“சொல்லுங்க, என்ன விஷயம்? மொபைல் காணாம போனது பத்தி ஏற்கனவே வந்து விசாரிச்சிட்டு போயிட்டாங்க. இப்போ நீங்க வந்திருக்கீங்க?”, கேட்டார் சோனு.
“ஜஸ்ட் ஒரு சில டீடெயில்ஸ் அவங்க மிஸ் பண்ணிட்டாங்க. அதான் மறுபடியும் வரவேண்டியதா போச்சு.”
“சரி கேளுங்க.”
“மொபைல் காணாம போனது உங்களுக்கு எப்போ தெரிஞ்சது?”
“அன்னிக்கு நா ECR-ல இருக்கிற ஒரு மால் க்கு போயிருந்தேன். அங்கிருந்து மெட்ரோ ஸ்டேஷன் வர்றதுக்கு ஆட்டோ பிடிச்சேன். அப்பதான் போன் இல்லன்னு நோட்டீஸ் பண்ணினேன். உடனே ஸிம் ப்ளாக் பண்ணனும்னு தோணுச்சு. அதான் போற வழில இருக்கிற ஏதாவது கடை-ல ஆட்டோவை நிறுத்த சொன்னேன். இறங்கி அந்த ஷாப்-லேயே ஸிம் பிளாக் பண்றது எப்படின்னு கேட்டு அவங்க போன்லேயே அதை பண்ணினேன். தென் அவங்க அப்படியே மொபைல் லாஸ்ட் ஆயிடிச்சுன்னு கம்பளைண்ட்-ம் குடுத்துடுங்கன்னு சொன்னாங்க. அதுவும் அங்கேயிருந்துதான் பண்ணேன்.”
“ம்ம். ஒரு சின்ன டவுட்?
“உங்களுக்கு போனோட IMEI நம்பர்ஸ் எல்லாம் எப்படி தெரியும்? ஏன்னா மொபைல் லாஸ்ட் ன்னு ஆன்லைன்ல புகார் குடுக்கணும்னா அந்த நம்பர்ஸ், அண்ட் நீங்க போன் வாங்கின பில் எல்லாம் வேணுமே? அது எப்படி உங்க கிட்ட அந்த நேரத்துல இருந்தது?”
“வெல். என் போன் வாங்கி ஒரு வாரம் தான் ஆகுது. அந்த பில் ஹாண்ட்பாக்ல இருந்தது. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும், பில்-ல இப்போல்லாம் IMEI நம்பர் மென்ஷன் பண்ணிதான் குடுக்கறாங்க.”
“ஓஹ். ஐ ஸீ!”
“யா, தென் மெட்ரோ ஸ்டேஷன் வந்து ட்ரெயின் பிடிச்சு வீட்டுக்கு வந்துட்டேன். அடுத்த நாள் எனக்கு முக்கியமான வேலை இருந்ததால, ஆபிஸ் போவேண்டி இருந்தது”
“அப்பறம் எப்போ மொபைல் கிடைச்சது உங்களுக்கு தெரிஞ்சது?”
“அந்த மால்-ல வேலை பாக்கற ஒருத்தர் என் மொபைல்-ல என்னோட ஆபிஸ் நம்பர் தேடி கால் பண்ணி, என் போன் கிடைச்சிடுச்சுனு சொன்னார். அன்னிக்கே போயி மொபைலை வாங்கிட்டு வந்துட்டேன். போலீசுக்கு அவங்களே இன்போர்ம் பண்ணினதா சொன்னாங்க. நா என் போன் கைக்கு வந்ததும் ஸிம் அன்லாக் பண்ணுங்கன்னு என் மொபைல் ஆப்ரேட்டருக்கு கால் பண்ணி சொல்லிட்டேன். அவ்ளோதான். வேற எதாவது உங்களுக்கு தெரியனுமா ?”
“இப்போ இந்த கொரோனா வந்ததிலிருந்து ஆர் பி ஐ அவங்க ஸ்டாஃப்-ஸை ஒர்க் ப்ஃரம் ஹோம் பண்ண சொன்னதா..?”
