உஷ்.. பேசாதே.. கொல்.. 

அத்தியாயம் 1

மதிவாணன் தனது லேட்டஸ்ட் யமஹா வின்டேஜ் பைக்கில் ஈஞ்சம்பாக்கம் தாண்டி சவுக்குத்தோப்புகள் இருபுறமும் அடர்ந்திருந்த ECR சாலையில் தாறுமாறான வேகத்தில் பறந்து கொண்டிருந்தான். கொஞ்சம் இடைவெளிவிட்டு பின்னால் அவனது சகாக்கள் மூவர் அவரவர் வாகனங்களில். ஒருவரை ஒருவர் முண்டியடிக்கும் வேகம் அனைவரிடத்தும். நள்ளிரவுக்கும் விடிகாலைக்கும் இடைப்பட்ட நேரம். பைக்கில் செல்லும் மதிவாணனுக்கு,  ஐநூறு மீட்டர் தொலைவில் “ப்ப்ப்ப்..பீங்”, என்ற போக்குவரத்து போலீசாரின் விசில் சப்தம் கேட்டது.

பாதி போதையில் இருந்தான். முழுதும் ஏறினால், இப்படி வண்டியோட்ட முடியாது, மட்டையாக வேண்டியதுதான் என்பதால், மிச்ச போதையை ரேஸ் முடித்ததும் வைத்துக் கொள்வதாக நண்பர்களுடன் ஏற்பாடு. போலீசின் விசிலைக் கேட்டும் கேட்காததுபோல, நட்ட நடு சாலையில் லத்தியோடு சார்ஜ் செய்ய தயாராய் நின்ற காலவரை, இடிக்கும் வகையில் பேய் போன்ற வேகத்தில் வந்து, நொடியில் இடப்பக்கமாக வண்டியை திருப்பி, “ன்னா மாமே ., உசிர் மேல ஆசயில்லையா?”, என்று அந்த அத்வான சாலையில் அயனான நேரத்தில் கர்ணகடூரமாக அலறியவாறே பறந்தான்.

அந்த காவலர் திகைத்து நிற்க, அவர் அருகே வந்து, “யோவ். வேலைக்கு புதுசா? இந்த நேரத்துல ***** கட்சி வாரிசும்,  *********** குரூப் கம்பெனியோட பசங்களும்  அவங்க ஃபிரென்ட்ஸ்  கூட வருவாய்ங்கன்னு தெரியாது? பேசாம ஓரமா நில்லு, இல்லன்னா ஹிட் அண்ட் ட்ரைவ் ன்னு நீ நாளைக்கு பொணமாத்தே பேப்பர்ல வருவ”, ஒரு நடு வயதில் இருந்த போலீஸ் கூறவும், பயத்தோடு சாலையின் ஒரு பக்கமாக நகர்ந்து நின்றார் அந்த புது போக்குவரத்து போலீஸ்.

“சார் இந்த வேகத்துல போனா அவங்களும் பொணமாதான் கிடைப்பாங்க”, என்று அவர் நடுத்தர வயது காவலரிடம் கூற..

“போகட்டுமேய்யா, நாட்ல நடக்கற கொஞ்சம் அக்கரமமாவது குறையும்”, என்று அவர் கூறியதும் இளம் காவலர் சிரித்தார்.

“சிரிச்சிட்டு நிக்காம, இன்னும் இப்படி ஓரமா வந்து நில்லு, இன்னும் நாலைஞ்சு பொறுக்கிங்க பறப்பாய்ங்க, ஒருத்தனுக்கு கண்ணு மண்ணு தெரியாது”, என்று அவர் சொல்லி முடிக்கவும் அடுத்தடுத்து மதிவாகனனின் இரு சக்கர வாகனத்தை ராக்கெட் வேகத்தில் விரட்டிய ஒருவன், பின் மற்றொருவன் அதை தொடர்ந்து இன்னொருவன் சென்றனர். அவர்கள் கடக்கையில் வெறும் ‘ங்கொய்ங்’ மட்டும்தான் கேட்டது. அத்தனை வேகம்.

“எங்கே சார் இவ்ளோ வேகமா போறாங்க?, அதும் இந்த நேரத்துல?”

