அத்தியாயம் ஆறு:
ஆகாஷ் கனிமொழியை பார்த்து, “நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா”, என்று கேட்ட விதம் அவளை அசைத்து தான் பார்த்தது.
ஆனாலும் சரியென்று அவளால் சொல்ல முடியவில்லை. அவளின் அமைதியை சம்மதமாக எடுத்துக்கொள்ள ஆகாஷால் முடியவில்லை.
அவள் பதில் சொல்லட்டும் என்று விடாமல் அவளை பார்த்திருந்தான் ஆகாஷ். அவனின் பார்வையை தவிர்த்தாள்.
“என்ன சொல்லி இவனுக்கு புரிய வைப்பது? எப்படி சொல்லி இவனுக்கு புரிய வைப்பது? என்று தெரியவில்லை”.
சற்று நேரம் அவனின் பார்வையை தவிர்த்தவள்….. இப்போது அவனை நேர் பார்வை பார்த்தாள். அதில், “நீங்க என்னை புரிஞ்சிக்க மாட்டீங்களா”, என்ற இறைஞ்சுதலே இருந்தது.
“ஒரு உண்மையை சொல்லட்டுமா”, என்றாள்.
அவன் ஆர்வமாக பார்க்க…….. “நான் உங்களை ஏன் என் கல்யாணத்துக்கு முன்னாடி சந்திக்கலைன்னு வருத்தமா இருக்கு”, என்றாள்.
“ஒரு வேளை சந்திச்சிருந்தா உங்களை காதலிச்சிருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனா இனிமே அதை பத்தி நினைச்சு பிரயோஜனமில்லை”.
“எனக்கு இன்னொரு கல்யாணத்துல இஷ்டமும் இல்லை….. ஆர்வமும் இல்லை”. அவள் பேச பேச மலர்ந்த ஆகாஷின் முகம் அவனின் கடைசி வார்த்தைகளை கேட்டு விழுந்துவிட்டது.
“ஆனா எனக்கொரு சந்தேகம்………. நீங்க என்னை என் கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்திருந்தா என் மேல விருப்பப்பட்டிருக்க மாட்டீங்கன்னு அப்படிதானே”, என்றாள்.
“அதை எப்படி இப்ப நான் சொல்ல முடியும், அப்போ சந்திச்சிருந்தா தானே தெரிஞ்சிருக்கும்”,
“இல்லை! எனக்கு தெரியும்! என்னோட இந்த நிலைமை தான் உங்களை ஏதோ ஒரு வகையில ஈர்த்திருக்கு. நான் முதல் நாள் உங்களை பார்த்தப்போ சாதாரணமா தான் பேசினீங்க. எனக்கு ஹெல்ப் பண்ணுனீங்க…… நான் ரொம்ப பேசினது கூட உங்களுக்கு தொந்தரவா தான் தெரிஞ்சது”,
“ஆனா நான் எழுந்து நின்னவுடனே, நான் கர்ப்பம் தெரிஞ்சவுடனே, எனக்கு கணவர் இல்லைன்னு தெரிஞ்சவுடனே தான்……… நீங்க என் மேல தீவிரமா இருக்கீங்க…. என் முகத்துல பொட்டில்லை அது இதுன்னு உளற கூட செஞ்சீங்க…… ஏன்?”, என்றாள்.
அவன் அமைதியாக இருக்கவும்……. “என்னோட இந்த நிலைமை தான் உங்களை ஏதோ ஒரு வகையில பாதிச்சிருக்கு”, என்றாள் தெளிவாக.
“நீ ரொம்ப புத்திசாலி கரெக்டா கெஸ் பண்ணியிருக்க”, என்று சொல்ல வந்த ஆகாஷ் வார்த்தையை விழுங்கிக்கொண்டான்……… அதை சொல்லவில்லை…….
“நீ டெய்லி கண்ணாடி பார்ப்பியா?”,
அவன் எதற்கு கேட்கிறான் என்று புரியாமல், “பார்ப்பேனே”, என்றாள்.
“அது உனக்கு காட்டுறது இல்லையா? நீ எவ்வளவு அழகுன்னு!”, என்றான். கனிமொழி அவனை கோபமாக பார்க்க முற்பாட்டாலும் அவளால் முடியவில்லை. ஆனால் முகம் மாறாமல் காத்தாள்.
