அன்புவும் சந்திரனும் ஒரே துருவங்கள் என்பதால் சற்று விலகியே இருந்தனர். அவசியம் என்றால் பேசிக் கொள்பவர்கள் தான் ஆனால் பேசிக் கொள்வதற்கான அவசியம் வரவேயில்லை.
கயல், ஸ்வேதா, குழந்தைகள் இரு வீட்டிற்குமான இணைப்புகளாய் இருந்தனர். கயல் ஸ்வேதாவிற்கு இடையேயான புரிதலைக் கண்ட, ருக்மணியும், சிவகாமியும் வியந்தனர். முன்பே தாங்களும் இவர்களைப் போன்றிருந்தால் குடும்பமானது இரண்டாகப் பிரிந்திருக்காதே என்றெண்ணினர்.
குழந்தைகள் தவறு செய்யும் போதும் அன்பு, சந்திரன் இருவரில் யாரேனும் ஒருவர் கண்டித்தால் மற்றவர்கள் அழுதவாறு வரும் குழந்தைகளை அணைத்துக் கொள்வர்.
பள்ளியின் முழு நிர்வாகத்தையும் கயல் தான் முழு பொறுப்புடன் கவனித்துக் கொண்டாள். அன்பு சுகர் மில், ரைஸ் மில், டிராவல்ஸ், செங்கல் சூளை எனத் தொழில்களைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
பூஜை முடிந்து வீட்டில் வேலை இருப்பதாக கூறி சிவகாமியும் சென்றிருந்தார். நினைவு மண்டபத்தில் விளக்கேற்றி வைத்துவிட்டு மனோரஞ்சிதத்தின் புகைப்படத்தை ஹாலில் மாட்டிக் கொண்டிருந்தாள் கயல்.
வாசல் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்த அன்பு கயலைப் பார்த்தான். எக்கிப் புகைப்படத்தை மாட்டிக் கொண்டிருந்தால் இளம் சிவப்பு வண்ணப் புடவை இறங்க மஞ்சள் வண்ணத்தில் இடுப்பு மடிப்புகள் அவனைக் கவர்ந்தது.
அருகே வந்து கிச்சுக்கிச்சு மூட்ட, துள்ளிக் குதித்தவளை கைகளில் ஏந்திக் கொண்டு அறைக்குள் சென்றான்.
“என்ன மாமா…” எனச் சிணுங்க, “இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க செல்லம்மா!” என நெற்றியில் முத்தமிட்டான்.
“பொய் சொல்லாதீங்க மாமா?” என அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு நெஞ்சில் சாய்ந்தாள். என்றாவது கூறினால் உண்மை என்று நம்புவாள் அவனோ தினமும் கூறினால் எவ்வாறு நம்புவது?
கட்டிலில் இட்டு அவள் மேல் சாய்ந்தவன், உச்சியிலிருந்து முத்தமிட்டு கழுத்து வளைவில் முகம் புதைத்தான். முன்பை விட தற்போது வைத்திருந்த பெரிய மீசை குத்தி கூச்சமூட்ட முகம் சிவந்தாள். “பார்த்தியா முகம் கூட சிவக்குது, நான் சொன்னது தான் உண்மை” என்றவன் இடையலுத்தி இறுக அணைத்தான்.
அவள் வாசத்திலே கிறங்குபவன் அவள் அழகில் மொத்தமாக மயங்கினான். அந்த மயக்கத்தை அவளுக்கும் ஊட்ட, அவனை முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள்.
அவள் அணைப்பின் அழுத்தம் கூட்ட, அவன் வேகம் கூட்டினான். அவள் முத்தத்தின் எண்ணிக்கை கூட்ட, அவன் மோகம் கூட்டினான். அவள் கொஞ்சும் மொழியில் போதையைக் கூட்ட, அவன் உறவின் இறுக்கத்தைக் கூட்டினான்.
அலுக்காது, சலிக்காது ஒவ்வொரு நாளும் புதுமையாய் தோன்றும் முடியாத உறவைக் காட்டும் காதலில் கரைந்திருந்தனர்.
மாலை காபி கப்போடு வந்து அன்புவின் அருகே ஊஞ்சலில் அமர்ந்த கயலை இழுத்து இடது மார்பில் சாய்த்துக் கொண்டான். நிமிர்ந்து பார்த்தவள் கண்ணில் காலையில் மாட்டிய புகைப்படம் பட்டது.
