அத்தியாயம் பத்து :

ஆனால் போனவனை என்ன செய்ய முடியும்.. மனதால் மிகவும் சோர்ந்து போனாள். தெளிவான தைரியமான பெண் தான், அதனால் தான் பிரிந்த பிறகும் அதன் சுவடுகள் இல்லாமல் இருந்தாள். ஆனால் இப்போது நிகிலை பார்த்த பிறகு அப்படி இருக்க முடியவில்லை. 

நிகிலை பார்க்கும் வரை ஒன்றும் தெரியவில்லை… பார்த்த பிறகு இவனோடான என் வாழ்வு நன்றாக இருந்திருக்க கூடாதா என ஏங்கியது. யாரும் தேவையில்லை என நினைத்திருந்த மனம் அவனை பார்த்த பிறகு வேண்டும் வேண்டும் என்றது. தள்ளி தள்ளி தான் நிறுத்தினால், ஆனாலும் இந்த இரண்டு நாட்களில் அவன் காட்டிய அக்கரையிலேயே திரும்பவும் மனம் வீழ்ந்து விட்டது.   

இவனுக்கு ஏன் திருமணத்தில் நாட்டமில்லாமல் போனது? எங்களுக்குள் இருந்தது என்ன காதலா? இல்லை வெறும் ஈர்ப்பு மட்டும் தானா?

வேறு திருமணம் பற்றி சில முறை யோசித்தும் இருக்கின்றாள். ஆனால் உண்மையில் யாரையும் பிடிக்கவில்லை. நிகிலின் இடத்தில யாரோடும் பொருந்திப் பார்க்க முடியவில்லை.

யாரவது சாதாரணமாக அருகில் நின்றால் கூட இரண்டடி தானாக பின்னடைந்து விடுவாள். இப்போது தனிமை பலமாகத் தாக்கியது. நிகிலை பார்த்தவுடன் அவனோடு இருந்த நாட்கள் கண் முன் விரிய, அதனை முன்னிட்டே அவனை வெகுவாகத் தள்ளி நிறுத்தினாள்.

ஆனால் எப்படியும் போகும்முன் ஷ்ரத்தா தன் மகள் என்று கண்டு கொள்வான் என்று நினைத்தாள். அப்போதும் சண்டை போடுவான், திரும்பவும் சேருவதற்கு ஏதாவது சிறு வாய்ப்பு இருக்குமா என மனம் ஒரு மூலையில் ஒரு ஆசை வைத்திருக்க எல்லாம் முடிந்தது!

அதுவும் காலையில் சந்தோஷ் திரும்பவும் “என்னை கல்யாணம் பண்ணி இருக்கலாம் தானே, விடியக் காலையில குழந்தையை தனியா தூக்கிட்டு போனியாமே” என சொல்ல,

“மரியாதையா வெளில போயிடு, இல்லை இந்த ரூம்ல இருந்து உன்னை யாராவது தூக்கிட்டு போற நிலைமைக்கு கொண்டு வந்துடுவேன்” என அசால்டாக கையைக் கட்டியபடி சொல்ல..  

“இந்த திமிர் தானே எனக்கு எப்பவுமே பிடிச்சது, குழந்தையிருந்தாலும் பரவாயில்லை கல்யாணம் பண்ணிக்கறேன்னு தானே சொன்னேன். ஏன் வேண்டாம்னு சொன்ன?” என்று ஒரு வருத்தமான குரலில் அவன் கேட்கவும்,

“ஐயோ” என்றானது.. “பைத்தியக்காரனா நீ! இப்படி பேசறது தெரிஞ்சா நிர்மலா வருத்தப்படுவா!” என்றாள். கூடவே வளர்ந்தவன் என்பதால் ஓரளவிற்கு மேல் அவளாலும் சந்தோஷை காயப்படுத்த முடியாது. எப்படியோ போய் தொலைகிறான் என்று ஒதுங்கத் தான் தோன்றியது.   

