அத்தியாயம் 13:
“என்ன அபி ரிஷி சார் வருகைக்காக வெயிட்டிங்கா…?” என்றாள் லட்சுமி.
அவளுக்கு தன் புன்னகையை பரிசளித்த அபியின் மனதில் ஆயிரம் கேள்விகள்.தனக்குத் தானே உரமிட்டு வளர்க்கும் காதல் எந்த தூரம் வரை செல்லும் என்று அவளுக்குத் தெரியவில்லை.
தான் காதலை சொன்னால் ரிஷி ஏற்றுக் கொள்வானா… என்றும் அவள் யோசிக்கத் தவறவில்லை.எது எப்படி இருந்தாலும் காதல் கொண்டவளின் மனம் தன்னவனின் வருகைக்காக காத்திருக்க….அவளின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் வந்து சேர்ந்தான் ரிஷி.
திடீரென்று ரிஷியைக் கண்டவளுக்கு…..அவனின் தோற்றத்தைக் கண்டவளுக்கு மூச்சையடைத்தது.நிச்சயத்திற்காக அவன் அணிந்திருந்த ஆடை…அவனை மேலும் கம்பீரமாய்க் காட்ட…அதில் தன்னைத் தொலைத்தாள்.
“அபி..! என்ன பண்ற…?” என்று லட்சுமி பல்லைக் கடிக்க….
“இன்னைக்கு செம்ம ஹான்சமா இருக்கார் இல்லையாடி…?” என்றாள் மோன நிலையில்.
“அவர் எப்பவுமே அப்படித்தாண்டி இருக்கார்.இப்ப என்ன பிரச்சனை உனக்கு….இப்படியே வச்ச கண்ணு வாங்காம பார்த்திட்டு இருக்காத….யாராவது பார்த்தாங்க …அம்புட்டு தான்….” என்று லட்சுமி தனது ஆசிரியையின் பக்கம் பார்வையை விட…
அவரோ ரிஷியை வரவேற்பதில் குறிக்கோளாய் இருந்தார்.ரிஷிக்கு சிற்றுண்டி வழங்க…இவர்களை அழைத்தார் அந்த ஆசிரியை.
“நீ போ அபி..!” என்றாள் லட்சுமி தன் தோழியின் மனது அறிந்தவளாய்.
“இல்லடி நீ போ…நான் வரலை….அவர் கிளம்பும் வரை…எனக்கு அவரைப் பார்த்துகிட்டே இருக்கணும்….பிளீஸ்..” என்றாள்.
“விளங்கிடும்…! கடைசிவரை பார்த்துகிட்டே தான் இருக்க போறியா…?காதலை சொல்ற ஐடியா இருக்கா இல்லையா…?” என்று லட்சுமி நொடிந்து கொள்ள…
“பிளீஸ்டி…” என்று கண்களை சுருக்கி அபி கெஞ்ச…
“சரி சரி…யு கண்டினியு….” என்று சிரித்தபடி சென்றாள் லட்சுமி.
ரிஷியுடன் சேர்ந்து அந்த ஊரின் முக்கிய பிரமுகர்களும் வந்திருக்க…ரிஷி அவர்களுடன் கர்ம சிரத்தையாய் பேசிக் கொண்டிருந்தான்.
பிறகு…ஐந்து நாட்களில் அவர்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தவன்…. அவர்களைப் பாராட்டவும் மறக்கவில்லை.
இன்றைய இளைஞர்கள்….இது போன்ற சமுதாய தொண்டுக்கு வர வேண்டும் எனவும்….மீதி நாட்கள் அவர்கள் பணியாற்றப் போகும் விஷயம் குறித்தும்…..பெண்களுக்கான தற்காப்பு குறித்தும்….இப்படியான தன் கருத்துக்களை அரை மணி நேரம் பேசிக் கொண்டிருக்க…
அபிக்கோ…அவன் பேசிய எதுவுமே காதில் விழவில்லை.பேசும் போது அவன் நெற்றியில் அலை அலையாய் படிந்த முடி கற்றைகள்…அவன் முகத்தில் தெரிந்த மிடுக்கு…அவன் குரலில் தெரிந்த ஆளுமை…அவனின் முக பாவனைகள்…இப்படியாக ஒவ்வொன்றாய் தனது ரசனை வட்டத்திற்குள் கொண்டு வந்திருந்தாள்.
