காலை உணவிற்குப் பின் வாசல் வரை வந்த அன்பு மீண்டும் கயலைக் காண அடுப்பறைக்குள் சென்றான். ஏதோ வேலையாக இருந்தவளை திடீரென பின்னிருந்து அணைத்தவன், “செல்லாம்மா உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். என் ஃப்ரண்ட் ஸ்வேதா வர, கொஞ்ச நாள் இங்க தான் இருப்பா. கீழ் ரூம்மை ரெடி பண்ணி வைக்க சொல்லும்மா” என்றான்.
சரி எனத் தலையாட்டியவளிடம்,”என்ன பண்ற நீ?” கேட்டவன் அவளை முன்புறமாகத் திருப்ப, வாயில் எதையோ மென்றவாறு நின்றிருந்தாள். சட்டென அவள் முகத்தை அருகே இழுத்து இதழோடு இதழ் பதித்து உறிஞ்சியவன் தேன்னுடத்தை போன்றதொரு தித்திப்பை ருசித்தான்.
யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் அவள் தான் திணறி விலக, “குலோப் ஜாமுன்னா என்ன விசேஷம்?”என்றான்.
“இல்லங்க, இங்க வந்ததுல இருந்து டூஷன் பசங்களைப் பார்க்கவே இல்ல. அதான் இன்னைக்கு வரச் சொல்லிருந்தேன். அவங்களுக்கு தான்” என்னும் போது சரியெனத் தலையாட்டி, அவள் உதட்டோரம் வழிந்து கொண்டிருந்த ஜீராவை தன் இதழால் லேசாக வருடியவாறு விலகினான்.
அன்பு கல்லூரி நான்காம் வருடத் தொடக்கத்தில் ஒரு முறை பாண்டிச்சேரியில் பைக் ரேசிங்கில் கலந்து கொண்டான். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட அதில் பலத்த காயம் கொண்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டான். அப்போது அவனுக்கு இரத்தம் கொடுத்தாள் ஒரு பெண்.
மீண்டும் சில மாதங்களுக்குப் பின் கல்லூரி வளாகத்தில் அவளைப் பார்த்தான் அன்பு. அவள் உதவிக்கு நன்றி கூறியவன் அவனாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நட்பு பாராட்டினான். ஸ்வேதா அன்புவின் ஜூனியர், அதன் பின் அவர்கள் நட்பு தொடர, கயலைப் பிரிந்து வந்திருந்த சமயங்களில் அவள் கூறிய ஆறுதலும், நம்பிக்கையும் தான் அன்புவை வாழ்வில் நகரச் செய்தது.
ஒரு வருட நட்பு கல்லூரியுடன் முடிய அதன் பின் தொலைப்பேசி தொடர்புகள் மட்டுமே, அரிதாக எப்போதாவது சந்தித்தது உண்டு. இதையெல்லாம் கயலிடமும் கூறியிருக்கிறான். இருவருக்குள்ளும் நெருங்கிய தொடர்பு இல்லை எனினும், ஆழமான நட்பின் பிணைப்பு உள்ளதை உணர்ந்திருந்தாள் கயல்.
மாலை வேளை ஸ்வேதாவை அழைக்க டவுனுக்கு சென்றிருந்தான். கயலுக்குமே அவளை வரவேற்பதில் ஆர்வம்.
தன் உடைமைகளோடு பேருந்திலிருந்து இறங்கிய ஸ்வேதா உஷ்ண காற்று கன்னம் தீண்டக் கழுத்திலிருந்த துப்பட்டாவைத் தலையில் இட்டவள் அன்புவை தேடி பார்வையைச் சுழற்றினாள். கருமை நிறத்தில் துப்பட்டாவும்,ஜீன்ஸும், கரு நீல நிறத்தில் டாப்பும் அணிந்திருந்தாள். கண்களில் கருப்பு கண்ணாடியும், ஒருகையில் மொபைலும், மறுகையில் உடைமையைப் பிடித்தவாறு நின்றிருந்தாள்.
சிறிய பேருந்து நிலையம் சுற்று வட்டார பேருந்துகளும், ஒன்றிரண்டு வெளியூர் பேருந்துகளும் தான் இருந்தன. ஒரு புல்லட்டின் அருகே திரும்பி நின்று கொண்டிருந்தவனைக் கண்டு கொண்டவள் உற்சாகமுடன், “ஹே…அன்பு!” என அவன் தோள் தொட்டு அழைத்தாள்.
