ஜெயந்திக்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து ஜெயந்தியையும் அழைத்து மனையில் அமர வைத்தனர். முதலில் நாத்தனார் தான் வெள்ளிக்காப்பு இட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்ல, விக்னேஷை பார்த்தாள்.
விக்னேஷிற்கு சகோதரிகள் இல்லை என்பதால் திருமணத்தின் போது கயல் தான் நாத்தனார் முடிச்சிட்டாள். இப்போதும் கயலை தான் அவள் மனம் தேடியது.
அவள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் எதிர்வீட்டு வாசலிலிருந்து கையில் வெள்ளி தாம்பூலத்தில் சீரோடு கயல் வந்து கொண்டிருந்தாள். மஞ்சள் பட்டில் ஆறுமாதம் மேடேறிய வயிற்றோடு தளிர் நடையில் தங்கச்சிலையொன்று எழுந்து நடந்து வருவது போல் மெல்ல நடந்து வந்தாள்.
அதே நேரம் பூங்கோதையிடம்,”கோதை இத தங்கச்சிக்கிக்கு போட்டுவிடு” என செல்வாவும் வெள்ளிக்காப்புகளை தந்தான். ஜெயந்தியின் மனம் நிறைய இருவருமே நலங்கு வைத்து ஆளுக்கொரு கைகளில் வெள்ளிக்காப்பு அணிவித்தனர்.
வசந்தா கயலை வீட்டிற்குச் செல்லவிடாது தன்னுடனே வைத்துக் கொள்ள, விழா முடிந்து அனைத்து உறவுகளும் சென்றிருந்தனர். ஜெயந்திக்கு விதவிதமான உணவூட்டிய வசந்தா கயலை அவள் அருகே அமர்த்தி அவளுக்கும் உணவூட்டினார்.
“அன்பு அண்ணா என் மேல கோபமா இருக்காங்களா அண்ணி?” என ஜெயந்தி கேட்கக் கயல் சிரித்தாள்.
சில மாதங்களுக்கு முன்பு வரை கயல் என்று அழைத்தவள் இன்று அண்ணி என்று அழைக்கிறாளே என்றெண்ணி,”அடியே லூசு! இந்த வளையலை வாங்கி என் கையில கொடுத்து அனுப்புனதே உன் அன்பு அண்ணன் தான். உன் மேல கோபமெல்லாம் இல்ல, நீ பண்ணது எல்லாம் எங்க நல்லதுக்குத் தான் எங்களுக்கு தெரியும்டி” என்றாள்.
பின் இருவரும் பூங்கோதையை பார்க்க, இவர்கள் பார்வையின் அர்த்தம் புரிந்தவள் ஓட முயன்றாள். “செல்வாண்ணா அவள பிடி” ஜெயந்தி சொல்ல, அவள் கேட்டு இல்லை என்பானா செல்வா.
செல்வா பிடித்து வர, பூங்கோதையின் கையை இருவரும் ஆளுக்கொன்றாய் பிடித்திழுத்து நடுவில் அமர்த்திக் கொண்டனர். “உன் காதல் கதையை எங்ககிட்டையே மறச்சிட்டையே!” எனக் கேட்டு ஜெயந்தி அவள் காதை திருக,”நானாவது பரவாயில்ல, இவ கல்யாணமான கதையே மறச்சிட்டாளே!” எனக் கயலைப் பார்த்துக் கூறினாள் பூங்கோதை.
தோழிகள் மூவரும் பல மாதங்களுக்குப் பிறகு அன்று தான் சிரித்துப் பேசி மகிழ்வாய் இருந்தனர்.
அந்த வீட்டில் மீண்டும் ஜெயந்தி, கயலின் சிரிப்பொலி இணைந்து கேட்பதைப் பார்த்த அனைவரின் மனமும் நிறைந்தது.