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா மாமா, வசந்தா அத்தை கூட என்ன கயலு தான் கூப்பிடுவாங்க ஆனா உங்க அம்மா என் சின்ன வயசுல இருந்தே மருமகளேன்னு தான் கூப்பிடுவாங்க. எனக்கு அப்போ எல்லாம் அர்த்தம் கூட தெரியாது.
எனக்கு சடங்கு நடந்த போது அத்தை வந்து என் கழுத்துல ஒரு தங்கச் சங்கிலிய போட்டு, அழகா இருக்கடி, வசந்தா மட்டும் விட்டு கொடுத்தா இப்பவே உன்ன என் வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு போயிடுவேன்னு எவ்வளவு ஆசையா சொன்னாங்க தெரியுமா?
அத்தை இறந்த அப்பறம் தினமும் உங்கள தான் நினைச்சிப்பேன். எனக்கு காய்ச்சல் வந்தா எங்க அம்மா என்ன எப்படி பார்த்துக்கும், உங்களுக்கு முடியலைனா யாரு பார்த்துப்பான்னு நினைச்சிக்கிட்டே இருப்பேன்” எனக் கூறி முடிக்க, அவள் முகத்தைக் கையில் ஏந்தி விழிகளைப் பார்த்தான்.
அதுவரை விலகிச் சென்றவள் அதன் பின் தான் என் மேல் காதல் கொண்டாளோ என்ற கேள்விகளுக்குப் பதிலை அவள் விழிகளுக்குள் தேடினான். எல்லைக்குள் அடங்கா எல்லையில்லா காதலை அவள் விழி மொழிந்தது. காதலை மொழியும் அந்த விழியின் மொழியை அவன் மட்டுமே அறிவான்.
காதலைக் கூறும் அன்றும் அவள் கண்களில் இதை கண்டதாலே பொய் என்று சிறிதும் எண்ணவில்லை, அவள் கூறியதும் பொய்யல்லவே!
அவள் மேல் அவன் கொண்ட காதல்ல அவன் மேல் அவள் கொண்ட காதல் தான் அவனின் இயக்க சக்தி.
செல்வா பூங்கோதையின் காதல் வாழ்க்கை மேலும் இனிதாக்க அர்ஜுன் என்ற மகன் பிறந்தான். இராஜமணிக்கத்தின் வீட்டில் இளவரசியாய் இருந்தவள், செல்வாவின் வீட்டில் மகாராணியாய் இருந்தாள்.
இராஜமணிக்கம் எப்போதும் போல் குழந்தை பிறந்திருந்த சமயம் ஒருமுறை மன்னிப்பு வேண்டி நிற்க, செல்வா மிகுந்த பரிதாபம் கொண்டு அவருக்கு பரிவாய் பேசினான்.
“மன்னிப்பா, மன்னிக்க நான் யாரு? என்னால அவரை ஏத்துக்க முடியலைன்னு தான் நான் சொல்லுறேன்”
“நானும் தானே தப்பு பண்ணேன்”
“ஆமா நீங்க பண்ணது அறியாமைல பண்ண தப்பு தான், ஆனா அவரு அறிஞ்சே பண்ண பாவம்! அன்பு மாமாவை கொன்னு உங்கள ஜெயில்ல தள்ள நினைச்சாரே இப்போ அவரு ஜெயிலுக்கு போகட்டும். அவரு பண்ண பாவத்தோட நிழல் என் பிள்ளை மேலையோ, என் குடும்பத்து மேலையோ பட வேண்டாம்” என அத்திரமுடன் கத்தினாள்.
செல்வா பேசுவதற்கு வார்த்தை மறந்து நிற்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த இராஜமணிக்கம் தான் செய்த பாவத்தின் வீரியம் எவ்வளவு என்பதை உணர்ந்தார்.
அதன் பின்னும் வழக்கை இழுக்காமல் அவரே தன் தவறுகளை ஏறுக் கொண்டு ஐந்து ஆண்டுகள் சிறை சென்றார். கொள்ளையடித்ததை விட இருமடங்கிற்கும் மேலான தொகையை அபதாரமாகவும் கட்டி இருந்தார். தண்டனை பெற்று தன் பாவங்களைக் கரைத்து வந்தால் மகள் ஏற்றுக் கொள்வாளா என்ற எண்ணத்திலிருந்தார்.