அவன் தோள்களை அழுத்திக் கூட தொட்டிருக்க மாட்டாள், தூசு போல் அக்கைகளைத் தட்டிவிட்டுத் திரும்பியவன், அலட்சியம் கலந்த அனல் வீச்சாய் ஒரு தீப் பார்வையை வீசி சென்றான் ஜெயசந்திரன்.
ஒரு பெண் தன்னை தொட்டால் என்பதை விட, அன்பு என்ற பெயர்சொல்லி தன்னை அழைத்தால் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அப்படியே அறைந்து விடும் எண்ணத்தில் திரும்பியவன் அவள் முகம் பார்த்ததும் ஒரு பார்வையோடு விலகி வந்திருந்தான்.
அன்புவின் சாயல் அவனிடம் அப்படியே பிரதிபலிக்க அன்பு என்றெண்ணியே அழைத்தவளுக்கு அவன் கோபப் பார்வையைக் காண, முகம் சிவக்கும் அளவிற்குக் கோபம் வந்தது. தன்னை அலட்சியமாக, அருவருப்புடன் நோக்கியதாக எண்ணினாள்.
எவ்வளோ திமிரு அவனுக்கு? தெரியாம தானே தொட்டேன், சாரி கூடச் சொல்ல நினைச்சேன் அவன் தான் நிற்கவில்லையே. சரியான முசுடு, ஆளப் பார்த்தா… அவள் எண்ணத்தைத் தடுத்தது ஸ்வேதா என்ற அன்புவின் அழைப்பு.
தன் முன் நிற்கும் அன்புவை கண்டதும் நொடியில் முகமாறிப் புன்னகைத்தவள், அவனின் நலம் விசாரிப்பிற்குப் பதிலளித்தாள். அவள் உடைமைகளை வாங்கிக் கொண்டு செல்ல அவனின் பின் சென்று காரில் அமர்ந்தாள்.
மிகுந்த உற்சாகமுடன் வேடிக்கை பார்த்தவாறு வந்தவள் எல்லாவற்றைப் பற்றியும் அவனிடம் கேட்டறிந்து கொண்டாள். ஊரின் எல்லையை நெருங்கியிருக்க இருபுறமும் அடர்ந்த காடுகளைக் கண்டாள். குளிர்காற்றையும் அதில் கலந்திருந்த மண்வாசத்தையும் ரசித்தாள்.
“எண்ட்ரன்ஸே கீரனா நல்லா இருக்கே அன்பு, ரோடெல்லாம் நீட்டா ஹைவேல போற மாதிரியே இருக்கு. நான் வில்லேஜ்ல எவ்வளவு நேர்த்தியா இருக்கும்னு எதிர்பார்கலை” என்றாள்.
“இதெல்லாம் மலையடிவாரக் காடுகள், யாரும் உள்ள அதிகம் போறது இல்லை. நாம இன்னும் எங்க ஊர் எல்லைக்கே போகலை இன்னும் கொஞ்ச தூரம் போகணும்.
இந்த திருப்பத்துல ஒரு குறுக்கு பாதையிருக்கு அதுவழியா போனா நேர பெரியாற்றைக் கரையோரமா ஊருக்குள்ள போயிடலாம் பட் அந்த பாதையில வண்டி போறது சிரமம். பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் எல்லாரும் அந்த பாதை வழியா தான் டவுனுக்கு போவாங்க. ஒரு நாளைக்கு ரெண்டு ஜீப் தான் போகும். அதான் அலைச்சல் வேண்டாம்னு அப்பா என்ன ஹாஸ்டல்ல சேர்த்து விட்டாங்க.
இந்த ரோடு இராஜமாணிக்கம் அங்கிள் நிர்வாகத்துக்கு வந்ததும் தான் போட்டாங்க, எங்க அப்பா கூட ஹெல்ப் பண்ணாரு போல. நீ நினைக்குற மாதிரி வில்லேஜ் லைப் அவ்வளோ ஈசியில்ல” என்றான்.
