Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 1

திருச்சி மாவட்டம் பூஞ்சோலைக் கிராமம் அது.
பூஞ்சோலை பச்சை பசும் வயல்வெளியும்,மண் மணம் மாறாத பழமையான பல நல்பழக்க வழக்கங்களையும் குணத்தையும் உடைய கிராமத்து மக்களை கொண்ட கட்டுப்பாடான கிராமம்.

அந்த கிராமத்தின் நடுவே அமைந்துள்ள இரண்டு அடுக்குகள் கொண்ட அந்த பெரிய வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் ரத்னவேல்; தன் செல்ல மகள் உறங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்.
வாங்க நாம அந்த வீட்டில் யார் யார் இருக்காங்க என போய்ப் பார்த்துட்டு வருவோம்.

ராஜவேல்-விசாலம் அவர்களின் பரம்பரை வீடு அது.ராஜவேல் இறைவனடி சேர்ந்துவிட்டார்.விசாலம் ஆச்சி அந்தக் குடும்பத்தின் தலைவி.அவருக்கு கந்தவேல், ரத்னவேல் என இரண்டு மகன்கள்.

மூத்த மகன் கந்தவேல் மனைவி லட்சுமி,மகன் வெற்றிவேல்.கந்தவேல் தான் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர்.வெற்றிவேல் எம்.பி.ஏ முடித்துவிட்டு அந்த ஊரிலே ஸ்பின்னிங் மில்,பேக்டரி நடத்துகிறான்.

இரண்டாவது மகன் ரத்னவேல் பெயருக்கேற்ற மாதிரியே ரத்தினம் தான்.தமையன் சொல் தட்டாத தனையன்.ரத்னவேலின் மனைவி தெய்வானை.அவர்களுடைய ஒரே மகள் வான்மதி. பல தலைமுறைகளாக பெண் வாரிசே இல்லாத அக்குடும்பத்தில் அவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு பிறந்த குழந்தை என்பதால் மிகவும் செல்லம்.

இவள் தான் நம் கதையின் நாயகி.இவரைப் பற்றி நாம் பிறகு தெரிந்து கொள்வோம்.

தன் கணவர் மகளை எழுப்பி விடுவதாகச் சொல்லி சென்று வெகுநேரமாகியும் கீழே வராததால் தானே கையில் காபிக் கோப்பைகளுடன் தன் மகளது அறைக்குச் சென்றார்.

அங்கு எப்போதும் போலே இன்றும் தன் மகள் உறங்குவதை பார்த்துக் கொண்டிருக்கும் தன் கணவரை பார்த்து மனதில் ரசித்தாலும் வெளியில் கோபமாக,

“என்ன நீங்க இவள எழுப்பாம, இப்படி தூங்குறத உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்க.இவளுக்கு இன்னைக்கு பரிட்சை இருக்குது இப்ப எழுந்தாதான் கிளம்ப நேரம் சரியாயிருக்கும். லேட்டாச்சுன்னா உங்களுக்கு என்ன உங்க மக உங்கள ஒன்னும் சொல்லமாட்டா. அப்புறம் அப்பாவும் மகளும் சேர்ந்து என் தலையைத் தான் உருட்டுவிங்க” என்றுக் கூறி

“ஏ மதி எழுந்திரிடி மணி ஏழாச்சு” என மகளை எழுப்பினார்.

வான்மதியோ கண்ணைத் திறக்காமலேயே “அப்பா” என்றழைக்க

அவரோ “கண்ணைத் திறடா பாப்பா,அப்பா உன் முன்னாடி தான் இருக்கேன்” என

அவள் கண்களைத் திறந்து தன் தந்தையைப் பார்த்து சிரித்தாள்.இவள் எப்போதும் தன் அப்பாவின் முகத்திலேயே விழிப்பாள்.

மெதுவாக எழுந்து தன் தந்தை மீது சாய்ந்து செல்லம் கொஞ்சிக்கொண்டே “அம்மா காபி” என்று கத்தினாள்.

“ஸ்ஸ் கத்தாதடி இங்க தான நிக்கிறேன்”

“இந்தா இதைக் குடிச்சுட்டு சீக்கிரம் கிளம்பு. இல்ல வெற்றி உன்னை விட்டுட்டு பேக்டரிக்கு கிளம்பிறுவான்” என்றதும்

அவளோ “அண்ணா, வெற்றி அண்ணா” என கத்த ஆரம்பிக்க

“எதுக்கு கூப்பிட்ட பாப்பா” என வெற்றிவேலும்,

அவனுடைய அப்பா கந்கவேல் “என்ன மதிக்குட்டி எழுந்திரிச்சுட்டிங்களா” என்றும் வந்தனர்.

“ம் நான் அப்பவே எழுந்திரிச்சுட்டேன் பெரியப்பா”
“அண்ணா நீங்க என்ன காலேஜ்ல விட்டுட்டு தானே பேக்டரிக்கு போவிங்க” எனக் கேட்க

அதற்கு பதில் “அதை விட அவனுக்கு என்ன வேலை நீ மெதுவா கிளம்பு ராஜாத்தி” என்று விசாலம் ஆச்சி சொன்னார்.

அவருக்கு பின்பாட்டாக லட்சுமி பெரியம்மா “ஆமாம் சரியா சொன்னீங்க அத்தை” என்றார்.

அவள் தன் அம்மாவிடம் நாக்கைத் துருத்திப் பழிப்பு காண்பித்துவிட்டு குளியலறையில் சென்று மறைந்தாள்.

அவள் ரெடியாகறதுக்குள்ள வாங்க நம் கதையின் நாயகி வான்மதி பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குவோம்.
வான்மதி பெயருக்கேற்ற மாதிரி அந்த வான் நிலவே தரையிறங்கி வந்தது போல் அவ்வளவு அழகு.பால் வண்ணம்,அளவான உயரம்,பெரிய கண்கள் அதில் வில்லாக வளைந்த புருவம்,கூர்மையான மூக்கு அதில் வலப்பக்கம் ஒற்றை வைரக்கல் மூக்குத்தி,சிரிக்கும் போது குழி விழும் கன்னம்,இயற்கையிலே சிவந்த மெல்லிய அதரம்,கொடியிடை என பிரம்மன் செதுக்கிய சிற்பமாகத் திகழ்ந்தாள்.

மதி மிகவும் மென்மையான, அமைதியான ,அதிர்ந்து கூட பேசத் தெரியாத பெண் வெளியில்;. ஆனால் வீட்டிலோ அவள் செய்யும் குறும்புத்தனத்தில் அந்த மாயக்கண்ணனையே மிஞ்சிவிடுவாள். மற்றவர்கள் சிறிது குரலுயர்த்தி பேசினால் கூட பயந்துவிடுபவள். அவளிடம் சத்தமாக கூட யாரும் பேசமாட்டார்கள் அவளுடைய அம்மாவைத் தவிர.வளர்ந்த குழந்தை. சரியான அப்பா செல்லம்.

அவள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள புகழ் பெற்ற இன்ஜினியரிங் கல்லூரியில் இ.சி.இ மூன்றாமாண்டு படிக்கும் மாணவி.இன்று அவளுக்கு அந்த வருடத்தின் கடைசி செமஸ்டர் பரீட்சை. பின் ஒரு 15 நாள் விடுமுறைக்குப் பிறகு நான்காம் ஆண்டு தொடங்கும்.

அவள் வெண்ணிற சுடிதாரில் அன்றுதான் பூத்த மலராக கிளம்பி வந்தாள்.

அவளைப் பார்த்த அவள் பெற்றோர்களுக்கு எப்பொழுதும் சிறுகுழந்தை போல் தெரியும் அவள், இன்று ஏனோ வளர்ந்துவிட்டதாகத் தோன்றியது.
அவள் பெரியப்பா அவளைச் சாப்பிடழைக்க
“வேண்டாம் பெரியப்பா, லேட்டாயிருச்சு நான் காலேஜ்ல போய் சாப்பிட்டுக்குறேன்” என

“சீக்கிரமே எழுந்திரிச்சு கிளம்பமா இப்ப லேட்டாயிருச்சுன்னு கத்துற.ஒழுங்கா சாப்பிட்டு கிளம்பு” என அவள் அன்னை திட்ட ஆரம்பிக்க
“நீ சாப்பிடு பாப்பா” என அவள் பெரியம்மா ஊட்டிவிட ஆரம்பித்தார்.