கயலின் எதிரே வந்து அமர்ந்த ருக்மணி, அவள் கைகளில் கண்ணாடி வளையலை அணிந்தவாறு அவளிடம் நலம் விசாரித்தார். கயலை கட்ட வேண்டும் என்றதும், பூங்கோதையை கட்ட மாட்டேன் என்றதும் சந்திரனின் பிடிவாதம் தானே, அவ்வாறு இருக்க இவர்களிடம் ஏன் பாரமுகம் காட்ட வேண்டுமென்று எண்ணினார்.
“நீயும், ஜெயந்தியும் இல்லாம வீடே நல்ல இல்லடி!” என்க, மெல்லிய புன்னகையுடன் “ஏன் ஆச்சி சந்திரன் மாமாவுக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சா இந்த வீட்டுக்கு மருமகள் வந்திடுவாளே” என்றாள்.
“க்கும், இவனுக்கு எங்க போய் தான் பொண்ணு தேடவோ? எந்த பொண்ணை கொண்டு வந்தாலும் வேண்டாம்னு சொல்லுறான். இந்த சிவகாமி வார்த்தையை விட்ட நேரம் என் பேரனுக்குக் கல்யாணம் தள்ளி போகுது” என்க, “அவருக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு பாருங்க” என்றாள் கயல்.
“அவனுக்கு பிடிச்ச மாதிரியா…? இவ்வளவு பேசுறியே நீ அவனுக்குப் பார்க்க வேண்டியதானே?” என்றார்.
தோழிகளைத் தவிர அவளறிந்த பெண் ஸ்வேதா மட்டும் தான். அன்றொரு நாள் ஸ்வேதாவும் அன்புவை போன்றதொரு மாப்பிள்ளை வேண்டும் என்று கூறியது நினைவில் வந்தது.
எத்தனையோ பெண்களைப் பார்த்து விட்டனர் ஸ்வேதாவையும் பார்க்கட்டும், விருப்பம் இருந்தால் திருமணம் செய்கிறார்கள் இல்லையெனில் விட்டுவிடுகிறார்கள் என்றெண்ணிய கயல் ஸ்வேதாவை பற்றி அனைவரிடமும் கூறி அவள் முகவரியையும் கொடுத்தாள்.
ருக்மணிக்கு ஸ்வேதா நினைவில் வர, அவள் தான் சந்திரனுக்குச் சரியான ஜோடி என்றெண்ணினார்.
விஜயராகவனும் சரி வருமா எனச் சற்று தனியாக அமர்ந்து யோசித்தார்.
சந்திரன் பாசம் கொண்ட கயல் அன்புவின் மனைவியாக இருப்பதும், அன்பு நட்பு கொண்ட ஸ்வேதா சந்திரனின் மனைவியாக இருந்தால் பின்னாளில் இரு மகன்களுக்கும் இடையில் பிரச்சனை என்பது வராதே என்று யோசித்தார்.
மறுநாள் ஜெயந்தியைத் தவிர, மற்ற அனைவரும் சென்னையில் ஸ்வேதா வீட்டில் பெண் கேட்டு வந்து அமர்ந்திருந்தனர்.
ஜெயச்சந்திரன் முதலில் வர மறுக்க, கயல் கூறிய பெண்ணென்றும் அதுவும் ஸ்வேதா தான் என்பதை ஜெயந்தி கூற கேட்டறிந்து கொண்டான். என்னவோ பெரியவர்கள் அழைத்ததால் தான் உடன் வருவது போல் கட்டிக்கொண்டு வந்தான்.
பிரம்மாண்டமான பெரிய வீடு, வாசலில் நுழையும் போதே பல அடுக்கு பாதுகாப்புகளைத் தாண்டி தான் வர வேண்டி இருந்தது. பூவரசம் புதூர் என்றதுமே வந்தவர்களை வரவேற்று ஹாலில் அமர வந்து உபசரித்தார் ஷண்முகவடிவேல்.
