அத்தியாயம் பதினொன்று :
ஷ்ரத்தா ஓடி வந்து அக்ஷராவிடம் நிகில் சொன்னதை சொல்ல, அவளின் முகத்தில் ஒரு பிரதிபலிப்பும் இல்லை. முகம் இறுகி தான் இருந்தது. யாரையோ பற்றி கேட்கும் ஒரு பாவனை தான்.
ஷங்கரும் துர்காவும் ஷ்ரத்தா சொல்லியதைக் கேட்டு அக்ஷராவை பார்க்க, அவளின் சற்றும் பிரதிபலிப்பு இல்லாத ஒரு முகம் அவர்களுக்கு கவலையைக் கொடுத்தது. யாரையாவது இவளுக்கு பிடித்து விட்டால் பரவாயில்லை எனத் தோன்றியது.
அபிமன்யுவும் அக்காவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான், நிகில் சொல்லியதைக் கேட்டு அவளின் முகம் என்ன பாவனை காட்டுகின்றது என்று பார்க்க, அந்தோ பரிதாபம் புன்னகையுடன் இருந்த அபிமன்யுவின் முகம் புன்னகையை தொலைத்தது தான் மீதம்.
அக்ஷரா ஒரு இறுகிய முக பாவனையுடன் தான் இருந்தாள்.
அமெரிக்கவாசி, அதனால் திருமணமாகி பிரிந்தது நிகிலுக்கு பெரிய விஷயமாக இருக்காது. அக்ஷராவின் மீது அக்கறை கொண்டிருக்கின்றான். ஷ்ரத்தாவின் பாலும் அக்கறை காட்டுகின்றான். அவனுக்கு பிடித்து விட்டால் அக்ஷ்ராவின் வாழ்க்கை நன்றாக இருக்குமோ என்று நினைக்க,
அக்ஷரா நிகிலை பார்த்த பார்வையில் முற்றிலும் ஒரு அலட்சியம் தான் தெரிந்தது.
அம்மாவின் அருகில் நின்றிருந்த போதும் நிகிலும் அக்ஷராவின் இந்த பாவனையைக் கவனித்தான். அவளின் லகுவற்ற தன்மை புரிந்தது. யோசனையாக அவளைப் பார்த்து இருந்தான்.
உலகிலேயே மிகவும் கடினமான விஷயம் குழந்தை வளர்ப்பு என்பது தான் உண்மை. நெறி முறைகள் என்பது வாழ்க்கையைக் கட்டுப்படுத்த அல்ல வாழ்க்கையை சீராக கொண்டு செல்ல, வாழ்க்கையை ஒழுங்கு படுத்த. அதை விட்டு தளைகள் அவை என்ற எண்ணம் பதிந்து விட்டாள் மீறத் தான் தோன்றும், உடைக்கத் தான் தோன்றும்.
அப்படி தன்னுடைய வாழ்க்கையை தானே சிக்கலாக்கிக் கொண்ட பெண் அக்ஷரா. ஒரு இரண்டு வருட வாழ்க்கை, போகாத கரையாய் ஆகிவிட்டது. உடை என்றால் தூக்கி எரிந்து விடலாம். ஆனால் உடலிலும் ஒரு ஆறாத வடுவாய் நின்றும் விட்டது. மற்றவர்களிடம் இருந்து மறைக்கப் பட்டு விட்டாலும் அவளை அவள் மனம் விடாமல் கேள்வி கேட்க ஆரம்பித்து இருந்தது.
வெளியில் அதனைக் காட்டிக் கொள்ளா விட்டாலும் அது அவளை இந்த ஒரு வாரமாக தின்று கொன்று கொண்டு இருந்தது. நிகில் இங்கிருந்து சென்ற நாளாக, அதன் பொருட்டே யார் வந்தாலும் சென்றாலும் ஒன்றுமில்லை என்று காட்ட முயன்று இந்த பாவனை. அவளின் போராட்டங்கள் அவளோடு. ஆனால் பார்ப்பவர்களுக்கு திமிர் பிடித்தவள் என்ற பாவனையைக் காட்டும்.
