மறுநாள் மட்டுமல்ல, அடுத்த ஒரு மாதமும் மற்றொரு நாளாகாவே அந்த கொலை சம்பவத்தை பொறுத்தவரை கடந்தது. கொலையாளியைப் பற்றியோ ஏன் கொலை நடந்தது என்பது பற்றியோ எந்தவொரு தடயமுமின்றி, ஒரு நூலளவு பிடிப்பிமின்றி அந்த ஒரு மாதம் சூர்யா ஷானுவிற்கே சவாலாய் சென்றது. இந்நிலை அவர்களது காவல் துறைக்கு மட்டுமல்ல, அந்த அமைச்சரின் அடிபொடிகளுக்கும் அதே நிலைதான் என்பதுதான் பரிதாபம்.
“அந்த பொண்ணு யார்ன்னாவது கண்டுபிடிச்சீங்களா இல்லையா?”, அந்த அமைச்சர் ஒரு ரவுடிக் கூட்டத்தினிடையே குமுறிக்கொண்டு இருந்தார்.
“ஐயா, கண்டு பிடிச்சிட்டோங்க, அந்த பொண்ணுக்கும் நம்ம தம்பிக்கும் எந்த சம்மந்தமும் இல்லீங்க”
“பின்ன அவ ஏன்யா எம்பையனை கொல்லனும்?”
“அதுதங்கய்யா தெரில, இதுக்காகவே அந்த பொண்ணு அதோட ஆபீஸ்-ல பத்து நாள் லீவ் சொல்லி இங்க பக்கத்து ஹோட்டல்ல வந்து உக்காந்து, ஆற அமர வேவு பாத்து.. நம்ம தம்பிய போட்டுருக்குங்க”, ஒரு ரவுடி.
“ஆமாய்யா, அதுக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க ஒரே ஒரு தம்பி மட்டும்தான். அவனையும் யாரோ பெரியம்மா வந்து வடக்கு பக்கமா எதோ ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாங்கய்யா. அந்த பொண்ணோட செல்லுல கூட தேடி பாத்துட்டோம்ங்க. அதுல நாலஞ்சு பேரோட நம்பரைத்தான் ஸ்டோர் பண்ணி வச்சிருந்திருக்கு. அத்தனை பேரும் கூட வேலை பாக்கறவங்க. ஆந்திரா பார்டர்-ல வேல பாக்கற பொண்ணு, இங்க வரைக்கும் வந்து கொலை பண்ணிட்டு போயிருக்கு. காரணமே தெரிலீங்க ஐயா”, இன்னொருவன்.
“தெரியணும், அதுவும் நம்ம கிட்ட மாட்டனும், என் கையால அவனை அணு அணுவா கூறுபோட்டு கொல்லனும். இத மனசுல ஒரு ஓரமா வச்சிக்கிட்டு விடாம தேடுங்க”, கர்ஜித்து விட்டு சென்றுவிட்டார்.
அவர் மகன் கொலை செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி இருந்தது. ஆனால் இறந்துபோன கொலையாளியைப் பற்றியோ யார் அவளுக்கு பின்னால் இருந்து அவளை இயக்கினார் என்பது பற்றியோ எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.
இவர்களைப் போலவே இந்த கொலைகளை பற்றியும், துல்கர் சந்தேகப்பட்ட முன்பு நடந்த கொலைகளைப் பற்றியும் அதி தீவிரமாக ஆராய்ச்சி செய்தும் இவை அனைத்திற்கும் உள்ள தொடர்போ, கொலையாளிகளின் தற்கொலை / விபத்து குறித்தோ எவ்வித முடிவுக்கும் வர முடியாமல் ஷன்மதி & கோ வும் தலை சுற்றிப்போயிருந்தது.
