்டே இருந்தார்.
“விடுங்க பாட்டி…அவகூட ஒரே அறையில் இருப்பதில் எனக்கும் உடன்பாடு கிடையாது…” என்றாள் சரண்யா.
சரண்யா இப்படி நினைப்பாள் என்று நினைத்து தான் அபி மறுத்ததே.அதை அவள் வாயால் சொல்லவும் தான் பாட்டி திட்டுவதை நிறுத்தினார்.
“வந்த இடத்தில் கூட அபியை திட்டிகிட்டே இருக்கனுமா..?” என்று கோவிந்தன் எகிற….
“விடுங்க தாத்தா…பாட்டி தானே சொன்னாங்க…!” என்றபடி தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.
எப்படியும் சரண்யாவின் அறையில் அவளுடன் தங்கினால் ரிஷி அவளைப் பார்க்க வருவான்….அதைப் பார்க்கும் சக்தி எனக்கு இருக்கப் போவதில்லை. அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை…என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.
“இப்படி எவ்வளவு நேரம் அவன் கண்ணில் படாமல் …அவனைப் பார்க்காமல் கண்ணாமூச்சி ஆடப் போற..?” என்று மனசாட்சி கேட்க…
அப்பொழுது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது….இனி அவன் சரண்யாவிற்கு கணவன்..எப்படியும் பார்த்து தான் ஆகவேண்டும்…ஒரே குடும்பமாக பிணையப் போகும் இந்த கல்யாணத்தால்…..யாரையும் நான் தவிர்க்க முடியாதே..!” என்று எண்ணியவள்….தனக்குள் சில தீர்மானங்களை எடுத்துக் கொண்டாள்.அதனால் வரப் போகும் சங்கடங்களை அறியாமல்.
கல்யாண மண்டபத்திற்கு உரிய பரபரப்பு அங்கு காணப்பட…வெளியூரில் இருந்து வரும் சொந்த பந்தங்கள் அனைவரும் வரத் தொடங்கியிருந்தனர்.
அவர்களை வரவேற்பதிலும்…..அவர்களை உரிய இடங்களில் தங்க வைப்பதும் என வருண் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தான்.
தீபியும்,தைலாவும் மெகந்தி போட்டுக் கொண்டிருந்தனர்.
“ஏன் தீபி இப்ப பார்லர்ல இருந்து வந்திடுவாங்க…அவங்க கிட்ட போட்டுக்க வேண்டியது தானே..?” என்றாள் தைலா.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…எனக்கு நீங்க தான் போட்டு விடனும் அண்ணி…!” என்றாள்.
“ஹேய்…! என்ன புதுசா அண்ணி…?” என்றாள் தைலா முகம் முழுவதும் பிரகாசமாய்.
“எப்படியும் வருண் அண்ணாவை நீங்க கல்யாணம் செய்தால் எனக்கு நீங்க அண்ணி முறைதானே..!” என்று தீபி வம்பிழுக்க…சுற்றும் முற்றும் பார்த்தாள் தைலா.
“என்னாச்சு அண்ணி…? யாரைத் தேடுறிங்க..?”
“இல்லை….இந்த வருண் குரங்கு இங்க இருக்கானா என்று பார்த்தேன்…நீ சொன்னதை மட்டும் அவன் கேட்டிருந்தான்….மகளே உனக்கு சங்கு தாண்டி…” என்று தைலா சொல்ல…
‘ஹா..ஹா..அதென்னவோ உணமைதான்…” என்றாள் தீபிகா.
“சரி…நான் கல்யாணப் பெண்ணை இன்னமும் பார்க்கலை….போய் பார்த்திட்டு வருவோமா…?” என்றாள் தைலா.
“ஓ..போலாமே…!” என்றவள் அவளையும் அழைத்துக் கொண்டு சரண்யாவின் அறைக்கு சென்றாள்.
“உள்ள வரலாமா…..?” என்றார்கள்.
“வாங்க…!” என்ற பதிலில் உள்ளே சென்றவர்கள் திகைத்தனர்.சரண்யாவோ கடுப்புடன் அமர்ந்திருந்தாள்.
“என்னாச்சு அண்ணி….ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு..?” என்றாள் தீபி…அக்கறையுடன்.
“இல்லையே நல்லாத்தானே இருக்கேன்..!” என்றாள்.
“இவங்க தைலா….எங்க பேமிலி பிரண்ட்….வருண் அண்ணா கூட டாக்டரா பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்காங்க….உங்களைப் பார்க்கனும்ன்னு சொன்னாங்க…அதான் வந்தோம்…!” என்றாள்.