அவளையும் விட ஷங்கரும் துர்காவும் அன்று ஏனோ மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். பரத்தின் திருமணம் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்க, அக்ஷராவிற்கு இப்படி எதுவும் செய்ய முடியவில்லையே எங்கு தவறி விட்டோம் என.
இதற்கு தங்கள் மகள் திருமணம் செய்து, பிடிக்காமல் வந்து விட்டால் என்ற நினைப்பில் தான் அதுவரை இருந்தனர். திருமணமற்ற ஒரு வாழ்வில் இருந்திருகின்றாள். இது அதன் மூலம் வந்த குழந்தை என்று தெரிந்தால் தாங்கவே மாட்டர். அந்த குற்ற உணர்வுமே ஒரு காரணமாக பெற்றோரிடம் இருந்து அவளைத் தள்ளி நிறுத்தி தனியாக இருக்க வைத்தது.
அதற்குள் இங்கே மேடையில் துர்காவையும் அவளையும் கூப்பிட, இருவரும் எழுந்து வந்தார்கள். அங்கே வீட்டின் பெண்பிள்ளையாக சந்தோஷின் அம்மா ஏதோ சடங்கு செய்வதற்காக எழுந்து வந்தவர்களை பார்த்து “நீங்க மட்டும் வாங்க அண்ணி” என்று துர்காவை மட்டும் அழைக்க,
துர்காவிற்கு மனது வருத்தமாகப் போய்விட்டது. “இல்லை, நீங்களே பண்ணிடுங்க” என்று அவர் நகரப் போக, பாட்டி அதனைப் பார்த்து “வா துர்கா” என அவரை ஒரு கண்டிப்போடு அழைக்க, “நீங்க போங்கம்மா” என்று அக்ஷரா சொல்ல, “இல்லை, நான் போக மாட்டேன் என் பொண்ணு வேண்டாம்னா நானும் வேண்டாம்” என்று அவர் நகர..
நிமிடத்தில் சூழ்நிலையில் ஒரு பதட்டம். எப்போதும் மாமியார் எது சொன்னாலும் தட்டாமல் செய்யும் துர்காவிற்கு இத்தனை பேர் முன் தன் பெண்ணை விட்டுக் கொடுக்க முடியவில்லை. கலங்கி நிற்க..
“மா, ப்ளீஸ்! நான் இது எல்லாம் மைன்ட் பண்ண மாட்டேன். உனக்கு தெரியும் தானே! நீ போ!” என வெகுவாக சமாதானம் செய்தாள். முகத்தில் சிறு கலக்கமும் இல்லை. “நீங்க எல்லாம் எனக்கு ஒரு ஆளா?” என்ற பாவனையோடு அத்தையையும் பாட்டியையும் பார்த்திருந்தாள். பாட்டிக்கும் அப்படி அக்ஷராவை தள்ளி நிறுத்தம் எண்ணமெல்லாம் இல்லை. பெண் சொல்வதால் தட்ட முடியாமல் நின்றார் .
“மா, என்ன ஆச்சு?” என்று நிகில் காவ்யாவிடம் கேட்க, “தெரியலை நிக், அக்ஷரா வேண்டாம்ன்னு சொல்றாங்க போல” என்றார் அவரும்.
ஷங்கர் கோபத்தில் மண்டபத்தை விட்டு வெளியேவே போகப் போனார். அபிமன்யு தான் “நல்லா இருக்காதுப்பா” என்று அவரை நிறுத்திக் கொண்டிருந்தான்.
துர்காவை ஒரு வழியாக அக்ஷரா அனுப்பி இருக்க, “பொண்ணு வீட்ல இருந்து மூணு பேர் வாங்கோ” என, வரதராஜனிடம் மெதுவாக “பா, அக்ஷராவை நம்ம வீட்டு சைட்ல இருந்து அனுப்புங்க” என்றான்.