அவர்கள் கைகளில் கிடைத்த அந்த மால் சம்பந்தப்பட்ட வீடியோக்களில் கூட எந்தவொரு நூலும் கிடைக்காததில் சூர்யாவுக்கு வருத்தம். இதுவரை போலீசால் கூட கண்பிடிக்க இயலாத தடயங்கள் ஏதும் இல்லாத கொலைகளை இவ்விருவரும் அனாயசமாக உள்ளுணர்வு மற்றும் அவர்களது மாற்றி யோசிக்கும் திறனினால் தீர்த்து வைத்திருக்க, இந்த கொலை அவர்களது திறமைக்கு ஒரு கரும்புள்ளியாக நின்றது.
************
அன்று ஷண்மதி & கணேஷின் திருமண நாள். அதை முன்னிட்டு கணேஷின் நெருங்கிய வியாபார தொடர்புள்ளவர்கள் மற்றும் நட்புகளோடு ஒரு பிரபல ஹோட்டலில் கெட்-டு-கெதர் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கணேஷுக்கு நன்கு பரிச்சயமான ஊடகவியலாளர்கள், அவனது அலுவலக உறுப்பினர்கள் தவிர, சிவராமன் சூர்யா அதுல்கரும் ஆஜராகி இருந்தனர். அதுல்கர் வட இந்தியாவில் இருந்த அவனது சொந்த ஊருக்கு ரக்ஷாபந்தனை முன்னிட்டு சென்றுவிட்டு அன்று மாலையில்தான் சென்னை திரும்பியிருந்தான். நேரே விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வருவதாக சொல்லி இருக்க, சூர்யா அவனுக்காக ஏர்போர்ட்டில் காத்திருந்து இருவருமாக சேர்ந்து அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தனர்.
இந்த கொலை சம்பவத்திலிருந்து கடந்த ஒரு மாதத்தில், சூர்யாவோடு பேசும்போது துல்கரின் கிண்டல்களும் ஓஹோ என்று வளர்ந்திருந்தது. அதில் தீர்க்கவியலாத இந்த கேஸ் முக்கிய காரணம். இப்போது இந்த ஹோட்டலுக்கு காரில் வரும்போது கூட இருவரும் சண்டையிட்டுக்கொண்டே தான் வந்தனர்.
ஷண்மதியின் குடும்ப விழாவிற்கு இருவரும் தனித்தனியாய் செல்ல சங்கடப்பட்டு (லீ மெரிடியன் ஹோட்டல் சூர்யாவுக்கு கொஞ்சம் ஆடம்பரம் போல தோன்றியது ஒரு காரணம் ), ஏர்போர்ட்டில் இருந்து துல்கரோடு செல்லலாம் என்று இருவரும் கலந்து பேசித்தான் முடிவெடுத்தனர். ஆனால் துல்கரின் கெட்ட நேரம், அவன் கிளம்பிய விமானம் அரைமணி நேர தாமதத்தில் வந்து சேர, சூர்யா அதை தனக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று முணுமுணுத்துக் கொண்டே வந்தாள்.
“ஆமா, என்ன வெட்டி முறிக்க போறீங்க? சிவராமன் சார் நீங்க பெரீய்ய அப்பா டக்கர்ன்னு ஒரு கேஸ் குடுத்தார். அதைக் கூட கண்டுபிடிக்க முடில. சும்மாதானே இருக்கீங்க, ஏர்போர்ட்ல நின்னா என்னாவாம்? ஏசி கார்ல தான இருக்கீங்க? என்னவோ ரோட்-ல நிக்கறா மாதிரி அலப்பறை பண்றீங்க?”, எப்போதும் போல துல்கர் சூர்யாவை வாரினான்.
ஆனால், பலமுறை இவ்வாறு கிண்டல் செய்திருந்ததால், கொஞ்சம் சீரியஸாகவே அதை எதிர்கொண்டாள் சூர்யா. அவளது ஈகோ-வை அசைத்த துல்கரின் முகத்தை தீவிரமாக பார்த்தவள், தலையை மேல்கீழாய் அசைத்தவாறே, “எஸ்.. கேஸ் சால்வ் பண்ணலை இல்ல? நாங்க அலப்பறை பண்றா மாதிரிதான் தெரியும். பட் இதை நா சேலன்ஞ்-ஜா எடுத்துக்கறேன். இந்த கேஸை நாங்க கண்டிப்பா கண்டு பிடிச்சிடுவோம்”
சிறுபிள்ளை போல் சவால் விடும் சூர்யாவை ரசனையோடு பார்த்து சின்ன சிரிப்போடு, “என்ன நீங்க ரிடையர் ஆறதுக்குள்ளயா?”, என்ற துல்கர் இன்னமும் அவனது கிண்டல் த்வனியை விடவில்லை.