“ஹாய்…” என்றாள் தைலா.
“ஹாய்…” என்பதோடு நிறுத்திக் கொண்டாள் சரண்யா.அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பதைப் போல் நிறுத்திக் கொள்ள…தைலாவும் பேச்சை வளர்க்க விரும்பவில்லை.
உங்க தங்கச்சியைக் காணோம்..?” என்றாள் தீபி.
அபியைக் கேட்ட உடன் சரண்யாவின் முகம் எரிச்சலை அப்பட்டமாய்க் காட்டியது.இருந்தாலும் ரிஷியின் தங்கையிடம் காட்ட முடியாதே…!
“எனக்குத் தெரியாது…?” என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.
“ஓகே…..டிராவல் பண்ணி வந்தது டயர்டா இருக்கும்…நீங்க ரெஸ்ட் எடுங்க…வா தீபி போகலாம்…” என்று அவளையும் இழுத்துக் கொண்டு வெளியேறினாள் தைலா.
வெளியே வந்தவளுக்கு அப்பொழுது தான் மூச்சே வந்தது.”தீபி…இவ ரிஷிக்கு சரிப்பட்டு வருவாளா…?” என்றாள் தைலா கவலையுடன்.
“தெரியலை….பட்…இவங்களுக்கு ஒரு தங்கை இருக்காங்க…செம்ம அழகா இருப்பாங்க…இவங்க இரண்டு பேரையும் பார்த்தா அக்கா…தங்கைன்னே சொல்ல முடியாது….அவ்வளவு வித்யாசம்….” என்றாள் தீபி.
“ரிஷிக்கு கொஞ்சம் அவசரப் படாம பொண்ணு பார்த்திருக்கலாம்…” என்றாள் தைலா.
“வருண் அண்ணாவும் இதையே தான் சொன்னாங்க…!” என்றாள் தீபி.
இவர்கள் பேசியது கதவை அடைக்க வந்த சரண்யாவின் காதுகளில் விழ…அவளுக்குள் ஒரு எரிமலையே வெடித்தது.
“இந்த கல்யாணம் மட்டும் முடியட்டும்…இருக்கு இவளுங்களுக்கு…!” என்று மனதினுள் கருவிக் கொண்டாள்.
அத்தியாயம் 15:
அறைக்குள்ளேயே அடைந்து கிடந்த அபிக்கு மூச்சு முட்டுவதைப் போல இருக்க…மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தவள்…. மண்டபத்தின்… படிக்கட்டு வழியாக…மாடியை அடைந்தாள்.
நேரம் இரவை நெருங்கியிருக்க….அந்த தனிமையின் ஏகாந்தமும்…. சில்லென்ற காற்றும் அவளின் மனப் புழுக்கத்திற்கு மருந்தாக அமைந்தது.சிட்டியை விட்டு கொஞ்சம் நகர்ந்து ஒதுக்குப்புறமாக..மெயின் ரோட்டில் அமைந்திருந்தது அந்த மண்டபம்.
சுற்றிலும் மரங்கள் குளுமையைப் பரிசளிக்க….இரவு நேர அலங்கார விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது மண்டபம்.
பா வடிவிலான அந்த மண்டபத்தில் மாடி சுவர்களும் அதே வடிவத்தில் இருந்தது.எதிரெதிர் புறம் இருப்பவர்கள் தெரிவதற்கு வாய்ப்பில்லை. கொஞ்சம் எக்கி நின்று பார்த்தாள் தெரியும்.
அபியோ அங்கு நடை பயின்று கொண்டிருந்தாள்.தனக்கு வந்த போனை பேசிக்கொண்டே மேலே வந்தான் வருண்.அவனுடன் ரிஷியும் வர…அதைப் பார்த்தவளுக்கு…இதயத் துடிப்பே நின்று விடும் போல் இருந்தது.
“ரிஷி….” என்ற தன் தந்தையின் அழைப்பில்….”அப்பா கூப்பிடுறார்… என்னன்னு கேட்டுட்டு வரேண்டா…” என்றபடி திரும்பி செல்லவும் தான் அவளுக்கு உயிரே வந்தது.
முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று தான் வருணை அழைத்துக் கொண்டு வந்தான் ரிஷி.அதனால அவன் வரும் வரை காத்திருப்போம் என்று எண்ணியவன் அப்பொழுது தான் அங்கு அபியைப் பார்த்தான்.
“ஹாய் அபி…என்ன இங்க….? தனியா என்ன பண்றிங்க..?” என்றான்.
