Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 5

கதவைத் திறந்த கதிரவன் எட்டிப்பார்க்க ஒரு அழகான மூன்று வயதிருக்கும் பெண் குழந்தை கைகளில் மிட்டாயுடன் கொள்ளைச் சிரிப்புடன் நின்றிருந்தது.

அந்தக் குழந்தையின் பின்னே வந்த வயதான பெண்மணி “மன்னிச்சுருங்க தம்பி. அவங்க தாத்தா கதவை திறக்கவும் வெளியே ஓடி வந்து உங்கள தொந்தரவு பண்ணிட்டா” என

அக்குழந்தை இவனை பார்த்ததும் தலையை சரித்து இன்னும் அதிகமாக சிரித்து கையை விரித்து “தூ..க்..கு” என

இவன் தூக்கியவுடன் அக்குழந்தை தன் கையில் இருந்த மிட்டாயில் ஒன்றை அவன் வாயில் திணித்து கன்னத்தில் முத்தமிட்டு இறங்கியது.

அப்பெண்மணி மறுபடியும் மன்னிப்பு கேட்டுவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அவனுக்கு எதிரே இருந்த அறையில் சென்று மறைந்தார்.

அந்தக்குழந்தையின் செய்கை அவனுக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று தோன்றச் செய்தது. அவனின் தலைவலியும் சுத்தமாக போய்விட்டது.

அப்போது அவன் உள்ளே செல்ல திரும்புகையில் யாரோ ஒருவன் எட்டிப்பார்த்து தயங்கி பின்னாடி சைகை செய்ய, இவனுடைய போலீஸ் மூளை ஏதோ சரியில்லை என்று சொல்லியது.

இவன் உள்ளே திரும்பி கதவை லேசாக சாத்தி வெளியே நடப்பது உள்ளிருந்து பார்த்தால் கதவிற்கு நேர் எதிரே இருந்த கண்ணாடியில் தெரியுமாறு கதவின் பின்னே நின்றுக் கொண்டான்.

கதிர் உள்ளே சென்றதும் அந்த ஹாலில் யாரும் இல்லாததை அவன் உறுதி செய்துக்கொண்டு அவன் பின்னே பார்க்க, அங்கு யாரோ ஒருவன் ஒரு பெண்ணை தன் தோளில் சாய்த்து அழைத்து வந்தான்.

அவர்கள் கதிரவனுடைய அறையை கடந்து செல்லும் போது, இதை கண்ணாடியில் பார்த்த கதிர் வேகமாக விரைந்து அப்பெண்ணை தன்பக்கம் இழுத்துக்கொண்டு அவன் தாடையில் ஒரு குத்து குத்த அவன் வாயிலிருந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.
அவர்கள் “என்ன சார், எதுக்கு அடிக்கிறிங்க” என்று கத்த

“என்னடா ஒன்னும் தெரியாதமாதிரி நடிக்கிறிங்களா. யாரு இந்த பொண்ணு? என்ன பண்ணுனிங்க” என்று கர்ஜிக்க

அவர்களில் ஒருவன் “இவ என்னோட தங்கச்சி தான். நாங்க வெளியூர். உடம்பு முடியாததால்ல ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டு வந்தோம். அதான் கொஞ்சம் மயக்கமா இருக்கா” என

இவன் பளார் பளார் என அவனுக்கு அறை கொடுத்து,
“என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுதுடா”

“எப்படி எப்படி உன் தங்கச்சியை அவன் தோளில சாய்ச்சுட்டு கூட்டி வருவனாம்” என்று மீண்டும் அடிக்க
அடித்தாங்க முடியாமல் அவன் “ஐய்யோ விட்ருங்க சார்”

“வலிக்குது சார். எனக்கு எதுவும் தெரியாது”

அங்கு ஓரமாக விழுந்துக் கிடந்தவனை காண்பித்து,
“இவன் தான் சார் அந்தப் பொண்ணை விரும்புனான். அதனால இந்தப் பொண்ணுக்கு மயக்க மருந்து குடுத்து தூக்கிட்டு வந்தான்” என

இவனை விட்டுவிட்டு அங்கு கீழே விழுந்து கிடந்து இருந்தவனையும் அடித்து பின் இருவரையும் தன் அறையில் உள்;ள சோபாவில் கட்டிப்போட்டுவிட்டு வந்து அப்பெண்ணிடம் சென்றான்.

