இரவு உணவை சீக்கிரமே முடித்துப் பெரியவர்கள் உறங்க சென்றுவிட… தேவிக்கு வீட்டை ஒதுங்க வைக்க உதவி விட்டே… அருள் படுக்கச் சென்றான்.
எல்லோருக்குமே கல்யாணம் அலுப்பு என்றதால் படுத்தவுடன் உறங்கிவிட… அருள் மட்டும் உறங்காமல், அவர்கள் பகுதியை சுத்தம் செய்தவன், பவித்ரா போட்டு விட்டு சென்ற உடைகளை எல்லாம் துவைத்து, வீட்டிற்குள்லேயே உளற வைத்தான்.
வீட்டை எல்லாம் முழுவதும் சுத்தம் செய்த பிறகு, அவனுடைய தோல்பையில் அவனுடைய உடைகளை எடுத்து வைத்தவன், தனது குடும்பப் படம் மற்றும் இன்னும் சில புகைப்படங்களை மட்டும் நினைவுக்கு எடுத்துக் கொண்டான்.
உடை மாற்றிக் கைப்பேசி மற்றும் பர்ஸ் எடுத்துப் பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, தனது தோள்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
பக்கத்தில் அவனின் சித்தப்பா வீடு இருளில் முழ்கி இருக்க… தானியங்கி கதவு என்பதால்… கதவை இழுத்து மட்டும் விட, கதவு பூட்டிக் கொண்டது. ஏற்கனவே சாவியைக் கொண்டு போய் அந்த வீட்டில் வைத்து இருந்தான். பக்கவாட்டில் இருந்த வாயில் கதவை மெதுவாகத் திறந்தவன், யாருமற்ற சாலையில் நிதானமாக நடந்தான்.
சாலையில் வந்த ஆட்டோவில் ஏறி கோயம்பேடு வந்தவன், கிடைத்த பாண்டிச்சேரி வண்டியில் ஏறினான். அங்கிருந்து வேளாங்கண்ணிக்குப் பஸ் கிடைப்பது எளிது. ரோஜாவை அழைத்துத் தான் வந்து கொண்டிருப்பதாகச் சொல்ல… ரோஜாவுக்கு நம்பவே முடியவில்லை.
“நிஜமாவா…” என அவள் ஆச்சர்யப்பட… பஸ்சில் ஏறி விட்டேன் என்றவன், காலையில் பாப்போம் என வைத்துவிட்டான். அதன் பிறகு ரோஜாவுக்கு எங்கே உறக்கம். எப்போது பொழுது விடியும் எனக் காத்துக் கொண்டு இருந்தாள்.
நிஜம்மாகவே அவளுக்கு எப்போது அருள் வருவான் என்று ஆகிவிட்டது. ஒன்றிரண்டு இருந்த சொந்தங்களும், “நீ மட்டும் எப்படித் தனியா இருப்ப? நாங்க வேணா துணைக்கு இங்க வந்து இருக்கவா?” என்றனர். துணைக்கு என்பதை விட… ரோஜாவின் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களே அவர்கள் கண்களை உறுத்தியது.
மரியதாஸ் இல்லை என்ற தைரியத்தில், இன்னும் சிலர் தனியாக இருக்கும் பெண் தானே என்ற எண்ணத்தில், குடித்துவிட்டு வந்து நோட்டம் பார்த்தனர்.
அது போல வந்து ஒருவன் ரோஜாவிடம், “உனக்கு என்ன வேணும் என்னைக் கேளு, நான் வாங்கித்தரேன்.” என்று உளற…. பக்கத்து வீட்டு வனஜா வந்து, “என்ன உதை கேட்குதா உனக்கு… அருளுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?” என்றதற்கு,
“அவன் தான் இங்க இல்லையே… இனிமே இங்க வரப் போறானா என்ன? அவன் வருவான்னு இன்னும் நம்பிட்டு…” என அவன் சொல்லிவிட்டு செல்ல…ரோஜாவிற்கு இன்னும் எத்தனை நாட்கள் இவர்களை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும் என்று இருந்தது.
நல்லவேளை இப்போது அருள் நாளை வந்துவிடுவேன் என்றது அவ்வளவு நிம்மதியாக இருந்தது. அவன் அவள் வீட்டில் இல்லை….. இந்த ஊரில் இருந்தாலே அவளுக்குப் போதும் என்றானது.
