Vannamila Ennangal-15 1976 ஓங்கி ஒலித்திருந்த தியாதேவியின் குரலில் அந்த வீடே ஆடிப் போயிருந்தது.அந்த சாந்தமான அழகான முகத்தின் உக்கிரம் அத்தனை பேரையுமே உறையச் செய்தது. அதற்கும் மேலாக ஒரு பெண் பத்து பதினைந்து வருடங்களாய் ஒரு அறையில் அடைந்து கிடந்து தன் வாழ்வையே தொலைத்து அதையும் விட கொடுமையாய் திட்டமிட்டு தன் குடும்ப நபர்களையே கொல்லத் துணிந்திருக்கிறாள் என்றால்.எத்தனை வெறி இருந்திருக்கும் என்பதை நினைத்தும் பார்க்க முடியவில்லை. கால் மேல் கால் போட்டு அவர் அமர்ந்திருந்த தோரணையில் அத்தனை கம்பீரம்.எதற்கும் துணிந்துவிட்டவள் நான் எனும் அகந்தை இருந்தது.முத்துவின் கண்களோ கண்ணீரில் நிறைந்திருக்க, “தியா ம்மா..நீங்க ஏன்..” “விடுங்க முத்து..என்னைக்கு இருந்தாலும் இதெல்லாம் தெரிஞ்சு தான் ஆகணும்.என்ன என் புள்ளைகிட்ட மட்டும் சொல்லணும்னு நினைச்சதை இப்போ எல்லாருக்குமே சொல்றேன்..அவ்வளவு தான்..சொல்லு உனக்கு என்ன தெரியணும்?” “என்ன னா??எல்லாமே தான்..உங்க கல்யாணம்தொடங்கி..உங்க அக்கா இங்க வந்தது தொடங்கி..மிஸ்டர் வர்மாவோடகொலை வரை எல்லாமே..” “தெரிஞ்சு என்ன பண்ண போற…நான் இழந்த இத்தனை வருஷத்தை எனக்குத் திருப்பி கொடுத்துருவியா?சொல்லு!” “உங்க நிலைமை எனக்குப் புரியுது ஆனா எக்காரணம் கொண்டும் நீங்க பண்ணின எதுவும் நியாயம் ஆகிடாது இல்லையா..” “ம்ம் நியாயம்..அப்படி ஒண்ணு இந்த வீட்ல இருக்கா..அந்த வார்த்தையை சொல்ற தகுதி கூட யாருக்கும் கிடையாது.எல்லாத்துக்கும் காரணம் அந்த வர்மா..அவர் மட்டும் தான்… எப்படி இருந்த என் வாழ்க்கை..அழகான என் குடும்பம் நான் அம்மா அப்பா அக்கானு நிம்மதியா இருந்த நாட்கள் எல்லாத்தையுமே அழிச்சு சுடுகாடா மாத்தினது அந்த வர்மா.. பல வருடங்களுக்கு முன்.. நீலகிரியின் அந்த அழகிய கிரமாத்தின் அழகான சிறு பறவையின் கூடு போன்ற அந்த வீட்டில் மகிழ்ச்சிக்குக் குறைவின்றி இருந்தது. சந்தியாவின் தந்தை அன்றாட ஊதியம் பெரும் கூலி வேலைப் பார்த்து வந்தவராக இருப்பினும் இரு மகள்களையும் மனைவியையும் அத்தனை மகிழ்வாய் வைத்திருந்தார்.பிள்ளைகளும் பெற்றவருக்கு பாரம் கொடுக்காமல் அரசுப் பள்ளியில் படித்து சத்துணவு உண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர்.அப்போது அறிமுகமானவர் தான் பக்கத்து வீட்டிற்கு வந்த அமுதா குடும்பம் அவளது பாட்டி பொதுவாக கிராமங்களில் அழைக்கப்படும் மருத்துவச்சி எனப்படும் செவிலிப் பணி செய்து வந்தார். அமுதாவிற்கும் சரண்யாவிற்கும் பாட்டியோடு சேர்ந்து மருத்துவ உதவி செய்வதில் ஆர்வம் இருக்க சுற்றி இருக்கும் கிராமங்களுக்குச் செல்லும் போது அவர்களையும் அழைத்துச் செல்வார்.