Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 6

கிரியும் காவ்யாவும் ரிசப்ஷனுக்கு கிளம்பும் போதே காவ்யா வர்ஷா பாப்பா அழவும் தன் செல்லை வீட்டிலேயே மறந்துவிட்டுச் சென்றிருந்தாள்.

கிரியும்,காவ்யா மண்டபத்திற்கு சென்றவுடன் கதிருக்கு போன் போட அவன் எடுக்கவேயில்லை. மீண்டும் கிரி கதிருக்கு அழைக்கப் போகும்போது அங்கிருந்த குழந்தைகள் அவனுடைய போனை வாங்கி விளையாட ஆரம்பித்தனர்.

சரி தன்னிடம் இருக்கும் வேறொரு போன் மூலம் அழைக்கலாம் என்றால் அது சார்ஜ் இல்லாமல் அணைந்திருந்தது.

எப்படியோ மதுரைக்கு வந்துவிட்டான். இனி என்ன இங்கு தானே? எப்படியும் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் அவன் விட்டுவிட்டான்.

அப்போது அக்குழந்தைகள் போனை தூக்கிப் போட்டு விளையாடியதால் கீழே விழுந்து அது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. அது தெரியமால் கிரி போனை கொடுத்தபோது வாங்கி பார்க்காமல் சட்டைப் பையில் வைத்துவிட்டான்.

ஆனால் நேரம் செல்ல செல்லத்தான் கிரிக்கு ஒருவேளை அவன் வரமாட்டோனோ இல்ல ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று தோன்றியது.
ரிசப்ஷன் முடியப் போகும் நேரத்தில் கூட கதிர் வரவில்லை என்பதால் காவ்யா மிகவும் கோபமாகிவிட்டாள்.

அங்கிருந்த உறவினர்களும், பெண் வீட்டினரும் கதிரவனது வருகையை எதிர்பார்த்தே காத்திருந்தனர். அவன் வராததால் அவனுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லையோ அல்லது ஒருவேளை இந்த பொண்ணை மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லையோ அதனால் தான் வரவில்லைபோல என்ற எண்ணம் எழுந்தது. அதையே ஒரு சிலர் பேசியும் கொண்டனர்.

இதனையெல்லாம் கேட்ட காவ்யாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவளுக்குமே கதிர் அங்கே வருவான் என்ற நம்பிக்கையே போய்விட்டது.
கிரி தான் ஏதும் சொல்லி காவ்யாவிடம் மாட்டிக்கொள்ள வேண்டாம் என அமைதியாக இருந்தான்.

பின் அவர்களிடம் கதிருக்கு முக்கியமான வேலை இருப்பதால் வர இயலவில்லை என்று போன் செய்ததாகக் பொய் சொல்லி, மன்னிப்புக் கூறியும் கிரிதரன் மற்றும்; காவ்யா கிளம்பி அவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.

கதிரவன் ‘அய்யோ இந்த பொண்ணு என்ன சும்மா சும்மா மயங்குது’ என்று நினைத்துக் கொண்டு நர்ஸை கூட்டி வந்தான்.

அவர் வான்மதியை பரிசோதித்துவிட்டு “சதாராண மயக்கம் தான் சார். திரும்ப முழிச்சவுடனேயே ஜுஸ் இல்லைன்னா ஏதாச்சும் பழம் சாப்பிட கொடுங்க சரியாயிடும்” என்றார்.

அவனுக்குமே காலையிலிருந்து சாப்பிடாததால் “என்னையும் கொஞ்சம் கவனியேன்” என்று வயிறு சத்தமிட,

அவனும் அங்கிருக்கும் கேண்டீன் சென்று அவளுக்கும் தனக்கும் ஜீஸ் மற்றும் இரவு உணவு வாங்கி வந்தான்.
சிறிது நேரத்திலேயே அவளுக்கு மீண்டும் முழிப்பு வந்து அவள் எழ முயற்சி செய்ய வான்மதியால் எழுந்திருக்க முடியவில்லை.