“எஸ் நானும் வீட்லேர்ந்துதான் ஒர்க் பண்ணினேன். ஆனா அன்னிக்கு முக்கியமா போகவேண்டிய ஒரு வேலை இருந்தது”
நீண்டதொரு மூச்சுவிட்டு, “ஓகே மேம், நீங்க மொபைல் வாங்கின பில் கைல வச்சிருந்ததா தகவல் எங்களுக்கு வரல. வெல். தாங்க்ஸ்.”, கூறி ஷானு கிளம்ப ஆயத்தமாக..
சூர்யாவும் தனது இருக்கையில் இருந்து எழுந்தபடி, “பை தி வே உங்க ஹஸ்பண்ட் எங்க வேலை பாக்கறாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”, கேட்டாள்.
சின்ன முறுவலோடு, “அது முடியாதே..”, என்று சொன்ன சோனு, “ஏன்னா ஐயம் அன் மேரீட்”.
“ஓஹ், ஸாரி”, சூர்யா.
“இட்ஸ் ஓகே”, சொல்லி இருவரையும் சோனு கைகூப்பி வழியனுப்பி வைத்தாள்.
மாடியில் இருந்து கீழே வந்து காரை எடுக்கும்போதும் ஒரு வித யோசனையில் இருந்த ஷண்மதியின் முகம் பார்த்து சூர்யா கேட்டாள். “எல்லாம் சரியாதான மேம் இருக்கு? அப்பவும் வொய் குழப்பம்?”
தீவிர யோசிப்போடு சூர்யாவைப் பார்த்து, “ம்ம். சில நேரம் எல்லாம் சரியா இருக்கறதுகூட குழப்பும்”
அந்த குடியிருப்பு வளாகத்தை விட்டு வெளியே வந்த ஷானு சென்ற இடம்.. கிழக்கு கடற்கரை சாலையில் சோனு சென்ற, அவளது மொபைலை தொலைத்த அந்த வணிக வளாகம். அந்த சாலைக்கு வாகனம் திரும்பியதும் சூர்யா.., “மேம், நாம இங்க விசாரிக்கிறது டிபார்ட்மென்ட்-க்கு தெரிஞ்சா?”
“தெரியாது. ஏன்னா நாம யாருன்னு இந்த மால்-ல சொல்லப் போறதில்ல”
“மேம். அப்பறம் என்ன விசாரிப்பீங்க?”
அர்த்த புஷ்டியோடு சிரித்து, “நோ விசாரணை, வெறும் டேட்டா கலெக்ஷன்தான் பண்ண போறோம். வா”
அங்கிருந்த விற்பனை பிரதிநிதியிடம் மேலாளரின் அறை எங்கிருக்கிறது என்று விசாரித்து அவர் அறைக்கு செல்லும்முன், ஷானு சூர்யாவிடம், “மூஞ்சிய பாவமா வச்சிக்கோ, நா பேசப் பேச அப்படியே ஃபாலோ பண்ணிக்கோ”, சொல்ல சில நொடி திருதிருத்து பின் சுதாரித்தாள் சூர்யா.
உள்ளே விஸ்தாரமான குளிரூட்டப்பட்ட அறையில் அண்ணாச்சி ஒருவர் அமர்ந்திருந்தார், அவரது நிறத்திலேயே அவர் வீரம் விளைந்த நெல்லைசசீமைக்கு சொந்தக்காரர் என்பது தெரிந்தது. பவ்யமாக அவரை வணங்கி, “வணக்கம் சார்”, என்று ஆரம்பித்தாள் ஷானு.
“சொல்லுங்க என்ன விசயம்? எக்ஸ்சேன்ஜ் பண்ண முடியாத ஐட்டம் எதையாவது மாத்தணுமா?”,
“அதெல்லாம் இல்ல ஸார். ஒரு சின்ன ஹெல்ப் வேணும். இந்த பொண்ணோட வீட்டுக்காரர் ரொம்பவே சபல கேஸ். அவரோட சம்பளம் மட்டுமில்லாம இவ சம்பளத்தைக் கூட வாங்கிகிட்டு கண்ட கண்ட பொண்ணுங்களுக்காக செலவு பண்றார். ATM கார்ட் குடுக்கலைன்னா போட்டு அடிக்கிறார். போன மாசம் இவ கர்ப்பமா இருக்கான்னு கூட பாக்காம அவன் அடிச்சதுல இவளுக்கு அபார்ஷனே ஆயிடுச்சு. அதனால அவன் கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கலாம்னு இருக்கா”
“சரீ…”, அவரது ச்செரீ-யில் ‘அதுக்கு நான் என்ன பண்ணனும்?’, தொக்கி நின்றது.
