அத்தியாயம் 12 ஜோசப் ஸ்டெல்லா திருமணதிற்காக, அருள் அக்கரைபேட்டை செல்வதாகச் சொல்ல… வீட்டினர் ஒரே எதிர்ப்பு.
அங்கே வரை செல்ல வேண்டுமா எனப் பெரியவர்கள் கேட்க, செல்வதில் அருள் உறுதியாக இருக்க…
“நீங்க போய்ட்டு வர்ற வரை, என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது. நீங்க போகாதீங்க.” என்றாள் பவித்ரா.
“நீ நிஜமாவே சொல்றியா… ஜோசப் எனக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? நான் யாரும் இல்லாம இருந்த போது, என்னோட கஷ்ட்டத்திலேயும் சந்தோஷத்திலேயும் உடன் இருந்தவன், இன்னைக்கு நீங்க எல்லாம் கிடைச்சதுக்காக அவனை விட முடியாது புரியுதா?”
எல்லோரும் போக வேண்டாம் என்றதும் சற்று கடுப்பாக இருந்தவன், பவித்ராவும் போகாதே என்றதும், எரிச்சலை அவளிடம் வெளிப்படையாகக் காட்டினான்.
அண்ணனின் கோபத்தில் இருந்தே அவன் கண்டிப்பாகச் செல்வான் என்பதை உணர்ந்தவள், “அப்ப உங்களோட நானும் வரேன்.” என்றாள்.
“நீ எல்லாம் ஒன்னும் வர வேண்டாம். நான் மட்டும் போயிட்டு வரேன்.”
“நீ வந்தா நான் தங்கிறதுக்கு எல்லாம் இடம் பார்க்கணும். நான் மட்டும் போனா பிரச்சனை இல்லை.”
“ஆமாம் அங்கெல்லாம் போய் நீ தங்கிக்க மாட்ட…” எனக் கலையும் சொல்ல…
“அவ்வளவு மோசமா இருக்குமா அந்த இடம்.” எனப் பவித்ரா கேட்க,
“மோசமான இடமா இருந்தா, நான் திருடனவோ இல்லை கொலைக்காரனாவோ தான் இருந்து இருக்கணும். நான் அங்க உழைப்பாளியா தான் வளர்ந்தேன்.” என்றான் அருள் பட்டென்று.
“நான் வசதியை தான் சொன்னேன்.” எனக் கலையும்,
“நானும் அதை நினைச்சுதான் சொன்னேன்.” என்றாள் பவித்ரா.
“நான் இங்க வர்றதுக்கு முன்னாடி அங்கே தான இருந்தேன். எனக்கு ஒன்னும் அங்க வசதி குறைவா தோணாது. சின்னதா இருந்தாலும் அது என்னோட வீடு.” என்றான் சற்று கர்வமாகவே.
அண்ணனை தடுக்க முடியாது என உணர்ந்த பவித்ரா, “அண்ணா நீங்க வளர்ந்த இடத்தை பார்க்க எனக்கும் ஆசையா இருக்கு. நானும் வரேன்.” என்றாள் கெஞ்சலாக.
அவள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டாள் என உணர்ந்த பெரியவர்கள், “சரி நீயும் போயிட்டு வா…” என்றனர்.
பவித்ராவும் உடன் வந்ததால்… திருமணத்தன்று காலையில் தான் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் கிளம்ப முடிந்தது. தங்கள் வீட்டு காரிலேயே இருவரையும் அனுப்பி வைத்தனர்.
காலையில் இருந்து அருளை எதிர்பார்த்து ரோஜா வாசலை வாசலை பார்த்துக் கொண்டு இருந்தாள். மதியம் அவனுக்காகச் சூடாகச் சமைத்து வைத்து காத்திருந்தாள்.
மூன்று மணி வரை அவன் வரவில்லை என்றதும், ஒருவேளை திருமணத்திற்கு வரமாட்டானோ என்ற கவலையில் துவண்டு போனாள்.
ஸ்டெல்லாவுக்குத் தோழி பெண் அவள்தான் என்பதால்… அதற்கு மேல் காலம் தாழ்த்தாமல், திருமணதிற்குச் செல்ல கிளம்புயவள், ஸ்டெல்லாவின் வீட்டிற்குச் சென்றாள்.
“இப்பத்தான் அவங்க போன் பண்ணாங்க, அருள் அண்ணன் வந்திட்டாங்களாம். அவங்க தங்கச்சியும் கூட வந்திருக்காங்க போலிருக்கு. பக்கத்தில ரெசார்ட்ல தான் ரூம் போட்டிருக்காங்களாம்.”
