ஊர் பெரியவர்கள் அனைவரும் திருவிழா பற்றிய முடிவெடுப்பதற்காக ஒன்று கூடியிருந்தனர்.
விஜயராகவன் திருமண அழைப்பிதல் வழங்குதல், உறவுகளை அழைத்தல் என ஜெயந்தியின் திருமண ஏற்பாட்டைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஆகையால் அவர்களின் குடும்பத்திலிருந்து சங்கரலிங்கம் கிளம்பினார்.
அப்போது தான் வந்த செல்வாவைப் பார்த்தவர், “செல்வா, நான் ஊர்க்கூட்டத்துக்கு கிளம்புறேன். நீயும் சந்திரனை கூட்டிட்டு வந்திடு” என்றார்.
“சரிங்க தாத்தா, நீங்க காத்திருக்க வேண்டாம். முன்னே போங்க. நான் அவனை கூட்டிட்டு வரேன்” என்று படிகளில் தாவியவன், மாடிக்கு ஏறினான்.
சந்திரன் எப்போதும் அறையில் உறங்குவதில்லை. இரவில் மாடியில் இயற்கைக் காற்றின் குளுமையில் தான் உறங்குவான். செல்வா சென்று பார்க்க, அவன் அங்கு இல்லை.
மீண்டும் இறங்கியவன், அவன் அறைக்குச் சென்று பார்த்தான்.
ஜன்னல் அனைத்தும் அடைக்கப்பட்டு விளக்குகள் அணைக்கப்பட்டு லேசான சூரிய ஒளி மட்டும் அறை முழுவதும் நிரம்பியிருந்தது. கட்டிலில் படுக்காது கீழே வெறும் தரையில் படுத்திருந்தவனின் ஒரு கையை உடலுக்குக் குறுக்காய் நெற்றியில் வைத்திருந்தான்.
செல்வாவின் அழைப்பில் எழுந்தவன், முகத்தை ஒருமுறை அழுத்திக் கோதிக்கொண்டு, “என்ன?” என்றான்.
குரலிலிருந்த கரகரப்பும் கண்களில் இருந்த சிவப்பும் அவன் இரவில் உறங்கவில்லை என்பதைக் காட்ட, அவன் நெற்றியில் கைவைத்தவாறு, “என்னாச்சு உடம்புக்கு ஏதும் முடியலையா?”என்க, “இல்ல நல்லாத்தான் இருக்கேன் என்ன விஷயம் காலையில வந்திருக்க?” என்றான்.
“அப்படி உனக்குத் தெரியாம பிரச்சனை இருக்க முடியுமா என்ன? அதெல்லாம் எதுவும் இல்ல, நான் போய் குளிச்சிட்டு வர்றேன்”
இதற்கு மேலும் இருந்தால் செல்வாவின் கேள்விகள் அதிகமாகும் என்பதால், எழுந்து ஓடினான்.
அனைத்தையும் செல்வாவிடம் சொல்லும் பழக்கம் இருப்பினும், நேற்று தான் கண்ட காட்சியைச் சொல்ல மனமில்லை.
சந்திராவின் நடவடிக்கையில் தெரியும் புது மாற்றம், தொலைந்த அவன் உற்சாகம்.. செல்வாவை என்னவோ செய்தது.
அவனுக்காக எதையும் செய்து விடத் தயார் தான். அதற்கு அவன் பிரச்சனை என்னவென்று தெரிய வேண்டுமே.கண்டுபிடிக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டான்.
எப்போதும் அன்புவின் திருமணம் பற்றியும் அவனுக்குப் பெண் பார்ப்பது பற்றியும் பேசும் சிவகாமி இன்று அமைதியாக இருக்க, ஆச்சரியமாகப் பார்த்தாலும் ஏதும் கேட்காது கிளப்பினான் அன்பு.
“சரவணா அண்ணா.. வண்டி எடுங்க, வெளியே கொஞ்சம் வேலையிருக்கு..” என்க, “சரவணா, நான் கோயிலுக்குப் போகணும் நீ இங்கேயே இருலே” என்றார் சிவகாமி.
“சரி அண்ணா, நீங்க ஆச்சியைக் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு அப்புறம் ஊர்க்கூட்டத்துக்கு வந்துருங்க. நானும் என் வேலையை முடிச்சிட்டு வரேன்” என்று கிளம்ப, சரவணன் தலையாட்டினான். சிவகாமி எதுவும் பேசாது அமைதியாக இருந்தார்.
அவன் சென்ற பின்,“ஏலே சரவணா இங்க வாலே” என்று அழைக்க, “என்னம்மா கோயிலுக்குக் கிளம்பலாமா?” என்றார்.
“அது இருக்கட்டும், இந்த வசந்தா மருமக கயலு பின்னாடியே நம்ம அன்பு சுத்துறானோ? அதான் எந்தப் புள்ளைய பார்த்தாலும் வேண்டான்னு சொல்லுறானோ?”
“ஐயையோ! அப்படில்லாம் இல்ல.. அந்தப் புள்ள தான் நம்ம தம்பிக்கிட்ட வழிய வந்து பேசுது, தம்பி பேசுறதில்லை”
“அப்படியா? பள்ளிக்கூடத்துல ஏதோ இரண்டு பேருக்கும் வாக்குவாதம்னு கேள்விப்பட்டேன்?”
‘அன்னைக்கு அங்க இருந்ததே நாங்க மூன்று பேருதான். இந்த விஷயம் எப்படிடா தெரிஞ்சது? சரிதான் இந்த அம்மாக்கிட்ட எதுவும் மறுக்க முடியாதே’ என்று நினைத்தவர், “நம்ம தம்பிக்கும் விருப்பம்தான் போல, ஆனா வெளியே சொல்ல மாட்டிக்கிறார். கோவிலுக்கு கிளம்பலாமாம்மா?” என்றார்.
“கோவிலுக்கு வேண்டாம், நம்ம ஜோசியர் வீட்டுக்குக் கிளம்பு” என்றார்.
ஜோசியரிடம் அன்புக்கும்,கயலுக்குமாகப் பொருத்தம் கேட்க, இருவருக்கும் அனைத்துப் பொருத்தங்களும் உள்ளது என்றும் மேலும் கயலின் மாங்கல்ய பாக்கியம் அன்புவிற்கு வரும் இன்னல்களிலிருந்து அவனைக் காக்கும் என்றும் கூறி அனுப்பினார்.
அவரின் கூற்றிலே மனம் நிறைந்த சிவகாமி திருவிழா முடியவும் கயலைப் பெண் கேட்டுச் செல்லவேண்டும் என்றெண்ணினார்.
ஊர் பெரியவர்கள் அனைவரும் கூடியிருக்க, சந்திரனும் செல்வாவும் வந்துவிட்ட பின்பும், அன்பு வரவில்லை. இராஜமாணிக்கம் அன்புவிற்காக சற்று நேரம் காத்திருக்கச் சொல்லச் சந்திரன் கோபம் கொண்டான்.
“என்ன மாமா? நேத்து வந்த பையன், அவனுக்கா பெரியவுங்க எல்லாரையும் காக்க வைக்கிறதா? இத்தனை வருஷம் அவனைக் கேட்டுத் தான் முடிவெடுத்தோமா?இல்ல, அவன் தான் அவ்வளோ பெரிய மனுஷனா? நேரத்துக்கு ஆரம்பிக்க” என்க,
செல்வாவும், “அவன் அப்படி என்ன ஊருக்கு நல்லது செய்தான்? மத்த எல்லாரும் நேரத்துக்கு வந்திருக்கோம் அவனுக்கு வர முடியாதா? அவனுக்கு அவ்வளோ வேலையா? இல்ல நாம தான் வெட்டியாயிருக்கோமா? அவனுக்கு எதுக்கு இம்புட்டு மரியாதை?” என இருவரும் மாறி மாறி அன்புவை குறை கூற அதே நேரம் அன்பு வந்தான்.
அவன் வருகையைக் கவனிக்காத சரவணன், “என்னாலே ரொம்பப் பேசுறீங்க? எங்க ஐயா இருந்தா தர்ற மரியாதையை எங்க தம்பிக்கும் தரணும், பார்த்துக்கோங்க?” எனக் கோபமாகக் கூறினார்.
“உங்க ஐயா தான் இப்போ இல்லையே! அவர் இருந்த போதும் நாங்க எங்கலே அவருக்கு மரியாதை தந்தோம்?” என்று சந்திரன் கூற, “மரியாதையைக் கூட கேட்டு வாங்குறாங்களே இது தான் பெரிய மனுஷன் அடையாளமா?” என்று செல்வாவும் கிண்டலாகக் கேட்டான்.
அன்புவின் தந்தையைப் பற்றிக் கூறியதில் கோபம் கொண்ட சரவணன், சட்டென செல்வாவின் மேல் கையோங்கி விட,அதில் கோபம் கொண்ட சந்திரன் சரவணனை தள்ளிவிட்டான்.
இவர்களின் பக்கம் நான்கு ஐந்து பேர் அவர்கள் பக்கம் சிலர் என சில நிமிடங்களில் கைகலப்பாகி விடப் பெரியவர்கள் குறுக்கிட்டுத் தடுத்தனர். அன்புவும் அவன் பக்கத்து ஆள்களை அமைதியடையச் செய்தான்.
செல்வா,சந்திரா இருவரின் கோபப் பார்வையும் அன்பு மீது பாய, அமைதியுடன் அமர்ந்தனர்.
“எப்பவும் போல வர்ற சித்ரா பௌர்ணமியிலிருந்து தொடங்கி கொடி ஏத்தி, பத்து நாளு திருவிழா நடக்கும். ஊர் பொது வரியா போன வருஷம் வாங்குன அதே தொகை தான். முதல் நாள் திருவிழா ஊர் பொதுமக்கள் சார்பா காளியம்மனுக்குப் பொங்கல் வச்சி கும்பிடுவாங்க.
அதுக்கு அடுத்த நாளிலிருந்து எட்டு நாள் திருவிழாவை ஊர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவுங்க, ஆளுக்கு ஒரு நாள எடுத்து நடத்தணும். பத்துநாளும் ஒவ்வொரு பல்லக்குல அம்மன் பவனி நடக்கும். முதல் நாள் ராத்திரி அம்மனுக்குப் பொங்கலும்,அடுத்த எட்டு நாள் இராத்திரி கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.
கடைசி நாள் ராத்திரி கருப்பசாமி வேட்டை நடக்கும். ஊருக்குள்ள யாரும் இருக்கக் கூடாது. எல்லாரும் அம்மன் கோயில் திடல்ல ஒன்னு கூடி காத்திருங்க.சாமி வரவும் குறி சொல்லும், ஒவ்வொரு குடும்பமா கேட்டுக்கலாம். அதிகாலையிலே எல்லாம் முடியவும் தான் எல்லாரும் வீட்டுக்குப் போகணும் அதுக்கப்புறம் கோடி இறக்கி திருவிழா முடியும். எல்லா வருஷமும் போலத் தான் நடக்கும்.
இதுல யாருக்கும் மாத்துக் கருத்து இருந்தா இப்பவே சொல்லிடுங்க.அப்புறம் வந்து என்கிட்ட கேட்கல, இதுல குறை, அதுல குறைன்னு சொல்லக்கூடாது. என்னங்கலே எல்லாம் சரி தானே? ” என ஒரு பெரிய மீசை அனைத்தும் விளக்கிக் கூறினார்.
“எல்லாம் சரிதான், இந்த சின்ன பயலுக எதுவும் வம்பு பண்ணாம இருந்தா போதும்” என மற்றொரு பெரியவர் கூறினார். அவர்களுக்கும் அறிவுரை கூற, அவர்களும் எப்போதும் போல் தலையாட்டினர். கூட்டம் முடிந்து அனைவரும் கிளம்பிச் சென்றனர்.
வரும் வழியில் சங்கரலிங்கம், “சந்திரா, நம்ம ஜெயந்திக்குக் கல்யாணம் நல்லபடியா நடந்தா கருப்பனுக்கு அருவா செஞ்சி வைக்குறாத பாட்டி வேண்டியிருக்களாம். அதனால கொல்லன் கிட்டே ரெண்டு பெரிய அருவா அடிக்க சொல்லிரு” என்றார்.
சந்திரனோ அன்புவின் மேல் பெரும் கோபத்திலிருந்தான். அவனுக்காகத் தன்னைக் காக்க வைத்தது,மேலும் அங்கு நடந்த கைகலப்பு, அதில் அன்புவிற்கு இருக்கும் ஆதரவு இதைப் பற்றிய சிந்தனையிலிருந்ததால் அமைதியாக இருந்தான்.
வண்டியோட்டிய செல்வா அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சரிங்க தாத்தா நான் சொல்லிடுறேன்” என்றான்.
பள்ளியில் வருட இறுதி தேர்வு தொடங்கிருந்தது. அன்பு பள்ளியின் பக்கம் எப்போதாவது மட்டுமே வர அவனைக் காண்பது கயலுக்கு அரிதாகிப் போனது.
பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி மடல் ஒன்று அனுப்ப வேண்டியிருந்தது. அதைத் தயார் செய்த கயல், அன்புவின் கையெழுத்து வாங்க வேண்டும் என்றெண்ணி இருக்க, அவன் பள்ளிக்கே வரவில்லை.
மாலை கயலின் வீட்டிற்கு முன்பு எப்போதும் போல் சிறுவர்கள் பாடம் படித்துக் கொண்டும் சிலர் விளையாடிக் கொண்டுமிருந்தனர்.
அதில் ஒரு சிறுவனை, “டேய் குமாரு இங்க வாலே” என்றழைக்க, “என்ன? இப்போ எந்த கடைக்கு போணும் என்ன மிட்டாய் வாங்கிட்டு வரணும்?”எனக் கேட்டான்.
“கடைக்குப் போக வேண்டாம், பெரிய வீட்டுக்குப் போய் இத அன்பு மாமாக்கிட்ட கொடுக்கணும்” என்று பேப்பரை நீட்டினாள்.
“சரி, கொடுக்குறேன் எனக்குக் கணக்குல மார்க் நிறைய போடுவியா?” எப்போதும் வாதிட்டுப் பழக்கமாகையால் இப்போதும் அப்படியே கேட்டான்.
அதில் சற்றுக் கடுப்பானவள் சரியென்று தலையாட்ட, “ஆமா கயலக்கா இது என்னது?” எனக் கேட்டவாறு மடிக்கப்பட்டிருந்த காகிதத்தைப் பிரிக்கிறேன் எனக் கிழிக்க முயன்றான்.
அவனைத் தடுத்தவள் அவன் தலையில் கொட்டி, “அது லவ் லெட்டர்! போதுமாடா? இப்போவாவது போ..” என்றாள் கடுப்புடன்.
அன்புவின் வீட்டிற்குச் சென்றவன், ஹாலில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தவனிடம் கயல் கொடுத்த காகிதத்தைக் கொடுத்தான்.
வாங்கி படித்தவன், தன் அறைக்குச் சென்று அதில் கையெழுத்திட்டு மேலும் ஒரு காக்கி கவரில் வைத்துக் கொடுத்தான்.
அதை வாங்கிய சிறுவனுக்குத் தான் கொடுத்தது இதில்லை என்பது புரிய, “என்னது சார் இது?” எனக் கேள்வி கேட்க, அவனை ஒருபார்வை பார்த்தவன், “உங்க கயலக்கா கொடுத்தது தாலே இது” என்றான். அதை வாங்கிய சிறுவனும் கிளம்பினான்.
அவனைப் பொறுத்தவரைக் கயல் அன்பிற்குக் காதல் கடிதம் கொடுத்ததால், இப்போது தன் கையிலிருப்பது அன்பு கயலுக்குக் கொடுக்கும் பதில் காதல் கடிதம்.
ஜெயந்தி வீட்டில் அவள் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாய் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வண்ணம் பூசப்பட்டு, பந்தல் அமைக்கப்பட்டு,ஊரார் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.
மாப்பிள்ளை வீட்டின் சார்ப்பில் அன்புவிற்கும் அழைப்பிதழ் வழங்கியிருந்தனர். ஊர் நடுவே இருக்கும் முத்து மாரியம்மன் கோயிலில் திருமணமும், வீட்டில் அனைவருக்கும் விருந்தும் ஏற்பாடு செய்திருந்தார்.
சரியாக ஒருவாரத்தில் திருமணம், அதன் பின் இரண்டாம் நாளிலிருந்து ஊர்த்திருவிழா ஆரம்பமாக இருந்தது. சந்திரனும் தன் கோபத்தை ஒதுக்கி, ஆசை தங்கையின் திருமண ஏற்பாட்டில் பரபரப்பாக இருந்தான்.
செல்வா வண்டியோட்டப் பின்புறம் அமர்ந்திருந்தான் சந்திரன். இவர்கள் பைக் வீட்டு வாசலின் அருகே வர, எதிர்வீட்டிலிருந்து வந்த சிறுவன் குறுக்கே வந்தான்.
செல்வா உடனே வண்டியைத் திருப்பி விடச் சந்திரன் அந்தச் சிறுவனைப் பிடித்துக் கொண்டான், “ஏலே எதுக்குலே இப்படி குறுக்கால வார? விழுந்திருந்தா நான் உன் மேலையே வண்டியை விட்டுருப்பேனே?” செல்வா மிரட்டலோடு கேட்க,
சந்திரனுக்கு என்னவோ போல் இருந்து. சிறுவயதில் ஜெயந்தியுடம் பேசுவது போல் கயலிடமும் அன்பு பேசுவதையும் வம்பிழுப்பதையும் அறிந்திருந்தான். அப்போது அவனும் சிறுவன்தான் என்பதால் இதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் கிட்டத்தட்ட ஏழுவருடங்களுக்குப் பின் அன்புவை முதல் முறையாக அன்று கடையில் பார்க்கும் போது அவன் பார்வை உடைத் தேர்விலிருந்த கயல் மேல் இருப்பதைக் கவனித்தான். ஜெயந்தியுடன் பேசிக்கொண்டிருந்தாலும் கயலைத் தழுவிய அவன் பார்வையிலிருந்த தவிப்பும்,ஏக்கமும் கலந்த எல்லையில்லாக் காதலை அன்றே கண்டுகொண்டான் சந்திரன்.
பின் பள்ளி ஆண்டு விழாவின் போது அவன் பார்வை கயலைத் தீண்டுவதைத் தாங்காது, கயலை அழைத்து தன்னருகே அமர்த்திக் கேட்டான்.
அன்று இரவு அவர்களை நெருக்கத்தில் பார்த்த போது, அன்புவின் சட்டையைப் பிடித்து இழுத்து வந்து உதைக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் கயலுக்கு ஏதேனும் அவப்பேர் வந்து விடுமோ என்று அமைதியாக திரும்பி விட்டான்.
ஆனால் இன்று அன்புவின் காதல் கடிதம்.. அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இரவில் வெகுநேரமாகச் சிந்தித்தவன், அன்புவை துடிதுடிக்க வைக்கும் ஒரு வழியைக் கண்ட பின்னே கண் மூடினான்.