அதுவரையிலும் அந்த தளத்தில் இருந்த யாருமே இவ்வளவு சத்தம் கேட்டு வெளியே வந்தாலும் வேடிக்கை பார்த்தார்கள.; ஒரு சிலர் கதவை அடைத்துக் கொண்டு மறுபடியும் உள்ளே போய்விட்டார்கள். உதவி செய்ய முன்வரவில்லை.
இதனை பார்த்த கதிருக்கு மேலும் கோபம் தலைக்கேறியது.

இதுவே அவர்கள் தங்கள் சகோதரியோ, மனைவியோ அல்லது அவர்கள் வீட்டுப் பெண்கள் இந்நிலையில் இருந்தால் இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா? யார் வீட்டுப் பெண்ணோ என்ற அலட்சியம் தானே இவர்கள் இப்படி இருக்கிறார்கள்.

இதே நிலைமை இவர்கள் வீட்டுப் பெண்களுக்கும் வர எவ்வளவு நேரமாகும்? அதனை யோசித்து புரிந்துக்கொள்ளமால் நடக்கும் இவர்களுக்கு எந்தத் தண்டனை கொடுத்தாலும் தகும்.
குற்றம் புரிந்தவனை விட குற்றம் புரிய தூண்டியவனுக்கே தண்டனை அதிகம்.

அதே போல் ஒருவரால் குற்றம் நிகழும் போது தம்மால் தடுக்கமுடிந்தும் தடுக்கமால் இருப்பது அவர்களே அந்தக் குற்றம் புரிந்தற்குச் சமம்.

கதிர் அங்கிருந்த தன் போலீஸ் நண்பன் ராகுலுக்கு போன் செய்து இங்கு நடந்த விஷயங்களை சுருக்கமாகச் சொல்லி அவனை ஹோட்டலுக்கு வருமாறு கூறி அவர்கள் இருவரையும் விசாரிக்கச் சொன்னான்.

பின் இப்போது கதிருக்கு அந்தப் பெண்ணின் உடல்நிலையே முக்கியமாகப்பட அப்பெண்னை தூக்கிக்கொண்டு அருகிலிக்கும் மருத்துவமனைக்கு விரைந்தான்.

மருத்துவமனையில்,
அங்கிருந்த நர்ஸ் “இவங்களுக்கு என்ன ஆச்சு? உங்களுக்கு என்ன வேணும்?” எனக் கேட்க

“என்னோட மாமா பொண்ணு தான் சிஸ்டர். இவங்களுக்கு யாரோ மயக்க மருந்து கொடுத்துட்டாங்க. கொஞ்சம் சீக்கிரம் என்னாச்சுன்னு பாருங்க” என

அப்போது அங்கே வந்த டாக்டர், அவனுடைய தோற்றத்தை வைத்தே போலீஸ் எனக் கண்டுக்கொண்டு வேறு ஒன்றும் கேட்காமல்,
அவனை அறைக்கு வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு வேகமாக அப்பெண்ணுக்கு வேண்டிய பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்யத் தொடங்கினார்.

“மயக்கமருந்து கொஞ்சம் அதிகமா கொடுத்துருக்காங்க. அதனால டிரிப்ஸ் போட்டுருக்கேன். கொஞ்சம் வீக்கா இருக்காங்க. எப்படியும் ஒரு மணிநேரத்துல கண் முழிச்சுருவாங்க.

வேற ஒரு பிரச்சனையும் இல்ல. அப்புறம் நீங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்” என்று சொல்ல

“ஓகே, தேங்க்ஸ் டாக்டர்”

அப்போது அவனுக்கு போன் வர யார் என்று பார்த்தால் அவன் நண்பன் ராகுல் தான் அழைத்தான்.

அழைப்பினை எடுத்து “என்னடா, என்ன சொன்னானுங்க அவனுங்க” என

“இல்லடா நீ அடிச்ச அடில அவனுங்க ஒருத்தனாலயும் பேசவே முடியலை”

“சரி நீ அங்கேயே இரு நான் வரேன்” என்று சொல்லி போனை கட் பண்ணினான்.

இரவு நேரத்தில் அந்தப் பெண்ணை தனியாக விட்டுச் செல்ல யோசித்து கிரிக்கு அழைக்க போன் போகவேயில்லை. சரி காவ்யாவுக்கு அழைக்கலாம் என்று அழைத்தால் அவள் போனை வீட்டிலேயே விட்டுச் சென்றதாகத் தெரிய வந்தது.

பின் அங்கிருந்த நர்ஸிடம் தனக்கு முக்கியமான வேலை இருப்பதால் அப்பெண்ணை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறுக் கூறி இரண்டு ஐநூறு ரூபாய் தாள் கொடுத்து தான்; அரைமணிநேரத்தில் திரும்பிவிடுவதாகவும் சொல்லிச் சென்றான்.

