அத்தியாயம் 11:
இளம் மஞ்சள் நிற சுடிதாரும்….ஒற்றைப் பின்னலில் மஞ்சள் ரோஜாவும் சூடியிருந்த அபிராமியை….பின்னால் இருந்து அணைத்தான் ரிஷி.
திடீரென்ற அவனின் அணைப்பில் அவள் திகைத்து விழிக்கும் முன்னர்….அவளின் கன்னத்தில் நச்சென்று இதழ் பதித்தான் ரிஷி.
“உங்களை…..” என்று நாணப் புன்னகையுடன் அபி அவனை விரட்ட…அவளிடம் சிக்காமல் போக்குக் காட்டியவன்….சில நிமிடங்களில் அவளின் கைகளை சுண்டி….தன் மேல் இழுத்துப் போட்டுக் கொண்டான்.
அவனின் முகத்தின் அருகில் தன் முகம் இருக்க….அபி அவஸ்தையுடன் நெளிந்தாள்.
“விடுங்க ரிஷி…!” என்று சிணுங்க….
“விடுவதற்காகவா இவ்வளவு கஷ்ட்டப்பட்டு என் தேவதையை கண்டு பிடுச்சிருக்கேன்….?” என்று ரிஷி காதல் மொழி பேச…
அவன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவனிடமிருந்து விலகினால் அபி.
“ஹேய் அபி…” என்று அவளின் கைகளைப் பிடித்தவன்….
“என் வாழ்க்கையில்…கடந்த காலம் நீயின்றி வறண்டு இருந்தது.என் எதிர்காலமாவது வசந்தமா இருக்குமா….? இது வரை எப்படியோ….இனி வரும் நிமிடங்கள் ஒவ்வொன்றிலும் உன் அருகாமை….உன் காதல் எனக்கு வேண்டும்…தருவாயா கண்மணி…” என்று அவள் முன் மண்டியிட்டு கேட்க…
அவனின் கைகளைப் பற்றியவாறு…அவன் அருகில் மண்டியிட்டவள்….. அவனின் மலர்ந்த முகத்தைப் பார்த்தவாறே… சம்மதமாய் தலையாட்டப் போக…
“ஏய் அபிராமி…அபிராமி….”விடிஞ்சு எவ்வளவு நேரம் ஆகுது….பொட்ட பிள்ளைக்கு இன்னமும் என்ன தூக்கம்….” என்ற அமிர்தவள்ளியின் குரலில்…சட்டென்று கலைந்தால் அபி.
கண் முழித்தவளுக்கு….அப்பொழுது தான் சுற்றுப் புறம் உரைக்க…. ”கனவா…?” என்று தன்னைத் தானே தட்டிக் கொண்டாள்.
“அபி..வர வர உனக்கு பைத்தியம் முத்திப் போய்விட்டது…” என்று மனதிற்குள் எண்ணியவள்….கண்ட கனவை மீண்டும் நினைவிற்கு கொண்டு வர…அவளறியாமல் அவள் முகம் செவ்வானமாய் சிவந்தது.
“டேய்.. வர வர நீ ரொம்ப என்னை இம்சை பண்ற…உனக்கு இருக்கு…” என்றபடி எழுந்து சென்றாள்.
அவளின் நடவடிக்கைகளைப் பார்த்த சரண்யா….”எப்ப பார்த்தாலும் லூசு மாதிரி திரியறதே இவளுக்கு வேலையா போயிடுச்சு…!” என்றபடி பாட்டியிடம் சென்றாள்.
“பாட்டி எனக்கென்னமோ இதில் இப்போ விருப்பமே இல்லை.எனக்கென்ன திடீர்ன்னு கல்யாணம்…?” என்றாள்.
“பொண்ணு தான் பார்க்க வர்றாங்க….பொண்ணுன்னு இருந்தா நாலு பேர் பார்க்க வரத்தான் செய்வாங்க..!சும்மா தொணத் தொணன்னு பேசாம…போய் கிளம்புற வழியைப் பார்…” என்றார் பாட்டி.
அதற்கு மேல் தான் என்ன சொன்னாலும் பாட்டியிடம் எடுபடாது என்று சரண்யாவிற்கு நன்றாகத் தெரியும்.அதனால் மறுப்பின்றி கிளம்ப சென்றாள்.
“ஏய் அபி…நீ இன்னைக்கு தாவணி எல்லாம் போட வேண்டாம்…பட்டுப் பாவாடை இருக்குள்ள…அதைப் போடு…!” என்றார் பாட்டி.
