அவன் அழுமூஞ்சி என்றதில் கோபமானவள் “நான் போறேன் விடுடா..” என்று எழுந்து கொள்ள, அவளை வயிற்றோடு சேர்த்து இறுக்கி கொண்டவன் “நான் சொல்லனுமா வர்ஷிமா.. உனக்கே தெரிஞ்சதால தான, விடாம துரத்திட்டு இருக்க…” என்று பெருமிதமாக கூற
“உனக்கு அதுல பெருமை வேறயா…ச்சி.. தள்ளிப்போடா… ” என்று கத்தினாள் அவள். மேலும் “உன் பின்னாடியே வரேன் இல்ல.. அதான் என்னை அலையவிடறியா…” என்று கேட்க
“உனக்கு தெரியாதா என்னை..” என்று கேட்காதவன் பார்வையால் அதனை கடத்த துல்லியமாக உணர்ந்தவள் அவனை கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.
அவள் கண்முன்னே கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இன்பன் தன்னை காப்பாற்றிய தினம் கண்முன் வந்து போனது. மதுவர்ஷினி அப்போது கல்லூரி படிப்பில் இருக்க, பணக்காரவீட்டு இளைய வாரிசு வேறு.. கேட்கவா வேண்டும்…
அளவில்லாத கையிருப்பு, கூத்தடிக்க ஏதுவாக நண்பர்கள், கண்டுகொள்ளாத பெற்றோர் என்று ஜாலியாக அவள் சுற்றி வந்த சமயம் அது. நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதும் அப்போது அவளுக்கு தவறாக தெரியாமல் போக, சனிக்கிழமைகளில் பார்ட்டியே நடக்கும்.
அப்படி ஒருநாளில் சில நல்ல நட்புகள், அவள் அடித்த சரக்கில் எதையோ கலந்து கொடுத்திருக்க, சொர்க்கத்திற்கே செல்வது போலத்தான் உணர்ந்தாள் அந்த நொடிகளில்.. கூடவே அருவருக்கத்தக்க வகையில் சிலரது கைகள் தன்மீது உரச, போராட கூட தெம்பில்லாத நிலைதான் உண்மையில்…
இவர்கள் இருந்த டிஸ்கொத்தே ஹாலில் இருந்து அந்த நண்பர்கள் அவளை அறைக்கு தூக்கி செல்ல முற்பட, அந்த நேரம் தான் ஜெகன் அவளை பார்த்தது. அவர்களை நிறுத்தி விசாரித்தவனுக்கு மதுவை அடையாளம் தெரிய, அங்கிருந்த தன் நண்பர்களின் உதவியோடு அவளை காப்பாற்றியவன் இப்போதிருக்கும் இதே வீட்டிற்கு தான் அழைத்து வந்திருந்தான் அவளை.
அன்று இரவு முழுவதும் ஏதேதோ உளறி கொண்டும், வாந்தி எடுத்தும் அவனை படுத்தி வைத்தவளுக்கு அடுத்தநாள் மாலை ஐந்து மணிக்கு தான் விழிப்பு வந்தது… எங்கிருக்கிறோம் என்று புரியாமல் முழித்தவளுக்கு பதில் சொல்லும் விதமாக ஜெகன் உள்ளே நுழைய, அவனிடம் எதுவும் பேசுவதற்கு முன்பாகவே அவளை ஓங்கி ஒரு அறை அறைந்திருந்தான் ஜெகன்.
அவன் அடித்ததில் கன்னம் வீக்கமே கொண்டுவிட்டது.. அவள் பயந்துபோய் அவனை பார்க்க “அறிவில்ல… குடிச்சு கூத்தடிக்க பப்புக்கு தான் போகணுமா… உன் அப்பன் கூடவே வீட்ல உட்கார்ந்து குடிக்க வேண்டியது தானே.. என்னவும் பண்ணி, தூக்கி போட்டுட்டு போனா, என்ன பண்ணி இருப்ப…”
“யார்கூட போறோம், எங்கே போறோம் எதுவும் யோசிக்கறது இல்லையா… முட்டாள்..” என்று அத்தனை கடுமையாக திட்டியிருந்தான் அவளை..
மதுவுக்கு தன் தவறு புரிந்ததால் அமைதியாகவே இருக்க, அவன் பேச்சு இன்னும் இன்னும் அதிகமாக தான் ஆனது. தனக்கு இது தேவைதான்.. என்று நினைத்தவளுக்கு அவனின் இந்த அதட்டலும், மிரட்டலும் இதமாக இருந்தது.
