Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 9

கதிர் அவள் கழுத்தில் தாலியை கட்டி அழைத்துச்செல்லும் போது தான் வான்மதியால் நிலைமையை புரிந்துக் கொள்ள முடிந்தது.

இதோ தன் அருகில் இருப்பவன் தான், தனக்கு முன்பின் யாரென்றே தெரியாமல் சற்றுநேரத்திற்கு முன்தான் அறிமுகமாகி தன்னை காப்பாற்றியதோடு நில்லாமல், தன்மேல் முழு நம்பிக்கைக்கொண்டு அனைவரையும் எதிர்த்து தன் மனைவியாகவும் ஆக்கிக் கொண்டவன்.

இந்த நம்பிக்கை தன்னை பெற்று வளர்த்தவர்களுக்கும் தன் குடும்பத்திற்கும் இல்லையே என்று அவள் மனம் உடைந்துவிட்டாள்.

அவள் கண்களில் நிற்கமால் கண்ணீர் வழிந்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிரவனுக்கு அவளை அணைத்து நான் இருக்கிறேன் என்று ஆறுதல் சொல்ல வேண்டும் போல் தோன்றியது.

ஆனால் சில காரணங்களால் அதை செய்ய முடியாத தன் நிலையை எண்ணி தன் கோபத்தை எல்லாம் வண்டியில் காட்டி மிக வேகமாக அவளுடன் தனது சொந்த ஊரான நடுப்பட்டிக்குச் சென்றான்.

அதிகாலையில் பொழுது விடிவதற்கு இன்னும் சற்றுநேரமே இருக்கும் போது அவர்களின் வீட்டை அடைந்தனர்.

தோட்டக்காரர் வந்து யார் எனப்பார்க்க கதிரவனைக் கண்டதும் வேகமாக கதவைத் திறந்துவிட அவன் நேராக காரை ஷெட்டில் கொண்டு போய் நிறுத்தினான்.

எந்த ஊருக்கு அவன் மறுபடியும் வரக்கூடாது என்று நினைத்தானோ அதே இடத்திற்கு திருமணமாகி தன் மனைவியோடு வந்தது அவனுக்கு சற்று கர்வத்தையே கொடுத்தது.

ஆனாலும் கடந்த முறை இங்கு வந்தபோது அன்று நடந்த நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து நடந்த சம்பவங்களும் அவன் நினைவில் வர முகம் கடுமையாக மாறியது.

அதே கடுமையான முகத்துடன் தன் அருகில் அமர்ந்திருந்த வான்மதியைப் பார்க்க அவள் ஜன்னல் வழியாக வெளியாக வெறித்துப்பார்த்து அமர்ந்திருப்பதைக்கண்டு வீட்டை வேடிக்கை பார்ப்பதாக எண்ணி ‘இவளும் பெண் தானே இவள் மட்டும் எப்படி இருப்பாள் இவளும் மற்றப் பெண்களைப் போலத் தான் இருக்க ஆசைப்படுவாள்’ என்று நினைத்துக்கொண்டு

“கீழ இறங்கு” என்று கர்ஜிக்க

அந்தக்குரலில் பயந்து அவள் வேகமாக இறங்கி நிற்க அவனும் இறங்கி காரை பூட்டிக்கொண்டு விட்டு பின் போய் கதவை தட்டச்சென்றான்.

சுற்றிலும் இருள் கவ்வி இருக்க மேலும்; புது இடம் என்பதால் பயத்தில் அவளும் அவனை ஒட்டியே வர அவனுடைய கோபம் பெருகத் தொடங்கியது.

வர்ஷா பாப்பா புது இடம் என்பதால் தூங்காமல் அடிக்கடி எழுந்து அழுதுக்கொண்டிருக்கவும் அப்போது தான் காவ்யா அசந்து உறங்கியதால் கிரி தூக்கிக்கொண்டு பால்கனிக்கு போனான்.

