அத்தியாயம் ஐந்து :

“உன்னை ஹர்ட் பண்ணனும்றது என்னோட நோக்கம் கிடையாது, நான் இப்படி பேசணும்னு நினைக்கலை.. நீ என்கிட்டே சாதாரணமா நடந்து இருந்தா நான் ஏன் பேசறேன். எப்போவாவது உன்னை மரியாதைக் குறைவா நடத்தி இருக்கேனா? நீ பண்ற கம்ப்ளையின்ட் ரொம்ப தப்பு!” என்றான் சற்று தீவிரமாக.    

“நீதான் போ போ சொல்ற, அப்புறம் நீ தான் ஒளிஞ்சுக்கோ சொன்ன, நான் எனக்கு தோணினதை சொன்னேன்”

“அதுக்கு தான் சொல்றேன், நீ என்கிட்டே இருந்து டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ணு, ஒரு வார்த்தை கூட அதிகம் பேசாதே, ஜஸ்ட் பீ பார்மல்.. புரியுதா… ஏன்னா எனக்கு உன்கிட்ட எந்த லிமிட்ஸ் சம் கிடையாது, நீ தள்ளி நில்லு!”

அப்போதும் நிகில் அக்ஷராவைப் பார்த்து நின்று கொண்டே இருக்க, “என்ன இன்னும்?” என்றாள் அக்ஷரா,

விடாமல் “மரியாதை இல்லாம நடத்தக் கூடாது சொல்ற, எப்போ உன்னை நான் அப்படி நடத்தினேன்”    

“உனக்குப் புரியுதா நிகில்? நீதானே சொல்ற எனக்கு கல்யாணமாகிடுச்சுன்னு. உன்னை நான் பேசவைப்பேன்.. அதான் சொல்றேன் தள்ளி நில்.. இது உன்னோட பார்ட்ல இருந்து இல்லை என்னோட பார்ட்ல இருந்து” என்று விளக்கம் சொன்னாள்.

நிகிலிற்கு சுத்தமாக புரியவில்லை.. புரியாத பார்வை பார்த்தவனிடம்.. “உனக்கு என்னால புரிய வைக்க முடியாது.. திஸ் இஸ் சம்திங் பியான்ட் யுவர் மைன்ட் செட்.. ஜஸ்ட் தள்ளி நில்!” என்றாள் திரும்பவும்.     

“ரொம்ப தள்ளி தான் நிக்கறேன்” என்றான் சீரியசாக.. 

“இது அந்த தள்ளி இல்லை” என்று கடுப்பாக சொன்னவள், “வேண்டாம் போ! நான் பேசினா திரும்ப நீ பேசுவ, பேசாம போய் உட்கார்!” என்று அதட்டினாள்.  

“ஏன் நான் இங்க நின்னா என்ன?”

“இவ்வளவு கேள்வி ஏன் கேட்கற? ஐ ஃபீல் அன்நீசி! சொன்னா புரிஞ்சிக்கோ போ!” என்று கத்த,

பேசாமல் வெளியே வந்து அமர்ந்து கொண்டான். “நான் பார்த்த அக்ஷரா இல்லை இவள். என்ன ஆகிற்று இவளுக்கு?” என நினைத்தவாறு அமர்ந்தான்.

அதற்குள் “மம்மா” என்ற ஷ்ரத்தாவின் குரல் கேட்க,

“கமிங் ரூ பேபி!” என்று அடுத்த நொடி ஷ்ரத்தாவிடம் விரைந்தாள்.                  

அக்ஷரா அங்கே செல்ல, பால் இங்கே பொங்கி வழிந்தது.. அதன் சத்தத்தில் நிகில் அதனிடம் விரைந்து அடுப்பை அணைத்தான்.

அதற்குள் நிறைய போய் இருந்தது. அதனிடம் வந்தவள் “அச்சோ” என நின்றாள்.

“இன்னைக்கும் போயிடுச்சா மம்மா!” என்று மகள் கேட்க,

“ஆம்!” என்று பரிதாபமாக தலையசைத்தாள்.

