Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 7

ஒன்றரை வருடத்திற்கு முன்பு பூஞ்சோலையில் குளிர்பான தொழிற்சாலையும், கெமிக்கல் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்க ஒரு தனியார் வெளிநாட்டு நிறுவனம் அரசிடம் அனுமதி வாங்கியது.

குளிர்பான தொழிற்சாலையை அங்கு அமைத்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.
கெமிக்கல் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயனங்களால் அந்த மண்ணின் தன்மையை பாதித்து நிலத்தடி நீர் வற்றி நிலம் வறண்டுவிடும். விவசாயமும் பாதிக்கப்படும்.

ஆனால் அப்போது அமைச்சராக இருந்த முத்துப்பாண்டியன் அந்த தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி அளித்தார்.

இதனை எதிர்த்து கந்தவேலும் ரத்னவேலும் தொழிற்சாலை அமைக்க நிலம் அவர்களுக்கு தரக்கூடாது என்று அவ்வூர் மக்களுக்கு பஞ்சாயத்து மூலம் கட்டளையிட்டு ஊர்மக்களுடன் சேர்ந்து எதிர்த்தார்.

மேலும் வெற்றிவேல் அந்த தொழிற்சாலை இங்கு அமைக்க பல கோடி ஊழல் நடந்ததை நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வெளிப்படுத்தி அந்த தொழிற்சாலைகள் நம் மாநிலத்திலேயே அமைக்க முடியாதபடி செய்தான்.

அதனால் முத்துப்பாண்டியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் லஞ்சம் வாங்கியது, ஊழல் செய்தது மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறைக்கும் சென்று வந்தார்.

ஆனால் அவர்களுக்கு தெரியாது அந்த வெளிநாட்டு நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரே முத்துப்பாண்டியன் தான் என்று. ஏன் யாருக்குமே அது அவர்களுடைய நிறுவனம் என்று தெரியாது.
அது அவருடைய பினாமி மூலம் செயல்படுகிறது.

அவருக்கு அந்த தொழிற்சாலைகள் இங்கு அமைக்காததனால் பல கோடிக்கணக்கான பணம் நஷ்டமாகியது. அதைக்கூட அவர் பெரிதாக நினைக்கவில்லை. இந்த நாட்டில் இல்லையென்றால் வேறு ஏதாவது வறுமையிலுள்ள பொருளாதாரவளம் குறைந்த நாட்டிற்கு சென்றால் செயல்படுத்திவிடலாம்.
ஆனால் அமைச்சர் பதவி கிடைக்குமா என்றால் நிச்சயமாக கிடைக்காது.

அவர் சம்பாதித்ததில் பாதிக்கும் மேல் அரசியலில் அமைச்சர் என்ற பதவியினால் சம்பாதித்தது.
அவர் மட்டும் பதவியில் இருந்தால் அந்த தொழிற்சாலை மூலம் கிடைக்கும் பணத்தை விட பத்து மடங்கு அதிகம் கிடைக்கும். இப்போது முதலுக்கே மோசம் என்றால் சும்மா விடுவாரா?

அதனால் தான் முத்துப்பாண்டியன் அவர்களை பழிவாங்க தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்.அப்போது தான் அருண் அவர்கள் வீட்டுப் பெண் வான்மதியை விரும்புவதாகக் கூறினான்.

அவர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
பின்னே அவர்கள் வான்மதி மீதுவைத்திருந்த அன்பு அனைவரும் அறிந்ததுதானே. அவர்கள் வீட்டுப்பெண்ணை தங்கள் மருமகளாக்கிக் கொண்டால் அவர்கள் அனைவரும் இவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுத்தானே ஆக வேண்டும்.

வான்மதியின் குடும்பத்திற்கும் அருணுடைய குடும்பத்தில் உள்ளவர்களை பிடிக்காது.
முத்துப்பாண்டியன் மற்றும் தங்கலெட்சுமி செயல்களால் அவர்களை விசாலம் ஆச்சிக்கு முதலில் இருந்தே பிடிக்காது.

லட்சுமி பெரியம்மாவின் சொந்தம் என்பதனால் அதனை அவர்களிடம் வெளிக்காட்ட இயலாது அவர்களிடமிருந்து வான்மதியின் குடும்பத்தினர் விலகி தான் இருப்பர். ஆனால் இந்த தொழிற்சாலை பிரச்சனைக்குப்பின் அவர்கள் குடும்பத்துக்கும் இவர்கள் குடும்பத்துக்கும் இடையே பகைமை ஏற்பட்டது.

ஆனால் வான்மதி அருணை விரும்பவில்லை என்பதனால் அவளைக் கடத்துமாறு தங்கலெட்சுமி தான் யோசனை கூறினார்.

தாய் வான்மதியை கடத்துமாறு கோடு போட்டுக் கொடுக்க அவன் அதில் ரோடு போட்டான்.
புரியவில்லை தானே?