“பாட்டி…அதைப் போட்டா சின்ன பிள்ளை மாதிரி இருக்கும்…!” என்று அபி சொல்ல….
“நான் சொன்னதை செய்…!” என்றார் கட்டளையாய்.
அதற்கு மேல் மறுப்பு சொல்ல அபியால் முடியாது என்பதால்….சரி என்று சென்றுவிட்டாள்.
அவர்களை நினைத்து பெருமூச்சு விட்டார் பாட்டி.அவருக்கு நன்றாகத் தெரியும்….சரண்யாவை விட அபி அழகாய்த் தெரிவாள் என்று.என்னதான் காலங்கள் மாறியிருந்தாலும்…..அவரின் மனதில் இருந்த பழமை குணங்கள் மாறாமல் அவ்வப்போது தலை தூக்கிக்கொண்டிருந்தது.
எங்கே வருபவர்கள்…சரண்யாவைப் வேண்டாம் என்று சொல்லி….அபியைக் கேட்டு விடுவார்களோ….என்ற பயம் தான் அதற்கு முக்கிய காரணம்.
பாசிபயறு வண்ண பச்சை நிறத்தில்…மெல்லிய சரிகையிட்ட பட்டுப் புடவை கட்டி….மிக அதிகமான ஒப்பனையிலே தயாராகி இருந்தாள் சரண்யா.
ஆனால் அபியோ இளம் மஞ்சள் நிற சுடிதாரை அணிந்து வர….அவளை முறைத்தார் பாட்டி.
“நான் என்ன சொன்னேன்…நீ என்ன பண்ணியிருக்க…?” என்றார்.
“அது வந்து பாட்டி…பட்டுப் பாவடை கொஞ்சம் பத்தலை…அதான்…” என்று தன்னநெஞ்சு அறிய பொய்யுரைத்தாள் அபி.
வேறு வழியின்றி வள்ளியும் விட்டு விட….”அப்பாடா…!” என்று நெஞ்சில் கை வைத்தவளின் மனம் மகிழ்ச்சியாய் இருந்தது.
ஏனோ காலையில் இருந்து அவள் மனம் காரணமின்றி சந்தோஷமாய் இருந்தது.மஞ்சள் நிற சுடிதாரையே அணிய வேண்டும் என்று விருப்பம் கொண்டவள்….பாட்டியிடம் ஒரு சின்ன பொய்யின் மூலம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டாள்.
“தாத்தா…” என்று ஓடி சென்று அவரைக் கட்டிக் கொள்ள…
“அடடே அபிக் குட்டிக்கு இந்த டிரஸ் நல்லாருக்கே..!” என்று பேத்தியின் கன்னம் வழிக்க…
“நிஜமாவா தாத்தா…நல்லாயிருக்கா…நான் நல்லாயிருக்கேனா…?” என்று சுத்தி சுத்திக் காட்டினாள்.
“உனக்கென்னடா….? மகாலட்சுமி மாதிரி இருக்க….” என்ற தாத்தாவின் சொல்லில்….அவளின் மகிழ்ச்சி இரட்டிப்பாய் மாறியது.
“இன்னும் சின்னப் புள்ளையாவே இருக்கு….” என்று சிரித்து விட்டு கோவிந்தன் செல்ல…
சிறகின்றி வானில் பறந்தாள் அபிராமி.பாட்டியின் கண்டிப்பு நினைவுக்கு வரவில்லை.தந்தையும் ஒதுக்கம் நினைவுக்கு வரவில்லை.சுற்றியிருந்த சுற்றுப்புறம் நினைவுக்கு வரவில்லை.
இதெல்லாம் சரியாய் வருமா…? அவளை அவனுக்குப் பிடிக்குமா என்பது கூட நினைவுக்கு வரவில்லை.அவள் நினைவில் நிறைந்து இருந்தது ரிஷி..ரிஷி..ரிஷி.
அவன் மட்டுமே தன் வாழ்க்கை என்று முழுமையாய் நம்பினாள்.இது வயது கோளாறில் ஏற்பட்ட ஒன்றா என்றால் கண்டிப்பாக இல்லை என்று சொல்லியது அவள் மனம்.
அபி சிறுவயதில் இருந்து ஆசைப் பட்ட விஷயங்கள் மிகக் குறைவு.சிறு வயதில் தன்னுடைய நியாயமான ஆசைகள் கூட அவளுக்கு நிறைவேறியதில்லை.