அப்போது எல்லாம் வீட்டில் நடக்கும் பிரசவங்களே அதிகம் என்பதால் அவரை அழைத்துச் செல்ல பக்கத்து ஊர் மக்கள் கூட வருவர். இப்படியான அவரது விருப்பத்தைப் புரிந்து கொண்ட பாட்டி அவர் குடும்பத்துக்கு உதவும் என்று எண்ணி தெரிந்தவர்கள் மூலம் ஊட்டியில் உள்ள மருத்துவமனையில் தற்காலிகமாக சரண்யாவையும் அமுதாவையும் வேலைக்குச் சேர்த்து விட்டார். அதன் மூலம் ஓரளவு மருந்து மாத்திரைகளைப் பற்றி இருவரும் நன்றாகவே அறிந்து கொண்டனர்.இதற்கிடையில் அமுதாவிற்கு திருமணம் முடிந்துவிட பாட்டிக்கும் வயதான காரணத்தினால் சரண்யா வேலைக்கு செல்வதைக் குறைத்துக் கொண்டு அவருக்கு உதவியாய் சென்று கொண்டிருந்தாள். இயல்பிலேயே சரண்யா சற்றுத் துடுக்குத்தனம் நிறைந்தவராக இருக்க சந்தியாவோ பெற்றோரை அன்றி ஒன்றும் அறியாதவளாய் இருந்தாள்.மிகவும் சாது..அதிர்ந்து கூடபேசத் தெரியாது என்பார்களே அப்படியான பெண்.பள்ளியின் இறுதி வருடடத்தில் இருந்தாள். அப்படி ஒரு முறை சரண்யா பக்கத்து ஊர் சென்றிருந்தபோது தான் அவள் வீட்டிற்கு வர்மா தன் மனைவியோடு வந்திருந்தார். வாசலில் நின்றவர்களை யார் என்னவெனத் தெரியவில்லை எனினும் பெரிய மனித தோரணை நன்றாகவே இருந்ததால் உள்ளே அழைத்து அமருவதற்கு பாயை விரித்து நகர்ந்து நின்றனர் சந்தியாவின் பெற்றோர். லட்சுமி தேவி சாதாரணமாய் இருப்பதாய் தெரிந்தாலும் வர்மாவிற்கு அங்கு இருப்பதில் விருப்பமில்லை என்பது அவர் முக பாவனையிலேயே தெரிந்தது. “வணக்கம் நாங்க ஜெய்ப்பூரில் இருந்து வரோம்.இது என் கணவர்.பெரிய சமீன்தார் குடும்பம் எங்களோடது.இப்போ இங்க ஏன் வந்துருக்கோம்னா…உங்க பொண்ணை என் முதல் பையனுக்குப் பொண்ணு கேட்டு வந்துருக்கோம்..” “!!!!” “அம்மா என்ன சொல்றீங்க..நீங்க யாரு என்னனே தெரில திடீர்னு வந்து இப்படி சொன்னா…” “உங்க பயம் புரியுது ஆனா அந்தளவு பயப்பட ஒண்ணும் இல்ல..எங்க பொண்ணு மாதிரி பார்த்துப்போம்..” “நீங்க சொல்றது எல்லாம் சரிம்மா ஆனா உங்க தகுதி என்ன!!அதுக்கு ஈடா எங்களால எதுவுமே பண்ண முடியாதே!”,சந்தியாவின் தந்தை சட்டென கேட்டிருந்தார்.அவர் மனைவியே இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. அவர்களின் பணக்காரத் தோரணை தன் மகள் வாழ்க்கை நன்றாக இருக்குமே என்ற யோசனையை அவருக்குள் விதைத்திருந்தது. அவரின் அந்த கேள்வியே வர்மாவின் முகத்தில் சற்று புன்னகையை வரவைத்திருந்தது. அந்த நேரம் வெளியே சென்றிருந்த சந்தியா உள்ளே வர புதியவர்களைக் கண்டு தன் தாயின் பின் ஒளிந்து நின்றாள்.அவளைப் பார்த்தவாறே லட்சுமி தேவி, “அதைப் பத்தியெல்லாம் நீங்க கவலையே பட வேண்டாம்.பொண்ணை மட்டும் அனுப்புங்க அது போதும்.” “ஆண்டவன் என் பொண்ணுக்கு இப்படி ஒரு நல்லது பண்ணுவான்னு நினைச்சுக் கூட பார்க்கல..இப்போனு பார்த்து அவ ஊர்ல இல்லாம போய்ட்டா..” “அப்போ இது??” “இவ சின்னவள் சந்தியா..மூத்தவள் சரண்யா..” “நாங்க…உங்க சின்ன பொண்ணைத் தான் பொண்ணு கேட்டு வந்துருக்கோம்..”,அடுத்த அதிர்ச்சியை இறக்கினார் லட்சுமி.