அருள் அடுத்து ஜோசப்பை அழைத்து வெகு நேரம் பேசினான். பிறகு செல்லை அனைத்து வைத்து விட்டான்.
காலை விடிந்ததும், ரோஜா எழுந்தவள், நேராக அருள் வீட்டிற்குத் தான் சென்றாள். அவன் வீட்டை சுத்தம் செய்தவள், பிறகே தங்கள் வீட்டிற்கு வந்தாள்.
வெகு நாட்கள் கழித்துத் இன்றுதான் வாசல் தெளிக்கிறாள். அப்போதே அருளும் வந்துவிட…. இந்தச் சில நாட்களாக இருந்த அழுத்தம் எல்லாம் அவள் கண்ணீராகக் கரைந்தது.
“ரொம்ப முக்கியமான நேரத்தில நான் உன்னோட இருக்கலை… என்ன காரணமா இருந்தாலும், அது தப்பு தான். இனி எப்பவும் உன்னை விட்டு இருக்க மாட்டேன்.” என்றான் அருள்.
“உங்க தங்கச்சி இன்னும் வெளிநாடு போய் இருக்க மாட்டாங்களே… அவங்களை விட்டு எப்படி வந்தீங்க?” ரோஜா அப்போதும் பவித்ராவுக்காக யோசித்தாள்.
“அது தான் மாதவன் இருக்காரு இல்ல.. அவர் பார்த்துப்பார்.”
இருவரும் திண்ணையில் உட்கார்ந்து தான் பேசிக் கொண்டு இருந்தனர். அருள் வந்துவிட்டது தெரிந்து அக்கம் பக்கம் இருப்போர் எல்லாம் வந்துவிட்டனர். அவர்கள் எல்லாம் வந்து அவனிடம் பேசிக் கொண்டு இருக்க… அருளின் நண்பர்களும் வந்து சேர்ந்தனர்.
சிறிது நேரம் எல்லோரும் மரியதாஸ் பற்றிப் பேசினார். பிறகு ஜோசப் எல்லோருக்கும் பொதுவாகச் சொன்னான்.
“எல்லோரும் கேட்டுகோங்க, தனித் தனியா சொல்ல நேரமில்லை… நாளைக்கு அருளுக்கும் ரோஜாவுக்கும் கல்யாணம். எல்லாரும் வந்திடுங்க. காலையில் இருந்தே எங்க சாப்பாடு தான். மத்தவங்களுக்கும் சொல்லிடுங்க. எல்லோரும் குடும்பத்தோட வந்திடனும்.” என்றான்.
எல்லோரும் மகிழ்ச்சியாகக் கலைந்து செல்ல… ரோஜாவுக்கு மட்டும் அதிர்ச்சி தான். அவள் எழுந்து உள்ளே செல்ல.. அருள் அவள் பின்னே சென்றான்.
“என்ன ரோஜா?”
“இறந்தது எங்க அப்பா. அவர் இறந்து ஒரு மாசம் தான் ஆகி இருக்கு. அதுக்குள்ள நான் எப்படிக் கல்யாணம் பண்ணிக்க முடியும்?”
“அவர் இல்லைனா என்னன்னு என்னால சந்தோஷமா இருக்க முடியாது.
“நாம இப்ப சந்தோஷமா இருக்கக் கல்யாணம் பண்ணிக்கலை. நானும் நீயும் வேற வேற இல்லைன்னு காட்டத்தான் இந்தக் கல்யாணம்.”
“யாருக்கு காட்டனும்?”
“ஏன் சொன்னாத்தான் கல்யாணம் பண்ணுவியா?”
“எனக்கு நம்ம கல்யாணத்தைப் பத்தி நிறையக் கற்பனை இருந்தது. ஆனா இப்ப எதுவுமே இல்லை. நீங்க உங்க வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் நம்ம கல்யாணம் நடக்குமான்னு கூட எனக்கு நம்பிக்கை இல்லை.”
“இப்ப நீங்களே நாளைக்குக் கல்யாணம் சொல்றீங்க. ஆனா சந்தோஷப்பட முடியலை… எங்க அப்பா தான் இல்லை. உங்க தங்கையாவது இருக்க வேண்டாமா?”