“எனக்கு உன்னை பார்த்தவுடனே தோணினது இவ்வளவு அழகான முகத்துல ஏதோ மிஸ் ஆகுதேன்னு தான்…….. அதை கண்டுபிடிக்கவே கொஞ்ச நேரம் ஆச்சு! சோ என் கண்ணுக்கு தெரிஞ்சது எல்லாம் இந்த அழகு முகம் தான்”, என்றான்.
அவளின் முக வடிவினை அளக்க துடித்த கைகளை வலுக்கட்டாயமாக முதுகிற்கு பின்னால் கொண்டு போய் கட்டிகொண்டான்.
அவன் பேச்சை முற்றிலுமாக திசை திருப்பி விட்டான் என்று கனிக்கு புரிந்தது.
“ப்ளீஸ்! நான் இன்னொருத்தருடைய மனைவின்றதை எப்பவும் மறக்க வேண்டாம்!”, என்றாள் மன்றாடும் குரலில்.
அவளருகில் கோபமாக வந்தான், “எழுந்திரு என்னை பார்”, என்றான்.
அவனின் கோப முகத்தை பார்த்தாலும் கனி அதை எதிர்கொண்டாள்.
அவளின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தவன்…….
“இப்போ மட்டும் இல்லை…… இனிமே எப்பவுமே அதை என்னால ஞாபகம் வெச்சிக்க முடியாது. உன்னோட கணவன் உனக்கு எப்பவுமே இனிமே இறந்தகாலம்………..”, “நான் தான் உன் நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம்…… அந்த உன்னோட கணவன்ற வார்த்தை கூட எனக்கும் உனக்கும் கல்யாணம் ஆகிற வரைக்கும் தான்……. அதுக்கப்புறம் நான் தான் உனக்கு எல்லாமும்”, என்றான் தீர்மானமாக.
அவனுடன் இருக்கும் போது பழைய கனி திரும்பினாள்…….
“கனவு காணாத! ஒரு தடவை என்னை காப்பாத்தி இருக்கேன்னு பார்க்கறேன் இல்லைன்னா அப்படியே அறைஞ்சு தள்ளனும் போல ஆத்திரமா வருது”, என்றாள் ஆவேசமாக.
“எங்க அறைஞ்சு தான் பாரேன்”, என்று அவன் இன்னும் நெருங்கி வர.. பயந்து பின்னால் போனாள்
“அறையற முகத்தை பாரு! அறையறதுக்கு மொதல்ல பக்கத்துல வரணும்!”, என்றான்.
பயத்தில் பின்னால் போனவள்….. சேரில் இடித்து தடுமாற…… அவளின் முன்வந்து அவளை பிடித்து நிறுத்தினான். இப்போது அவளின் பெரிய வயிறு அவனை இடித்தது…..
ஏதோ ஒரு உணர்வு தோன்ற…….. அவனை அந்த அதிகப்ரசிங்கித்தனமான காரியத்தை செய்ய வைத்தது. அவளின் வயிற்றின் மேல் கையை வைத்தான். அவன் உள்ளங்கை புடவையின் மேல் இருந்தாலும் அவனின் விரல்கள் அவளின் வெண்மையான வயிற்றில் இருந்தது.
அவன் கையை வைக்கவும் குழந்தை அசைவை காட்டவும் சரியாக இருந்தது.
கனிமொழி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை…. ஒரு நிமிடம் அசைவற்று நின்றுவிட்டாள். அது வரை குழந்தையின் அசைவை அனுபவித்தான். அனுபவித்தவன் அப்படியேயாவது இருந்தானா……. அதற்கும் மேலே போய் அவனின் விரல்கள் இருந்த இடத்தை வருடிக்கொடுக்க…….
“ங்கொய்”, என்று ஏதோ ஒரு சத்தம் காதுகளுக்குள்…….. கன்னம் வேறு எரிந்தது. அதற்கு பிறகே கனி அவனை அறைந்தது புரிந்தது.
அப்போதும் அவன் கையை எடுக்கவில்லை, “எடுடா!”, என்றாள் பல்லை கடித்து, கண்களில் இருந்து அவளையும் மீறி நீர் வழிந்தது.
அவளுடைய அறையோ, வார்த்தைகளோ, கையை எடுக்க சொல்லவில்லை. ஆனால் அவளின் கண்ணீர் கையை எடுக்க சொல்ல கையை எடுத்தான்.
