மலர் 15:
வீட்டில் மலரின் வார்த்தைகளைக் கேட்ட சத்யாவோ… வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தார்.என்ன நினைத்தும் அவர் கோபமும்,ஆதங்கமும் அடங்கவே இல்லை.இது எப்படி சாத்தியம்.அவர் நினைத்தது என்ன..? இப்பொழுது நடந்து கொண்டிருப்பது என்ன..? என்று உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தார்.
“இதற்கு நான் கண்டிப்பாக சம்மதிக்க மாட்டேன் மலர்..!” என்றார் முகம் இறுக.
“சத்யாம்மா பிளீஸ்…செல்வா அந்த பெண்ணை ரொம்ப நேசிக்கிறார்.வேற பெண்ணை மனதில் நினைத்துக் கொண்டு என்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்..?” என்றாள் மலர்.
“அப்போ உன்னோட நிலை..?” என்றார் சத்யா கோபமாய்.
“எனக்கு செல்வா மேல் அப்படி எந்த எண்ணமும் இல்லை சத்யாம்மா… அத்தை மகள்,மாமன் மகன் என்றால் அவர்கள் மட்டும் தான் வாழ்வில் இணைய வேண்டுமா என்ன..?” என்று கேள்விகளை அடுக்கத் துவங்கினாள்.
“மலர் சொல்வது ஒரு வகையில் சரிதானே சத்யா..!” என்றார் திவாகர் பரிந்து கொண்டு.
“நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.இதென்ன சின்ன பிள்ளைங்க விளையாட்டா…நான் இவங்க இரண்டு பேரையும் நினைத்து எவ்வளவு கனவு கண்டு வைத்திருக்கிறேன்…எல்லாத்துலையும் ஒரு நிமிஷத்தில் மண்ணை அள்ளிப் போட்டுட்டானே செல்வா…!” என்றார் ஆதங்கமாய்.
“இவங்களைத்தான் காதலிக்க வேண்டும்..இவங்களைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாம் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது சத்யா.இது அவர்கள் வாழ்க்கை.நல்லது,கெட்டது பற்றி யோசிக்கும் வயது செல்வாவிற்கு உண்டு.அவன் மனம் விரும்பியவளை கைப்பிடிக்கும் உரிமையும் அவனுக்கு உண்டு.நாம் எதிலும் கட்டாயப்படுத்த முடியாது..” என்றார் திவாகர் தெளிவாக.
“பெற்றவர்கள் நாம் ஒன்னும் சொல்ல கூடாது…என் பையனின் வாழ்க்கை இப்படி தான் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்க கூடாதா..?” என்றர சத்யா.
“இருக்கலாம் தப்பில்லை…ஆனால் நம் விருப்பத்தை அவர்கள் மீது திணிப்பது எவ்வகையில் நியாயம்.. அவர்களின் விருப்பத்திற்கு நாம் கொடுக்கும் மதிப்பு இது தானா…?” என்றார் திவாகர்.
“இப்ப என்னதான் சொல்ல வரீங்க..?” என்றார் சத்யா எரிச்சலாய்.
“ஒன்னும் செய்ய வேண்டாம்…யார் அந்த பெண் என்று விசாரித்து அந்த பெண்ணையே செல்வாவிற்கு மணம் முடித்து வைக்கலாம்..!” என்றார்.
“ம்ம்மா.. அந்த பொண்ணும் நம்ம சொந்தக்காரங்க தானாமே..! செல்வா சொன்னார்..ஏதோ திருவிழாவில் பார்த்தேன்னு சொன்னார்.அவங்க அம்மா கூட நீங்க பேசிட்டு இருந்ததா கூட சொன்னார்..!” என்றாள் மலர்.
“திருவிழாவிலா..!” என்று சத்யா யோசிக்க….வேகமாய் உள்ளே சென்ற மலர்…கவியின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்தாள்.
“இந்த பொண்ணு தான் ம்மா..!” என்றபடி அவர் முன் நீட்ட….