“டேய் என்னடா நீ? அவங்களே வேண்டாம் சொல்றாங்க!” என வரதராஜன் சொல்ல,
“என்ன வேண்டாம்? மனுஷங்களுக்கு மரியாதை குடுக்க தெரியாதவங்க. இந்த வீட்ல நம்ம ஸ்மிரிதி எப்படி இருப்பா, அட்ராஷியஸ் பா, அண்ட்..” என நிறுத்தி, திரும்பி அவரை நேர் பார்வை பார்த்தவன், “ஷி இஸ் வெரி இம்பார்டன்ட் டு மீ” என்றான். அவங்க வீடு பத்தி எனக்கு கவலையில்லை, நாம அப்படி பண்ணக் கூடாது” என்றவனை,
“உனக்கு எவ்வளவு இம்பார்டன்ட்னாளும் இங்க அப்படியெல்லாம் நம்ம உரிமை எடுத்துக்க முடியாது நிக், அமைதியாயிரு. நீ யாரு அவளுக்கு, நீ பேசினா அப்படி ஒரு கேள்வி தான் வரும். அப்படி செய்ய முடியாது. இம்பார்டன்ட்ன்றது லைப்ல இருக்குற உறவுமுறைல காட்டணும். சும்மா வாய்ல சொல்றது எல்லாம் அப்ளிகபில் ஆகாது. நம்ம இருக்குற நாட்டுல சகஜமான விஷயங்கள் எல்லாம் இங்க ரொம்ப ரொம்ப பெரிய விஷயம். அக்சப்ட் பண்ண மாட்டாங்க. அதனால அக்ஷராவை நம்ம சைட்ல இருந்து எல்லாம் அனுப்ப முடியாது” என்று அவனுக்கு பொறுமையாக விளக்கம் கொடுத்து,
“நீ ஏன் டென்ஷன் ஆகற? பாரு! அக்ஷரா எவ்வளவு கூலா இருக்கான்னு. நீ இப்படி ஒரு எக்ஸ்ட்ரா இன்டரஸ்ட் அவ மேல காட்டினா அவளை தப்பா பேசுவாங்க” என சொல்ல, அது சற்று நிகிலை அமைதிப்படுத்தியது.
ஆம்! அக்ஷரா மிகவும் கூலாக இருந்தாள். எப்போதாவது அவள் ஒரு பயந்த பாவனை காட்டியிருந்தாலோ இல்லை கெஞ்சல் மொழி பேசியிருந்தாலோ பணிந்து போயிருந்தாலோ விட்டிருப்பர், சந்தோஷும் அவனின் அம்மாவும். “நானேல்லாம் உன்னை கல்யாணம் பண்ண முடியாது” என்ற பாவனையே சந்தோஷின் மனதில் ஒரு ஆறாத ரணமாக இருந்தது, அவளை சீண்டிக் கொண்டே இருக்க வைத்தது.
அவர்களை பார்க்கும் போது எப்போதும் கண்களில் தென்படும் அலட்சியமே அவர்களை அப்படி நடக்க வைக்கும். அவர்கள் ஒன்றும் கெட்டவர்கள் எல்லாம் கிடையாது. அக்ஷராவும் அவர்களிடம் அப்படி நடக்க வேண்டும் என்று வேண்டும் என்று செய்ய மாட்டாள். அது அவளின் இயல்பான குணம். அவளின் இயல்பே அதுதான்.
எல்லோரும் இந்த களேபாரத்தில் இருக்க, நிர்மலா இரண்டு வயது மகனை கையினில் வைத்து இருக்க, அவன் நழுவி தன் அக்காவிடம் சென்றதையோ, இருவருமாக அவர்களுக்கு மாடியில் ஒதுக்கப் பட்டிருந்த இருந்த ரூமிற்கு சென்றதையோ, உள்ளே இருந்த ஆட்டோமேடிக் லாக் கதவை தானாக பூட்டிக் கொண்டதையோ யாரும் அறியவில்லை.