அவனை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்களின் நீரை துடைத்தான். அவன் துடைக்க துடைக்க முகத்தை திருப்பினாள்……..
அவனை அடித்தும் அவளின் ஆத்திரம் அடங்கவேயில்லை. வேக வேக மூச்சுக்கள் எழும்ப தன்னை சமன்படுத்த மிகவும் சிரமப்பட்டாள்.
பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுத்தான் ஆகாஷ், மறுக்காமல் வாங்கி குடித்தாள். நிதானமான மூச்சுகளை விட்டு தன்னை சமன்படுத்தினாள்.
“சாரி”, என்ற வார்த்தையை சொல்லுவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் அந்த வார்த்தையை சொல்லவில்லை, ஏன் நடந்த நிகழ்வுக்கு எந்த வார்த்தையும் சொல்லவில்லை.
அவன் நல்ல நிறம் என்பதால்……. அவனின் கன்னத்தில் அவளின் கைதடங்கள் பளிச்சென்று வரி வரியாக தெரிந்தது.
“நீ இப்படி பண்ணுவன்னு நான் நினைக்கவேயில்லை”,
“நான் என்ன இதை பிளான் பண்ணியா பண்ணினேன்”,
“நீ பண்ணினது தப்புன்னு உனக்கு தோணவேயில்லையா”,
“தோணலை……..”, என்றான் திமிராக
“நான் மட்டும் இதை பண்ணலைன்னா என் குழந்தையோட அசைவு எனக்கு தெரியாமையே போயிருக்கும்…… லைஃப்ல எப்பவும் எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டே இருப்பேன்னு நினைக்கிறியா”,
“நீ உன்னை விட்டு விலகிடுன்னு சொன்னா, நான் விலகிடுவேனா…… எல்லாருக்கும் நான் நல்ல பையன் தான். ஆனா நம்ம கல்யாணத்துக்கு உன் மறுப்பு இருக்கிற வரைக்கும் உனக்கு நான் எப்பவுமே கெட்ட பையன் தான்”.
“ம்கூம்! கடவுளே உன்னை எனக்கு வேண்டாம்னு சொன்னாலும் அவரை எதிர்த்து போராடி ஜெயிப்பேன்”, என்றான்.
“என்ன உன் குழந்தையா?”, என்றாள் ஆத்திரமாக.
“சாரி! தப்பா சொல்லிட்டேன்! அது நம்ம குழந்தை!”, என்றான்.
அப்படியே தொய்ந்து சேரில் அமர்ந்தவள், கைகளை தலைக்கு முட்டுகொடுத்து அமர்ந்துவிட்டாள்…..
பளீரென்று ஒரு வலி இடுப்பில்…….
கண்ணை மூடி சகித்துக்கொண்டாள்.
“உன்கிட்ட ஒண்ணு சொல்லட்டா”, என்றான்.
“இன்னும் ஏதாவது சொல்றதுக்கு பாக்கி வெச்சிருக்கியா என்ன?”,
“ஆமாம்”, என்றவன்….. “கத்தில அவன் குத்தினப்போ கூட இப்படி வலிக்கலை……ஆனா இப்போ செம வலி”, என்றான் கன்னத்தை தடவிக்கொண்டே.
“அதோட விட்டேன்னு சந்தோஷப்படு”, என்றாள்.
“நானும் என் குழந்தையை தொட்றதோட நிறுத்திக்கிட்டேன்னு சந்தோஷப்படு”, என்றான் பதிலுக்கு….
அவளால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் மீண்டும் பளீரென்று வலி……
“வீட்டிற்கு போவதா? இல்லை ஹாஸ்பிடல் போகலாமா?”, என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
ஏதாவது சூடாக வார்த்தைகளை விடுவாள் என்று அவன் எதிர்பார்க்க…..
அவளின் யோசனையான முகத்தை பார்த்தான்.
கண்மூடியவள் சற்று வசதியாக சாய்ந்து அமர்ந்துகொண்டாள், வலி குறையுமா என்று. குறையவில்லை விட்டு விட்டு வலித்தது. “இன்னும் நாள் இருக்கே என்ன வலியாக இருக்கும்”, என்று யோசித்தாள்.