மூக்கு விடைக்க அவனைப் பார்த்து, “அதிகபட்சமா ஆறு மாசம். அதுக்குள்ள எப்படியும் இதை கண்டுபிடிக்கறேன், அப்படி இல்லன்னா இந்த வேலைய ரிசைன் பண்றேன்”, என்று சூளுரைத்தாள் சூர்யா.
அவளது தீவிரத்தில் கொஞ்சம் ஆச்சர்யமடைந்து, “ஹேய்.. கூல்… இதென்ன விளையாட்டு பேச்சுக்கு இவ்ளோ சீரியசாயிட்டு? விடு விடு நமக்கு சில கேஸ்கள் இப்படித்தான் தண்ணீ காட்டும். டிபார்மென்ட் கண்டுபிடிக்காத கேஸ்கள் எவ்ளோன்னு உனக்கு தெரியாதா?”
“ம்ச்”, என்றுவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள் சூர்யா. அவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்பது புரியாமல் துல்கர் திணறும்போதே லீ மெரிடியன் ஓட்டல் சமீபித்துவிட, இவர்களது பேச்சு முடிவுக்கு வந்தது.
பின் அங்கே விழாவிற்காக குழுமியிருந்தவர்களின் அறிமுகப்படுத்தும் படலங்கள், சம்பிரதாய நல விசாரிப்புகள், கூடவே கணேஷ் ஷானுவின் காதல் கலாட்டாக்கள் கிண்டல்கள் அனைத்தும் அங்குள்ளவர்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட கேலி கிண்டல்களுக்கு குறைவில்லாமல் இருந்ததது.
தொடர்ந்து இவர்களுக்காக தருவிக்கப்பட்ட பிரத்யேக கான்டினென்டல் உணவு வகைகள் பரிமாறப்பட, சென்னை நகர மத்தியில் அதன் ஆரவாரங்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத வகையில் அமைதியாக இருந்த அந்த ப்ரமாண்டமான ஹோட்டல் இச்சிறிய கூட்டத்தின் கலாட்டாக்களால் அதகளப்பட்டது.
மணி இரவு பதினொன்றை நெருங்க, “சரி மேம் நா கிளம்பறேன் ரொம்ப டைமாயிடுச்சு. நாளைக்கு ட்யூட்டி போகணும் “, என்று துல்கர் எழுந்து கணேஷிடம் கைகுலுக்கினான். ஷானுவும் கணேஷின் அருகே வந்து, துல்கருக்கு நல்ல வேலைப்பாடமைந்த தேக்கிலான சிறிய யானையை அன்றைய நினைவுப் பரிசாகத் தர, துல்கர் அவனது பாக்கெட்டில் இருந்து வெள்ளியினாலான கைகாப்பினை அதற்குண்டான நகைப்பெட்டியோடு கணேஷிடம் தந்து, “என்னோட சின்ன கிஃப்ட். மேடமுக்கு போட்டு விடுங்க”, என்று குடுத்தான்.
அப்போது துல்கரின் கை மணிக்கட்டில் பல வண்ணக் கயிறுகள் கட்டப்பட்டு இருக்க, கணேஷ் கேள்வியாக துல்கரைப் பார்த்தான். “என்ன இவ்ளோ கயிறு? உங்களுக்கு அத்தனை தங்கச்சிங்களா?”, என்று கிண்டல் செய்ய..