அந்த சடங்கு முடிந்த பிறகு தான் நிர்மலா குழந்தைகளைத் தேட, அவர்களை காணோம் என்றதும் பதட்டமானவள் கணவனிடம் சொல்ல, தேட ஆரம்பித்தனர்.
அந்த இடம் பதட்டமாக ஆரம்பித்தது. மேல இருக்குற ரூம்க்கு போயிருப்பாங்களோ என வேகமாக அங்கே ஓட, அது சற்று கனமான கதவாக இருக்க, இவர்கள் தட்டியதும் அங்கிருந்து பிஞ்சு திரும்ப தட்டினாலும் இவர்களுக்கு கேட்கவில்லை. ஆனால் சின்ன குழந்தை பயத்தில் சத்தமாக அழ அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்று உறுதியானது.
குழந்தைகள் அழ அழ இன்னும் பதட்டம் அதிகமானது.
“சாவி எங்கே?” என
“உள்ள தான் இருக்கு! எனக்கு ஞாபகம் இருக்கு!” என நிர்மலா சொல்ல, ஆளாளுக்கு அவளைத் திட்ட ஆரம்பித்தனர். மண்டப மேனேஜரிடம் இன்னொரு சாவி கேட்க, “சர், போன கல்யாணம் நடந்தப்போ ஒரு சாவி மிஸ் ஆகிடுச்சு. ஒன்னு தான் இருக்கு. இனிமே தான் செய்யணும்” என,
“கதவை எதுக்கு நீ பூட்டாம திறந்து வெச்சு வந்தே” என நிர்மலாவை எல்லோரும் ஏகமாக குறை சொல்ல, நிர்மலா அழ ஆரம்பிக்க, கதவை உடைக்கலாம் என அபிமன்யு சொல்ல..
“வேண்டாம் அபிமன்யு, கதவுக்கு பின்னாடி குழந்தைங்க இருந்த அவங்க மேல விழும் இல்லை படும் டேஞ்சர்” என்றார் ஷங்கர்.
“ரூம்க்கு பின்னால் பால்கனி இருக்கு” என, அங்கே ஏற முடியுமா என சில பேர் வெளியே ஓடி பார்த்தனர். நிகிலும் அக்ஷராவும் அபிமன்யுவும் சென்றனர்.
ஒரு பால்கனி இருந்தது, ஆனால் அதுவும் மிக உயரத்தில் ஏறுவதற்கு பிடிப்பும் பெரிதாக இல்லை, ஆங்காங்கே சுவரில் புள்ளி புள்ளிகளாய் சிறு தடிப்புகள் இருந்தது. ஏறுவதில் தேர்ந்தவர்களால் மட்டுமே ஏற முடியும். ஏறினாலும் பால்கனி உள் குதிப்பதும் சிரமம்.
உடனே தீயணைப்பு துறைக்கு போன் செய்தனர். அதற்குள் அக்ஷரா துப்பட்டாவை எடுத்து குறுக்காக கட்டி இருந்தாள். அதுவே சொன்னது ஏறப் போகிறாள் என்று.
“அக்கா முடியுமா?’ என்று அபிமன்யு பதற, “ஏறுவேன்” என்ற படி அவள் ஏற ஆரம்பிக்க, “இரு நான் போறேன்” என்று அவளைத் தடுத்தான் நிகில். அதுவும் அவள் ஏறுகிறாளே என்பதற்காக.
இருவருக்குமே பால்கனி ஏறிக் குதிப்பதும் விருப்பமான ஒன்று. நிகிலுக்கு ட்ரக்கிங்ல் பல வருட தேர்ச்சியும் கூட, அவனோடு சில மாதங்கள் அக்ஷராவும் பயின்று இருக்கின்றாள்.
