Advertisement

அத்தியாயம்—5

“ சின்னவன் எப்படி இருக்கான்ல  ஒரு எட்டு பார்த்துட்டு வர்றேன்னு சொன்னா….உன் அத்த வேணா… அங்குட்டு  போனா அழுதுட்டு இருப்பேன்னு என்ன தடுத்துட்டா…..” வீரப்பாண்டி கால் அலம்ப தண்ணீர் எடுத்துக் கொடுத்த வாறே… இடை இடையே மூக்கையும்  சிந்தி போட்டுக் கொண்டு தன் ஆதாங்கத்தை தன் பெரிய மகனிடம் கொட்டி தீர்த்தார் புஷ்பவதி.

அவன் ஆத்தாவின் பேச்சு எதுவும் அவன் காதில் விழவில்லை. வீட்டை சுற்றி தன் பார்வையை மேய விட்டான்.

அதை பார்த்த கோசலை….. “ மதனி உன் பெரிய மவன் வந்ததும் தன் பொஞ்சாதிய தேடுறான். உன் பேச்சு எல்லாம்  காதுல விழுமா….?”

“அப்படியா…..?” என்பது போல் தன் பெரிய மகனை பார்த்தார்.

“அத்த என்ன சிண்டு முடிஞ்சு விடுறேலா….அதுக்கு வேற ஆள பாரும் .நான் யசோதா எங்கேன்னு பாக்குறேன்.”  வீராப்பாண்டி யசோதாவை கேட்டதும் இருவரிடமும் அமைதி நிலவியது.

எப்போதும் தன் புல்லட் சத்தம் கேட்டாலே, கையில் தண்ணிரோடு நிற்கும் பெண் இல்லையே என்று தான் கேட்டான்.

“வந்ததும் பொறத்தாலே(பின்னாலே) போனவ  தான். உண்ண கூப்பிட்டா கூட வரல….ம் சின்னதுல இருந்து பதிச்சது….பைய பைய(மெதுவாக)  தான் சரியாகும்.” தன் தாயின் பேச்சில் பின் பக்கம் போக பார்த்தவனை…

“ அவள விடுப்பூ…..உன் பொஞ்சாதி கூட ஒன்னும் உண்ணல…. முதல அவள சாப்பிட கூட்டியா…..நா யாசோதாவை பார்த்துக்குறேன்.”  கோசலையின் பேச்சில்.. எங்கு செல்வது என்று விழித்து நின்றான்.

அவன் தயக்கத்தை பார்த்து…. “மரச்சாமான் போட்டு வெச்சி இருக்க அறையில தான் கிடக்கா….ரொம்ப  ராங்கியா இருப்பா போல…..” புஷ்பவதி தன் மகனிடம் மருமகளை பற்றி குற்றப்பத்திரிக்கை வாசித்தார்.

வந்ததும் வீரப்பாண்டியின்  அறையை தான் காட்டினர். போன வேகத்தில் திரும்பியவள்.

புஷ்பவதியை  பார்த்து….. “ இது உங்க மவன் அறையா…..?” அவள் கேட்ட வேகத்திற்க்கு புஷ்பவதியின் தலை தன்னால்…. “ஆமாம்…” என்று ஆடியது.

“அங்கன எல்லாம் என்னால தங்க முடியாது.”

வந்தவுடனே தன்னை அதிகாரம் செய்வதா…?நான் எல்லாம் என் மாமியார் முகத்தை பார்த்து பேசவே ஒரு வருடம் பிடிச்சது. இவ வந்த கையோட என்ன மிரட்டுவதா….?

“அங்கன தான் தங்கனும். மத்த அறையில உறவு சனம் தங்கி இருக்கு.” தோள் பட்டையில் தன் முகவாயை இடித்து சொன்னவரிடம்….

மூடியிருந்த அறையை காமித்து….. “அங்கன யாரு தங்கியிருக்கா…?” பேச்சு எல்லாம் ஒருமையில்  தான்.

“அங்கன  உதவாத மரச்சாமன்  போட்டு வெச்சி இருக்குது.வேனுமுன்னா அங்க தங்கிக்க….” தங்க மாட்டாள்  என்று தான் சொன்னது…

“சரி….” என்று சொல்லி விட்டு அந்த அறைக்கு  போக பார்த்தவளை… இவ்வளவு நேரம் அமைதியாக இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த கோசலை….