“இந்த பொண்ணா..!” என்று யோசனைக்குத் தாவினார் சத்யா.
“எப்படி சத்யாம்மா….? செம்ம சூப்பரா இருக்காங்க இல்ல..” என்றாள் வெகுளியாய்.
“அடி பெண்ணே..உன் பால் வண்ண முகத்திற்கு முன்னால்… இவள் எம்மாத்திரம்…” என்று மனதிற்குள் நொந்து போனார் சத்யா.
அவர் நினைப்பில் ஒரே நாளில் மண் விழுந்து விட்டதாய் எண்ணினார் சத்யா.அதை அவரால் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
செல்வா வெளியே சென்றிருந்த சில மணித்துளிகளில்.. இவை அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.அவனுக்கு எந்த வேலையும் வைக்காமல்….மலரே அனைத்தையும் சொல்லி முடித்திருந்தாள்.செல்வாவின் மேல் அவளுக்கு இருந்த அன்பு அவ்வாறு செயல்பட வைத்தது.
சற்று நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த செல்வாவிற்கு வீட்டின் அமைதி…எதையோ சொல்லாமல் எடுத்து சொல்லியது.
“என்னடா இது…நம்ம வீடு இவ்வளவு அமைதியா இருக்கு..?” என்று எண்ணியபடி உள்ளே நுழைய…
சத்யாவோ…ஹாலில் அமர்ந்து…உள்ளே நுழைந்தவனை முறைத்துக் கொண்டிருந்தார்.
“இப்ப அம்மா எதுக்கு இப்படி முறைக்கிறாங்க…? என்ன நடந்திருக்கும்..?” என்று செல்வா குழம்ப…
அருகில் மலர் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்க…திவாகரோ எதையும் முகத்தில் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.
“என்னம்மா…என்னாச்சு..ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்றான்.
அவனுக்கு பதில் சொல்லாமல் அவனை முறைத்தவர்… தன் கையில் இருந்த போட்டோவை அவன் முன் நீட்டினார்.
குழப்பத்துடன் அதை வாங்கியவனின் முகம் அதிர்ந்தது.சட்டென்று பார்வையை உயர்த்தி மலரை முறைத்தான்.
“அவளை எதுக்கு முறைக்கிற செல்வா…!என்ன செல்வா இது..? நீ இப்படி செய்வாய் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..!” என்றார் கோபமாய்.
“சாரிம்மா…! நானே உங்க கிட்ட சொல்ல வேண்டும் என்று இருந்தேன்.அதற்குள் இந்த முந்திரிகொட்டை முந்திகிட்டா..” என்றான்.
“அப்ப மலருக்கு என்ன பதில் சொல்ல போற..?” என்றார்.
“அம்மா..!” என்று அதிர்ந்தான் செல்வா.
“அத்தை…” என்று மலரும் ஒரே நேரத்தில் சொல்ல..
“எனக்கு மலர் மீது அப்படி எந்த எண்ணமும் இல்லை… அவள் மீது எனக்கு அளவு கடந்த பாசம் இருக்கு. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி தர வேண்டிய கடமை எனக்கு இருக்கு…ஒன்றாகவே வளர்ந்ததால் என்னவோ…மலரின் மீது காதல் மாதிரியான எந்த எண்ணமும் எனக்கு இல்லை..” என்றான் தெளிவாய்.
“அடுத்து என்ன செய்யலாம்..!” என்றார் சத்யா.
“அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்…எனக்கு வாழ்க்கை என்று ஒன்று இருந்தால் அது கவியுடன் மட்டும் தான்..!” என்று உறுதியாக சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டான்.
“பார்த்திங்களா..எப்படி சொல்லிட்டு போறான் என்று..!” என்று சத்யா குறைபட…
“அவன் வகையில் அவன் தெளிவாக தான் இருக்கிறான் சத்யா…வீணா எதையும் போட்டு மனசைக் குழப்பாம…அந்த பொண்ணையே பேசி முடிப்போம்..!” என்றார் திவாகரும் இறுதியாக.