“இவனைத் தானே மாப்பிள்ளை என்று நினைத்து…மாமா.. என்று அழைத்து…என்று எண்ணியவளுக்கு கண்கள் கலங்க…”
“என்னாச்சு அபி..எனி பிராப்ளம்…” என்றான் வருண்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை…அறைக்குள் அடைந்து கிடக்க என்னமோ மாதிரி இருந்தது…அதான் கொஞ்சம் காற்று வாங்கலாம்ன்னு…” என்று இழுக்க…
“ஹோ அப்படியா…? வாங்குங்க…நல்லா காற்று வாங்குங்க..நான் கீழ போயிட்டு வரேன்…” என்றடி வருண் செல்ல முற்பட…
“எங்க இருக்க…? நான் மாடிக்கு வந்துட்டேன் சொல்லு…!” என்று பதட்டத்துடன் வந்தாள் சரண்யா.
போனைப் பேசிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்க்க…யாரும் இல்லாததைப் போல் இருந்தது.வருணும்,அபியும் எதிர்புறம் இருக்க….
“சொல்லு எங்க இருக்க…?” என்றாள் மீண்டும்.
அவள் பேசுவது வருணுக்கும் அபிக்கும் தெளிவாய் கேட்க….வருணின் முகம் யோசனைக்கு செல்ல….அபியின் முகமோ கலவரத்தைக் காட்டியது.
“ப்ளீஸ்…என் நிலமையை புருஞ்சுக்கோ..!” என்று யாரிடமோ கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
வருணின் முகம் அதி தீவிரமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது.
“இதோ வரேன் கண்ணு…” என்றபடி மேலே வந்தான் ராகேஷ்.
“என்ன..? கல்யாணப் பொண்ணு முகத்துல டன் கணக்குல கலவரம் தெரியுது…” என்றான் ராகேஷ் நக்கலாய்.
“பிளீஸ் ராகேஷ்…புரிஞ்சுக்கோ…இந்த நேரத்துல என்னை உன் கூட வச்சு யாராவது பார்த்தா பெரிய பிரச்சனையாகிடும்….அதிலும் எங்க பாட்டி கண்ணுல பட்டேன்னா அவ்வளவு தான்…” என்று கெஞ்ச..
“ஏண்டி…காதலிக்கிறது ஒருத்தனை…கல்யாணம் பண்றது இன்னொருத்தனையா…?” என்றான் கிண்டலாய் ராகேஷ்.
“இப்ப அதுக்கு என்ன செய்யணும்கிற…? நான் இல்லைன்னு சொல்லலை… உன்னை லவ் பண்ணேன்…ஆனா உனக்கு சொல்லிக்கிற அளவுக்கு வேலை இல்லை.வசதி வாய்ப்பும் கம்மி…என்னை நல்லபடியா வச்சிப்பன்னு என்ன நிச்சயம்…?” என்றாள்.
“ஏன் இது லவ் பண்றதுக்கு முன்னாடி தெரியலையோ…! அப்படியிருந்தவனைத் தான உருகி உருகி லவ் பண்ண…இப்போ…என்னை விட அழகா…வசதியா ஒருத்தன் கிடச்ச உடனே அவன் பின்னாடி போயிட்ட…” என்றான் ஆக்ரோஷமாய்.
“நானும் வசதியானவதான்…பார்த்து பேசு..” என்றாள்.என்னதான் அவனிடம் பணிவாக பேச வேண்டும் என்று எண்ணினாலும்…அவளின் அடிப்படை குணம் தலை தூக்கவே செய்தது.
“எல்லை மீறி என் கூட பழகியிருக்க சரண்யா…நாளைக்கு உன் மனசாட்சியே உன்னைக் குத்தாது…” என்றான்.
“சோ வாட்…அப்படிப் பார்த்தா யாருமே கல்யாணம் பண்ண முடியாது.. எனக்குன்னு ஒரு மதிப்பு வேணும்.அது உன் கூட வந்தா கிடைக்காது…அவன் கூட போனாதான் கிடைக்கும்…” என்றாள் எரிச்சலாய்.
அவள் அசால்ட்டாய் பதில் சொல்லிக் கொண்டிருக்க…அதைக் கேட்டுக் கொண்டிருந்த வருணும்…அபியும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டனர்.
“ச்சி…இவள் எனக்கு அக்காவா..?” என்றும் அபியும்…
“ச்சை..இவள் எனக்கு அண்ணியா..?” என்று இருவரும் ஒரே நேரத்தில் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர்.
