அத்தியாயம் பன்னிரண்டு :
நிகிலுக்குள் சில போராட்டங்கள் என அக்ஷராவிற்கு புரிந்தது. ஆனாலும் இதில் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதாகத் தான் எண்ணம்.
வாழ்க்கை சரியாகும் என்ற ஒரு ஆசை மனதின் மூலையில் இருந்தாலும், நிகில் சொல்லாமல் கொள்ளாமல் சென்றதினால் அதை அழித்து இருந்தாள். சரியாக்க அவளும் எந்த முயற்சியும் எடுக்கும் எண்ணத்தில் இல்லை.
அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். ஆனால் அவள் தான் அழத் தயாரில்லையே. இந்த மனப்பான்மை தான் எல்லைகளை யோசனையின்றி கடக்க வைத்தது, இப்போதும் எந்த முயற்சியும் செய்யவில்லை.
நிகிலின் அறிந்த கலாச்சாரத்தில் இதெல்லாம் இல்லை. அதனால் அவனுக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் யோசித்து இருப்பான். ஆனால் தெரிந்தவள் அவனுக்கு புரிய வைக்க முயலவில்லை.
ஒரு சிறு முயர்சியும் எடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லாமல் தான் இருந்தாள். ஷ்ரத்தாவைப் பற்றிய கவலைகள் ஒரு அம்மாவாக இருந்தது. என்னால் என் பெண்ணிற்கு அப்பா இல்லாமல் இருக்கிறாரே என்ற ஒப்புக் கொள்ளும் தன்மையும் இருந்தது.
சரி செய்ய முயற்சி எடுக்க வேண்டும் தானே! இன்னும் அவள் அந்தப் பக்குவத்திற்கு வரவில்லை.
நிகில் கீழே அமர்ந்திருக்க, மெதுவாக அபின்யுவின் கை பிடித்து இறங்கியவள், நிகிலுக்கு மிகவும் பக்கமாக அமராமல் சற்று தள்ளி அமர்ந்தாள்.
திரும்பி அவளை பார்த்தவன், “ஏன் இங்க உட்காருர, கிளீன் பண்ணி டிரெஸ்ஸிங் பண்ணலையா?” என்று அவளின் காயத்தைக் கட்டினான்.
“அம்மா இப்போ வருவாங்க, போறோம்!” என்றவள், “உன் டிரஸ் அழுக்கா இருக்கு சேஞ் பண்ணிக்கோ!” என,
தலையசைத்தான், பேசவில்லை. திரும்ப அக்ஷராவும் பேச முயற்சிக்கவில்லை. ஆளாளுக்கு வந்து இருவரையும் பாராட்டி விட்டு செல்ல, ஷ்ரத்தா “லவ் யு மம்மா” என்று அவளின் கன்னத்தில் முத்தமிட,
வலுக்கட்டாயமாக திருமண நிகழ்வுகளை வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்த நிகிலை காட்டி, “நிக்கும் ஒன்னு குடுத்துடு!” என்றாள். “நீங்க தானே மம்மா யாரையும் கிஸ் பண்ணக் கூடாது, சொல்லியிருக்கீங்க” என்ற கேள்வியை ஷ்ரத்தா முன் வைக்க.
“நிக்கை பண்ணலாம், தப்பில்லை, போ!” என,
இதெல்லாம் நிகில் கவனிக்கவில்லை, மிகுந்த குழப்பத்தில் இருந்தான். ஷ்ரத்தா அவனின் அருகில் சென்றவள், “குனிங்க” என்பது போல சைகை காட்ட, அவன் எதற்கென்று புரியாத போதும் உடனே குனிய, அவனின் கழுத்தை கட்டிக் கொண்டு ஒரு அழுத்தமான முத்தத்தை கன்னத்தில் பதிக்க.. ஆதூரமாக அணைத்துக் கொண்டு “லவ் யு பேபி” என்றவன்,
“இப்போ எதுக்கு கிஸ்” என, “மம்மாக்கு குடுத்தேன், மம்மா உங்களுக்கு குடுக்க சொன்னாங்க” என,
“நான் யாருன்னு சொன்னாங்க” என்றான். அது நன்றாகவே அக்ஷராவிற்கு கேட்டது. அவனை பார்க்கவும், அவளை பார்க்காமல் ஷ்ரத்தாவைப் பார்த்தான்.
