அத்தியாயம் 5
ஷண்மதி மொத்தமாக தன்னை அந்த கொலை நடந்த நிகழ்விடத்துக்கு, அவளது மனத்தைக் கொண்டு சென்றாள். சாலை விபத்தில் இறந்துபோன பெண், இவர்கள் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்ததாக சிவராம் சார் சொன்னது மனதில் ஓட, அந்த அறையின் பால்கனியில் இருந்து பார்த்தால் அமைச்சரின் கடற்கரை வீடு தெளிவாக தெரியும் என்பது புரிந்தது.
இரவு சாம்பசிவம் உட்பட அனைவரும் அந்த வீட்டில் இருந்து சென்று விட்டார்களா என்பதை அறிந்த பின்னர் தான் அடுத்த வீட்டிற்கு இவள் சென்றிருக்கக்கூடும். இவள் தான் கொலைகளைச் செய்தாளா? அப்படியானால், சாம்பசிவத்திற்கு போன் போட்டு பேசியது இவளது கையாளா? ஆம் என்றால் அது யார்? அதுவும் திருடப்பட்ட அலைபேசியில் இருந்து? ஒருவேளை இது எதுவுமே இல்லாமல் இவள் வேறு யாரோவா?  அல்லது கொலை செய்தவன் இவள் பலிகடாவாக்கி…?
கேள்விகள் கேள்விகள்… தொடர்ந்து கேள்விகள் மனதில் அணிவகுத்தன. ஆழ மூச்சிழுத்து மனதை குவியமாக்கினாள். சரி, இந்தப் பெண் இறந்துவிட்டாள், இனி இவளிடமிருந்து எந்த ஒரு தகவல்களும் பெறமுடியாது. ஆனால் அந்த போனில் பேசிய எக்ஸ் எங்கே? அவர்களுக்கும் இறந்த நால்வருக்குமான தொடர்பு என்ன? கொலை செய்யுமளவு என்ன பகை?’ யோசனைகளோடு எதிரே பார்க்க அங்கே சூர்யா பேசியின் திரையை வெகு தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்திற்கு முன் துல்கர் பிரேத பரிசோதனை தகவல்களை தனக்கும் சூர்யாவிற்கு  அலைபேசியில் பகிர்ந்திருந்தான். சூர்யா அதை இந்நேரம் நெட்டுரு செய்திருப்பாள் என்பதால், விபரங்கள் கேட்க, “சூர்யா”, என்று அவளைக் கூப்பிட..
“ஆஹ். எஸ் மேம்”
“என்ன சொல்லுது பிஎம் ரிப்போர்ட்?”
“நாம நினச்சா மாதிரி பாய்சன் டெத் தான். அகோனிட்”
“ம்ம். ஸ்வீட் பாய்சன், எதிர்பாத்தேன்”, ஷானு அந்த தகவல்களை அலைபேசியில் மேய்ந்து கொண்டே பேசினாள்.
“மேம், ஒரு டவுட், அகோனிட் -டை பொறுத்தவரைக்கும், ஒரு மனுஷன்  இறந்துபோக சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேர்ந்து நாலு மணி நேரம் ஆகனுமில்ல?”
“எஸ், ஆனா டோஸேஜ் அதிகம் இருந்தா?, கிட்ட தட்ட டென் எம்ஜி வரைக்கும் உள்ள போயிருக்கும்னு தோணுது. மேக்சிமம் அரைமணி நேரம் கஷ்டப்பட்டு இருக்கலாம்”, என்று நிறுத்தி சூர்யாவைப் பார்க்க, அவள் யோசனையாக தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவள், “சாகறதுக்கு முன்னாடி”, என்று கூறி  தொடர்ந்து,
“அகோனிட் செடியோட வேர் பகுதி ரொம்ப விஷம்ன்னு தெரிஞ்சு சரியா அதை பௌடர் பண்ணி யூஸ் பண்ணி இருக்காங்க. யூ க்நோ ஒன் திங்? இதே அகோனிட்-டை ஹோமியோபதில மருந்தா உபயோகப்படுத்தறாங்க. ஆனா நல்லா ப்ராஸஸ் பண்ணி மருந்தாக்கி தர்றாங்க “,
“மேம், அகோனிட் குடிச்சா அவங்களுக்கு சிம்டம்ப்ஸ் தெரியாதா..?”, என்று சூர்யா இழுக்க..