என்னதான் பார்த்து பார்த்து வளர்த்தாலும் பெற்ற தாய் இருந்து வளர்க்கும் வளர்ப்பைப் போல வருமா…?
தன் வாழ்வின் முதலும்…கடைசியுமான ஆசையாய் ரிஷியை நினைத்தாள்.அவன் மட்டுமே போதும்..வேறு எதுவும் தேவையில்லை என்ற அளவிற்கு.
வெளியில் கேட்ட காரின் ஹாரன் சத்தத்தில் கலைந்தால் அபி.
“அக்கா…மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க போல….நான் போய் பார்க்கிறேன்..!” என்று சரண்யாவிடம் சொல்லி விட்டு நகரப் போக…
“ஏய் நில்லு…நீ ஒன்னும் போகத் தேவையில்லை.என் கூடவே இரு..!” என்று தங்கையை அடக்கினாள் சரண்யா.
“வாங்க…வாங்க…!” என்று கோவிந்தனும்,கணபதியும் வரவேற்க….சிரித்த முகமாய் உள்ளே நுழைந்தனர்…..சித்ராவும்,சுரேஷும்.அவர்களைத் தொடர்ந்து வருணும் தீபிகாவும் உள்ளே வந்தனர்.
அமிர்தவள்ளிக்கும்,கோவிந்தனுக்கும் அவர்களைப் பார்த்த உடன் பிடித்துப் போக…
சம்பிரதாய பேச்சு வார்த்தைகளுக்குப் பின்….
“மாப்பிள்ளைப் பையன் வரவில்லையா…?” என்று வள்ளி கேட்க…
“முக்கியமான கேஸ் விஷயமா போயிருக்கான்..!நீங்க போங்க…. வந்திடுறேன்னு சொன்னான்..!” என்று சித்ரா விளக்கமளிக்க…
“அவர் வேலையில் இதெல்லாம் சகஜம் தானே..!” என்று கோவிந்தன் சொல்ல….
“பொண்ணை கூட்டிட்டு வாங்க…எனக்குப் பார்க்கணும்…” என்று தீபி முந்திரிக் கொட்டையாய் சொல்ல….
சின்ன சிரிப்புடன் சரண்யாவை அழைத்தார் வள்ளி.
அக்காவைத் தொடர்ந்து அபியும் பின்னால் வர….
“வாம்மா…வந்து உட்கார்…” என்று சித்ரா தன்னருகில் அழைக்க…. வள்ளியின் பார்வையைப் பொருட்படுத்தாமல் அவரின் அருகில் சென்று அமர்ந்தாள் சரண்யா.
அபியோ….அக்காவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையாக வருணைப் பார்த்தாள்.”பரவாயில்லை…அக்காவுக்கு ஏற்ற மாப்பிள்ளை தான்…” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டிருக்க…
சித்ராவின் பார்வை அபிராமியை வருடி சென்றது.
“இது என்னோட சின்ன பேத்தி அபிராமி..” என்று வள்ளி சொல்ல…
“ரொம்ப துருதுருன்னு இருக்காம்மா…” என்றார் சித்ரா.
தாயில்லாப் பிள்ளைங்க என்பதால் கொஞ்சம் செல்லம்….என்று கோவிந்தன் அபிக்கு ஆதரவாய் வர…
“நான் செல்லமா..?” என்று தன் தாத்தாவை முறைத்தாள் அபி.
“அபி…உள்ள இருக்குற இனிப்பை எடுத்துட்டு வாம்மா…!” என்று வள்ளி சொல்ல…”சரிங்க பாட்டி…!” என்றபடி சென்றாள் அபி.
சரண்யாவின் கண்கள் மாப்பிள்ளையைத் தேட…அவளின் பார்வை புரிந்தவராய் சித்ரா…
“வரேன்னு சொன்னான் சரண்யா…. இன்னமும் காணோம்….இதில் அவன் போட்டோ இருக்கு….” என்று ஒரு கவரை அவளிடம் நீட்டினார்.
அதை வாங்கி சரண்யா கையில் வைப்பதற்கும்…அபி சமையலறையில் இருந்து வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது.
வந்தவளின் கண்களில்…சித்ராவிற்கு ஒரு புறம் வருணும்….மறு புறம் சரண்யாவும் இருக்க…அவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து… ”சூப்பர்..” என்று சொல்லிக் கொண்டாள்.
இனிப்பு நிறைந்த தட்டை அனைவருக்கும் வழங்க…
“அபி அக்காவைக் கூட்டிட்டு உள்ள போம்மா..!” என்றார் வள்ளிப் பாட்டி.