தன்னை யாரோ வெகு நேரம் பார்ப்பது போன்ற பிரம்மை ரிஷியினுள் தோன்ற….சட்டென்று தன் பார்வையைக் கூர்மையாக்கினான்.
அவனின் பார்வை தன்னை நோக்கி வருவதைக் கண்ட அபி….படபடப்புடன் தலையைக் குனிந்து கொண்டாள்.
“யாரோ பார்க்கிற மாதிரி இருந்ததே…!” என்று ரிஷி மனதிற்குள் நினைக்க….”நீ முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்கிறாய்…! எல்லாரும் தான் உன்னையே பார்த்துட்டு இருக்காங்க..!” என்று மனம் நக்கலடிக்க… அப்போதைக்கு தன் சிந்தனையைக் ஒதுக்கி வைத்தான் ரிஷி.
ரிஷியைப் பார்த்த மன திருப்தியில் அன்றைய நாள்…மிகுந்த சந்தோஷத்துடன் சென்றது அபிராமிக்கு.
அனைவருக்கும்…அப்துல்கலாமின் “அக்னி சிறகுகள்”புத்தகத்தை பரிசாக அளித்தான்.தனித்தனியாக கொடுக்காமல் ஆசிரியரிடம் கொடுத்து …கொடுக்கும் படி சொன்னவன்…இறுதியில் விடை பெற்று சென்று விட்டான்.
அவன் சென்ற பிறகு….அவன் பேச்சைக் கேட்ட மாணவர்கள்…அவனை ஆகா…ஓகோ…என்று புகழ….
“சும்மா சொல்லக் கூடாது அபி…ரிஷி சார்…சான்சே இல்லை..” என்று லட்சுமியும் தன் பங்குக்கு புகழ்ந்து தள்ளினாள்.இதையெல்லாம் மன நிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அபி.காலம் தனக்கு வைத்திருக்கும் கோலத்தை அறியாமல்.
மீதியிருந்த நான்கு நாட்களும் ஜெட் வேகத்தில் சென்று விட….கேம்ப் முடிந்து அனைவரும் வீட்டிற்கு செல்லும் நாளும் வந்தது.
வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற உடன் ஏனோ..அபிக்கு மனம் பாரமாய் இருந்தது.தான் இல்லாமலேயே தன் அக்காவின் நிச்சயதார்த்தம் நடந்ததில் அவளுக்கு கொஞ்சம் மனந்தாங்கல் இருந்தாலும்…அவளுக்கு ஒரு நல்லது நடப்பதில் மனம் மகிழத்தான் செய்தது.
இருந்தாலும்…ஏதோ ஒன்று மனதில் பிராண்டியது.அந்த உணர்விற்கு பெயர் என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை.
யாரோ தன்னையே பார்ப்பது போன்று தோன்ற…திரும்பிப் பார்த்தாள். அங்கும் யாரையும் காணவில்லை.
“கிளம்பலாமா லட்சுமி..!” என்று தன் தோழியை அழைத்துக் கொண்டு… இருவரும் அவர்கள் வீடுகளுக்கு பயணமாயினர்.
இரண்டு நாட்கள்…சென்றிருந்த நிலையில்……
“உடன் படித்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றிய சங்கர் என்ற மாணவன்..இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டான்..” என்ற தலைப்புச் செய்திகள் அனைத்து நாளிதழிலும் இடம் பெற்றிருக்க…சந்தோஷமாய் பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா பேப்பரையே பார்த்துட்டு இருக்க…அப்படி என்ன செய்தி..” என்று கோவிந்தன் கேட்க…
“தாத்தா..” என்றபடி அவரிடம் பேப்பரைக் காட்டினாள் அபி.