ஸ்வேதா எங்கு சென்று வந்தாலும், வந்ததும் டேட் என ஓடோடி வந்து கழுத்தைக் கட்டிக்கொண்டு அங்கு அறிந்த, பார்த்த அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வாள். ஆனால் இவர்கள் ஊருக்கு சென்று வந்ததிலிருந்து எதுவும் சொல்லவில்லை. சொல்லவில்லை என்பதை விட அவள் வாய் திறந்து பேசவில்லை என்று தான் எண்ணினார். என்னதான் வேலை வேலை என்று சுற்றினாலும் மகளிடம் தெரியும் மாற்றத்தைக் கண்டுபிடிக்க ஒரு நொடி போதுமே.
வந்த ஆறுமாதங்களாக அவள் முற்றிலும் மாறி இருந்தாள் என்பதை உணர்ந்திருந்தார். அவரும் இரண்டு மூன்று வரன்களை அழைத்து வந்து அவள் நிராகரித்தும் இருந்தாள்.
பெண் கேட்டு தான் வந்திருக்கிறார்கள் என்று அறிந்தும் அவர்களை அமர வைத்து, வேலையாட்களை உபசரிக்கும் படி கூறினார். மகளை அழைத்து வருகிறேன் என்று உள்ளே சென்றார்.
அன்புவின் ஊர்கார்கள் என்றதும் அவனை அழைத்துக் கேட்க, அவன் தன் குடும்பத்தார் தான் என்றதும் அடுத்துக் கேட்கக் கேள்வியில்லை. முழு மனதுடன் மகளை அழைக்க அவள் அறைக்குள் சென்றார்.
அந்த வயதிலும் பார்வையில் ஒரு கூர்மையும், நடையில் ஒரு வேகமும் இருந்ததைக் கவனித்துக் கொண்ட சந்திரன், அறையில் சுற்றி பார்வையை சுழல விட்டான்.
மகளின் அறைக்குள் சென்றவர் அவளைப் பெண் பார்க்க வந்திருப்பதாகவும் உடை மாற்றி வருமாறும் கூறினார். வந்தவர்கள் யாரென்று கூட கேட்கும் பொறுமை இல்லாமல் கோபமுடன் வேண்டாம் எனக் கத்தியவள் அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்தாள்.
அவரால் அங்கு நிற்க முடியாது கீழே வந்து விட்டார். அவருக்கும் இந்த சம்பந்தத்தில் விருப்பம் தான் என்பதால் வந்தவர்களிடம் என்ன சொல்ல என்றெண்ணி அமைதியுடன் அவர்கள் எதிரே அமர்ந்தார்.
அவர் சொல்லவே தேவையில்லை என்பது போல் சற்று முன் ஸ்வேதா, “எனக்கு விருப்பமில்லை அவங்கள போகச் சொல்லுங்க டேட்” என அந்த வீடு முழுவதும் எதிரொலிக்கும் படி கத்தியதை அவர்களும் கேட்டிருந்தனர்.
அவளுக்குத் தன்னை பிடிக்கவில்லை என்பதை ஜெயச்சந்திரனால் நம்பவே முடியவில்லை. “அங்கிள் நான் ஒரு தடவை ஸ்வேதா கிட்டப் பேசலாமா?” என வெகு சாதாரணமாக ஷண்முகவடிவேலின் முகம் பார்த்துக் கேட்டான்.
எங்கே இவன் செல்ல, அவள் கோபம் கொண்டு எதையும் தூக்கி இவன் மீது எறிந்து விடுவாளோ என அவருக்கு சற்று பயம் தான் இருப்பினும் சரி என்று கண்ணசைக்க எழுந்து சென்றான். இவ்வளவு நேரம் பொறுமையுடன் இருந்த அவன் குடும்பத்தார் அப்போதும் பொறுமையுடன் அமர்ந்திருந்தார்.
இருள் சூழ்ந்த அறைக்குள் மெல்லிய தீரைச் சீலைகளை ஊடுருவி வெளிச்சம் சிறிது பரவ,உச்ச கோபத்தில் கண்களை மூடி நின்றிருந்தாள் ஸ்வேதா, கோபம் தான் எனினும் கண்களிலிருந்து கண்ணீரும் வழிந்தோடியது.