அவன் வந்துவிட்டான் என்பதே சந்தோஷத்தைக் கொடுக்க… அதுவும் பவித்ரா வேறு வந்திருக்கிறாள் எனத் தெரிந்ததும், அவர்களைக் காண ஆவலாகவே இருந்தாள்.
ஸ்டெல்லா பட்டுப் புடவை அணிந்து வர… ரோஜா அவள் தலையில் வெள்ளை நிற லேஸ் துணியால் அலங்கரித்து, கற்கள் பதித்த மெல்லிய கீரடத்தை வைத்து விட்டாள்.
சரியாக நான்கு மணி ஆனதும், அனனைவரும் சர்ச்சுக்கு சென்றனர். அருள் சரியாகத் திருமண நேரத்திற்குச் சர்ச்க்கு வர… ஜோசப் அவனை முறைத்தான்.
உடன் பவித்ரா இருந்ததால்… அப்போதைக்கு எதுவும் சொல்லாமல். அவளை வரவேற்றான். அருள் பவித்ராவை ஒரு இருக்கை பார்த்து உட்கார வைத்துவிட்டு வந்தான்.
“பெரிய ஆள் ஆகிட்ட டா… கல்யாண நேரத்திற்கு வர…” என ஜோசப் முனங்க…
“பவித்ரா கூட வருவேன்னு ஒரே அடம், புரிஞ்சிக்கோ டா…” என அருள் சொல்ல.. அந்நேரம் ஸ்டெல்லா வந்துவிட்டதால்…. பேச்சுத் தடைபட்டது.
ஸ்டெல்லாவை பார்க்க வென ஜோசப்பும், ரோஜாவை பார்க்கும் ஆர்வத்தில் அருளும், வாயிலை நோக்கி திரும்பினர்.
அண்ணனின் கண்களில் தெரிந்த ஆர்வத்தில், பவித்ராவும் அவன் பார்வை சென்ற திசையை நோக்கினாள். அங்கே மணப்பெண் வருவதைப் பார்த்ததும், ஓ இதற்குத் தானா என நினைத்துக் கொண்டாள். பக்கத்தில் பெயருக்கு ஏற்ப இள ரோஜா வண்ண புடவையில் வந்த ரோஜாவை தான் அவள் அண்ணன் பார்க்கிறான் என அவளுக்குத் தெரியவில்லை.
ரோஜாவும் உள்ளே நுழையும் போதே அருளைப் பார்த்து விட்டாள். வெகுநாட்கள் கழித்து அவனைப் பார்த்ததும், முகம் வெட்கத்தில் சிவக்க, தலையைக் குனிந்து கொண்டாள்.
அருளின் பார்வையைக் கவனித்த ஸ்டெல்லா, “அண்ணா விட்டா உன்னைப் பார்வையாலையே முழுங்கிடுவாங்க போலிருக்கே… இவர் கூட என்னை இப்படிப் பார்க்கலையே…” எனக் கேலி செய்ய… தோழிகள் இருவரும் புன்னகையுடனே சபைக்கு வந்தனர்.
ரோஜா பெண்களின் பக்கமும், அருள் ஆண்களின் பக்கமும் நின்று இருந்ததால்… இருவரும் பேசிக்கொள்ள முடியவில்லை.
செய்ய வேண்டிய சம்பரதாயங்கள் செய்யப்பட்டு, மணமக்கள் இருவரிடமும் சம்மதம் கேட்டு, திருச்சபையின் தந்தை ஜோப்செப் ஸ்டெல்லா திருமணத்தை நடத்தி வைத்தார்.
பிறகு வெளியே இருந்த பந்தலில் மணமக்கள் வரவேற்பிற்காக நிற்க வைக்கப்பட… அருளை பார்த்த பேச… அவன் ஊர் ஆட்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். ரோஜா ஸ்டெல்லாவுடன் மேடையில் நின்று வந்த பரிசு பொருட்களை வாங்கி வைக்க உதவினாள்.
ஏழு மணி ஆனதும் பந்தி ஆரம்பிக்க… அருள் ரோஜாவை அழைத்தான்.
“எப்படி இருக்க ரோஜா?”
“ம்ம்… இப்பத்தான் என்னைக் கண்ணு தெரிஞ்சதா உங்களுக்கு.” என ரோஜா கேட்க,
“நாம அப்புறம் பேசலாம்.” என்றவன், அவளை அழைத்துச் சென்று பவித்ராவிடம் விட்டு, “ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க, நான் வந்திடுறேன்.” எனச் சொல்லிவிட்டு பந்தி பரிமாறச் சென்றுவிட்டான்.
ரோஜாவை பார்த்ததும், எந்த வித ஒப்பனையும் இல்லாமல், ஒரு பெண் இவ்வளவு அழகாக இருக்க முடியுமா என்றுதான் பவித்ராவுக்குத் தோன்றியது.
