Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 2

சென்னை மத்தியில் அமைந்து உள்ள அந்த வீட்டின் டைனிங் டேபிளில் ஒரு குட்டி மாநாடு நடந்துக் கொண்டிருக்கிறது.

வாங்க நாம என்னன்னு போய்ப் பார்த்துட்டு வருவோம்.
மீனாட்சி “மாப்பிள்ளை நீங்க சொல்லிட்டீங்களா” எனக் கேட்க

“இன்னும் இல்லை அத்தை”

காவ்யாவோ “இங்க பாருங்க நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. எங்க அண்ணாவ கண்டிப்பா கல்யாணத்துக்கு வர வைக்கணும் இல்ல உங்கள என்ன பண்ணுவேன்னு தெரியுமில்ல” என மிரட்டி விட்டுச்சென்றாள்.

‘ஷப்பா தட்டுல இட்லியை வெச்சிட்டு சாப்பிடவிடாம இப்படி பேசியே கண்ண கட்ட வைக்குறாங்குளே’ என கிரி தன் நிலையை நினைத்து நொந்துக் கொண்டிருக்க,

இங்கு நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் சுந்தரேசன் தன் வேலையே கருமமாக தன் செல்ல பேத்தி வர்ஷா குட்டிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்.

கிரியை காப்பாற்றவேன கதிர் யூனிஃபார்மில் மாடிப்படியில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தான்.

இவர்தான் நம் கதையின் நாயகன் கதிர் என்றழைக்கப்படும் கதிரவன் ஐ.பி.எஸ். சென்னை மாநகரத்தின் அசிஸ்டென்ட் கமிஷனர். நேர்மையான போலீஸ் அதிகாரி.

கதிரவன் பி.ஈ மெக்கானிக்கல் என்ஜினியரிங் அண்ணா யூனிவர்சிட்டியில் முடித்து, சிவில் சர்விஸ் எக்ஸாம் எழுத முதல் முயற்சியிலேயே வெற்றியுடன் இந்திய அளவில் இரண்டாம் இடமும் பெற்றான்.

கதிரவன் ஆறடி உயரமும், அதற்கேற்ற எடையுடன் மாநிறம், கருமையான அடர்ந்த சிகை, கூர்மையான கண்கள், கூர்நாசி, கட்டி மீசை அதற்கு கீழே அழுத்தமான சிவந்த உதடுகள் எனப் பார்த்தாலே போலீஸ் என்று தெரியும் கடுமையான தோரணையுடன் கம்பீரமாக, பெண்கள் யாவரும் திரும்பி பார்க்கும் வகையில் இருப்பான்.

ஆனால் இவனோ பெண்கள் என்றாலே வெறுப்பவன். இவனுக்கு தன் வாழ்வில் நடந்த சில பழைய சம்பவங்களால் திருமணம் மற்றும் காதல் என்ற வார்த்தைகளையே வெறுக்கிறான்.

இவனுடைய வாழ்வில் தற்போது அவன் தாய்,தங்கை மற்றும் வர்ஷ{க்குட்டி என மூன்று பெண்களுக்கு மட்டுமே இடமுள்ளது. மற்ற பெண்களை தன் எரிக்கும் பார்வையாலேயே விலக்கி வைத்துவிடுவான்.

சரி அந்த மாநாட்டிலே கலந்துக் கொண்டவங்களை பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா?

சுந்தரேசன்-மீனாட்சி அவர்களின் முதல் புதல்வன் தான் கதிரவன்.

சுந்தரேசன் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கஷ்டப்பட்டு படித்து தன் திறமையால் இப்போது சொந்தமாக கட்டிடக் கலை நிறுவனம் நடத்தி வருகிறார். மீனாட்சி பொறுப்பான குடும்பத்தலைவி.

இவர் தொழில் ஆரம்பித்த காலத்தில் முதலில் கஷ்டப்பட்டாலும் கேகே கன்ஷ்ட்ரக்ஷன்ஸ் வளர்ச்சியோடு இவர் குடும்ப நிலையும் வளர்ச்சியடைந்தது. இப்போது இவர்கள் சென்னையில் உள்ள முக்கிய பிரபலங்களில் ஒருவர். ஆனால் அதற்க்குரிய ஆடம்பரம் ஏதும் இன்றி எளிமையாக அமைதியாக இருப்பார்கள்.

சுந்தரேசன்-மீனாட்சி அவர்களின் புதல்வி காவ்யா. காவ்யாவின் கணவன் கிரிதரன்.

கிரி கதிரவனின் ஒரே உயிர்த்தோழன். இருவருமே பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகத் தான் படித்தனர்.
இவர்கள் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போது கிரியின் பெற்றோர் கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.

அதிலிருந்து அவனைத்தேற்றி அவனுடைய குடும்பத்தொழில்களை பார்க்கச் செய்து, இலண்டனில் மேற்படிப்பு படிக்க உதவியும் செய்து, அவன் தன் தங்கையை விரும்புவதை அறிந்து தன் பெற்றோரிடம் சொல்லி திருமணம் வரை செய்து வைத்தவன் கதிரவன் தான்.

இப்போது கிரி தன் குடும்பத் தொழில்களோடு, கதிருடன் இணைந்து சாஃப்ட்வேர் கம்பேனியும் நடத்தி வருகிறான்.

காவ்யாவும் எம்.பி.ஏ படித்துள்ளதால் தன் கணவனுக்கு தொழில் உறுதுணையாக இருக்கிறாள்.