ஒருவலுவான கரம் இடைவளைத்து இறுக அணைத்தது, பின்னங் கழுத்தில் மீசை உரச, “பிடிக்கலையா? நான் ஆசையா வந்தேன்!” என்றதொரு குரல் தொலைவில் கேட்பது போலிருந்தது. கன்னத்தில் ஒரு முத்தம்.
இதழால் கன்னத்தின் கண்ணீரை வருட, கனவா நிஜமா என்றறியாத நிலையில் நின்றிருந்தாள்.
ஏனெனில் அவனைக் கண்ட நாள் முதல் இதே கனவு தான். அணைத்திருப்பது தன் இடைக்குப் பழகிய கரம் தான், தன்னை தீண்டிய ஆண்வசம் தன்னவன் தான் என உணர்ந்தாலும் விழித்திருக்க மறுத்தாள் எங்கே கனவாகவே கலைந்து விடுவானோ என்ற பயம்.
அவள் முகம் திருப்பி கைகளில் ஏந்தியவன் தன் மூச்சுக் காற்று அவள் முகம் வருடும் நெருக்கத்தில்,”என்ன பாரு ஸ்வீட்டி” என்றான்.
கனவாய் இருந்தாலும் இந்த அணைப்பும், அழுத்தமும் வேண்டும் என விரும்பியவள் மாட்டேன் என்பது போல் தலையசைத்தாள்.
மேலும் அவள் முகத்தை அழுத்திப் பற்றியவன்,”கண்ண திறம்மா..” என்க, கண் திறந்தால் அவன் பிம்பம் மறையும் கண் மூடி இருந்தால் அவன் குரலாவது கேட்கலாம், கனவைக் கலைக்க விரும்பாதவள் “ம்கூம்..” மெல்லொலியோடு மறுப்பாய் தலையசைத்தாள்.
“கண்ண திறப்பா…”
“ம்கூம்…”
“கண்ண திறடா…”
“ம்கூம்…”
“உன் ஜெய் தான் கண்ண திறடி…”
“ம்கூம்…”
அவன் பெருமையெல்லாம் விடை பெற்றிருக்க, அவளுக்கு நிஜத்தை உணர்த்திவிடும் வேகம் அவனிடத்தில், இரு இதழ்களுக்கும் இடைவெளியாய் இருந்த ஒரு இன்ச் தூரத்தையும் குறைத்தான்.
முதல் இதழ் முத்தத்தை இதழோடு இதழ் பதித்து அழுத்தினான். ஒற்றை முத்தம் தான் அவளை ஆயிரமாயிரம் முறை உயிர் இழக்கவும், உயிர்ப்பிக்கவும் செய்தது. காலச் சுழலுக்குள் வீழ்ந்து உலகின் ஆரம்பப் புள்ளியை நோக்கிச் செல்வது போல் முடிவின்றி காலங்களைக் கடத்தி நீண்டு சென்றது. உலகை மறந்திருந்தவர்கள் தங்களையும் மறந்து அமிழ்ந்திருந்தனர்.
சுவாசத்திற்குத் திணறும் போதே உண்மை என்பதை உணர்ந்தவள், இதழ் பிரித்து, இமை பிரித்து விழி மலர்ந்து நோக்கினாள். நிஜத்தில் அவன், கனவில் கண்ட அதே ஜெயசந்திரனின் வாடிய முகம், நொடியில் நெருங்கி அழுத்தி அணைத்தாள்.
அவன் கைகளும் அவளை அணைத்து அழுத்தியது. அவன் மார்புச்சூட்டில் முகம் புதைத்தவள் நின்றிருந்த கண்ணீரை மீண்டும் உதிர்த்தாள். அவள் முதுகை மெல்ல வருடிக் கொடுத்தவன், அத்தனை நாள் அடங்கிய வேதனையும் அந்த நொடி கரைத்து விடுவது போல் மேலும் அழுத்தி அணைத்துக் கொண்டான்.