சந்தியா இன்னுமாய் தன் தாய்க்குப் பின் மறைந்து நின்றாள். “என்னம்மா பேசுறீங்க..மூத்தவ இருக்கும் போது இவளைப் பொண்ணு கேக்குறீங்க!!அப்பறம் அவ வாழ்க்கை என்ன ஆகுறது?இல்ல மா ஒண்ணும் சரியா படல நீங்க கிளம்பி போங்க..”,என்று சந்தியாவின் தந்தை படபடவென பொரிந்து தள்ள அத்தனை நேரம் பார்வையாளராய் மட்டுமே இருந்த வர்மா ஹிந்தியில் தன் மனைவியிடம் கத்த ஆரம்பித்திருந்தார். அதில் சற்றே அரண்டுப் போனவர்களாய் மூவரும் முழித்து நிற்க லட்சுமி தேவி அவரை சமாதானப்படுத்தி அமைதிப்படுத்தினார். “இங்க பாருங்க..நான் சொல்றதை பொறுமையா கேளுங்க..எங்க ஜமீன் வழக்கப்படி எங்க குடும்ப நம்பூதிரி ஒருத்தர் இருக்கார் அவர் சொல்ற ராசி நட்சத்திர நாளில் பிறந்த பொண்ணை தான் வீட்டுக்கு மருமகளாவோ மருமகனாவோ நாங்க ஏத்துக்குறது வழக்கம். அவ்வளவு ஏன் நானே அப்படி போனவ தான்.எனக்குப் பூர்வீகம் தமிழ்நாடு தான்.என் மாமனார் மாமியார் இதே போல வந்து பேசிதான் எங்க கல்யாணம் நடந்தது.பாருங்க இத்தனை வருஷம் நாங்க எந்த குறையும் இல்லாம சந்தோஷமா நிம்மதியான வாழ்க்கை தான வாழ்ந்துட்டு இருக்கோம்.. ஒருவிதத்துல உங்க பொண்ணுக்கு கிடைச்ச அதிர்ஷடம் தான் இது.அவர் கணிச்சதுபடியான ராசி அம்சங்களோட உங்கபொண்ணு தான் இருக்கா..அவ்வளவு ஏன் நீங்க இருக்குற திசை வரை அத்தனையும் சொல்லி தான் அனுப்பினார் எங்க நம்பூதிரி. என் பையனும் எங்களோட வந்துருக்கான்..அவர் குறிச்ச நாள் நட்சத்திரம் இன்னும் இரண்டு நாள்ல வருது அந்த முகூர்தத்துல இவங்க கல்யாணம் முடிஞ்சுதுனா அதுக்கப்பறம் எல்லாமே சுபம் தான்.என்னை நம்பி உங்க பொண்ணை அனுப்புங்க..” சந்தியாவுக்கோ கண்ணில் நீர் கோர்த்திருந்தது.பெற்றோரோ என்ன செய்வதென புரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்க அதைக் கண்டு மேலும் கடுப்படைந்தவராய் தனக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் கத்த ஆரம்பித்திருந்தார் வர்மா. “உங்ககிட்ட உதவி கேட்டு நாங்க இங்க வரல..உங்களுக்கு வேற வழி கிடையாது சம்ஜே! நாளை மறுநாள் இவங்க கல்யாணம் நடக்கும்.நடக்கணும் அது மட்டுமில்லாம நாங்க சொன்ன எந்த காரணமும் வெளில யாருக்கும் தெரிய கூடாது. அதைவிட முக்கியமா கல்யாணத்துக்கு அப்பறம் உங்க பொண்ணு உங்களைப் பார்க்க வரமாட்டா..நீங்களும் எந்த உரிமையும் எடுத்துகிட்டு வரக் கூடாது.பொண்ணு பெரிய இடத்துல வாழுறானு காசு பணம் எல்லாம் எதிர்பர்.து வந்துநிக்கக் கூடாது. இப்படிபட்ட குடும்பத்துப் பொண்ணு தான் என் வீட்டு மூத்த மருமகனு தெரிஞ்சா..ச்சச்ச..சரி அது போகட்டும்…உங்களைக் கண்காணிக்க என்னோட ஆட்கள் இங்க இருந்துட்டேதான் இருப்பாங்க..எனக்கு எதிரா எதாவது பண்ணணும்னு நினைச்சீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்.. இந்தாங்க பணம் கல்யாணத்துக்குப் புடவையும் அவளுக்குத் தேவையான நகைகளையும் வாங்கி வைங்க..