முழு பௌர்ணமி நன்னாளில் ஜன்னலோரம் ஜாதிமல்லியின் வாசம் நிலவின் வெள்ளொளியோடு குளிர் தென்றலும் கலந்து வீசியது. தோப்பு வீட்டின் அடுப்பறையில் கயல் பாத்திரங்களை ஒதிக்கி வைத்துக் கொண்டிருக்க, திடீரென அன்புவின் கரங்கள் அவளிடையில் படர அணைத்தது.
அவளை முன் திருப்பி முகமேந்தியவன், அவளின் செவ்விதழில் தன்னிதழை பதித்து அழுத்தினான். அவளால் பேசவும் இயலவில்லை, விலகவும் இயலவில்லை அவன் அணைப்பில் அத்தகைய அழுத்தமிருந்தது.
ஐந்தாண்டுகள் சென்றதே தெரியவில்லை இன்றும் அவனின் திடீர் அணைப்பும் தித்திக்கும் இதழ் முத்தமும் துளியும் குறையவில்லை. அன்பின் அன்பைப் போல் பெருக்கிக் கொண்டேயிருந்தது.
ரஞ்சி விடு…
அக்கா அடிக்காத அண்ணனை…
டேய் தடியா விட்டுடுடா, என்னகட்டிக்காத…ப்பாஆஆஆஆ…
டேய் மிது ஆதிய பிடி…
அம்மாஆஆஆஆ….ரஞ்சிய அடிச்சிருவே…
குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டு அழைக்க, வேகமாக அன்புவிடமிருந்து விலகி ஓடினாள். அன்புவும் பின்னே சென்று பார்க்க, குழந்தைகள் மூன்றும் ஒன்றையொன்று அடித்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
அன்பு வந்து ரஞ்சினியையும், மிதுனையும் பிரித்துத் தூக்கிக் கொள்ள, கயல் ஆதியைத் தூக்கிக் கொண்டாள். அவள் ஒருவளால் ஆதியின் துள்ளலைச் சமாளித்துத் தூக்கிப் பிடிக்கவே முடியவில்லை.
கயலுக்கு அடுத்தடுத்து இரட்டையர்கள் பிறக்க, தலை மகனுக்குத் தாத்தா ஆதிநாராயணன் நினைவாக ஆதித்யன் எனவும், பெற்றவர்கள் சிவசுப்பிரமணியன், மனோரஞ்சிதத்தின் நினைவாக மகளுக்கு சிவரஞ்சினி எனவும் ஆசையுடன் பெயர் சூட்டினான் அன்பு.
அடுத்த வருடம் சந்திரன், ஸ்வேதாவிற்கு ஆண் குழந்தை பிறக்க மிதுன் கார்த்திக் எனப் பெயர் சூட்டினார்கள்.
இரு வீட்டிலும் மூன்று பிள்ளைகளுக்கும் வித்தியாசம் காட்டாது ஒன்றாகவே வளர்ந்தனர். இதில் உடன் பிறந்த ஆதியிடம் சரிக்கு சரியாக நின்று பிடிவாதமுடன் எதையும் விட்டுத்தராது சண்டையிடும் ரஞ்சினி, தம்பி மிதுன் என்றால் அவன் கேட்கும் முன் அனைத்தையும் கொடுத்து விடுவாள். அண்ணனிடம் அதிகாரமும், தம்பியிடம் அக்கறையும் என ரஞ்சினி இருக்குமிடத்தில் அவள் குரல் ஓங்கியிருக்கும்.
குழந்தைகளைத் தூக்கி வந்தவர்கள் நடுக்கூடத்தில் விரித்திருந்த மெத்தை விரிப்பில் வரிசையாகப் படுக்க வந்து இருவரும் இருபுறம் படுத்தனர். அவ்வளவு தான் சண்டையிட்ட காரணத்தையே மறந்திருந்தனர்.
“சித்தி, நிலா வட்டமாவா இருக்கும்?” என மிதுன் கேட்டான்.
தன்னருகே படுத்திருந்த மிதுனை தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்த கயல், “நாம நிலவா டூ டைமென்ஷன்ல பார்க்குறதால தான் நமக்கு வட்டமா தெரியுது. த்ரீ டைமென்சஷன்ல பார்த்தா உருண்டையா தெரியும் கண்ணா! அது மாதிரி தான் நமக்கு ஒரு பிரச்சனைனா எப்படி வந்துச்சி, அதுக்கு என்ன தீர்வுன்னு எல்லா டைமெஷன்லையும் யோசிக்கணும்” என்றாள்.
