Advertisement

அத்தியாயம்….6

சிறிது நேரம் சென்றதும்….. “மது….மது….வண்டிய நிறுத்து.” நல்ல மூடில் இருந்தால் அத்தான் என்றும், சாதரண மூடில் இருந்தால் மாதவன் என்றும், தன் அண்ணன் இருக்கும் போது வெறுப்பு ஏற்றும் மூடில் இருந்தால்….மது என்றும் அழைப்பாள்.

மாதவன் வண்டியை நிறுத்தி விட்டு….. “ ஏய் ஒழுங்கா கூப்பிட மாட்ட…..” தன்  சொல் பேச்சை கேட்க மாட்டாள் என்று தெரிந்தும் சம்பூர்ணாவை கண்டித்தான்.

“ஓ இது அண்ணனோட ப்ரோத்தியோக அழைப்புல…..” மாதவனை கிண்டல் செய்தால் எப்போதும் அமைதியாக இருக்கும் கண்ணன் இன்று…

“ என்ன பேச்சு இது…..? அவன்  படிப்புக்காவது மதிப்பு கொடு. அதுவும் இல்லாம நீ  பேசுறத மீடியா ஆளுங்க யாராவது கேட்டா…..பிரச்சனை ஆயிடும்.” தன் குறும்பு எல்லாம் மாதவனிடம் மட்டும் தான்….

தன் அண்ணன் மீது பயம் என்பதை விட கொஞ்சம் மரியாதை என்று வேணா சொல்லலாம். அதனால் பதில் பேசாது வெளியில் அமைதி காத்தாள்.

மனதிலோ அப்ப என்ன பில்டப்….மீடியா ஆளுங்க. இவங்க பெரிய வி.ஐ.பி எல்லா மீடியாக்காரனுங்களும், இவங்க பின்னாடி சுத்துறதுக்கு….

காஞ்சிபுரத்தின்….I.A.S….I.P.S….பற்றிய செய்தி, மீடியாங்காரங்களுக்கு,  சிறப்பு செய்தி தான் என்று அவளுக்கு புரியாது போனது.

தன் தங்கை தன் சொல் பேச்சு கேட்டு அமைதி ஆனதால் …. “ எதுக்கு குட்டிம்மா  நிறுத்த சொன்ன…..?”

அங்கு இருக்கும் ஒரு ஸ்டார் ஓட்டலை காண்பித்தாள். “நான் சொல்லலே மச்சான் கொட்டிக்க தான்  அவ்வளவு அவசரமா ஓடி வந்தாள் என்று…..” வாய் பேச்சு அவளை வாரினாலும், அவள் சொன்ன இடத்துக்கு காரை நிறுத்தினான்.

உணவு ஐட்டத்தை பதிவு செய்துக் கொள்ள வந்து நின்றவனின் பொறுமையை சோதித்து கொண்டு இருந்தாள் நம் சம்பூர்ணா…

“தந்தூரி சிக்கன். சிக்கன் ரைஸ், மட்டன்  சூப்….” ஒரு ஐட்டத்தை சொல்வதும்…திரும்பவும் மெனு கார்டில் அரைமணி நேரம் தலை புகுத்தி…..விட்டு இன்னொரு ஐட்டம் சொல்வதுமாக இருந்தாள்.

“குட்டிம்மா….பாவம் விட்டுடு….” அங்கு நின்றவனை பார்க்க முடியாது சொல்ல.

“சரி இப்போதிக்கு இது போதும். வேனுமுன்னா அப்புறம் ஆர்டர் செய்துக்குறேன்.” விட்டால் போதும் என்று அவன் ஓடியே விட்டான்.

“போனவன் அவன் வேலைய தொடர்ந்தா…நீ ஆர்டர் செய்.” வாயில் முனு…. முனுக்க…..

“என்ன சொன்ன மாதவா…..?”

“ஆர்டர் சொன்ன ஐட்டம் வந்துடுச்சி….சாப்பிடுன்னு சொன்னேன்.” அவன் சொன்னதை நம்பவில்லை என்றாலும்….