“நீங்க நிக், ஸ்மிரிதி அத்தையோட அண்ணா, எனக்குத் தெரியுமே!”
“ஸ்மிரிதி அத்தைக்கு அண்ணா! உனக்கு யாரு?”
“பேபி, பாட்டி எங்கேன்னு பாரு, நம்ம கிளம்பலாம்!” என்று ஷ்ரத்தாவிடம் சொல்லி, அந்த இடத்தில் இருந்து அகற்றினாள்.
“என்ன நிகில் பேச்சு இது, பேபி கிட்ட”
நிகில் அவளை முறைத்துப் பார்க்க, அதை கண்டு கொள்ளாமல் “பேபி கிட்ட நீ அப்பான்னு சொல்லணும்னா, நீ என் ஹஸ்பன்ட்ன்னு எல்லோருக்கும் சொல்லணும். நீ மேரேஜ் க்கு சம்மதிக்க மாட்ட, அப்போ எப்படி சொல்ல முடியும்?”
“எஸ், இப்பவும் என்னோட மைன்ட் செட்ல மேரேஜ் வரலை தான். ஐ அட்மிட். பட் நீ எப்போ என்கிட்டே அதை கேட்ட”
“நீ சம்மதிக்கவே மாட்டேன்றப்போ, நான் ஏன் கேட்கணும்?”
இந்தக் கேள்வியினால் அப்படி ஒரு கண்மண் தெரியாத கோபம் மீண்டும் கிளம்பியது. முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.
“ஷ்ரத்தா, உன்னோட பேபின்னு தெரிஞ்சவுடனே ஓடிப் போன. இப்போ ஏன் முகத்தை திருப்புற” என்றாள் அவளும் கோபமாக.
அங்கிருந்து எழுந்தவன், வரதராஜனிடம் சென்று “பா, நான் டிரஸ் சேஞ் பண்ணிட்டு வர்றேன்” என்று மண்டப வாயிலை நோக்கிப் போக, அபிமன்யுவிற்கு அவனைப் பார்ப்பதை விட என்ன வேலை, விரைந்து வந்தவன் “எங்கே போறீங்க?” என,
“டிரஸ் சேஞ் பண்ண” என, “நான் கூட்டிட்டுப் போறேன்” என்ற ஸ்ரத்தையாக சொல்லவும், “நான் பார்த்துக்கறேன் அபிமன்யு, அக்ஷரா கால்ல இருந்து ப்ளீட் ஆகுது, லேட் பண்ண வேண்டாம்! டேக் கேர் ஆஃப் ஹெர்” என்று சொல்ல,
இப்பொது ஷ்ரத்தா வந்தால் “எங்கே போறீங்க?” என்றபடி,
“ரூம்க்கு பேபி” என்று ஒரு முறுவலுடன் சொன்னவன், “என்னோட வர்றியா” என,
“ம்” என்றும் தலையாட்டி, “ம்கூம்” என்று தலையாட்டி, அவனை பார்த்து அம்மாவை பார்க்க, “அபி மாமாவை அம்மா கிட்ட சொல்ல சொல்லிடலாம்” என்று சொல்லிய போதும், “இருங்க” என்று அம்மாவிடம் ஓடி “நிக் கூப்பிடறாங்க, நான் போகட்டுமா” என்றாள்.
“வேண்டாம்” என்று சொல்ல வந்தவள், குழந்தையின் முகத்தில் இருந்த ஆவலை பார்த்து “போ” என,
அவனிடம் திரும்ப ஓடி “அம்மா போ சொல்லிட்டாங்க” என,
அவளின் கை பிடித்து நிகில் இறங்கிக் கொண்டே, “அவளைப் பாருங்க” என்று அபிமன்யுவிடம் அக்ஷரவை காட்டிச் சென்றான்.