“அவளுக்கு தெரியும்!” என்றபடி அவன் போக.. “ஐயோ! எப்படி தான் நிர்மலா இவனுடன் இருக்கின்றாளோ” என்று தான் தோன்றியது.

ஆனாலும் சந்தோஷ் முன் பாருடா என் துணையை என்று நிகிலை காட்ட மனம் விழைந்தது. ஆனால் வாய்ப்பே இல்லை இனி, ஷ்ரத்தா தன் குழந்தை எனத் தெரிந்தும் சென்று விட்டானா?

என்னுடைய செய்கையால் என் மகள் தகப்பன் என்ற ஒருவன் இல்லாமல் இருப்பதா.. வேண்டுமென்றே ஷ்ரத்தாவின் முன் அவனின் குழந்தைகளை சந்தோஷ் கொஞ்சிக் கொண்டே திரிவான். அவளுக்குள் தகப்பன் இல்லாத ஏக்கத்தை புகுத்த வேண்டும் என்று.

அதனாலேயே வீட்டிற்கும் செல்ல மாட்டாள். இவள் வந்தது தெரிந்தால் ஏதாவது சாக்கிட்டு நிர்மலாவை அழைத்துக் கொண்டு அங்கே வந்து விடுவான். எங்கேயும் விஷேஷதிற்கும் செல்ல மாட்டாள்.

ஷ்ரத்தா புத்திசாலிக் குழந்தை.. “எனக்கும் அப்பாக்கும் சண்டை, அதனால பிரிஞ்சிட்டோம். மம்மாக்கு பப்பா வேண்டாம். உனக்கு யாருன்னு காட்டவா?” என்றவளிடம், “மம்மாக்கு வேண்டாம்னா எனக்கும் வேண்டாம்!” என்றது குழந்தை.

அம்மாவின் முகம் பார்த்து நடக்கும் குழந்தை. அதுதான் வருத்தம் இன்னும் அவளுக்குள் பிரவாகமாகப் பொங்கியது.

“பேபி, தனியா விட்டுட்டேன்னு அம்மா மேல கோபமா?” எனக் கண்களில் நீரோடு கேட்க,

“அச்சோ! இல்லைம்மா, நீங்க வேணும்னு என்னை தனியா விட மாட்டீங்க!” என்று கண்களை துடைத்த ஷ்ரத்தாவிடம்,

“அம்மா விடலை ரூ பேபி, மாமா தான் விட்டுட்டேன். அம்மா என்கிட்டே தான் சொன்னாங்க!” என,

“அதானே பார்த்தேன்!” என்று அவள் இடுப்பில் கைவைத்து ஷ்ரத்தா முறைக்க,

“சாரி, சாரி” என்றான் குழந்தை முன் மண்டியிட்டு அபிமன்யு,

“இனிமே இப்படி பண்ணக் கூடாது, ஓகே!” என்று பெரிய மனுஷியாக அவள் சொல்ல.. “ஓகே” என்ற அபிமன்யுவிடம், “நீ பார்த்துக்கோ அபி, நான் தூங்கறேன், நீ நான் முழிச்ச பிறகு வீட்டுக்குப் போ!” என்று உள் சென்று படுக்கப் போக,

“சாப்பிடிட்டு போ!” என்றான், உணவை அவனே எடுத்து வந்திருந்தான்.. எதோ அவன் வைத்துக் கொடுக்க என்ன வென்று தெரியாமல் கூட உள் தள்ளினாள்.

“சாரி அக்கா! இவ்வளவு அப்செட்டா இருக்காதே! இனி இந்த மாதிரி எப்பவும் நடக்காது! ஐ அம் சாரி!” என்றான்.

“இட்ஸ் ஓகே, விடு தெரிஞ்சா செஞ்ச” என்று அவனையும் சமாதானம் செய்து படுக்கப் போக.. “நீ தூங்கு! ஷ்ரத்தாக்கு தூக்கம் வந்தா உன் பக்கத்துல விட்டுடறேன்.. நான் இங்க தான் இருப்பேன், நாளைக்கு காலையில போறேன்!” என.. ஒரு தலையசைப்போடு உள்ளே சென்று விட்டாள். 