இப்போது வீட்டிற்கு சென்றாலும், ஏன் என்று கேட்க கூட நாதி இருக்காது..” என்ற கசப்பான உண்மை முகத்தில் அறைய, அவன் திட்டுவது அத்தனையும் வாங்கி கொண்டாள்.
அன்றைய தினமே அவளை அழைத்து சென்று அவன் வீட்டில் விட, அதன்பிறகு ஜெகன் சுத்தமாக அவளை மறந்து போயிருந்தான்.. ஆனால், அவன் வீடு வாசலில் இறக்கி விட்ட நிமிடத்தில் இருந்தே ஏதோ பாதிப்பு இருந்தது மதுவுக்கு.
சரியாக ஒரு மாதம் நேரம் எடுத்துக் கொண்டவள் அடுத்தமாதம் அவனுக்கு முன்பாக நிற்க, அத்தனை அழகாக, தெளிவாக தன் காதலை அவனிடம் கொடுத்துவிட்டாள். அப்போதுதான் இன்பனுக்கும், கலையரசனுக்கும் பிரச்சனைகள் தொடங்கி இருந்த நேரம் என்பதால் ஜெகன் மறுத்துவிட
“குடிகாரி.. பப்புக்கு போறவ… பசங்களோட சுத்துறேன் ன்னு யோசிக்கிறியா..” என்று திமிராகவே வந்தது கேள்வி. அவன் ஆம் என்றிருந்தால் தூக்கி போட்டு போயிருப்பாள்…
ஆனால், அவனோ மறுப்பாக தலையசைத்தவன் தன் நண்பனை காரணம் காட்ட, அப்போதே இன்பனின் காதலும் தெரியும் அவளுக்கு. அவன் நட்பை மதித்தவள், இன்னுமின்னும் ஆழமாக அவனை நேசிக்க தொடங்கி இருக்க, அவனையும் அதற்குமேல் தொந்தரவு செய்யவே இல்லை அவள்.
இன்பனின் காதலை பற்றியும் யாரிடமும் ஒரு வார்த்தை கூட கூறாமல், அவள் ரகசியம் காக்க, அவர்களின் வாழ்வில் அடுத்தடுத்த புயல்கள் தயாராக இருந்தது. நேரடியாக இருவரும் சம்பந்தப்படா விட்டாலும், ஏதோ ஒரு வகையில் நதியில் சிக்கிய ஓடமாக இருவரும் ஓடிக் கொண்டே இருக்க, அந்த நேரம் தான் இன்பனின் விபத்து.
இன்பனை பார்த்து வந்தவள் ஜெகன் தவித்து போவான் என்று அவனை அழைக்க, வார்த்தைகளை தீக்கங்குகளாக வீசி அழைப்பை துண்டித்து இருந்தான் அவன். அதன்பிறகு கலையரசன் சிபியை ஊரைவிட்டே துரத்த திட்டமிட்ட போதும் மனம் கேட்காமல் வேறு என்னிலிருந்து ஜெகனுக்கு அழைத்து தெரியப்படுத்தியவளும் அவள் தான்..
ஆனால், அப்போது கூட, காதலிப்பதாக சொல்லவில்லை அவன்.. அதுவாவது போகட்டும் என்றால், நன்றி என்றுகூட ஒத்தை வார்த்தை வந்திருக்கவில்லை. அதன்பிறகும் அவனை மறக்கமுடியாமல் அவள் போராடி இருக்க, இதோ இன்று தான் கலையரசனின் மூலமாக அவர்களின் காதலுக்கு கதவுகள் திறந்து இருந்தது.
