Advertisement

மாறியதே மனம்…

அத்தியாயம்….1

“ஏலே….ஆட்ட மேச்சலுக்கு விட்டு எத்தன நாழி ஆகுது.  இன்னுமா பட்டிய கூட்டல…..” சத்தம் போட்டான் வீரப்பாண்டியன்.

திருநெல்வேலியில்  இருந்து ஐம்பது கிலோ  மீட்டர் தூரத்தில் இருக்கும் வல்லிப்பட்டு     கிராமம் தான் வீரப்பாண்டியனின் சொந்த ஊர். வீரப்பாண்டி பட்டியில் இருந்து தான் அந்த கிராமம்  மட்டும் அல்லாது சுத்தி இருக்கும் அனைத்து கிராமத்துக்கும் நல்லது, கெட்டதுக்கு ஆடுகள் செல்வது.

அது போக  ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற  வெளிநாட்டுக்கும் ஏற்றுமதியும் செய்கிறான்.

அடுத்த சுத்துப்பட்டியில் இருக்கும் ஆடு சென்னையில் இருக்கும் சைதாப்பேட்டைக்கு போய், அங்கு டின்களில் அடைத்து ஏற்று மதி செய்கிறார்கள் என்றால்…. இவன்    தானே டின்களில் அடைத்து நேரிடையாக ஏற்றுமதி செய்கிறான்.

அந்த கிராமத்தில் இரு பெரிய  தலைகள். ஒரு பெரிய தலை முதலில் வீராச்சாமியாக இருந்தார். அவர் இறந்து விட்டதால் அவர் இடத்துக்கு தற்போது அவர் மகன் இருபத்தியெட்டு வயதான   நம் கதையின் நாயகன் வீரப்பாண்டியன் தான் பெரிய தலை என்று அந்த ஊர் கொண்டாடுகிறது.

மற்றொரு தலை  கங்காதரன். படித்த குடும்பம் என்று  பெயர் எடுத்த குடும்பம். இருவரும் இருவேறு  பிரிவினர். அதனால் வெட்டு, குத்துக்கு எப்போதும்  பஞ்சம் இருக்காது.

வீரப்பாண்டியன் இனத்தவர் எடுத்த உடன் கை ஓங்கி விடுவர். ஆனால் கங்காதரன் பிரிவினர் காத்திருந்து அடித்து வீழ்த்துவர்.

அதாவது இவர்கள் பலம் கொண்டு  மோதினால்…அவர்கள் மூளையின் பலம் கொண்டு  மோதுவர். மொத்தத்தில் நாளுக்கு ஒரு பஞ்சாயத்து. அதுக்கு  தீர்ப்பு வழங்குவதே அந்த ஊரின் பெருசுகளின் வேலையாக இருக்கும்.

“ஏலே இன்னும் கூட்டாம என்னலே செய்யிற…..?”

அவனிடம் வேலை பார்க்கும்  பழனி தலையை சொறிந்துக் கொண்டே….. “ வாரியம் (துடைப்பம்) எங்கே வெச்சிப்புட்டேன்னு தெரியலே அண்ணே….

“அத விடு அங்கன புதுசா ஒன்னு இருக்கு  பாரு, அத எடுத்து வெரசா கூட்டு. மேச்சலுக்கு போன ஆட்ட சீக்கிரம் பட்டியில கூட்டியா….  வெய்யில் ஏறுது பாரு. நான் அதுக்குள்ள தீவணத்த தயார் செய்யிறேன்.” என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக்கு தீவணத்துக்காக கடலை பிண்ணாக்கு தண்ணீயில் ஊற வைத்தான்.

எப்போதும் காலையில் வெயில் வருவதற்க்கு முன் ஆட்டை மேச்சலுக்கு விட்டால்..பின் வெயில் ஏறுவதற்க்கு முன் ஆட்டை பட்டியில் கட்டி விட வேண்டும்.

அதிக வெயில் ஆட்டுக்கு  அதிக களைப்பை கொடுக்கும்.  அந்தேரத்துக்கு தீவணத்தை காட்டினால்….அதிக வெக்கையால் (சூடு.)  ஆட்டுக்கு மேலுக்கு ஏதும் வராததோடு, நன்கு கொழுக்கு, மொழுக்கு,  என்று அதிக எடையோடு வளரும்.