“இவய்ங்களுக்கு என்னாயா நேரமும் காலமும்?, இதுங்களுக்குன்னு ஏதாவது ஒரு பங்களா மாட்டும், புட்டி குட்டின்னு அவங்கவங்க இஷ்டத்துக்கு வசதிக்கு கூப்பிடுவானுக”, இது அவருக்கு வெகுநாள் பழக்கம் போலும்.

இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும்போது உத்தண்டி தாண்டி ஒரு பீச்-ஹவுஸ் லாபியில் நால்வரும் நின்றிருந்தனர்.

“என்ன மச்சி, இன்னிக்கும் விட்டுடீங்களே?, மொத பூஜ என்னோடதுதான்”, என்றான் மதிவாணன் கண்களில் போதையுடன்.

“அடப்போ மாமே, எங்களுக்கு நீ ன்ன குடிக்க கொடுக்றன்னே தெர்ல, சும்மா வானத்துல பறக்கற மாதிரியே ஒரு ஃபீல், இன்னும் வண்டியோட்டும் போது ஸ்பேஸ்-ல போறா மாதிரி ஒரு ஃபீல், நானெல்லாம் வண்ழி.. ஓல்டி… வந்ச்ச்சே.. பெர்ஸ்..”, அதுவரை எப்படியோ சமாளித்து ஆடியபடி நின்றிடிருந்த கதிர் வண்ணன் அங்கேயே அப்படியே விழுந்தான்.

“யேய்.. இவனுக்கெல்லாம் எதுக்குடா ஜென்டில்மேன் ஜாக்? பேசாம ஒரு பீரை குடுத்துட்டு வாடான்னு சொல்லி இருக்கலாம்”, பேசிய மதிக்கு நண்பனை தூக்க முடியாமல் போகவே, “டே, அந்த கைய பிடிங்கடா”, என்று இருவருக்கு மூவராக பிடித்து அவனை ஒரு அறையின் படுக்கையில் தள்ளினர்.

ஹாலுக்கு வந்தவன், “சம்பூ …” என்று குரல் குடுக்க… “தம்பி..”, என்று ஒருவர் வந்து நின்றார். வந்தவர் ஐம்பதுகளின் துவக்கத்தில் இருந்தார். இந்த கடற்கரை வீடு அவருடையதுதான். வேறொன்றுமில்லை, இது அவர் பெயரில் பினாமியாக பதியப்பட்டிருந்தது. கிணற்றில் விழு என்று சொன்னால் விழுந்துவிட்டு அங்கிருந்து எழ முடிந்தால் எழுந்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிற அளவுக்கு நன்றி உள்ளவர் சாம்பசிவம். இந்த வீட்டிற்கு காவலாய் இருப்பவர்.

“யாராவது வந்தாங்களா, இல்ல போன் வந்ததா?”

“ஆமாங்கய்யா, கொஞ்ச நேரம் முன்ன போன் வந்தது நீங்க வந்தாச்சான்னு கேட்டாங்க”

“சரி, சைட் டிஷ்-ல்லாம் ரெடியா வச்சிருந்தீங்கன்னா.  நீங்க தோட்டக்காரனையும்  கூட்டிட்டு கிளம்புங்க”, மதிவாணன்.

“தம்பி, எப்பவும் நான் இங்கதான் படுக்கறது”, தயங்கி தயங்கி சாம்பசிவம்.

“யோவ்.. இன்னிக்கு தோட்டக்காரன் குப்பத்துல படு, ப்பே”, என்று அலட்சியமாக சொல்லி, “இங்கப்பாரு காலைல சீக்கிரமா வந்து கழுத்தறுக்காத, நாங்களா எழுந்திரிச்சி பசிக்கும்போது கூப்பிடறோம். அப்டியே.. போகும்போது ரெண்டு கேமராவையும் ஆஃப் பண்ணிட்டு போ. இந்தா…”, என்று அசால்ட்டாக 2000 ரூபாய் தாளை நீட்டினான்.

ஒரு நீளமான பெருமூச்சுடன், அதை பெற்றுக்கொண்டு வாசலை நோக்கி நடந்தார் சாம்பசிவம்.

அவர் நகர்ந்ததும் தனது மொபைலை எடுத்த மதிவாணன், “என்ன? யாருனு தெரியுதா? நீ கேட்ட மாதிரி வீட்ல வேலை பாக்கற எல்லாரையும் அனுப்பிட்டேன். பார்ட்டி ரெடியா?”

