மலர் 18:
நடந்த குழப்பத்திற்கு தானும் ஒரு காரணமாய் அமைந்து விட்டோமோ…..? என்று மலர் யோசித்துக் கொண்டே இருந்தாள்.அதை சரி செய்ய அவள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் கானல் நீராகவே போனது.
செல்வாவோ தனக்கென்று ஒரு உலகை உருவாக்கி…. அந்த உலகிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
கவியோ….”தானத்திற்கு கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்து பதம் பார்ப்பது போல…” மலரையே சந்தேகப்பட்டாள்.மனதில் உள்ள ஆசை அவளை அவ்வாறு என்ன வைத்திருந்தது.
மலரின் ஒரே நம்பிக்கை வெற்றி மட்டுமே..!
கவி அவனிடம் பேசும் போது…..கண்டிப்பாக தன்னுடைய மறுப்பைத் தெரிவிப்பான் என்று மனதார எண்ணினாள்.
அவளின் குழப்பத்தை மேலும் தூண்டி விடுவது போல் அமைந்தது தனம்-விஜயனின் வருகை.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய தங்கை வீட்டில் காலடி எடுத்து வைக்கிறார் விஜயன். தனத்திற்கோ….தன் மனதில் உள்ள கணக்கு இவ்வளவு எளிதில் நிறைவேறிவிட்ட சந்தோசம்.
“வாங்கண்ணா…வா தனம்…” என்ற படி சத்யா உபசரிக்க…
“எங்கம்மா திவாகர காணோம்..!” என்றார் விஜயன்.
“வெளிய போயிருக்கார்..! இப்ப வந்திடுவார்…நீங்க உட்காருங்க…நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்..!” என்றபடி சத்யா நகல…
“வாங்கம்மா…வாங்கப்பா…!” என்றபடி வந்தாள் மலர்.
ஏனோ அவளை அவர்களுக்கு எப்பொழுதும் பிடிப்பதில்லை. தன்னுடைய தங்கை தன்னை ஒதுக்கியதற்கு மலரும் ஒரு காரணம் என்று விஜயன் அறிவார்.
தனத்திற்கோ…..எங்கே தன் மகளுக்கு போட்டியாக வந்து விடுவாளோ…? என்கிற பயம் ஆரம்பம் முதலே உண்டு.
அந்த எண்ணத்திற்கு வலு சேர்க்கும் விதமாக…. பேரழகியாய் தன் முன் நின்றிருந்தவளைப் பார்த்து…தனத்திற்கு கோபம் தான் வந்தது.
“யாருக்கு யார் அம்மா….?” என்று எகிறினார்.
“அம்மா..!” என்று மலர் அதிர….
“அனாதைக் கழுதைக்கு எங்க அண்ணி வேணுமின்னா அடைக்கலம் கொடுக்கலாம்….ஆனால் எங்களால் அதை ஏத்துக்க முடியாது.. இன்னொரு முறை அம்மா.. அப்பான்னு சொன்ன..கொன்னுடுவேன் கொன்னு..!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சத்யா வர…அப்படியே தன் முகத்தை சிரித்தபடி மாற்றிக் கொண்டார் தனம்.
மலரின் முகம் அதீத வேதனையைக் காட்ட….சத்யாவின் பொருட்டு..அதை வெளியில் காட்டவில்லை.
“என்ன மலர்…நிற்குற…உட்காருடா…!” என்று சத்யா சொல்ல…
“இருக்கட்டும் சத்யாம்மா….மேல துணி காயுது…நான் எடுத்துட்டு வந்திடுறேன்..!” என்றபடி அந்த இடத்தை விட்டு அகன்றாள் மலர்.
மேற்கொண்டு அவர்கள் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருக்க….மேலே சென்ற மலருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
இத்தனை நாள்…தனக்கு யாருமில்லை என்று கவலைப் பட்டதே இல்லை.இன்று முதன் முறையாக…தன்னை தவிக்க விட்டு சென்ற தன் பெற்றோரை எண்ணி…கண் கலங்கினாள்.
‘இப்ப எதுக்கு பீல் பண்ற…? அவங்க யாரு உன்னை சொல்ல….?’ என்று உள் மனம் கேட்க…
‘என்ன இருந்தாலும்…அவங்களுக்கு உரிமை இருக்குள்ள…?’ என்றாள் மனதிடம்.
‘உரிமை என்ன பெரிய உரிமை….அப்படிப் பார்த்தால்… உனக்கு இது தாய்மாமன் வீடு.தாய்மாமன் என்பவன்…. இன்னொரு தாய் மாதிரி தானே..!’ என்று மனம் விடாமல் வாதாட….ஒரு கட்டத்தில் மனம் தெளிந்தாள் மலர்.
இனி இது போல் நிறைய சொல் அம்புகள் வரக் கூடும்…..கூடுமான வரையில் அதை பொறுத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.
எவ்வளவு உறுதியும் ஒரு கட்டத்தில் உடைந்து போகும் நிலை வரும் என்று அவள் எண்ணியிருக்கவில்லை.
கல்லூரியில்….
தேர்வுகள் முடிந்து வீடு கிளம்பும் தருவாய் வரைக்கும் வெற்றியுடன் பேசுவதற்கான வாய்ப்பே கவிக்கு கிட்டவில்லை.
இன்று எப்படியாவது பேசி விட வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டவள்…..மாலை….அவனைத் தேடி சென்றாள்.
ஏனோ அவனிடம் இதுவரை பேசியதில்லை.கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தாள் கவி.அவனை ‘சார்’ என அழைப்பதா…இல்லை ‘வெற்றி’ என அழைப்பதா என்று யோசித்துக் கொண்டே சென்றாள்.
அங்கு ஏற்கனவே வெற்றி உச்சகட்ட கோபத்தில் அமர்ந்திருந்தான். அவன் மனநிலை தெரியாமல் அவன் முன் ஆஜரானாள் கவி.
“வெ…வெ…வெற்றி….” என்றாள்.
அவளுடைய அழைப்பில் திரும்பியவன்…..அவளை உக்கிரமாக முறைக்க…
‘இப்ப எதுக்கு முறைக்கிறார்……தப்பா சொல்லிட்டோமோ…?’ என்று எண்ணியவள்….
“வெற்றி சா..சார்…..!” என்றாள்.
“சொல்லுங்க..என்ன வேணும்..?” என்றான்.
“உங்ககூட கொஞ்சம் பேசணும்..!” என்று கவி சொல்ல…யோசனையில் நெற்றியை சுருக்கினான் வெற்றி.
நேற்று மலர் தன்னிடம் வந்து பேசியது அவனுக்கு நியாபகத்திற்கு வந்து தொலைத்தது.
“என்ன பேசணும்…?” என்றான்.
ஏனோ அவன் அருகில்… அவன் முகம் பார்த்து பேசுவது அவ்வளவு எளிதாக தோன்றவில்லை கவிக்கு.
“உங்க போன் நம்பர்…” என்று அவள் இழுக்க….
“என்னோட நம்பர் உங்களுக்கு எதுக்கு…?” என்றான் கோபமாய்.
“ஏன் இப்படி பேசுறிங்க…?” என்றாள்.
“பின்ன எப்படி பேச சொல்றிங்க…? செல்வாவிற்கு நிச்சயம் செய்த பெண் என்னிடம் வந்து நம்பர் கேட்பது எந்த வகையில் நியாயம்…?” என்றான்.
“புரியலை…!” என்றாள் குழப்பமாய்.
“என்ன புரியலை…உண்மையாலுமே புரியவில்லையா…இல்லை புரியாத மாதிரி நடிக்கிறிங்களா…?” என்றான்.