அப்போது பார்த்து தங்கள் வீட்டுக்கார் ஷெட்டில் ஒரு கார் வந்து நிற்கவும் இந்த நேரத்தில் யார் வந்திருக்கக்கூடும் என்று யோசித்துக்கொண்டு பாப்பாவோடு கீழே வந்தான்.

வெளியே கதவை தட்டும் சத்தம் கேட்டு திறக்க வந்த வேலைக்காரனை அனுப்பிவிட்டு கிரியே போய் கதவை திறந்தான்.

வாசலில் கதிரும், அழுது சிவந்த கண்களோடு வீங்கிய முகமாக ஒரு பெண்ணும் நிற்பதைப் பார்த்தவன் அதிர்ந்துவிட்டான்.

சாதரணமாக கதிர் இருக்கும் இடத்தில் இளம் பெண்களைப் பார்ப்பதே அதிசயம் என்றால் இன்று இந்த நேரத்தில் ஒரு பெண்ணுடன் வந்து நின்றால் பின்னே அதிர்ச்சி இல்லாமலா இருக்கும்.
வர்ஷா பாப்பா கதிரைப் பார்த்தவுடனே சிணுங்கிக்கொண்டு தன் தந்தையிடமிருந்து அவனிடம் தாவினாள்.

கிரி அவர்களுக்கு உள்ளே செல்ல வழிவிடாமல் யாராக இருக்கும் என்று ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே நிற்கவும்,

கதிர் “உள்ள வரவா இல்ல இப்படியே திரும்பி போகவா” எனக் கேட்க

அவன் கேள்வியில் சுயநினைவு பெற்றவனாய் “உள்ள வாடா” என்று வழிவிட்டான்.

அவர்கள் உள்ளே நுழைந்தும் கதிரின் அருகில் சென்ற கிரி “யாருடா இந்த பொண்ணு” என மெதுவாகக் கேட்க

“என்னோட பொண்டாட்டி” என்று விட்டு
கதிர் அங்கிருந்த சோபாவில் அமர

“என்னடா சொல்ற பொண்டாட்டியா?” என்று அலற
அந்த சத்தத்தில் வீட்டிலிருந்த வேலைக்காரர்கள் என்னவென்று வந்து இவர்களைப் பார்க்க,

வான்மதியோ பயந்து கதிரின் பின்னாடி போய் நின்றுக் கொண்டாள்.

உறங்கிக் கொண்டிருந்த காவ்யாவும் சத்தம் கேட்டு எழுந்து வர

“ஆமா என்னோட பொண்டாட்டி தான். இதுக்கு எதுக்குடா கத்துற?” என்று அசால்ட்டாகச் செல்ல
கிரியின் அதிர்ச்சியின் அளவு உச்சத்தைத் தொட்டது, காவ்யாக்குமே அதிர்ச்சி தான்.

கிரி ஒருவாறாக தன்னைச் சுதாரித்து அங்கே வேலைக்காரர்கள் இருந்ததால் மாடியில் போய் பேசிக் கொள்ளலாம் என்று அவர்களை அழைத்துக் கொண்டு மேலே வந்தான்.

“எப்ப எப்படி நடந்துச்சு?” என்று மொட்டையாக கேட்க
கதிரோ காவ்யாவிடம் திரும்பி வர்ஷா பாப்பாவை கொடுத்துவிட்டு வான்மதியைக் காட்டி “நீ உன்னோட அறைக்கு இவள கூட்டிட்டு போ” என்றதும்

காவ்யா வான்மதியுடன் தனது அறைக்குச் செல்லவும் “உனக்கு என்ன கேக்கனுமோ இப்ப கேளு” என

கிரி “என்னடா இது திடீருன்னு வந்து உனக்கு கல்யாணம் ஆகியிருச்சுன்னு சொல்ற. உன்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னதுக்காக எங்ககிட்ட இப்படி டிராமா பண்ணுறியா?” என்றுக் கோபமாக கேட்க