தீவணத்தை கலக்கி முடித்து விட்டு கையில்  உள்ள ஈரத்தை தன் மேல் துணியால் துடைத்துக் கொண்டு இருந்த வீரப் பாண்டியனுக்கு  அந்த ஊரின் பாதி நிலம் அவனுடையது தான்.

ஆனால் பார்க்க அந்த அளவு வசதி படைத்தவன் போல் காணப்பட மாட்டான். அவனின் தந்தை  வழி குலதெய்வம் கருப்பச்சாமி போல் கருத்த நிறத்தில் இருந்தான் என்றால்…

தன் தாய் வழி குலதெய்வம் அய்யனார் போல் தோற்றத்தில் உயரமாகட்டும், வலிமையாகட்டும் ஆஜானபாகுவாக காணப்படுவான். மொத்தத்தில்   முரட்டு தோற்றம்.

அவனுக்கு மட்டும் அல்லாது அவன் குடும்பம் அனைவருமே உயரத்திலும்,  நிறத்திலும், கொஞ்சம் இவனை கொண்டு தான் இருப்பர்.

காலையில் இருந்து பட்டியிலேயே இருந்ததால் அங்கு அந்த கயித்து கட்டிலில் குறுக்கு சாய்த்துக் கொண்டான்.(படுத்தல்)

அப்போது அந்த ஊரின் பஞ்சாயத்து தலையில் பெரிய  தலை வருவதை பார்த்து எழுந்து அமர்ந்தவன்…

“ என்ன அண்ணாச்சி…..இவ்வளவு தூரம்…..?” இவன் பட்டி  ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும். ஆடு மேச்சலுக்கு இது போல் வெட்ட வெளியாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் தந்தை வீராச்சாமி இந்த இடத்தில் பட்டியை அமைத்தார்.

வீரப்பாண்டியனால் அண்ணாச்சி என்று அழைக்கப்படும் காத்த முத்து…… “ சேதி  கொஞ்சம் பெரிசு தம்பி. அதான் நானே வந்துட்டேன்.”

சொன்ன காத்தமுத்துவின் முகம் சொன்ன  செய்தியில்….. “ என்ன அண்ணாச்சி…..?”

“ அந்த கங்காதரன் மவன் செத்துட்டான்.”

“ என்ன அண்ணாச்சி சொல்றிங்க…..?எப்போ….?எப்படி….?”

“ இப்போ தான். இன்னும் யாருக்கும் சொல்லலே….” இது வரை சாதரணமாக பேசிக் கொண்டு இருந்தவர் பின் வீராவின்  காதுக்கருகில்….

“ அப்பனே சோலிய முடிச்சிட்டதா ஒரு சந்தேகம்.”

“ எத வெச்சி..அப்படி  சொல்றிங்க….?”

“ அந்த பையனுக்கு வேலை பார்த்த இடத்துல  வேத்த ஜாதி பெண்ணோட பதிவு கல்யாணம் செய்துட்டான்  போல… சேதி தெரிஞ்சதும் பையன நைச்சியமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விஷ ஊசி போட்டுட்டாங்க தம்பி ….”

இதை கேட்ட வீர பாண்டியனுக்கு மனது ஆறவில்லை. அப்படி என்ன ஜாதி வெறி…. தன் ரத்ததையே குடிக்கும் அளவுக்கு ஜாதி போதை தலையில் ஏறி இருக்கு…..?

“ இத சும்மா விடக்கூடாது அண்ணாச்சி…..?”

“அதுக்கு தான் உங்க காதுல போட வந்தேன் தம்பி .” என்று சொல்லி துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு  சென்று விட்டார்.

ஊருக்கே கொதித்த வீரப்பாண்டியன்…..அதன் தாக்கம் தன் வீட்டில் எதிர் ஒலித்தால்…..?.

பட்டியில் இருந்ததில் பெட்டையில், கிடாவில் … எது எது   வெள்ளி சந்தைக்கு ஏற்ற வேண்டும் என்று வேலையாளிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தவன்….