பார்வையை துல்கரின் பரிசிலிருந்து திருப்பிய ஷானு அவன் மணிக்கட்டைப் முறுவலித்தபடி பார்க்க, அவ்விருவருக்கும் பதில் சொல்லும் விதமாக “ரக்ஷாபந்தன் ஸார், என் சிஸ்டர்ஸ், அக்கம் பக்கத்து வீட்டு பொண்ணுங்க எல்லாரும் கட்டினது”, என்றான் துல்கர்.
“இல்ல மேம், என் சிஸ்டர்ஸ்க்கு கிப்ட் வாங்கினேன். அப்படியே உங்க வெட்டிங் டே-யும் ஞாபகம் வந்தது அதான்”, என்று துல்கர் இயல்பாக சொல்லவும்.., ஷண்மதி, “தேங்க்ஸ்”, என்றாள்.
நண்பனை கௌரவிக்கும் விதமாக அவன் வாங்கி வந்த ப்ரேஸ்லெட்டை கணேஷ் ஷண்மதிக்கு அணிவிக்க, அனைவரும் கைதட்டி அவர்களது மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.
அனைவரும் அவரவர் வீட்டுக்கு கிளம்ப, ஷானு சூர்யாவுக்கு தன் காரை ஏற்பாடு செய்து நம்பகமான ட்ரைவரோடு வீட்டிற்கு அனுப்பியிருந்தாள். கடைசியாக ஷண்மதியும் கணேஷும் கிளம்ப ஆயத்தமாகி, காரை எடுத்து வர ட்ரைவரை பணித்திருந்தனர். அவர் வந்ததும் காரின் பின் இருக்கையின் கண்ணாடியில் தன் முகம் பார்த்தவாறே, அலையலையாய் முன் நெற்றியில் விழுந்த முடியினை சரி செய்ய கையை உயர்த்த அது அப்படியே ஆடியில் பிரதிபலித்தது.
ப்ரேஸ்லெட்டோடு கூடிய வலது கையின் பிம்பம் கண்ணாடியில் தெரிய அதை கண்கள் நிலைக்குத்த பார்த்தாள் ஷண்மதி. அது எதையோ நினைவு படுத்துவதுபோல தோன்ற, “ஷானு..?”, கணேஷ் குரல் அவளை மேற்கொண்டு யோசிக்க விடாமல் தடுக்க…
“ஆங். யா கமிங்”, என்று காரில் ஏறிக்கொண்டாள். அவள் முகம் யோசனையாக இருக்க கணேஷ் அவளை ஏறிட்டு என்ன என்று பார்வையால் கேட்க, சிறு முறுவலை அவனுக்கு தந்து.., “சும்மா.. ஒண்ணுமில்ல”, என்று நிகழ்வுக்கு வந்தாள். டின்னருக்கு வந்திருந்த நட்புகள் குறித்தும் அவர்கள் செய்த கிண்டல்கள் பற்றியும் இருவரும் பேச, இது தங்களுக்கான நேரம் என்பதை உணர்ந்த ஷானு அவனுடைய பேச்சில் லயித்தாள்.
அவர்களது வீடு வந்து விட, முதலில் ஷானு இறங்கி உள்ளே செல்ல, கணேஷ் ஓட்டுனரிடம், “ட்ரைவர், நீங்க நாளைக்கு சாயங்காலம் வந்தா போதும்”, நள்ளிரவு வரை இவர்களுக்கு காத்திருந்ததால் அவரை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வீட்டினுள் வந்தான். இவர்களின் தவப்புதல்வன் பரத் ஷண்மதியின் அம்மாவோடு எப்போதோ உறங்கி இருந்தான். நிதானமாக வீட்டின் பிரதான கதவுகளை பூட்டிவிட்டு, அவனது ஷூக்களை கழற்றி அதற்கான இடத்தில் வைத்து அவர்களது அறையை அடைந்தான். அதற்குள் ஷானு குளித்து முடித்திருந்தாள்.