“இப்ப என்னை எதுவும் கேட்காத ரோஜா… என்கிட்டே எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. நாளைக்கு நம்ம கல்யாணம் அவ்வளவுதான்.” அருள் சொல்ல…
அருள் யோசிக்காமல் எதுவும் செய்ய மாட்டான் எனத் தெரியும். அதுவும் அவளுக்கு இருப்பது அவன் ஒருவன் மட்டுமே… அதனால், “சரி உங்க இஷ்ட்டம்.” என்றாள்.
அதன் பிறகு அருள் அவன் வீட்டிற்குச் சென்று குளித்துத் தயாராகி ரோஜாவின் வீட்டிற்கு வர… ஸ்டெல்லா அவள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்திருந்தாள்.
“அந்த இட்லியைதான் உங்க ஆளு ஒரு மாசமா காலையும் மதியமும் சாப்பிட்டிருக்கா… இப்ப கல்யாண பெண் ஆச்சே… அது தான் பூரி சுட்டுக் கொண்டு வந்தேன்.”
“அப்படியா உனக்கு இட்லி அவ்வளவு பிடிக்குமா…” என அருள் ரோஜாவை பார்த்து ஆச்சர்யமாகக் கேட்க…
பக்கத்தில் இருந்த கரண்டியை எடுத்து ரோஜா அவனை அடிக்க வர….
“ஒழுங்கா சோறு ஆக்கி சாப்பிடாம… பாதி ஆளு தான் இருக்க…கரண்டியை தூக்க எல்லாம் தெம்பு இருக்காது வச்சிடு.” என்றான்.
ரோஜா அவனை முறைத்துக் கொண்டே, “தனியா எனக்கு மட்டும் சோறாக்க பிடிக்கலை…” என்றாள்.
“தெரியும் நீ இப்படித்தான் பண்ணுவேன்னு… அது தான் தினமும் இட்லி கொடுக்கச் சொன்னேன். சரோஜா அக்காவுக்குப் பணம் கொடுக்கணும்.”
“அதெல்லாம் நான் கொடுத்திட்டேன்.”
அருள் சாப்பிட்டு கைகழுவியவன், “இப்பத்தான் நான் வந்திட்டேன் இல்ல… ஸ்டெல்லாவை வேலை வாங்காம…. நீ சோறாக்கி வை… நான் மதியம் வரேன்.” எனச் சொல்லிவிட்டு செல்ல…
“என்ன அண்ணன் உன்னை இந்த விரட்டு விரட்டுறாங்க.” என ஸ்டெல்லா சிரிக்க…
“அவங்க வீட்ல என்னவோ நடந்திருக்கு… இல்லைனா எதுக்கு இப்ப திடீர் கல்யாணம்? எங்க நான் அதைக் கேட்கப் போறேன்னு… என்னவோ பேசி சமாளிச்சிட்டு இருக்காங்க.”
“எப்பனாலும் நீ அருள் அண்ணனைத் தான் கல்யாணம் பண்ண போற. அது நாளைக்கே இருந்தா தான் என்ன? விடு ரோஜா எதுனாலும் அண்ணன் பார்த்துப்பாங்க.” ஸ்டெல்லா சொன்னதற்கு, ரோஜா அமோதிப்பாகத் தலையசைத்தாள்.
அருள் தன் நண்பர்களோடு சர்ச் பாதரை பார்க்க சென்றனர்.
“என்னப்பா நாளைக்குக் கல்யாணம் சொல்றீங்க. எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு இல்ல.. திருமண ஓலை படிக்காம எப்படிக் கல்யாணம் பண்றது?”
“பாதர் அவனவன் பிரச்சனை தெரியாம, நீங்க வேற முறை அது இதுன்னு சொல்லிட்டு. நாளைக்குக் கல்யாணத்தை உங்களால நடத்தி வைக்க முடியுமா முடியாதா?” என ஜோசப் கேட்க,
“சரி… யாரும் வந்து பிரச்சனை பண்ண மாட்டாங்களே…”
“யாரும் வர மாட்டாங்க. கல்யாணத்தை உடனே பதிவு பண்றோம். நீங்க அதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க.”
“சரி… நாளைக்குக் காலையில பத்துல இருந்து பதினோரு மணிக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம்.”
அங்கிருந்து அருளும் ஜோசப் இருவர் மட்டும் மறுநாள் திருமணத்திற்குத் தேவையான சாமான்கள் வாங்க வேளாங்கண்ணி சென்றனர். நண்பர்களுக்கும் மறுநாள் சமையலுக்குத் தேவையான காய்கறி, மளிகை எல்லாம் வாங்கும் வேலைக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
“சமையலுக்கு ஆள் சொல்லி ஆச்சு. தேவையான பாத்திரம், பண்டம் எல்லாம் இன்னைக்குச் சாயங்காலம் வந்திடும்.” வண்டியை ஓட்டியபடி ஜோசப் சொல்லிக் கொண்டு வர….