அவளுக்கு சற்றும் குறையாத மனப் போராட்டங்களோடு நிகிலும் பயணித்துக் கொண்டிருந்தான்.   

எதிர்பாராதது ஷ்ரத்தா அவனின் குழந்தை என்பது.. எப்படி, எப்படி தன்னிடம் மறைக்கலாம் என்ற கண்மண் தெரியாத கோபம். அங்கே இருந்தால் இருக்கும் கோபத்திற்கு ஏதாவது செய்து விடுவோம், அக்ஷராவிற்கு தலையிரக்கமாய் ஆகிவிடக் கூடாது என்று தான் கிளம்பிவிட்டான்.

அம்மாவிடமும் ஸ்மிரிதியிடமும் அமெரிக்கா போவதாக சொல்லியிருக்க, அப்பாவிடம் மட்டும் மும்பை எனச் சொல்லி வந்திருந்தான்.  அவனுக்கு அவனே தேறிக் கொள்ள வேண்டி இருந்தது, சமாதானம் செய்து கொள்ள வேண்டி இருந்தது. திடீரென்று முளைத்த அந்த உறவை ஒத்துக் கொள்ள மனதளவில் தயாராக வேண்டி இருந்தது.  

“ஏன்?” என்றவரிடம், “வந்து பேசுகின்றேன்” என சொல்லி வந்திருந்தான். 

அங்கே தான் மும்பையில் அவனின் ஜூனியர் ஒருவன் இருக்க, இவன் இந்தியா வருவது தெரிந்து தான் வந்து பார்ப்பதாகச் சொல்ல, நான் அங்கே வருகிறேன் என்று சொல்லி கிளம்பியிருந்தான்.

ஃபிளைட் லேண்ட் ஆகவும், இவனை எதிர்பார்த்து காத்திருந்த ஜூனியர், “வெல்கம் நிகில்” என்று அவ்வளவு மகிழ்வாக வரவேற்றான். “இட்ஸ் எ வெரி பிக் சர்பரைஸ்” என,

அவனுடன் பேசிக் கொண்டே நடந்தான். ஆனாலும் எண்ணங்கள் முழுக்க அக்ஷராவை சுற்றியே. “அப்போது இருந்து தனியாகத்தான் இருக்கின்றாள் போல, ஏன்? ஏன் இப்படி செய்ய வேண்டும், நான் ஒன்றும் உன்னையே நினைத்திருக்க மாட்டேன், எனக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொள்வேன்” என்று அவ்வளவு ஸ்திரமாகப் பேசி வந்தாள், இப்போது என்ன செய்திருக்கிறாள்.      

மனம் மிகவும் வருத்தமாக உணர்ந்தது. “இந்த உறவினால் என்னிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அக்ஷரா.. அவளை விடு! அவளாவது தெரிந்து செய்தாள்! ஷ்ரத்தா, அவள் என்ன தவறு செய்தால்.. என் குழந்தையையே முட்டாள் தனமாக உன் குழந்தையும் என் குழந்தை போல தான் என சொல்லி வந்திருக்கின்றேன். என்ன சொல்ல?”

“யு ஆர் லுக்கிங் டிஸ்டர்ப்ட். வாஸ் தி ட்ரேவல் கம்ஃபர்டபில்”

“எஸ், எஸ்” என்று நினைவை விடுத்து பேச்சில் கலந்தான்.  அவனின் ஜூனியர் பார்க்க வேண்டும் என்று சொன்னது, சில காம்ப்ளிகேட்டட் கேஸ்களை பார்த்து ஒபினியன் சொல்ல..

நிகிலின் வயதிற்கு அவனின் அனுபவம் அதிகம் தான்.. முழுநேர மருத்துவன். மிக இயற்கையாக சிலருக்கு வரும். அப்படி ஒரு ஆளுனன் அந்தத் துறையில். மிகவும் சரியாக கணிப்பான். செய்த அறுவை சிகிச்சைகளில் தோல்வி ஆனது வெகு சில மட்டுமே. அதுவும் தோல்வியாகும் என தெரிந்தே ஒரு வாய்ப்பாக செய்வான்.