“அப்ப எனக்கு ஒரு வழிய சொல்லிட்டுப் போ..!” என்றான் ராகேஷ்.
“வழிதானே…உன் வழியை நீ பார்…என் வழியை நான் பார்க்குறேன்..!” என்றாள் அபி.
“இது தான் உன் முடிவா…?” என்றான்.
“ஆமாம்…” என்றாள்.
“இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நான் பார்க்குறேண்டி….உன்னைத் தூக்கிட்டு போயாவது நான் கல்யாணம் பண்ணல என் பேரு ராகேஷ் இல்லடி…” என்று வேகமாய் பேசியவன் அந்த இடத்தை விட்டு நகர…
“தொல்லை விட்டது…” என்று நினைத்த சரண்யா நகரப் போக….
“சபாஷ்..!” என்றபடி எதிர்புறம் இருளில் இருந்து வெளியே வந்தான். வருண்.
அவனுடன் சேர்த்து அபியும் வர…அதிர்ந்தாள் சரண்யா.
இவங்க எப்படி இங்க..? என்று நினைத்தவள்…..எதுவும் அறியாதவள் போல் முகத்தை வைக்க….
”என்ன நடிப்பு..என்ன நடிப்பு…..?” என்றான் வருண்.
“என்ன என்பதைப் போல் பார்த்தாள் சரண்யா…!”.
“ஏய்….நீ புகுந்து விளையாட என் அண்ணன் வாழ்க்கை தான் கிடைத்ததா…? என்ன நெஞ்சழுத்தம் இருந்தா ஒரு போலீஸ்காரனையே ஏமாற்ற பார்ப்ப…?” என்றான்.
“நான் யாரை ஏமாற்றுனேன்…?” என்றாள் அசால்ட்டாய்.
“ச்சி..வாயை மூடு…நீ பேசினது…அவன் பேசினது எல்லாத்தையும் முழுசா கேட்டுட்டதான் வரோம்..” என்றான் வருண்.
“இப்ப அதுக்கு என்ன பண்ண சொல்ற..?” என்றாள்.
“மரியாதையா உண்மையை சொல்லி..நீயே இந்த கல்யாணத்தை நிறுத்திடு…! இப்படி ஒரு பொண்ணு என் அண்ணனுக்கு மனைவியா வருவதை நான் விரும்பலை.நான் மட்டுமில்லை…எங்க வீட்டில் யாரும் விரும்ப மாட்டங்க…! குறிப்பா ரிஷிக்கு தெரிந்தது….நீ அவ்வளவு தான்…ஒரு சின்ன பொய் சொன்னாலே அவனுக்கு அவ்வளவு கோபம் வரும்..!” என்றான்.
“முடியாதுன்னு நான் சொன்னா…?” என்று சரண்யா முடிக்க…
“நான் பாட்டிகிட்ட சொல்லுவேன்…!” என்றாள் அபி.
அவளை ஆங்காரமாய் முறைத்த சரண்யா…”ஹோ….உனக்கு என்னை விட இவங்க குடும்பம் முக்கியம் போயிட்டதா…? அது சரி நீ என்ன…இவன்கூட இந்த இருட்டுல என்ன பண்ற…?” என்று சரண்யா குத்த…
“அக்கா…” என்று அதிர்ந்தாள் அபி.
“ச்சி…வாயை மூடு…! நானே கீழ போய் எல்லார்கிட்டயும் உண்மையை சொல்றேன்…!” என்று நகரப் போனான் வருண்.
“டேய்..! நான் சொன்னது நியாபகத்துல இருக்குல….சரண்யா இன்னும் மாடியை விட்டு கீழ இறங்கலை…நான் இப்ப லைட்ட ஆப் பண்ணுவேன்…நீங்க அவளைத் தூக்கிடுங்க..!” என்று தகவல் கொடுத்துக் கொண்டிருந்தான் ராகேஷ்.
“வருண் கீழே சென்று உண்மையை சொன்னால்….தன் நிலை என்ன என்று யோசித்த சரண்யாவிற்கு தன்னையும் மீறி உடல் நடுங்கியது.தன் பாட்டியைப் பற்றி நன்றாகத் தெரியும் அவளுக்கு.ஒழுக்கக் கேட்டை அவர் ஒரு போதும் விரும்ப மாட்டார்… இப்ப எப்படி தடுப்பது..?” என்று அவள் மூளை ஒரு நிமிடம் சிந்திக்க…..”