இப்போதும் ஜெகனின் தோளில் தலையை வைத்து படுத்திருந்தவள் “நீ நிஜமா என்னை லவ் பண்றியா..” என்று சந்தேகமாகவே கேட்க
“எவ்ளோ லவ் பண்றேன் ன்னு நிரூபிக்கவா..” என்றவன் அவளை தன்மீது அழுத்த
“ஹேய்.. இதெல்லாம் டூ மச்.. விடு… முதல்ல கல்யாணம் பண்ணு.. அப்புறம் பர்ஸ்ட் நைட் பண்ணலாம்… உன்னை எல்லாம் நம்ப முடியாது.. திரும்பவும் வந்து வேண்டாம்ன்னு சொன்னாலும் சொல்லுவ..” என்று விலகி எழுந்து அமர,
“நம்பவே மாட்டியாடி…” என்று அவன் சிரிக்க
“கண்டிப்பா மாட்டேன்…முதல்ல நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ…எனக்கு ஊர், உறவு, மண்டபம், பட்டுபுடவை, நகை எதுவுமே வேண்டாம்… நீயும், நானும் மட்டும் போதும்… என்னை கட்டிக்கோ…” என்றவளுக்கு கண்கள் கலங்கியே போனது என்ன முயன்றும்…
“உன் அப்பாவை நினைச்சு பயப்படறியா…” என்று அவன் அணைக்க
“ம்ம்ம் … கொஞ்சம் அதிகமாகவே… இன்பா மாமா விஷயத்துக்கு பிறகு பயப்படாம எப்படி இருக்க முடியும்… அதோட இப்போ பணக்கார சம்பந்தம் ன்னு வேற ரொம்ப ஆடிட்டு இருக்காரு.. என்ன வேணாலும் செய்வாரு ஜே..” என்றவளுக்கு வெளிப்படையாகவே உடல் நடுங்கியது…
“ஹேய் லூசு.. உன் அப்பன் இப்போ பல் பிடுங்குன பாம்புதான்… இன்னும் துள்ளினாலும் நானும் இன்பனும் பார்த்துப்போம்.. நீ எதையும் நினைச்சு கவலைப்படாதே..” என்றவன் அவளின் கொத்துமல்லி கட்டு கூந்தலை சீராக எடுத்துவிட, அவனை ரசித்து அமர்ந்திருந்தாள் மது.
அன்று நாள் முழுவதுமே ஜெகனுடனே கழிய, அன்று மாலை வேளையில் தான் வீட்டிற்கு திரும்பினாள் அவள்… கலையரசன் ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தவர் “எங்கே போயிருந்த மது..” என்று கேட்க
“என்னப்பா புதுசா இருக்கு..” என்று ஒரு மாதிரியான குரலில் மகள் வினவ
“இல்லைடா.. மாப்பிளை போன் பண்ணி இருந்தாரு… நிச்சயபுடவைக்கு ஆர்டர் கொடுக்கணும் இல்லையா..” என்று சிரிப்புடன் கூற
“யார் மாப்பிளை.. யாருக்கு நிச்சயம்..” என்று எகத்தாளமாக கேட்டாள் மகள்.
“மது” என்று பெற்றவர் அதட்ட
“என்னப்பா.. நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேனா.. நீங்களா மாப்பிளை, நிச்சயம், கல்யாணம் ன்னு பேசிட்டு இருந்தா, நான் கல்யாணம் பண்ணிக்கணுமா..” என்று சற்று திமிராகவே நின்றாள் அவள்.
மாதவி இதுவரை அமைதியாக இருந்தவர் இப்போதுதான் வாயை திறந்து “உனக்கு விருப்பம் இல்லன்னா, முன்னடியேசொல்லி இருக்கணும் இல்லையா மது…. ஏன் அமைதியா இருந்த..” என்று கண்டிப்புடன் கேட்க
“அதான் இப்போ சொல்லிட்டேனே.. பிடிக்கல… நிறுத்திடுங்க..” என்றவள் மாடிப்படிகளில் ஏற, மாதவி “மது..” என்று அழைத்து நிறுத்தியவர் “நீ வேற யாரையும்..” என்று சந்தேகமாக இழுக்க
“நிச்சயமா அம்மா… அவரே வந்து உங்ககிட்ட பேசுவாரு..” என்று நின்று பதில் சொன்னவள் அவள் வழியில் சென்றுவிட்டாள்.
மாதவியும், கலையரசனும் அதிர்ந்து போய் நிற்க, அவர்களை கண்டுகொள்ளத்தான் யாருமேயில்லை அருகில். மாதவிக்கு தன் அன்னையை மனம் வெகுவாக தேட, பூஜையறையில் இருந்த அவரது படத்திற்கு முன்பாக அமைதியாக அமர்ந்துவிட்டார்.
அடுத்த இரண்டு நாட்களில் இன்பன் அவருக்கு அலைபேசியில் அழைக்க, அழைப்பை எடுத்தவரிடம் வீட்டுக்கு வர சொல்லி வைத்தான். பிடிக்கவில்லை என்றாலும், மறுக்க முடியாமல் மருமகனின் வீட்டிற்கு சென்றார் அவர்.
வீட்டு வாசலில் இருந்த கம்பிக்கோலமும், பூஜையறையில் இருந்து வந்த சாம்பிராணி மணமும்,ஆங்காங்கே அழகுற அமர்ந்திருந்த அலங்கார பொருட்களும், துளிகூட அசுத்தம் கலக்காத தரையும், வீடும் வந்திருப்பவளின் வாழ்வை சொல்ல, தன் மகள் இப்படி இருந்திருப்பாளா?? என்று கேள்வி எழுந்தது மாதவிக்கு.