“ஹ்ம்ம்.. இந்த விஷத்தைப்  பொறுத்தவரைக்கும் குடிச்ச உடனே, அந்த லிக்விட் உள்ள போம்போது ஒரு ச்சில்னஸ் பரவும், அது அப்படியே எரிச்சலா மாறும். தொடர்ந்து வாமிட்டிங், டையரியா.., கொஞ்ச நேரத்துல பேச்சு குழறும், தென் நடக்க முடியாம,  அசைய முடியாம போகும்”, என்று அந்த விஷம் சம்பந்தமான அவளுக்கு தெரிந்த தகவல்களை சொன்னவள்,  “இவங்க ட்ரிங்க்ஸ் கூட கலந்து எடுத்துகிட்டதால அந்த எரிச்சலை வேற மாதிரி எடுத்திட்டு, மேல மேல குடிச்சிருப்பாங்கன்னு தோணுது. சூரி, நாம பாத்த போட்டோஸ்-ல செத்துப்போன ஒருத்தன் பக்கத்துல போன் இருந்ததில்ல?”
“எஸ் மேம், ஆனா அந்த வீட்லேர்ந்து அன்னிக்கு நைட், அந்த டைம்-ல எந்த கால்ஸ்-ம் போகலைன்னு ரிப்போர்ட் சொல்லுது”
சிறிது யோசித்து.. ஏதோ புரிந்ததுபோல தலையசைத்து, “கால் போயிருக்காது”, என்றாள் உறுதியாக.
சூர்யா ‘எப்படி?’ என்று கேள்வியாக அவளை நோக்க,
“அந்த நாலு பேர் மொபைலேர்ந்து யாருக்காவது அந்த நேரத்துல போன் பண்ணி இருக்காங்களா செக் பண்ணு,  டையல்ட் நம்பர்ஸ் ரிப்போர்ட் இருக்கா?”, என்று கேட்டதும் ஷானு சொல்ல வருவது சூர்யாவுக்குப் புரிந்தது.
“ஓ! மேம், ஜாமர் யூஸ் பண்ணி இருப்பாங்கன்னு சந்தேகப்படறீங்களா?”
“யா,  வாய்ப்பிருக்கு, யோசிச்சு பாரு, எமர்ஜென்சின்னா அவங்க பேரன்ட்ஸ் அல்லது ப்ரண்ட்ஸ்-கு கால் பண்ணுவாங்கதான?”, ஷானு கேட்க..
“ஹ்ம். சோ அதை தவிர்க்கறதுக்கு ஜாமர் எடுத்துவந்திருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா?”
“எஸ்”, என்று மீண்டும் அந்த தரவுகளை ஷானு பார்வையிட..
சூர்யா திடீரென நினைவு வந்தவளாக, “மேம், அங்க இருந்து கொலை நடக்கறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி, செத்துப்போன மதிவாணன் அவனோட மொபைல்ல இருந்து கால் பண்ணி இருக்கான், அந்த நம்பரை போலீஸ்  விசாரிச்சு ஆள் யாருன்னு தெரிஞ்சிக்கிட்டாங்க. அது ஒரு பொண்ணுங்க ப்ரோக்கர் நம்பர்”
“ஓஹ். அப்போ அவன் அன்னிக்கு யாரையாவது அனுப்பினானா?”