அப்போதுதான் நிகிலை கவனித்த ஷ்ரத்தா, அவனை கை காமிக்க…

“நான் காலேஜ் படிச்சப்போ அம்மாக்கு நல்ல ஃபிரண்ட்.. அதான் எழுந்த உடனே பார்க்க வந்துட்டார்!” என்ற மீண்டும் நிகிலை குறித்து விளக்கம் சொன்னாள்.

“ஆனா காஃபி போட வேண்டாம். அம்மாக்கு டேஸ்டே பிடிக்கலை, குடிச்சா அழறாங்க!” என்று பேச,

நிகில் அவசரமாக அக்ஷ்ராவின் முகத்தைப் பார்த்தான். “ரூ பேபி என்ன பேசற?” என்று அக்ஷரா கடிந்து, உதட்டின் மேல் ஒரு விரல் வைத்து பேசாதே என்று காட்ட..

நிகில் பேச வர.. அவனுக்கும் அதே சைகையை காட்டினாள். அவளின் பாவனையில் அமைதியாகிவிட்டான். பின் இருக்கும் பாலில் ஷ்ரத்தாவிற்கு, தனக்கு, நிகிலிற்கு என கலக்கப் போக..

“உன்னோட பேபிக்கு மட்டும் குடு, நமக்கு நான் கலக்கறேன்.. உன்னோட காஃபி ரொம்ப சுமார்!” என்று தயங்கி நிகில் சொல்ல,

“ஒரு நாள் டேஸ்ட் கம்மியா குடிச்சா ஒன்னும் ஆகிட மாட்டே.. நான் தினமும் இதை தான் குடிக்கறேன் நீயும் குடி! உனக்கு ஏதாவது வேலை செய்யணும்னா இந்த கிட்சன் கிளீன் செய்” என

“ஹேய், யு நோ… நான் ஸ்பைன் சர்ஜன், என் அப்பாயின்ட்மென்ட்க்கு அத்தனை பேர் வையிட் பண்றாங்க. நீ என்னை கிச்சன் கிளீன் பண்ண சொல்ற!” என்று பாவனையாகச் சொன்னாலும், கண்கள் எதில் சுத்தம் செய்யலாம் என்று பார்வையை ஓட்டினான்.

அக்ஷராவிற்குள் ஏனென்று புரியாத ஒரு எரிச்சல்,  “காலையில என் உயிரை எடுக்காத! இந்த காஃபி குடிச்சிட்டு கிளம்பு. என்னோட ஒவ்வொரு நிமிஷமும் காலையில ப்ரெஷியஸ்.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் என் பேபிக்கு என்னால சமைக்க முடியாது.. என் சமையல் எவ்வளவு கேவலமா இருக்கும்னு உனக்கே தெரியும்”

“இதுல அவசரமா செஞ்சா அவ்வளவு தான் என் பேபி.. பாவம் அவ… டோன்ட் வேஸ்ட் மை டைம்!” என

“ஓகே கிளம்பறேன், ஆனா நீ எனக்கு அப்பாயின்ட்மென்ட் குடு!”

“எதுக்கு?”

“உன்கிட்ட நான் ஃப்ரீயா டைம் ஸ்பென்ட் பண்ணனும், பேசணும், ஐ கேர் ஃபார் யு.. எனக்கு உன்னை பத்தி தெரியலைன்னா மனதை வெடிக்கும்”

“அது வெடிக்கும் இல்லை, உடையும்! இல்லை மனதை இல்லை. அது மண்டை! எது தப்பா சொன்ன?” என்று தீவிரமாகக் கேட்டாள்.

மகள் அம்மாவின் திருத்தலுக்கு வாய் பொத்தி சிரிக்க,

மகளின் முன் இவனுடன் இப்படி பேசுவதா என்று இன்னும் டென்ஷன் ஆனவள், “உனக்கெல்லாம் மண்டை வெடிக்காது, நீ அடுத்தவங்களுக்கு தான் வெடிக்க வைப்ப. நீ கிளம்பு!”

“ஓகே, இந்த கிச்சன் கிளீன் பண்ணட்டுமா! பண்ணிட்டு போயிடறேன்!”

“நிகில் நீ ஒரு சர்ஜன்!”