சத்யாவிற்கு சரி என்று சொல்வதை விட வேறு வழி இருக்கவில்லை.ஒரே மகனின் ஆசையும் அவருக்கு முக்கியமாகப்பட்டது.
மலர் அறைக்கு செல்ல…அவளிடம் வந்த செல்வா… ”தேங்க்ஸ் மலர்..” என்றான் ஆத்மார்த்தமாக.
“இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் செல்வா.இப்பகூட நான் சொல்லவில்லை என்றால்….சத்யாம்மா…கல்யாணத்துக்கான ஏற்பாட்டை பண்ண ஆரம்பிச்சிருப்பாங்க…அதான் சொல்லிட்டேன்…தப்புன்னா சாரி செல்வா..!” என்றாள் குழந்தையாய்.
“எனக்கு ஒரு பெரிய வேலையையே குறைச்சிட்ட மலர்…உணமையாகவே இப்பதான் மனசு அமைதியா இருக்கு…” என்றான்.
“சரி..! கவிகிட்ட இருந்து எதாவது ரெஸ்பான்ஸ் வந்ததா..?” என்றாள் மலர்.
“ம்ம்ம்…இல்லை..” என்றான்.
“கண்டிப்பா பதில் பாசிட்டிவா தான் இருக்கும் செல்வா.. நான் சொன்ன போது கூட அவங்க முகம் சந்தோஷத்தை தான் காட்டியது..கொஞ்சம் கூட கோபப் படலை..” என்றாள்.
“அப்படியா..?” என்றான் ஆச்சர்யமாக.
“அப்படித்தான் ஆண்டவரே..!” என்று மலர் சிரிக்க…
“அப்படி மட்டும் நடந்துட்டா…நான் தான் இந்த உலகத்திலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கிற ஆள்…” என்றபடி கண்களில் கனவுடன் சென்றான்.
அவனைப் பார்த்த மலருக்குமே சந்தோஷமாக இருந்தது. இவன் வாழ்வு இவன் விரும்பியபடி அமைய வேண்டும் என்று மனதார வேண்டினாள்.
அந்த வேண்டுதல் நிறைவேறுமா…?
“என்ன முடிவு பண்ணியிருக்க கவி..?” என்றாள் சங்கரி.
“எதைப் பற்றி..?”
“அதான்…உனக்கு வந்த லவ் புரொபசல் பத்தி..?” என்றாள் சங்கரி.
“என்ன சொல்றதுன்னு தெரியலை.அதே சமயம் அவரை எனக்கு பிடிக்கமலேயும் இல்லை..” என்றாள்.
“இதென்னடி இப்படி ஒரு பதிலா..?” என்றாள் சங்கரி.
“ஏதோ ஒரு உறுத்தல் மனதில் இருந்து கொண்டே இருக்கு சங்கரி..!” என்றாள்.
“என்ன உறுத்தல்..?”
“அதுதான் என்னன்னு புரியலை….லவ் பண்றேன்னு அவர் நேராவே என்கிட்டே சொல்லி இருக்கலாமே..?” என்றாள் சந்தேகமாய்.
“நீயென்ன லூசா….அவர் இப்ப இருக்கிற பொசிஷன் அப்படி…அவர் எப்படி நேரா சொல்லுவார்…அதான் தூது விட்டிருக்கலாம்…நீ சம்மதம் சொன்னால் நேரில் பேசுவாரோ என்னவோ..?” என்று தெளிவாக குழப்பினாள் சங்கரி.
“அப்படின்னு சொல்லுற..?” என்றாள் கவி.
“அப்படித்தான்….அவர் மாதிரி ஒருத்தர் கிடைக்க நீதான் கொடுத்து வைத்திருக்கனும்…உடனே சரின்னு சொல்லுவியா…அதை விட்டுட்டு…அது சொட்டை,இது நொட்டை என்று யோசிச்சுகிட்டு இருக்க…” என்றாள்.