அவள் எழ முயழவும் கதிரவன் உதவி செய்ய அருகினில் வர அவள் மிகவும் பயந்து இருக்கவும் தான் அவளுக்கு உதவி செய்யவே கிட்ட வருவதாக கூறியும் அவள் மறுத்தாள்.

சிறிது நேரம் அவள் தானாக முயற்சி செய்து பார்த்தும் முடியாமல் போகவே,
‘நான் என்ன இவள முழுங்கவா போறேன் இப்படி நம்மள பார்த்து வைக்கிறா’ என்று மனதில் நினைத்துக்கொண்டு கதிரே அருகில் வந்து அவள் மறுத்தாலும் எழ உதவி செய்து கொஞ்சம் ஜுஸை பருகச் செய்தான்.

அவள் சற்றுத் தெம்பாகவும் அவளிடம் பேசத் தொடங்கினான்.

அவன் தான் போலீஸ் என்றும் அருண் கட்டிப்போட்டிருந்த போட்டோவைக் காட்டி அவனிடமிருந்து காப்பாற்றியதையும் விளக்கிச்சொல்ல அவள் சிறிது பயம் தெளிந்து அமர,

“சரி சொல்லு. நீ எப்படி அவங்க கூட வந்த” எனக் கேட்க
அவள் மெதுவாக நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள்.
அருண்பாண்டியன் வான்மதி கல்லூhயில் படிக்கும் சீனியர் மாணவன். அவர்களின் ஊர்க்காரன் மற்றும் சொந்தம்.

கடந்த ஒரு வருடமாக அவன் தன் பின்னால் சுற்றுவதால் ஏற்கனவே பயந்த குணம் கொண்ட வான்மதி மிகவும் பயந்து போயிருந்தாள்.

இவளின் குடும்பத்திற்கும் அவனின் குடும்பத்திற்கும் சுத்தமாக ஆகாது. இதில் தன்னால் எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்று அவன் தன் பின்னால் சுற்றுவதை வீட்டில் யாரிடம் சொல்லவில்லை.

ஒருநாள் வான்மதியும் சுமித்ராவும் மதிய இடைவெளியில் வகுப்புவிட்டு வெளியே வரும்போது அவர்களை இடைமறித்த அருண்,
“உன்கிட்ட கொஞ்சம் தனியாக பேச வேண்டும்” என்றுக்கூற

அவள் “என்னன்னாலும் இங்கயே சொல்லுங்க” என

“இன்னைக்கோட எனக்கு காலேஜ் முடியுது. இன்னும் ப்ராஜெக்ட் மட்டும் தான் பாக்கி இருக்கு. திரும்ப உன்ன நான் எப்ப பார்க்கமுடியும்னு கூட சொல்ல முடியாது. அதான் இப்பவே என் மனசில இருக்கிறத சொல்லறேன்”

“நான் உன்னை மனசார காதலிக்கிறேன். உனக்காக எவ்வளவு நாள் வேணும்னாலும் நான் காத்திருப்பேன். நீ பொறுமையா யோசிச்சு சொல்லு” என

அவள் அவன் தன்னை விரும்புகிறான் என்று கூறியதில் மிகவும் பயந்துவிட்டாள். ஆனால் உறுதியாக “இங்க பாருங்க, எனக்கு இது எல்லாம் பிடிக்காது. என் பின்னாடி சுத்துற வேலை எல்லாம் வைச்சுக்காதீங்க. இல்ல எங்க அப்பாகிட்ட சொல்லிருவேன்” என்று சொல்லிவிட்டுச் சுமியை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டாள்.

தனியாக இருக்கும்போது சுமி கூட “உனக்கு அவங்கள பிடிச்சிருக்கா” என்றுக் கேட்க

“ச்சீச்சீ அப்படி எல்லாம் இல்லை. நான் நம்ம வீட்டுல சொல்றங்களால தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என

பின் சுமித்ரா மதியிடம் “அப்ப நம்ம இதை உங்க அண்ணாகிட்ட(வெற்றி) சொல்லலாம்” என்றதற்கு

“இல்லையில்லை வேண்டாம். அண்ணாக்கு தெரிஞ்சா ரொம்ப கோவப்படும். சும்மாவே அவங்க குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் ஒத்துவராது. நம்மளே என்னாலும் பார்த்துக்கலாம். ரொம்ப தொல்லை பண்ணுனா நம்மால் முடியலைன்னா வீட்டுல சொல்லிரலாம்” என்று சொல்ல
சுமியும் சரியென்பதாக தலையாட்டினாள்.