“சாப்பாடு மட்டும் யாருக்கும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது டா.” அருள் சொன்னதற்கு, அதெல்லாம் அசத்திடலாம் கவலைப் படாதே….” என்றான்.
செல்லும் வழியில் அருள் தனது செல்லை உயிர்பிக்க…. அவனது வீட்டில் இருந்து நிறைய அழைப்புகள் வந்திருந்தது. அவனைத் தேடுவார்கள் எனத் தெரியும்.
அருள் நள்ளிரவே சென்று இருக்க… காலையில் வீட்டினர் தாமதமாகத்தான் எழுந்தனர். மெதுவாகவே காலை உணவு தயாராக. அருள் வெகு நேரம் வரவில்லை என்றதும், ராஜீவை சென்று அவனை அழைத்து வர சொல்லி அனுப்பினர்.
“அண்ணன் கதவு திறக்கலை.” என வந்து நின்றான் அவன். இன்னமுமா உறங்குகிறான் என நினைக்க… அதற்குள் அருளின் வீட்டுச் சாவி தேவியின் கண்ணில் பட்டது,
“அருள் எங்கையோ வெளிய போயிருக்கு போல… சாவி இங்க இருக்கே.” தேவி சொல்ல…
“எப்ப வந்து வச்சிட்டுப் போனான். ஒருவேளை கம்பெனிக்கு போயிட்டானா?” எனச் சாரதி செல்லில் அருளை அழைக்க.. கைப்பேசி அனைத்து வைக்கப் பட்டிருப்பதாகக் குரல் ஒலித்தது.
சிறிது நேரம் பார்த்துவிட்டு வீட்டின் கதவை திறந்து பார்க்க… அருள் வீட்டை அவ்வளவு சுத்தமாக வைத்திருந்தது தான் அனைவரின் கண்ணிலும் முதலில் பட்டது. அவன் உடைகள் அது கூடத் தான் வாங்கியது மட்டும் தான் எடுத்துச் சென்றிருந்தான். மற்றது எல்லாம் இருந்த இடத்தில் இருக்க… எதுவும் குறைந்ததாகவே தெரியவில்லை. அதனால் அவன் வீட்டை விட்டுச் சென்றிருக்கக் கூடும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை.
எங்காவது பக்கத்தில் சென்றிருப்பான், இப்போது வந்துவிடுவான் என்றே இருந்தனர்.
வெகு நேரம் சென்று பவித்ரா அழைத்து ஏன் அண்ணனின் கைப்பேசி அனைத்து வைத்திருக்கிறான் எனக் கேட்க, வீட்டினர் விவரம் சொல்ல… அண்ணன் போய் விட்டான் என அவளுக்கு ஏனோ தோன்றியது.
சிறிது நேரத்தில் அருளே அவளை அழைத்து விட்டான்.
“எங்க போன நீ?”
“இங்க ஊருக்கு வந்திருக்கேன்.”
“சொல்லிட்டு போகணும்ன்னு தெரியாதா?”
“சொன்னா போக விடுவீங்களா… ஆளுக்கு ஒரு காரணம் சொல்வீங்க.”
“எப்ப வருவ?”
“வரேன் இப்ப என்ன அவசரம். நீயே பாட்டி தாத்தாகிட்ட சொல்லிடு. நானே பிறகு போன் பண்றேன். எனக்கு யாரும் போன் பண்ண வேண்டாம்.”
“சீக்கிரம் வந்திடு அண்ணா.” எனச் சொல்லிவிட்டு பவித்ரா மனமே இல்லாமல் வைக்க… அருளுக்குத் தங்கையிடம் கூட உண்மை சொல்ல முடியாத நிலை. தன் விதியை நொந்தவன், செல்லை அனைத்து வைத்தான்.
பவித்ரா வீட்டினருக்கு அழைத்துச் சொல்லிவிட்டு, மாதவனிடம் புலம்ப…
“அவன் என்ன சின்னக் குழந்தையா? இத்தனை நாள் தனியா இருந்திருக்கான். அவன் இருந்த ஊருக்கு போயிட்டு வர்றதுக்கு என்ன?”