அபிமன்யு பார்த்துக் கொண்டே தான் இருந்தான், அக்ஷரா ஏறிவிட்டாள் என்பதற்காக மட்டுமே, நிகில் மேலே ஏற ஆரம்பித்தான் என, “நான் கூட அப்படி மேலே ஏற வேண்டும் என்று நினைக்கவில்லையே, நட்பு என்ற ஒன்று மட்டும் இதை சாதியமாக்குமா.. ஆக்குமாய் இருக்கும்”
“ஆனாலும் இது அதையும் மீறிய ஒன்றாகத் தோன்றுகின்றதே” என்று நினைத்த போதே.. “அபி போகலாம்” என்றபடி துர்கா வர..
திரும்ப நிகிலும் ஷ்ரத்தாவும் வந்த போதும் அவர்கள் வந்திருக்கவில்லை. இவர்கள் வந்து சிறிது நேரம் கழித்து துர்காவும் அபிமன்யுவும் மட்டும் வந்தனர்.
“அம்மா எங்கே?” என்றவளிடம், “வீட்ல இருக்கா பேபி, நாளைக்கு காலையில வர்றேன்னு சொல்லிட்டா!” என்றார் துர்கா.
“ஏன்?” என்ற கேள்வியோடு நிகில் அபிமன்யுவை பார்க்க, “அந்தக் காயம் ரொம்ப ஆழமா இருக்கு, ஸ்டிச் போட்டிருக்கோம், வலிக்குது, வரலை, வீட்ல விடுங்கன்னு சொன்னா, விட்டுட்டு வந்துட்டோம்” என,
“ஓஹ்” என்று முடித்துக் கொண்டான். ஷ்ரத்தா துர்காவுடன் செல்ல, நிகிலும் தந்தைக்கு அருகில் இருந்து அவர் ஏதாவது சொன்னால் செய்ய ஆரம்பித்தான். ஆனால் முகத்தில் உற்சாகம் சிறிதும் இல்லை.
“ஏன் நிகில், லுக்கிங் டல்?” என அப்பாவும் அம்மாவும் கூட கேட்டனர், “நத்திங் பா! ஐ அம் ஃபைன்!” என்று முடித்துக் கொண்டான். சிறிது நேரத்தில் நிர்மலாவும் சந்தோஷும் அவனிடம் வந்து மீண்டும் “தேங்க்ஸ், தேங்க் யு வெரி மச்” என,
“இட்ஸ் ஓகே!” என்றான், இருவர் கையினிலும் குழந்தைகள், “அவர்களை விடேன்!” என்பது போல இருக்கமாகப் பிடித்திருந்தனர் .
“ஃப்ரீயா விடுங்க, பட் கவனமா பார்த்துக்கங்க, விளையாட விடுங்க இல்லை பயந்துக்குவாங்க!” என்றான். அவனே குழந்தைகளை வாங்கி கீழே இறக்கியும் விட்டு, “பேபி” என ஷ்ரத்தாவை அழைத்து “ப்ளே வித் தெம், டேக் கேர்!” என்று சொல்லவும் செய்தான்.
மீண்டும் அவர்கள் “தேங்க்ஸ்” என,
“இவ்வளவு தேங்க்ஸ் எனக்கு எதுக்கு? அக்ஷரா ஏறிட்டா, தடுமாறுரான்னு தான் நான் ஏறினேன், சோ, நீங்க இதை அவளுக்கு தான் சொல்லணும்” என்றான்.
“எஸ்”, அதை சந்தோஷ் உணர்ந்து இருந்தான், இப்போது நிகிலும் அதை தன் வார்த்தையாக உதிர்க்கவும், உங்களுக்கு அக்ஷராவை முன்னமே தெரியுமா?” என கேட்கவும் செய்தான்.