அதாவது எண்ணங்கள் எப்போதும் அதில் மட்டுமே உழலும் அக்ஷராவைப் பிரிந்த நாளாக.. அவன்! நோயாளிகள்! மருத்துவம்! இது மட்டுமே அவன்! அதில் ஈடுபாடும் அதிகம். ஆம்! தன் கவனத்தை சிதறடிக்கின்றால் என்பது தான் நிகிலின் தரப்பில் அக்ஷ்ராவை பிரிய முக்கிய காரணம்.

அங்கிருந்த ஒரு வாரமும் மூன்று சர்ஜரி செய்தான்.. அதனால் கவனம் வேறு எதிலும் செல்ல விட வில்லை. அப்பாவிடம் மட்டும் திரும்பவும் அங்கே மும்பையில் இருப்பதை சொல்லி, சில முக்கிய கேஸ்கள் அதனால் அங்கே இருக்கின்றேன் என்று சொல்லி, தங்கையின் திருமண நிகழ்வுகளையும் கேட்டுக் கொண்டான்.  

“ஸ்மிரிதி கல்யாணம் நிகில், நீ இப்படி பண்றது சரியில்லை!” என்று அவர் சொல்ல,

“கல்யாணத்துக்கு வரலாம்ன்ற ஐடியால தான் இருக்கேன்.. நீங்க இப்படி பேசினா வரவே மாட்டேன்” என்றான் ஸ்ட்ரிக்டாக.  

அதற்கு பிறகு அவர் ஏன் பேசப் போகிறார்.. அப்படியே அமைதியாகி விட்டார். ஸ்மிரிதியிடம் “கல்யாணத்துக்கு வந்துடுவான்” என்று சமாதனம் செய்து வைத்திருந்தார்.

திருமணதிற்கு முந்தைய நாள் சென்னை வந்தவன், அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு செல்லாமல் ஹோட்டலில் தங்கி, நேராக மண்டபத்திற்கு தான் வந்தான். அக்ஷராவை பார்க்கவே விருப்பமில்லை, ஏன் இப்படி செய்தால் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்ற கோபம் கனன்று கொண்டே இருந்தது. ஆனாலும் மனது சொன்னது “உனக்கு என்ன அதனால நஷ்டம்! தனியாக எவ்வளவு தாங்கியிருக்கின்றாளோ” என. 

அதையும் விட ஷ்ராத்தாவை எதிர் கொள்ள ஒரு பயம், ஒரு தயக்கம். அப்பா என்ற ஸ்தானம் மிகப் பெரியது, அக்ஷரா என்ன சொல்லி வைத்திருகின்றால் என்று தெரியவில்லை.. எப்படி ஷ்ரத்தாவிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற குழப்பம் கூட. ஒரு தகப்பனாக என்ன செய்ய வேண்டும்? என்னால் முடியுமா? கோபமாக வந்தது.

மண்டபம் சென்றால் அங்கே சடங்குகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்க, காவ்யாவும் வரதராஜனும் இவனைப் பார்த்ததும் அருகில் வந்து “கேட்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை, கல்யாணம் முடியற வரை போயிடாதடா. பாரு, அத்தை, மாமா, மாமி, எல்லோரும் இருக்காங்க என்று சொல்லி அவர்களின் பக்க உறவுகளிடம் அவனை அழைத்து சென்று அறிமுகப்படுத்தினர்.

அவர்களோடு பேசிக் கொண்டு இருந்தாலும் கண்கள் அக்ஷ்ராவையும் ஷ்ரத்தாவையும் தேடி மண்டபத்தை அலசியது.

ஸ்மிரிதி சடங்குகளில் இருந்ததால், அவளிடம் தான் வந்துவிட்டேன் என்று சொல்ல, அருகில் சென்றான்.