கையில்  தண்ணீரை எடுக்கும் முன்னவே தன் பாதத்தில்  ஈரம் படவும்…. “ நீ ஏன் இதெல்லாம் செய்யிற யசோ…..”

“பரவால்ல   மச்சான். வீட்ல சும்மா தானே இருக்கேன்.”  கை துடைக்க துண்டை கொடுத்துக் கொண்டே சொன்னவள்…

தன் அடுத்த  வேலையாக பெரிய மச்சானுக்கு மதிய உணவை எடுத்து வைக்க சமையற்கட்டுக்குள் நுழைந்தாள்.

யசோதா வீரச்சாமியின் தங்கை  மகளும், வீர பாண்டியனின் முறைப்பெண்ணும் ஆவாள்.  வீரச்சாமிக்கும், அவர் தங்கை கோசலைக்கும், பன்னிரெண்டு வயது வித்தியாசம். தங்கையை மகள் போல் வளர்த்து  அதிக தொலைவில் எல்லாம் கட்டி கொடுக்க விருப்பம் இல்லாது, அடுத்த ஊருக்கு தான் வாழ அனுப்பினார்.

அடுத்த ஊருக்கு  கூட எதுக்கு….? எப்போவும் உன் கூடவே இருக்கட்டும் என்று  திருமணம் ஆனா அடுத்த வாரமே பாம்பு கடித்து கணவன் இறக்க….

தன் வயிற்றில் போனவனின் வித்து  இருப்பது கூட தெரியாது, போன வேகத்திலேயே அண்ணன் வீட்டுக்கு திரும்பி விட்டார்.

அன்றில் இருந்து  கோசலைக்கும், யாசோதாவுக்கும், அதுவே வீடு என்றாகியது. வீராச்சாமி தன் தங்கையிடம் சொல்லும்….. “ உன் மகள் தான்  இந்த வீட்டு மருமகள்.” என்ற வார்த்தை யசோதாவுக்கு அந்த வீட்டில் ஒரு உரிமையும் சேர்த்து கொடுத்தது எனலாம்….

“ போதும் போதும்….” கை காட்டி  தடுத்தும்…

“ நாளு இடத்துக்கு போறிக, வர்றிக…அது எல்லாம் செறுச்சிடும்.” சொல்லிக் கொண்டே வீரப்பாண்யனின் தட்டில் இரு கரண்டி கறியை  அள்ளி வைத்தாள்.

தானே கை கால் அலம்பி வந்த வீரப் பாண்டியனின் தம்பி சரவண பாண்டியன்…. “ யம்மா யசோதா அண்ணே நாளு இடம் போனா…. நான் இரண்டு இடமாவது அலைவேன்….அந்த எலும்பு துண்டாவது இரண்டு போடேன்.” தன் தட்டை அவளிடம் நீட்டி சொன்னான்.

“தோ மச்சான்…..” சரவணனின் பேச்சில் பதறி போய் அவனுக்கு கறியை நன்கு கணிச்சமாகவே அள்ளி வைத்தாள்.

யசோதாவுக்கு மாமன்  சொன்ன யசோதா தான் இந்த வீட்டு மருமகள் என்ற வார்த்தை வீரப்பாண்டியனின் மேல் ஒரு உரிமை உணர்வை  தானே கொணர்ந்து விட்டது. அதனால் தானோ என்னவோ அவனுக்கு எப்போதும் தனி கவனிப்பு தான்.

அது காதலா…..?படிக்காத அந்த கிராமம், அந்த வீட்டை தவிர வேறு எதுவும் தெரியாத யசோதாவுக்கு விளங்கவில்லை.

ஆனால் பெரிய மச்சான் அவளுக்கு எப்போவும்  தனி தான். அதுக்காக சின்ன மச்சானை பிடிக்காது என்பது  இல்லை. பிடிக்கும்….

தேவைக்கு அதிகமாய் வீரப்பாண்டியன்  வாயை திறந்து ஒரு வார்த்தை பேச மாட்டான். ஆனால் சரவணப்பாண்டி அவ்வாறு  இல்லை. வீட்டில் உள்ளவர்களை ஏதாவது சொல்லி சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான்.