“வெற்றி..!” என்று கவி அதிர…
“நோ…என்னை பெயர் சொல்லி அழைக்கும் உரிமை என் மனைவிக்கு மட்டுமே உண்டு.வேறு ஒரு பெண் என்னை அப்படி அழைப்பதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை….” என்றான்.
“என்கிட்டே காதலை சொல்ல சொன்னது நீங்க…!”
“இல்லை…”
“நீங்க உயிராய் நேசித்தது என்னை…”
“முட்டாள்தனம்…”
“எதுக்காகவோ என்னை அவாயட் பண்றிங்க….”
“சுத்த பொய்…”
“கல்யாணம் வரை பேசி முடிச்சது நீங்க…”
“நான் இல்லை செல்வா…”
“அப்போ என்னை நம்ப வச்சு கழுத்தை அறுத்தது நீங்க….!”
“ஸ்டாப் இட்…நான் என்னைக்காவது உன்கிட்ட வந்து சொன்னேனா…. உன்னை லவ் பண்றேன்னு…இல்லை ஒரு பார்வை தான் பார்த்தேனா…? இல்லை…உன்னை விரும்புவது செல்வா….உனக்கு திருமணம் பேசி இருப்பது செல்வாவுடன்…” என்றான்.
“இல்ல…இல்ல…இல்ல..” என்றாள்.
“நீ எவ்வளவு மறுத்தாலும் அதான் உண்மை…. அன்னைக்கு கேண்டீன்ல வச்சு அவன் காதலை சொல்லும் போது…தலையை நல்லா ஆட்டிட்டு இருந்த….இப்ப என்கிட்டே வந்து இப்படி பேசுற…போதாத குறைக்கு மலர் கிட்டவும் தேவையில்லாம பேசியிருக்க…..” என்று அவன் பொங்க…
அவன் பேசியதை அனைத்தும் விடுத்து…”மலர் கிட்டவும் தேவையில்லாம பேசியிருக்க…” என்ற வார்த்தைகள் கவியின் காதில் விழ…அதில் உக்கிரமானாள்.
“ஹோ…சார்க்கு அவளை திட்டியது தான் கோபமோ…. அப்படி பார்த்தா நடந்த எல்லா விஷயத்துக்கும் காரணம் அவள் தான்…அவ மட்டும் என் கையில் கிடைச்சா…” என்று பொங்க…
“போதும் நிறுத்து…..மலர் மேல் என்ன குறை கண்ட….அவ வந்து வெற்றி சார் உங்களை லவ் பண்றான்னா சொன்னா….? சொல்லு அப்படியா சொன்னா…?” என்றான்.
“இல்லை…” என்றாள்.
“என்னைக்காவது என்னையோ….இல்லை என்னை சம்பந்தப்படுத்தியோ ஏதாவது உன்னிடம் சொல்லியிருக்காளா….?” என்றான்.
“இல்லை…”
“நான் என்னைக்காவது உன்னிடம் பேசியிருக்கேனா…?”
“இல்லை…”
“இப்படி எதுவுமே நடக்காத போது…மலரையோ.. என்னையோ பேசுவதற்கு உனக்கு என்ன மூளை இருக்கு…எதையும் ஆராயாமல் …..அவசரக் குடுக்கைத்தனமா…நீயா ஒன்னோ யோசிச்சு..நீயா ஒன்னை நினைச்சுகிட்டு இருந்தா…அதுக்கு நாங்க எந்த வகையில் பொறுப்பாக முடியும்…” என்றான் உக்கிரமாய்.
அமைதியாய் தலை குனிந்தவள்….சிறிது நேரத்தில் “ அதுக்காக இப்ப நான் என்ன பண்ண முடியும்…நான் காதலிச்சது உங்களைத்தான்… உங்களை மட்டும் தான்….சரி இப்ப சொல்லுங்க…நடந்த குழப்பம் எல்லாம் இருக்கட்டும்….இப்போ நேராவே உங்களை கேட்குறேன்… என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா…?” என்றாள் தைரியமாய்.
