Advertisement

புயலே பூவின் பூங்காற்றே 8

அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்ட கதிரவனுக்கு கோபம் கோபமாக வந்தது. பின்னே எதையும் கேட்கமால் அவனைப் போய் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாரே என்று கோபம் வந்தது.
இவன் பேச வர அங்கிருந்தவர்கள் இவனை பேசவிடவில்லை.

அந்த காவல்காரர் சோமு பெரிய பஞ்சாயத்து தலையைப் பார்த்து “ இவங்க மூணுபேரும் ஒண்ணா தான் வந்தாங்க” என்று சொல்ல

அந்த தலையோ அடிபட்டிருந்த அருணை கண்டவுடன் யோசனையாக நிலைமை ஏதோ சரியில்லை என்று கணித்து,

அருணை பார்த்து “நீ இந்தப் பொண்ண விரும்புறியா?” என

அவன் “ஆமாம்” என்று தலையசைக்க

பின் வான்மதியைப் பார்த்து “ஏம்மா நீயும் இந்தப் பையன விரும்புறியா?” எனக் கேட்க

அவள் மெதுவாக “இல்லை” என்று சொல்ல கூட்டத்தில் சலசலப்பு எற்பட்டது.

அங்கே இருந்தவர்களுக்கு அப்புறம் எப்படி அந்தப் பையனோட இந்தப் பொண்ணு ஓடிப்போயிருச்சுன்னு எல்லாரும் சொன்னாங்க. பிறகு எப்படி இந்நேரத்துக்கு அவனோட வந்திருக்கு என்று குழப்பமடைந்தனர்.
அதனை அந்தப் பஞ்சாயத்து தலைவர் வாய்விட்டுக் கேட்க,

“இப்பவாவது நான் சொல்றத கேளுங்க” என்று கதிர் சொல்ல

அவரோ “ஏம்ப்பா நீ இந்தப் பையனோட நண்பன் தானே. நீ என்ன சொல்லனும்” என்றுக் கேட்க

“என்னது நான் இவனோட பிரண்டா” என அதிர்ச்சியில் வாய்விட்டு சத்தமாக சொன்ன கதிர்,

அருண் வான்மதியை கடத்தியதையும் தான் அதனை பார்த்து காப்பாற்றி பின் அவளை இங்கே அழைத்து வந்ததையும் அவர்களுக்கு விலாவரியாக கூறினான்.

கதிர் சொன்னதை கேட்ட அங்கிருந்தவர்களுக்கு அருண் பாண்டியன் மற்றும் அவன் குடும்பத்தினர் மேல் அளவுக்கடந்த கோபம் வந்தது.

ஆனாலும் அவர்களால் அவனை ஒன்றும் செய்ய முடியாது.

வெற்றி தான் கோபத்தில் “எங்க வீட்டுப் பொண்ணையே கடத்த உனக்கு என்ன தைரியம்டா. உன்னோட உடம்புல இருக்குற கொழுப்புனால தான இப்படி பண்ணுன. உன்ன உயிரோட விடமாட்டேன்டா” என்று அருணை அடிக்க அங்கிருந்தவர்கள் அவனை தடுத்து அவனிடமிருந்து அருணை காப்பாற்றினார்கள்.

“நீ என்னப்பா எங்க முன்னாடியே இப்படி பண்ணுற. அப்புறம் பஞ்சாயத்துன்னு நாங்க எதுக்கு இருக்கோம்” என்று அவனை தடுத்தனர்.

அங்கிருந்த அருணின் குடும்பத்துக்கு விசுவாசமான பஞ்சாயத்து தலையில் ஒருவர் “என்ன இருந்தாலும் அந்தப் பொண்ணு அந்தப் பையன விரும்பாட்டியும் அவனோட தானே மதியத்துல இருந்து இப்ப வரைக்கும் இருந்துருக்கு. அதனால ஒண்ணு அவன கல்யாணம் பண்ணிக்கனும் இல்ல பொண்ணோட சுத்த தன்மைய நிரூபிக்கணும்” என்று சொல்ல

அங்கிருந்தவர்களும் அதனையே சொல்ல பஞ்சாயத்து பெரிய தலை “இந்தப் பஞ்சாயத்து முடிவு என்னன்னா வான்மதி அருண கல்யாணம் பண்ணிக்கனும் இல்ல தன்னோட சுத்தத்த நிரூபிக்கணும்” என