“……”

“ஹேய்… என் டேஸ்ட்-க்கு ஏத்தா மாதிரி இருக்கணும்.  அத விட்டுட்டு ஏதாவது ஓல்ட் பீஸ் அனுப்பி வச்ச.. …”

“……”

“இததாய்யா எப்பவும் சொல்ற.., சரி வை போனை”, என்று சலித்துக் கொண்டே அழைப்பைத் துண்டித்தான்.

நண்பர்களை பார்த்து, “மால் வருது மச்சீஸ். கொஞ்சம் ஸ்ருதி சேர்ப்பமோ? நா என் ரூமுக்கு போய் எடுத்திட்டு வர்றேன். அவளுங்க வந்துட்டாங்கன்னா கதவை திறந்து விடு”.

“நாங்க ஏற்கனவே ரெண்டு பேரை போட்டோ பாத்து செலக்ட் பண்ணிட்டோம். அந்தாளு உனக்கான பீஸோட அனுப்பறேன்னு சொல்லி இருக்கான் மதி. நீ போ, உன் ஐட்டத்தை எடுத்திட்டு வா,  ரெண்டு இழுப்பு இழுத்தா.. ச்சும்மா தூக்கும் “, என்று அவனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு வெளிநாட்டு சிகரெட் பெட்டியை எடுத்து தந்தது ஞானா என்றழைக்கப்படும் ஞானப்பிரகாசம். தென்னகத்தின் பெரிய வியாபார காந்தத்தின் பிள்ளை. சமீபமாக வந்த தேர்தலில் நடந்த ரெய்டின் போது இவர்களது நிறுவனத்தின் பெயரும் அடிபட்டது. அது பின்னால் காற்றோடு போனது. அரசாங்கத்திடம் அத்தனை செல்வாக்கு.

“இரு ஸ்டப் (stuff) பன்னிட்டு வர்றேன்”, என்று சொல்லி மதி  அவனது அறைக்கு சென்றான். அந்த சிகரெட்டில் போதை பொருளை நிரப்ப சென்றான்.

சிறிது நேரத்தில் காலிங் பெல் சப்தம் ரிதமாக அழைக்க, “கமிங்..”, என்று சொல்லி ஞானா கதவு திறக்க, ஸ்டோல் கொண்டு தலையை ஸ்டைலாக போர்த்தியபடி ஒரு ஜீன்ஸ் டீ-ஷர்ட் யுவதி உள்ளே வந்தாள். தனது முகம் மறைக்கும் கூலர்ஸை  (அந்நேரத்தில் கூலர்ஸ் ? ) கழற்றி, டீ-ஷர்ட்டின் மத்தியில் செருகினாள். மேல் பட்டன் போடாதிருந்ததால் அதுவே அவனுக்கு கொஞ்சம் கிளுகிளுப்பைத் தந்தது. ஈ என்று இளித்தான்.

“மிஸ்டர் மதி..?”, என்று குயில் கூவுவதைப்போல இனிமையாக கேட்டு, சுவாதீனமாக அவனை ஈஷியபடியே ஹால் கதவை தாள் போட்டாள்.

ஞானா அவளது உரசலில் தேவலோகத்தில் சஞ்சரிக்க, அரைமயக்கத்தில் இருந்த முரளிக்கோ அவள் குரலே இன்னும் போதை ஏற்றுவது போலிருந்தது. அவன் மதியின் அறையை நோக்கி தானாக கைநீட்ட, அவள் சிறிதும் தயக்கமின்றி நடந்து மதிவாணனின் அறைக்கு சென்றாள். ஐந்து நிமிடத்தில், ட்ரேயில் இவர்களுக்கு பிரியமான பாணத்துடன் அழகாக நடந்து வந்தாள்.

அவளது உடை இப்பொது தொடை அளவு ஜீன்ஸ் & டீ ஷர்ட்-டாக இருந்தது. முரளியும், ஞானாவும் கண்களால் அவளை அளவெடுத்தபடி அவர்களது கோப்பையை எடுத்துக்கொள்ள, மதி பின்னாலேயே வந்து அவளை ஒட்டி நின்றபடி அடுத்த கோப்பையை எடுத்தான். இன்னொமொரு கப் மிச்சமிருக்க, “இது…?” என்று அந்த அப்ஸரஸ் கேள்வியாய் நோக்க,

“அது கதிர்க்காக, பட் அவன் அப்போவே ஃபிளாட்”, என்று இளக்காரமாக சிரித்தான் மதி.