நடக்கும் சம்பவங்களால் பின்னொரு நாளில் இதற்காக அவள் வருந்தப்போவது தெரிந்திருந்தால் அவர்கள் முன்கூட்டியே சொல்லியிருக்கலாம் என்று எண்ணி வருந்துவதை யாரால் தடுக்க இயலும்.

விதியின் விளையாட்டை யாராலும் அறிய இயலாது. நடப்பது நடந்தே தீரும்.

இன்று அவள் புத்தகங்களை திருப்பிக் கொடுக்க காலேஜ் லைப்ரேரிக்குச் செல்லும்போது அருணின் நண்பன் அவள் தனியாக போவதைப் பார்த்துபோய் அவனிடம் சொன்னான்.

வான்மதி புத்தகத்தை கொடுத்துவிட்டு வெளியே வர அருண் வந்து அவளிடம் “எக்ஸாம் எப்படி எழுதியிருக்க வான்மதி” என்று இயல்பாக பேச

அவளோ ஐய்யோ இவனா என்று பார்த்திருக்க,

அவனோ மறுபடியும் “ என்ன வான்மதி பேசவேமாட்டுற. சரி என்ன நீ இங்கயிருக்க. ஆனா உங்கப்பா அங்க உனக்காக வெயிட் பண்றார்” என காலேஜின் வேறொரு நுழைவுவாயிலைக் காட்டிச் செல்ல

அவள் சிறிதும் யோசிக்காமல் அவனிடமிருந்து விலகிச் சென்றால் போதும் என்ற எண்ணத்தில் அங்கே இருந்து அவர்களது வண்டி போல் தெரிந்த காரின் அருகே செல்ல பின்னாடியே வந்த அருண் அவள் அந்தக் காரின் அருகே சென்றதும் அவளின் முகத்தில் மயக்கமருந்து தெளித்த கர்சீப்பை அழுத்தி மயக்கமடையச் செய்து அந்தக்காரில் ஏற்றினான்.

பின் திருச்சியில் இருந்தால் தங்களை அவள் குடும்பத்தினர் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று வரும் வழியில் சில வண்டிகளை மாற்றி யாரிடம் மாட்டிக்கொள்ளாமல் மதுரைக்கும் கூட்டி வந்தான்.

அவ்வளவு நேரம் சரியாக செய்தவன் மதுரையில் உள்ள ஒரு ஹோட்டலில் அறையெடுத்து வான்மதியை கைத்தாங்கலாக அவள் சுயநினைவில்லாமால் இருப்பது யாருக்கும் தெரியாதாவாறு அழைத்துச் செல்ல முன்னாடி வழிகாட்டியபடி அவன் நண்பன் சென்றான்.

அவனின் துரதிருஷ்டமோ இல்லை வான்மதியின் நல்ல நேரமோ அருணுடைய நண்பன் கதிரவனைப் பார்த்து பயந்து உளறிக்கொட்ட மாட்டிக்கொண்டான்.

அவள் அனைத்தையும் சொல்லிமுடித்து கதிரவனைப் பார்க்க அவன் முகம் கோபத்தால் இறுகிக்கிடந்தது.
யாரோ ஒருவன் வந்து விரும்புவதாக சொன்னால் அப்பெண்ணும் விருப்பப்பட வேண்டும் என்ற கட்டாயம் என்ன? ஒரு பெண்ணுக்கு தன் சுய விருப்பம் என்று இருக்கக் கூடாதா?