“அங்கன தேள் இருக்கும்மா…..வேண்டாம். தம்பி அறையிலேயே தங்கிக்கோ….”     மிக தன்மையாக தான் சொன்னார்.

பூட்டி இருந்த அறையை காட்டி…. “ இந்த தேள்லே பரவாயில்ல….” அவ்வளவு தான்….

“ எடுப்பட்ட சிறுக்கி…என் மவனையா….தேளுன்னு சொல்ற….? வரட்டும்….பெரியவன் வரட்டும். அப்புறம் இருக்கு கச்சேரி.”

“நானும்  அதுக்கு தான் காத்துட்டு இருக்கேன்.” சொல்லிக் கொண்டே மூடிய இருந்த அறையை திறக்க பார்த்தாள்.

அடிக்கடி  திறக்காத கொண்டி (தாழ்ப்பாள்) என்பதால் ஸ்ரீமதி  திறப்பதற்க்கு சிரமப்படுவதை பார்த்து…. கோசலை தன் பலம் கொண்டு தள்ளவும் திறந்து  கொண்டது.

“வாயி மட்டும் ஏழு ஊருக்கு இருக்கு.  ஒரு நொம்பலம்(தள்ளவும்) முடியல. உன் வூட்டுல சோரு போட்டாளா  இல்லையா….?ஊருல யார வெட்டலாமுன்னு உன் அய்யனோடு சேர்ந்து ஆத்தாலும் சேர்ந்து திட்டம் போடுவாளா….?”

தன் மகளின் வாழ்வு இப்படி ஆகிவிட்டதே…..? இத்தனை நாள் தன் நெஞ்சில் தேக்கி வைத்திருந்த ஆதாங்கத்தை…அதற்க்கு காரணமான மகளை பார்த்ததும்  வார்த்தைகளாய் கொட்டியது.

“மதனி…என்ன பேச்சு பேசுறிங்க…வீட்டுக்கு வந்த பொண்ண இப்படி பேசக்கூடாதுன்னு உங்களுக்கு நான்  சொல்ல தேவையில்ல.” கோசலைக்கு மதனி தாய் போன்றவள்.

கெட்டு வந்த தன்னை இது வரை ஒத்த வார்த்தை பேசியது கிடையாது. அப்படி பட்டவர் வாழ வந்த பெண்ணை முதல் நாளே இப்படி பேசியது மிகவும் வேதனையாக இருந்தது.

“ இவ வாழ வர்றதுக்கு முன்னவே,  என் மகள் வாழ்க்கைய குலச்சிட்டா….தாலி கட்ட முன்ன சின்னவன படுக்க வெச்சிட்டா…..இன்னும் என்ன என்ன ஆகுமோ….”

மதிக்கு, புஷ்பவதியின் பேச்சு பாதி புரிந்தும், பாதி புரியாமல் போனாலும், தன் தாயை திட்டியதால்…..

“பெரிய மவன் கருங்கல் கணக்கா தானே இருக்கான். அடுத்த வேட்டு அவனுக்கு தான்னு நினைக்கிறேன்.” அவ்வளவு தான் புஷ்பவதி மதியின் கன்னத்தில் தன் கை பதித்திருந்தார்.

மின்னல் வெட்டியது என்று சொல்வார்களே….அப்படி மதியின் கண்களில் மின்னல்….பூச்சி என்று எது வேண்டுமானலும் சொல்லலாம். மொத்ததுக்கு ஒரே அரையில்  ஒரு மூலையில் சுருண்டு விட்டாள்.

“ என்ன பேச்சு….அவன் இந்த வூட்டு ராசாடி. நாங்கலே அவன் இவன்னு சொல்ல மாட்டோம். புருஷன்னு வேணாம் வயசுக்கு மரியாதை கொடுக்க மாட்டே…கொன்னு புடுவேன்.

உன் அப்பன்…அவன் கூட சுத்திட்டு இருக்கானே ஒரு அல்ல கை. அவனுங்க  மாதிரி, மனுசால் சுத்தி இருக்க அப்போ வீரத்த காட்டுவது. புரவால பம்முவது. இந்த ஜோலிலாம் இல்ல. இங்கன மருவாத முக்கியம்.”