கதிரவனோ அவர் பேச்சில் குறுக்கிட்டு “இவங்க மேல எந்த தப்பும் இல்லை. சாயந்திரத்திலிருந்து நானும் இந்தப் பொண்ணு கூட தான் இருக்கேன். ஏன் இப்படி சொல்றிங்க” என்றுக் கேட்க

அந்த அருண் குடும்பத்து விசுவாசியோ “அப்படியா தம்பி. அப்ப நீங்களே கல்யாணம் பண்ணிக்கங்க” என்று அசால்ட்டாக இவன் தலையில் குண்டை தூக்கிப் போட

அவனுக்கு ஐய்யோ என்ன லூசு மாதிரி பேசுறாங்க என்று,

‘முடியாது’ என பட்டென்றுச் சொல்ல

அவரோ மறுபடியும் “உனக்கு கல்யாணம் ஆயிருச்சா” என

இவன் மறுப்பாக தலையசைத்து வாய்மொழியாக “இல்லை” என்றும் சொல்ல

அவர் கதிரவனைப் பார்த்து “உனக்கு தான் இன்னமும் கல்யாணம் ஆகலையில்ல. அப்புறம் என்ன? அந்தப் பொண்ணு சுத்தமான பொண்ணுனா நீ ஏன் இப்படி நிக்கனும். கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான” என

கதிர் அமைதியாக இருக்கவும்; “சரிசரி இனிமேலாவது கூடகூட பேசாம சும்மா இருப்பா” என்றார்.

பெரிய பஞ்சாயத்து தலை வான்மதியைப் பார்த்து “நீ உன்னோட முடிவ சொல்லும்மா” என

அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுக் கொண்டிருக்கவும்

ரத்னவேல் தான் “என்னோட மக அருண கல்யாணம் பண்ணிப்பா” என்றுச் சொல்ல கதிரின் கோபம் எல்லையைக் கடக்க ஆரம்பித்தது.

வெற்றிவேல் “இது நடக்காது. என்ன சித்தப்பா நீங்க அவன போய் கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க. வாங்க நாம நம்ம பாப்பாவ வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். யாரு என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்”என்று எகிற

“நீ சும்மா இரு வெற்றி. இது நம்ம வீட்டுப்பொண்ணோட மான பிரச்சனை. நமக்கு மட்டும் இல்ல இந்த ஊருக்கே இது தான் சட்டம். உனக்கு ஒன்னும் புரியாது. நீ எதுவும் பேசி பிரச்சனைய கூட்டாத” என்று கந்தவேல் தன் மகனை அதட்டிவிட்டு
பஞ்சாயத்து பெரிய தலையிடம் அருணுடனான தங்கள் வீட்டுப் பெண்ணின் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்தார்.

அருணுக்கும் அருணுடைய குடும்பத்திற்கும் சந்தோஷம் தாங்கமுடியவில்லை.

முத்துப்பாண்டியன் “அதான் பொண்ண பெத்தவங்கள சம்மதிச்சட்டாங்கள. அப்புறம் என்ன இப்பவே என் பையன் கூட கல்யாணம் பண்ணி வையுங்க” என்று திமிராகச் சொல்ல,

அங்கிருந்தவர்களும் அருணுக்கும் வான்மதிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து அங்கிருந்த கோவில் மரத்தில் ஒரு கயிற்றில் மஞ்சள் கிழங்குடன் கட்டப்பட்டிருந்த தாலியை எடுத்து வரச் செய்தார்கள்.

கதிர் “நீங்க எல்லாம் மனுஷங்க தானா. தப்புப் பண்ணுனது அவன். ஆனா தண்டனை மட்டும் இந்தப்பொண்ணுக்கா. அவனையே இந்தப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் பாக்குறிங்க. நல்லா இருக்கு உங்க நியாயம்” என்று அவர்களிடம் கத்த

அவர்களோ அவனைக் கண்டுகொள்ளாமல் அந்த மஞ்சள் கயிறு தாலியை அருணிடம் தர வந்தனர்.

அங்கே இவ்வளவு நடந்தும் வான்மதி எதுவும் செய்யாமல் பேசாமடந்தையாக நின்றிருந்தது ஏனோ கதிரவன் நெஞ்சை பிசைய, கண்ணிமைக்கும் நேரத்தில் யாரும் எதிர்பாரா பொழுது அத்தாலியை அவன் வாங்கி அவள் கழுத்தில் கட்டிவிட்டிருந்தான்.