“நிக்! எப்போ வந்தே?” என்று முகம் மலர்ந்தவள், “வாஸ் மிஸ்ஸிங் யு பேட்லி, கல்யாணம் முடியற வரை இருப்ப தானே!” “இருப்பேன்” என்பது போல தலையசைத்தான். பரத்தின் கையை பற்றி சிநேகமாகக் குலுக்கினான்.

அப்போது அக்ஷரா வீட்டின் பெரியவர்கள் பாட்டியும் தாத்தாவும் இருக்க, அவர்களிடம் “என் அண்ணன்” என்று அறிமுகப்படுத்தினாள் ஸ்மிரிதி. நிகிலின் காதிலும் “இவர்கள் தான் இந்த குடும்பத்தின் தலைவர்கள். இவர்கள் சொல்படி தான் எல்லாம்!” என்றும் போட்டு வைத்தாள். அவனுக்கு அப்போதைக்கு தன் தங்கை வாழப் போகும் வீடு என்பதால் அவர்களை அலசினான்.

அவர்கள் என்ன செய்கிறான் என்று கேட்டு பேச ஆரம்பிக்க, அவர்களின் கேள்விகளில் நொந்தே விட்டான்.

எதுக்கு இவ்வளவு கேள்வி கேட்கறாங்க என்று மனதினில் நொந்து கொண்டு, “எனக்கு இதெல்லாம் பார்க்கணும்” என்று நேரடியாக அங்கிருந்த சம்ப்ரதாயங்களை காட்டி நழுவப் போக..

“நிக்” என்ற படி ஒரு குரல் அருகில், பார்த்தால் ஷ்ரத்தா, “பேபி” என்றபடி அவளை கைகளில் தானாக தூக்கிக் கொண்டான். மகள் என்று தெரிந்த பிறகு பார்க்கிறான். தானாக ஒரு சொந்தம் பார்வையில் வந்தது. 

“எப்போ வந்தீங்க?” என்று மழலையில் அது மிளிற்ற, பதில் சொல்லமால் அணைத்துப் பிடித்துக் கொண்டான். ஒரு புது பரவசம்.

“தாத்தா பேசிட்டு இருக்காங்க” என்று அந்தப் பாட்டி சொல்ல, ஷ்ரத்தா இறங்க முற்பட்டாள், நிகில் அவளை விடவில்லை.

“இவ்வளவு பெரிய பொண்ணு மேல ஏறுவியா?” என்று மீண்டும் பாட்டி ஒரு அதட்டல் போட, “இவளை இறக்கி விட்டு உங்களைத் தூக்கவா பாட்டி!” என நிகில் சிரிப்போடு கேட்க,

வாயை மூடிக் கொண்டார் பாட்டி, அந்த பாவனையில் ஷ்ரத்தா சிரித்து விட..     

“என்ன சிரிப்பு?” என்றார் பாட்டி, “நிக், நீங்க பாட்டியைத் தூக்கறிங்களா?” என்று மீண்டும் குழந்தை வாய் பொத்தி சிரிக்க,

“அழகா சிரிக்கற பேபி! அப்புறம் ஏன் வாய் மூடிக்கற, வாய் திறந்து சிரி!” என்று அவளின் கைகளை அகற்றி விட்டவன், “என்ன தூக்கட்டுமா?” எனக் கேட்க,

“ம்ம்” என்று ஷ்ரத்தா சொல்ல.. இவர்களின் பாவனையில் தாத்தா கூட சிரித்து விட்டார். “என்ன சிரிப்பு?” என்று பாட்டி அவரிடமும் கோபப்பட,

“சொல்லிட்டே இருக்கேன், ஆனா தூக்க மாட்டேங்கறேன்னு கோபமா இருக்கும்” என்று நிகில் சிரிப்புடன் சொல்ல, பாட்டி பயந்து தாத்தாவின் பின் மறைந்தார்.