கிரிதரன்-காவ்யா அவர்களின் ஒன்றரை வயது ஒரே செல்வ செல்லக்குழந்தை வர்ஷா. நெஞ்சை கொள்ளை அழகும், மழலைக் குரலும், துறுதுறுவென்ற ஓட்டமுமான தேவதை நம்ம கதிரோட செல்ல வர்ஷ{க்குட்டி.

சுந்தரேசன்-மீனாட்சி தம்பதியினர் கிரியை தன் மாப்பிள்ளையாக அல்லாமல் சொந்த மகனாகவே நினைத்ததால், கிரியும் தனக்கு பெற்றோர்,உடன்பிறந்தோர்,சொந்தம் என யாரும் இல்லாததால் திருமணத்திற்கு பிறகு இவர்களுடன் ஒரே வீட்டில் அனைவரும் இருக்கிறார்கள்.

நாளை தங்களது சொந்த ஊரில் மீனாட்சியின் தங்கை முறையாகும் மகனுடைய திருமணம். மீனாட்சிக்கு சற்று உடல் நிலை சரியில்லாததால் அவரும் அவர் கணவரும் திருமணத்திற்கு செல்ல முடியாது. மற்றவர்கள் செல்ல முடிவு செய்துள்ளனர்.

திருமணத்திற்கு கிரி மற்றும் காவ்யாவுடன் கதிரையும் அழைத்துச் செல்லவே அவர்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு எதற்கு திட்டம்? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அங்கே செல்வது திருமணத்திற்காக மட்டும் அல்ல. முக்கியமாக கதிருக்கு பெண் பார்க்கத்தான். (இது மட்டும் கதிருக்கு தெரிந்தால் சும்மா சாமி ஆடிவிடுவான்)

ஏதோ ஒரு அதிசயமாக அவனுக்கு பெண் பார்த்து பிடித்து விட்டால் மனசு மாறும் என்ற நப்பாசை தான்.
அவர்களுக்கு அனைத்தும் புரிந்தாலும் அவனுக்கு ஒரு நல்வாழ்க்கை அமைய வேண்டும் என்றே இந்த முயற்சி.

இவையனைத்தையும் சுந்தரேசன் ஒரு பார்வையாளராக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் எது சொன்னாலும் கதிர் கேட்பான் தான். ஆனால் அவனுக்கு விருப்பமில்லாத அவனை கஷ்டப்படுத்தும் விஷயத்தை கட்டாயப்படுத்த அவரால் இயலவில்லை. அதற்காக அப்படியே இருக்கட்டும் என்றும் விட முடியாதல்லவே. அவர்கள் முயற்சி பலித்தால் இவரை விட வேறு யார் அதிக மகிழ்ச்சியடைவார்கள்.

மீனாட்சிக்கு மகளைப் போல் சீக்கிரம் தன் மகனும் திருமணம் செய்து குடும்பமும், குழந்தையுமாக அனைவரையும் போல் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற விருப்பம். எனவே அவர் கோயில் கோயிலாக அவனுக்காகச் சென்று வேண்டிக் கொண்டிருக்கிறார்.
கதிர் அங்கே வரவும்,
மீனாட்சி பரிமாற ஆரம்பிக்க,

வர்ஷ{ தன் தாத்தாவிடமிருந்து ‘மா….மா’ எனத் துள்ளிக் கைகளைத் தூக்கி அவனிடம் தாவினாள்.

அவன் அவளைத் தூக்கிக் கொஞ்சி மடியில் வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

காவ்யா தன் கணவனை நோக்கி தன் அண்ணனிடம் பேசச் சொல்லி ஜாடைக் காட்டினாள்.

அதனைக் கண்டு கொண்ட கதிர் “என்ன காவ்யா, என்கிட்ட ஏதாவது சொல்லனுமா” என

அவளோ தலையை ஆம் இல்லை என அனைத்துப் பக்கமும் உருட்டினாள்.

அவள் பேசி ஏதாவது சொதப்பிவாளோ என்று எண்ணி மீனாட்சி வேகமாக,

“நான் தான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார்.

“ம் சொல்லுங்கம்மா”

“நாளைக்கு நம்ம சொந்தக்காரங்க கல்யாணம் இருக்குல்ல. நானும் அப்பாவும் தான் போக முடியாது. அதனால” என்று இழுக்க

அவர் சொல்ல வருவது புரிந்தாலும் எதுவாகினும் அவரே சொல்லட்டும் என்று,

“ம் அதனால” என

“அதனால நீ ரிசப்ஷனுக்கு மட்டுமாச்சும் போய் வந்தா நல்லாயிருக்கும்” என ஒரு வழியாகச் சொல்லி முடித்தார்.

“இல்லைம்மா, எனக்கு வேலையிருக்கு. என்னால போக முடியாது” என்று பட்டென்று சொல்ல

அப்போது மீனாட்சி ஏதோ சொல்ல வர சட்டென்று கிரி இடைபுகுந்து,

“இங்க பாரு கதிர், வேலை முக்கியம் தான். ஆனா அதோட குடும்பமும், சொந்தங்களும் தான் முதல்ல முக்கியம்.அதனால கண்டிப்பா நீ எங்களோட வர. இல்ல யாருமே போக வேண்டாம்” என்று முடித்தான்.

இதில் எரிச்சலடைந்த கதிர் சாப்பாட்டில் இருந்து பாதியிலே எழுந்து அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றுவிட்டான்.

Advertisement