பின் அங்கிருந்தவர்களைப் பார்த்து “இனி இவ என்னோட பொண்டாட்டி. இதுக்கும் மேல யாராவது எதாச்சும் பேசுனிங்க, நான் சும்மா இருக்கமாட்டேன்” என்றுவிட்டு

வான்மதியின் பெற்றோரிடம் திரும்பி “உங்களுக்கே உங்க பொண்ணு மேல நம்பிக்கையில்லாதப்ப மத்தவங்க எப்படி நம்புவாங்க”

“போயும் போயும் அவனப் போய் கல்யாணப் பண்ணிக்கச் சொல்றிங்க. நீங்க எல்லாம் என்ன அப்பாவோ”

“நீங்க யாரும் இவ சொந்தம்னு இவகூட பேசுனிங்க இல்ல இவள பார்க்க வந்திங்கனா நான் உங்கள என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. பார்த்து இருந்துக்கங்க” என்று உருமிவிட்டு வான்மதியை தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

அவர்கள் சென்றதும் பெண்பிள்ளையே தன்னோடு வந்த வேறு ஒருவனை திருமணம் செய்ததால் அருணை ஒன்றும் செய்யமால் விட்டுவிட்டனர். அனைவரும் அவர்களது வீட்டிற்கு கலைந்து சென்றனர்.

ஆனால் வான்மதியின் குடும்பத்தினரால் அவர்களை அப்படியே விட்டுச்செல்ல முடியுமா என்ன?

அருண் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் செய்த பாவ கணக்கிற்கான தண்டணைக் காலத்தை தொடங்கி வைத்தனர்.

வான்மதியின் குடும்பத்தினரை கதிர் திட்டியது ஒரு வகையில் அவர்களுக்கு ஆறுதலாகவே இருந்தது. தங்கள் வீட்டுப் பெண்ணின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

கதிரவன் மற்றும் வான்மதி எங்கே செல்கிறார்கள் என அறியுமாறு பின்னால் தொடர்ந்து செல்ல ஆட்களை ஏவிவிட்டு வீட்டிற்கு வந்தனர்.

வீட்டிற்கு வந்த ரத்னவேல் மட்டும் தனியாக ஒரு அறையில் சென்று அமர்ந்துக் கொண்டார்.

வெற்றிவேல் தன் தந்தையிடம் “நீங்க ஏன் பாப்பாவ அந்த அருணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் சொன்னீங்க?” என்று சண்டையிட

அதற்கு விசாலம் ஆச்சி “அதுக்கு காரணம் நான் சொல்றேன் வெற்றி” என்று பதில் கூற கேட்ட அனைவரும் திகைத்துவிட்டனர்.

அந்தக் கிராமத்தில் வயது வந்த ஒரு பெண் வேறு ஒரு ஆணோடு இரவு நேரத்தில் இருந்தால் அப்பெண் அவனை திருமணம் செய்துக் கொள்ளவேண்டும்.

அப்படி திருமணம் செய்ய ஆண் மறுத்தால் கைகால்ளை வெட்டி விடுவார்கள். பெண் மறுத்தால் அப்பெண் தன்னை சுத்தமானவள் என்று தீயில் இறங்கி நிரூபிக்க வேண்டும்.

அப்படி இறங்கி அப்பெண்ணுக்கு ஒன்றும் ஆகவில்லையென்றால் சுத்தமானவள் என்று அவளை விட்டுவிடுவார்கள்.

மாறாக காயம் எதாவது ஏற்பட்டால் அப்பெண்ணை ஏலம் விட்டுவிடுவார்கள். அந்த ஏலத்தில் ஆண்கள் யார் வேண்டுமானாலும் அவளை எடுத்து எதுவும் செய்யலாம். அப்பெண் அந்த ஆணுடன் திருமணம் செய்யாமல் வாழ வேண்டும். மேலும் அவன் சொல்வது எல்லாம் அவள் செய்ய வேண்டும்.

இது அந்தப் பெண்ணிற்கு செய்யும் எவ்வளவு பெரிய கொடுமை. இதற்குப் பதில் அந்தப் பொண்ணுடைய உயிரையே எடுத்துவிடலாம்.

மான ரோஷமுள்ள எந்த பெண்ணும் இதை ஏற்றுக் கொள்ளமாட்டாள்.