“சரிங்க பாட்டி…!” என்றபடி சரண்யாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அபி.
“எங்களுக்கு பொண்ணை பிடிச்சுருக்கு.எங்க பையனும்…போட்டோவிலேயே பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்.போன வேலை முடியவில்லைன்னு நினைக்கிறேன்…அதான் வரலை போல…நீங்க ஒரு நல்ல நாளாப் பார்த்து சொன்னா அன்னைக்கே நிச்சயம் பண்ணிடலாம். எங்க குடும்பத்தைப் பற்றியும்….பையனைப் பத்தியும் நீங்க இன்னொரு முறை விசாரிச்சு தெரிஞ்சுக்கோங்க..!” என்றார் சுரேஷ்.
“ஐயோ என்ன சம்பந்தி நீங்க…! விசாரிச்ச வரைக்கும் போதும்.எங்களுக்கு இதுவே மன திருப்தியா இருக்கு…! நல்ல நாலாப் பார்த்து நிச்சயம் பண்ணிடலாம்…!” என்றனர் கணபதியும்,கோவிந்தனும்.
“அப்ப நாங்க போயிட்டு போன் பண்றோம் சம்பந்தி..!” என்று அனைவரும் விடை பெற…..
ஏனோ தீபிகாவிற்கு சரண்யாவை விட அபிராமியையே பிடித்திருந்தது. வருணுக்கும் அப்படியே.ஆனால் அண்ணனுக்கு பிடித்திருக்கும் போது…அதில் தாங்கள் கருத்து சொல்ல எதுவுமில்லை என்று இருவரும் வெளியில் சொல்லவில்லை.
ஒரு வேளை சொல்லியிருந்தால்…..? நடப்பது அனைத்தும் அவர்கள் கையில் இல்லை என்பதற்கு அவர்களே சாட்சியாகிப் போனார்கள்..!
சரண்யாவுடன் அறைக்குள் சென்ற அபி….”என்னக்கா கவர் இது…?” என்று அவள் கையில் இருந்ததைக் காட்டிக் கேட்க…
“பச்…மாப்பிள்ளை போட்டோ…!” என்றாள் அசிரத்தையாய்.
“ஹோ…தினமும் பார்த்து பார்த்து டூயட் பாட…போட்டோவையும் வாங்கி வச்சிருக்கியா…” என்று சரண்யாவைப் பார்த்து கண்ணடிக்க…
“கொஞ்ச நேரம் சும்மயிருக்கியா..?” என்று சரண்யா எரிந்து விழ…
“எதுக்குக்கா இவ்வளவு கோபம்….உனக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கலையா…? செம்ம ஹேண்ட்சம்மா தானே இருந்தாரு….நானா இருந்தா உடனே சரின்னு சொல்லியிருப்பேன்…” என்று விளையாட்டாய் சொல்ல..அவளை முறைத்தாள் சரண்யா.
“சரி கவரைப் பிரிச்சு போட்டோவை காட்டுக்கா…மாமா எப்படி போஸ் குடுத்திருக்கார்ன்னு பார்ப்போம்…” என்று ஒரு ஆவலில் அபி வினவ…
சரண்யா எரிச்சலுடன் அமர்ந்திருந்தாள்.
சரண்யாவின் கையில் இருந்த கவர அபி பிடுங்க முயற்சிக்க…. வெடுக்கென்று கையைத் தட்டி விட்டாள் சரண்யா.
“அறிவில்லை உனக்கு…! ஒரு தடவை சொன்னா புரியாது…!என்னை விட கல்யாணத்தில் நீ ரொம்ப ஆர்வமா இருக்க போல…” என்று குத்திப் பேச…
“அக்கா…..” என்று அதிர்ந்தாள்.
“உனக்கு பிடிச்சிருக்குன்னு…என் முன்னாடியே சொல்ற….விட்டா கல்யாணமே பண்ணிப்ப போல இருக்கே..!” என்று நக்கலாய் வினவ…
“ரிஷியின் இடத்தில் இன்னொருவனா…?” என்று நினைத்தவளுக்கு மனம் அதிர்ந்தது.
“என் அக்காவுக்கு வரப் போற கணவர் அப்படிங்கிற உரிமையில் தான் பேசினேன் க்கா….தப்பா இருந்தா சாரி…” என்றபடி அந்த இடத்தை காலி செய்தாள்.