இப்போது நிகில், ஷ்ரத்தா, தாத்தா, மூவரும் பெரிதாகவே சிரிக்க, அருகில் இருந்தவர்கள் எல்லாம் திரும்பி இவர்களைப் பார்த்தனர். அப்போது தான் அபிமன்யு நிகிலை பார்த்தவன்,

“வாங்க நிகில்!” என்றபடி அருகில் வந்தான். ஒரு தலையசைப்புடன் நிகில் அதை ஏற்க, பின்பு நிகிலை அங்கிருந்த சித்தி, சித்தப்பா, நிர்மலா, சந்தோஷ், என்று அனைவருக்கும் அறிமுகம் செய்தான்.

ஷ்ரத்தா அவனின் கையினில் பாந்தமாய் அமர்ந்திருப்பதை பார்த்த சந்தோஷ், “என்ன இவ்வளவு பெரிய பொண்ணு மேல ஏறிட்ட” என, ஷ்ரத்தா அவளின் அம்மாவிற்கு சற்றும் குறையாத அலட்சியத்தை சந்தோஷிடம் காட்டி முகத்தை சுருக்கி திருப்பிக் கொண்டாள்.

இதற்கு சந்தோஷ் அவனின் ஐந்து வயது மகளை கையினில் வைத்திருந்தான். நிர்மலா இரண்டு வயது மகனை வைத்திருந்தாள்.

“உங்களுக்கு அதுல என்ன ப்ராப்ளம்?” என்றான் நிகில் சந்தோஷிடம்,

சந்தோஷ் புரியாமல் பார்க்க, “பேபி என் கையில இருந்தா உங்களுக்கு என்ன ப்ராப்ளம்” என்றான் தெளிவாக, அபிமன்யு உனக்கு இது தேவை தான் என்ற பார்வையோடு சந்தோஷைப் பார்த்து நிற்க,

“பெரிய பொண்ணு, இப்படி யார் மேலயும் ஏறக் கூடாதுன்னு நல்ல பழக்கம் சொல்லிக் கொடுத்தேன்!” என்று நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. கூடவே, “அவங்கம்மா சொல்லிக் கொடுக்க மாட்டா” என்று சொல்ல,

அக்ஷராவை ஒருவன் அலட்சியமாய் பேசுவது கடுப்பைக் கிளப்ப “அவங்கம்மா சொல்லிக் குடுக்கறதை மட்டும் பேபி கத்துகிட்டா போதும். அது நல்லாதா இருந்தாலும் ஓகே, இல்லைன்னாலும் ஓகே” என்று நிகில் உடனே சற்று கறாராக சொல்ல, இப்படி ஒரு பதிலை சந்தோஷ் எதிர்பாக்கவில்லை.

விழித்து நின்றான். சட்டென்று பதில் கொடுக்க முடியவில்லை. நிகிலின் கழுத்தை கட்டிக் கொண்ட ஷ்ரத்தா, “நோ டென்ஷன். அம்மா இவர் என்ன பேசினாலும் பதில் பேசக் கூடாது சொல்லியிருக்காங்க” என்று ரகசியம் பேசுவதாக சத்தமாகச் சொல்ல,

“அப்போ பேசிட்டே இருப்பாங்களா? ஏன் பேசுவாங்க?” என்று நிகில் திரும்ப ஷ்ரத்தாவிடம் கேட்க, அது தெரியாது என்பது போல உதடு பிதுக்கியது.

“என்ன அபிமன்யு?” என்று அபிமன்யுவிடம் திரும்ப, “ஒன்னுமில்லை நிகில், அவர் எப்பவும் அப்படிதான் அட்வைஸ் பண்ணிட்டே இருப்பார்” என்று சமாளித்தான்.

“இன்னாங்கடா நடக்குது இங்கே” என்று சந்தோஷ் விழித்து பார்க்க, “உங்க அம்மா எங்கே?” என்றான் ஷ்ராதாவிடம் நிகில், “அங்கே” என்று குழந்தைக் காட்ட, அங்கே ஓரிடத்தில் அமர்ந்து இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா. அவளின் அருகினில் துர்காவும் ஷங்கரும் இருந்தனர்.