இப்போது சாப்பாடு தான் முக்கியம் என்று  தன் சாப்பாட்டை தொடர்ந்தால்…. “நீயும் சாப்பிடு….மது….” கண்ணன் சொல்ல,

“உன் தங்கை மிச்சம் மீது வெச்சா பாக்கலாம்.”  என்று சொன்னவன் அவள் சாப்பிடுவதை பார்த்திருந்தான்.

“ஹாய் அஷ்வத்  இப்போவாவது உன்ன பிடிக்க முடிஞ்சுதே….சென்னை வந்து நான்கு வருடம் ஆயிடுச்சி…..இப்போ தான் நாங்க கூப்பிட்டு வந்து இருக்க…..”

“இல்ல அப்பாவுக்கு உடம்பு இப்படி ஆயிட்டதால அங்க ….இங்க ….நகர முடியல…..”

“ஆ அது மட்டும் தான் காரணமா…..? போற இடத்துல எல்லாம் இளம் சிட்டுங்க…..அவங்கல பார்க்காம உன்னையா பாக்க சொல்ற…..?சொல்லு  மச்சான்.”

இன்னும் கல்லூரி பருவத்தில் இருந்து வெளி வராதவன் சொன்னதும்…..

“ரப்பிஷ் பார்த்து பேசு…..?”

“என்னடா புதுசா புத்தர் ரேஞ்சுக்கு பேசுற…..ஏன் நீ பெண்களே பாக்க மாட்டியா…..?”

அஷ்வத் கல்லூரி  பருவத்தில் இவர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்யாத பெண்கள் இல்லை. ஆனால் இப்போது தன் பதவிக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொண்டான்.

சொன்னால் நம்ப போறது இல்லை. அதனால் அந்த பேச்சை விடுத்து….. “ சரி நீங்க எல்லாம் என்ன செய்யிறிங்க…..?” என்று பேச்சின் திசை திருப்பியவனின் கவனமும் திரும்பியது, அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்த சம்பூர்ணாவை பார்த்து….

இவ எங்கே இங்கு…..? பிரன்ஸ் கூடவா….? அவ்வளவு பெரிய ஆளுங்களா அவ பிரன்ஸ்…..ஸ்டார் ஓட்டலை நினைத்து அவன் அவ்வாறு எண்ணினான்.

சம்பூர்ணாவின் எதிரில் மாதவனும், கண்ணனும் அமர்ந்து இருந்ததால்….அவர்களின்  முதுகு மட்டும் தான் தெரிந்தது.

அஷ்வத்தின் கவனம் இங்கு இல்லை என்றானதும்….அவன் பார்வை சென்ற திசை பக்கம் அனைவரும் பார்க்க.

“ஓ..ஓ “ என்று  கோரசாக குரல் எழுப்பினர்.

இந்த சத்தத்தில்  மாதவன், கண்ணன் திரும்பி பார்த்தனர் என்றால்….சம்பூர்ணா தான் சாப்பிடுவதை விட்டு நிமிர்ந்து பார்த்தவள்…..அங்கு அஷ்வத்தை பார்த்து கை அசைத்தாள்.

“போச்சுடா….” என்று  அவன் நினைப்பதற்க்கும், திரும்பவும் ஒரே குரலாய்….. “ஓ…..” என்று கோஷம்  இடுவதற்க்கும் சரியாக இருந்தது.

“ஏய் சூ….”  என்று அஷ்வத் அவர்களை அதட்டினான்.

மாதவனையும், கமலக் கண்ணனையும் அஷ்வத் பார்த்து விட்டான். தங்கள் ட்ரஸ்ட் மூலம் அவர்களை பற்றி ஆராய்ந்ததில், அதில் இருந்த புகைப்படம் வைத்து  அடையாளம் கண்டு கொண்டான்.

சம்பூர்ணா  ஒரு இளைஞனை பார்த்து கை  அசைத்தது பார்த்து…. “ யாரு…..?” என்று பொறுப்புள்ளவர்களாய் இருவரும் ஒரு சேர கேட்டனர்.

அஷ்வத்தை பார்த்தால் தவறாக தோனவில்லை. யார் என்று அறிய கேட்டனர். “எங்க காலேஜ் பாஸ்…..”

“காலேஜ் பாஸா…..?” கமலக் கண்ணன் புரியாது கேட்டான்.