“போன வாரம் இவ ஹஸ்பன்ட் இங்க ஷாப்பிங் பண்ண வந்திருக்கான், அது உங்க cctv-ல பதிவாயிருக்கும் இல்லையா? அந்த ஆதாரம் ஒன்னு போதும் ஸார். நீங்க ஜஸ்ட் ஒரு.. ஒரு வாரத்துக்கான வீடியோ மட்டும் கொஞ்சம் குடுத்து ஹெல்ப் பண்ணுங்க ஸார் ப்ளீஸ்”
“அப்படியெல்லாம் குடுக்கற வழக்கமில்லீங்க”
“சார் சார் ப்ளீஸ் சார் நீங்க நினைச்சா முடியாதா? கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்”, கெஞ்சுதலாக ஷானு.
“அய்யய்ய. எந்த ஒரு விஷயத்தையும் மேலிடத்தை கேக்காம குடுக்க முடியாதுமா”
முகத்தை அழுகைக்கு தயார் செயது கொண்டு, “ஸார்”, என்று சின்ன விசும்பலுடன் அவரைப் பார்த்த சூர்யா, “என்னை உங்க பொண்ணு மாதிரி நினைச்சுப் பாருங்க ஸார், இதை காமிச்சு மியூச்சுவல் டிவோர்ஸ் வாங்கிடுவேன் சார், அந்த பாவி கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்க சார்”, என்றாள் பாவமாக.
ஒருவித சங்கட நிலைக்கு ஆளான அந்த மேலாளர், “அடடா, இந்தாம்மா இப்பெதுக்கு கண்ண கசக்கிட்டு நிக்க?”, என்று மிரட்டுதலாக சொல்லி, அவரது மேஜையில் இருந்த ஒரு பட்டனை அழுத்த அது எங்கேயோ “கீக் கீக் கீக்” என்று சன்னமாக கத்தியது. சில நொடிகளில் ஒரு சுடிதார் தேவதை வந்து, இவர்களை பார்த்துக்கொண்டே “சொல்லுங்க ஸார்”, என்று அவரிடம் பேசியது.
“இவங்களுக்கு நம்ம கேமரா-ல பதிவான ஒரு வாரத்துக்கான வீடியோ வேணுமாம். காப்பி பண்ணிக் குடு”, என்றவர் சட்டென ஷண்மதியிடம் திரும்பி, “எதுக்கும் உங்க போன் நம்பர் சொல்லுங்க, குறிச்சிக்கறேன்”, என்று அலைபேசியைக் கையில் எடுத்தார்.
ஷண்மதி தனது வீட்டினரின் உபயோகத்துக்காக வைத்திருக்கும் எண்ணைத் தந்தாள். பின் பத்திருபது நிமிடங்களில் இருவரும் வந்த வேலை முடித்து கிளம்ப, ஷண்மதி ஞாபகமாக மேலாளரிடம் தந்த தனது அலைபேசி எண் கொண்ட சிம் கார்டை பேசியில் இருந்து உருவி குப்பையில் எறிந்தாள்.
திகைத்த சூர்யா, “மேம், அது உங்க பர்சனல் நம்பராச்சே?”
“ஆனா என் பேர்ல வாங்கினது இல்லையே? ஒரு குரூப் மெசேஜ் போட்டு நம்பர் மாத்திட்டேன்ன்னு எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டா போச்சு. ஸிம் கான்டக்ட்ஸ் எல்லாம் எப்போவோ போனுக்கு மாத்திட்டேன்”, என்றாள் அசால்டாக.