“அது மத்தவங்களுக்கு, உனக்கு இல்லை. ஐ அம் அல்வேய்ஸ் அட் யுவர் சர்வீஸ் அக்ஷி!” என இலகுவாக சொல்ல..

மகளின் முன் இந்த பேச்சுக்கள் அக்ஷ்ராவிற்கு ரசிக்கவில்லை. ஷ்ரத்தா எதையும் தானாக புரிந்து கொள்ளும் சூட்டிகையான குழந்தை. யாரும் அவளின் அம்மாவிடம் இப்படி ஒரு நெருக்கம் காட்டிப் பேசி பார்த்திருக்க மாட்டாள். நிச்சயம் தவறாக புரிந்து கொள்ளும் வயது அல்ல. ஆனாலும் இப்படி ஒரு உரிமையான பேச்சை அவள் முன் பேச அக்ஷராவிற்கு விருப்பமில்லை.  பல சமயங்களில் அபிமன்யுவிடம் இல்லை அக்ஷ்ராவின் அம்மாவிடம் ஒளிபரப்பி விடுவாள். அது மிகவும் டேஞ்சரஸ் என்று அக்ஷராவிற்கு தெரியும்.      

“இதுக்கு தான் சொல்றேன், தயவு செஞ்சு நீ போ!” என்று மீண்டும் டென்ஷனாக சொல்ல,

இப்போது ஷ்ரத்தா அவனை முறைத்து பார்த்தவள், “நீங்க என் மம்மாவை எதுக்கு டென்ஷன் பண்றீங்க?” என

குழந்தை கேட்கவும், “உங்கம்மாவை யாரும் டென்ஷன் பண்ண வேண்டாம்! அவளே ஆகிக்குவா!” என்று சொல்லி சென்று விட்டான்.

நிகில் சொன்ன விதத்திலேயே அவனுக்கு கோபம் என்று நன்கு புரிந்தது. நிகிலின் ஒவ்வொரு அசைவும் தெரிந்தவள் ஆகிற்றே. அவளை மாதிரி கத்தி பேசி ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டான். கோபம் என்பது எளிதாக அவனுக்கு வராது. ஆனால் வந்து விட்டால் சமாதானம் ஆவதோ இல்லை செய்வதோ மிகவும் கடினம். 

ஆனாலும் மனது ஆசுவாசப்பட்டது “எப்படியும் இந்த கோபம் இருக்கும். அவனாக சமாதானம் ஆகும் வரை இனி தொந்தரவு இல்லை, நாளை பார்த்துக் கொள்ளலாம்”

“போ பேபி! போய் கொஞ்சம் குதி… அம்மா வர்றேன்” என,

“மம்மா டைம் இருக்கா… நான் பிரெட் கொண்டு போக மாட்டேன்.. நீங்க சமைங்க! நான் நீங்க பார்க்கற மாதிரி எக்சர்சைஸ் பண்றேன்!”

“பேபி அம்மாவும் பண்ணனும்டா..”  

“அதெல்லாம் முடியாது! நீங்க எனக்கு சாதம் தான் தரணும்!” என்று நிற்க..

மணி ஆறரை… எழரைக்குள் முடியுமா என்று யோசித்து, இன்றைக்கு எக்சர்சைஸ் பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை என நினைத்து சமைக்க நிற்க..

பிரஷ் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஷ்ரத்தா பாத்ரூமில் புகவும்,  

“ரூ பேபி, சீக்கிரம் பிரஷ் பண்ணனும். பேஸ்ட் சாப்பிடக் கூடாது!” எனச் சொல்ல..                  

“நோ மம்மா! நான் சாப்பிட மாட்டேன்” என்று சொல்ல, ஒரு வழியாக சமைத்து மகளை தயார் செய்து, குளிக்காமல் உடை மாற்றி.. ஷ்ரத்தாவை பஸ் ஏற்றிவிட தான் கதவை திறந்தாள்.

அக்ஷரா எட்டிப் பார்த்த விதத்தில் “என்னம்மா” என்று ஷ்ரத்தா கேட்க,

“வெளிய யார் இருக்காங்க பார்த்தேன்!” என்று மகளிடம் அசடு வழிந்தாள்.

