அத்தியாயம் 8
அலைபேசியில் சூர்யாவின் குரலைக் கேட்டதும் ஷானுவிற்கு என்ன விஷயம் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் மேலோங்கியது. கூடவே இப்போது அவளோடு அதைப்பற்றி விளக்கமாக பேச ஆரம்பித்தால், நிறுத்த முடியாது நீளும். ஆனால் ஷானுவிற்கோ பேசமுடியாதபடி சூழ்நிலை.
காரணம் அப்போதுதான் பரத் தூக்கம் விழித்து எழுந்து இருந்தான். நேற்றைய இரவும் மகனோடு இல்லாமல் நண்பர்கள் கெட்-டு-கெதர் என்று லீ மெரிடியன் சென்றுவிட, இப்போது நிச்சயமாக அவனை கவனித்து பள்ளிக்கு அவனை தயார்படுத்த வேண்டும். எனவே, “சூர்யா, ஆபீஸ்-ல பேசலாமா?”, என்று கேட்டாள். .
ஷானுவின் இந்த பதிலில் சூர்யாவின் துள்ளல் கொஞ்சம் வடியத்தான் செய்தது. இருந்தும், “எஸ் மேம், ஷுர்”, என்று சொல்லி அழைப்பைக் கத்தரித்தாள். சூர்யாவுக்கு தெரியும், ஷானுவை பொறுத்தவரை எல்லா வழக்கு விசாரணைகளும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தாலும், அததற்கான நேரத்தில் மட்டுமே அவை முக்கியத்துவம் பெறும். நம் தொழில் நம் வாழ்வில் குறுக்கிடக்கூடாது, எதையும் தனிப்பட்ட சவாலாகப் பார்க்கக் கூடாது எனபது அவள் கொள்கை. இதை பலமுறை சூர்யாவிற்கு அறிவுறுத்தியும் இருக்கிறாள்.
பேசியை வைத்து விட்டு ஷானுவைப்பற்றி யோசித்த சூர்யாவுக்கு, நேற்று இந்த வழக்குக்காக துல்கரோடு சிறுபிள்ளைத்தனமாகத் தான் சண்டையிட்டது நினைவுக்கு வந்தது. கூடவே இவளுடன் சாதாரணமாக சீண்டிப் பேசும்போது பன்மையில் பேசுபவன், உணர்வு மிகும்போது தன்னையறியாது ஒருமையில் பேசுவதும் புரிய மெல்லிய முறுவல் இதழ்களில் அமர்ந்தது. வாட்ஸப் திறந்து, “இனிய காலை வணக்கம்”, என்று துல்கருக்கு டைப்பி கூடவே ஒரு ஸ்மைலியும் அனுப்பினாள். கணினியை ஷட்டவுன் செய்து, மற்ற வேலைகளை பார்க்க ஆயத்தமானாள்.
அலுவலகத்திற்கு சொன்னபடி சீக்கிரமாக சென்ற ஷானுவை, கண்களில் நட்சத்திரம் மின்ன புன்னகையோடு வரவேற்றாள் சூர்யா. அவளது புன்னகை ஷானுவுக்கும் தொற்ற, தனது இருக்கையில் அமர்ந்தபடியே, “ஓகே இப்போ சொல்லு, என்ன கண்டுபிடிச்ச?”
சூர்யா தனது கணினியை இயக்கிக் கொண்டே, “நீங்க கெஸ் பண்ணுங்க பாக்கலாம்?”
“அந்த மால்-ல ஒரு டாக்டர் சோனுவோட போன் கிடைச்சதுன்னு சூப்பர்வைசர் கிட்ட குடுத்தாரே.. அவர் கைல இப்படி ஏதாவது…?”
“ஹ ஹ இல்ல, நீங்க இப்படி ஒரு தாட் பத்தி சொன்னதுமே நானும் அப்படிதான் இருக்கும்னு நினச்சேன்”
சிறிய ஏமாற்றத்தை கண்ணில் காண்பித்து, “அப்போ வேற என்ன?”
“அந்த மர்டர் பண்ணிட்டு கார்ல நகரி பக்கதுல போயி செத்துப்போனாளே ஒரு பொண்ணு..?”,
“ஆமா…? “, ஷானுவின் குரலில் எதிர்பார்ப்பு கூடியிருந்தது.
“அவகிட்ட இப்படி ஒரு ராக்கி டைப் கயிறு இருந்தது”, என்று சஸ்பென்ஸை உடைத்தாள் சூர்யா.