பூங்கோதையின் அன்னை ரெங்கநாயகி ஊர் பழிச்சொல்லைத் தாங்க இயலாது, தன் தம்பியின் வீடான பிறந்த வீட்டிற்குச் சென்று விட்டார்.
செல்வா பால் பண்ணை, கோழிப்பண்ணை எனப் பண்ணை தொழில்களைக் கவனித்துக் கொண்டான். வெவ்வேறு தொழில்களை கவனித்துக் கொண்டதால் அன்பு,சந்திரன்,செல்வா என மூவருக்கும் தொழில் போட்டி என்பதும் இல்லை.
கோடை விடுமுறை தொடங்கி இருந்த சமயம் என்பதால் ஜெயந்தி பிள்ளைகளுடன் ஊரிலிருந்து வந்திருந்தாள். பெரிய வீட்டில் கயல் தங்கள் அறையில் துணிகளை ஒதுங்கி வைத்துக் கொண்டிருக்க, அன்பு குளியலறையில் முகம் கழுவிக்கொண்டு இருந்தான்.
கயலை அழைத்தவாறு ஆதி உள்ளே ஓடிவர, அவனைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டு அமர்ந்தாள்.
“ஜெயந்தி ஆன்ட்டி வந்து இருக்காங்க, அம்மா அவங்க கூட ஒரு லிட்டில் பிரன்சஸ்ஸும் வந்து இருக்கும்மா! அவங்க யாரும்மா?”
விழி விரிய வியப்பில் கேட்ட மகனின் கன்னம் பற்றிக் கொஞ்சியவள், “அது மிதுன்னோட அத்தடா, உனக்கும் அத்தை, அப்பறம் அந்த பாப்பா மிதுன்னோட அத்தபொண்ணு!” என்க, அத்தனை நேரம் அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த அன்பு கயல் இறுதி பதில் கூறும் முன் ஓடி வர நினைத்தான்.
ஆனால் கயல் அதற்குள் கூறி இருக்க, ஆதி ஓடி இருந்தான். வெளியே வந்த அன்பு கயலை பார்க்க, “என்ன மாமா? என்னாச்சு?” அறியாமல் கேட்டாள்.
“இப்போ கீழ வந்து நீயே பாரு!” என அவள் தோள் மேல் கை போட்டவாறு கீழே அழைத்து வந்தான். ஜெயந்தி சிவகாமியிடம் பேசிக் கொண்டிருக்கக் கீழே வந்த இருவரும் அவளிடம் நலம் விசாரித்தனர்.
ஜெயந்தியின் மூன்று வயது இளைய மகள் இளமதி அவள் மடியில் அமர்ந்திருக்க, மூத்தவன் சதீஸ் வெளியே ரஞ்சினி, மிதுனுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
உள்ளறையிலிருந்து ரஞ்சினின் பொம்மை ஒன்றை தூக்கிக் கொண்டு ஓடி வந்த ஆதி அதை மதியின் முன் நீட்டினான். அன்னையின் மடியிலிருந்து இறங்கிய குட்டி தேவதை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு அவன் கன்னத்தில் எக்கி முத்தமிட்டாள்.
ஆதி, மதி எனக் கயலும், ஜெயந்தியும் தங்கள் பிள்ளைகளை அதட்டி அழைத்தனர். தங்கள் வீட்டு ஆட்கள் சாக்லேட், பொம்மை கொடுத்தால் வாங்கிக் கொண்டு அவர்கள் கன்னத்தில் முத்தமிடுவது மதியின் பழக்கம். ஜெயந்தி அவ்வாறு தான் பழக்கி விட்டு இருந்தாள்.
அன்பு மட்டும் அடக்க முடியாமல் சிரித்தான். ஜெயந்தியும் கயலும் அவனைப் புரியாமல் பார்க்க, “அடுத்த அன்பு, கயல் காதல் கதை ஆரம்பம்!” என்றான் மேலும் சிரிப்புடன்.
அதே நேரம் அவன் பார்வை கயல் மேல் பதிந்திருந்தது. அவன் பார்வையில் முதல் முறை கயலை பள்ளியில் பார்த்ததை போன்று உரிமை கலந்த காதல் உறைந்திருந்து.
அன்புச்செழியனின் காதலை மொழியும் விழியின் மொழியை கயல்விழியும் கண்டு கொண்டாள்.