Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 3

அலுவலகத்திற்குச் சென்ற கதிருக்கு வேலையே ஓடவில்லை.

அந்த ஊருக்கு செல்வது என்ற நினைப்பே கோபத்தில் முகத்தை செந்தணலாக்கியது.

அந்த ரகசியம் அவனுக்குள்ளே புதைந்து யாருக்கும் தெரியாமல் இருப்பதால் மட்டுமே எல்லோரும் அவனுக்காக வருத்தப்படுகின்றனர். இதுவே அது மட்டும் நிகழ்ந்து இருந்தால், அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் எவ்வளவு பெரிய அவமானமாகியிருக்கும்.

இல்லை, தன்னை மீறி எதுவும் நடந்திருக்காது. இனிமேலும் நடக்காது என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.

அவன் தன் யோசனைகளில் உழன்றாலும், வேலை என்று வரும்போது அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு தன் வேலையை மிகவும் சரியாக செய்து முடித்துவிட்டு மணியைப் பார்க்க ஒன்றைக் காட்டியது.

பிறகு அவன் ஒரு முடிவு எடுத்தவனாக தன் உயர் அதிகாரியை சந்திக்கச் சென்றான்.

காவ்யா தன் அண்ணன் கோபமாக எழுந்து சென்றதால்,
“எல்லாம் உங்களால தான். கொஞ்சம் பொறுமையா சொல்லியிருந்தா தான் என்ன. இப்ப பாருங்க சாப்பிடாம கூட போயிட்டாங்க”

“நீங்க எப்படி தான் பிஸினஸ் பண்றீங்களோ. எனக்கு சுத்தமா புரியலை” என்று கிரியை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

கதிர் அவ்வாறு எழுந்து சென்றது கிரிக்கு வருத்தம் அளித்தாலும், அவன் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் அங்கு சென்றால் தான் தீர்வு கிடைக்கும் என அவன் உள்மனது கூற அதனால் அவனிடம் கடுமையாக பேசினான்.

அவனுக்குமே உள்ளுக்குள் அவன் என்ன சொல்வானோ என்ற பயம் இருந்தது.
ஆனால் அவன் பயம் தேவையற்றது என்பது போல் அன்று கதிர் மதியமே வீட்டிற்கு வந்தான்.

அவனை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமே.
பின்னே அவன் எப்போழுதுமே மதியம் சாப்பிடக்கூட வராதவன் இன்று வந்திருக்கிறான் என்றால் அவனும் அவர்களுடன் ஊருக்கு செல்லத் தானே என்று அர்த்தம்.
கதிர் “ அம்மா, நானும் ஊருக்கு போறேன். நாளைக்கு கல்யாணம் முடிஞ்சவுடனே கிளம்பிருவேன்” என விரைப்பாகச் சொல்லி தன் அறைக்குச் செல்ல,
மீனாட்சிக்கு சொல்லவா வேண்டும், சந்தோஷம் தாளவில்லை.

சுந்தரேசன் கதிரின் அறைக்கு சென்று அவனுக்கு தேவையான பொருட்களை பேக் பண்ண உதவிக் கொண்டே, “கதிர் உன்னோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். நீ திரும்பி வரப்ப எங்க பழைய கதிரா வரணும்” என்று தலையில் கைவைத்து ஆசீர்வாதம் வழங்கினார்.

சுந்தரேசனும் மீனாட்சியும் வழியனுப்ப கதிர், கிரி, காவ்யா மற்றும் வர்ஷா பாப்பா ஆகியோர் சென்னை விமான நிலையத்திற்குச் செல்ல, அவர்கள் அங்கிருந்து மதுரை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

அவர்கள் எக்ஸாம் எழுதி முடித்துவிட்டு வெளியே வர கல்லூரி வளாகத்தில் சுமித்ராவின் அப்பா ராஜசேகர் காரோடு காத்திருந்தார்.