“நான் எப்படி போய் அவர்கிட்ட பேசுறது..?” என்றாள் யோசனையாய்.
“சிம்பிள்…அவர் எப்படி அந்த பொண்ணுகிட்ட சொல்லிவிட்டாரோ..அதே மாதிரி நீயும் அந்த பொண்ணுகிட்டவே சொல்லி விட்டுட்டு….பிராப்ளம் கிளியர்…!”என்றாள் அசால்ட்டாய்.
“இது நல்ல ஐடியா..!” என்றாள் கவியும் உடன் சேர்ந்து.
சிலந்தி வலையில் சிக்க அனைவரும் தயாராக இருந்தனர்.வலையைப் பின்னுதல் எளிதல்…அதைப் பிரித்தல் கடினம் என்பது யாரும் அறியவில்லை.
கவியும்,சங்கரியும் இறுதியாண்டு என்பதால்…தங்கள் பிராஜெக்ட் சமிட் செய்வதற்காக ஸ்டாப் ரூமிற்கு சென்றனர்.
அங்கே வெற்றி தீவிரமாய் எதையோ எழுதிக் கொண்டிருக்க… செல்வாவோ…அடுத்த வகுப்பிற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தான்.
இருவரும் நிமிராமல் இருக்க….வெற்றியின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு…”சார்..” என்றாள் சத்தமாக.
அவளின் அழைப்பில் இருவருமே நிமிர….வெற்றியைப் பார்த்து சிரித்தாள் கவி.
அவனும் பதிலுக்கு ஒரு சிரிப்பை சிந்திவிட்டு…தனது வேலையில் மூழ்க…கவிக்கோ சிறகில்லாத குறைதான். அப்படியே பறந்து கொண்டிருந்தாள்.
அவள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட….அது தன்னைக் கண்டதால் வந்த மகிழ்ச்சி என்று தவறாக யூகம் கொண்டான் செல்வா.
“வாங்க..! என்ன விஷயம்..?” என்றான் செல்வா.
“சார்….பிராஜெக்ட் சமிட் பண்ண வந்தோம்…!” என்றாள் சங்கரி.
“எல்லாரும் நேற்றே சமிட் பண்ணிட்டாங்களே..! நீங்க இரண்டு பேர் மட்டும் ஏன் லேட்…” என்றான் ஆசிரியனாய் மாறி.
“சாரி..சார்….கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது…இனி இது போல் நடக்காது…” என்றாள் கவி தலையைக் குனிந்து கொண்டே.
அவளின் கவிழ்ந்த தலையைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ…”சரி வச்சிட்டு போங்க..!” என்றான்.
“தேங்க் யு சார்…!” என்று கவி மகிழ்ச்சியுடன் சொல்ல….. அந்த மகிழ்ச்சி செல்வாவையும் தொற்றிக் கொண்டது.
கவி சென்ற பின்னும் அதே நிலையில் அவன் இருக்க….”என்னாச்சு செல்வா…? ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது..!” என்றான் வெற்றி.
“ஆமாம் வெற்றி…ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…விவரிக்க வார்த்தைகளே இல்லை..!” என்றான்.
நண்பனைப் பார்த்து தானும் புன்னகையைத் தவள விட்டான்.அவன் தன்னுடைய மகிழ்ச்சியை இழந்து நாட்கள் பல ஆகிவிட்டதே.அவனாவது மகிழ்ச்சியாய் இருக்கட்டும்..என்ற எண்ணமே வெற்றியின் மனதில் மேலோங்கி இருந்தது.
உணவு இடைவேளையின் போது..செல்வாவைத் தேடி வந்தாள் மலர்.
“என்ன மலர்..?” என்றான்.
“சார்…லன்ஞ்ச்ச மறந்துட்டிங்க…அதான் குடுக்கலாம் என்று வந்தேன்..!” என்று போலி மரியாதையுடன் உரைத்தவள்… அவனுக்கான லன்ச்சை அவனிடத்தில் கொடுத்து விட்டு செல்ல முற்பட..