“இல்லன்னு சொல்றான், ஆனா போலீஸ் அவனை நம்பலை, அந்த அர்த்தராத்திரில ஒரு உபேர் கார் புக் பண்ணி அதை கேன்சலும் பண்ணி இருக்கான். கேட்டா அது வேற VIP க்காக புக் பண்ணினது, ஆனா அவர் வேணாம்னு சொல்லிட்டார்-ன்னு சொல்றானாம்”
“சரி, ஆனா இவங்க வீட்டுக்கு வந்து சேர்றதுக்கு முன்னாடி ‘இவங்க வந்துட்டாங்களா?’, கேட்டு ஒரு கால் வந்ததே அது யார் பண்ணினதுன்னு கண்டுபிடிச்சிட்டாங்களா?”
“அந்த கால்  ECR-லேர்ந்து வந்தா மாதிரி சிக்னல் காமிக்குது. ஆனா அதோட ஓனர் நம்பர் இருக்கு, போய் பாத்துடலாம் மேம்”
“வேற எதுவாவது சந்தேகப்படறா மாதிரி..? ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ்?”
“அது அங்கங்க கிடைச்சிருக்கு மேம், டோர் கைப்பிடி-ல, ட்ரிங்க்ஸ் க்ளாஸ்-ல ன்னு ஏகப்பட்டது இருக்கு.”
“அந்த நகரி-ல செத்த பொண்ணோட இந்த பிங்கர் ப்ரிண்ட்ஸ் மேட்ச் ஆகுதா-னு பாத்தாங்களா?”
“இல்ல மேம், அந்த பாடி மொத்தமா சிதைஞ்சு போயிருக்கு. யார்னு கண்டுபிடிக்க முடியல-ன்னு அந்த ஸ்டேஷன்-ல புலம்பறாங்க. முகம் தெரிஞ்சா ஒருவேளை முயற்சிக்கலாம்னு இருக்காங்க. கைரேகை ட்ரேஸ் பண்ணிட்டு உடனே அனுப்பறோம்னு சொல்லி இருக்காங்க”
“இங்க ஹோட்டல் cctv-ல இருக்குமே?”
“மேம், நாம பாத்ததுதான் அது, இங்க பாருங்க முகம் முழுக்க மறைக்கிறா மாதிரி சன் க்ளாஸ், தலைக்கு மேல ஸ்டைலா ஸ்டோல் போட்டு முகம் மறைச்சிருக்கா, முகத்துல ரெண்டு பக்கமும் முடி தொங்குது, பத்தும் பாத்தாதக்கு  மேட்சிங் மாஸ்க் வேற போட்டு இருக்கா. இதுல என்ன கண்டுபிடிக்கிறது?”
“அவ தங்கி இருந்த ரூம்?”
“அவ செக் அவுட் பண்ணிட்டு போனதுமே ஹௌஸ் கீப்பிங் வந்து சுத்தம் பண்ணிட்டாங்க”
“ஓகே. போன்?”
“எஸ். இந்த பொண்ணு ஹோட்டல்ல குடுத்த நம்பர்தான் அங்க இறந்துபோன பொண்ணு கிட்டயும் இருக்கு. ஆனா, உறுதியா இவதான் இறந்ததான்னு தெரியல மேம்”
“பட், சிவராமன் சார் யூகப்படி பாத்தா, இறந்து போன பொண்ணுக்கும் இந்த கொலைகளுக்கும் கண்டிப்பா சம்பந்தம் இருக்குன்னு தான் தோணுது”
“யா எனக்கும் அப்படித்தான் தோணுது”
“சரி அந்த மொபைல் தொலைச்சது யாருன்னு டீடெயில்ஸ் பாரு”, என்று சொல்லும்போதே ஒரு தகவல் வர..
“மேம்,  மெசேஜ்.. துல்கர் சார்”
“வெல், இறந்துபோனது அந்த ஹோட்டல்ல இருந்த பொண்ணுன்னு உறுதியா தெரிஞ்சிடுச்சுன்னு சொல்றார்”
“சோ கொலை பண்ணினது ஒருவேளை இவளா இருக்கலாம்”, என்று ஷானு சொல்ல..