ஹம்ம் தங்கலெட்சுமி வான்மதியை கடத்தி ஒரு இரவு அவளை மறைத்து வைக்க சொல்ல அவனோ அவளைக் கடத்தி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டால் பிறகு யாராலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று திட்டம் போட்டான்.

அதனால் அவளைக் கடத்திக்கொண்டு மதுரையில் உள்ள தன்னுடைய நண்பனின் ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றான். ஆனால் அங்கே தன் கெட்ட நேரத்தால் கதிரவனிடம் மாட்டிக்கொண்டான்.

சரி அருண்பாண்டியனாவது வான்மதியை விரும்பினான் என்றால் அதுவும் உண்மை இல்லை. அவன் அவள் அழகையும், அவள் மூலம் கிடைக்கும் சொத்தையும், பெரிய வீட்டு மருமகன் என்ற பதவியையுமே விரும்பினான்.
இது எப்படி காதல் ஆகும்?

வீட்டிற்கு சென்ற காவ்யாவிற்கு கதிர் மேல் கோபம் கோபமாக வந்தது. கிரி காவ்யாவை சமாதானப்படுத்த முயற்சி செய்ய, கதிர் மேல் இருந்த கோபத்தை எல்லாம் கிரி மீது காட்டிவிட்டு “நீங்க அவன் கூட பேசக்கூடாது.அவனுக்கு போனும் பண்ணக்கூடாது அவன் போட்டாலும் பேசக்கூடாது” என்று மிரட்டிவிட்டு தூங்கச் சென்றாள்.

காவ்யா தூங்கியவுடன் கிரி வெளியே வந்து கதிரவன் போனுக்கு அழைத்தான்.

அவன் எடுத்தவுடனேயே,
“எங்கடா போய் தொலைஞ்ச கடன்காரா. உன்னால உன் தங்கச்சி என்மேல கோவப்படறா. ஒழுங்கா இங்க வராம எங்க போன? உங்க வீட்டு மாப்பிள்ளையா வந்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்” என்று பொரிந்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்த

அந்தப்பக்கம் கதிரோ “டேய் நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுடா” என்று கத்த

“சரி சொல்லு. நீ இப்ப எங்க இருக்க?” என

“நான் முக்கியமான விஷயமா திருச்சிக்கு போயிட்டு இருக்கேன். நான் போன வேலையை முடிச்சிட்டு நேரா சென்னைக்கு வந்துருவேன். மத்த விஷயத்தை நான் நேர்ல சொல்லுறேன். இப்ப என்னால எதுவும் சொல்ல முடியாது. நீ எப்படியாவது காவ்யாவை சமாளிச்சுருடா” என்று சீரியஸாகப் பேச

அவன் குரலில் இருந்தே அவன் நிலைமையினைப் புரிந்துக்கொண்டு “சரிடா கதிர் நான் பார்த்துக்கிறேன். நீ பத்திரமா போயிட்டு வா” என்றுக்கூறி வைத்தான்.

இரவு மணி பன்னிரெண்டைத் தொட்டுக் கொண்டிருந்தது. அப்போது தான் கதிரவன் காரில் வான்மதி மற்றும் அருணோடு பூஞ்சோலை கிராம ஊர் நுழைவுவாயிலுக்கு வந்தான்.

அங்கே இருந்த காவல்காரன் காரை நிப்பாட்டி இருளில் முகம் தெரியாததால் “யார்?” என்றுக் கேட்க

கதிரவன் “கந்தவேல் வீட்டிற்கு போக வேண்டும்” என்றுக் கூற

அவரோ “ நீங்க யாரு அவங்க சொந்தமா?” என

“சோமு அண்ணா என்கூடத்தான் இவர் வந்திருக்கிறார். நாங்க எங்க வீட்டுக்குப் போறோம்” என்றுக் கூற
அப்போது தான் அதில் வான்மதி இருப்பதை அவர் பார்த்தார்.

அவர் அவர்களை கீழே இறங்கச் செல்ல ஏன்? எதற்கு? என்று கேட்ட கதிரவனை ஒரு பார்வை பார்த்து வான்மதியிடம் உங்க வீட்டுல இருக்கவங்க இப்ப இங்கதான் வரப்போறாங்க அதான் எனவும், சரி என்று அவர்கள் இறங்க அவர் அருணையும் கட்டவிழ்த்துவிட்டு அங்கிருந்த கருப்பணசாமி கோவிலுக்கு கூட்டிச் சென்றார்.

அப்படியே பஞ்சாயத்துக்காரர்களுக்கும், வான்மதி மற்றும் அருண் வீட்டினருக்கு தகவல் சொல்லி அழைத்துவர ஆள் அனுப்பினார்.

வான்மதியுடைய வீட்டில் ஹாலில் ஆளுக்கோரு மூலையில் கீழே அனைவரும் அமர்ந்திருந்தனர். விசாலம் ஆச்சி மட்டும் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தார்.