“இல்லை…சொல்ல வேண்டாம்…” என்று வருணின் கையைப் பிடிக்க..
“ச்ச்சி…கையை விடு..” என்று அவன் உதற
“வருண் முகத்தில் தெரிந்த தீவிரத்தைப் பார்த்தவளுக்கு…எப்படியும் அனைவரிடமும் சொல்லி திருமணத்தை நிறுத்தப் போகிறான் என்று உறுதியாய் தெரிந்தது…”சரண்யாவிற்கு.
திருமணம் நடப்பதை விட அவள் பாட்டிக்கு உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.அவள் மூளை கேவலமான யோசனையைத் தேட…
“இதையெல்லாம் பாட்டியால் தாங்க முடியாது வருண்..!” என்றாள் அபி வாயத் திறந்து.
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும் அபி… அவன் சொன்னதை நீயும் கேட்ட தானே…எல்லை மீறி பழகியிருக்காங்க….என் அண்ணன்…எச்சில் இலையை ஒரு போதும் விரும்ப மாட்டான்…” என்றான் வருண்.
அவன் கூறிய எச்சில் இல்லை என்ற வார்த்தையில் அடிபட்டவளாய் அபி…சரண்யாவைப் பார்க்க…அவளோ ஆங்காரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நான் உனக்கு எச்சில் இலையா….?” என்று வன்மம் தலை தூக்க….அந்த மண்டபத்தின் விளக்கு அணைக்கப்பட்டது.
வருண் சென்று சொல்லும் முன்….”பாட்டிஈஈஈஈஈஈஈஈ” என்று அந்த மண்டபமே அதிரும் அளவிற்கு கத்தினாள்.
அருகில் நின்றிருந்த அபியை…சட்டென்று அங்கிருந்த சுவற்றில் பிடித்து தள்ள….சுவற்றில் மோதிய அபியோ…”அம்மா…” என்றபடி மயங்கினாள்.
சரண்யாவின் கத்தலில்…அனைவரும் பதறி அடித்து தேட….தன் உடைகளைக் நலுங்க செய்தவள்….தன் மெகந்தியிட்ட கைகளால் வருணின் சட்டையைப் பற்றியவள் அவனைத் தள்ளப் விட……சுதாரித்து வருண் கீழே போகும் முன்…அங்கிருந்து வருணுக்கு முதலாக ஓடினாள்.
அந்த இருளில்…அவளின் செய்கைகள் வருணுக்கு புரியாததால்…..அவனும் கோபமாய் சென்றான்.அபியை மறந்து விட்டிருந்தான்.
அதற்குள் ஜெனரேட்டர் போடப்பட….விளக்குகளின் வெளிச்சம் மண்டபத்தை நிறைத்தது.
“என்னடா தூக்கியாச்சா…?” என்றான் ராகேஷ் காரில் இருந்தபடி.
“அதெல்லாம் முடிச்சாச்சு தல…”என்று போனில் தகவல் சொன்ன அடியாட்கள்….ஏற்கனவே மயங்கிருந்த அபியின் முகத்தில் மயக்க மருந்தை வைத்து அழுத்தியவர்கள்…அவள் தான் சரண்யா என்று அவளைத் தூக்கி சென்றனர்.
“என்னாச்சு சரண்யா….!” என்றபடி வந்த அமிர்தவள்ளி…அவளின் கோலம் கண்டு திகைத்தார்.
“ஏய் என்னடி ஆச்சு…என்னடி இது கோலம்…?” என்று அவர் கேட்டுக் கொண்டிருக்க……அப்பொழுதுதான் அவள் பின்னாலேயே வந்த வருணை கவனித்தனர்.
“ஏன் எல்லாரும் என்னைப் பார்க்குறாங்க…?” என்று யோசித்தபடி தன்னைப் பார்க்க…
அவன் சட்டையின் முன் பகுதியில்….மெகந்தியிட்ட கைகளின் கரை இருக்க….
“என்னாச்சு சரண்யா..? என்ன நடந்தது…?” என்றார் வள்ளி.
அதற்குள் ரிஷியும் அங்கு வர….சித்ராவும்,சுரேஷும் எதுவும் புரியாமல்…”என்னாச்சு சரண்யா…? எதுக்காக இப்படி ஒரு கோலம்..யாராவது உன்கிட்ட….” என்று சித்ரா இழுக்க…
“பாட்டி….பாட்டி…” என்று கேவிக் கேவி நீலிக் கண்ணீர் வடித்தாள்.
“ஏய் என்ன நடிக்கிறியா…?” என்றான் வருண்.