ஷானு சில நொடிகள் ஏதும் பேசாது யோசனையாக இருந்தாள். பின், மறுப்பாக தலையசைத்து, “இல்லியே? அந்த பொண்ணு இறந்த இடத்துல அப்படியான ஒரு தடயம் இருந்ததா எந்த ரிப்போர்ட்-லயும் இல்லையே?”
“நோ மேம், அவ இறக்கும்போது அந்த ராக்கி கட்டியிருந்ததா நா சொல்லல, அவ இங்க அந்த கெஸ்ட் அவுஸ் பக்கத்துல இருக்கிற ஹொட்டேல்-ல செக் இன் பண்ணினப்போ அட்வான்ஸ் பே பண்ணினா. அதுக்கு அவளோட டெபிட் கார்ட் ஸ்வைப் பண்ணும்போது அந்த கயிறு அவ கைல இருந்தது தெரிஞ்சது. இதோ பாருங்க அப்போ ஹோட்டல் ரிசப்ஷன்-ல எடுத்த CCTV ஃபுட்டேஜ்”, என்று ஒரு வீடியோவை போட்டு விட்டு.., “இதை பாத்துட்டு உங்களுக்கு என்ன தோணுது-ன்னு சொல்லுங்க”, என்று கூறினாள் சூர்யா.
ஒரு முறைக்கு மற்றொரு முறை வீடியோவை பார்த்த ஷானுவிற்கு, அது சோனு வீட்டில் பார்த்ததைப் போன்ற ஒரு கயிறுதான் என்பது புரிந்தது. கூடவே அதில் பார்த்ததைப்போலவே கயிறின் நடுவே தாயத்து போன்று மரத்தால் (?) ஆன ஒரு வடிவமும் இருந்தது. “ஹ்ம். இது அதே மாதிரிதான் இருக்கு, ஆனா இதை மட்டும் வச்சி நாம எந்த ஒரு யூகத்துக்கும் வர முடியாது. ஏன்னா, இப்போ இந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸிப் பாண்ட்-ன்னு சொல்லி ஏகப்பட்டது மார்க்கெட்-ல வந்துருக்கு”
“யா. நீங்க சொல்றதும் கரெக்ட்தான் மேம்”, என்று சில நொடி கண்ணைமூடி யோசித்து, “மேம், எதுக்கும் நா ஒருதடவ சோனுவோட அந்த ஆர் பி ஐ குவார்ட்டர்ஸ்க்கு போயிட்டு அக்கம் பக்கதுல விசாரிச்சிட்டு வரட்டுமா?”
“ப்ரயோஜனமிருக்கும்னு எனக்கு தோணலை. பட்…”, என்று இழுத்தவள் “வெல் போயிட்டு வா, அண்ட் சோனு பத்தி எவ்ளோ இன்போ கலெக்ட் பண்ண முடியுமோ கெட் இட்”,
“எஸ் மேம்”, சொல்லி தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் சூர்யா.
அங்கிருந்த சூர்யாவின் கணினியைப் பார்த்த ஷானு, அதில் இருந்த இந்த கொலை தொடர்பான ஃபைல்களை பார்வையிடத் துவங்கினாள். முதலில் இருந்து எந்தவொரு அனுமானத்திற்கும் செல்லாமல் புதிதாக பார்ப்பதுபோல அனைத்தையும் மறுபடி பார்வையிட ஆரம்பித்தாள்.
முன்பு வேறு சில மாநிலங்களில் நிகழ்ந்த கொலைகள், அவை நடந்த விதம், கொலை செய்தவர்கள் மர்மமான அல்லது எதிர்பாரா விபத்துகளில் இறந்தது என்று அனைத்தையும் பார்த்தாள். அதற்கே இரண்டு மணி நேரத்திற்கு மேல் கடந்திருந்தது.
மேஜையில் இருந்த அலைபேசி சூர்யா அழைப்பதாய் தகவல் சொல்லி ஒளிர்ந்தது. “சொல்லு சூரி”
“மேம், சோனு ஆபீஸ்-ல இருக்காங்க, நா ஒரு வேல பண்ணட்டுமா?”
“என்ன பண்ணப் போற? ஏதாவது ஏடாகூடமா…”
“நோ ஏடாகூடம். ஜஸ்ட் trespass தான் மேம் பண்ணலாம்னு இருக்கேன்”
சுற்றும் முற்றும் பார்த்து, அடிக்குரலில், “நோ நோ, அப்படியெல்லாம் பண்ணாத. வீட்டுக்குள்ள யாரையாவது எதையாவது தேடறதுக்கே சர்ச் வாரண்ட் வேணும். நீ அதுவுமில்லாம இது நம்ம கேஸ் கிடையாது. அதைவிட முக்கியம் திடீர்னு சடனா அந்த சோனுவோ இல்ல அவ ஆளுங்க யாராவது வந்தாலோ என்ன பண்ணுவ?”