“மலர் ஒரு நிமிஷம்..!” என்றபடி அவள் உடன் சென்றான் செல்வா.
“இதைப் பார்த்த வெற்றிக்கு சாதரணமாக தெரிந்தாலும்… உள்ளுக்குள் ஏதோ உடைவதைப் போல் உணர்ந்தான்.
“சொல்லுங்க செல்வா சார்..!” என்றாள் மலர்.
“கவி ஏதும் சொன்னாளா…?” என்றான்.
“இல்லையே ..!” என்று உதட்டைப் பிதுக்கினாள் மலர்.
காற்றுப் போன பலூன் மாதிரி ஆனது அவன் முகம்….”சரி நீ போய் சாப்பிடு..!” என்றபடி உள்ளே சென்றான்.
“இவன் என்ன லூசா…?” என்ற ரீதியில் பார்த்துக் கொண்டு சென்றாள் மலர்.
“என்ன வெற்றி..? இவ்வளவு தீவிரமா வேலை செய்ற..? சாப்பிடலையா..?” என்றான் செல்வா.
“இதோ முடிந்து விட்டது செல்வா.இறுதியாண்டு மாணவர்களுக்கான இன்டெர்னல் மார்க்….இதை என்ட்ரன்ஸ்ல….ஒட்ட சொல்லணும்…” என்றபடி அந்த சீட்டை கையில் எடுக்க…
“முதல்ல சாப்பிடலாம்..!” என்று செல்வா சொல்லிக் கொண்டிருக்கும் போதே….மீண்டும் உள்ளே வந்தாள் மலர்.
“இப்ப என்ன..?” என்றான் செல்வா.
அவனை முறைத்தவள்….வெற்றியின் அருகில் சென்று.. ”சார் அட்டனென்ஸ்..” என்றபடி அந்த நோட்டை நீட்ட… ”ஓகே தேங்க் யு..” என்றபடி அவள் முகம் பார்க்காமல் வாங்கிக் கொண்டான்.
ஏனோ அவள் முகம் பார்க்கவே பயந்தான்.ஒரு சின்னப் பெண்ணிற்கு இப்படி பயப்படும் படி ஆகிவிட்ட தனது விதியை எண்ணி நொந்து கொண்டான்.
இப்படியே இரண்டு நாட்கள் செல்ல….
அன்றைக்கு காலையிலேயே மலரைப் பிடித்துக் கொண்டாள் கவி.
“சொல்லுங்க சீனியர்..!” என்றாள் மலர் குறும்புடன்.
“அது வந்து மலர்…நீ…அன்னைக்கு..என்கிட்ட….” என்று திணறியவள்…”எனக்கும் சம்மதம்…” என்று சொல்லிவிடு என்றாள்.
“நீங்க நிஜமாவா சொல்றிங்க..?” என்றாள் மலர்.
“நிஜம் தான்..!” என்றாள் உறுதியாய் கவி.
“வாவ்..சூப்பர்..சூப்பர்..” என்று அவளைக் கட்டிக் கொண்டாள் மலர்.
இவ எதுக்கு இவ்வளவு சந்தோஷமா நம்மளைக் கட்டிகிறா…? என்ற கவியின் யோசனையை புறம் தள்ள வைத்தது அடுத்து அடுத்து வந்த தேர்வுகள்.
தேர்வு நேரத்தில் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று செல்வாவும் விட்டு விட….
அவர்களுக்கான திருமண ஏற்பாட்டை கவனிக்க ஆயத்தமாகினர் திவாகர்-சத்யா தம்பதியினர்.
கவி தேர்விலும்,செல்வா கனவிலும்,வெற்றி விரக்தியிலும்,
மலரோ மகிழ்ச்சியிலும் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தனர்.
இவர்களுக்கான அந்த வலிய நாளும் வந்தது…!