நேரம் சென்றும் அவளின் அழுகை குறையாததை உணர்ந்தவன் மெல்ல அவள் கைகளில் கிள்ளியவாறு,“அடியே செல்லக்கிளி உன் ஜோடிக்கிளிய விட்டுட்டு நீ பாட்டுக்குப் பறந்து வந்துட்ட?” என்றான்.
தான் மிதந்து கொண்டிருந்த கனவு நிலையிலிருந்து வெளிவந்து நிஜம் உணர்ந்தவள், அவனிடமிருந்து விலகி பார்வையை சுழற்றினாள். அவன் மனதிற்குள் ஆபாய மணி அடித்தது.
அவள் எண்ணம் உணர்ந்தவன் நெருங்கி அவள் கைகளைப் பிடிக்க, மறுகையால் அவன் கன்னத்தில் அறைந்தாள். “சாரி ஸ்வேதா…” என்க, மீண்டும் அறைந்தாள். அவன் மீண்டும் வாய்திறக்க முயல மீண்டும் அறைந்தாள். “அதான் சாரி சொல்லுறேன்ல” என்பதற்குள் மறு கன்னத்திலும் அறைந்தாள். தேடி வர ஆறு மாசமா எனக் கோபம் வர மீண்டும் மீண்டும் அடித்தாள்.
அவனுக்கு அந்த வலிகள் எல்லாம் சுகமாக தெரிந்தது. “இப்படி அடிக்கிறதுக்குப் பின்னாடி நான் வசூல் பண்ணாம விட மாட்டேன்” என்க, மீண்டும் அறைந்தவள்,”பேசாத நீ!” என்றாள்.
“சரி நான் பேசல” உதட்டின் மீது அவன் விரலை வைத்துக் கொள்ள, நெருங்கி அவன் சட்டையைப் பிடித்தவள், “எங்கிட்ட பேசாம இருந்திடுவியோ?” எனக் கேட்டு, பார்வையைச் சுழற்றினாள்.
அவன் என்ன என்று உணரும் முன்னே டேபிளில் இருந்த காபி கப்பைக் கையில் தூக்கி இருந்தவள்,“ஏன்டா கிளம்பும் போது பார்த்துகிட்டு தானே இருந்த இப்போ வந்து பறந்துட்டேன்னு என்ன குறை சொல்லலுற?” எனக் கேட்டவாறு கப்பைத் தூக்கி எறிந்தாள்.
அவன் ஒளிவதற்கு இடம் பார்ப்பதற்குள், அவள் வரிசையாகப் பொருட்களைத் தூக்கி எறிந்தாள். சில பொருட்களிடமிருந்து தப்பித்து, சில பொருட்களால் அடிபட்டு, அவளைப் பிடிப்பதற்கும், தடுப்பதற்கும் முயற்சித்தான்.
“ஏன்டா உனக்குச் சரியா கிளி பிடிக்க தெரியாம பறக்க விட்டுட்டு, இப்போ வந்து பேசுறியா? இந்தா வாங்கிக்கோ!” என மேலும் பொருட்களைத் தூக்கி வீசினாள். “என்னக்கா கிளி பிடிக்கத் தெரியாது? இப்ப பாருடி” என அவளை நெருங்கியவன் இழுத்து அணைத்தான்.
கைகளை அழுத்திப் பிடித்தவாறு, “எப்படி என் பிடி?” எனக் கண் சிமிட்டி கேட்டான். பின்னின்று அணைத்திருந்தவனின் வயிற்றில் முழங்கையால் குத்தி விலகினாள்.
கைகளைக் கட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தவள்,”பூங்கோதையை பிடிச்சதால தான் என்ன அவாட் பண்ணியா ஜெய்?” என விசாரிக்கத் தொடங்கினாள்.