“மேம், நம்ம நட்ராஜ் கூட இருக்கான். அவனுக்கு இந்த மாதிரி பூட்டெல்லாம் ஜுஜுபி-ன்னு உங்களுக்கே தெரியும், ஜஸ்ட் திறந்து விட்டுட்டு அவன் கீழ போயி என் பைக்-கை ரிப்பேர் பண்றமாதிரி நிப்பான், யாராவது இந்த ஃப்ளோர்-க்கு வந்தா இன்போர்ம் பண்ணுவான். நா இந்த பால்கனி வழியா வெளில வந்து அப்படியே சன் ஷேட்-ல குதிச்சு கீழ வந்துடுவேன். நீங்க ஓகே மட்டும் சொல்லுங்க போதும்”
“ரொம்ப ரிஸ்க் எடுக்கறன்னு தோணுது. சரீ. நட்டுவை எப்ப கூட்டிட்டு போன?”
“மேம், இப்போதான் கால் மணி நேரம் முன்ன போன் பண்ணி வரச்சொன்னேன்”
“ம்ம்ம். எல்லாம் பக்காவா பிளான் பண்ணிட்டு தகவல் சொல்றியா நீ?”
“இல்ல மேம், இங்க அவங்க வீட்ல வேலை பாக்கறவங்க கிட்ட பேசினேன். அப்பதான் வீட்டுக்குள்ள போய் பாத்தா என்னனு தோணிச்சு. தென், இந்த காம்பவுண்ட் உள்ளேயே ஐயன் ஷாப் வச்சிருக்கிற..”
“வாட்..? இரும்புக்கடையா?”
“ஐயோ மேம், அது இரும்புக் கடையில்ல, இஸ்திரிக் கடை”
பல்லைக்கடித்த ஷானுவிற்கு சூர்யாவின் மேல் நிஜமாகவே கொலைவெறி வந்தது.”ஷப்பா… நீயும் உன் தமிழும்.., சரி சொல்லு ஐயனிங் ஷாப் வச்சிருக்கற….”,
“ஹ ஹ ஸாரி மேம்”, அசட்டுத்தனமாக ஒரு மன்னிப்பை கேட்டு, “இதெல்லாம் போன்ல சொல்ல முடியாது. நேர்ல வந்து…”
“எஸ். சீக்கிரம் வா பட் இப்படி திடீர் திடீர்ன்னு சினிமாட்டிக்-கா எதையும் செய்யாத. ஓகே?”, அதில் பலமான கண்டிப்பு இருந்தது. இந்த தொழிலில் யாரும் தனியாக வேவு பார்க்க செல்லலாம், ஆனால் மாட்டிக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் ஒரு சதம் இருப்பினும் கண்டிப்பாய் அதிலிருந்து மீட்க இன்னொருவர் உதவி தேவை.
இவள் அழைத்திருந்த நட்டு நல்ல வேலைக்காரன்தான், சாதாரண நவ்தால் லாக்-கில் இருந்து சிக்கலான வங்கி சேப்ட்டி லாக்கர் வரை திறக்கும் திறமை உள்ளவன். ஆனால், அறிவுக் குறைவு. இரண்டு திருட்டுகள் செய்து இரண்டிலுமே மாட்டிக் கொண்டவன்.
“எஸ் மேம்”, அழைப்பை நிறுத்தி, சற்று தொலைவில் இருந்த நட்ராஜிடம் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள் சூர்யா. ஆனால் அதற்குள் வியர்த்திருந்தாள். ஷானு காரணமின்றி யாரையும் திட்டமாட்டாள், திட்டத் துவங்கினால் நிறுத்துவது கடினம் என்பது சூர்யாவுக்கு தெரியுமே?
சூர்யாவின் ஜாடை புரிந்தவனாக அவளது இரு சக்கர வாகனத்தின் பின் சக்கரத்தின் அருகே இருந்த நட்ராஜ்.., ஒரு சில ஸ்பானர்கள், ஸ்க்ரூ டிரைவர்கள், நாலைந்து போல்ட் நட்டுகளை போட்டான். கூடவே கிரீஸ் ஆங்காங்கே ஒட்டி இருந்த ஒரு கை துடைக்கும் துணியும் போட்டு விட்டு.. சிறிது என்ஜின் ஆயுளையும் கீழே சிந்தினான்.