“ஒரு கம்பெனிக்கு ஓனரை என்னன்னு கூப்பிடுவோம்…..?பாஸூன்னு தானே…..? நான் படிக்கும் காலேஜூக்கு இவர் தான் பாஸ்.” எப்படி சொல்றா பாரு…..

அஷ்வத்தை பார்த்தால் கூட படிப்பவர் போல் தெரியவில்லை. ஒரு சமயம் லெக்சரோ என்ற சந்தேகத்தில் கேட்டவர்களுக்கு அவள் பதில் அளித்த விதம், தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

மரியாதை நிமித்தமாக ஒன்று போல் மாதவனும், கமலக் கண்ணனுன் அஷ்வத்தை நோக்கி சென்றார்கள்.

அஷ்வத்தின் நண்பர்கள் …. “ ஏய் அவனுங்க வராங்கடா…..” என்று சொன்னதும், அவர்கள் முன் ஏதாவது சொல்லி வைத்து விட போகிறார்கள் என்று…

“ அவங்க இரண்டு  பேரில் ஒருத்தர் ….I.P.S…. இன்னொருத்தர்….I.A.S….” என்று  அஷ்வத் சொன்னது தான் அனைவரும் கப்சிப் .

அவர்கள் அருகில் வந்ததும் அஷ்வத் எழுந்து நிற்க…. மரியாதை நிமித்தம் இருபக்கமும்  கை குலுக்கப்பட்டன. அஷ்வத் நண்பர்கள் இருவர் அமர இடம் ஒதுக்கி கொடுக்க…..

அமர்ந்ததும்….கமலக் கண்ணன்  மட்டும் தன் தங்கையை பார்க்க….. “அவ முன்னாடி இருக்குறது காலியாகும் வரை அவ நிமிர்ந்து பார்க்க மாட்டா….” அவளை பார்க்க தேவையில்லை என்று  சொன்ன மாதவன்….

அஷ்வத்திடம்…… “சாரி…..” என்று மன்னிப்பு வேண்ட…..

அஷ்வத் எதுக்கு என்று புருவத்தை உயர்த்தினான் என்றால்….. கமலக் கண்ணன் அதை முகத்தில் காட்டி மாதவனை பார்த்தான்.

“இல்ல முதல் நாளே…குட்…(குட்டிம்மா என்று சொல்ல வந்தவன்.) சம்பூர்ணா காலேஜில பிரச்சனை பண்ணிட்டா….” என்று சொன்னதும்…

“இல்ல எங்க காலேஜ் பசங்க மேல தான் தப்பு. அதுக்கு பனிஷ்மென்ட்டும் கொடுத்துட்டேன். என்ன ஒன்னு  உங்க வீட்டு பொண்ணு அந்த பசங்கல டிஸ்மிஸ் செஞ்சாகனுமுன்னு அடம் பிடிச்சாங்க…அந்த பசங்களோட எதிர் காலத்தையும் யோசிக்கனும்லே…..”

“வாஸ்தவம் தான்.” அவர்களின் உரையாடலை  எந்த வித இடையூறும் இல்லாது கேட்டுக் கொண்டு இருந்த கமலக் கண்ணன்.

அவர்கள் பேசி முடித்தது….. “ என்ன மது….என்ன பிரச்சனை…..?”

“அது ஒன்னும் இல்ல மச்சான். காலேஜ் பசங்க முதல் நாள் ஏதோ கிண்டல் செய்வது தானே….நம்ம குட்டிம்மாவ பத்தி தான் உனக்கு தெரியுமே….ஊதி பெருசா ஆகிட்டா…. என்ன உடனே வான்னு…. கஜா புயல் பிரச்சனை வேற…..போன்ல சத்தம் வேற போட்டுட்டேன்.

ஆனா  பிறகு என்ன பிரச்சனைன்னு விசாரிச்சிட்டு…அந்த பசங்கல கூப்பிட்டு வான் பண்ணேன்….பசங்களும் ஏதோ அதிக பிரசங்கி தனத்துல தான் செய்து இருக்காங்க. ரொம்ப பீல்  பண்ணாங்க…..”

“ஓ…” இந்த ஒரு  வார்த்தை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை கமலக் கண்ணன்.