“எஸ், யு எஸ் ல” என,
“எனக்கு அக்ஷராவை அவ பிறந்ததுல இருந்து யு எஸ் போகற வரை நல்லாத் தெரியும், அவளோட இன்ச் பை இன்ச் தெரியும். ஐ ஃபீல் எ க்ளோஸ் நெஸ் பிட்வீன் யு போத், நீங்க அவ ஏறிட்டான்னு தான் ஏறினேன்னு சொல்றீங்க, அவ நீங்க மேல ஏறும் போது வேண்டாம் வேண்டாம்ன்னு கத்துறா, நீங்க திரும்ப அவ கிட்ட பேசும் போதும், ஒரு க்ளோஸ் நெஸ் ஐ ஃபெல்ட்” என நிறுத்தியவன்,
“நாங்க யாரும் பார்த்தது இல்லை. உங்களுக்கு அவ ஹஸ்பன்ட்டை தெரியுமா?” என்றவன், “இல்லை நீங்க தான் அவ ஹஸ்பன்ட்டா” என்றான் நிறுத்தி நிதானமாக.
என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை, நிகில் விழித்தான். இல்லை என்று எப்படி சொல்ல முடியும், ஆனால் அக்ஷரா என்ன சொல்லியிருக்கின்றாள் என்றும் தெரியவில்லை. அதனால் ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை.
யாரும் அக்ஷராவைத் தவறாக பேசுவதை நிகில் விரும்பவே மாட்டான். அதையும் விட ஷ்ரத்தா, அவளையும் விட்டுக் கொடுக்க முடியாது.
“நீங்க எப்பவும் அக்ஷராவை ஹர்ட் பண்ணிட்டே இருந்திருக்கீங்க. நான் இதுக்கு பதில் உங்க கிட்ட எப்படி சொல்ல முடியும்?” என்றவனிடம்,
“எஸ், ஹர்ட் பண்ணுவார். தப்பு தான்! ஆனா அக்காவும் ரொம்ப அலட்சியம் செய்வா, ஆனா அதுக்காக அவ கஷ்டப்படணும், நல்லா இருக்கக் கூடாதுன்னு எல்லாம் எப்பவும் நினைச்சது இல்லை” என்று சந்தோஷின் சார்பில் நிர்மலா பதில் சொல்ல,
“அது அவளோட நேச்சர். அவ சந்தோஷ் கிட்ட மட்டும் இல்லை, எல்லோர் கிட்டயும் அப்படிதான். ஆனா உங்க குழந்தைங்க மாட்டினப்போ ஏற முடியுமான்னு நீங்க ட்ரை கூட பண்ணலை, ட்ரகிங் அவளுக்கு சரியா வராது. எனக்கு தான் நல்லா வரும், சில சமயம் உயரமா போகும் போது தலை சுத்துது சொல்லுவா. அதனால் தான் அவளை நான் கீழ பார்க்க வேண்டாம் சொன்னேன். உடனே அவளுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு கூட யோசிக்காம ஏறினா இல்லையா?”
“அதுவும் ஷ்ரத்தா பத்திக் கூட கவலைப் படாம, அது எல்லோராலையும் முடியாது. எல்லோர் கிட்டயும் எல்லாம் நிறைகள் இருக்காது, குறைகள் இருக்கும். அவ அப்படிதான்!” என்று அக்ஷராவை சார்ந்து பேச..
“நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலை!” என்று சந்தோஷ் சொல்ல, “அக்ஷரா தான் இதுக்கு பதில் சொல்லணும், அது அவளோட பெர்சனல். அவ சொல்லாம நான் எதுவும் சொல்ல முடியாது” என்றான் ஸ்திரமாக.
“இல்லை” என்று சொல்லவில்லை என்று இருவருமே குறித்துக் கொண்டனர். “அண்ட் நாம பேசினதை நீங்க யார் கிட்டயும் சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன். அக்ஷராக்கு அது பிடிக்காது. அவளோட விஷயம் அவளைத் தவிர வேற யார் பேசினாலும் பிடிக்காது” என,
“எஸ்” என ஒப்புக் கொண்டு, “ட்ரஸ்ட் அஸ், கண்டிப்பா சொல்ல மாட்டோம்” என அவர்கள் விலகினர்.