“ஏய்…!” என்று உருமியவன்…
“என்னை கொலைகாரன் ஆக்காதே…அங்க ஒருத்தனுக்கு தலையை ஆட்டிட்டு..வீட்டுல கல்யாணம் பேசி முடிச்சுட்டு…இப்ப வந்து இப்படி பேசிட்டு இருக்கியே உனக்கு வெட்கமாயில்லை.அங்க ஒருத்தன் உனக்காக உருகிட்டு இருக்கான்…அவனையே கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பாரு…” என்றான்.
“நான் உங்களை நினைச்சு தான் உருகிட்டு இருக்கேன்…!” என்றாள் விடாமல்.
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்…எனக்கு உன்னை பிடிக்கலை… என் மனசில் வேற ஒரு பொண்ணு இருக்கா….வேற யாருக்கும் இடமில்லை…நீ போகலாம்…” என்றான்.
“அது முடியாது மிஸ்டர் வெற்றி…நான் லவ் பண்ணது உங்களை… உங்களை கண்டிப்பா கல்யாணம் பண்ணியே ஆவேன்…” என்றாள்.
“நான் உயிருடன் இருக்கும் வரை அப்படி ஒரு விஷயம் நடக்காது…!” என்றான் ஆணித்தரமாய்.
“நடக்கும்….நடக்க வைப்பேன்…!” என்றாள்.
“உன்னால் முடிந்ததைப் பார்…!” என்றவன் அந்த இடத்தை விட்டு அகல…
அதுவரை பொறுமையாய் இருந்த கவியின் கண்கள் கலங்கியது.எங்கே நான் தவறினேன்….எங்கே இந்த குழப்பம் நடந்தது…. என்று யோசிக்க… ஒருதலையாய் காதல் கொண்ட அவள் மனது நல்லதை எடுத்து சொல்வதற்கு பதில்….அவளுக்கு சாதகமான விஷயத்தை மட்டுமே ஆராய்ந்தது.தான் எடுக்கும் முடிவு எத்தனை பேரை பாதிக்கும் என்பதை அவள் அறியவில்லை.
வெற்றிக்கோ…மனம் முழுதும் கொதித்துக் கொண்டிருந்தது.’எவ்வளவு தைரியம்..? என்கிட்டவே வந்து இப்படி பேசுறா…இந்த விஷயம் செல்வாவிற்கு தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வான்…? அவன் மனம் தாங்குமா…? என்னை ஒரு துரோகியைப் பார்ப்பதைப் போல் பார்க்க மாட்டான்….இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி சமாளிக்க போகிறேன்…….’ என்று மனதில் எண்ணியவாறு….நடை போட்டுக் கொண்டிருந்தான்.
உடனடியாக செல்வாவிற்கு அழைத்தவன்….மலரிடம் பேச வேண்டும் என்று சொல்ல….
“என்ன வெற்றி…? குரலே சரியில்லை..” என்றான் செல்வா.
“ஒண்ணுமில்லை செல்வா…! கிளாஸில் மலர்கிட்ட ஒரு வொர்க் கொடுத்தேன்..அதைப் பத்தி கொஞ்சம் பேசணும் போனைக் குடுக்குறியா…?” என்றான்.
“இதுக்கு ஏண்டா இவ்வளவு தயக்கம்..குடுன்னு சொன்னா குடுக்க போறேன்..!” என்றபடி மலரிடம் சென்று போனைக் கொடுத்தான் செல்வா.
“ஹலோ…!” என்றாள்.
“செல்வா பக்கத்துல இருந்தா..அப்படியே பேசிட்டே..கொஞ்சம் தள்ளி வா…” என்றான் எரிச்சலுடன்.
“ஹலோ…சொல்லுங்க சார்..!” என்று பேசியபடியே அவன் சொன்னபடி செய்ய…
“வீட்டில் கல்யாணப் பேச்சு எந்த அளவுக்கு இருக்கு…” என்றான்.