அந்த பசங்க கூப்பிட்டு பேசுனது அஷ்வத்துக்கே புதிய செய்தி தான். மாதவன் சம்பூர்ணாவின் மேல் காட்டும் அக்கறை…கமலக் கண்ணன் மாதவனின் நெருக்கம்…..இதை பார்த்த அஷ்வத்துக்கு  மனது இடறியது.

தாய், தந்தை காதல் திருமணம். அம்மாவின் அப்பா அவன் பத்தாவது வயது வரை இருந்தார். அவருமே ஒரு மருத்துவர் மற்றும்  கல்லூரி நிர்வாக பொறுப்பிலும் இருந்ததால், அதிக நேரம் பேரனிடம் நேரத்தை செலவிட்டது கிடையாது.

தந்தை…தாய் மருத்துவர். கூடவே கல்லூரி பொறுப்பும். அதனால் அஷ்வத் அதிகம் தனிமை தான். நட்பு கூட அவ்வளவு நெருக்கம் இல்லை.

அவன்  படிப்பு ,பின் அவனுக்கு என்று  ஒரு தொழில். விபத்து. அதன் பிறகு தாய் மரணம். தந்தையின்  கால் இழப்பு, அதனால் தொழிலை கையில் எடுத்துக் கொண்டது. இது தான் அவனின் வாழ்க்கை பயணம்.

இது வரை இதில் விரக்தி வந்தது இல்லை. ஆனால் இப்போது….? “ மது…..குட்டிம்மா சாப்பிட்டு முடிச்சிட்டா….” என்று கமலக் கண்ணன் சொன்னதும்…

“சரி மிஸ்டர் அஷ்வத் அப்புறம் பார்க்கலாம்.” இருவரும் முறையாய்  விடை பெற்றனர். இருவரின் கை பற்றி நடுவில் சிரித்து பேசிக் கொண்டு சென்ற சம்பூர்ணா தேவி  மீதே அஷ்வத் தீரனின் பார்வை.

அன்று இரவு சாப்பிடும் போது அஷ்வத் தீரன் தன் தந்தையிடம்….. “ உங்க பேரன்ஸை பத்தி  இது வரை நீங்க ஒன்னுமே சொன்னது இல்லையேப்பா…..”

மகனின்  கேள்வியில் சாப்பிட சுக்கா ரொட்டியை வாயின் அருகில் கொண்டு சென்றவர்…. அதை சாப்பிடாது அப்படியே தட்டில் போட்டு விட்டார்.

தொடர்ந்து….. “ அம்மாவோட அப்பா என் பத்து வயசுல இறந்துட்டாரு….உங்க அப்பா அம்மா உங்க கல்யாணம் முன்னாடியே இ…..”  அஷ்வத்தை அந்த வார்த்தையை முடிக்க விட வில்லை.

“ உன் பேச்சை இதோட நிறுத்து…..” சாப்பிட்ட கை கொண்டு போதும் என்பது போல் சைகையும் செய்தார்.

மகனின் கூர் பார்வையில்……கை இறக்கியவர்….. “சாரி…நீ அவங்க இ….கோபம் வந்துடுச்சி…..”

“எனக்கு உங்க சாரி தேவயில்லப்பா…..உண்மை தான் தேவை.

அந்த வார்த்தை சொல்ல விடாம தடுத்ததில் இருந்தே, அவங்க இன்னும் உயிரோடு தான் இருக்காங்கன்னு தெரியுது.

அவங்க யாரு…..? எங்கே இருக்காங்க….?” என்று கேட்டவன்.

இறுதியாக…. “வில்லங்கப்பட்டில் இருக்காங்கலா…..?” என்ற மகனின் பேச்சில்….இனி மறைக்க முடியாது என்று உணர்ந்த  ஜானகி ராமன்…

“ நீ சொல்வது உண்மை  தான். அவங்களோட சதாபிஷேகம்  இப்போ தான் வில்லங்கப்பட்டில்,  இரண்டாவது மகன் வெங்கட்ட ராமனும், தன் ஒரே மகள் ஷண்மதியும் நடத்தி வைக்க.பேரன்கள் மாதவன்,  கமலக் கண்ணன் , பேத்தி சம்பூர்ணா தேவி ஆசி பெற்று நடந்து முடிந்தது.”

மாதவன் முகம் தன் முகத்தோடு கொஞ்சம் ஒத்து போனதில்…..ஏதோ மனதில் சந்தேகம் இருந்து கொண்டு தான் இருந்தது.