“வருண் என்ன இது…? உனக்கு அவ அண்ணி…எதுக்காக அவகிட்ட மரியாதை இல்லாம பேசுற…?” என்றார் சித்ரா கோபமாக.
“யாருக்கு யாரு அண்ணி…..என் அண்ணன் கால் தூசிக்கு கூட இவ வர மாட்டாம்மா…நம்ம ரிஷிக்கு இவ வேண்டாம்….” என்றான் வருண்.
“வருண்…” என்று அவனை அடிக்க கையை ஓங்கி விட்டார் சுரேஷ்.
அவரின் கையைப் பிடித்து தடுத்தான் ரிஷி.” என்ன நடந்தது வருண்…?” என்றான் நிதானமாய்.
அவர்கிட்ட என்ன கேட்குறிங்க…? என்கிட்டே கேளுங்க….! நான் சொல்றேன் உங்க தம்பி வண்டவாளத்தை…… என்று அழுக…
“முதலில் அழுகையை நிறுத்து…என்ன நடந்ததுன்னு சொல்லு…!” என்றார் சுரேஷ்.
“வருண்..வருண்……மாடில…என் தங்கச்சிகிட்ட தப்பா நடந்துக்க பார்த்தார்….அதை நான் பார்த்துட்டேன்…என் தங்கையை இவன் கிட்ட இருந்து காப்பாத்த…நான் போய் தடுத்தேன்.என்னைப் பார்த்ததும் பயந்துட்டார்.
எங்க நான் உங்ககிட்ட வந்து சொல்லிடுவேனோ என்று…..
“கீழ போய் சொன்னா…இந்த கல்யாணத்தையே நிறுத்திடுவேன்னு… மிரட்டுறார்…. பாவம் அவ…அங்க மயக்கமாகி….” என்று அழுது கொண்டே சொல்ல….
தன் தந்தையை பின்னால் இழுத்து முன்னால் வந்த ரிஷி…ஓங்கி ஒரு அறை விட்டான் அவளை.
“யாரைப் பார்த்து என்ன சொல்ற…? என் தம்பி உன் தங்கச்சி கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தானா…?” என்றான் ரிஷி.
“என்ன தம்பி நீங்க…என் கண் முன்னாடியே என் பேத்தியை அடிக்கிறிங்க…உங்க தம்பியை கண்டிக்கிறதை விட்டுட்டு…எங்க பொண்ணை அடிக்கிறிங்க…?” என்றார் கணபதி.
“என் தம்பியைப் பற்றி எனக்குத் தெரியும்….” என்றான் ரிஷி சீற்றமாய்.
“எங்க பொண்ணைப் பற்றியும் எங்களுக்கு நல்லாத் தெரியும்…நாங்க அப்படி வளர்க்கலை..” என்றார் வள்ளி.
“என்ன நடந்தது வருண்…?” என்றார் சுரேஷ்.
வருண் அங்கு பார்த்தவற்றையும்…கேட்டவற்றையும் கூற…ரிஷியின் முகம் இரும்பாய் மாறியது.
இதைக் கேட்ட அமிர்தவள்ளியோ…வெகுண்டார்.
“என் பேத்தி கிட்ட தப்பா நடந்துகிட்டது மட்டுமில்லாம….அவனுக்கு அண்ணியா வரப் போறவளைப் பத்தி வாய் கூசாம சொல்றான் ….நீங்களும் கேட்டுகிட்டு நிற்கிறிங்க..?” என்றார் வள்ளி.
“எதுக்கு வளவளன்னு பேசிகிட்டு…உங்க சின்ன பேத்தியைக் கூப்பிடுங்க..! நடந்தது என்னன்னு தெரிஞ்சிடப் போகுது…!” என்றார் சுரேஷ்.
“நல்லாத்தான போய்ட்டு இருந்தது…இப்ப அவளுக்கு மயக்கம் தெளிஞ்சு உண்மையை சொல்லிட்டா….?” என்று சரண்யா மனதிற்குள் தவிக்கத் துவங்க….
“அந்த பொண்ணு மேல இல்லைங்க…” என்றபடி வந்தனர்.
“இங்க தான் எங்கையாவது இருப்பா…கூப்பிடுங்க…” என்று சொல்ல…
மண்டபம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் அபி கிடைக்கவில்லை.
“எல்லா இடத்துலையும் தேடிட்டோம்….அந்த பொண்ணு இல்லைங்க…!” என்ற தகவல் வர…
வருணின் சட்டையை கொத்தாகப் பிடித்தார் கோவிந்தன்.”என் பேத்தி எங்கடா…அவளை என்ன செஞ்ச…?” என்றார்.