அன்புவின் வயிற்றில் காலை போட்டு, தோளில் தலைவைத்துப் படுத்திருந்த சிவரஞ்சினியை அன்புவின் கரங்கள் மென்மையாக தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தது. தன் தளிர் கரங்களால் அன்புவின் தாடையைப் பிடித்துக்கொண்டவள், “அம்மா பேரு கயலம்மா தானே நீ எதுக்குப்பா செல்லம்மான்னு கூப்பிடுற?” என்றாள்.
கயல் சிரிக்க, “எதுக்கு சித்தா?” என மிதுனும் கேட்டான். கயல் மேலும் சிரிக்க அவளைப் பார்த்தவாறே, “அதுவா கண்ணு, செல்லமா செல்லாம்மான்னு கூப்பிடுறேன்” என்க, “நான் ஜிம்மிய ஜிம்மிசெல்லம்ன்னு சொல்லுவேன்ல அது மாதிரி தானப்பா?” என்றாள்.
அன்பு தலையாட்டியவாறு சிரிக்க, கயல் இருவரையும் முறைத்தாள். ஆதி எதுவும் கேள்வி கேட்கவில்லை எனினும் அனைத்தையும் கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு முறை கேட்பதையும் மனதில் ஆழமாக நிலை நிறுத்திக் கொள்வான்.
ஒவ்வொரு கேள்வியாய் கேட்டு ஓய்ந்தவர்கள் மெல்ல விழி மூடிவிட, அன்புவின் கரங்கள் இன்னும் மகளைத் தட்டிக்கொடுத்துக் கொண்டே இருந்தது.
முழங்கையை ஊன்றி தலை தயங்கியவாறு இருவரும் எதிரெதிரே படுத்தவாறு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். கயலின் கண்கள் அவன் நெஞ்சில் தூக்கிக்கொண்டிருந்த மகளையும் அவனையும் மாறி மாறிப் பார்க்க, அவள் கண்களில் மிக மெல்லியதாய் துளியளவு மின்னிய பொறாமையைச் சரியாகக் கண்டு கொண்டான் அன்பு.
லேசாகச் சிரித்துக் கொண்டவன் தன் இடதுபுற மார்பைக் காட்டி கண்களால் அழைத்தான். நொடியில் முகம் சிவக்க வெட்கப் புன்னகையோடு விழி தாழ்த்திக் கொண்டாள் கயல்.
இரவின் நிசப்தத்திற்கு மாறாய் சந்திரனின் அறையில் அதிரடி சரவெடியாய் வெடித்துக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.
அதீத கோபத்தில், “கட்சி ஆபீஸிக்கு என்ன பிக்கப் பண்ண வரச்சொன்னேன்ல, டவுனுக்கு வந்துட்டு நீ பாட்டுக்குத் திரும்பி வந்துட்ட”என கத்திக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.
“ஏய் முக்கியமான கால் வந்துச்சிடி, அவரசமாக ஒரு வேல அண்ட் உனக்காக எவ்வளவு நேரம் தான் வெய்ட் பண்ணுறது?”
“என்ன விட முக்கியமோ? கல்யாணத்துக்கு முன்னாடி சென்னைக்கே ஓடி ஓடி வருவையே இப்போ டவுனுக்கு வந்தும் பக்கத்துல இருக்குற ஆஃபீக்ஸ்க்கு வர முடியலையோ?”
“ஏய் லூசாடி நீ சொல்லுறதா புரிச்சிக்காம கத்திக்கிட்டு இருக்க, அதான் கார் அனுப்பி விட்டேன்ல”
அவளுக்கு இணையான கோபத்தில் சந்திரனும் கத்த, கையிலிருந்த அலைபேசியை அவன் மேல் தூக்கி எறிந்தாள். அவனுக்கொன்றும் சேதாரமில்லை, ஆனால் அலைபேசி தான் கீழே விழுந்து உடைந்து நான்கு துண்டுகளாகி பரிதாபமாக கிடந்தது. அது ஒன்றும் புதிதல்ல அந்த மாதத்தின் ஐந்தாவது அலைபேசி!