ஆனால் ஏதோ தூரத்து சொந்தமாய்…அதுவும்   தாத்தா பாட்டி இருப்பார்கள், அவன் நினைத்தும் பாராதது. மருமகள் சாவுக்கு  கூட வர முடியாத அளவுக்கு அப்படி என்ன கோபம்….? காதல் திருமணம் என்ன அவ்வளவு பெரிய குற்றமா…..?

தான்  நினைத்ததை அப்படியே தன் தந்தையிடம் கேட்டும் விட்டான்.

“ இத சொன்னா நீ என்ன எப்படி எடுத்துப்பேன்னு தெரியல…..காதல் திருமணம் தப்பு இல்ல. ஆனா நம்ப வெச்சி ஏமாத்துறது தப்பு. அப்போ எனக்கு  தெரியல…..ஆனா விபத்துல நடக்க முடியாம….அப்போ தான் என் தங்கை அப்போ என் பேச்சில் எப்படி துடிச்சி இருப்பான்னு நினச்சா…..”

“அப்பா நீங்க சொல்றது எனக்கு சுத்தமா புரியல…..”

ஆழ மூச்சு எடுத்து விட்டு தன்னை திடப்படுத்திக் கொண்டவர், ஏதோ நினைத்து தன் துக்கத்தை முழுங்குவது போல் அருகில் இருந்த தண்ணீரை கட கடவென்று பருகிய பின்…..

“ எங்க குடும்பம் விவசாயக் குடும்பம். அப்பா வேங்கையன். அம்மா பேச்சு முத்து. ஒரு தம்பி வெங்கட்ட ராமன். ஒரே தங்கை” அந்த இடத்தில் அவர் குரல் அதிகம் கலங்கியது.

“தங்கை ஷண்மதி. எங்களுக்கு  என்ன தான் ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தாலும், வானம் பார்த்த பூமி.

அதனால் பருவமழை தப்பிச்சின்னா கஷ்டம். வெள்ளம், புயல் வந்தா கஷ்ட்டம்.   ஏகப்பட்ட கஷ்ட்டத்திலும் என்ன நல்லா படிக்க வெச்சாரு.

ரொம்ப தொலைவு போய் படிக்கனுமுன்னு, அப்பவே என்ன  சென்னையில் விடுதியில் சேர்த்தாரு..அப்போ என் தம்பியும், தங்கையும் எங்க நிலத்துல விவசாயம் பார்த்துட்டு இருந்தாங்க.

காய்கரிகளை  வாராசந்தையில் போய் விப்பாங்க. அப்போ தான் நல்லக்கண்ணு பக்கத்து ஊரு விவசாயி….ஷண்மதிய பார்த்து ஆசப்பட்டு….பொண்ணு கேட்டாரு…..

அப்போ நான் டாக்டர் படிச்சிட்டு உங்க தாத்தா கீழே ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தேன். அங்கு தான் உங்க அம்மாவ….” அத்தோடு அந்த பேச்சி பேசாது….

“நல்லக்கண்ணு அம்மா பொண்ணு கொடுத்து  பொண்ணு எடுக்கனுமுன்னு நிபந்தன விதிச்சாங்க. எங்க அப்பாவும் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடச்சா போதுமுன்னு ஒத்துக்கிட்டாரு…”

தந்தையின் பேச்சை இடையிட்ட அஷ்வத்….” என்னப்பா இது அநியாயம்….அவங்க மகன் விரும்புற பொண்ண கட்ட நிபந்தனை எல்லாம் இடுவாங்கலா…..?இது டூ மச் இல்ல. ஏகப்பட்ட மச்சா இருக்கு.” நிலமை தெரியாது பேசினான்.

“ கிராமத்துல….இந்த காதல் கல்யாணம் எல்லாம் அவ்வளவு ஈஸி இல்ல. அதுவும் ஊனமான பொண்ணுனா…. சாதரணமாகவே பொண்ணு கேட்க வீட்டுக்கு வர மாட்டாங்க.”

“அப்பா…..” அதிர்ந்து விட்டான்.

“ உங்க அத்தை ஒரு கால் கொஞ்சம் தாங்கி தான் நடப்பா….”

 

Advertisement