கல்யாணத்தன்னைக்கு காலையில உங்களை அழைச்சுட்டுப் போக வண்டி வரும்.அதுவரை பெண்கள் இரண்டு பேரும் இந்த வீட்டை விட்டு எங்கேயும் போக கூடாது.”,என்றவர் லட்சுமியை அழைத்துக் கொண்டு விறு விறுவென சென்றிருந்தார். மழை பெய்து ஓய்ந்தவாறு இருந்தது அந்த இடமே..மூவரும் ஒருவருக்கொருவர் சமாதானப் படுத்தக் கூடத் தோன்றாமல் பிரமைப் பிடித்தாற் போன்று அமர்ந்திருந்தனர். வர்மா பேசியதிலிருந்தே அவரின் பண பலமும் ஆள் பலமும் நன்றாகவே புரிந்திருந்தது.தங்களால் நிச்சயம் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ஏழைப் பெற்றோர் அடுத்தகட்டமாய் தன் மகளை இதற்கு சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர். கல்யாண நாளும் வந்தது.கூறியபடியே விடியும் முன்பாக அவர்களை அழைத்துச் செல்வதற்கான வண்டி வந்திருக்க மூவரும் ஒருவரை ஒருவர் பிடித்தபடி பதட்டத்தோடு அதில் பயணத்தைத் தொடங்கியிருந்தனர். கோயம்புத்தூரில் இருந்த ஒரு சிறு கோவில் மண்டபத்தில் இரு தரப்பு பெற்றோர் தவிர யாரும் இன்றி அமித்வர்மா சந்தியா தேவியின் கழுத்தில் தாலி கட்டியிருந்தார். திருமணம் முடிந்து மணமக்கள் சந்தியாவின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.ஊரே வந்து மணமக்களை வேடிக்கைப் பார்த்தது.அத்தனை பழியையும் தன் மேல் போட்டுக் கொண்டார் சந்தியாவின் தந்தை. வதியான இடம் என்பதால் மகளுக்கு நல்வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தானே இந்த கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகக் கூறிவிட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பேச ஆரம்பித்திருக்க பெற்றவர்களோ கண்ணீர் மல்க அமைதி காத்திருந்தனர்.அது மட்டுமன்றி வர்மா அங்கிருந்து கிளம்பும் நேரம் பெரிய தொகையை சந்தியாவின் அப்பா கைகளில் திணித்துவிட்டு வந்தார். காரில் ஏறி அமரும் வரையுமே ஒரு ஜடம் போல் அத்தனையையும் செய்து கொண்டிருந்த சந்தியா தன் பெற்றோரைத் திரும்பியும் பார்க்கவில்லை.அதையும் விட அங்கிருந்து கிளம்பிய பின்னரே தன்னருகில் கணவன் என்று அமர்ந்திருந்தவனைப் பற்றிய சிந்தனையே எழுந்தது.பயம் மொத்தமாய் மனதை ஆக்கிரமித்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று கூடத் தெரியாமல் கண்ணை இறுக மூடி அமர்ந்து கொண்டாள். மணமக்கள் ஜெய்ப்பூருக்கு அழைத்து வரப் பட்டிருக்க வீட்டின் ஆடம்பரமும் செல்வச் செழிப்பும் பெரிதாய் மிரட்டியது.லட்சுமி தேவி தான் அவளை உண்மையாகவே மகள் போல் பார்த்துக் கொண்டார் ஒவ்வொரு கட்டத்திலும்.வீட்டில் மற்றவர்களைப் பார்த்த போது மேலும் பதட்டம் அவளிடத்தில். அதைவிட உள் நுழைந்த அடுத்த நொடி அமித் வர்மா ஒன்றும் கூறாமல் அவர் போக்கில் உள்ளே சென்று விட அவரவர் வேலையைப் பார்க்க மற்றவர்கள் சென்றுவிட திக்குத் தெரியாத காட்டில் தனித்து விடப்படட்டதைப் போன்று தவித்துப் போனார் சந்தியா. பணிப்பெண் ஒருவர் வந்து லட்சுமி தேவி அழைப்பதாய் கூறி அவரை உள்ளே அழைத்துச் செல்ல அங்கு பூஜையறையில் அவளுக்காக காத்திருந்தார் லட்சுமி. அவளைத் தன்புறம் அழைத்து விளக்கேற்ற வைத்து தன்னோடு அழைத்துச் சென்றவர் அவளை ஒரு அறையில் அமர்த்திச் சென்றார்.