“முத நான் சொல்றது கேளு அப்புறம் நீ பேசு” என
அவன் அமைதியாக இருக்கவும்,

கதிர் இங்கு மதுரையில் வான்மதி கடத்தப்பட்டதை தான் பார்த்ததையும், அவளை காப்பாற்றி அவளுடைய வீட்டிற்கு கூட்டிச் சென்றதையும், அங்கே அவர்களது ஊரில் இவள் குடும்பமே வான்மதியை கடத்தியவன் கூடயே கல்யாணம் செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தவும் அந்த இக்காட்டான சூழ்நிலையில் அவளைக் காப்பாற்ற வேறுவழியில்லாமல் தான் அவளை திருமணம் செய்து தன்னுடைய மனைவியாக்கிக் கொண்டததையும் விலாவரியாக சொல்ல
கிரிக்கு தான் பேச்சே எழவில்லை.

அவனுக்கு தான் பெற்ற மகளிடமே இப்படி எல்லாமா யாராவது நடந்து கொள்வார்களா என்று தோன்றியது. அதையே கேட்கவும் செய்தான்.

அதற்கு கதிர் “என்னால இன்னும் அங்க நடந்தத நம்பமுடியவில்லை. ஆனா கண்முன்னாடி பார்த்த பிறகு எதையும் நம்ப முடியும்” என்று சொல்ல

கிரி தயங்கிக் கொண்டே “நீ இந்த கல்யாணத்தை உன் மனசார விரும்பித்தான் பண்ணுனியா” எனக் கேட்க

“எனக்குத் தெரியலைடா. அந்த நிமிஷம் ஏனோ அந்தப் பெண்ண அவங்ககிட்ட இருந்து காப்பாத்தணும்னு தோணிச்சு, கல்யாணம் பண்ணிட்டேன். ஆனா அப்புறம் என்னமோ தப்பு பண்ணுன மாதிரி தோணுது. என்னால முடியலடா” என

“சரிடா நைட் எல்லாம் வண்டி ஓட்டுனது டையர்டா இருக்கும். நீ போய் ரெஸ்ட் எடு” என அனுப்ப
கதிரும் ஓய்வெடுக்க தனதறைக்குச் சென்றான்.

வான்மதியை தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்ற காவ்யா தான் கதிரவனுடைய தங்கை என்று தன்னை பற்றி சிறிதுநேரம் பேசிவிட்டு அவளிடம் அவளைப் பற்றியும், என்ன நடந்தது என்றும் மெல்ல விசாரிக்க

அவள் தயங்கினாலும் மெதுவாகக் கூறினாள்.
அதனைக் கேட்ட காவ்யாவிற்குமே ‘ஐய்யோ பாவம் இந்தப் பெண்’ என்றே தோன்றியது.

தன் அண்ணனின் வாழ்க்கையில் வருவதற்காகத்தான் இந்த வயதிலியே இவளுக்கு இவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டதோ என்றுக்கூடத் தோன்றியது.

அவளை ஆறுதல்படுத்தி கொஞ்சநேரம் உறங்கும் வர்ஷா பாப்பாவை பார்த்துக்கச் சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

கதிரை அனுப்பிவிட்டு கிரி தனது மாமனாருக்கு முதலில் போன் செய்தான்.