அதில் அருகில் ரிஷியின் போலீஸ் சீருடையில் இருக்க..அதைப் பார்த்த கோவிந்தன்….”பரவாயில்லையே தம்பி கெட்டிக்கார தம்பியாத்தான் இருக்கு..! சொன்ன மாதிரி கைது பண்ணிட்டாரே..!” என்று ரிஷியைப் புகழ..
அவரின் வார்த்தைகளில் சந்தோசம் தாங்க முடியவில்லை அபிக்கு.”பரவாயில்லையே..! நம்ம தாத்தாவுக்கும் அவரைப் பிடிச்சிருக்கே…! நம்ம வேலை சுலபமா முடிஞ்சுடும்..!” என்று அகத்திற்குள் மகிழ்ந்து கொண்டாள்.
இப்படியாக கற்பனையில் அவள் வாழ்வு செல்ல….
“அமிர்தவள்ளி…நாளைக்கு கல்யாண ஜவுளி எடுக்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கோயம்பத்தூர் வராங்களாம்….நாமும் போகணும்…நாளைக்கு நேரத்துக்கே கிளம்பிடுங்க..!” என்று தகவல் தந்தார் கோவிந்தன்.
டியூட்டிக்கு கிளம்பிக் கொண்டிருந்த ரிஷியிடம் வந்தார் சித்ரா…”ரிஷி நாளைக்கு கல்யாண ஜவுளி எடுக்கணும்…நீயும் கண்டிப்பா வரணும்..!” என்றார்.
முடியாது என்று சொல்ல வாயை எடுத்தவன்…சித்ராவின் முகம் வாடுவதைப் பார்த்து….உங்க கூட வர முடியாது மாம்…பட் கண்டிப்பா வரேன் மாம்…என்று அவரின் கன்னத்தைப் பிடித்து கிள்ள…
“விடுடா….எப்ப பாரு ஐஸ் வைக்கிறதே வேலையாப் போய்விட்டது.நீ மட்டும் வராம இருந்து பார்…அப்பறம் இருக்கு உனக்கு..!” என்று மிரட்டியவர்…
“சரண்யா கிட்டயும் பேசிடு ரிஷி…..எந்த மாதிரி எடுக்கணும்ன்னு அவளுக்கும் ஐடியா இருக்கும்ல…உங்களுக்குள்ள கலந்து பேசிக்கோங்க..!” என்று சித்ரா சொல்லி முடிக்க…
“மாம்…என்கிட்டே அவ நம்பரே இல்லை மாம்..” என்றான் சாதரணமாய்.
“என்னடா சொல்ற..?” என்று அதிர்ந்தார் சித்ரா.
“இதுல இவ்ளோ ஷாக் ஆக என்ன இருக்க…கல்யாணத்துக்கு அப்பறம் எப்படியும் பேசிட்டே தான இருக்க போறோம்…!” என்று தோளைக் குலுக்கியவன்…
“ஓகே…டியுட்டிக்கு டைம் ஆச்சு மாம்…பாய்…!” என்றபடி செல்ல…அவனை நினைத்து மனதில் கவலை கொண்டார் சித்ரா.
அங்கே பொள்ளாச்சியில் சந்தோஷமாய் கிளம்பிக் கொண்டிருந்தாள் அபி.
“அக்கா…! இன்னும் ரெடியாகலையா…? நான் ரெடி…” என்றபடி வந்த அபியை ஏற இறங்க பார்த்தாள் சரண்யா.
வெள்ளை நிற சுடிதாரில்…தேவதையாய் வந்தவளைப் பார்க்க… சரண்யாவிற்கு மனதிற்குள் எரிச்சல் மூண்டது.
“இப்ப நீ எங்க வர..?” என்றாள் எரிச்சலுடன்.
ஒரு நிமிடம் முகம் கூம்பிப் போனது அபிக்கு.”இன்னைக்கு கல்யாண ஜவுளி எடுக்க கோயம்பத்தூர் போறோம்ன்னு தாத்தா சொன்னார்..” என்றாள் அமைதியாய்.
“கல்யாணம் எனக்கா… இல்லை உனக்கா…?” என்றாள் சரண்யா கடுமையாய்.