எல்லாம் நிகிலுக்கு அருகில் இருந்த அபிமன்யு கேட்டு அதிர்ந்து அமர்ந்து இருந்தான். நிகிலுக்கு அவன் கேட்டுக் கொண்டு இருக்கின்றான் என்று தெரியும். அவனை மறைத்து தான் நிகில் இருந்தான். ஆனால் சந்தோஷும் நிர்மலாவும் அவனைக் கவனிக்கவில்லை.
திரும்ப நிகில் அபிமன்யுவை பார்க்க, “நான் கேட்டேன் நீங்க சொல்லலை” என்றான் சோர்வாக.
“இப்போ கூட நான் சொல்லலை. எதுன்னாலும் அக்ஷரா தான் சொல்லணும்” என்று சொல்லிப் போனான்.
“அப்படி ஒன்னும் இந்த நிகில் பார்த்தா கெட்டவன் மாதிரி தெரியலை. இன்னும் அக்கா பின்னாடி சுத்தற மாதிரி தான் தோணுது. அக்காவுக்கு ஏன் பிடிக்கலை?” என்ற யோசனை.
திரும்ப உணவருந்தும் நேரம் வந்துவிட, அந்த உபசரிப்பில் நேரம் கழிய, ஷ்ரத்தாவை தேடினான் நிகில், அவள் துர்காவுடன் தான் இருக்கவும், அருகில் வந்து துர்காவை பார்த்து புன்னகைத்தவாறே, “பேபி நீ சாப்பிட்டியா?” என,
“இல்லை” என்று அவள் தலையசைக்க,
“ஓஹ், வொய், கம், கம், பசிக்கும்!” என, அவனின் கை பிடித்துக் கொண்டாள். துர்கா அவனிடம் விளக்கம் சொன்னார் “நான் சொன்னேன், இவ வரலை, பசிக்கலை சொன்னா, இப்போ பசிக்குது சொல்றா!” என,
“அப்போ பசிக்கலை பாட்டி, இப்போ பசிக்குது!” என்று பாவனையாக சொண்ல்ல,
“ரெண்டு நிமிஷம் முன்ன தான் கேட்டேன்!” என்று இடுப்பில் கை வைத்து முறைக்க,
“ரெண்ண்டு நிமிஷம் ஆகிடுச்சு பாட்டி!” என்றாள் இழுத்து பாவனையாக.
“வாயாடி, போ!” என்று சம்மதம் சொல்ல, நிகிலோடு நடந்தாள்.
“நிகில்” என்று வரதராஜன் ஏதோ வேலை வைக்க, “நான் சாப்பிட்டு வர்றேன்” என்ற மகனிடம்,
“டேய், நம்ம ஹோஸ்ட் டா! எல்லோரும் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடணும். இன்னும் நிறைய பேர் சாப்பிடலை”
“ஐ நோ பா! பட், பேபிக்கு பசிக்குது!”
“அவளுக்கு பசிச்சா, அவ வீட்டு ஆளுங்க பார்க்கறாங்க! உனக்கென்ன?” என,
இதைக் கேட்ட ஷ்ரத்தாவிற்கு என்ன புரிந்ததோ? கையை உருவப் பார்க்க..
“ஷ், பேபி!” என அவளை அடக்கியவன், “ஷ்ரத்தாவை கையினில் தூக்கி, “இப்போவும் அதுதான் பா நடக்குது. அவ வீட்டு ஆளுங்க தான் பார்க்கறாங்க!” என்று சொல்லி நிகில் செல்ல..
“நான் என்ன சொல்றேன்? இவன் என்ன சொல்றான்?” என்று முதலில் கடுப்பானவர், பின்பு குழம்பிப் போனார்.
ஆனால் மகளின் திருமணம் முன் நிற்க, “நாளை பார்த்துக் கொள்ளலாம் இவனை” என்று மற்றவர்களை உபசரிக்க சென்றார்.