அன்று முழுவதும் அவளுக்கான அனைத்தையும் அவரே பார்த்துக் கொண்டார். இரவு நேரம் நெருங்கிய போது புதுமணத் தம்பதிகளுக்கான சம்பிரதாயaத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்களது குடும்ப வழக்கப்படி சந்தியா தேவியை அலங்கரித்து அமித் வர்மாவின் அறைக்கு அழைத்துச் சென்றார். கைகளெல்லாம் நடுக்கமுற உள்ளே சென்றவருக்கு பயத்தில் தலைசுற்ற ஆரம்பிக்க அப்படியே மூர்ச்சையாகிச் சரிந்திருந்தார்.இதைச் சற்றும் எதிர்பாராத அமித்தோ உடனே ஓடிச்சென்று அவரைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்து தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்தார்.சிறிது நேரத்தில் கண் விழித்த சந்தியவோ அத்தனை அருகில் அவரைக் கண்டதும் பயந்து போய் அவசரமாய் எழுந்து கட்டிலின் பின் பகுதியில் தன்னை மறைத்துக் கொண்டார். அவரின் செயலில் மனம் நொந்த அமித்வர்மா ஒன்றும் கூறாமல் கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக் கொள்ள சற்று நேரத்தில் உறங்கியும் போனார்.அவர் உறங்கியதை உறுதி செய்துக் கொண்டவராய் வறண்டு போன நாவிற்குத் தண்ணீர் தேவை என்பது உணர்ந்து சத்தம் எழாதவாறு அமைதியாய் சென்று மேசையின் மீதிருந்த தண்ணீரை மொத்தமாய் கொட்டிக் கொண்டு அப்படியே ஓரமாய் அமர்ந்து கொண்டார். மறுநாள் காலை எழுந்த அமித் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து அமர தனக்கு எதிர்புறத்தில் சுவற்றில் சாய்ந்து கால்களைக் குறுக்கியவாறு அமர்ந்திருந்த சந்தியாவைக் கண்டு மனம் இளகிப் போனார்.தன் மேல் இருந்த தவறு உறைக்கவே அவரருகில் சென்றவர் மெதுவாய் தட்டி அவரை எழுப்ப முயற்சி செய்தார். சில நொடிகளில் கண் விழித்தவளிடம் முதன்முறையாய் வாய்திறந்து பேசத் தொடங்கினார் அமித். “இங்கப் பாரு பயப்படாத..அவசரத்தில் நடந்துருந்தாலும் நடந்த கல்யாணம் பொய்னு ஆகாது.முதல்லயே நான் இதெல்லாம் உன்கிட்ட பேசிருக்கணும்.என்னைப் பத்தி யோசிச்ச அளவு உன்னை யோசிக்காம விட்டுட்டேன். தப்புதான்..அதுக்காக மன்னிப்பும் கேட்டுக்குறேன்.ஆனா நீ என்னைப் பார்த்து இப்படி பயப்படுற அளவுக்கு நான் கெட்டவன் இல்ல..ஒரு கணவனா உன்னைக் கண்டிப்பா நல்லா பார்த்துப்பேன்.எனக்குமே இந்த கல்யாணம் எதிர்பாராதது தான்.அதனால தான் முழு ஈடுபாடோட என்னால உன்கிட்ட பழக முடில.கொஞ்சம் எல்லாத்தையும் ஏத்துக்குறதுக்கான நேரத்தை கொடு.. ஆனா அதுவரை நீ நிம்மதியா இரு..இது தான் இனி உன் வீடு இது தான் நம்மளோட அறை.உன் விருப்பமில்லாம எதுவும் நடக்காது..என்னை நீ தாராளமா நம்பலாம்..