வீட்டு  பெண்கள் எங்கு போகிறார்கள்  என்று, நல்ல திரைப்படம் வந்தால் தானே கூட்டி செல்வான்.  மொத்தத்தில் பெண்கள் மனதறிந்து நடந்துக் கொள்வான்.

“ பேசாம சாப்பிடுலே….” தம்பியை அடக்கியவன்….சமையல்கட்டில் இருந்து வந்த அத்தையிடம்….

“ ஆத்தாவே  எங்கே காணும்….?”

“ தோட்டத்துல இருக்காங்க  அப்பூ….”

நேரத்தை பார்த்துக் கொண்டே….. “இந்நேரத்திலா…..?”

“பூச்சி மருந்து அடிக்கிறவன் வந்தான்,  அது தான் போய் இருக்காங்க. போன மூச்சு வந்தப்ப  ஏனோ தானோன்னு அடிச்சி போயிட்டான். நம்ம பக்கத்துல இல்லேன்னா பதமா தெளிக்க மாட்டேங்குறாங்க….” சொல்லிக் கொண்டே இருவருக்கும்  சுட சுட முட்டை ஆம்பிலேட்டை தட்டில் கொண்டு வைத்து விட்டு…

மகளிடம்….. “பாத்து போடுடீ….நான் மதனியிடம் போறேன்.”

வசதிக்கு குறைவில்லை. ஆனால் வீட்டு பெண்கள் சும்மா இருக்க மாட்டார்கள். ஏதாவது செய்துக் கொண்டே இருப்பார்கள்.

வீட்டை  சுத்தி இவர்கள் இடம் தான். ஒரு பக்கம்  காய்கறி தோட்டம் என்றால், மறுபக்கம் பூக்கள் தோட்டம்….வீட்டை சுத்தி வாழை தென்னை என்று…..வீடே குளுமையாக இருக்கும்.

அந்த வீட்டு பெண்களுக்கு விடியலிலேயே வேலை ஆராம்பித்து விடும். நான்கு மணிக்கு பூப்பறிக்க ஆட்கள் வந்து விடுவர்.

ஒழுங்காக வேலை செய்கிறார்களா….?அதை ஒருவர் மேற்பார்வை பார்த்தார் என்றால்….மற்ற பெண்….பால் கரப்பவனிடம்….

“ மொத்தமா கரந்துடாதடா…..கண்ணுக்குட்டிக்கும் கொஞ்சம் மிச்சம் வை.”

பின் காய்கறிகளை வண்டியில் ஏத்துவதை பார்ப்பது தொடர்ந்தால் போல் வேலை இருந்துக் கொண்டே இருக்கும்.

அதனால் வீரப்பாண்டியனின் அம்மா புஷ்பவதிக்கும், அத்தைக்கும் வெளிவேலை பார்ப்பதற்க்கே சரியாக இருக்கும். வீட்டு பொறுப்பு மொத்தமும் யசோதா தான். வீட்டில் எந்த எந்த பொருள்  எங்கு இருக்கு யசோதாவுக்கு மட்டுமே தெரியும்.

வீரப்பாண்டியனின் தங்கை ஷெண்பா  கல்லூரியில் இறுதி ஆண்டில் இருப்பவள். பக்கத்து ஊரில் விடுதியில்  தங்கி தான் படிக்கிறாள். மாநிறத்தில் பார்க்க கண்ணுக்கு லட்சணமாய் இருப்பாள்.

சாப்பிட்டு முடித்த வீரா போனை போடுவது…. “ சே….” திரும்ப போடுவதுமாய் இருக்க…

“ என்ன அண்ணே என்ன பிரச்சனை….”

“ ஷெண்பா போன எடுக்க மாட்டேங்குறா….?” திரும்ப போனை போட பார்த்தவனிடம்…

“ காலேஜில இருப்பாண்ணா….அதான் போன சைலண்ல போட்டு இருப்பா…..”

தாடை தடவி விட்ட வாறே…. “ நேத்தும் பேசலையா….அதான்  ஏதோ ….” நெஞ்சை நீவி விட்ட வாறே சொன்னான்.