“முடிவு பண்ணி…உறுதியே பண்ணிட்டாங்க..!” என்றாள்.
“ஹோ…” என்று வெற்றி இழுக்க…
“வெற்றி சார்…கவி அக்கா உங்ககிட்ட ஏதாவது..” என்று இழுக்க….
“இப்ப ரொம்ப முக்கியம்….இதோ பார்…இப்போ செல்வாகிட்ட விஷயத்தை சொன்னா…அவன் எப்படி எடுத்துப்பான்னு தெரியாது….நீ கவியோட பேரண்ட்ஸ் கிட்ட பேசு….அவங்க என்ன முடிவு எடுக்குறாங்கன்னு பார்ப்போம்…” என்றான்.
“நானா..?” என்று அதிர்ந்தாள்.
“நீதான்…” என்று பல்லைக் கடித்தான்.
“எனக்கு பயமா இருக்கு….” என்றாள்.
“லூசு லூசு…ஒன்னும் ஆகாது…நல்லதாவே நடக்கும் பேசு..!” என்றான் வெற்றி.
“நீங்களே பேசுங்க சார்…!” என்றாள்.
“சொன்னதை மட்டும் செய்..!” என்றபடி போனை வைக்க…
“இந்த சார் என்ன…எனக்கு ஆர்டர் போடுவது..?” என்று ஒரு மனம் முறுக்கி கொள்ள…
‘எல்லாம் செல்வாவிற்காக தானே..!’ என்று இன்னொரு மனம் சொல்ல..
‘அப்போ சரி..!” என்றது உள்ளம்.
சத்யாவின் செல்லில் இருந்து நம்பரை எடுத்தவள்….அதை தன்னுடைய செல்லில் பதிந்து கொண்டு…அந்த இடத்தை விட்டு நழுவினாள்.
மதுரையில்……
கவியின் வீட்டில்……முகத்தில் அனலைக் கக்கிக் கொண்டிருந்தார் தனம்.
“என்ன விளையாடுறியா கவி..?” என்றார்.
“இல்லம்மா….எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல…இதை நிறுத்திடுங்க…!” என்றாள் சாவகாசமாய்.
“அதான் ஏன்னு கேட்குறேன்…! நான் கேட்டப்ப உனக்கு சம்மதன்னு தான சொன்ன…அதுக்குள்ள என்ன நடந்தது…?” என்றார்.
“காரணம் எல்லாம் சொல்ல முடியாது…எனக்கு செல்வாவை பிடிக்கலை…” என்றாள் பிடிவாதமாய்.
“அதுக்கு நான் ஒன்னும் செய முடியாது….ஏற்கனவே கோபத்தில் இருந்தவங்க…இப்பதான் இறங்கி வந்திருக்காங்க…! இந்த நேரத்தில் நானும் உங்க அப்பாவும் போய்…இப்படி இப்படின்னு சொன்னா…என்ன நடக்கும்…முடியாது…முடியவே முடியாது….இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்…” என்றார் தீர்மானமாய்.
அதே நேரம் அந்த வீட்டின் போன் மணி ஒலிக்க….
“ஹலோ..” என்றார் தனம்.
“ஹலோ…நான்..நான் மலர் பேசுறேன்ம்மா..!” என்றாள்.
“என்ன விஷயம்…?” என்றார் கத்தரித்தார் போல்.
“அது வந்து..உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…!” என்று அவள் தயங்க…
“சொல்லு..!” என்றார்.
“வந்து…” என்று இழுத்தபடி..நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவள்….
‘இதில் கவி அக்கா தப்போ…செல்வா தப்போ இல்லைம்மா…நடந்த எல்லாத்துக்கும் நான் தான் காரணம்…” என்று பழியை முழுதாக தன்மேல் தூக்கிப் போட்டுக் கொண்டாள்.