“நான் வேணா கூட்டிட்டு வரட்டுமா?”, அப்பெண்ணின் குரல் குழைந்தது. மகுடிக்கு மயங்கியவர்கள் போல, கையில் கண்ணாடி கோப்பையோடு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த மூவரில் முரளிதான், “நீ கூப்டா அவன் எழுந்துக்க நிறயா வாய்ப்பிருக்கு ஹ ஹ ஹ”, என்று மற்றொரு அறையைப் பார்த்து  இளிக்க.., அங்கே சென்று கதிருக்கான கப்பை குடுத்து விட்டு, அவன் அதை அருந்தத் துவங்கும் வரை காத்திருந்து வெளியே வந்தாள்.

கோப்பையை கையில் வைத்தபடி, “ஆமா, மத்த பொண்ணுங்க எல்லாம் எங்க? இன்னும் ரெண்டு பேரை வர சொல்லியிருந்தோமே?”, முரளி கேட்டான்.

“அவங்க வண்டி-ல ஏதோ ப்ராப்ளம், இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவாங்க, அதுவரைக்கும் நா கம்பெனி குடுக்கலாமில்ல?”, பேசும்போது அவளது அடர் சிகப்பு உதட்டு சாயம் மினுமினுக்க, அது அவள் முகத்தை இன்னமும் கவர்ச்சியாக காண்பித்தது.

“ஐயாம் வெயிட்டிங்”, என்றான் ஞானா ஸ்டைலாக.

“மீ ரெடி..”, என்றாள் தோளைக் குலுக்கி…, “பட் .. அஃப்டர் தி ட்ரின்க்..”, என்று ஒரு கோக்-கை கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்த சோஃபா வின் கைப்பிடியில் அமர்ந்தாள். அவர்கள் அனைவரும் தொடை அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்து, தத்தமது பானத்தை அருந்தி முடித்தனர். அதுவரை மெல்ல கோக்கை சிறிது சிறிதாக உறிஞ்சியவள், இப்போது அவர்களறியாதவாறு கொஞ்சம் தனது சட்டையில் கொட்டிக் கொண்டாள். “ஓஹ். நோ”, என்று போலியாக வருந்தி, “டூ மினிட்ஸ் ப்ளீஸ்”, என்று விட்டு அறைக்கு நுழைந்தாள். ஆனால் அவர்கள் இவளை கவனிக்கும் நிலையில் இல்லை.

அறைக்குள் நுழைந்தவன், கதவை உள்பக்கமாக தாளிட்டு வேகமாக அங்கிருந்த அவளது கைப்பையைத் துழாவி அதில் இருந்த ஜாமரை உயிர்ப்பித்தாள். கூடவே அவசரமாக லேண்ட் லைன் ரிஸீவரை தாங்கியில் இருந்து எடுத்து வெளியே வைத்தாள். பின்  அமைதியாக அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து மணி பார்க்க ஆரம்பித்தாள்.

மறுநாள் காலை பதினோரு மணிவரை தோட்டக்காரரின் வீட்டில் காத்திருந்த சாம்பசிவம், ‘இன்னமும் தனது சின்ன முதலாளியிடம் இருந்து அழைப்பு வரவில்லையே’, என்று கவலைப்பட்டு ‘நேரே சென்று பார்த்து விடுவோம், அவர் திட்டினாலும் பரவாயில்லை என்று வீட்டிற்கு வந்தார். மெயின் கேட்டைத் திறந்து உள்ளே வந்தவர், வீட்டின் பிரதான வாசல் பூட்டியிருக்க, ‘சரி தம்பி தூங்கறாங்க போல’, தனக்குத்தானே சொல்லி, தன்னிடம் இருந்த மாற்று சாவியைக் கொண்டு கதவைத் திறந்து பார்த்தார். வெளி வராண்டா கடந்து வந்த சாம்பசிவம் கண்டது, அங்கங்கு அலங்கோலமாக கிடந்த நால்வரின் உயிரற்ற உடல்களை.