“அல்லது இவ கூட சேர்ந்து இன்னும் ரெண்டு மூணு பேர் பண்ணி இருக்கலாம்.”
“ஆஹான்?”, கேள்வியாய் ஷானு.
“ஒரு கெஸ் தான் மேம்”, என்ற சூர்யா,  “ஆனா கண்டிப்பா இன்னொரு ஆள் இருக்கான். அது யாருன்னு தெரியணும்”
“சரி யாரை பிடிச்சா அந்த எக்ஸை கண்டுபிடிக்கலாம் சொல்லு?”
“ஹ்ம்ம்…”, என்று யோசனைக்கு போன சூர்யா,  “செல் தொலைஞ்ச இடம் எதுன்னு தெரிஞ்சா, அங்க இருக்கிற ஆள் யாராவது…”, என்று கண்மூடி யோசித்து.. “ஏதாவது ஒரு க்ளூ கிடைக்கலாம் மேம்”
“இந்த கேஸ் விசாரிக்கறவங்க அதை பண்ணலையா?”
“இல்ல, அந்த கால்-லை அவங்க பெரிசா எடுத்துக்கல, காரணம் இந்த புரோக்கர் அனுப்பின யாரோதான் இந்த கொலைகளை பண்ணி இருப்பாங்க-ங்கிற கோணத்துல அவங்க யோசிக்கறாங்க”, சூர்யா.
ஷானு, “ஷார்ட்-ஆ சொல்லனும்னா, ஹோட்டல்-ல தங்கின பொண்ணு இங்க எந்த பிக்ச்சர்லயும் வரல. சோ, அவங்க வேற ரூட்-ல போறாங்க அல்லது வேற ரூட்-க்கு அவங்களை திருப்பி விடறாங்க. நாம ரெண்டு வழியையும் ஆராயனும். கரெக்ட்டா?”
“எஸ் மேம்”
“ஓகே, போனை தொலைச்ச ஆள் அட்ரஸ் இருக்கா?”
சூர்யா ஷண்மதியை குறுகுறுவெனப் பார்த்து, “மேம்..?”, “ஏதாவது பிரச்சனையா?”, என்றாள்.
நாற்காலியில் அமர்ந்திருந்த ஷானு நன்றாக சாய்ந்தமர்ந்து தன் ஒற்றைப் புருவம் மேலேற சூர்யாவைப் பார்த்து, “சப்போஸ் உன் போன் காணாம போனா நீ என்ன பண்ணுவ?”
“ஐயோ மேம், ஐ போன் வாங்கி ஜஸ்ட் ரெண்டு மாசந்தான் ஆகுது, அதுக்குள்ள இப்படி சொல்றீங்களே?”, பொய்யாக பதறினாள்.
“ப்ச். சொல்லு”
“ஹ்ம்ம். எப்போலேர்ந்து காணோம்? எங்க காணாம போயிருக்கும்? ன்னு யோசிப்பேன், வேற நம்பர்லேர்ந்து விடாம என் மொபைலுக்கு கால் போட்டுட்டே இருப்பேன். அப்படியே கடைசியா அதை எங்க யூஸ் பண்ணினேன்னு யோசிச்சு அந்த இடத்துக்கு போயி தேடிப்பார்ப்பேன்.”
“குட், இதுக்கெல்லாம் எவ்ளோ டைம் எடுக்கும்?”
“மேம், அது எவ்ளோ நேரமா காணலைங்கிறதைப் பொறுத்து இருக்கு. எப்படியும் குறைஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும்”
“குட். அப்படி இருக்கும்போது இவங்க போன் காணாம போயி அரைமணி நேரத்துக்குள்ள மொபைல் காணோம்ன்னு கம்பளைண்ட் குடுத்திருக்காங்க”
“மேம், மே பி எங்க தொலைச்சோம்னு தெரியாம இருக்கலாம்”
“யா, இருக்கலாம் தான். சிம் பிளாக் பண்றது கூட சரின்னு ஒத்துக்கலாம். ஆனா, போன் தொலைஞ்சு போச்சுன்னு ஸ்டேஷன்-ல கம்பளைண்ட்… கொஞ்சம் அதிகமா தெரில?”