“அதுக்கு என்ன செய்ய…?” என்றார் தனம்.
“இல்லை…நீங்கதான் பக்குவாய் பேசி..இந்த கல்யாணத்தை கொஞ்சம் தள்ளிப் போடணும்….கொஞ்ச நாள் போனா…அவங்களே…யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுப்பாங்க..!” என்றாள் மலர்.
“இதோ பார்..! என் மகளுக்கு எப்ப,எப்படி கல்யாணம் பண்ணனும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்….நீ சொன்ன விஷயத்தை கவி ஏற்கனவே என்கிட்டே சொல்லிட்டா…என் பெண்ணை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க எனக்குத் தெரியும்…உனக்கு விட்ட வேலையை மட்டும் நீ பார்..!” என்றார் எரிச்சலுடன்.
“அம்மா..! இது ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனை….நீங்க இப்படி எல்லாம் சொல்லக் கூடாது…” என்றாள் தன்மையாய்.
“ஏய்..! ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாது…?” என்று தனம் எகிற…
“புரியுது…ஆனா உங்களுக்கு தான் புரியலை….நான் நடந்த எல்லாத்தையும் சத்யாம்மா கிட்டவே சொல்லி….அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்க சொல்றேன்..” என்றபடி அவள் வைக்க போக…
“ஏய்..! அப்படி ஏதாவது நீ பண்ணின…அப்பறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…இப்ப சொல்றேன் கேட்டுக்க….இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்….அப்படி நடக்காம..ஏதாவது கலாட்டா பண்ணி…இதை நிறுத்த முயற்சி செஞ்ச….நாங்க குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்குவோம்…இது என்மேல் சத்தியம்…” என்றார் தனம் ஆக்ரோஷமாய்.
அவரின் வார்த்தைகளில் மிரண்டது மலர் மட்டுமல்ல…அருகில் இருந்த கவியும் தான்.
“என்ன சொல்றிங்க..?” என்று மலர் அதிர்ந்த படி கேட்க…
“நடந்த எந்த விஷயமும் அண்ணா,அண்ணிக்கு தெரிய கூடாது…மீறி சொன்னா…அப்பறம் நான் சொன்னது தான் நடக்கும்….உன் குடும்பத்தை தூக்கித் தின்னது பத்தாதுன்னு…இப்ப எங்க குடும்பத்தையும் முழுங்கப் பார்க்குறியா…?” என்று கேட்க…
அதிர்ந்த விழிகளுடன்…கண்களில் வழிந்த கண்ணீருடன் போனை வைத்தாள் மலர்.
அருகில் இருந்த கவி…மிரண்டு போய் பார்க்க…”உனக்கும் புரியும்ன்னு நினைக்கிறேன் கவி….அவகிட்ட சொன்னது தான் உனக்கும்…எப்படின்னு பார்த்துக்க…” என்றபடி அங்கிருந்து செல்ல…செய்வதறியாது திகைத்து நின்றாள் கவி.
மலரின் நிலையோ…இருதலைக் கொல்லி எறும்பானது.
அடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் வேகமாய் நடக்க…கவியை கண் கொத்திப் பாம்பாய் கவனித்துக் கொண்டிருந்தார் தனம்.
இடையில் வீட்டிற்கு செல்வா வந்த போது கூட…ஒப்புக்கு சிரித்து வைத்தாள் கவி.
அவளுடைய முகத்தைப் பார்த்து குழம்பியவன்.. ”கல்யாண டென்ஷன்..” என்று நினைத்துக் கொண்டான்.
எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை தனியாக விடவில்லை தனம். ஒவ்வொரு நல்ல விஷயத்திலும் பிறர் அறியா வண்ணம்..நாசூக்காக மலர் ஒதுக்கப்பட்டாள்.
தனத்தை அறிந்த மலரும்…ஒதுங்கியே நின்றாள்.
அந்த விடியா இரவும் விடிந்தது….!