அவரை முதலில் பார்த்த வான்மதி ‘என்ன மாமா நீங்க கூப்பிட வந்திருக்கிங்க’ எனக் கேட்க

‘இல்ல பாப்பா வள்ளி(தாய் வழி) பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்துச்சு. அதான் சுமிய கூட்டிட்டு போகலாம்னு வந்தேன். நீயும் எங்க கூட வர்றியா பாப்பா’ என

‘இல்ல மாமா அண்ணா கார் அனுப்பியிருக்காங்க. நான் லைப்ரரிக்கு போயிட்டு வீட்டுக்கு போறேன்’ என்றாள்.

சுமி ‘இரு மதி நானும் கூட வரேன் புக் ரிட்டன் பண்ணனும்’ என

‘கொடு நானே பண்ணிரேன்’ என்று அவளிடமிருந்து வாங்க, ராஜசேகரும் சுமியும் கிளம்பினார்கள்.

தானும் உடன் வருகிறேன் என்ற துரைத் தாத்தாவிடம் மறுத்து கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லிச் சென்றாள்.

வான்மதி சொல்லிச் சென்று ஒருமணிநேரமாகியும் வராததால் அவர் அவள் மொபைலுக்கு அழைக்க அது சுவிட்ச் ஆப் என்று வந்தது.

சரி நூலகத்திற்குச் சென்று பார்க்கலாம் என்று அங்கு போய் தேட அங்கும் அவள் இல்லை. ஏனோ அவருக்கு பயமாக இருக்க உடனே வெற்றிக்கு அழைத்தார்.

இரண்டு ரிங் கழித்தே எடுத்தவன் “வீட்டுக்கு போயிட்டிங்களா தாத்தா” எனக் கேட்க
“தம்பி அது வந்து …”

அதிக வேலை சோர்வினால் “ம் என்னன்னு சொல்லுங்க” என்று அதட்ட

“இன்னும் காலேஜ்ல தான் இருக்கேன் தம்பி. நம்ம பாப்பா லைப்ரேரிக்கு போறேனு சொல்லி போச்சு. இவ்வளவு நேரமாச்சுன்னு அங்க போனா அங்க நம்ம பாப்பா இல்லை. போன்னு போட்ட போனும் போகமாட்டுது” என்று பதட்டமாகச் சொல்ல

அந்த பதட்டம் வெற்றிக்கும் தொற்றிக் கொள்ள “என்ன சொல்றீங்க நீங்க. பாப்பா சுமி கூட அங்க தான் இருக்கும், நீங்க நல்லா பாருங்க” என

“இல்லை தம்பி சுமிம்மா அப்பவே வீட்டுக்கு போயிட்டாங்க”

“இருங்க எதுக்கும் நான் சுமிட்ட பேசிறேன். நீங்க அங்கேயே இருங்க. நான் இன்னும் அரைமணி நேரத்துல அங்க இருப்பேன். அதுக்குள்ள மதி வந்துட்டா எனக்கு போன் பண்ணுங்க” என்று சொல்லி விட்டு கல்லூரிக்கு செல்ல விரைந்தான்.

சுமித்ராக்கு போன் செய்ய அவள் தன் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவள் தந்தை வந்து அழைத்து சென்று விட்டதாகக் கூறி மதி வீட்டிற்கு போய்விட்டாளா என்றுக் கேட்க அவன் வெளியில் இருப்பதாக ஏதோ சொல்லி சாமளித்து போனை வைத்தான்.

வெற்றிவேல் சில ஆட்களோடு கல்லூரிக்குச் சென்று வான்மதியை தேடினான். அவனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதில் வீட்டிலிருந்து வேறு போன் செய்து வான்மதி இன்னும் ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று கேட்டதற்கு, அவள் லைப்ரரியினுள் இருப்பதாகவும் தானும் அவளுடன் இருக்கிறதாகவும் கூறியிருந்தான்.

நேரம் சென்றுக் கொண்டே இருந்தது. பிறகு வேறு வழியில்லாமல் தன் தந்தைக்கு அழைத்து ‘வான்மதியை காணவில்லை’ என்றுக் கூறினான்.

Advertisement