“அவனை ப்ரீயா விடுங்க. நீங்க எல்லாம் இப்படிப் பண்றதுனால தான் சொல்லாம போய் இருக்கான்.” என்றான்.
வேளாங்கண்ணி சென்ற நண்பர்கள் இருவரும் நகை கடைக்குச் சென்றனர். அருள் தன் அம்மா மற்றும் சித்தி போட்டிருந்த தாலி சரடு போலத் தங்கத்தில் மெலிதாக வாங்கினான். சொந்த படகு வாங்க வேண்டும் என்ற ஆசையில் சேர்த்த பணம்.
ரோஜாவுடன் திருமணதிற்கு என்றும் பணம் சேர்த்துக் கொண்டு தான் இருந்தான். ஒண்டிக் கட்டை தானே அதனால் சேர்க்க முடிந்தது. அங்கே சென்னையில் சம்பாதித்த பணத்தைப் பவித்ராவுக்கே செலவு செய்திருந்தான். அதோடு ஒரு ஜிமிக்கி, சலங்கை வைத்த வெள்ளி கொலுசு, மெட்டி, சின்னக் கரையிட்ட பட்டுப் புடவை மற்றும் அவனுக்கு உடைகள் வாங்கிவிட்டு வீடு திரும்பினர்.
ஜோசப் அவன் வீட்டிற்குச் சென்று விட… அருள் தான் வாங்கி வந்தவைகளை ரோஜாவிடம் காட்டினான்.
“நல்லா இருக்கா ரோஜா. உனக்குப் பிடிச்சிருக்கா?”
“ம்ம்… நல்லா இருக்கு.” என்றாலும் குரலில் சுரத்தே இல்லை…
“என்ன டி?”
“எல்லாமே நீங்கதான் வாங்கி இருக்கீங்க. என்கிட்டே பதிலுக்குக் கொடுக்க ஒண்ணுமே இல்லை.”
“யாரு வாங்கினா என்ன? நீயும் நானும் வேற இல்லை ரோஜா… நான் உனக்கு வாங்காம, வேற யாருக்கு வாங்கப் போறேன்.”
“நீங்க முன்னாடி இருந்த அருளா இருந்தா கூட நான் யோசிக்க மாட்டேன். ஆனா இப்ப நீங்க அப்படியா?”
“இங்க பாரு நான் எப்பவும் ஒரே மாதிரிதான். அதுவும் இது என்னோட பணம். நான் உழைச்சு சம்பாதிச்ச பணம். அதனால உனக்கு எந்த மரியாதை குறைவும் இல்லை. புரிஞ்சுதா…”
“ம்ம்…”
“இதுல ஜாக்கெட் இருக்கு. நீயே தைச்சிடுவ இல்ல…”
“நானே தைக்கிறேன்.”
“சரி இப்ப சாப்பாடு எடுத்து வை… நான் சாப்பிட்டு கிளம்புறேன். இதுக்கு அப்புறம் நாம நாளைக்குத் தான் பார்க்கணும்ன்னு ஜோசப் சொன்னான்.”
“சரி எனக்கும் ஸ்டெல்லா அம்மா துணைக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க.”
அருள் சாப்பிட்டு அவன் உடைகள் மற்றும் தாலியை மட்டும் எடுத்துக் கொண்டு செல்ல…ரோஜா அளவு ஜாக்கெட் எடுத்துக் கொண்டு தைக்க உட்கார்ந்தாள். அதன் பிறகு வேறு எதைப் பற்றி யோசிக்கவும் நேரம் இல்லை.
மாலை அக்கம் பக்கம் இருப்போர் வந்து அவளை நல்ல புடவை கட்ட வைத்து, தலை வாரி பூ வைத்து விட்டனர். மறுநாள் அருள் ரோஜாவின் திருமணம் எளிமையாக, அதே சமயம் அந்தப் பகுதி மீனவ குடும்பங்கள் அனைத்தையும் அழைத்துச் சிறப்பாக நடந்தது. தம்பதிகளாக அருளும் ரோஜாவும் கடவுளின் பாதம் பணிந்தனர். “கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே மாலை சூடிய காலை கதிரின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே ஒரு குழந்தை போலே… ஒரு வைரம் போலே… தூய்மையான என் சத்தியம் புனிதமானது இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன் பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன் செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன் நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன் கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன் ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன் கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே”