நகரெங்கும் அண்ணாமலையாரின் நாமமும் மக்களின் கூட்டமும் ஒருசேர பெருகியபடி இருக்க, ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் நகர் முழுதும் குவிக்கப்பட்டு, திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திற்கு தயார் நிலையில் இருந்தது. இடைவெளியின்றி வரிசையில் செல்லும் மக்களையும் அவர்களை நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்தும் காவலர்களையும் கண்காணித்தபடி கோவிலை ஒரு சுற்று சுற்றி வந்து கண்காணிப்பு அறையில் சற்று நேரம் அமர்ந்து கேமரா பதிவுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக்.
காலையிலிருந்தே கூட்டம் கூட்டமாய் மக்கள் ஊருக்குள் நுழைய உயரதிகாரியாய் அனைத்தையும் முன்னின்று திட்டமிட்டு ஏற்பாடுகளையும் கவனித்து மூச்சுவிடக்கூட நேரமின்றி சுத்திக் கொண்டிருந்தான் அவன். ஆனால் அவன் வேலையாய் இருக்கும் போது தொந்தரவு செய்ய மாட்டேன் என்று தான் கொடுத்த வாக்கிற்கு மாறாக அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அவன் அலைபேசிக்கு அழைத்து தொந்தரவு செய்து கொண்டிருந்தாள் மீரா. அவனும் சலைக்காது ஒவ்வொரு முறையும் அழைப்பை ஏற்று சீக்கிரம் வந்துவிடுவதாய் சொல்ல, இப்போதும் சரியாய் அரைமணி நேரம் கழித்து அழைத்திருந்தாள்.
சுற்றிலும் அவனை ஒத்த அளவு அதிகாரம் படைத்த அதிகாரிகள் பலர் சூழ்ந்திருக்க இவள் இப்படி நசநசக்கவும் அவனது பொறுமையும் கரையத் தயாராய் இருந்தது. இருப்பினும் அவள் இப்படி தொனதொனப்பதற்கு பின் இருக்கும் காரணம் புரிந்தமையால் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியை இழுத்துப் பிடித்து நிறுத்த முயன்றான்.
“இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துறேன் மீரா… முக்கியமான வேலையில் இருக்கும் போது இப்படி கூப்டுகிட்டே இருக்காத… வீட்டுக்கு வராம எங்க போயிடப் போறேன்…” என்று அழுத்தமாகவே சொல்ல அதெல்லாம் அவள் கருத்தில் பதியவே இல்லை.
“நான் நாலு மணிக்கு போன் பண்ண போதும் இதேதான் சொன்னீங்க. இப்போ மணி அஞ்சு. இன்னும் அரைமணி நேரம்னா எப்போ? நைட் தான் வரமுடியும்னா சொல்லிடுங்க… நான் வேஸ்ட்டா கிளம்பி உட்கார்ந்து வாசலையே பார்த்துட்டு இருக்க மாட்டேன் பாருங்க… டீவிலேயே நான் பார்த்துக்குறேன்… போங்க… உங்க வேலையை பாருங்க…” என்று சிணுங்களுடன் அழைப்பை துண்டித்தாள் அவள்.
‘சிணுங்கியே நம்மளை ஒருவழி பண்ணிடுறா. இன்னைக்கு கண்டிப்பா அவளை கோவிலுக்கு கூட்டிட்டு வந்துரனும்.’ என்று நினைத்துக்கொண்டவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் தாங்கள் தங்கியிருக்கும் காவல் குடியிருப்பு நோக்கி பறந்தான்.
அவனுக்காகவே காத்திருந்தவள் அவன் வண்டியின் அரவம் கேட்டதும் வாயிலுக்கு விரைந்து வந்தாள்.
“போன்ல காஞ்சிட்டு இப்போ ஈன்னு பல்லை காட்டிட்டு நிக்கிற?” என்ற கேள்வியுடன் அவளின் மலர்ந்த முகத்தை ரசித்தபடி ஷூவை வாயிலில் விட்டுவிட்டு உள்ளே நுழைந்தான்.
“எனக்கு பயமாவும் இருக்கு, எக்ஸைட்டாவும்(Excite) இருக்கு. ரொம்ப கூட்டமா இருக்கா? நாம கிட்ட போய் சாமி பார்க்கலாமா?” என்று மீராவிடம் கேள்விகள் மட்டுமே இருந்தது. அவன் பேச்சுக்கான எதிர்வினையோ பதிலோ இல்லை… ஒருவித ஆர்வமும் பரபரப்பும் மட்டுமே வெளிப்பட்டது அவர்கள் வெளியே செல்ல இருப்பதை எண்ணி.
ஏழு மாதங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் செல்லவில்லை. நிறுத்தி நிதானமாய் இருவரையும் படுத்திவிட்டு தான் நகர்ந்தது. ஆனாலும் அந்த ஆறு மாத காலத்தில் நிகழ்ந்த பெருத்த மாற்றம் அவள் எதிர்பார்த்தது போலவே அவளை வெகுவாய் மாற்றியிருந்தது. அந்த மாற்றத்தின் விளைவு ஒரு வாரமாய் கணவனுடன் திருவண்ணாமலையில் தனி வாசம். பால் காய்ச்சி நெருங்கியவர்களை மட்டும் கூப்பிட்டு அவன் தங்கி இருந்த க்வார்ட்ஸிலேயே விருந்து வைத்தனர். மீரா அந்த ஒற்றை பெட்ரூம் வீட்டை பார்த்துவிட்டு இதுவே தங்கள் இருவருக்கு இப்போதைக்கு போதும் என்றுவிட்டாள்… இனி குடும்பம் பெரிதானதும் பெரிய வீடாய் பார்த்து குடியேறினால் போதுமாம் அவளுக்கு. குடும்பத் தலைவியாய் அவனது வரவுகள் அனைத்தையும் தன் வசப்படுத்திக்கொண்டு இப்போதே சொந்தமாய் வீடு வாங்க வேண்டுமென பணமும் சேர்க்கத் துவங்கிவிட்டாள் அவனின் கண்ணம்மா.
“நான் கூட நம்மாளு இன்னைக்கு புல் லவ் மூடுல இருக்கா போல நம்மளை நொடிக்கொருமுறை டிஸ்டர்ப் பண்றாளே, இன்னைக்கு செம்ம ஸீன் வீட்டுல காத்திட்டு இருக்குன்னு வேகமா வந்தா என் முகம்கூட பார்க்காம வெளிய போக அவ்வளவு ஆர்வம் உனக்கு…” என்று அவன் போலியாக கண்டிப்பை காட்ட அலட்டாமல் எட்ட நின்னே குளித்துவிட்டு வரும்படி அவனிடம் சைகை காட்டினாள் அவள்.
“ஏய், ரொம்ப பண்ற நீ… இந்த வாரம் முழுசும் வீட்டை உனக்கு பிடிச்ச மாதிரி செட் பண்றேன்னு சொல்லியே காலம் தள்ளுன… இப்போ கொஞ்சம் கிட்ட விட்டாதான் என்னவாம்???” என்ற அவனது பும்பல் அவள் செவியை எட்டும்முன்னே அவன் கரங்கள் நீண்டு அவளை தழுவியிருந்தது.
“ஷ்… கோவிலுக்கு போகனும்… சும்மா இருங்க.” என்று அவனை தள்ளிவிட்டவள் தன் உடை சரியாய் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள்.
“இந்த புடவை நல்லாயிருக்கா? என்னோட லாஸ்ட் பர்த்டேக்கு அண்ணி கிப்ட் பண்ணது, இப்போதான் முதல் முறை கட்டுறேன்.”
“நீதான் கோவிலுக்கு போகணும்னு சொல்லிட்ட… இல்லைனா உன் கேள்விக்கான பதிலை தீர ஆராய்ஞ்சி அக்குவேறா ஆணிவேரா பிரிச்சு மேஞ்சு சரியான பதிலை சொல்லியிருப்பேன்…” என்று சீண்டலாய் அவன் உதட்டை பிதுக்க, மீராவின் முகம் முறைப்பை பிரதிபலித்தது.
“இப்போலாம் உங்க பேச்சே சரியில்லை. அதுவும் நான் இங்க வரவும் உங்களுக்கு வாய் கூடிப்போச்சு. என்னமோ இந்த ஏழு மாசமும் ஒண்ணுமே பண்ணாம பக்கத்துல கூட வராம சும்மா இருந்த மாதிரியே எப்போதும் பேசவேண்டியது…” என்று நொடித்தவள், “சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க… மகாதீபம் ஏத்துற நேரம் கோவிலுக்கு போயிடனும்.” என்று அவனை விரட்டுவதில் அவள் குறியாய் இருக்க, அவன் சோம்பல் முறித்து நிதானமாய் அறைக்குச் சென்று உடை களைந்து குளிக்க வேண்டுமா என்று அலுப்புடன் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தான்.
“நாமதான் வீட்டை பூட்டிட்டு கோவிலுக்கு போறோமே, எதுக்கு வீட்டு வாசல்ல நிறைய அகல் விளக்கில் எண்ணெய் ஊத்தி வச்சிருக்க? அதை யார் ஏத்துவா?”
“பக்கத்து வீட்டு அக்காகிட்ட சொல்லியிருக்கேன். நாம கிளம்புறதுக்கு முன்னாடி வீட்டு சாமியறையில் விளக்கு ஏத்திட்டு கிளம்புனா போதும். மத்ததை அவங்க பார்த்துப்பாங்க… நீங்க வெட்டியா பேசாம கிளம்புங்க சீக்கிரம்…” என்றவள் அவனை குளியலறைக்குள் தள்ளிவிட்டு மீண்டுமொருமுறை கண்ணாடி முன் சென்று நின்றாள்.
ஏழு மாதங்களில் அகத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு மாறாக துளியும் மாறாமல் ஒன்றரை வருடங்களாய் அவளுடன் பயணிக்கும் வடு இன்னுமே அவளின் இடப்பக்கத்தை அலங்கரித்திருந்தது. அகமாற்றத்திற்கு ஏதுவாய் புறவடிவையும் மாற்ற அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற ஒப்புதல் இப்போதுதான் மருத்துவர்களிடமிருந்து கிடைத்திருக்க, அதற்கான செலவீனங்களோ மலைப்பாய் மலையளவு என்பது மட்டுமின்றி குறைந்தது பத்து முறையேனும் கத்திபட்டால்தான் இழந்ததை மீட்டெடுத்து தேற்ற முடியும் என்றும் சொல்லிவிட அதுவும் மலைப்பாய் இருந்தது. பத்துமுறை அறுவை சிகிச்சையா! இது கண்டிப்பாய் தேவையா என்று கார்த்திக்கும் பதறிவிட்டான். அனைவருமே சிகிச்சையை எண்ணி தயங்க, அதைமட்டும் ஒருமனதாய் கொஞ்ச நாட்கள் தள்ளி வைத்துள்ளனர்.
மற்றபடி அவர்களின் இயல்பு வாழ்க்கை இயல்பாய் துவங்கி, மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு இன்றுதான் முதன்முதலாய் செல்கிறாள் மீரா. அதற்குத்தான் இத்தனை ஆர்வமும் பதட்டமும். அவ்வப்போது அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்வது, கூட்டம் அதிகமில்லாத போது மெரினா கடற்கரை செல்வது, சிறிய கோவில்களுக்கு செல்வது என்று கார்த்திக் வாராவாரம் சென்னை செல்லும் போதெல்லாம் இருவரும் ஊர் சுற்றி வெளியுலகை தைரியத்துடன் எதிர்கொள்ள அவளை தயார்படுத்தி இருந்தாலும் இன்றுதான் மக்கள் அதிகம் கூடி நெரிசல் இருக்கும் இடத்திற்கு அவளை கூட்டிச் செல்ல ஒப்புக்கொண்டிருக்கிறான் மருத்துவர் ஷோபா ஆலோசனையின் பேரில்…
“என்ன யோசனையெல்லாம் பலமா இருக்கு?” பின்னிருந்து அணைத்தவன் நாசி அவள் தாடை உரச, கரங்கள் மென்னிடையைத் தழுவ, மொழி அவள் செவி தீண்டியது.
“என்னதான் நார்மலா இருக்க பழகிக்கிட்டாலும் என்னோட கான்ஷியஸ் ரொம்ப அலர்ட்டா இருக்கு. டக்குன்னு கவனம் என் முகத்துத்தான் போகுது…” என்று உதட்டை பிதுக்கி தலையை வலமும் இடமும் அசைத்து தன் முகத்தை மீண்டுமொருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.
“எதுவும் ஒரே நாளில் மாறிடாது கண்ணம்மா… உன்னை நீயே போர்ஸ் பண்ணிக்காத, லெட் இட் பீ…” என்ற அவன் ஆறுதல் வார்த்தையோடு சேர்த்து அவனது விரல்களும் அவள் புடவை நுனியை இழுத்து அவளிடையில் சொருகி ஜாலம் செய்ய, மிச்சம் ஒட்டிக்கொண்டிருந்த தயக்கங்கள் யாவும் கருத்திலிருந்து தப்பி கவனம் திசைதிரும்பியது.
“எவ்வளவு சீக்கிரம் உங்க வேலை எல்லாம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கப் பாருங்க… அண்ணிக்கு எப்போவேணா குழந்தை பிறந்துடும்… நாம உடனே போய் பார்க்கணும்.”
“போலாமே… சுஜாவுக்கு டெலிவரி டைம் நெருங்கவுமே அங்க போற மாதிரி இருக்கும்னு அவசரமா முடிக்க வேண்டிய வேலையெல்லாம் முடிச்சிட்டேன். மலையில் தீபம் ஏத்திட்டா இப்போ இருக்கிற நெருக்கடியும் குறைஞ்சிடும். நாம நாளைக்கு நைட் இங்கிருந்து கிளம்புவோம்.” என்றவன் விரைந்து உடை அணிந்து அவளை கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.
முன்பு போல் முகத்தை மறைக்காது வெகு இயல்பாய் இருசக்கர வாகனத்தில் அவன் பின் அமர்ந்து சென்ற போது ஏற்படாத பதட்டம் அவன் வண்டியை அதனிடத்தில் விடுத்து அவளை கோவிலுனுள் மாற்று வழியில் அழைத்துக் செல்லும் போது வந்தது. அதிகாரிகள் மட்டுமே செல்லும் மாற்று வழி என்றாலும் அது பொது தரிசன வரிசையை ஒட்டியயே இருந்தது. அங்கிருக்கும் கூட்டத்தைக் கண்டு ஒரு நொடி ஒரே நொடி அனைத்தையும் உதறிவிட்டு ஓடிவிடலாமா என்று எழுந்த எண்ணமும் கூட குறுகலான ஓரிடத்தில் அவள் இடித்துக்கொள்ளக் கூடாதென பட்டும்படாமல் அவள் தோள் சுற்றி கைபோட்டு அவளை அவன் அரவணைக்கும் போது மொத்தமும் மறைந்தது. எதை பற்றியும் நினைக்கக் கூடாது என்று மனதில் உருபோட்டப்படி அவனுடன் முன்னேறினாள்.
உறுதியெடுத்தபடி எதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் மனதை ஒருமுகப்படுத்தி பிராத்தனை முடிக்க, அவளின் இயல்பு நிலை கண்டு ஆசுவாசமான கார்த்திக் அவளை கட்டுப்பாடு அறைக்கே கூட்டிச்சென்று அவ்வறை வாயிலில் நாற்காலி போட்டு அமரவைத்துவிட்டு மீண்டுமொருமுறை மேற்பார்வையிட சென்றுவிட்டான்.
“மேடம் டீ எடுத்துக்கோங்க… சார் கொடுத்துவிட்டாரு.” என்று அருகில் ஒலித்த குரலில் சட்டென நிமிர்ந்தவள் அவள் முன் நீட்டப்பட்ட டீ கப்பை வாங்கிக்கொண்டாள். டீ கொண்டுவந்து கொடுத்தவரோ உடனே நகராமல் அவளை ஆழ நோக்க,
“என்ன? இந்த பொண்ணை எப்படி சார் கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு யோசிக்கிறீங்களோ?” என்ற மீராவின் கேள்வியில் அசட்டுச் சிரிப்பை உதிர்த்து பெயருக்கு அவளிடம் ஏதோ சாக்கு சொல்லி நகர்ந்துவிட்டார்.