அவ்வளவு தான் சண்டை முடிந்திருக்க, ஸ்வேதா சென்று கட்டிலில் ஒரு ஓரம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
“நிலாவா? யாரு அவ எனக்கு தெரியாம?” என்க, மேலும் சண்டை வேண்டாம் என எண்ணியவன் அறையிலிருந்து மொட்டைமாடிக்குச் செல்ல நினைத்து வெளியேறினான்.
“இப்போ நீ போன அவ்வளவு தான் ஒரேடியா சாமியாரா தான் போக வேண்டி இருக்கும்” திரும்பிப் பார்க்காது படுத்தவாறே மிரட்டினாள்.
“அதுகென்ன ரொம்ப சந்தோஷம், இந்த நாட்டுல சாமியாருங்க தான் ஜாலியா இருக்காணுங்க!”என அவன் முடிப்பதற்குள் மற்றொரு தலையணை வந்து அவன் மேல் விழுந்தது. அவ்வளவு தான் அமைதியுடன் வந்து மறுபுறம் படுத்துக் கொண்டான்.
ஸ்வேதா திருமணம் முடிந்து வந்த புதிதில் தேர்தல் வர, இராஜமணிக்கமும் நிற்கவில்லை. அன்புவும் சந்திரனும் ஸ்வேதாவை சுயேட்சை வேட்பாளராக அவர்கள் பஞ்சாயத்தில் நிற்க வைத்து வெற்றிபெறவும் வைத்திருந்தனர்.
கடந்த ஐந்து வருடங்களாக ஸ்வேதா தான் கிராம நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள். பெரியாற்றில் நடந்த மணல் கொள்ளையை முற்றிலும் நிறுத்தி இருந்தாள். அது மட்டுமின்றி பெரியாற்றிலிருந்து ஊருக்குள் கோடைக் காலத்தில் தண்ணீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாள்.
சாலை வசதி முதல் பொது மக்களின் அனைத்து தேவைகளையும் முன்னின்று நிறைவேற்றியிருந்தாள். கிராமத்துப் பெண்கள் கைவேலை கற்றுக்கொள்வதற்கு பயிற்சி மையத்தையும் திறந்திருந்தாள், பெண்களின் சுய தொழிலுக்கு ஊக்குவித்து உதவினாள்.
சந்திரன் வயல்,தோப்பு என அனைத்திலும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து செய்து சாகுபடியை உயர்த்தினான். குறைந்த வருடத்தில் பழங்கள் தரும் மரக்கன்றுகளை நட்டு, பழங்களை ஏற்றுமதி செய்தான். கிராம மக்களுக்கும் விவசாய அறிவுரை வழங்கினான்.
அதிகாலையிலே விழித்து விட்ட சந்திரன் படுக்கையிலிருந்து எழாமல் புரண்டு புரண்டு படுத்தான். மெல்லக் கண்திறந்து பார்க்க ஸ்வேதா யோகா செய்து கொண்டிருந்தாள். அவள் அன்பு வீட்டிலிருந்த போதே அதிகாலையில் எழுந்து அவளைப் பார்ப்பது அவன் பழக்கம்.
தலையணையில் முகம் பதித்தவாறு பார்த்து கொண்டிருக்க, அவள் எழுந்து குளியலறைக்குள் சென்று கொண்டாள்.
“அடியே அஞ்சுகம்…” என அழைக்க, அவன் அழைப்புகள் அவளுக்குக் கேட்கவில்லை. “அம்மாஆஆஆஆ…” வலியுடன் கத்துவது போன்று சத்தமாகக் கத்த, என்னவோ என பயந்து குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் ஸ்வேதா.
நடுக்கட்டிலில் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்த சந்திரன் தன் முன் கட்டிலில் மடிக்கப்பட்டுக் கிடந்த சிறுசிறு காகித துண்டுகளைப் பார்த்தவாறு இருந்தான்.
ஒற்றை வெண் துண்டை கட்டிக்கொண்டு ஓடி வந்திருந்த அவள் மீது ரசனையோடு பார்வையைத் திருப்பியவன், “அன்னக்கிளி இதுல ஒரு சீட்டெடும்மா!” என்றான் சிரிப்புடன்.
“அடுத்த புள்ளைகளுக்கு பேர் செலக்ட் பண்ணத் தான்,சரி ஒரு நல்ல சீட்டா எடுத்துக் கொடு பார்ப்போம்!”என்றான்.
ஏதோ கிளி என்று கொஞ்சுகிறான் என நினைத்தவள் அவன் சீட்டெடு என்றதும் கோபம் கொண்டு அவனை அடிக்க வந்தாள். அடிக்க வந்தவளின் இடுப்பைப் பற்றி இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன் அவள் பின்னங்கழுத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு அவழிதலை சிறை செய்தான்.