வீட்டிற்கு அழைத்து வர, ஸ்வேதாவின் நிமிர்ந்த தோற்றமும், இளம் புன்னகை முகமும் பார்த்ததுமே கயலுக்குப் பிடித்துவிட்டது. இரவு உணவிற்கு விருந்தே ரெடி பண்ணி இருந்தாள் கயல். இரவு உணவு அனைவருடனும் பேசியவாறு உண்டு கொண்டிருக்க ஸ்வேதாவிடம், “பெத்தவுங்க என்ன பண்ணுறாங்கம்மா?” எனக் கேட்டார் சிவகாமி.
“அப்பா சண்முகவடிவேல் ஹோட்டல் பிஸ்னஸ், எப்பவும் ரொம்ப பிஸி கொஞ்ச நேரம் கூட வீட்டுல இருக்க மாட்டார். வாரத்துல ஒரு நாள் அவர் முகம் பார்க்குறதே அபூர்வம் தான். சொந்தத்தால கைவிடப்பட்டு ரொம்ப அடிமட்டத்துல இருந்து உழைச்சி இந்த நிலைமைக்கு முன்னேறியிருக்கார். கஷ்டப்பட்டு பிடிச்ச இடத்தை விட்டுரக்கூடாதுன்னு அது பின்னாடியே ஓடுறாரு.
அம்மா மாலினி நேட்டிவ் மும்பை, அம்மாவோட சொந்தமெல்லாம் அங்க தான் இருக்காங்க, வருஷத்துல ஒரு தடவை பார்த்துப்போம் பட் அம்மா இல்ல! என்ன பத்தி யோசிக்கவே அப்பாவுக்கு டைம்மில்ல இதுல எனக்கு ஒரு சித்தி வேணும்னு எப்படி அப்பா யோசிச்சிருப்பாரு சோ தங்கச்சி,தம்பியுமில்லை” வெறுமையோடு சொல்லி முடித்தாள்.
“அதனால என்ன ராசாத்தி சீக்கிரம் நல்ல பையனா பாத்து கட்டிக்கிட்டு பத்து புள்ள பெத்துக்கோ!” என இலகுவாக சிவகாமி சொல்ல அனைவரும் சிரித்தனர்.
“மாமா கூடத் தான் படிச்சீங்களா அக்கா?” என அப்பாவியாகக் கயல் கேட்க, மாமாவா ஒரு நொடி யோசித்தவள் அன்புவைத் தான் அவ்வாறு சொல்கிறாள் எனப் புரிந்து கொண்டு,” உங்க மாமா கூட படிக்கல மிஸ்ஸஸ்.மாமா, அந்த காலேஜ்ல படிச்சேன்” என்றாள்.
“என்ன படிச்சிருக்கீங்க?” மீண்டும் கேட்க, “பி.இ முடிச்சி எம்.பி.ஏ பண்ணிருக்கேன். ரெண்டு வருஷம் இந்தியா முழுதும் சும்மா சுத்தி வேஸ்ட் பண்ணியாச்சு. இப்போ அப்பா பிஸ்னஸ் எடுத்துக்க சொல்லுறாரு. நான் தான் ரெண்டு மாசமாவது தப்பிப்போம்னு இங்க வந்துட்டேன்” மெல்லிய குறும்புடன் கூறினாள்.
“அன்பு நாளைக்கு எனக்கு இந்த ஊர முழுசா சுத்தி காட்டணும், உன் வேலையெல்லாம் கொஞ்ச நாள் தூர வச்சுக்கோ. உனக்குத் தெரியுமா கயல்? அன்பு பெர்பைட் டூரிஸ்ட் கையேடு. எல்லா இடத்தைப் பத்தியும் நல்லா எக்ஸ்பிலைன் பண்ணுவான்” என்க, “ஏன் ஸ்வேதா ஒரே நாள்ல பார்த்துடைன்னா அப்பறம் ஒரு மாசம் என்ன பண்ணுவியாம்?”என்றான்.
“மாமாவுக்கு வேல ஜாஸ்தி!” அவன் கிண்டல் செய்கிறான் என்பதை அறியாது கயல் அவனுக்காகக் கூற, அன்புவிடம் கயலைக் கண்ணால் காட்டியவாறு சிரித்தாள் ஸ்வேதா.
மறுநாள் காலை பண்ணைக்குச் சென்று வந்தவன் காலை உணவிற்கு அமர, அப்போது தான் எழுந்தே வந்தாள் ஸ்வேதா. பயண அசதியில் தான் அவ்வளவு நேரம் உறங்கினாள் இல்லையெனில் வெகுவாகவே எழுந்திருப்பாள்.