அவள் பதில் பேசாமல் சற்று ஓய்ந்து அமர்ந்து இருந்த மாதிரி இருந்தது.
“என்ன கனி பதில் சொல்ல முடியலையா?”, என்றான் அவளுடன் வார்த்தையை வளர்க்க விரும்பி, ஆனால் அவளிடம் பதிலில்லை.
“ப்ச்! அமைதியாயிரு! என் போனை எடு!”, என்றாள்.
அவன் எடுத்துக்கொடுக்கவும், அவளின் அம்மாவிற்கு போன் செய்தாள். “அம்மா வலிக்குதும்மா”, என்றாள் எடுத்தவுடனே……
“நான் அதுக்கு தான் இன்னைக்கு ஹாஸ்பிடல் போகலாம்னு சொன்னேன். நீ தான் நான் இன்னைக்கு மில்லுக்கு போறேன், நாளைக்கு போகலாம்னு நீ சொல்லிட்ட”, என்றார் அவளின் அம்மா பயந்து போய்….
இவர்களின் பேச்சை கேட்டுகொண்டிருந்த ஆகாஷிற்கு டென்சன் ஏற ஆரம்பித்தது.
“இப்போ தான் ஆரம்பிக்குது, என்னால தாங்க முடியுது! ஆனா சீக்கிரம் ஹாஸ்பிடல் போகனும்னு எனக்கு தோணுது! நீ அண்ணாவை கூட்டிட்டு இங்கே வா!”,
“ம்! உடனே கிளம்பறோம்! நீ தைரியமா இரு கண்ணு!”, என்று சொல்லிகொண்டே அவளின் அம்மா அங்கே கிளம்பினார்.
“வலிக்குதுன்னா சொல்றதுக்கு என்ன?”, என்று அவளிடம் எரிந்து விழுந்தவன்……. “எங்க ஹாஸ்பிடல் போகணும்?”,
“சேலம்! அங்கே தான் காட்டிட்டு இருக்கோம்”,
செந்திலுக்கு உடனே அழைத்தான்……. “டேய்! இவ வலிக்குதுன்னு சொல்றாடா!”, என்று.
அவனும் பதறி உடனே வந்தான்…….
“வீட்டுக்கு போகணுமா?”, என்று செந்தில் கேட்க……..
“இல்லை ஹாஸ்பிடல் போகணும், அம்மாவை இங்கயே வர சொல்லியிருக்கேன்….”,
சொல்லும்போதே வலி அதிகமாகவும், “அம்மா!”, என்று முனகினாள்.
“நீ எழுந்திரு வா!”, என்று அவளை எழுப்பிய ஆகாஷ்……..
“நம்ம இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம். அவங்கம்மாவையும் அசோக்கையும் அங்கேயே வர சொல்லிடு, சேலம் வேற போகணும். அதுக்கே அரை மணிநேரம் ஆகும் கிளம்பு!”, என்றான்.
கனிமொழி தயங்கவும்…….. “கிளம்பு”, என்றான் அவளின் வலி நிறைந்த முகத்தை பார்க்க சகியாமல்….
“இல்லை அம்மா வந்துடட்டும்”, என்றாள்…….
“ஏன்? என்மேல நம்பிக்கை இல்லையா?”, என்றான்.
“பேசி பேசியே என்னை டார்ச்சர் பண்ற நீ வா”, என்று அவனோடு நடந்தாள்…..
அவர்களின் பேச்சில் ஒரு நெருக்கம் இருந்ததாகவே செந்திலுக்கு பட்டது.
செந்தில் வண்டியை வேகமாக எடுக்க….. மீண்டும் கார் ஹாஸ்பிடல் நோக்கி பறந்தது. என்ன ஒரு வித்தியாசம் எப்போதும் அசோக் ஒட்டுவான் இப்போது செந்தில் ஓட்டினான்.
அவள் ஹாஸ்பிடல் பெயரை சொல்ல……… சரியாக அரைமணியில் அங்கே சேர்ந்துவிட்டனர்…. உடனே பிரசவ அறைக்குள்ளும் கொண்டு சென்று விட்டனர்.
“டேய்! எங்கடா இருக்கீங்க?”, என்று செந்தில் அசோகிற்கு போன் செய்ய………
“இன்னும் கால் மணி நேரத்துல வந்துடுவோம்டா”, என்றான்.