அவனிடமிருந்து விலகி அருகே படுத்தவள் மூச்சு வாங்க, அவள் புறம் திரும்பிப் படுத்து அணைத்தான்.
“ரொம்பவே லேட் பண்ணிட்டோம்டி, இந்த தடவை நாம டீவ்ன்ஸ் ரிலீஸ் பண்ணுறோம் அன்புவவிட ஒன்னு லீடிங்ல போறோம்!” என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தமிட்டான்.
“ஜெய் இதுலையுமா போட்டி?” எனக் கேட்டாலும் அவள் கைகளும் அவனை அணைக்க, கன்னத்தில் முத்தமிட்டாள். அவனுக்கு அங்கே அடுத்த பேச்சிற்கு இடமில்லை, அவளுள் அவன் தேடலைத் தொடங்கி இருந்தான்.
சிறிது நேரத்திலே அவள் கலைப்புற்றத்தை உணர்த்து நெற்றியில் இதழ் பதித்து விலகியவன் தன் மேல் படுத்திருந்தவளின் முதுகை வருடியவாறு, “கட்சி ஆஃபீஸில என்ன சொன்னாங்க?” என்றான்.
“அவங்க கட்சில இருந்து எம்.எல்.ஏ சீட் தரேன்னு சொல்லுறாங்கா, பெரிய கட்சி தான்”
“நீ என்ன நினைக்குற?”
“நம்ம தொகுதியில நமக்கு செல்வாக்கு இருக்கு சோ சுயேட்சையா நிக்கலாம்னு நினைக்குறேன். அன்புகிட்ட ஒரு வார்த்தை கேட்கணும், நீ சொல்லு என்ன பண்ணலாம்?” என்றவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
“நான் போஸ்டர் ஒட்டடும்மா? கொடி பிடிக்கட்டும்மான்னு நீ சொல்லு!” என்றதும் சிரித்தவாறு நிமிர்ந்தவள் அவன் இதழுக்குப் பரிசளித்தாள்.
அடியும் பிடியும் என அவர்கள் வாழ்க்கை சுவாரஸ்யமாகச் சென்று கொண்டிருந்தது.
கயல் பிள்ளைகளை எழுப்பிக் குளிக்க வைத்து, உடைமாற்றி, உணவூட்டி முடிக்க அன்பு தனக்கும் உடை எடுத்துக் கொடு, தலை துவட்டி விடு எனப் பிடிவாதம் பண்ணினான். கட்டிலில் அமர்ந்திருந்தவனுக்கு தலை துவட்டி விட்டுக் கொண்டிருந்தாள் கயல்.
அவள் விலகியிருந்த புடவையின் வழி பொன்னிற இடையில் கிள்ளியவன், “செல்லம்மா உனக்கு தொப்பை கூடிரிச்சி” என்க தலையில் ஓங்கிக் கொட்டியவள்,புடவையைச் சரி செய்துவிட்டுச் சென்றாள்.
வாசலில் கார் சத்தம் கேட்க, பட்டுப்பாவாடை அணிந்திருந்த ரஞ்சினி கொழுசொலி எதிரொலிக்க, “பெரியப்பா வந்தாச்சி” என எழுந்து ஓடினாள். தன்னை நோக்கி வந்த மகளை ஆசையுடன் தூக்கிச் சுற்றினான் சந்திரன்.
அனைவரும் வெளியே வர, அன்புவின் பெற்றோர் நினைவு மண்டபத்தில் அவன் அன்னை புகைப்படத்தின் முன்பு அமர்ந்திருந்த ஐயர் பூஜையை ஆரம்பித்தார். அன்புவின் அன்னை மனோரஞ்சிதத்தின் நினைவு நாள் அன்று. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க தெய்வமாய் நின்று காக்கும் படி வேண்டிக் கொண்டனர்.
“ஜெயந்தி அத்தை ஊருல இருந்து வாரங்க, வேலு தாத்தா டவுன்லிருந்து ரொம்ப சாக்லேட் வாங்கிட்டு வந்து இருக்காங்க வீட்டுக்குப் போவோமா?” எனக் குழந்தைகளை ஸ்வேதா அழைக்க, தலையாட்டியவாறு அவர்களோடு கிளம்பிச் சென்றனர்.