“ஹாட் டப்-பை விட ஹாட்டான மேட்டர்-லாம் இருக்கு பொண்டாட்டி”
திமிராக அவனை மேல் பார்வை பார்த்த ஷானு, “இப்படி டைலாக்லாம் நிறைய பேசியாச்சு மை டியர் ப்…ராணநா..தா”, என்று ப்ராண-வை தேவைக்கு மேலாக அழுத்திக் கூறியவள், “அஞ்சு நிமிசத்துக்குள்ள நீங்க பாத்ரூம் விட்டு வெளிய வரலைன்னா.. ‘நீங்கள் நேசிக்கும் உங்கள் மனைவி ஷானு தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார். தயவு செயது மற்றொரு நாள் முயற்சிக்கவும்’-ன்னு என் குறட்டை சொல்லும். ஓகேவா?”
அவளது பாவனையில் கணேஷுக்கு சின்ன சிரிப்போடு, “அடிப்பாவி.. இன்னிக்கு நம்ம வெட்டிங் டே-டீ. வரதுக்குள்ள தூங்கின..? கொன்றுவேன் பாத்துக்க”, செல்லமாய் மிரட்டி குளியலறை சென்றான். அவள் சொன்னதை விட முன்பாக மூன்றே நிமிடத்தில் குளித்து வந்த கணேஷ்.., சிறிது நேரத்தில் மனைவியோடு தன்னையும் உலகத்தின் தொடர்பு எல்லைக்கு அப்பால் கூட்டிச் சென்றான்.
அதிகாலை நேரம் கணேஷின் தோள் வளைவில் தலை வைத்து ஆழ்ந்த நித்திரையில் இருந்த ஷானுவிற்கு மனதில் திடீரென நேற்றிரவு கார் கண்ணாடியில் அவளது வலது கை.., பிரேஸ்லெட்டோடு நிழலாடியது தெரிந்தது. அடுத்ததாக உயர்த்திப் பிடித்த பல கைகள் இருந்த புகைப்படம் தெரிய சட்டென விழித்தாள்.
சில கணங்கள் அவளது மனத்திரையில் தெரிந்ததை மீண்டும் யோசிக்க.., ‘இந்த போட்டோ எங்க பாத்தேன்?’, மனது கேள்வி கேட்க.., சில பல நொடிகள்.. அவள் சமீபமாக பார்த்த புகைப்படங்கள் மூளையில் ஸ்லைட் ஷோவாக ஓடியது. சாலைகளில் இருக்கும் போஸ்டர்கள், கொலை சம்பவ புகைப்படங்கள், அதன் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், என்று பலப்பல ஸ்லைடுகள் ஓட.., கொஞ்ச நேரம் கண்ணை மூடியபடி இருந்தவளுக்கு, அந்த பல கைகள் சேர்ந்து இருந்த ஒரு புகைப்படத்தை RBI குவார்ட்டர்ஸ்-ல் சோனு வீட்டில் பார்த்தது தெளிவாக நினைவுக்கு வந்தது.
அவளது உள்ளுணர்விடம், ‘அது ஏன் இப்போ திடீர்னு ஞாபகம் வருது?’, கேள்வி கேட்க..
‘எல்லாத்தையும் நானே சொன்னா நீ போலீஸ்காரின்னு எதைத்தான் கண்டுபிடிப்ப?’, என்று கிண்டலாக சொல்வது போல மனஸ் அடமாய் மௌனமாய் இருந்தது.
படுக்கையில் இடது புற டேபிளில் இருந்த தன் பேசியை எடுத்து நேரம் பார்த்தவளுக்கு அது காலை நாலு மணி இருபத்தி ஐந்து நிமிடம் என்ற நம்பரை காண்பித்தது.
“நாலறை தான் ஆகுது. தூங்குங்க”, என்று விட்டு அலைபேசியோடு எழுந்தாள். அறைக்கு வெளியே சென்று முதல் வேலையாக சூர்யாவை அழைக்க.., மூன்றாவது ரிங்கில் எடுத்த சூர்யா, “என்ன மேம் இந்த நேரத்துல?”என்றாள். அவள் குரலே சூர்யா பாதி தூக்கத்தில் இருக்கிறாள் என்பதை பிரதிபலித்தபடி கரகரவென வந்தது.