தங்கை என்றால் உயிர். வீரா சிரித்து பேசுகிறான் என்றால் அது தங்கையாக தான் இருக்கும்.  தினம் ஒரு தடவையாவது தங்கையிடம் பேசி விட வேண்டும். இது போல் தவறியது கிடையாது.

ஏதோ மனது பிசைவது போல்….. “அண்ணே…..” தோட்டத்தில் வேலை பார்க்கும் மாயாண்டி கத்திக் கொண்டு ஓடி வந்தான்.

“என்னலே…என்ன ஆச்சி…..” சரவணன் பதட்டத்துடன் கேட்டான் என்றால்..அதை முகத்தில் காட்டி பார்த்த வீராவிடம்….

“ நம்ம மோசம்  போயிட்டோம்ணே…மோசம் போயிட்டோம்.”

“ஏய் விளங்குறாப்பல சொல்லுலே…”

“ அண்ணே …நம்ம பாப்பா….” ஷெண்பாவை மாயாண்டி பாப்பா என்று தான் அழைப்பான்.

வீட்டின் முதல் படிக்கட்டில்  நின்றுக் கொண்டு ஏதோ என்று கேட்டுக் கொண்டு இருந்த  வீரப் பாண்டி…. தங்கையின் விஷயம் என்றது.

நான்கு படிக்கட்டையும்  ஒரே தாவளில் இறங்கி…. “ என்னலே ஆச்சி…..”

“ ந..ம்ம பாப்பாவ….”

வீர பாண்டியனின் பொறுமை பறந்து….மாயாண்டியின் சட்டையை கொத்தாக பிடித்து….  “ வெரசா சொல்லுலே….” குலுக்கி கேட்டான்.

“ கங்காதரன் சொந்தக்காரன் நம்ம பாப்பா படிக்கிற ஊர்ல தானே  ஹாஸ்பிட்டல் கட்டி இருக்கான்.”

“ சும்மா இழுக்காது என்ன சேதின்னு சொல்லுலே….”

“ அண்ணா பொறுமையா கேளுங்கண்ணா….” சரவணப்பாண்டி தன் அண்ணனை அமைதிப்படுத்தி…

“ வெரசா சொல்லுண்ணே….” அவனுக்குமே தங்கைக்கு என்ன ஆனதோ என்ற பதற்றம்.

“ அந்த ஹாஸ்பிட்டல…நம்ம பாப்பாவுக்கு கருக்கலைப்பு செஞ்சுபுட்டாங்கலாம்.”

“ ஏலே எங்கே வந்து என்ன பேச்சு பேசுறலே….” இரு அண்ணன்களும் ஒரு சேர மாயாண்டியை அடிக்க போக…

காலையில் பட்டிக்கு வந்த காத்தமுத்து….. “ அவனை விடு வீரா…”

“ அண்ணாச்சி அவன்….” வீராவின் பேச்சை பாதியில் நிறுத்தி…

“ அவன் சொன்னது நிஜம் தான்லே….”

“ என் தங்கச்சி எப்படி….?என்ன சொல்றிங்க….?”

“ பட்டியில வந்து சொன்னேன்லே  கங்காதரன் மவன் வேறு ஜாதி பொண்ண பதிவு கல்யாணம் செய்துக்கிட்டான்னு,  அது நம்ம வீட்டு பொண்ணு தான்னு இப்போ தான் எனக்கு சேதி வந்தது.”

“அய்யோ … அய்யோ…அய்யோ….” பூச்சி மருத்து தெளித்தவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு, அப்போது தான் வீட்டுக்கு வந்த வீரப்பாண்டியனின் அம்மா காத்தமுத்து சொன்ன செய்தியில் நெஞ்சில் அடித்து கதறி அழுதார்.

அவரை பிடித்து தடுக்கும் நிலையில் யாரும் இல்லை. அங்கு இருந்த அனைவருக்கும் அச்செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

வீரப்பாண்டி தான் முதலில் அதிர்ச்சி தெளிந்தவனாய்…. “ முதல்ல உள்ளார வாங்கண்ணே….” வீட்டுக்குள் அழைத்து சென்றவன்.

“யசோ குடிக்க மோர் கொண்டா…..” அவனின் பொறுமை அங்கு இருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

 

Advertisement