லட்சுமியும் தெய்வாiனையும் அழுதுக் கொண்டிருக்க, மற்றவர்களோ ஆண்களாக பிறந்துவிட்டதால் கோபம், வருத்தம், இயலாமை, ஏமாற்றம் போன்ற எந்த உணர்வையும் வெளிக்காட்ட முடியாது சோர்ந்து அமர்ந்திருந்தனர்.

அப்போது பார்த்து வெளியே யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர்.

அங்கே இருந்த தண்டல்காரர் “உங்க குடும்பத்தை ஊர் எல்லையில் இருக்கும் கருப்பனசாமி கோயிலுக்கு கூட்டிட்டு உடனே வரசொன்னாங்க” என

வெற்றிவேல், லட்சுமி மற்றும் தெய்வானைக்கு ஒன்றுமே புரியவில்லை. நம்மள எதுக்கு இப்ப அங்க வர சொல்றாங்க என்று யோசித்தனர்.

எதற்கு என்று புரிந்துகொண்ட விசாலம் ஆச்சி, கந்தவேல் மற்றும் ரத்னவேல் மனம் அதிர, அவர்கள் அனைவரும் எல்லையில் இருக்கும் கோவிலுக்குச் சென்றனர்.

அவர்களுக்கு முன்னே அருண் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

முத்துப்பாண்டியனும் தங்ககலெட்சுமியும் அங்கு அடிபட்ட நிலையில் அருண் மற்றும் வான்மதியோடு ஒரு புதியவன் நின்றிப்பதை பார்த்து, அருண் அருகில் சென்று, “என்னடா இது. உனக்கு ஏன் அடிபட்டிருக்கு?” என்று விசாரிக்க அவனால் தான் பேசவே முடியவில்லையே பிறகு என்ன சொல்வான்.

அருண் சைகையில் ஏதோ சொல்ல வர வான்மதி வீட்டினரும் வந்தனர்.

அங்கே கூட்டமாக இருக்க இவர்கள் வந்தவுடன் வழிவிட்டனர்.

அங்கு அருண் மற்றும் வான்மதியைப் பார்த்ததும் அவர்கள் அப்படியே நிற்க தெய்வானை மட்டும் வேகமாக அவள் அருகில் சென்று என்ன, ஏது என்று எதுவும் கேட்காமல் வான்மதியை அறைந்தார்.

“அந்தப் பையன பிடிச்சருக்குன்னு எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல. இப்படி ஓடிப் போயி குடும்ப மான, மரியாதையை கெடுத்துட்ட” என்று சொல்லி மறுபடியும் அடித்தார்.

அவள் பெரியம்மா லட்சுமி தான் தெய்வானையை தடுத்து நிறுத்தி “நடந்தது நடந்துருச்சு. இனி நடக்குறத பார்ப்போம்” என

விசாலம் ஆச்சியோ “நீயா இப்படி பண்ணுன” என்றும்

கந்தவேல் “எங்ககிட்ட சொல்லியிருந்தா எங்களுக்கு பிடிக்கலைன்னாலும் உனக்காக செஞ்சிருப்போம்” என்றும்

வெற்றிவேலோ “ இன்னும் என்னால நம்பமுடியல்லை. எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லுவ. ஏன் அவன பிடிச்சுருக்குங்கறத மட்டும் சொல்லல” என்றும்

மாறிமாறி பேச ரத்னவேல் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

வான்மதிக்கு தன் அம்மா அடித்ததைவிட தன்னை நம்பமால் அவர்கள் பேசியதால் அழுகை பொங்கியது.

யார் என்னை நம்பாவிட்டால் என்ன? தன் அப்பா நம்புவார் என்று அவரைப் பார்க்க அவரும் இவளைத் தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் அவள் அருகில் வந்து “ நீ இவங்க எல்லார் முன்னாடியும் அவன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி இப்பவே கல்யாணம் பண்ணிக்கனும்” என அருணை கைகாட்டிச் சொல்ல

அவளுக்கு உலகமே சுற்றி துக்கம் நெஞ்சை அடைக்க கண்கள் இருட்டிக் கொண்டுவந்தது.

“என்னோட அப்பாவ இப்படி சொன்னார். இல்லை இது கனவு. ஆனால் கனவு மாதிரி இல்லையே, நிஜம் தானே. ஐய்யோ நான் என்ன அப்படிப்பட்ட பொண்ணா. என்னைப் பத்தி தெரிஞ்சும் ஏன் இப்படி பேசுறாங்க. இது எல்லாம் கேட்கறதுக்கு நான் செத்துப் போயிருக்கலாம்” என்று மனதுக்குள்ளே ஓலமிட

வெளியே மவுனியாக பார்வை எங்கோ வெறிக்க பிரமை பிடித்தாற்போல் நின்றிருந்தாள்.

-புயல் வீசட்டும்.

Advertisement