உறங்கிக் கொண்டிருந்த மீனாட்சி தன் கணவரின் செல்போன் சத்தத்தில் முழித்து யார் எனப் பார்க்க என்ன மாப்பிள்ளை இவ்வளவு காலையிலே கால் பண்ணுகிறார் என்று நினைத்துக்கொண்டே தன் கணவரை எழுப்பிக் கொடுக்க அவர் அட்டென்ட் செய்தவுடன்,

கிரிதரன் “சாரி மாமா உங்கள தூக்கத்துல தொந்தரவு பண்ணுனதுக்கு. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என

அதனால என்ன மாப்பிள்ளை நீங்க சொல்லுங்க” என
அத்தை முழிச்சு இருந்தா அவங்களையும் கூப்பிடுங்க என்றவுடன், பக்கத்துல தான் இருக்கா மாப்பிள்ளை என்றுவிட்டு அவர் ஸ்பீக்கரை ஆன் செய்ய
“கதிர் கல்யாணம் பண்ணிக்கிட்டான்” என்று கிரி சொன்ன செய்தியில் அவர்கள் ஆனந்த அதிர்ச்சியடைந்தனர்.

மீனாட்சிக்கு சந்தோஷத்தில் கண்களில் நீர் வழிய தன் கணவரின் தோள் சாய்ந்துக் கொண்டார். சுந்தரேசன் “இது எப்படி நடந்துச்சு மாப்பிள்ளை” என்று கரகரப்பான குரலில் வினவ கிரியும் நடந்தவைகளைச் சுருக்கமாகச் சொன்னான்.

கிரி சொல்லிமுடிக்க காவ்யாவும் வர அவனும் போனை அவளிடம் தர அவர்களின் நிலையை உணர்ந்த காவ்யா “என்னம்மா உனக்கு மருமக வந்தாச்சு. இனிமேலாவது கடவுள தொந்தரவு பண்ணாம அவருக்கு ரெஸ்ட் கொடுத்து நீயும் ரெஸ்ட் எடுப்பியா” என்று கிண்டலடிக்க

சுந்தரேசனோ “என்னம்மா இப்படி கேக்கற. இனிமேல் வேண்டுதல் பலிச்சதுக்கு பரிகாரம் பண்ணனும்;ல. அதுக்கு தொந்தரவு பண்ண வேணாமா. இனிமேல் தான் கடவுள் ஓவர் டியூட்டி எல்லாம் பாக்கணும்” என்று அவரும் சேர்ந்து கிண்டலடிக்க

மீனாட்சி “எப்பப் பார்த்தாலும் என்னை கிண்டல் பண்றது தான் உங்க ரெண்டுபேருக்கும் வேலை கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல” என்று விட்டு
“என் மருமக பக்கத்துல இருந்தா போனை கொடு காவ்யா” என்றதற்கு

“என்னம்மா என்கிட்ட பேசறது போர் அடிக்குதா என்ன. அதுக்குள்ள மருமகட்ட பேசனும்கிற” என்று அவரிடம் மறுபடியும் வம்பு செய்து விட்டு “அவங்க இங்க இல்ல உள்ள இருக்காங்க” எனவும்

மீனாட்சி “சரிம்மா நாங்க வரவரைக்கும் மருமகள நல்லா பார்த்துக்கடா” என்றுவிட்டு கடவுளுக்கு நன்றி கூறச் சென்றார்.

கிரி “உங்களுக்கும் அத்தைக்கும் பிளைட் டிக்கெட் புக் பண்ணிட்டேன் மாமா” என

சுந்தரேசன் கிரியிடம் “சரி மாப்பிள்ளை நாங்க உடனே கிளம்பி அங்க வரோம். மத்தத நேர்ல பேசிக்கலாம்” என்று வைத்தார்.

போன் பேசி முடித்தவுடன் கிரி குளிப்பதற்காக தன் உடைகளை எடுக்க காவ்யாவோடு தங்கள் அறைக்குச் செல்ல, அங்கு வான்மதியும் கைகால்களை சுருக்கி குழந்தையோடு குழந்தையாக அழகாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்த இருவரின் உள்ளமும் கனிந்தது.
இப்படி குழந்தை போன்று இருக்கும் இப்பெண்ணால் தான் கதிரின் காயம்பட்ட மனதிற்கு மருந்தாக இருக்கமுடியும் என்று நினைத்தனர்.

நினைப்பதெல்லாம் நடக்குமா?

Advertisement