புஷ்பவதியின் இந்த அதிரடியில்….இது  வரை வாய் பேசிக் கொண்டு இருந்தவள் அடுத்த வார்த்தை பேசாது  உதவாத பொருட்கள் போட்டு வைத்திருந்த அறையில் போய் முடங்கினாள்.

மருமகளை அரைந்ததில் எந்த வித குற்றவுணர்வும் இல்லாது, அடுத்த வேலை பார்க்க  சென்று விட்டார்.

கோசலைக்கு தான் அங்கு நடந்ததை பார்த்து அதிர்ந்து  போய் விட்டார். அந்த புள்ளயும் அப்படி பேசியிருக்க கூடாது. மதனியும் எடுத்த கைக்கு அடித்து  இருக்க கூடாது. நியாயமான மனது தனக்குள் வாதிட்டுக் கொண்டது.

திருமணம் முடிந்து வந்ததில் இருந்து ஒரு வாய் பச்ச தண்ணி கூட வாயில் படாது இருந்த மதிக்கும், யசோதாவுக்கும்,  நடையா நடப்பதே கோசலையின் வேலையாய் இருந்தது.

மருமகன் வந்ததும்  ஒரு பாரத்தை அவன் தலையில் போட்டு விட்டு, தன் பாராத்தை பார்க்க பொறத்தாலே சென்றார்.

“ வேண்டாம் ஆத்தா….” யசோதாவின் முகத்தை பார்த்த அனைவரும் சொல்வர் அவள் நெடு நேரம்  அழுது இருக்கிறாள் என்று…

அழுது அழுது முகம் வீங்கி போய் பார்க்கவே சீக்காளி போல் இருந்தாள். “இப்புட்டு ஆச வெச்சி இருக்கவ, என்னத்துக்கு தார வார்த்த …?.”

“ஆசன்னு சொன்னேனா…..?”

“ குழந்த  கூட சொல்லிப்புடும்டீ…உன்ன பாத்து…..” தாயின் பேச்சில். அங்கு இருந்த கிணற்றில் இருந்து தண்ணிர் எடுத்து முகத்தை நன்கு அலம்பிக் கொண்டவள்.

“ இப்போ…..?” என்று  கேட்ட மகளின் செய்கையில்…..

தன் மனதில் பாரம் இருந்தும், அதை வெளியில் காட்டாது மேம்போக்காக பேசிக் கொண்டு இருந்த கோசலை…

“ அடி  ராசாத்தி….” கதறி தன் நெஞ்சோடு  மகளின் முகத்தை பதிய வைத்துக் கொண்டு…

“ மவராசி….என் அண்ணா வூட்டு மருவாத கெட கூடாதுன்னு உன் ஆசையெல்லாம் புதச்சி வெச்சியா….?” விட்டால் இன்னும் என்ன என்ன சொல்லி  இருப்பாரோ…

“தே..தே அடங்கு. நீ பாட்டுக்கு மூக்க சிந்தி  ஒப்பாரி வைக்காத….”

“உன் பெரிய மச்சான் மேல அம்புட்டு உசுரா இருப்பியே…..இனி…”

“ இனி என்ன…இனியும் உசுரா தான் இருப்பேன். கண்ணாலம் கட்டிக்கிட்டா என் மச்சான் இல்லேன்னு ஆயிடுமா…..”

“ பொறவு எதுக்குடி அழுத…..”

“ என்ன தான் என் மனச தேத்தினாலும்….சின்ன போதுல இருந்து…இவர் தான் என்னவருன்னு மனசுல பதிய வெச்சது.  இப்போ இல்லேன்னதும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு ஆத்தா….” அவளையும் மீறி அவள் கண்ணில் இருந்து இரு சொட்டு கண்ணீர் சிந்தியது.

“ ராசாத்தி இப்படி வேதன படாதடி…அது அப்பூக்கு ஆகாது. உன்ன இப்படி பாத்தா அவன் எப்படிடீ…அவன் பொஞ்சாதி கூட சந்தோஷமா இருப்பான்.” இது தான் கிராமத்து உள்ளம்  என்பது.

தன் மகளின் வேதனை  அண்ணன் மகனுக்கு சாபமாய் போய் விடுமோ என்று  பயந்து, மனதால் கூட வேதனை படாதே என்று தன் மகளை தேற்றினார்.