“அக்கா…!” என்று அதிர்ந்தாள் அபி.
“எனக்கு நீ வருவது பிடிக்கலை..அதனால் வராதே..!” என்று முகத்திற்கு நேராய் சொல்லி விட்டு செல்ல…கண்கள் கலங்கி நின்றாள் அபி.
“கிளம்பலாமா…?” என்று கோவிந்தன் கேட்க…அபி நகராமல் இருந்தாள்.
“என்னம்மா அபிராமி…? வா..!”என்றார்.
“இல்லை தாத்தா…எனக்கு தலை வலிக்குது…நான் வரலை…நீங்க போயிட்டு வாங்க…!” என்றாள்.
அபிராமியை முறைத்த வள்ளி…”எதுக்கு..? எங்க மானத்தை வாங்கவா..? ஏற்கனவே நிச்சயதார்த்தத்துக்கு இல்லாம…கேட்டவங்களுக்கு பதில் சொல்லி மாள முடியலை.இன்னைக்கும் அதே மாதிரி நடக்கணுமா…? வா வந்து வண்டியில் ஏறு…” என்றார் வள்ளி கண்டிப்புடன்.
அபி தயக்கமாய் சரண்யாவைப் பார்க்க…அவளின் விழிகள் வெறுப்பை அப்பட்டமாய் கக்கின.பாட்டியின் சொல்லைத் தட்ட முடியாமல் காரில் ஏறினாள் அபி.
இரண்டு குடும்பமும் அந்த புகழ் பெற்ற துணிக் கடைக்குள் நுழைந்தனர்.வருணும்,தீபிகாவும் அபியையே பார்த்துக் கொண்டிருக்க… அதைப் பார்த்த சரண்யாவிற்கு எரிச்சலாய் வந்தது.
“நீங்க ரொம்ப அழகாயிருக்கிங்க…! அதுவும் வெள்ளை நிற சுடிதாரில் தேவதை மாதிரி இருக்கீங்க…!” என்றாள் தீபி கள்ளம் கபடமில்லாமல்.”
அவளுக்கு புன்னகையை நன்றியாய் உதிர்த்தவள்…..வேறு எதுவும் பேசாமல் அமைதியாய் நின்று கொண்டாள்.
சரண்யாவோ….முகூர்த்த புடவைக்காக…அந்த கடையையே இரண்டு பண்ணிக் கொண்டிருந்தாள்.
ரிஷியைக் காணாமல் சித்ராதான் தவித்துக் கொண்டிருந்தார். சரண்யாவோ…அந்த வித நினைப்பு எதுவுமின்றி….சேலையை தேர்வு செய்வதில் முனைப்பாயிருந்தாள்.
“என்ன அண்ணா…? ரிஷி அண்ணா வரலைன்னு இவங்களுக்கு கொஞ்சம் கூட கவலையில்லையா…?” என்றாள் தீபி வருணின் காதில்.வருண் அவளை முறைக்க அந்த முறைப்பில் அடங்கிப் போனாள் தீபி.
“என்ன இவள்…? மாமா இங்க நிற்கிறார்….அவர்கிட்ட கூட கேட்காம…அவ பேசாம செலக்ட் பண்றா..?” என்று அபி மனதிற்குள் நினைக்க….
வருணோ அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து செல்லை நோண்டிக் கொண்டிருந்தான்.
“என்ன இவங்க…கல்யாணம் பண்ண போறவங்க மாதிரியே இல்லையே…! ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தைத் திருப்பிகிட்டு இருக்காங்க…!” என்று மனதில் நினைத்த அபியால்…அதை வெளியில் கேட்க முடியவில்லை. நமக்கு எதுக்கு வம்பு என்ற ரீதியில் இருந்தாள்.
“அபி இங்க வாம்மா…வந்து உனக்கு எந்த புடவை பிடிச்சிருக்கோ எடுத்துக்கோ…” என்றார் சித்ரா.
“பரவாயில்லை அ…அத்தை…” என்றாள் தன் பாட்டியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே.
“எடுத்துக்கோ அபி..” என்று வள்ளி சொல்ல….