அன்பு கிளம்ப அவளும் அவசரமாக உணவை விழிக்கி விட்டு அவனுடனே கிளம்பினாள். “சரி தோப்புக்குப் போகவா? வயலுக்குப் போகவா?”என்க, “இப்போ வயலுக்குப் போவோம், ஈவ்னிங் தோப்புக்குப் போகலாம்” என்றவள் பைக்கில் அவன் பின்னே அமர்ந்தாள்.
கயலும் பார்த்துக் கொண்டிருக்க, அவளிடம் கையசைத்துக் கொண்டு கிளம்பினான் அன்பு. வேலையாள் பேச்சியும் கவனித்ததை யாரும் கவனிக்கவில்லை.
வரப்பில் அன்பு முன்னே நடக்க அலைபேசியில் கவனம் பதித்தவாறு பின்னே நடந்து வந்து கொண்டிருந்தாள் ஸ்வேதா.
மோட்டார் பழுதாகியிருந்தால் அதைச் சரி செய்ய ஆள் வரச்சொல்லி இருந்தான். தற்போது ஆள் வந்திருப்பதாக வேலையாள் வந்து சொல்லி அழைக்க, தனக்கு வலது புறம் கை நீட்டி, “இந்த பக்கம் எல்லாம் நம்ம வயல் தான் நீ பார்த்துக்கிட்டு இரு. நான் மோட்டர் ரூம் வரை போயிட்டு வந்துடுறேன்” என பின்னே வந்து கொண்டிருந்த ஸ்வேதாவிடம் சொல்லிச் சென்றான்.
அவன் எந்த பக்கம் கை நீட்டினான் என்பதை கவனிக்காது, மொபைலை பார்த்துக் கொண்டே நடந்தவள் வரப்பிலிருந்து இறங்கி இடதுபுறம் நடக்கத் தொடங்கியிருந்தாள்.
சுற்றி எங்கிலும் பார்வைக்குள் குளிர்ச்சியைத் தெளிக்கும் பச்சை நெற்கதிர்கள் சில்லென்ற காற்றோடு கலந்து உறவாடியது. தூரத் தெரியும் பச்சை மலை முகடு வானைத் தொட்டுத் தீண்டுவது போன்ற தோற்றம் ரசனை மிகு ரசிகன் தீட்டிய சித்திரம் போன்றிருந்தது.
ஸ்வேதாவிற்கு அந்த இடம் மிகவும் பிடிக்க தன் மொபைலின் முன் கேமராவை ஆன் செய்தவள் தூரத் தெரிந்த மலையையும் போக்கஸ் செய்தவாறு செல்ஃபி எடுக்க முயன்றாள். சற்று பின்னே நகர்ந்து, நகர்ந்து அப்பெரிய மலையையும் தன் சிறிய கேமராவிற்குள் அடக்கிவிட முயன்றாள்.
அப்போது தான் தன் வயலுக்குள் இறங்கி இருந்த சந்திரன் சற்று தூரத்தில் மல்டி கலர் ஸ்கர்ட்டும், வெள்ளையில் டாப்பும் அணித்திருந்த பெண்ணை கவனித்தான். வெளிர் தேகம் சூரிய ஒளியில் ரோஜா மலர் போல் சிவந்து தெரிந்தது.
அவள் செய்கையைப் பார்த்தவன் யாருடா இந்த பஞ்சவர்ணக் கிளி? என்று எண்ணியவாறு அவளை நெருங்கினான். நேற்று ஒரு நொடிக்கும் குறைவாக அவளைப் பார்த்தது நினைவில்லை. தடுப்புச்சுவர் இல்லாது தரையையொட்டிய கிணறு பின்னிருப்பதை அறியாது பின்னே நகர்வதைப் பார்த்தவன் வேகமாக அவளை நெருங்கியிருந்தான்.
பின்புறம் கவனிக்காது பின்னோக்கி நகர்ந்தவள் காலில் ஏதோ பலமாகத் தட்டிவிட பின்னே சரிந்தாள். நொடியில் விழ இருந்தவளின் இடையைத் தாங்கின சந்திரனின் வலியக் கரங்கள். அவன் கைகளில் வில்லாய் வளைந்திருந்தவள் இரு விழிகளையும் இறுக மூடி ஒருகையால் மொபைலையும் மறுகையால் அவன் தோள்களையும் இறுக பற்றியிருந்தாள்.