“ அது எல்லாம் என்னாலே பெரிய மச்சானுக்கு ஒன்னும் ஆகாது.”

“அப்போ வாடீ….ஒரு வா சாப்பிடு. கண்ணாலம் அன்னிக்கி  வயித்த காய போடுறது நல்லதுக்கு இல்லடீ….”

அம்மாவின் பேச்சுக்காக தொண்டை குழியில் உணவு  இறங்க வில்லை என்றாலும், மச்சான் நல்லா இருக்கனும் என்று அத்தையுடன் உணவு உண்ண  அமர்ந்தாள்.

மதி தங்கி இருந்த அறையை பார்ப்பது….மதனி, மகளின்,  தட்டை பார்த்து உணவு பரிமாறுவது என்று இருந்த கோசலையைய் பார்த்து…

“ ஆடு திருடுன மாதிரி எதுக்கு இப்படி முழிச்சிட்டு இருக்க….?வா நீயும் உட்காரு.” உணவு உண்ண தன் நாத்தனாரை அழைத்தார்  புஷ்பவதி.

“ நீங்க சாப்பிடுங்க மதினி. நான் செத்த நேரம் கழிச்சி சாப்பிடுறேன்.”

“ நீ என்னத்துக்கு இப்படி சொல்றேன்னு தெரியுது. அந்த ராங்கிக்காக எல்லாம் நாம காத்து இருக்க தேவயில்ல. கட்டுனான்லே அவன் பாத்துப்பான் நீ வா….” தன் நாத்தனாரை கை பிடித்து தன்  பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்.

யாசோதா…. “ இன்னும் அவங்க உண்ணலயா….?” எழ பார்த்தவளின் கை பிடித்து…

“பேசாம உட்கார்.”

இருவரையும் ஒரு சேர பார்த்து….. “ தோ பாருங்க…அவ ரொம்ப  ராங்கிகாரியா இருக்கா…முதல்ல பிடிச்சா தான் உண்டு. கொஞ்சம் இடம் கொடுத்தா அம்பூட்டு தான்.” புஷ்பவதி சொல்வது உண்மை   தான் என்று நிருபித்துக் கொண்டு இருந்தாள் ஸ்ரீமதி.

மதி தங்கி இருந்த அறைக்குள் சென்ற வீரப்பாண்டி….அவள் முகத்தை பார்க்காது….

“ உண்ண வா….” தன்மையாக தான் அழைத்தான்.

எதிர் பதில் இல்லாது போக….அவளை நேர்க் கொண்டு பார்த்து…

“ உன்ன தான்  உண்ண வா…..” அவன் குரல் தன்மையாக தான் ஒலித்தது.

வந்ததில்  இருந்து அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்த  ஸ்ரீமதி….அவன் தன்னை பார்க்காது சுவற்றை பார்த்து அழைத்ததும் கடுப்பாகி…

இன்னும் கோபத்துடன் அவனை முறைத்து பார்த்தவளிடம்…ஏதோ பெரியவங்க பார்த்து வெச்சி தாலி கட்டுனது போல, எதுவும் நடவாது போல் சாதரணமாக தன்னை உணவு உண்ண அழைத்ததில், கொலை  வெறியான ஸ்ரீமதி…

தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டி…. “ இது என்ன…..?”

அந்த அறை காத்தோட்டமோ….வெளிச்சமோ இல்லாத அறை. அதனால் அவளின் முகம்பாவனை அவனுக்கு தெரியாது போய் விட்டது.

ஆனால் குரலில் கோபம் கொஞ்சம் என்ன  ….தூக்கலா கலந்து எதிரொலிப்பதை பார்த்து….

“ நீ என்ன சின்ன தம்பி பிரபுவா … ?இது தெரியாம இருக்க…..” வீரப்பாண்டியனிடம் இந்த குரலில் யாரும் பேசியது இல்லை.

புஷ்பவதியே ….அவனிடம் தன்மையாக தான் பேசுவார். ஏன் மறைந்த தன் அய்யன் கூட, தன் நினைவு தெரிந்து  தம்பி போடாது தன் பெயரை அழைத்தது இல்லை.

நினைவு தெரிந்து  பணிந்த குரலே கேட்டு பழகியவனுக்கு, இந்த குரல் கோபத்தை கிளப்பியது. அதன் விளைவு…. பேச்சும், தெனவெட்டாக தான்  வந்து விழுந்தன.