“யார் இருந்தா நமக்கு என்னமா? வாங்க போவோம்!” என்று ஷ்ரத்தா சொல்லிய விதத்தில், தானாக ஒரு முறுவல் முகத்தினில் மலர.. அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு “போகலாம் பேபி” எனக் கிளம்பவும்..  

“அம்மா! கதவை லாக் பண்ணுங்க”  

“ஆமாமில்லை!” என்று மீண்டும் அசடு வழிந்தாள்.

“போங்கம்மா! என்னவோ எல்லாம் தப்பா பண்ணறீங்க!”

“சரிங்க! என் பெரிய அம்மா! நீங்க வாங்க!” என்று கிளம்பினார்கள்.

ஷ்ரத்தாவை பஸ் ஏற்றி விட்டு விரைந்து வந்து இவள் குளித்து கிளம்பி, திரும்ப எங்கவாது நிகில் தென்படுகின்றானா என்று பாராமல் பார்த்துக் கொண்டே கிளம்பினாள். அவனை எங்கும் காணோம்.

“ஷப்பா!” என்ற பெருமூச்சு வந்தது, இனி மாலை வரை எந்த பிரச்னையும் இல்லை என்று காலேஜ் சென்றாள்.

அவளுக்கு தெரியவில்லை… அன்று அவள் சந்திக்கப் போகும் பிரச்சனைகள் அவளை மன ரீதியாக மிகவும் புரட்டிப் போடும் என..

எப்பொழுதும் போல கல்லூரி  சென்றவளிடம் அவளின் துறை முதல்வர், “இன்னைக்கு வேற காலேஜ்ல பேப்பர் ப்ரசெண்டஷன்க்கு என்னை ஜட்ஜ் பண்ணக் கூப்பிட்டாங்க, இன்னைக்கு எனக்கு முடியும்னு தோணலை. நாட் ஃபீலிங் வெல், நீ போறியாம்மா. உன்னோட நேம் சஜஸ்ட் பண்ணட்டா!”

“எனக்கு போறதை பத்தி ஒன்னுமில்லை சர், லேட் ஆகும்னா என் பேபி ஸ்கூல்ல இருந்து வந்துடுவா”

“லேட் ஆகாதும்மா, அது மதியம் ரெண்டு மணிக்கு ஸ்டார்ட் ஆகுது.. சோ முடிஞ்சிடும்!”

“ஓகே சர்!” என்று ஒத்துக் கொண்டாள்.

“மதியம், நான் வர லேட் ஆகும், ஷ்ரத்தாவை பார்த்துக் கொள்!” என்று எப்போதும் பார்த்துக் கொள்ளும் பெண்ணை அழைக்க..

“அக்கா, என் தாத்தா இறந்துட்டார். நானே கூப்பிடணும்ன்னு இருந்தேன்!” என்று சொல்ல.. 

முன்பே அழைத்து இருந்தால், வேறு ஏற்பாடு செய்திருக்கலாம் இப்போது என்ன செய்ய என்று யோசித்தவள், அபிமன்யுவை அழைத்தாள்..

அவன் எடுக்கவும், “அபி எனக்கு வேற காலேஜ்ல பேப்பர் ப்ரெசென்டேஷன்க்கு ஜட்ஜ் பண்ண போகணும்.. எப்பவும் பார்க்க வர்ற பொண்ணு வரலை.. நீ ஷ்ரத்தாவை அழைச்சுக்கோ, உன்கிட்ட வீட்டு சாவி ஒன்னு இருக்கும் தானே.. நான் வர்ற வரை அங்க இரு” என,

“நான் அவளை இங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடறேன்!” என்றவனிடம்,

“சொன்னதை செய்யற மாதிரி இருந்தா செய். இல்லை நான் வேற ஏற்பாடு செஞ்சுக்கறேன்!” என்றாள் கடினமாக.

“ஓகே கா” என்றான் சலிப்பாக அவளின் பிடிவாதத்தை நினைத்து.

“மறந்துடதா அபி, அவளுக்கு பயம் கிடையாது, ஆனாலும் தனியா விட்டுடாதா”   

“அக்கா! நான் பார்த்துக்கறேன்!” என்றான்.