“எனக்குத் தெரியாது….நான் அவளை ஒன்னும் பண்ணலை…!” என்றான் வருண்.
இவ்வளவு நேரம் இங்க இருந்த பொண்ணு எப்படி காணாமப் போகும்..நீ தப்பிக்க..அவளை எங்க ஒளிச்சு வச்சிருக்கிங்க…?” என்றார்.
“கையை எடுங்க சம்பந்தி…எங்க பையனை நாங்க அப்படி வளர்க்கலை….” என்றார் சுரேஷ்.
“அப்ப நாங்க அப்படி வளர்த்து வச்சிருக்கோமா..?” என்றார் கோவிந்தன்.
“எங்களுக்கு எப்படி தெரியும்..?” என்றார் சுரேஷ்.
அபியை சொன்னதால் கோவிந்தனுக்கு கோபம் தாறுமாறாக வர….”இதெல்லாம் ஒரு குடும்பம்…” என்று வார்த்தையை விட்டார்.
அந்த வார்த்தைகளில் வெகுண்டான் ரிஷி.”பார்த்துப் பேசுங்க…! வயசுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்கேன்…!” என்றான்.
வருணுக்கோ…மனதில் குழப்பம்.மேல இருந்த அபி எங்க…? என்று அவளைப் பற்றி சிந்திக்க…இங்கு வார்த்தை தடித்துக் கொண்டு செல்வதை அவன் கவனிக்கவில்லை
“யார் கண்டா…?ஒரு வேலை நீயும் அப்படித்தானோ என்னவோ…. போலீஸ்க்காரனுக்கு பெண்ணைக் குடுக்க வேண்டாம்ன்னு சொன்னாங்க…எங்க புத்தியை செருப்பால அடிக்கணும்…” என்றார் கணபதி.
“நிறுத்துங்க..!” என்றான்.
“என்னடா உள்ளதை சொன்னால் கோபம் வருதோ…!தம்பி கெடுக்க பார்ப்பானாம்…அண்ணன் உதவிக்கு வருவானாம்…என்னடா நடிக்கிறிங்களா….எனக்கு இப்பவே என் பேத்தி வந்தாகணும்…!” என்றார் கோவிந்தன்.
“ஐயா..சின்ன பாப்பா இப்பதான் கார்ல போகுதுங்க..!” என்றபடி வந்தான் கோவிந்தன் வீட்டு வேலையாள்.
“என்னடா சொல்ற..? நீ எப்ப பார்த்த..?” என்றார் கோவிந்தன்.
“இப்ப தாங்கய்யா…சமையல்காரர் ஒரு ஐட்டம் விட்டுப் போய்விட்டதுன்னு சொன்னார்.வாங்கி வரப் போயிருந்தேன்.வரும் போது பார்த்தா நம்ம சின்ன பாப்பா..கார்ல போனாங்க….நான் தான அவங்களைப் பார்த்தேன்…அவுக என்னைப் பார்க்கலைங்க…” என்றான்.
“கூட யார் இருந்தா…?” என்றான் ரிஷி ஆக்ரோஷமாய்.
“தெரியலைங்க….சரியா பார்க்க முடியலை..” என்றான்.
“நல்ல குடும்பம்…அக்கா…இங்க நாடக மாடுறா….தங்கச்சி வேலையைக் காட்டிட்டு ஓடிட்டாளா…? இதெல்லாம் ஒரு குடும்பம்….நீங்க என் தம்பியை பேச வந்துட்டிங்க…இதோ விட்டா உங்க எல்லாருக்கும் நல்லது….இல்லை நான் என் வேலையை காட்ட வேண்டியது வரும்..!” என்றான் ரிஷி.
“ஒரு பொறுக்கிக்கு அண்ணனா இருந்துட்டு ….உனக்கு இவ்வளவு ரோஷம் வரக் கூடாது…” என்று கணபதி எகிற…
“ஏய்…இன்னொரு வார்த்தை பேசுனிங்க….கொலை பண்ணவும் தயங்க மாட்டேன்…என் தம்பியைப் பற்றி எனக்குத் தெரியும்…கண்ட நாயெல்லாம் அவனை ஏதோ சொன்னது அப்படின்றதுக்காக நான் அவனை சந்தேகப் படுவேன்னு நினைச்சா அது உங்க முட்டாள் தனம்…” என்றான் சீற்றமாய்.