ஏனோ துக்கம் தொண்டையை அடைத்தது.அக்கா,தங்கைகளுக்கு இடையேயான ஒரு இயல்பான கலந்துரையாடல்.இதில் கூட அவளால் ஒன்ற முடியவில்லை. தான் கேலியாக பேசியதை இவ்வளவு சீரியசாய் சரண்யா எடுத்துக் கொள்வாள் என்று நினைத்தும் பார்க்கவில்லை அபி.
“எப்படியோ..அவள் நன்றாய் இருந்தால் சரி..!” என்று நினைத்தவள்…. நடந்தவைகளை ஓரம் கட்டிவிட்டு….தன் மனதிற்கு இனியவனின் நினைவுகளில் புதைந்தாள் அபி.
வருண் தான் மாப்பிள்ளை என்று நினைத்தது அவள் தவறா…? வர வேண்டிய நேரத்தில் வராமல் விட்டது ரிஷியின் தவறா..?
இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்பினான் ரிஷி.வந்தவன் குளித்து விட்டு உடை மாற்றி சாப்பிட அமர…..அவனுக்கு சாப்பாடை எடுத்து வைத்தபடி பேச்சைத் தொடங்கினார் சித்ரா.
“என்ன ரிஷி இப்படிப் பண்ணிட்ட..நீ வருவேன்னு நாங்க எவ்வளவு நேரம் வெயிட் பண்ணோம் தெரியுமா…?” என்றார் குறையாய்.
“அம்மா…பிளீஸ்…நீங்க நினைக்கிற மாதிரியில்லை.நானும் முயற்சி பண்ணேன்.பட் முடியலை.இந்த கேசை முடிக்காம என்னால் முடியாதும்மா…!” என்றான்.
“நிச்சயதார்த்தம் அன்னைக்காவது வருவியா….இல்லை….” என்று இழுக்க…
“அம்மா..!” என்று முழித்தான் ரிஷி.பிறகு சிரித்தவனாய்…
“அன்னைக்கும் தெரியலைமா….ஆனா டைம்க்கு வந்திட்டு உடனே கிளம்பிடுவேன்….சத்தியமா லீவ் கிடைக்காது..” என்று அடித்துப் பேசிய மகனைக் கண்ட சித்ராவிற்கு எரிச்சலாய் வந்தது.
சுரேஷ் அருகில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்க…
“இப்ப எதுக்கு சிரிக்கிறிங்க…? இதுக்கு தான் தலைப்பாடா அடிச்சுகிட்டேன்…வீட்டுக்கு ஒரு போலீசே போதும்ன்னு….யார் கேட்டிங்க…?
ஒரு நல்லது கெட்டதுக்கு போக முடியுதா…ஒரு நாள் ரெஸ்ட்ன்னு வீட்ல இருக்க முடியுதா…..குடும்பத்தோட கொஞ்சமாவது நேரம் செலவழிக்க முடியுதா….?” என்று தன் ஆதங்கத்தைக் கொட்ட..
தங்களின் இத்தனை வருட திருமண வாழ்க்கையில்…சித்ராவின் தியாகங்கள் ஏராளம் என்பதால் அமைதி காத்தார் சுரேஷ்.
சித்ராவின் சின்ன சின்ன ஆசைகளைக் கூட அவரால் நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது.தன் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல்… டியூட்டி…டியூட்டி.. என்று அவர் ஓட…வீட்டின் மற்ற அனைத்துப் பொறுப்புகளையும் கையில் எடுத்துக் கொண்டார் சித்ரா.
ஆனால் ஒரு நாள் கூட அதை மனக் குறையாக சித்ரா சொன்னதில்லை. இன்று பிள்ளை என்று வரும் போது…அவரின் குமுறல்கள் ஆதங்கமாய் வெளிவர… அமைதியாய்க் கேட்டுக் கொண்டார் சுரேஷ்.
“மை டியர் மம்மி….இப்போ என்ன…? என் கல்யாணத்துக்கு நிறைய லீவ் எடுக்கணும்ன்னா….கொஞ்ச நாள் கஷ்ட்டப்பட்டு தான் ஆகணும்…இந்த கேஸ் முடிஞ்சா அப்பறம் நான் பிரி தான்.நீங்க போதும் போதுமன்ற அளவுக்கு…உங்க கூட இருக்கேன் சரியா…”என்று அவரை அணைத்துக் கொண்டு சொல்ல…
“சரி சரி…” என்று சாமாதானம் ஆனார் சித்ரா.