பின், சுற்றும் முற்றும் பார்த்து, யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து மளமளவென மாடி ஏறிய நடராஜின் கையில் எந்த பூட்டையும் திறக்கும் சென்சார் கொண்டு திறக்கும் ஒரு சிறிய உபகரணம் இருந்தது. இதில் என்ன சிறப்பு என்றால்.. வேறு சாவி போட்டு திறந்தது யாருக்கும் தெரியாது. பூட்டு கதவோடு இருந்தாலும் சரி, தனி தாழாக இருந்தாலும் சரி. சுலபமாய் நட்ராஜின் பேச்சை கேட்கும். சோனு வீட்டுக் கதவும் கேட்டது. ஒருமுறை முழுதாக அக்கதவை திறந்து பார்த்து, பின் சாதாரணமாக மூடி விட்டு மெல்ல கிழிறங்கினான்.
பின் தரை தளத்திற்க்கு வந்ததும், அவனது இரு சக்கர வாகனத்தை அணுகி முன்புறத்தில் இருந்து ஒரு சிறிய கேபிளை எடுத்து வந்து சூர்யாவின் கையில் கொடுத்தான். “மேம், டன். கூடவே இதை கைல வச்சிக்கோங்க. மோடம் லேர்ந்து மொபைல்க்கு கனெக்ட் பண்ற கேபிள். தேவைப்படும்னு நினைக்கறேன்” என்று சொல்ல, சின்ன தலையசைப்போடு அதை வாங்கிகொண்ட சூர்யா அவனைப்போலவே மாடிக்கு மெல்ல நழுவினாள்.
அந்த வீட்டைத் திறந்து உள்ளே சென்று கதவடைத்து கையில் இருந்த அலைபேசியில் சட் சட்டென சில போட்டோக்கள் எடுத்துக் கொண்டாள். நேரம் பார்த்தாள், இன்னும் இரண்டு மணி நேரம் பொறுத்தே சோனு வருவாள். அதற்குள் என்ன செய்யலாம்?
ஷானு சொன்னது போல இந்த ஒரு போட்டோ மட்டும் ஆதாரமாக வைத்து எதையும் நிரூபிக்க முடியாது. ஆனால் இவர்களுக்குள் ஏதோ தொடர்பு இருப்பதுபோல தெரிகிறது. அதை எப்படி கண்டுபிடிப்பது? என்று யோசித்தவளுக்கு அங்கே இருந்த மோடம் (ரௌட்டர்) தெரிந்தது. இதனுடைய ஐபி அட்ரஸ் தெரிந்து கொண்டால் நல்லது என்று தோன்ற, நட்டு குடுத்த கேபிளைக் கொண்டு மோடத்துடன் தனது அலைபேசியை இணைத்தாள். தேவையான விபரங்களை பேசியில் சேகரித்துவிட்டு அந்த தொடர்பை துண்டித்து கேபிளை சுருட்டி பாக்கெட்டில் வைத்தாள்.
பின் மேலோட்டமாக எதையும் கலைக்காமல் அந்த வீட்டை ஒரு முறை முழுவதுமாக நோட்டமிட்டாள். லெட்டர் ஹோல்டரில் இருந்த சில கடிதங்களை போட்டோ எடுத்துக் கொண்டாள். சில டிக்கெட்டுகள் இத்யாதி இத்யாதி… அனைத்தும் சூர்யா மொபைலின் காலரிக்குச் சென்றது. பின்னர் வந்த சுவடு தெரியாமல் மெல்ல சப்தமின்றி கிளம்பினாள்.
அங்கே அவளது அலுவலகத்தில் ஷானு இவளுக்காக காத்திருந்தாள். ஆனால் அவள் பார்வையில் இருந்த தீவிரம் சூர்யாவின் மனதில் ஒரு திகிலைக் கிளப்பியது. ஏதோ புதிதாக வரப்போகிறது.
“மேம்..”
“வா. உனக்காகத்தான் வெயிட்டிங், துல்கரும் சிவராமன் சாரும் அவங்க ஆபீஸ்-ல நமக்காக வெயிட் பண்றாங்க”
“எஸ் மேம் போலாம்”
“தென்.. வர்ற ஃபிரைடே நம்ம நாக்பூர் போகப் போறோம்”
குழப்பமாக “ஓகே மேம்?, ஆனா இந்த கேஸ்..”
“கிட்டத்தட்ட முடிஞ்சு போச்சு”
“மேம்!!!”