இப்படி ஒரு சம்பவம் கடைசியாக அந்த ஊரில் நடந்து நாற்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். அப்போது அந்தப் பெண் தன்னை நிரூபிப்பதாகக் கூற அங்கிருந்த பஞ்சாயத்துக் கிழ தலைவனில் ஒருவன் அப்பெண் மீது ஆசைக்கொண்டு தீயில் எண்ணேய் விடும் போது அப்பெண்ணின் மீதும் தெளிக்கச் சொல்ல காயம் அடைந்தாள்.

எனவே பஞ்சாயத்துக்காரர்கள் அப்பெண்ணை ஏலம் விட, ஆனால் அந்தப்பெண்ணோ அங்கிருந்த வாளால் ஏலம் எடுத்தவனையும் தன்னையும் குத்திக்கொண்டு இறந்துவிட்டாள்.

பிறகு இப்போது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. எனவே ஒரு சிலருக்கு தான் இந்த தண்டனைகளைப் பத்தி தெரியும்.

இதெல்லாம் தெரிந்து வைத்திருந்ததால் தான் தங்கலெட்சுமி தன் மகனிடம் வான்மதியை கடத்தச் சொல்லியது.

அதனால் தான் ரத்னவேல் தன் பெண்ணிற்கு அந்தமாதிரியான சூழ்நிலை ஏற்படக்கூடாது என்று நினைத்தார். எனவே தன் மகளிடம் அருணை கல்யாணம் பண்ண சம்மதம் என்று சொல்லச் சொன்னார்.

விசாலம் ஆச்சி சொன்னதைக் கேட்டதும் தான் தங்கள் மகள் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்க இருந்திருக்கிறாள் என்று தெய்வானைக்கும் லட்சுமிக்கும் புரிந்தது.

யார் செய்த புண்ணியமோ? தருமமோ? கடவுள் கதிரவன் ரூபத்தில் அவளை காப்பாற்றிவிட்டதாக அவர்கள் எண்ணினர். இப்போது நல்லவனிடத்தில் தான் அவள் சேர்ந்திருக்கிறாள் என்று அவர்கள் மனது அமைதியானது.

எந்த ஒரு தந்தைக்குமே அவர் மகள் இளவரசி தான். ஒரு தந்தையின் பலம் மற்றும் பலவீனம் அவரின் மகளே. தன்னுடைய மகளின் முகம் காணாமல் ஒருநாள் கூட அவர்களால் இருக்க முடியாது. அவளது சந்தோஷத்திற்காக எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள்.

எதற்குமே அஞ்சிக் கலங்காத ஆணின்(தந்தை) நெஞ்சம் தன் மகள் திருமணமாகி செல்லும் பொழுது அவரின் இதயத்தில் ஒரு பிரளயமே ஏற்படும்.

ஆனால் தன் மகளின் சந்தோஷமான நல்வாழ்விற்காக அதைமறைத்து அவள் கையை அவள் கணவன் கையோடு சேர்த்து பிடித்து ‘ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம்.இனிமே நீங்க தான் எல்லாம்’ என்று கண்கலங்க குரல்பிசிறச் சொல்லி அவளை ஒப்படைக்கும் போது அதை காணும் அனைத்து உள்ளமும்; கலங்கிவிடும்.

மகள்கள் மட்டும் என்ன சும்மாவா இருப்பார்கள். தன் தந்தை தான் அவளுடைய முதல் ஹீரோ, முதல் ஆண் தோழனும் ஆவர். உலகத்தில் உள்ள மொத்த அன்பையும் தன் அப்பாவின் மீது கொட்டி காட்டிடுவார்கள்.

அப்படிப்பட்ட தந்தை மகள் உறவு மிகவும் மகத்தானது. அதை வேறு எந்த உறவுகளாலும் பூர்த்தி செய்ய இயலாது. இந்த தன்னலமில்லாத சுயநலமற்ற அன்பு அனைத்து தந்தைகளுக்கும் உரியது, இது அனைவருக்கும் பொதுவானது. இதில் ரத்னவேல் மட்டும் விதிவிலக்கா என்ன?

அவர் மனம் ஊமையாக கண்ணீர் விட்டுக் கதறியது.
எப்படி எல்லாம் தன் மகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கட்டியிருந்த கற்பனை கோட்டையில் இடிவிழுந்தது போல் சுக்குநூறாக நொறுங்க, தங்களாலே தன் மகளுக்கு இந்த நிலையில் நடந்த திருமணத்தையும் தங்கள் யார் துணையில்லாமல் அவள் தனியாக கண்களில் கண்ணீருடன் புகுந்த வீட்டிற்கு சென்றதையும் நினைத்து மருகினார்.

Advertisement