பிறகு தான் ஆகாஷின் கன்னத்தை கவனித்தான் செந்தில்……. “என்னடா இது அடிச்ச மாதிரி விரல் பதிஞ்சிருக்கு! அடிச்சாளா உன்னை?”, என்றான் பதட்டமாக.
“இப்போ எதுக்கு அதுக்கு நீ இவ்வளவு டென்சன் ஆகுற! விடு! விடு!”, என்றான் ஈசியாக….
“அடியா வாங்குன”, என்றான் மறுபடியும்.
“என்ன ஏதுன்னு தெரிஞ்சிகாம விடமாட்டியா நீ! ஆமா! அடிச்சா! இப்போ அதுக்கென்னா? காரணம் எல்லாம் சொல்ல முடியாது போதுமா! இன்னும் ஏதாவது தெரியனும்மா!”, என்று எரிந்து விழுந்தான் ஆகாஷ்…….
“ம்! போதும்! போதும்! வாங்குனது அடி! இதுல ரோஷம் வேற! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”, என்றான்.
அதற்குள் ஒரு சிஸ்டர் வந்து, “இந்த மெடிசன்சும் இந்த திங்க்சும் வாங்கிட்டு வாங்க!”, என்று சொல்ல….. செந்தில் அதை வாங்கிக்கொண்டு போனான்.
“என்ன பெயின் சிஸ்டர் அவங்களுக்கு”, என்று ஆகாஷ் கேட்க……
“டெலிவரி பெயின் தான் சார் அது…….. இன்னும் கொஞ்ச நேரத்துல டெலிவரி ஆகிடும்”, என்றனர்.
சொல்லி சென்று ஒரு ஐந்து நிமிடம் தான் ஆகியிருக்கும்……..
செந்தில் இன்னும் மருந்துகளை கூட வாங்கி வந்து சேர்ந்திருக்கவில்லை, அதற்குள் வேறு ஒரு சிஸ்டர் வந்து, “பையன் பொறந்திருக்கான் சார்!”, என்றார்.
ஆகாஷிற்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. செந்திலும் வந்துவிட்டான்.
அவனை அணைத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்தான்.
“ரொம்ப அசைவு குடுக்காதடா! பத்து நாள் தான் ஆகுது! ஜாக்கிரதையா இரு! வலி எடுத்துக்க போகுது!”, என்று ஆகாஷின் காயத்தை முன்னிட்டு அவனை கட்டுபடுத்தினான் செந்தில்.
ஆனால் அவனின் காயம் எல்லாம் ஆகாஷிற்கு பெரிதாக தோன்றவேயில்லை. குழந்தை நன்றாக பிறந்துவிட்டதில் சந்தோஷமாக இருந்தான்.
வெளியே வந்த சிஸ்டரிடம், “குழந்தை கொஞ்சம் நாளைக்கு முன்னாடியே பொறந்துடுச்சே, நல்லா இருக்கா! எதுவும் பிரச்சனை இல்லையே!”, என்றான்.
“ஒண்ணும் பிரச்சனையில்லை! இப்போ தான் குழந்தைங்க டாக்டர் வந்து குழந்தையை செக் பண்ணிட்டு போறார். குழந்தை ஆரோக்யமா இருக்கான். அம்மாவும் பையனும் நல்லா இருக்காங்க”, என்றார் அவர்.
இன்பத் தேன் வந்து பாய்ந்தது அவன் காதினில்.
சிறிது நேரத்திலேயே கனிமொழியின் அம்மாவும் அசோக்கும் வந்துவிட்டனர். சுகப்ரசவத்தில் குழந்தை பிறந்ததில் அவருக்கு மிகுந்த சந்தோசம்!
“எங்க ஆபரேஷன் பண்ற மாதிரி வந்துடுமோன்னு பயந்துட்டே இருந்தேன்!”, என்றார் வெளியே வந்த நர்ஸிடம்,
“நீங்க வேற ம்மா உங்க பொண்ணுக்கு ரொம்ப மனசு தைரியம்! வலியை நல்லா தாங்கிச்சு! நல்ல திடமான மனசு! மத்த பொண்ணுங்க மாதிரி கத்தி வலில ஆர்பாட்டமே பண்ணலை…….. எத்தனை பேரை பார்த்திருக்கேன், இப்படி ஒரு பொண்ணை பார்த்ததில்லை! நானே அசந்துபோயிட்டேன்! வாங்க, வந்து பாருங்க!”, என்று அவளின் அம்மாவை பிரசவ அறைக்குள் அழைத்துக்கொண்டு போனார்.