“ எனக்கு தெரிது. உனக்கு தெரிதான்னு தான் கேட்டேன்.”  கோபக் குரலுக்கே வந்த கோபத்தை தெனவெட்டு என்ற சாயத்தை பூசியவனுக்கு….

அவளின் ஒருமை அழைப்பில்… “ ஏய்..ஏய் மருவாத…மருவாதையா பேசி பழகு. அது எனக்கு இல்ல, உனக்கு தான் நல்லது. இன்னொரு தரம் இது  போல் பேசின… என் வாய் பேசாது கை தான் பேசும்.”

இவ்வளவு நேரம் வீரமாக பேசிய ஸ்ரீமதி, வீரப்பாண்டியனின் அடிப்பேன் என்ற பேச்சில் அமைதியாகி போனாள்.

இவன் ஆத்தா அடிச்சே….இன்னும் கன்னம் தக தகன்னு எரியுது. ஆம்புள இவன் அடிச்சா…..?

அவள் அமைதியில்… “ வா உண்ணலாம்.” இப்போது  திரும்பவும் பேச்சு தன்மையாக ஒலித்தது.

“ வேண்டாம்.”

“மதியத்துல இருந்து ஒன்னும் உண்ணலேன்னு அத்த சொன்னாங்க. வா ….”

“மதியத்துல இருந்துல…காலையில  இருந்தே உண்ணல….” பேச்சில் வீம்பு.

“ அப்போ வா . எனக்கும் பசிக்குது. ”

இவனுக்கு குற்றவுணர்ச்சியே இல்லையா….?விருப்பம் இல்லாத பெண்ணை தூக்கி வந்து கட்டிக்கிட்டு…என்னவோ காலம் காலமா  என்னோட உணவு எடுத்துக்குற மாதிரி பேசுறான். சரியான காட்டு மிராண்டி கூட்டம்.

அவர்களின் தோற்றத்தையும்,சற்று முன் இவன் ஆத்தா  அரைந்த அரையிலும், இவர்களின் பிம்பம் இப்படி தான் என்று, அவள் மனதில் பதிந்து போனது.

“ வேணா….எனக்கு கோபத்த கூட்டுறது உனக்கு  நல்லது இல்ல. ஒழுங்கு மரியாதையா….உண்ணா வா…..”

“ நான் தான் வேணா….” அடுத்த வார்த்தை பேசாது அவள் கை பிடித்து தர தர….என்று இழுத்து அனைவரும் சாப்பிடும் இடத்துக்கு வந்து…. சாப்பிடும் இடத்தில் ஒரே தள்ளாக தள்ளி உட்கார வைத்தான்.

அப்போது தான் சாப்பிட்டு  அலம்பின கையை துடைத்துக் கொண்டு வந்த யசோதாவை பார்த்து…..

“ யாசோ சாப்பிட்டியா….?” என்று கேட்டவன். அவள்  “ சாப்பிட்டேன்.” என்ற பதிலில்…

“ சரி எங்களுக்கு போடு.” இருவருக்கும் உணவு பரிமாற அன்னத்தில் கை வைத்தவளை…

“ உன் பொஞ்சாதி போட வெச்சி நீ சாப்பிடு பெரியவனே…..” முழுக்கை வைத்து சட்டை போட்டு இருந்ததால், சாப்பிட வசதியாக அதை மேல் நோக்கி இழுத்து விட்டுக் கொண்டு இருந்தவன், அன்னையின் இந்த பேச்சில் அவர் முகத்தை பார்த்தான்

அவர் முகத்தில் தெரிந்த பிடிவாதத்தில்…. “என்ன ஆத்தா ஏதாவது பிரச்சனையா….?”

“ பிரச்சனை இல்ல. இனி வரக்கூடாது பாரு பெரியவனே…. அவ உனக்குன்னு  நினச்சி தான் அவ சேவகம் பண்ணது. அது தான் இல்லேன்னு ஆயிடுச்சே….” ஒரு பெரும் மூச்சு எடுத்து விட்டு…

பின்…. “ தம்பி மனைவியா வரப்போறவ கிட்ட முதல் மாதிரி வேல வாங்க கூடாது பெரியவனே….”