மெல்லிய கரை வைத்த ரோஜா வர்ண புடவையும், தழைய பின்னிய கூந்தலும், அரக்கு நிறத்தில் சின்னப் பொட்டு வைத்து, விழிகளுக்கு லேசாக மை தீட்டி இருந்தாள்… பெரிதாக எந்த அலங்காரமும் இல்லை. போட்டிருந்த நகையும் தங்கம் இல்லை எனப் பார்த்ததும் தெரிந்தது. ஆனால் முகத்தில் அப்படி ஒரு களை. இத்தனைக்கும் மாநிறம் தான். தன்னை விடச் சின்னவளாகத்தான் இருப்பாள் எனப் புரிந்துகொண்டாள்.
பவித்ரா விலை உயர்ந்த சுடிதார் அணிந்து, அதற்கு ஏற்ப தங்க நகைகள் அணிந்து இருந்தாள். அவளின் பெரிய இடத்து தோரனையைப் பார்த்தே ரோஜாவுக்கு அவளிடம் சரளமாகப் பேச வரவில்லை.
இருவரும் யார் முதலில் பேசுவது என யோசனையில் அமர்ந்து இருந்தனர்.
“நீங்க கல்யாணப் பொண்ணோட தங்கச்சியா?” எனப் பவித்ராவே பேச்சை ஆரம்பித்தாள்.
“இல்லை.. ஸ்டெல்லா என்னோட ப்ரண்ட்.”
“உங்க பேரு?”
“ரோஜா…”
பொருத்தமான பெயர் தான் எனப் பவித்ரா நினைத்தவள், “இங்க நல்லா காத்து வருது இல்ல…” என்றாள்.
“ஆமாம் பக்கத்தில கடல் இருக்கு இல்ல… அதனால தான்.”
“நீ என்ன படிக்கிற?”
“நான் ஸ்கூல் மட்டும் முடிச்சிட்டு வீட்ல தான் இருக்கேன்.”
உங்க அண்ணன் என்னைப் பெண் கேட்டார், அதனால் தெரியும் என்றா சொல்ல முடியும். அப்படிச் சொன்னால், பவித்ரா என்ன சொல்வாள் என ரோஜா யோசிக்க… அந்நேரம் சரியாக அருள் வந்தான். அவன் பவித்ராவை உணவு உன்ன அழைக்க… அவள் தயங்கினாள்.
சர்ச்க்கு முன்பிருந்த இடத்தில் தான் பந்தல் போட்டு உணவு பரிமாறினர். அது போகும் வரும் வழிதான். இங்கே எப்படிச் சாப்பிடுவது எனப் பவித்ராவுக்குத் தயக்கம்.
“எனக்குப் பசிக்களை அண்ணா. நீங்க வேணா சாப்பிட்டு வாங்க.” எனப் பவித்ரா சொல்ல… அங்கே வைத்து வாக்குவாதம் வேண்டாம் என நினைத்த அருளும் விட்டு விட்டான்.
கல்யாண வீட்டினரும் பவித்ராவை உணவு உன்ன வருந்தி அழைக்க…. பவித்ரா சிரித்தே சமாளித்துக் கொண்டு இருந்தாள்.
“ஏன் இவங்க இங்க எல்லாம் சாப்பிட மாட்டாங்களா?” என ரோஜா நினைத்தாள்.
சாப்பிட்டவுடன் அருள் பவித்ராவை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்குக் கிளம்பி விட… ரோஜா முகம் வாடினாள்.
“நாளைக்குக் காலையில வரேன்.” எனச் சொல்லிவிட்டு அருள் சென்றுவிட்டான்.
இரவு நேரம் தங்கையைத் தனியாக ஹோட்டலில் விட முடியாது. பவித்ரா அறைக்கு வந்து உடைமாற்றி விட்டு, உணவு வரவழைத்து உண்டாள்.
அவள் சாப்பிடுவதைப் பார்த்த அருள், “நீ வர வேண்டாம்ன்னு இதுக்குதான் சொன்னேன். நீதான் கேட்கலை… கல்யாணத்துக்கு வந்திட்டு சாப்பிடலை… அவங்க மனசு கஷ்ட்டப்படாதா… இதுக்கு நீ வராமலே இருந்திருக்கலாம்.” என்றான்.
“வெளிய ரோட்ல எப்படி அண்ணா சாப்பிடுறது?”
“உங்க அண்ணனுக்கு ஒரு காலத்தில வீடே இல்லை… ரோட்ல தான் தனியா நின்னேன்.” என்றவன், திரும்பி படுத்துக் கொண்டான்.
பவித்ராவுக்குத் தனது செய்கை அண்ணனை காயப்படுத்திவிட்டது எனப் புரிந்தது.