“நீங்க சொன்னதுக்கப்பறம்..  தெரியுது மேம்”
“போலாம் வா”, சொன்ன பத்தாவது நிமிடம் தெருவில் அவர்களது வாகனம் சீறியிருந்தது.
“அவங்க எங்க ஒர்க் பண்றாங்க?”
“ஆர் பி ஐ – ல மேம்”
“ஆர் பி ஐ குவாட்டர்ஸ் ல தான் இருக்காங்களா?”
“யா, கோயம்பேடு டெர்மினல் க்கு முன்னாடி ஆபீஸர்ஸ் காலனி இருக்கில்ல அங்க”.
அரைமணி நேரம் மௌனமாய் கரைந்தது. இருவரும்  பார்க்கப்போகும் இந்த நபர் என்ன விதமானவனாக இருப்பான் என்று வேறு வேறு கோணத்தில் அவதானித்துக் கொண்டிருந்தனர்.
அந்த குடியிருப்பின் வாசலில் செக்யூரிட்டி இருந்தனர். விபரம் சொல்லிய பிறகே உள்ளே விட்டனர். நல்ல காற்றோட்டமான இடம், கோயம்பேடு அருகே இவ்வளவு அமைதியாய் பசுமையாய் ஒரு குடியிருப்பு. வீடுகள் கொஞ்சம் பழையன போலத் தெரிந்தாலும் விஸ்தீரணம் அதிகம் என்றே தோன்றியது. அந்த இடத்திற்கே ஒரு தனி ஆளுமை இருப்பது போல ஷானு சூர்யா இருவருக்கும் தோன்றியது.
மூன்றாவது மாடியில் இருந்த வீட்டை கண்டிப்பிடித்து, காலிங் பெல்லினார்கள். முப்பதுகளின் மத்தியில் இருக்கும் ஒரு பெண் கதவைத் திறந்து, “எஸ்?” என்றாள்.
“சோனு?”
“ஆமா, நான்தான்”
ஷானுவும் சூர்யாவும் நிச்சயமாக ஒரு பெண்ணை அங்கே எதிர்பார்க்கவில்லை, நொடிக்கு குறைவான நேரத்தில் ஷானு தன் அதிர்வை மறைத்து, “ஹம்.. அது உங்க மொபைல் காணாம போனது பத்தி பேசலாம்னு வந்திருக்கோம்”, என்க..
சோனுவின் முகம் பசையிழந்தது. பின் திடமாகி “உள்ள வாங்க”, என்றாள்.
“உக்காருங்க, ஒரு நிமிஷம், அடுப்பில பால் வச்சிருக்கேன் ஆஃப் பண்ணிட்டு வர்றேன்”, என்று உள்ளே சென்றாள் சோனு aka சோனு கக்கர்.
வீட்டை சூர்யா ஷானு இருவரும் சோனுவின் வீட்டைப் பார்வையால் அளந்தார்கள். தேவையான அளவான பொருட்கள். சாதாரண ஒரு மத்திய அரசு மேலதிகாரியின் வீட்டில் காணப்பட வேண்டிய குறைந்த பட்ச அத்தியாவசிய ஆடம்பரங்கள் கூட காணப்படவில்லை. மூங்கில் சோபா செட் இருக்கைகள். சுவரில் பல கைகள் மட்டும் சேர்த்து பிடித்தாற்போல் ஒரு புகைப்படம். அலமாரியில் புத்தகங்கள். அதில் ஆழ் மனதின் அற்புத சக்திகள், மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ், ரஸவாதி கூட இருந்தது.
சோனு இரு கண்ணாடி கோப்பைகளில் நீரோடு வந்தாள். இப்போது தெளிவாக இருந்தாள். மிகத் தெளிவாக.