“மேம்!”, என்று சூர்யா வாய்பிளக்க..,
“ஷாக்க குற, ஷாக்க குற, இப்போ வந்த அந்த cctv பதிவை உன்னோட கூகுள் ட்ரைவ்-ல அப்லோட் பண்ணியிருக்கேன். ஆபீஸுக்கு போயி ஆற அமர ரெண்டுபேரும் உக்காந்து அந்த ரெக்கார்டட் வீடியோ பாக்கலாம். சரியா?”, என்று அடுத்த அஸ்திரத்தை எய்ய..
“இதேப்போ நடந்தது? ஹ்ம்ம். உங்களை மாதிரி ஆக நா இன்னும் நிறைய வளரனும் போலயே?”, தனக்குத்தானே பேசி வண்டியை நகர்த்தினாள் சூர்யா.
“டோன்ட் வொரி பொன்னே, விடா முயற்சி விஸ்வரூப வெற்றி”, என்று ஆசீர்வாதம் செய்து சூர்யாவின் முணுமுணுப்பை பிரதியுபகாரமாக பெற்றுக்கொண்டாள் ஷண்மதி .
ஆனால், எல்லாம் நினைத்தபடியே நடந்தால்? அதில் என்ன சுவாரஸ்யம்? ஷானுவின் கணிப்பை பொய்யாக்கும்படி, அலுவலகம் சென்று அங்கிருந்து கொண்டு வந்த பதிவுகளை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்தும் இருவருக்கும் ஒன்றும் அகப்படவில்லை. யார் அந்த பெண்ணிடம் (சோனு) மொபைலை திருடியது என்பதோ, யார் அன்று சாம்பசிவத்திடம் (அமைச்சரின் பினாமி / கொலை நடந்த வீட்டை நிர்வகிப்பவர்) பேசியது என்றோ எந்த துப்பும் கிடைக்கவில்லை. அதில் இருவரும் சற்று சோர்வுக்குள்ளாயினர்.
ஆனால், அந்த அலைபேசி கழிவறைக்கு பக்கத்தில் கிடந்ததாக, அந்த மால்-ன் மூன்றாவது தளத்தின் மேற்பார்வையாளரிடம் ஒருவர் வந்து குடுப்பது பதிவாகி இருந்தது. பார்க்கும்போதே மரியாதை வருமளவு அவரது நடை உடை உடல்மொழிகள் இருந்தன. அவரது பெயரையும் அலைபேசி எண்ணையும் குறித்துக்கொண்டு அந்த சிப்பந்தி பேசியை வாங்கி வைத்துக் கொண்டதும் பதிவாகி இருந்தது.
போலீஸ் விசாரணையில் அந்த நபர் ஒரு நரம்பியல் மருத்துவர் என்பதும் லக்னோவில் அரசு மருத்துவமனையில் பணியில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடப்பட்டு இருந்தது. வயது பின் நாற்பதுகளில் இருக்கும், தவிர தொழிலும் உயிரைக் காப்பது என்பதால் அவரை மேலும் துருவாமல் காவல்துறை விட்டு விட்டது.
அதே வீடியோ பதிவினை இரண்டு மூன்று முறை பார்த்தும் எதுவும் பிடிபடாமல் போக, “ம்ப்ச். மேம். ரொம்ப நேரமா ஒரே விஷயத்தை பத்தி யோசிக்கறோம்னு நினைக்கறேன். அதான் ஒரு க்ளாரிட்டி கிடைக்க மாட்டேங்குது. ஒன்னு பண்ணுவோம். இன்னிக்கு ஒரு சின்ன பிரேக் விட்டுட்டு நாளைக்கு fresh-ஷா மறுபடியும் இதை பாக்கலாம்”, என்றாள் சூர்யா.
ஆள்காட்டி விரலால் தலையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்த ஷண்மதியும் அதை ஆமோதிப்பதுபோல, “யா, இன்னிக்கு செஷன் க்ளோஸ் பண்ணுவோம்”, என்று விட்டு, “பாக்கலாம் நாளை மற்றுமொரு நாளா இருக்கப்போகுதா இல்ல புதுசா நம்பிக்கையோட ஆரம்பிக்கப் போகுதான்னு”, என்று சொல்லி இருவரும் அவரவர் வீட்டுக்கு கிளம்பினர்.