இதற்கு சற்று தூரமாக தான் அமர்ந்திருந்தாள். ஆனாலும் அவளின் பார்வை வீச்சு நிகிலால் எதிர்கொள்ள முடியவில்லை. கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்த விதம், சிறிது நேரம் பார்த்தாலும் திரும்ப நீ அவளின் பின்னால் சுற்றுவாய் என நிகிலிற்கு தெளிவாக உணர்த்த,  

சற்று பார்வையை திருப்பினான். ஆனாலும் முடியாமல் திரும்ப பார்த்தான் அவளை. எல்லோரும் புடவையில் அம்சமாய் இருக்க, ஒரு சல்வாரில் இருந்தால் அக்ஷரா, “ஏன் உங்கம்மா மட்டும் புடவை கட்டலை” என இயல்பாக ஷ்ரத்தாவிடம் கேட்க, அபிமன்யு இதுவரை இல்லாத ஒரு புதிய பார்வையுடன் நிகிலை பார்க்க ஆரம்பித்தான்.

“நான் கூட சொன்னேன் நிக், நானும் நீயும் மேட்ச் மேட்ச்ன்னு அம்மா சொன்னாங்க!” என, அப்போதுதான் நிகில் நன்றாகப் பார்த்தான், அக்ஷராவின் உடையும் ஷ்ரத்தாவின் உடையும் ஒன்று போல இருந்தது.

“ரெண்டு ஏஞ்சலும் சூப்பர் டூப்பரா இருக்கீங்க!” என அவனையும் மீறி சொல்ல, “அம்மாகிட்ட சொல்லிட்டு வர்றேன்” என்று ஷ்ரத்தா அவனின் கையினில் இருந்து நழுவி இறங்கி ஓட,

“பேபி சொல்லிடாத” என்று நிகில் சொல்ல சொல்ல ஷ்ரத்தா அம்மாவின் அருகில் சென்றிருந்தாள். “அச்சோ!” என்ற நிகிலின் முக பாவனைக்கு அபிமன்யுவிற்கு சிரிப்பு வந்தது. அக்ஷரா தன்னை பார்க்கும் முன் நிகில் வேகமாக அந்த இடத்தில் இருந்து விலகி காவ்யாவின் புறம் சென்று விட, இன்னும் அபிமன்யுவிற்கு சிரிப்பு பொங்கியது.

“எவ்வளவு அலட்சியமா எல்லோரையும் நடத்துறான், என்னை எல்லாம் மதிக்கவேயில்லை. ஆனாலும் அக்காவை பார்த்தா இப்படி ஓடறான்!” என்று தான் தோன்றியது. முகத்தில் ஒரு விரிந்த முறுவல். 

ஆனால் இது முறுவலிக்கும் விஷயம் இல்லை. இந்த ஒன்று தான் அவர்களின் பிரிவிற்கே காரணம். அவளுடைய ஒற்றைப் பார்வையில் நிகிலை வீழ்த்தக் கூடிய சக்தி அக்ஷராவிற்கு இன்னும் இருந்தது. பார்க்கும் நேரம் நிகில் அதை அனுபவித்தாலும், பார்க்காத நேரம் எப்படி அப்படி நீ வீழலாம் என தான் நினைப்பான்.

பார்க்காத போது கனன்ற கோபம் பார்த்த பிறகு எங்கே போனது என்று கூட நிகிலுக்கு தெரியவில்லை. திரும்ப அக்ஷ்ராவை பல வருடங்களுக்குப் பிறகு பார்த்த பொழுது, திருமணமாகி விட்டது வேறு ஒருவனின் மனைவி ஒரு குழந்தைக்கு அம்மா என்பதால் அக்கறை என்ற கட்டுக்குள் மட்டும் இருந்த மனம், இப்போது அவள் தனியாள் எனத் தெரிந்ததும் தானாக கட்டவிழ்த்துக் கொண்டது.