“அப்பா என் பங்கு சமாதானத்தை நான் சொல்லிட்டேன்..இனி உங்க பங்கு தான் பாக்கி…நீங்களும் சொல்லிடுங்க..!” என்று கண்ணடித்தபடி சென்றான் ரிஷி.
“சித்ரா…” என்று சுரேஷ் ஆரம்பிக்க….
“ஐயோ போதும்ங்க…நான் ஏதோ அவன் வரலையேன்னு ஒரு கோவத்துல அப்படி சொல்லிட்டேன்…மத்தபடி உங்க டியூட்டி பத்தி எனக்குத் தெரியாதா…?” என்று சொல்ல….
மனைவியின் புரிதலை எண்ணி மனதிற்குள் மகிழ்ந்தார் சுரேஷ்.சித்ராவின் புரிதல் இல்லையென்றால் தன் வாழ்வு நரகமாயிருக்கும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.
இப்பொழுது ஓய்வு பெற்ற பிறகு தான் மனைவியுடன் அவரால் நேரம் செலவழிக்க முடிகிறது.இந்த ஓய்வைத்தான் அவரும் விரும்பினார்.
அறைக்கு சென்ற ரிஷியோ….இன்று பார்க்க போன பெண்…தனக்கு நிச்சயதார்த்தம் என்பதையெல்லாம் பொருட்டாக கூட எண்ணாமல் முக்கியமான பைலில் ஆழ்ந்திருந்தான்.
இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில்….
தனது நோட்டில்….ரிஷி வர்மா…என்ற பெயரை எழுதி எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அபி.
“ஹேய் அபி…!” என்றாள் லட்சுமி.
அவள் வேறு உலகில் இருக்க,…”அபி..” என்று பல்லைக் கடித்தாள் லட்சுமி.
“என்னடி..” என்றாள் பெயரில் இருந்து கண்ணை எடுக்காமல்.
“நமக்கு நாட்டு நலப்பணி திட்ட முகாம் பத்து நாளைக்கு போட்ருக்காங்க…!” என்றாள்.
“நான் வரலை…!” என்றாள் அசட்டையாக.
“அந்த பத்து நாள்ல…ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு விருந்தினர்…. ஆறாவது நாள் ரிஷி சார் வரார்…” என்று லட்சுமி அவளைப் பார்த்துக் கொண்டு சொல்ல…
ஆயிரம் விளக்குகளை ஒரே நேரத்தில் போட்டால் எரியும் பிரகாசத்துடன் நிமிர்ந்தாள் அபி.
“நிஜமாவாடி…!” என்றாள் நம்ப முடியாமல்.
“உறுதிப் படுத்தப்பட்ட தகவல்….” என்றாள் லட்சுமி.
“அப்ப நாம கண்டிப்பா போறோம்..!” என்றாள் வேகமாய்.
“இப்ப தான் வரலைன்னு சொன்ன…”
“அது முன்ன…இது பின்ன…” என்று தலையாட்டி சிரிக்க…
“சரி தான்…இது எங்க போய் முடியும்ன்னு தோணலை…எனக்கென்னமோ உங்க பட்டி இதுக்கெல்லாம் சரி சொல்லுவாங்கன்னு தோணலை…பத்து நாள் எப்படி விடுவாங்க..?” என்று லட்சுமி கவலையாய்க் கேட்க…
“தாத்தா இருக்க பயமேன்..!” என்று சொல்லி அபி சிரிக்க…
“சரிதான்..” என்றபடி தோழியின் சிரிப்பில் கலந்து கொண்டாள் லட்சுமி.
அங்கு சரண்யாவோ…ரிஷியின் போட்டோவைப் பார்த்ததில் இருந்து….அதை கீழே கூட வைக்காமல் தன்னுடன் வைத்துக் கொண்டே திரிந்தாள்.
முதலில் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னவளுக்கு…ரிஷியை போட்டோவில் பார்த்ததிற்கு பிறகு…..அந்த எண்ணத்தை மாற்றினாள்.
சரண்யா போட்டோவிலும்…..அபிராமி நினைவிலும் அவனை வைத்துக் கொண்டு…..திரிந்தனர்.
தினம்தோறும் மனதோடு….பலநூறு…கதை பேசி….
அவன் மீது…உருவான…உயிர்காதல்..எனைத் தாலாட்ட….
தொலை தூரம் கிடையாது…இருந்தானே நிழல் போல…
மலர்ப் பாதம் நடமாட…கிடைத்தானே நிலம் போல….