பின் நேராக ஹோட்டலுக்கு சென்றவன் தன்னுடைய அறைக்குச் சென்று கதவைத் தட்ட வந்து கதவை திறந்த ராகுல், வெகுநாள் கழித்து பார்த்த சந்தோஷத்தில் அவனை கட்டியணைத்து வரவேற்றான்.

கதிர் “எப்படிடா இருக்க” என

“நான் நல்லாயிருக்கேன் கதிர். நீ எப்படி இருக்க. வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க. நீ வர்றத ஏன் என்கிட்ட சொல்லல. வீட்டுல எல்லோருமே வந்திருக்கிங்களா, நீ நேரா நம்ம வீட்டுக்கு வரமா இங்க ஹோட்டல்ல என்னடா பண்ணுற” என கேள்விமேல் கேள்வி கேட்க

“ஷப்பா ஒவ்வொரு கேள்வியா கேளுடா” என்றுவிட்டு

“இன்னைக்கு தான் வந்தேன். ஊர்ல நாளைக்கு கல்யாணம் அதுக்கு தான் வந்திருக்கோம். அப்பாவும் அம்மாவும் மட்டும் வரலை. கிரி, காவ்யா, வர்ஷா பாப்பா எல்லாரும் ஊர்ல நடுப்பட்டில இருக்காங்க”

“ரிசப்ஷன் இங்கருந்து பக்கத்துல தான் அத முடிச்சுட்டு அங்க போகனும் அதனால சரி கொஞ்ச நேரம் தானே என்று இங்க வந்தேன்” என

“போதுமா எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டேனா” என்று விட்டு

“சரி நீ சொல்லு. உங்க வீட்ல சாக்ஷி, ஹரிணி பாப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க” என

“எல்லாரும் நல்லா இருக்காங்க. பாப்பாவ கூட்டிட்டு நேத்து தான் சாக்ஷி கோயம்புத்தூருக்கு போனா. நீP வர்றது தெரிஞ்சிருந்தா போயிருக்கமாட்டா” என

“பரவாயில்லை விடு,அடுத்த தடவை வரப்ப பார்த்துக்கலாம்”

“ஹம்ம் சரிடா”

பின் அங்கு கட்டி போடப்பட்டு இருந்தவர்களைக் காட்டி,

“சரி, இவனுங்கள என்ன பண்ணப் போற”

“ம் இவன மட்டும் நீ ஏதாச்சும் கேஸ் போட்டு உள்ளத்தள்ளு இல்ல என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. அவன நான் பார்த்துக்கிறேன் உன்னோட கார் மட்டும் எனக்குக் கொடு” என

“சரி கதிர். அப்ப நான் இவன கூட்டிட்டு போறேன். நீ ஏதாச்சும் வேணும்னா கால் பண்ணு” என்று சொல்லி கார் சாவியினை தந்துவிட்டு ஒருவனை கூட்டிக் கொண்டு கிளம்பிச் சென்றான்.

நேரம் பார்க்க அரைமணிநேரத்திற்கு மேலேயே கடந்து இரவு எட்டு மணியாயிருந்தது.

பின் கதிரவன் அவனை ஒரு அடி கொடுத்து மயக்கமாகச் செய்து கைகாலை கட்டி வண்டியின் பின் சீட்டில் போட்டு விட்டு, ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றான்.
அவன் அங்கு சென்ற சிறிது நேரத்திலே அப்பெண்ணும் விழித்துக் கொள்ள நர்ஸ் சென்று டாக்டரை அழைத்து வர இவனும் உள்ளே சென்றான்.

டாக்டர் செக்கப் செய்து சில சத்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்துவிட்டு செல்ல, கதிரும் அப்பெண்ணும் மட்டுமே இருந்தனர்.

அப்பெண் இவனை பார்த்து பயந்து மருண்டு விழிக்க, இவன் அவள் விழிகளிலே விழுந்தான். அவள் தன்னை பாதிக்கிறாள் என்று அதற்கு தன் மேலேயே கோபம் கொள்ள அக்கோபம் அவள் மேல் திரும்பி,

“நீ யாரு?

உன்னோட பேர் என்ன?

எந்த ஊரு?” என்று கோபமான முகத்தோடு கடினக்குரலில் விசாரிக்க

அவள் பயத்துடன் மெதுவாக “வான்மதி” என

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்ததால் அவளது உதட்டசைவில் புரிந்துக்கொண்டாலும் “என்ன சொன்ன சத்தமா சொல்லு” என்று அதட்ட
அவள் பயத்தில் மறுபடியும் மயங்கிவிட்டாள்.

Advertisement