“என்ன ரொம்ப மனசு தைரியமா? நல்லா வலியை கூட தாங்கினாளா? ரொம்ப திடமான மனசா? நான் எப்படிடா அவளை என் வழிக்கு கொண்டு வர்றது”, என்று கவலையாகிப்போயிற்று ஆகாஷிற்கு.
அசோக் குழந்தை பிறந்ததை எல்லோருக்கும் அழைத்து தகவல் சொல்ல ஆரம்பித்தான்.
“நம்ம போவோமா!”, என்றான் செந்தில் ஆகாஷை பார்த்து.
“கனியையும் குழந்தையையும் பார்க்காமா, நான் நகர மாட்டேன்”, என்றான் ஆகாஷ்.
“ஆகாஷ்! இன்னும் ரூமுக்கு கொண்டு வர நேரமாகும்! நாம போயிட்டு மதியமா வரலாம்! இங்கயே நம்ம இருந்தா என்ன ஏதுன்ற மாதிரி எல்லாம் பார்ப்பாங்கடா!”, என்றான்.
“அதெல்லாம் முடியாது”, என்றான் ஆகாஷ்.
“டேய்! அடிவாங்கியும் அடங்கலையா நீ!”,
“ஒரு மைக் குடுக்கறேன்! ஊர் பூராவும் சொல்லு!”,
“நான் சொல்லனும்ங்ற அவசியமே இல்லை! உன் கன்னத்துல கோடுல்ல, ரோடே போட்டு வெச்சிருக்கா. அது சொல்லும்!”
கையை கட்டி ஆகாஷ் செந்திலை முறைத்தான்.
“பின்ன சொல்ற பேச்சை கேட்கறியா நீ”,
“அதெல்லாம் கேட்கமுடியாது”,
“டேய்! அடம் பிடிக்கதடா! நானாவது அசோக் ஃபிரன்ட். ஹெல்ப் பண்ண இருக்கேன்னு சொல்லலாம்! நீ யாரு எதுக்கு இருக்கேன்னு கேட்டா, என்னடா சொல்றது?”,
“உன் ஃபிரன்ட், உனக்கு ஹெல்ப் பண்ண இருக்கேன்னு சொல்லு”,
“உன் லந்துக்கு அளவே இல்லாம போச்சுடா! வா! எங்கயாவது போய் சுத்திட்டு கனியை ரூமுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு அப்புறம் வரலாம்…….”,
வீ. ஐ. பீ ரூமை அவளுக்காக சொல்லி அட்வான்சாகவே எல்லாவற்றிற்கும் சேர்த்து வரப்போகும் பில்லுக்கு மேலேயே பணம் கட்டினான் ஆகாஷ்.
கதறினான் செந்தில். “டேய்! என்னை பார்த்தா உனக்கு பாவமாவே இல்லையா. நீ ஏண்டா பணம் கட்டுற…… எல்லாரும் கேட்கற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது”,
“பத்து நாளைக்கு முன்னாடி அவளுக்காக கத்தி குத்தே வாங்கியிருக்கேன்….. அதை கூட மதிக்காம அவ இன்னைக்கு என்னை அடிச்சிருக்கா……… அவகிட்ட அடியே வாங்கியிருக்கேன்……… அவ்வளவு செஞ்சவன், இதை செய்ய மாட்டேனா! இதெல்லாம் என்ன ஜுஜுபி!!!!!!!!”,
“கடவுளே என்னை மட்டும் காப்பாத்திடுறா”, என்று வேண்டுதல் வைத்துக்கொண்டே அவனை இழுத்துக்கொண்டு வெளியே சென்றான் செந்தில்……
“கொஞ்சமாவது உனக்கு பயம் இருக்கா! நேத்து தான் தையலே பிரிச்சு இருக்காங்க! அதுக்குள்ள இந்த ஆட்டம் ஆடுற நீ! உன்னை சரிபடுத்தி பத்திரமா ஊர் கொண்டு போய் சேர்க்கலை ராஜி என்னை வீட்டுக்குள்ளயே சேர்க்க மாட்டா!”, என்று புலம்பிக்கொண்டே சென்றான்.