“வேண்டாம் நிகில், உனக்கு அதுல கால் விரல் வைக்க ஸ்பேஸ் குறைவு. ட்ரஸ்ட் மீ! நான் ரீச் பண்ணுவேன்!” என்று அவனிடம் சமாதான வார்த்தைகள் கூற,
“வேண்டாம், வேண்டாம், இப்போ ஃபயர் ஸ்டேஷன்ல இருந்து வந்துடுவாங்க” என்றார் ஷங்கர்.
“அப்பா, எப்படியும் பதினஞ்சு நிமிஷமாவது ஆகும்… குழந்தைங்க பயந்துடுவாங்க பா. நான் போய்டுவேன்” என்ற படி நொடியும் தாமதிக்காது ஏற ஆரம்பித்தாள். உயரம் அதிகம், ஏற ஏற அவளுக்கு எப்படியோ கீழிருந்தவர்களுக்கு இதயத் துடிப்பு எகிறியது.
“மம்மா” என்று கத்தப் போன ஷ்ராத்தவை நொடியில் சுதாரித்து கத்த விடாமல் நிகில் வாய் பொத்தி, “இவளை தூக்கி உள்ள போ அபிமன்யு” என,
அங்கிருந்த பால்கனி ஏறும் போது இன்னும் தடுமாறியது.. அங்கு நீட்டியிருந்த ஒரு கம்பி வேறு காலை குத்திக் கிழித்தது.
“பார்த்து, பார்த்து” என்று கீழிருந்து ஆளுக்கு ஆள் கத்த, அவளை ஏற விட்ட முட்டாள்தனத்தை எண்ணி நொந்த நிகில், சில மாதங்களாக எந்த பயிற்சியும் இல்லாததால் யோசித்து தான் நின்றான். அதுவும் அக்ஷரா டேக் வான்டோ சேம்பியன் என்பதால் பயிற்சி இருக்கும் என நினைத்தான்.
அதுவுமில்லாமல் உபகரணங்களோடு ஏறுவது வேறு, இல்லாமல் ஏறுவது வேறு. அக்ஷரா எப்போதும் அதைப் போல ரிஸ்க் எடுப்பாள். நிகில் எடுக்கவே மாட்டான்.
ஆனால் என்னவோ அவள் தடுமாறுவது போலத் தோன்ற, யோசியாது அவனும் ஏற ஆரம்பித்தான். அவன் ஏறுவதைப் பார்த்து, “நீ வேண்டாம், போ! போ!” என்று கத்த, “நீ இங்க பார்க்காதே, மேல பார், கீழ பார்க்காதே!” என்று கத்தினான். முதல் சில அடிகள் தடுமாறினாலும் வருடக் கணக்காக எடுத்த பயிற்சி கை கொடுக்க, அக்ஷராவை விட நன்றாகவும் விரைவாகவும் ஏறினான்.
இதுக்கு முதல்ல இவரே ஏறியிருக்கலாம் என்று சிலர் முணுமுணுத்தனர். தங்களுக்கு பிரியமானவர்கள் என்றால் அது தனி யாருக்கும், அப்போதுதான் ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என புரியவில்லை. எல்லாம் சில நிமிடங்களே,
“தாண்டிடு அக்ஷி, உன்னால முடியும், அங்க கால் வை” என்று சிலது சொல்ல, எப்படியோ தண்டி குத்தித்து விட்டாள்.. ஆனாலும் சிரமமாகிப் போயிற்று. நிகில் எதுவும் சிரமம் இன்றி சுலபமாக தாண்டி இருந்தான்.