அதை நம்பி அக்ஷராவும் விட்டு விட, எப்போதும் ஷ்ரத்தா நான்கரை மணிக்கு பள்ளியில் இருந்து வர, ஐந்து ஐந்தரைக்கு வீட்டிற்கு சென்று விடும் அக்ஷரா.. அன்று பார்த்து ஆறரை ஆகிவிட..

அபிமன்யு இருப்பான் என்று கவலையின்றி வந்த அக்ஷரா பார்த்தது.. அவள் உயிர் வரை உறைந்தது.

இருட்ட ஆரம்பித்து இருக்க, காரிடர் லைட் போடப் படாமல் இருக்க, அங்கே அவர்களின் வீட்டு வாசலில் ஷ்ரத்தா அமர்ந்து இருந்தாள், முகத்தில் அவ்வளவு பயம் கூட.. யாராவது வருகின்றார்களா என்று படி இருக்கும் வாயிலைப் பார்த்து.. 

படியில் ஒரு உருவம் பார்த்தும்.. பயத்தில் ஒரு அலறல்..  

“ரூ பேபி” என்று அம்மா அழைத்து, வேகமாக லைட் போடா, “மம்மா” என்று அழைப்பு, பிறகு அம்மாவைப் பார்த்து விட்ட ஆசுவாசம், அதன் பிறகு முகத்தில் அழுகை தெரிய..

அக்ஷரா அவளைப் பார்த்து ஓடினாள். ஓடி மகளின் அருகில் சென்று அமர்ந்து “என்ன பேபி இங்க உட்கார்ந்து இருக்க?” என,

அப்படியே அம்மாவைக் கட்டிக் கொண்டாள், உடையில் ஈரம் கூட.. அதுவே சொன்னது அப்படியே யூரின் போய்விட்டாள்.

“யாரும் இல்லைம்மா வீடும் பூட்டி இருந்தது” எனத் தேம்ப…

எழுந்து மகளை அப்படியே தூக்கிக் கொண்டவள், கையில் வைத்துக் கொண்டே சிரமப்பட்டு கதவை திறக்கும் போது தான் அபிமன்யு வேகமாக வர..

அவன் வருவதை பார்த்தும் நிற்கவில்லை.. உள் சென்று கதவை மூடிக் கொண்டாள்.

அபிமன்யு கதவைத் தட்டியும் பெல் அடித்தும் திறக்கவில்லை. ஷ்ரத்தாவை அக்ஷரா தூக்கிப் பிடித்து விடாமல் கதவை திறந்தது , ஷ்ரத்தா அக்ஷராவை அணைத்து பிடித்திருந்த விதம்.. ஏதோ சரியில்லை என்று சொல்ல.. இப்போது கதவும் திறக்கப் படாமல் இருக்க.. தவித்துப் போனான்.

அது அபார்ட்மென்ட் என்றாலும் பல மாடிகள், பல வீடுகள் எல்லாமில்லை. கீழே இரண்டு வீடு மேலே இரண்டு வீடு.. மொத்தம் நான்கு வீடுகள்.. அதில் கீழிருபவர்கள் ஒருவர் வெளிநாடு சென்று வீட்டை பூட்டி வைத்திருக்க, இன்னொன்றில் கணவன் மனைவி இருவரும் சாஃப்ட்வேர் லைனில் இருந்தார்கள். இரவு எட்டு ஆகிவிடும் வீடு திரும்ப.. இன்னொன்றில் தான் மேலே ஸ்ம்ரிதி வீட்டினர்.. அவர்கள் மாலை நான்கு மணிக்கு பர்ச்சேஸ் என்று கிளம்பி சென்றிருந்தார்கள்.. ஷ்ரத்தா வருவதற்கு சற்று முன்.. ஷ்ரத்தா வந்த பிறகு என்றால் கண்டிப்பாக அவளைத் தனியாக விட்டிருக்க மாட்டார்.

அதுவும் நிகில் வரவில்லை என.. “எனக்கு கொஞ்சம் ஜூவல்ஸ் நீ வந்த பிறகு தான் வாங்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்!” என்று ஸ்ம்ரிதி பிடிவாதம் பிடித்து அழைத்துச் சென்றிருந்தாள்.