யசோதாவுக்கு தான் அந்த வீட்டில் என்ன என்ன இருக்கு என்று தெரியும். அதனால்  எடுத்த எடுப்புக்கு எப்போதும் அவன் வாயில் இருந்து வரும் பெயர் யசோதா தான்.

சந்தைக்கு போவது என்றால் கூட…..  “ யாசோ வீட்ல எதாவது இல்லையா….” வாங்கி வர கேட்பான்.

அவன் தாயிடம் கேட்டால்…. “ யசோதா கிட்ட கேளு  பெரியவனே….” இந்த வார்த்தை தான் புஷ்பவதி வாயில் இருந்து வரும்.

அதனால் அவன் மட்டும் இல்லை. வீட்டில் எல்லோரும் வீட்டுக்கு வேண்டியதோ….. ஏதாவது ஒரு பொருள் காணோம் என்றாலும், யசோதாவிடம் கேட்டால் எடுத்து கொடுத்து விடுவாள்.

அன்னையின் பேச்சில்…. “ என்ன ஆத்தா புதுசா  பேசுற…?”

“ என்ன பெரியவனே செய்யிறது. புதுசா ஆட்கள் வந்த தொட்டு, என் வார்த்தையும் புதுசா தான் போச்சு….”

“அதெல்லாம் ஒன்னும் மாற தேவயில்ல. யசோ வந்து போடு.” கட்டளையிட்டான்.

ஸ்ரீமதி கோயிலில் யசோதா  பேச்சை கவனித்து கேட்கவில்லை. தனக்கு கட்டி வைக்க நினைத்த மாப்பிளையை தன் அப்பா அடித்து விட்டார்.

இனி நம்மை அழைத்து செல்வார். என்று தைரியத்துடன் இருந்த ஸ்ரீமதி, அடுத்து மாப்பிள்ளையாய் வீரப்பாண்டி களம் இறங்கவும்…

நெஞ்சில் பட படப்பு கூடியது. முன் தன்னை கட்ட நினைத்த மாப்பிளை  யார்…..?எப்படி….? இருப்பான் என்று தெரியாது.

ஆனால் வீரப்பாண்டி தன் எதிரில் கறுத்து  முரட்டுக்காளை போல் இருப்பதை பார்த்து….

“அய்யோ…..” என்றானது. அதில் தான் வாய் சட்டென்று “ இந்த கருவாயனை கட்டிக்க   மாட்டேன்.” என்று சொன்னது…

இவனா மாப்பிள்ளை….? என்ற பயத்திலும், தன் குடும்பமே தன்னை விட்டு ஓடியதில் வெறுத்தும் இருந்தவள்…

அடுத்து யசோதா பேச்சை கவனித்து கேட்கவில்லை. கேட்டு இருந்தாலும் அவளாள் ஒன்றும் செய்து இருக்க முடியாது.இப்போது ஓ இவ தான் இவன கட்டிக்க இருந்தவளா…?

யசோதாவை அப்போது தான் ஊன்றி கவனித்தாள். இவனுக்கு இவள்  தான் சரியாக இருப்பாள். நம்மை ஏன் கட்டுக்கிட்டான்.

ஸ்ரீமதி எப்போதும் வெளிப்படையாக பேசிவிடுவாள். பேசி விட்டு ஏதாவது பிரச்சனை வந்தால் ஓடி வீட்டுக்குள்  புகுந்துக் கொள்வாள். அவ்வளவு தான் அவள் வீரம்.

அந்த தன்மையில்  வீரப்பாண்டியின் கட்டளையில்  யசோதா இருவருக்கும் பரிமாற ஏதோ யோசனையில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது தன் பாட்டுக்கு அன்னத்தை அள்ளி வாயில் திணித்தவள்…

அப்படியே திணித்துக் கொண்டு  இருந்து இருக்கலாம். பாதி சாப்பாட்டில் அவளுக்கு என்ன ஞானோதையம் பிறந்ததோ….

யசோதாவின் வீங்கிய முகத்தை பார்த்து….. “ நீ  கவலை படாதே…நான் உன் மச்சான அத்து விட்டுறேன். நீயே கட்டிக்கோ….”

கழுத்தில் தாலி ஏறிய அன்றே, இரண்டாம் முறையாக அவள் கண்ணில் மின்னல் பறந்தது.

 

Advertisement