“பார்த்திங்களா பாட்டி…..அவளைக் காப்பாத்த போய்….இப்ப என் கல்யாணம் கேள்விக் குறி ஆகிட்டது.இப்ப அவ ஓடாம இருந்திருந்தா…நடந்த உண்மையை இவங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கலாம்… அதுக்கும் வழியில்லாம போய்விட்டது…அவளால் என் வாழ்க்கையே போய்விட்டது பாட்டி….” என்று வராத கண்ணீரை வர வைத்துக் கொண்டு அழுதாள் சரண்யா.
அவளின் நடிப்பை எண்ணி வருண் ஒரு நிமிடம் அதிர்ந்தான்.தன் தங்கை என்றும் பார்க்காமல் ஒரு பெண்ணால் இப்படி ஒரு பழியைப் போட முடியுமா..? கடைசியில் நடந்த அனைத்துக்கும் காரணம் அபி தான் என்று ஜோடித்து விட்டாளே..! நல்ல வேலை கல்யாணம் நடக்கவில்லை. இல்லையென்றால் ரிஷியின் நிலை…? என்று எண்ணியவன்…
“சாரி ரிஷி..” என்று அவனை அணைத்துக் கொண்டான்.
“எதுக்குடா சாரி…உன்னைப் பத்தி அந்த கடவுளே வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்…இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து கடவுள் தான் நம்மக் காப்பாத்தியிருக்கார்…” என்றான் ரிஷி.
“ரிஷி..அந்த பொண்ணு அப்படிப்பட்ட பெண் இல்…” என்று அவன் முடிப்பதற்குள்…
“விடு வருண்….அவ எப்படிப்பட்ட பொண்ணாயிருந்தா நமக்கென்ன…இந்த குடும்பத்தோட சவகாசமே இனி இருக்கக் கூடாது…” என்றான் ரிஷி.
வந்திருந்த சொந்த பந்தங்கள்…விஷயத்தை வாய்க்கு கிடைத்த அவுல் போல் நினைத்து மெல்ல….
சரண்யாவிற்கு எதிலோ தோற்ற உணர்வு.இந்த திருமணமும் நடக்க வேண்டும் என்று விரும்பினாள்…அது நடக்காமல் போனதில் அவள் மனதில் ஆத்திரம் மிகுந்து கொண்டிருந்தது.
வருணைக் கண்டித்து….அவனைப் பேச விடாமல்…இந்த கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று அவள் எண்ண….அவள் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டது போல் இருந்தது ரிஷியின் பேச்சு.
இப்படி ஒரு அண்ணன் தம்பி ஒற்றுமையை அவள் எதிர் பார்த்திருக்கவில்லை என்பதே உண்மை.
“இனி இந்த ஜென்மத்துல உங்க மூஞ்சிலேயே நான் முழிக்கக் கூடாது…!” வெளிய போங்க இங்கிருந்து…. என்றான் ரிஷி.
“இந்த கேடு கெட்ட குடும்பம் இருக்குற இடத்தில் ஒரு நிமிஷம் கூட நாம இருக்கக் கூடாது…கிளம்புங்க எல்லாரும்…” என்று கணபதி சொல்ல…சுனாமி வந்து ஓய்ந்தது போல் இருந்தது அந்த மண்டபம்.
இதையெல்லாம் அறியாத அபி…மயக்க மருந்தின் உதவியுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தாள்.சங்கரின் தந்தையின் அடியாட்கள் மூலம்.
ராகேஷின் ஆட்கள் இவளை சரண்யா என்று தூக்கி வர….அவள் தான் மணப்பெண் என்று அவளைக் கடத்த வந்த சங்கரின் தந்தையின் ஆட்கள்…அவர்களிடம் இருந்து…இவளை தங்கள் காரில் கடத்திக் கொண்டு சென்றனர்.
ஆழ்ந்த மயக்கத்தில்….ரிஷியின் நினைவுகளுடன்….தலை சாய்த்திருந்தாள் அபி.
உன் நெஞ்சினில் ஒரு முறை சாய்ந்து கொண்டால் ….
மரணம் ஏதடா என் கண்ணா….!
உன்னை ஒரு முறை அணைத்துக் கொண்டால்…
சரணமாகுமே என் மன்னா….!
அன்பிலே..உன்னை நான் மனதிலே சுமப்பேனே…
இல்லையேல்..என்னை நான் மண்ணிலே..புதைப்பேனே..!
அன்பிலே உன்னை எண்ணி தவிப்பது தெரியாதா…
ஒரு முறை என்னிடம் வருவாயா..???