அபிமன்யு பத்து நிமிடங்கள் முயன்று இப்போதைக்கு திறக்க மாட்டாள் என்று தெரிந்து அங்கேயே வாசல் எதிரில் அமர்ந்து கொண்டான். பார்க்காமல் அவனால் போக முடியாது.

ஷ்ரத்தாவை பஸ்ஸில் இருந்து அவளின் கிளாஸ் மேட்டின் அம்மா இறக்கி விட.. வீடு வந்ததும்.. “நான் போகிறேன் ஆன்ட்டி” என்ற குழந்தையிடம்..

“எங்க வீட்ல இரு ஷ்ரத்தா” என

“இல்லை ஆன்ட்டி அங்க அந்த அக்கா இருப்பாங்க.. இல்லைனாலும் பக்கத்துக்கு வீட்ல இருப்பாங்க” என

அப்போதும் வாட்ச்மேனிடம் கேட்க.. அவர் பார்த்துக் கொள்வதாக சொல்ல, பிறகே அவர் விட்டுச் சென்றார்.

மேலே வந்த வாட்ச்மேன் இரண்டு வீடும் பூட்டி இருப்பதைப் பார்த்து, “கீழே இரும்மா!” என்று சொல்ல,

“இல்லை தாத்தா! நான் இங்க உட்கார்ந்து ஹோம் வொர்க் பண்ணறேன்” என்று சொல்லி அங்கே உட்கார்ந்து தான் செய்து கொண்டிருந்தாள். அப்படியே களைப்பில் உறங்கி விட, சிறிது நேரம் கழித்து வாட்ச்மேன் வந்த போது அவள் உறங்குவதைப் பார்த்து சென்று விட்டார்.

திரும்ப உறக்கம் கலைந்த போது.. இருட்டி விட.. ஸ்கூலில் இருந்து வந்த போதே உச்சா அர்ஜென்ட் தான் அவளிற்கு எங்கேயும் போக மனதில்லாமல் இருக்க… உறக்கத்தில் அப்படியே போய் விட.. அந்த இடத்தை விட்டு எழ முடியவில்லை, ஒரே ஷேம்மாக அவளுக்கு இருக்க..

அம்மாவை தவிர யாராவது வந்து விட்டாள் எப்படி அவர்களை எதிர்கொள்வது என்று அந்த பிஞ்சு பயந்து அமர்ந்திருந்த.. அந்த பயம், இருட்டு பயம், எல்லாம் சேர்ந்து ஒடுங்கி அமர்ந்திருந்தாள். அதுதான் அம்மா வந்ததும் வீல் என்று பயத்தில் கத்தி விட..

உள்ளே சென்றும் தேம்பல் நிற்க வில்லை.. “சாரி, சாரி பேபி” என்று அக்ஷரா சொன்ன போதும் அவளின் கழுத்தை அணைத்துப் பிடித்திருந்தவள் விடவே இல்லை.

அப்படியே படுக்கையில் படுக்க வைக்க.. “டிரஸ் எல்லாம் பண்ணிட்டேன்” என்று வேறு தேம்ப..

“இது ஒன்னுமில்லை மாத்திக்கலாம் ரூ”

“யாரவது வந்திருந்தா எனக்கு எவ்வளவு ஷேம் மம்மா!” என்று திரும்பவும் தேம்ப.. அக்ஷராவால் சமாளிக்க முடியவில்லை.. அவளால் சமாளிக்க முடியவில்லை என்பதையும் விட.. மகள் அமர்ந்திருந்த விதம் அவளால் முதலில் தேறிக் கொள்ள முடியவில்லை.  

வேறு யாராவது அறியாதவர் வந்து இருந்தால், வேறு ஏதாவது நடந்து இருந்தால், பேப்பர்களில் பார்க்கும் செய்திகள் எல்லாம் வேறு அப்போது ஞாபகம் வர..   மகள் முன் அழுதுவிடக் கூடாது. அவள் இன்னும் பயந்து விடுவாள் என்று முயன்று தைரியமாய் காட்டிக் கொண்டு இருந்தாள்.