இருவரும் கவனிக்க நேரம் அற்று, குழந்தைகளை அங்கிருந்த ஜன்னல் வழியாகப் பார்க்க, அவர்கள் அந்த கதவுக்கு அருகில் நின்று, அழுது கொண்டிருந்தனர், பார்த்தவர்களுக்கு உருகிப் போயிற்று. ஆனால் பால்கனி கதவும் தாளிட்டு இருக்க, கதவை திறக்க முடியவில்லை, உடைக்கவும் முடியவில்லை. அதனால் ஸ்லைடிங் டோர் இருந்த ஜன்னலை உடைத்தனர். அக்ஷரா உள்ளே சிரமப் பட்டு போய் பால்கனி கதவை திறக்க, பின்பு நிகிலும் உள்ளே வர, ஆளுக்கு ஒரு குழந்தையை தூக்கி சாவியை தேடி கதவைத் திறந்தனர்.
நிர்மலா கதவு திறந்தது கூட தெரியாமல் தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்க, “சித்தி, அம்மா, பாப்பாவை தூக்கிட்டு வந்துட்டாங்க!” என்று ஷ்ரத்தா சொன்ன பிறகு தான் சுற்றம் உரைக்க, அப்படியே சரிந்து அமர்ந்து இன்னும் அதிகமாக அழத் துவங்கினாள்.
நிர்மலாவின் அம்மாவும், துர்காவும், “குழந்தைங்க வந்துட்டாங்க!” நிர்மலா என்று அவளை தேற்றி சமாதானம் செய்து குழந்தைகளை அவளிடம் விட்டு “அழாத குழந்தைகளை சமாதானம் செய்” என சொல்ல,
அதற்குள் ஷ்ரத்தா ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டாள். அவள் டேக் வான்டோ கற்றதற்கு என்றுமே ஒப்புதல் இல்லாத பாட்டி கூட, அக்ஷராவிடம் வந்து, “நல்ல வேலை செஞ்சடி அக்ஷி” என,
“நீதான் என்னை எப்பவும் அங்க ஏறுரேன் இங்க எறுரேன்னு திட்டுவ, இப்போ பார்த்தியா” என்று அக்ஷரா சொல்லி, “நான் கொஞ்சம் தான் செஞ்சேன் பாட்டி, இவர் தான் நிறையப் பண்ணினார்” என நிகிலை காட்ட,
“ஆமாம், இருந்த கொஞ்சம் கேப்ல நான் தான் உள்ள குதிச்சேனா?” என்று சொல்லி, “இல்லை பாட்டி, இவ தான் உள்ள குதிச்சா!” என்றான். “ஹேய் அண்ணா, வொண்டர்புல் ஜாப்” என்றபடி ஸ்மிரிதி வந்து நிகிலின் கை பிடித்துக் கொள்ள, பாட்டியிடம் கல்யாண வேலை ஆரம்பிக்கலாமே என்றான் பொறுப்புள்ள அண்ணனாக, திரும்ப நிகழ்வுகள் ஆரம்பிக்க..
சந்தோஷ் தான் சிறுமைப்பட்டு நின்றிருந்தான்.. “நான் எப்போதும் இவளை வார்த்தைகளால் காயப்படுத்திக் கொண்டிருக்க, இவள் சற்றும் யோசிக்காமல் என் குழந்தைகளுக்காக எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கின்றாள்” என்று பார்த்தபடி நின்றான்.
“தேங்க்ஸ் அக்கா!” என்று நிர்மலா குழந்தைங்களை அணைத்தபடி சொல்ல, “எனக்கு தேங்க்ஸா, நீயும் உன் வீட்டுக்காரர் மாதிரி லூசு ஆகிட்டியா, போடி!” என்றவள், “முதல்ல குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடு!” என்றாள் அக்கறையாக..
“தேங்க் யு அக்ஷரா!” என்று அத்தை வந்து கை பிடித்து நன்றி சொல்ல, “இட்ஸ் ஓகே அத்தை” என்று அவரிடம் இருந்து நழுவி விட்டாள். அவருக்கு மேலே பேச வாய்ப்பே கொடுக்கவில்லை.