“சூர்யா, அன்னிக்கி நாம சோனு வீட்டுக்கு போனபோது அவங்க வீட்ல ஒரு போட்டோ பாத்தமே ஞாபகம் இருக்கா?”, என்று சீரியஸாக ஷானு கேட்க..
பேசுவது முக்கிய விஷயம் என்பது மறுமுனையில் இருந்தவளுக்கு புரிந்து, முழு விழிப்பு நிலைக்கு வந்தாள். ஷானுவின் கேள்வியை கிரஹித்து பதிலளிக்க சில நொடி எடுத்துக் கொண்ட சூர்யா, “நிறைய புக்ஸ் பாத்தோம்ன்னு தெரியும் ஆனா…?”, யோசனையோடு சொல்லி..
திடீரென நினைவு வந்தவளாக…, “யா மேம்… நாம உக்காந்திருந்த இடத்துக்கு நேரா டிவி-க்கு மேல நாலஞ்சு பேரோட கை முழங்கை வரைக்கும் இருக்கற போட்டோ இருந்தது”
“எஸ் அதுல எல்லார் கைலயும் சிகப்பு கயிறு கட்டி இருந்தாங்களா?”
“மேம், அது கயிறா என்னண்ணு தெரில, ஆனா எல்லாத்துலயும் சின்ன தாயத்து மாதிரி என்னவோ பாத்தேன்”
“ஹ்ம்ம். இல்ல அது தாயத்து இல்ல ஆனா எனக்கும் அது என்னன்னு தெரில. ஏனோ அது இப்போ திடீர்னு மனசுல வந்தது”, என்று சொல்லி யோசனையாக ஷானு நிறுத்த…
ஷானு தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள் என்பது புரிய அமைதி காத்தாள் சூர்யா. அதிகாலை நேரத்தில் காரணமின்றி எந்தவொரு எண்ணங்களும் மனிதனுக்கு வருவதில்லை. அப்படி ஏதேனும் தோன்றி, நமக்கு அர்த்தம் புரியவில்லை என்றால், அந்த எண்ணங்களின் அலைவரிசையில் நாம் இல்லை என்று கொள்ளலாமே தவிர, அதை அனர்த்தம் என்று கருதி ஒதுக்கி விடக்கூடாது என்பதில் ஷானு சூர்யா இருவருக்குமே அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
“மேம், ஆபீஸ் வர்றதுக்குள்ள அந்த கேஸ் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் ஒரு முறை மறுபடியும் பாத்துட்டு வர்றேன் மேம்”, என்று கூறினாள் சூர்யா.
‘தட் இஸ் சூர்யா, எள் எனும்முன் எண்ணையாக நிற்பாள்’ தான் சொல்ல வருவதை சொல்லும் முன்னே சூர்யா புரிந்து கொண்டது ஷானுவுக்கு சிறு முறுவலை வரவழைக்க, “யா, நானும் டூயூட்டிக்கு சீக்கிரம் வர ட்ரை பண்றேன்”, சொல்லி வீட்டில் குடும்பத்தலைவியாய் தனது காலை அலுவல்களை கவனிக்க சென்றாள் ஷானு.
அந்தப்பக்கத்தில் ஷானுவின் அத்யந்த சிஷ்யை (சீடனுக்கு பெண்பால் சீடி -யா? சீடையா? குழப்பம் வந்ததால வடமொழி சிஷ்யை) சூர்யாவும் காலைக்கடன்களை முடித்து, கணினியில் சேமித்து வைத்திருந்த இந்த கேஸுக்குண்டான கோப்புகளை திறந்து அதனோடு ஐக்கியமானாள்.
சரியாக ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் கழித்து, “மேம்.. ஒரு முக்கியமான க்ளூ கிடைச்சிருக்கு மேம்”, என்று ஷானுவுக்கு ஹைடெசிபலில் அலைபேசினாள் சூர்யா.