தளிர் பச்சை நிறத்தில்….தங்க சரிகை பின்னியிருக்க….டார்க் பிங்க் கரையிட்ட…அந்த புடவையை தேர்ந்தெடுத்தாள் அபி.
அவள் எடுத்த புடவையைப் பார்த்த சித்ரா மனதிற்குள் மெச்சிக் கொண்டார்.குறித்த நேரத்தில்…அவளுடைய ரசனை அவரை வெகுவாய் கவர்ந்தது.
“தம்பி….வந்து மாப்பிள்ளைக்கு எங்க சார்பா டிரஸ் எடுக்கணும்…நீங்க வந்து தேர்வு செய்றிங்களா..” என்றார் கணபதி.
“நானா…?” என்று எண்ணியவன்…ரிஷி இன்னமும் வராததால் தன்னை அழைக்கிறார் என்று எண்ணியவன்…அவருடன் எழுந்தான்.
ரிஷிக்காய் அவன் பார்த்துக் கொண்டிருக்க….அவன் புறம் திரும்பிய அபி…”என்ன மாமா..? எதை எடுப்பது என்று தெரியவில்லையா..?” என்றாள் குறும்புடன்.
“மாமாவா…?” என்று அதிர்ந்தான் வருண்.
“டேய்…உங்க அண்ணன் அவளுக்கு மாமான்னா…தம்பி நீயும் மாமா தானா…” என்று மனசாட்சி சொல்ல….”ஆமாம்ல..” என்று தன்னிலை அடைந்தான்.
“ஆமாங்க…!” என்றான் வருண்.
“ஐயோ..! என்ன..? நீங்க…என்னைப் போய் நீங்க…வாங்கன்னு சொல்லிக்கிட்டு…சும்மா அபின்னே கூப்பிடுங்க..!” என்றாள்.
“சரிங்க…சாரி சரி அபி..!” என்றான் புன்னகையாய்.
மீண்டும் உடையை தெரிவு செய்ய திரும்ப…”நான் வேணுமின்னா உதவி செய்யவா…?” என்றாள்.
“ம்ம் எடுங்களேன்…!” என்றான் வருண்.
சிறிது நேரத்தில் அவள் தேர்வு செய்த உடையைப் பார்த்த வருண்… அவளை வியந்து நோக்கினான்.”பரவாயில்லையே அபி….சூப்பர் செலக்சன்…” என்றான்.
“தேங்க்ஸ்…” என்றாள் சிரிப்புடன்.
வருணுடன் அபி பேசி சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த சரண்யாவிற்கு எரிச்சலாய் இருந்தது.இவகிட்ட மட்டும் எல்லாரும் இளிச்சு..இளிச்சு பேசுவாங்க..! என்று குரோதமாய் பார்க்க….இதையறியாத அபி….ரிஷியை எண்ணி மனதில் கனவுகளுடன் நின்றிருந்தாள்.
“என்னங்க …ரிஷி வரவேயில்லை..” என்றார் சித்ரா.
“அவன் வேலை அப்படி சித்ரா….அவனைக் குறைசொல்ல முடியாது…” என்று சுரேஷ்..தன் மகனுக்காய் பரிந்து கொண்டு வர…
“அதானே…! நீங்க ரெண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைங்க தானே..!” என்றார் சித்ரா.
ஒருவழியாய்…வந்த வேலையை முடித்துக் கொண்டு…கோவிந்தன் குடும்பம் கிளம்ப…..அவர்களை அனுப்பியவர்கள்…தாங்களும் கிளம்ப எத்தனிக்க….அப்பொழுது தான் வந்தான் ரிஷி.
“சாரி மாம்..! கொஞ்சம் லேட் ஆகிவிட்டது…!” என்றான்.
“கொஞ்சம் லேட் இல்லை மகனே ரொம்ப லேட்….வந்த வேலை முடிந்து..அவங்க கிளம்பி பத்து நிமிஷம் ஆகிவிட்டது…” என்றார் சித்ரா.