கால்களை ஆட்டிக் கொண்டிருந்தவள் கால்கள் நேர் எதிராய் நின்னிருந்த அவன் கால்களில் பட்டுவிட, இது தான் சமயம் என நினைத்து, தள்ளாடுவது போல் தள்ளாடி அவள் மேலே விழுந்தான்.
விலக முயன்றவளை விலக விடாது அணைத்தவன், “பூவு,கயலு ரெண்டுபேரையும் காதலிக்கல,இந்த பச்சைக்கிளி தான் பார்த்தும் மனசுல புகுந்துட்டா! ஆனா அப்போ எனக்கு நிச்சியம் ஆகிட்டதாலே தேவையில்லாம உன் மனசுல ஆசையை வளர்ந்துட கூடாதுன்னு விலகிப் போனேன். சண்ட போடும் போது நீ என் பக்கத்துல நிக்குற ரெண்டு நிமிஷ சுகம் எனக்கு என்னோவோ பிடிச்சிருந்துச்சி அதான் எனக்கு நிச்சியமானதைச் சொல்லல்ல.
அப்பறம் அன்பு சொல்லித் தான் பூங்கோதை செல்வாவை விரும்புறது தெரியும். அன்னைக்குப் பேச வந்தா அம்மணிக்கு ரொம்ப தான் கோபம் போனை தூக்கிப் போட்டு போற” என அவள் மூக்கை விரல்களால் பிடித்துத் திருகினான். கன்னங்களில் இதழ் பதித்தவன் முகம் முழுவதும் முத்தமிட்டான். அவள் அடிகளின் எண்ணிக்கைக்கு இரு மடங்கானது அவன் முத்தங்களின் எண்ணிக்கை.
“சரி நீ எப்போ இங்க வந்த? எதுக்கு வந்த?” எனப் புரியாமல் கேட்டாள். அவள் கேள்வியில் அவன் பார்வை மாற, குறும்பு புன்னகையுடன் “அதுவா அன்னைக்கு நீ போதையில இருக்கும் போது ஒரு கிஸ் மிஸ்ஸாகிடுச்சி, அதான் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்” என்றான்.
அவளோ முகத்தைத் திருப்பிக் கொண்டு,”அதான் வந்த வேலை முடிச்சிருச்சே போக வேண்டியதானே” என்க,”இல்லையே நான் கொடுத்ததுக்கும் சேர்த்து நீ கொடுக்கணுமே!” என இதழ் குவித்துக் கேட்டான்.
ஸ்வேதாவின் பார்வை எதைக் கொண்டு அடிக்கலாம் என்று சுழல, பயந்தவன் போன்று நடித்தவன்,”பொண்ணு பார்க்க வந்தேன், என் மாமனாரும் பெர்பிஷன் கொடுத்துட்டாரு. பொண்ண பார்க்கணுமே” என கேட்டவாறு டாப் விலகியிருந்த அவளிடையில் கைவைத்து அழுத்தினான்.
அவன் கைகளைத் தட்டிவிட்டு, அவனை விலக்கிவிட்டு எழுந்தவள், தலையணையை எடுத்து அடிக்க தொடங்கினாள். அவன் வலிப்பது போல் கத்த தொடங்க,”கத்தாதடா வெளிய எல்லாரும் இருக்காங்க!” என மிரட்டினாள்.
“ஏன் அது நீ கத்தும் போது தெரியலையோ?”என்க, மேலும் தலையணையால் அடித்தாள். இதுக்கெல்லாம் சேர்த்து வச்சி கல்யாணத்துக்கு அப்பறம் உனக்கு இருக்கு என நினைத்துக் கொண்டான்.
“ஐயோ ஆண்டவா என்ன இந்த ராட்சஷிகிட்ட இருந்து காப்பது!” எனப் புலம்ப,”யாராலையும் உன்ன என் கிட்ட இருந்து காப்பாத்த முடியாதுடா நீ காலம் முழுக்க என்ன கட்டிக்கிட்டு கண்ணீர் விடு” என அடிப்பதை அப்போது தான் நிறுத்தினாள் .