அப்படி மீறி பிடிக்கவில்லை என்று சொன்னால் அப்பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிப்பது இல்லை கடத்தி மானபங்கப்படுத்தல் என்று என்னென்னவோ வழிகளில் அப்பெண்ணையும் அவளின் குடும்பத்தையும் சிதைக்கின்றனர்.

அவர்களுக்கு ஏன் தெரியமாட்டேங்கிறது? அவனைப் பெற்றவளாக, உடன்பிறந்தவளாக, மனைவியாக, தோழியாக, மகளாக, வழிகாட்டியாக என்று அனைத்தும்வாக அவனுக்கு இருப்பவள் பெண் தானே.
பெண் தான் ஒரு ஆணின் சக்தியும், சகலமும். ஆனால் அதனை புரிந்துக்கொள்ளாமல் பெண்ணினத்தை மதிக்கமால் இழிவாக நடப்பவர்களுக்கு அழிவு நிச்சயம்.

அவன் தான் செய்யும் செயல்களால் அவமானப்படுத்துவது அப்பெண்ணையா? நிச்சயமாக இல்லை. அவன் தன்னையும் தன் தாயின் வளர்ப்பையும் தன் தாயையும் அல்லவா கேவலப்படுத்துகிறான்.

கதிரவன் பிறந்த சென்னை மாநகரத்தில் பெண்களும் தற்போது அதிகமாக ஆண்களை ஏமாற்றுவதால், நாகரீகம் என்ற பெயரில் அரைகுறை அடையுடன் சமுதாயத்தை சீர்க்கெடுக்கும் எண்ணத்துடன் இருக்கும் மற்ற பெண்களை மதிக்கவே மாட்டான்.
அவனை சுற்றியுள்ள இடத்தில் அதிகமாக அப்பெண்களையே அவன் பார்த்து பழகியதால் பெண்களை, காதலை, திருமணத்தை வெறுக்கத் தொடங்கினான்.

ஆனால் அவன் வெறுக்க அது மட்டும் தான் காரணம் என்றால் இல்லை.

அப்படிப்பட்ட பெண்களையே பார்த்திருந்தவனுக்கு வான்மதியை பார்த்து ஒரு மரியாதையும் பிரமிப்புமும் ஏற்பட்டது.

அவன் கண்கள் வான்மதியை முதன்முதலில் பார்த்தப்போது அவள் முகத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. அவள் முகம் ஏதோ ஒருவகையில் தன்னை கவருவதாக உணர்ந்தான்.

அவள் மயக்கத்தில் இருந்தபோது அவளைத்தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனே அறியாமல் அவள் பால் ஈர்க்கப்பட்டான்.

அதனால் தான் அவளிடம் கோபமாகவும் பேசினான்.
ஆனால் தற்போது அவனுக்குள் விருப்பம் என்ற விருட்சத்தின் விதை விழுந்தது. ஆனால் அதை அவன் உணரவில்லை, உணரவும் விரும்பவில்லை.

அவனே அதற்கு இரக்கம், கடமை பெயரிட்டு அவளுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யவேண்டும் என்று முடிவு செய்தான்.

இரவு வேறு ஆகிவிட்டது. இவ்வளவு நேரம் சென்று தங்கள் பெண்ணை காணவில்லையென்றால் அவளுடைய பெற்றோர்கள் என்ன நினைப்பார்கள் என்று அவளுடைய பெற்றோரின் போன் நம்பரை வாங்கி முயற்சி செய்ய ரிங் போய்க் கொண்டே இருந்ததே தவிர எடுக்கப்படவில்லை.

இதற்கும் மேலும் நேரம் கடத்தினால் பிரச்சனையாகிவிடும் என்று வான்மதியைக் கூட்டிக் கொண்டு அவளுடைய ஊருக்கு புறப்பட்டான்.

இரவு நேரம் என்றும் பாராமல் பூஞ்சோலை கிராமமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
இன்னும் சிறிது நேரத்தில் வான்மதியின் வீட்டில் பஞ்சாயத்துக் கூட்டப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடாக அவ்வூரிலுள்ள மக்கள் அனைவரும் அங்கே குழுமியிருந்தனர்.