“இட்ஸ் ஓகே…வந்த வேலை மிச்சம்…நீங்க கிளம்புங்க…நான் வரேன்…” என்று திரும்ப செல்ல எத்தனிக்க…
“ரிஷி…உனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லையா…?” என்றான் வருண்.
“டேய்…வருத்தப் படுற அளவுக்கு இதில் என்ன இருக்கு….அதான் நீங்க எல்லாரும் இருந்திங்கல்ல…பிறகென்ன…எனக்கு டியூட்டிக்கு டைம் ஆச்சு பாய்…!” என்றபடி விரைந்தான்.
“என்னங்க இவன் இப்படி சொல்லிட்டு போறான்….சரண்யா மனசிலும் ஆசைகள் இருக்குமில்லையா..?” என்றார் சித்ரா.
“ம்ம்க்கும்..அப்படி ஏதும் இருந்த மாதிரி தெரியலைமா…அவங்களுக்கு சேலை பார்க்கவே நேரம் போதலை..இதில் எங்க இருந்து அண்ணனைப் பற்றி யோசிக்க…” என்று தீபி நீட்டி முழக்க…
“அண்ணியை அப்படியெல்லாம் பேசக் கூடாது தீபி..” என்று சித்ரா அதட்ட…
“சரி தான்…” என்றாள் தீபி.
அடுத்து நடக்க வேண்டிய வேலைகள் மின்னல் வேகத்தில் நடக்க….முப்பது நாட்களும் முப்பது நிமிடங்கள் என்பதைப் போல….விரைவில் ஓடி மறைந்திருந்தது.
இடைப்பட்ட நாட்களில் அபி தான் ரிஷியைக் காண முடியாமல் தவித்துப் போயிருந்தாள்.
திருமணத்திற்கு இரண்டு நாட்களே மீதமிருந்த நிலையில்…ரிஷியின் மனதிலும்…முகத்திலும் சிந்தனை ரேகைகள் ஓடிக் கொண்டே இருந்தது.
அவனின் மூளைக்குள் ஏறி அமர்ந்த குழப்ப வண்டு அவனைக் குடைந்து கொண்டிருந்தது.
திருமணத்திற்கான விடுமுறையில் இருந்தான்.சங்கர் கேசை முடித்தும் ஏதோ அவன் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.போதாததிற்கு புதிதாய் ஒரு விஷயமும் சேர்ந்து கொள்ள…..அவனின் அமைதி கொஞ்சம் கொஞ்சமாய் அவனை விட்டு சென்று கொண்டிருந்தது.
“என்னாச்சு ரிஷி..? ஏன் ஒரு மாதிரி இருக்க…?” என்றார் சித்ரா.
அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா….வீட்டில் சும்மா இருக்க போர் அடிக்குது…அதான்..!” என்றான்.
“நான் பொள்ளாச்சி வரை போயிட்டு வரவா மாம்..!” என்றான்.
அவனை ஆச்சர்யமாய் பார்த்தார் சித்ரா.பின்னே இத்தனை நாட்களில் அவனுக்கு சரண்யாவைப் பார்க்கும் எண்ணமே வந்திருக்கவில்லை. இப்பொழுது திடீரென்று அவன் கேட்டதில் வாயடைத்து போய் நின்றிருந்தார்.
“என்ன ரிஷி….திடீர்ன்னு…அதான் நாளைக்கு அவங்க எல்லாம் கிளம்பி இங்க மண்டபத்துக்கு வந்திருவாங்களே..!” என்றார்.
“மாம்…பிளீஸ்..” என்றான்.
“சரி…சரி….போயிட்டு சீக்கிரமா வந்திடு…நிறைய வேலையிருக்கு ரிஷி…” என்றார்.
“ஓகே மாம்…’ என்றபடி பொள்ளாச்சியை.. நோக்கி பயணித்தான்.
அதற்குள் அவன் வருவதை சித்ரா போன் செய்து கூறியிருக்க….அவனை வரவேற்க தயாராயிருந்தனர் சரண்யா குடும்பத்தினர்.