“சரி சரி, நான் உள்ள வந்தே ரொம்ப நேரமாச்சு, என் மாமனார் என்ன பத்தி என்ன நினைப்பரோ? மாமா வெய்ட் பண்ணுறேன் சீக்கிரம் பட்டுப்புடவையைக் கட்டிக்கிட்டு காபியோடு வா செல்லம்” என்று விலக்கியவன் வாசல் நோக்கிச் செல்ல,”முடியாது..!”என்றாள்.
திடுக்கிட்டுத் திரும்பி அவளைப் பார்த்தவன் தலை குனிந்தவாறு அமர்ந்திருந்தவளின் அருகே வந்து ஒற்றை விரல் கொண்டு அவள் முகம் நிமிர்த்தினான். முகமெல்லாம் சிவக்க அவன் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தவள்,”எனக்கு சாரி கட்ட தெரியாது ஜெய்!” என வெட்கம் பூசி, மென் குரலில் சிணுங்கினாள்.
அதற்கும் சிரித்தவன் நெருங்கி அவள் நெற்றியில் முத்தமிட்டு, “அது கல்யாணத்துக்கு அப்பறம் சொல்லி கொடுக்குறேன், எனக்கு நீ எப்படி வந்தாலும் ஓகே தான்டா ஆனா இப்போ என் மொத்த குடும்பமும் வந்துருக்கே, ஆச்சிய அசத்துற மாதிரி ஒரு ட்ரெஸ்ஸோட சீக்கிரம் வா” என்றவன் மேலும் அவள் கன்னங்களில் இதழ் பதித்துவிட்டு கிளம்பியோடினான்.
கீழே வந்தவன் அமைதியாக அமர்ந்து கொள்ள, அடுத்த இருபது நிமிடத்தில் பொன்னிற லெகங்காவில் மென்னடையோடு அழகோவியமாய் இறங்கி வந்தாள் ஸ்வேதா. ஜெயசந்திரனின் பார்வைகள் இமைக்காது அவளழகு மொத்தமும் வர்ணிப்பது போல் பார்வையால் வருடியது.
என்னவோ அவன் விரல் வருடுவது போல் அவன் பார்வை பட்ட இடமெல்லாம் கூச, முகம் சிவக்க நெளிந்தவாறு நின்றாள். வசந்தாவும் ருக்மணியும் அழைத்து தங்கள் அருகில் அமர்த்திக் கொண்டனர்.
யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்பது போல் அவன் பார்வை அவளிடமே நிலைக்க,அவளோ ஓரக்கண்ணால் அவ்வப்போது அவனைப் பார்த்தாள்.
சிறியவர்களின் சேட்டையைக் கண்டும் காணாதது போல், பெரியவர்கள் மன மகிழ்வுடன் திருமண சம்பந்தம் பேசி முடித்தனர். ஜெயந்தியின் பிரசவம் இருப்பதால் இரு மாதங்களுக்குப் பின் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர்.
செல்வா, பூங்கோதையை சேர்த்து வைத்து அவன் சேர்ந்த நற்செயலின் பலனாய் இன்று அவன் காதல் கை கூடியது.
விடை பெரும் நேரம் ஸ்வேதாவை பார்த்தவாறே கிளம்ப,அவளும் வாசல் வரை வந்து வழியனுப்பினாள். யாரும் அறியாமல் அவள் கைகளில் ஒரு கிப்ட் பார்சலை திணித்து விட்டுக் கண்ணசைத்து கிளம்பினான்.
அறைக்குள் ஓடி வந்து கவரை பிரித்து பார்க்க, உயர் ரக புது ஐபோன் ஒன்று இருந்தது. அதை ஆன் செய்ததும் அவனிடமிருந்து அழைப்பு வர, துள்ளலுடன் முத்தமிட்டு அட்டன் செய்தாள்.