“பாரு ஊமை மாதிரி இருந்துட்டு என்னக் காரியம் பண்ணி வச்சிருச்சு”

“இதுக்கு தான் பொம்பளை பிள்ளைகளை வெளியே அனுப்பி படிக்கவைக்கக் கூடாதுன்னு சொல்றது”

“இப்படி மொத்த குடும்பத்தையும் தலைகுனிய வச்சிட்டாளே பாவி”

“இல்ல ஆத்தா எனக்கு என்னமோ அந்தப் பய மேல தான் சந்தேகமாயிருக்கு, பொண்ணு நல்ல பொண்ணு”

“அதெப்படி மதினி சொல்லறது எனக்கு அந்தப் பொண்ணு விரும்பிதான் போயிருக்கும்னு தோணுது”

“பெரிய வீட்டுப் பெண்ணே இப்படி பண்ணிருச்சு இன்னும் மத்த பிள்ளைகளையெல்லாம் சொல்லவே வேணாம்”

என்று ஆளாளுக்கு விமர்சித்துக் கொண்டு இருக்க பக்கத்து சுற்று வட்டார பெரிய பஞ்சாயத்து தலைவர்கள் வரவும் சரியாக இருந்தது.

தண்டல்காரர் “இன்னைக்கு என்ன பஞ்சாயத்துன்னா பூஞ்சோலை கிராமத்து தலைவர் வீட்டுப் பொண்ணு, ரத்னவேல் ஐயாவோட மக வான்மதி- முத்துப்பாண்டியனோட பையன் அருண்பாண்டியன் கூட ஓடிப்போயிருச்சு. அதுக்காக தான் நம்ம எல்லோரும் கூடியிருக்கோம்” என அறிவிக்க

அதில் பெரிய கட்டு தலை எழுந்து வான்மதியின் குடும்பத்தைப் பார்த்து அவர்கள் ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால் சொல்லலாம் என
அவர்களோ “இந்தப் பஞ்சாயத்து என்ன முடிவு எடுத்தாலும் எங்க குடும்பம் கட்டுப்படும்” என கந்தவேல் சொல்ல

அடுத்து அருண் பாண்டியனுடைய பெற்றோரைப் பார்க்க அவர்களும் அதையே சொன்னார்கள்.
பின் அந்தத் தலைவர் “அந்தப் பொண்ணும் பையனும் ஒரே சாதி நம்ம இனங்கறதால பஞ்சாயத்துல அபராதம் கட்டி மன்னிப்பு கேட்டா ஒன்னும் பிரச்னையில்லை. அப்புறம் அவங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி தான் ஊருக்குள்ள வரணும். அப்படி இல்லேனா அவங்களோட நீங்க சேர்ந்தா உங்க இரண்டு குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைச்சுருவோம். ஊருள்ள நடக்கிற எந்த நல்லது கெட்டதுல்லயும் நீங்க கலந்துக்க கூடாது. இவங்களுக்கு யாராவது உதவி பண்ணுனா அவங்களையும் ஊரைவிட்டு ஒதுக்கிருவோம் விடியறதுக்குள்ள அவங்கள இங்க கூட்டிட்டு வர வழிய பாருங்க” என்று முடித்தார்.

அவர்கள் சொன்னதைக் கேட்டவுடன் முத்துபாண்டியன் மற்றும் தங்கலெட்சுமிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. பின்னே அவர்கள் இந்த முடிவு எடுப்பார்கள் என்று தெரிந்துதானே அருண்பாண்டியனிடம் வான்மதியை கடத்தச் சொன்னார்கள்.

இந்தக் கடத்தல் எதற்காக? சொத்துக்காகவா? நிச்சயம் இல்லை. கந்தவேல், ரத்னவேல் மற்றும் வெற்றிவேல் இவர்கள் மூவரையும் பழி வாங்குவதற்காக மட்டுமே. ஆம் பழி பழி மட்டுமே. எதற்காக? ஏன்?

-புயல் வீசட்டும்.

Advertisement