“அக்கா…மாமா உன்னைப் பார்க்க வருகிறாராம்…இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு…அது வரைக்கும் கூட உன்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை போல…” என்று கிண்டல் செய்ய…
முதன் முறையாக அபியை முறைக்காமல் சிரித்தாள் சரண்யா.அதைக் கண்ட அபிக்கே பெரிய ஆச்சர்யம்.
“என்ன மசமசன்னு நின்னு பேசிட்டு இருக்கீங்க…அபி…வந்து சமையல்ல கூட மாட உதவி செய்…சரண்யா நீ போய் நல்ல புடவையா கட்டிக்கோ..” என்று வள்ளி அதட்ட….இருவரும் அவரவர் வேலையைப் பார்க்க சென்றனர்.
அபியோ தனக்கு உண்டாகப் போகும் அதிர்ச்சியை உணராமல் சந்தோஷமாய் வேலையை செய்து கொண்டிருந்தாள்.
அவள் பாலை ஊற்றி அடுப்பில் வைப்பதற்கும்…ரிஷியின் கார் அங்கு வருவதற்கும் சரியாய் இருந்தது.
ஏனோ காரணமின்றி அபியின் மனம் படபடப்பாய் உணர்ந்தது.
“மாப்பிள்ளை வந்துட்டார்…” என்று கோவிந்தன் குரல் கொடுக்க….வேகமாய் வந்தாள் சரண்யா.
“வாங்க…!” என்று சரண்யா அழைக்க…”வாங்க தம்பி…!” என்றார் வள்ளி.
சரண்யாவைப் பார்த்துக் கொண்டே அமர்ந்தான் ரிஷி.
சமையலறைக்குள் சென்ற வள்ளி….மாப்பிள்ளை வந்துட்டார்…அவருக்கு காபி கொண்டு போய் கொடு அபி…நான் சீக்கிரம் சமைச்சு முடிக்கணும்…” என்று சமையலில் ஆழ்ந்தார்.
கோவிந்தன்,சரண்யா,ரிஷி என மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க….
ஸ்ட்ராங்கான காபியை தயாரித்த அபி…அதை எடுத்துக் கொண்டு ஹாலை நோக்கி முன்னேறினாள்.
அப்பொழுதுதான் அபியின் காதில் விழுந்தது ரிஷியின் சிரிப்பு.”என்ன ரிஷி குரல் மாதிரி இருக்கே…!” என்று ஹாலைப் பார்க்க….விழிகள் தெறித்து விடும் அளவிற்கு அதிர்ந்தாள்.
கால்கள் அந்த இடத்தை விட்டு நகருவேனா என்று அடம் பிடிக்க…. மீண்டும் உள்ளேயே சென்றாள்.
“என்ன அபி..காபியைக் குடுக்கலையா…?” என்றார்.
“பாட்டி….அது வந்து….மாமா அங்க இல்லையே…!” என்றாள்.
“இல்லையா…?” என்று ஹாலை எட்டிப் பார்த்த வள்ளி அபியை முறைத்தார்.
“கண்ணை எங்க பிடணியில் வச்சிருக்கியா…? அங்க தான உட்கார்ந்திருக்கிறார்…!” என்றார் வள்ளி.
அபிக்கு பூமியே இரண்டாய் பிளந்து…தான் அதில் விழுவது போல் உணர்ந்தாள்.
“வ…வருண் மா…மாமா…” என்றாள் திக்கித் திணறி.
“மாப்பிள்ளை மட்டும் தான் வந்திருக்கார்….அவர் தம்பியெல்லாம் வரலை…” என்று வள்ளி சொல்லி முடிப்பதற்கும்…அபியின் கையில் இருந்த காபி டம்ளர் கீழே விழுந்து சிதருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
சிலையாய் நின்றிருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் விடாமல் வழிய…பிரம்மை பிடித்தவளாய் நின்றிருந்தாள்.
ஏங்குகிறேன்…நீ என் பக்கம் இல்லையே..!
உருகுகிறேன் உந்தன் ஏக்கம் தொல்லையே…!
ஒரு நாள் உன்னை நான் நினைத்தேன்..சிரித்தேன்…
மறுநாள் உன்னை நான் நினைத்தேன்…அழுதேன்…