அவள் உடல் தாங்கியவன் நிமிர்த்திய வேகத்தில் அவன் நெஞ்சில் மோதி பின் விலகி நின்றாள். அந்த ஒரு நொடிக்குள் அவன் வேர்வை கலந்த வாசத்தைச் சுவாசித்திருந்தாள்.
“அறிவில்லை? பொண்ணுனா கொஞ்சமாவது தரையைப் பார்த்து நடக்கணும்” என முணுமுணுத்தான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், நொடியில் அவன் யார் என்பதைப் புரிந்து கொண்டாள். நேற்று தான் தெரியாமல் தொட்டதற்கு அருவருப்பாய் பார்த்தானே, இன்று அவன் மட்டும் தெரிந்தே தொடலாமா? என்ற கோபம் எழுந்தது அவளுக்கு.
“ஏய்! உன்ன யாரு வந்து பிடிக்க சொன்னா? நான் வீழ்ந்தா உனக்கென்ன? நான் பிடின்னு சொன்னேனா?” எனக் கிணற்றின் ஆழத்தைத் திரும்பிக் கூட பார்க்காமல்,குரலை உயர்த்தாமல் அழுத்திக் கேட்டாள்.
ஒரு நொடி திகைத்து நோக்கியவன், மறுநொடி இவள் என்ன லூசா என்பது போல் பார்த்தான். பார்த்தால் வெளியூர் மாதிரி தெரிகிறது, உதவிக்கு ஒரு நன்றி கூட சொல்லாம மரியாதை இல்லாம பேசுகிறாளே என எண்ணிக் கோபம் கொண்டான்.
“இது தான் உனக்கு தெரிஞ்ச நாகரிகமா? உதவிக்கு நன்றி சொல்லாடியும் பாரவாயில்லை மரியாதையாப் பேசு. இந்த ஊர்ல எங்க குடும்பத்துக்கு எவ்வளவு மரியாதை இருக்குன்னு தெரியுமா? நான் யாருன்னு தெரியுமா?” என்றான்.
“ஓ! நீங்க இந்த ஊரு மைனரோ? இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம். நீ இந்த ஊருக்கே ராஜாவ இருந்தாலும் எனக்கு எந்த பயமுமில்லை!” உதட்டைச் சுழித்துக் கொண்டு அலட்சியமாக உரைத்தாள்.
மைனரா? மாமன் மகள் கயல், நிச்சியம் செய்த பூங்கோதை இவர்களைக் கூட நான் வேறு பார்வை பார்த்ததில்லையே! உதவிக்காகத் தொட்டதை என்னவோ ஆசையில் தொட்டது போன்று பேசுகிறாளே. என்னைப் பற்றி எவ்வளவு உயர்ந்த எண்ணம் இப்பெண்ணிற்கு எண்ணியவன், “பயமா அதெல்லாம் மனிதர்களுக்குத் தான் இருக்கும் உன்ன மாதிரி ராட்ஷசி கிட்ட எப்படிடி இருக்கும்?” என்றவன் திரும்பி நடக்கத் தொடங்கினான்.
ராட்ஷசி என்ற சொல்லில் கோபத்தின் எல்லைக்கே சென்றவள், அவனை சும்மா விடுவதா? உள்ளகையில் மொபைல் இருக்க அதே கையால் அவன் கையையும் எட்டிப் பிடித்தாள்.
தன் கையை ஒரு பெண் பிடிப்பதா என்ற கோபத்தில் வேகமுடன் தன் கையை அவள் கைச் சிறையிலிருந்து உருவினான். அவன் உருகிய வேகத்திற்கு உள்ளக் கைகளுக்குள் இருந்த உயர் ரக ஐபோன்னும் கீழே விழுந்து கல்லில் பட்டுச் சிதறியது.
முகம் சிவக்க, மூச்சு வாங்க மேலும் கோபம் கொண்டவள், அவனை நெருங்கி சட்டை பாக்கட்டிலிருந்த அவன் மொபைலை உரிமை கொண்டவள் போல் எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். அவளுக்கு அலைபேசியின் விலை சாதாரணம் தான் ஆனால் அவனை எளிதாக விடுவதாயில்லை.