மனதை நிலைப்படுத்திக் கொண்டே அவர் வீட்டுக்குள் செல்ல, “வாங்க அத்தை..” என்று அன்போடு அழைத்தவன் இன்பன் தான். அவனுக்கு முன்னால் தரையில் அமர்ந்திருந்த இனியனும் தந்தையின் காலை பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க, அந்த வெண்ணெய் உருண்டையை பார்த்ததும் பிடித்து போனது மாதவிக்கு.
மெல்ல வந்து அவர் சோஃபாவில் அமர, “எப்படி இருக்கீங்க அத்தை.. வீட்ல எல்லாரும் எப்படி இருகாங்க..” என்று ஆறுதலாக அவன் கேட்க
மெல்ல விசும்பியவர் பேசத் தொடங்கும் முன்பே அவருக்கு காஃபியை கொடுத்துவிட்டு சமையலறையில் ஒதுங்கி கொண்டாள் சிபி. மாதவி தன் வீட்டில் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க, ஜெகன், மதுவின் விஷயத்தை சொல்லி முறைப்படி பெண் கேட்டான் இன்பன்.
மாதவி உள்ளுக்குள் அண்ணன் மகனின் அக்கரையில் குளிர்ந்தாலும், கணவனை எண்ணி கலங்கி போனார்.. கணவரின் பக்கமே நிற்க எண்ணி “இது சரிவராது இன்பா.. அவருக்கு பிடிக்காது.. நீ விட்டுடு..” என்று முடிக்க
“உங்க புருஷனை தவிர மத்ததையும் கொஞ்சம் யோசிங்க அத்தை… அவரை தவிரவும் உலகம் இருக்கு..கண்ணை திறந்து பாருங்களேன்..” என்று லேசான அழுத்தத்துடன் இன்பன் வற்புறுத்த
“நான் பழகிட்டேன் இன்பா.. என்னால அவரை விட்டு கொடுக்க முடியாது..” என்று அவர் நிற்க
“அவர் எதுக்கும் துணிஞ்சவர் அத்தை..”
“எனக்கு தெரியும் இன்பா…ஆனா இன்னமும் எனக்கு புருஷனா, என்னோடதான் இருக்கார்.. என்னால அவரை விட முடியாது..”
“உங்களுக்கு புருஷனா மட்டும்தான் இருக்காருன்னு நல்லா தெரியுமா உங்களுக்கு…” என்று கூர்மையாக அவன் கேள்வி எழுப்ப
“நிச்சயமா தெரியும்.. அவர் இந்த விஷயத்துல தப்பு செய்ய மாட்டாரு..” என்று அத்தாணி நம்பிக்கையோடு மாதவி கணவருக்கு பரிந்து கொண்டு நிற்க, அவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது இன்பனுக்கு.
நிறைய அவரிடம் புரிய வைக்க முயற்சி செய்தவன், ஒரு கட்டத்தில் முடியாமல் போகவும், தன் அலைபேசியில் இருந்த வீடியோ பதிவை அவரிடம் காண்பிக்க, தளர்ந்து போனவராக அமர்ந்து விட்டார் மாதவி.
கண்களில் வழிந்த கண்ணீர் நிற்காமலே போக, வெறித்து கொண்டே அமர்ந்திருந்தவர் தன் நினைவை இழந்து மயங்கி சரிந்திருந்தார்.. அடுத்த 24 மணி நேரங்கள் மருத்துவமனையில் கழிய, தன் அண்ணன் மகனை உடன்வைத்துக் கொண்டவர் அதற்குமேல் யோசிக்கவே இல்லை..
அடுத்த ஒரு வாரத்தில் கணவரை ஒன்றுமே இல்லாமல் நடுத்தெருவில் நிறுத்தி இருந்தார் என்று சொல்லலாம்… அதற்கு அடுத்த வாரத்திலேயே மகளின் திருமணத்திற்கும் அவர் நாள் குறித்து விட, கலையரசன் அதுகூட தெரியாமல், தன் ஸ்பின்னிங் மில்லுக்கு இன்சூரன்ஸ் பெற ஓடிக் கொண்டிருந்தார்.
ஆனால், அங்கேயும் இன்பன் தன் கைவரிசையை காட்டி முடித்திருக்க, நடந்தது விபத்து இல்லை திட்டமிட்டு அரங்கேற்றபட்ட நாடகம் என்று முடிவானது..இதில் அபத்தம் என்னவென்றால் கலையரசனே விபத்தை திட்டமிட்டு நடத்தியதாக புதிதாக ஒரு வழக்கும் அவர்மீது பதியப்பட்டு இருந்தது…