“அக்கா நீங்க அவளுக்குச் ரொம்ப செல்லம் கொடுக்கிறிங்க, அதான் அவ தினமும் இப்படி பண்றா”

“மதி நீ ஒன்னும் சின்னப்புள்ளையில்ல”

“ஒழுங்கா நீயே வாங்கிச் சாப்பிட்டு கிளம்பு”எனத் திட்ட
எப்போதுமே அவர் திட்டினால் அதனைக் கண்டு கொள்ளாமல் அவரிடம் வம்பு செய்பவள் இன்று ஏனோ முகம் கூம்பிவிட்டாள்.

அதைப் பார்த்த அவள் பாட்டி “ஷ்ஷ் பிள்ளையை ஒன்னும் சொல்லாத நீ போய் உன்னோட வேலையை பாரு தெய்வா” என அதட்ட

அதன்பிறகு அவர் பேசுவாரா என்ன ம்கூம் கப்சிப் தான்.

அவள் சாப்பிட்டுவிட்டு அனைவரிடம் கூறிக்கொண்டு வெற்றியுடன் கல்லூரிக்குப் புறப்பட்டாள்.

காரிலே போகும்போது,
“காலேஜ் எப்ப விடுவாங்க பாப்பா”

“எக்ஸாம்னால மதியம் விட்டுருவாங்கண்ணா”

“எனக்கு மதியம் மில்லுல வேலை இருக்கு பாப்பா.அதனால துரை தாத்தாட்ட கார் குடுத்து அனுப்புறேன், வீட்டுக்கு பத்திரமா போய்டு பாப்பா”

“சரிண்ணா”

“ம் பார்த்து நல்லா எக்ஸாம் எழுது பாப்பா”

“ஐயோ எங்க அண்ணா எவ்ளோவ்வ்வ் நல்ல அண்ணா. பக்கத்துல்ல பார்த்து எழுத சொல்றிங்க. ஆனா பாருங்க இந்த சுமி எனக்கு காமிக்கவே மாட்றா. நீங்க அவளை என்னன்னு கேளுங்கண்ணா” என்று கிண்டலடிக்க

தெய்வானையின் அண்ணன் ராஜசேகர்-சந்திரா அவர்களின் புதல்வி சுமி என்றழைக்கப்படும் சுமித்ரா வான்மதியுடன் படிக்கும் அவள் உயிர்த்தோழி மற்றும் வெற்றிக்கு நிச்சயத்திற்கும் பெண்.

அவர்கள் படிப்பு முடிந்ததும் முதலில் மதிக்கு திருமணம் முடித்துவிட்டு பிறகு இவர்களுக்கு வைக்கலாம் என பெரியவர்கள் முடிவெடுத்திருக்கின்றனர்.

“ஏ வாலு, என்னையவே கிண்டல் பண்றியா. மொத உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி ஓட வைக்கனும்” என செல்லமாக மிரட்ட

“போங்கண்ணா, இப்ப எனக்கு என்ன அவசரம். அப்புறம் நான் நம்ம வீட்டை விட்டு எங்கயும் போகமாட்டேன்” என

“அப்ப சரி நான் வீட்டோட மாப்பள்ளை பாத்திரேன் சரியா” என்று பேசிக் கொண்டே கல்லூரி வந்தடைந்தனர்.

அங்கு வாயிலிலே சுமித்ரா இவர்களுக்காகக் காத்திருந்தாள்.

வான்மதி காரிலிருந்து இறங்கி அவள் அருகில் சென்று பேச, அவளோ வெற்றிவேலையே பார்த்திருக்க அவள் கையில் கிள்ளி வைத்தாள்.

“ஆஆஆஆ ஏன்டி கிள்ளுன வலிக்குது பாரு” என கையைத் தடவிக்கொண்டே பாவமாக கூற
“ஹி ஹி ஹி”

“இல்ல நீ இந்த உலகத்துல தான் இருக்கையான்னு டெஸ்ட் பண்ணுனேன்” எனச் சிரிக்க

“எனக்கும் ஒரு காலம் வரும். அப்ப உன்ன பாத்துக்குறேன்” எனக் கூறி வெற்றியிடம் கண்களாலே விடைபெற

தோழிகள் இருவரும் கல்லூரிக்குள் சென்றனர்.

Advertisement