தயங்கி தயங்கி நின்ற சந்தோஷிடம் சென்ற நிகில், “சாரி, உங்க பொண்ணு பெரிய பொண்ணு. ஆனாலும் கைல தூக்கிட்டேன்!” என்று அவன் பேசியதற்கு பதிலடி கொடுக்க,
என்ன விஷயம் என்று தெரியாத போதும், “அவனை எதுக்கு இப்போ நீ பேசற” என்று அக்ஷரா பேச, “இவர் எப்போவும் உன்னை பேசுவாறாமே பேபி சொன்னா!” என நிகில் சொல்ல,
“அவன் என்னோட கசின். என்னை பேசுவான், பேச மாட்டான். அதுக்காக நீ அவனை பேசக் கூடாது, புரிஞ்சதா! சொல்லப் போனா அவனை விட நான் அவனை இன்னும் பேசுவேன்!” என்று சொல்ல,
சந்தோஷிற்கு கண்கள் கலங்கிவிட்டது, “தேங்க்ஸ்” என, “அப்பான்னு உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? நிர்மலா தான் எப்பவும் குழந்தைங்களைப் பார்த்துக்கறா. இந்த மாதிரி ஃபங்கஷன் வீட்ல கூட குழந்தைங்க மேல ஒரு கண்ணு வைக்க மாட்டியா, பால்கனி இருந்தது ஓகே, இல்லைன்னா என்ன பண்ணியிருப்போம்”
“எல்லோரும் நிர்மலாவை திட்டுறீங்க” என்று சந்தோஷை திட்ட, அவனுக்கு அந்த திட்டெல்லாம் உறைக்கவேயில்லை, நிகிலை பார்த்து “தேங்க்ஸ்” என சொல்ல,
“போ, முதல்ல போ, நிர்மலாவை பாரு!” என்று சந்தோஷை அனுப்பியவள், திரும்ப நிகிலை பார்க்க, அவனின் முகம் சீரியசாக இருந்தது. பார்வையும் ஷங்கரிடம் இருந்த ஷ்ராத்தவை தழுவி இருந்தது.
ஷங்கர் அப்போது தான் மகளின் காலில் இருந்து ரத்தம் வருவதை பார்த்து “கீறிடிச்சு போல அக்ஷி” என பதற,
“சரியாகிடும் பா” என்றாள்.
அதற்குள் துர்கா கீழே குனிந்து மகளின் பாதத்தின் பக்கவாட்டில் இருந்த காயத்தைப் பார்த்தவர், “கிளீன் பண்ணனும், பேண்டேஜ் போடணும், ஒரு டி டி இஞ்சக்ஷன் போடணும், வா வா ஹாஸ்பிடல் போய் வரலாம்” என்றார்.
மாறி மாறி அவளை கவனிக்க, அவளின் பார்வை நிகிலை தழுவி மீள, “மம்மா, ரத்தம்” என்று பாட்டியுடன் அமர்ந்து அவளின் காலை பார்த்துக் கொண்டிருந்த ஷ்ரத்தாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
சந்தோஷை பார்த்து “அப்பான்னு உனக்கு கொஞ்சமாவது பொறுப்பிருக்கா” என்று அக்ஷரா கேட்ட வார்த்தைகள் தான் நிகிலின் காதில் ரீங்கரமிட்டது.
“நான் என்ன பண்ணனும்? நான் இனிமே எப்படி நடந்துக்கணும்? அம் ஐ பிட் டு பீ எ ஃபாதர் ஷ்ரத்தாக்கு தெரிய வரும் போது குழந்தை எப்படி அக்ஸப்ட் பண்ணுவா, வில் ஐ பீ ஏபில் டு ஸ்டிக் டு எ ரிலேஷன்ஷிப் அகைன்” என்ற யோசனை தான். அப்போதும் திருமணம் என்ற ஒன்று அவனின் மனதினில் ஓடவில்லை.
திரும்பி மெதுவாக மாடிப் படியில் இருந்து இறங்க ஆரம்பித்தான்.