சரியா?”,என்று சிறு குழந்தைக்குச் சமாதானம் கூறுவதைப் போன்று கூறிக் கொண்டிருந்தார். அனைத்தையும் கேட்டவள் புரிந்தும் புரியாததுமாய் தலையை ஆட்டி வைத்தாள்.அதன் பின்னான இரு தினங்களில் ஓரளவு திடத்தை வர வைத்துக் கொண்டாள் சந்தியா.வேலை என்று பெரிதாய் ஒன்றும் கிடையாது அமித் வெளியில் சென்ற பின் தன் மாமியாரிடம் போய் அமர்ந்து கொள்வாள்.அவருக்குத் தேவையானதச் செய்து கொடுப்பாள். தவறியும் தன் மாமனார் புறம் மட்டும் சென்றுவிட மாட்டாள்.அமித்துடனும் பெரிதாய் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை எனினும் கேட்பதற்கு பதில் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவாள். இங்கு நிலைமை இப்படியிருக்க அங்கு வீட்டிற்கு வந்த சரண்யாவோ நடந்த அனைத்தையும் கேட்டு கொந்தளித்திருந்தாள். “என்ன பண்ணி வச்சுருக்கீங்க இரண்டு பேரும்..சின்னப் பொண்ணு மா அவ..ஊர் பேர் தெரியாத இடத்துல போய் தனியா என்ன பண்ணுவா..இப்படி அவளோட வாழ்க்கையவே நாசம் பண்ணிட்டீங்களே..அவளுக்கு நம்மளை விட்டா என்னத் தெரியும்.. இதுல ஊர் மொத்தமும் அந்த ஆள் மிரட்டினதுக்காக பொய் சொல்லி வச்சுருக்கீங்க..இப்போ யார்கிட்டேயும் போய் உதவினு கூட கேட்க முடியாது..”,என்று தாயையும் தந்தையையும் சரமாரியாய் கேள்வி கேட்க அவர்களுக்கோ கண்ணீரைத் தவிர பதிலாய் தருவதற்கு வேறு ஒன்றும் இல்லாமல் போனது. இப்படியான சூழ்நிலையில் தான் வர்மா மகனையும் மருமகளையும் ஒரு மாத காலம் வெளிநாடு அனுப்பி வைத்தார்.மொழி தெரியாத தேசம் இயற்கையிலேயே பயந்த சுபாவம் என அனைத்தும் சேர்ந்து அதுவாய் அமித்திடம் பழக ஆரம்பித்திருந்தார் சந்தியா. மீண்டும் தாயகம் வரும்போது இருவருமே ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையும் அன்பும் கொண்டவராய் மனமொத்த தம்பதிகளாய் வந்திருந்தனர்.லட்சுமி தேவிக்கு அவர்களை அப்படி பார்த்ததே பெரும் நிம்மதியாய் இருந்தது. அதைவிட இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருந்தது சந்தியா கருவுற்ற செய்தி தான்.வர்மாவே கொண்டாடித் தீர்த்தார் என்று தான் கூற வேண்டும்.வர்மா குடும்பத்தின் முதல் வாரிசு என்ற அங்கீகாரத்திற்கு சொந்தமான குழந்தையை வரவேற்கத் தயாராகியிருந்தார் அதுவும் பிறந்தது பேரன் என்று தெரிந்தபோது திருவிழாவாகவே கொண்டாடினார் என்றே கூற வேண்டும்.அதன் பின்னான நாட்கள் சந்தியாவைப் பொறுத்தவரை வாழ்வின் பொன்னான நாட்கள்.பிறந்த வீட்டை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதை தாண்டிய எந்த கவலையும் அவருக்கு இல்லை என்ற நிலையே. அமித் சில நேரங்களில் அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க முயன்றாலும் ஏதோ ஒரு காரணம் கூறி வர்மா அதை தடுத்து விடுவார்.அதன்பின் வீட்டின் ஒவ்வொரு மகன் மகள்களுக்கும் திருமணம் குழந்தைகள் என வருடங்கள் உருண்டோடத் தொடங்கியிருந்தது.