பிறகு அங்கேயும் இங்கேயும் சுத்திக்கொண்டு இருந்தவர்கள், அவளை ரூமிற்கு கொண்டு வந்து விட்டார்கள் என்று தெரிந்த அடுத்த நிமிடம் அங்கே இருந்தார்கள்.
அவர்கள் உறவினர்கள் பார்க்க வரும்முன்பே ஆகாஷிற்கு குழந்தையையும் கனிமொழியையும் காட்டி சென்று விட வேண்டும் என்று தீவிரமாக இருந்த செந்தில் தீயாய் வேலை செய்தான்.
ரூமிற்குள் நுழைந்த போது அசோக்கும் அவனின் அம்மாவும் மட்டுமே இருந்தனர். வேறு யாரும் இல்லை. “ஹப்பா!”, என்று பெருமூச்சு விட்டான் செந்தில்.
கனி உறங்கிக்கொண்டிருந்தாள்….. பக்கத்தில் உள்ள தொட்டிலில் குழந்தை இருந்தது.
அசோக்கை ஏதோ சொல்லி வேலை போல அழைத்து சென்றவன், அவனின் அம்மாவையும் வெளியே ஏதோ பேசியபடியே அழைத்து சென்றான் செந்தில். சென்றவன் இல்லாத ஒரு சிஸ்டரின் பெயரை கூறி அவர்கள் கூப்பிடுகிறார்கள் என்று சொல்லி கனியின் அம்மாவை அனுப்பி அவரை சுத்தலில் விட்டான்.
ஆகாஷ் கனியை பார்ப்பதற்காக தான் இவ்வளவு வேலையை செந்தில் செய்கிறான் என்று தெரியாத அளவிற்கு அசோக் ஒன்றும் முட்டாள் இல்லையே…… இருந்தாலும் கண்டுகொள்ளாமல் நின்றான். தன் தங்கையை காப்பாற்றியவன் ஆயிற்றே.
உள்ளே வந்த செந்திலிடம், “தூங்கிட்டு இருக்கா, அப்புறம் வரலாம்”, என்று ஆகாஷ் சொல்ல……
அவனை புஸ் புஸ் என்று முறைத்து பார்த்த செந்தில்…….. “டேய்!!!!!”, என்று பல்லை கடித்தவன், “அவளை எழுப்பி சீக்கிரம் பேசிட்டு குழந்தையை பார்த்துட்டு வா, ஏதாவது லேட் பண்ணிட்டு அப்புறம் வரலாம்னு இன்னொரு தடவை சொன்ன?………. மவனே குழந்தையை கிள்ளி விட்டுடுவன் ஆமா………. சொல்லிட்டேன்!!!!!!!!”, என்று மிரட்டினான்.
“அப்படி எதுவும் பண்ணிடாதடா”, என்று அலறினான் ஆகாஷ்.
“அந்த பயம் இருக்கணும், ஒழுங்கா சீக்கிரம் பார்த்துட்டோ! பேசிட்டோ! இல்லை முத்தம் குடுக்கறதுன்னா குடுத்துட்டோ, வாடா!”,
“என்ன முத்தம் குடுக்கறதா”, என்று ஆகாஷ் வாயை பிளக்க……
“நான் குழந்தைக்கு சொன்னேன்டா! அடங்குடா! அடங்கு! நானும் ஆஷோக்கும் ரொம்ப வருஷத்து சிநேகித பசங்க…….. எதையாவது சொதப்பி வெச்சி எங்க நட்பை பிரிச்சிடாதடா……… உனக்கு புண்ணியமா போகும்…. என் மேல உள்ள நம்பிக்கையால தான் எதுவும் கண்டுக்காம நிக்கறான். அவனை கிளப்பி விட்டுடாத”,
“நீ முதல்ல கிளம்பு! பேசு, பேசுன்னு சொல்லிட்டு இங்கயே நின்னா”
“எல்லாம் என் நேரம்”, என்றவன்……..
“உண்மையை சொல்லனும்னா ராஜியை கூட சமாளிச்சிடறேன்…. ஆனா உன்னை என்னால சமாளிக்க முடியலைடா”, என்று சலித்தபடியே வெளியே சென்றான் செந்தில்.