இன்பன் அவருக்கு எந்த மறுமொழியும் சொல்லாமல், லேசான சிரிப்புடன் அமர்ந்திருக்க, ஜெகனும், லாரன்ஸும் அப்போது தான் வந்தனர்… ஜெகன் தான் திரட்டி இருந்த விவரங்களை இன்பனிடம் கொடுக்க,

                  “நல்லா வாழ்ந்து இருக்கார் உன் மாமா… மது அங்கிள்… என்னால நம்பவே முடியல…” என்று தலையை இருகைகளாலும் தேய்த்துக் கொண்டே ஆச்சரியமாக கூறினான் லாரன்ஸ்.

                 ஜெகனும், லாரன்ஸும் கடைசி இரண்டு நாட்களாக கலையரசனின் முழு சொத்து விவரத்தையும் தேடி எடுத்திருக்க, கடைசி மூன்று ஆண்டுகளில் குவிந்து போயிருந்தது.. இன்பன் இல்லாத தைரியத்தில் அவர் ஆட்டம் போட்டிருக்க, அவரின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இருந்தான் இன்பன்.

                    ஜெகனும், லாரன்ஸும் கொடுத்த தகவல்களை தானும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டவன், தன் வக்கீலுக்கு அழைத்து அவரிடம் அந்த விவரங்களை கொடுத்து இருந்தான். கலையரசன் மீதான வழக்கை துரிதப்படுத்தவும் அவன் ஆவண செய்து முடிக்க, அங்கே கலையரசன் மீண்டும் ஒருவனிடம் இன்பனின் கதையை முடிக்க பேரம் பேச ஆரம்பித்து இருந்தார்.

                                பேரம் படிந்து அவர் சொன்ன விலைக்கு இன்பனின் கதையை முடிப்பதாக, எதிர்முனையில் இருந்தவன் ஒப்புக் கொண்டதும், அப்போதே அவனுக்கு முன்பணமாக ஐந்து லட்சத்தை அனுப்பி வைத்தவர் நிம்மதியாக கண்ணை மூட, அவரின் நிம்மதியை அன்று இரவு வரை கூட நீடிக்க விடவில்லை இன்பன்.

                     அன்று இரவு உணவை முடித்து அவர் படுக்க செல்லும் நேரம் அவரின் ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து என்று தொலைபேசி அழைத்தது அவரை. அவர் அடித்து பிடித்து ஓடும்போதே மில் மொத்தமும் நாசமாகி இருக்க, கோடிக்கணக்கில் பொருட்சேதம்.. நல்லவேளையாக யார் உயிருக்கும் ஆபத்து இல்லாமல் போயிருக்க, அதை நினைத்து மகிழ முடியவில்லை கலையரசனால்.

                    அவரின் சாம்ராஜ்யம் கண்முன் கருகி இருப்பதை காணும் போதே கண்களில் கண்ணீர் வரும்போல் இருந்தது அவருக்கு..

                    காலையில் இன்பன் தன்னிடம் பேசியதும், இப்போது மில்லில் நடந்திருந்த தீ விபத்தும் அவருக்கு விஷயத்தை விளங்க வைத்துவிட, உடனே அந்த அர்த்த ராத்திரியில் அவர் இன்பனுக்கு அழைத்துவிட, இன்னமும் ஹோட்டலில் தான் இருந்தான் அவன்.

                    இனியன் அன்று நாள் முழுவதுமே பாட்டியிடம் இருந்திருக்க, மாலையில் ஜெகனை அனுப்பி அவனை அழைத்து வர செய்திருந்தான். அவனை கண்டதும் சிபியின் முகம் சற்றே தெளிந்தாலும், இன்பனிடம் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை அவள்.

                   அதில் ஏக வருத்தம் அவனுக்கு… ஆனால் இப்போது அவளிடம் கெஞ்சிக் கொண்டு நிற்பதாக இல்லை அவன். இந்த விஷயத்தில் அவன் நினைத்தது நடந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதத்தில் அவனும் அமைதியாகவே இருக்க, இரவு உணவை அங்கேயே முடித்த போதும் சரி, வீட்டிற்கு செல்லாமல் அதே அறையில் உறங்க அவன் ஆயத்தமானபோதும் சரி, சிபியும் வாயைத் திறக்கவில்லை.

                இனியனை நெஞ்சில் போட்டுக் கொண்டு அவன் உறங்கி போயிருக்க, வெகுநேரம் அவனை முறைத்து கொண்டே படுத்திருந்த சிபியும் அப்படியே உறங்கி போயிருந்தாள். இனியனின் உறக்கம் கலையக்கூடாது என்று இன்பன் மொபைலை சைலண்டில் போட்டிருக்க, அந்த மொபைலுக்கு தான் அந்த இரவு நேரத்தில் அழைத்துக் கொண்டிருந்தார் கலையரசன்.

                    இன்பன் செயலில் ஆத்திரம் தலைக்கேற, தீ விபத்து குறித்த புகாரில் இன்பனின் பெயரையும் சந்தேகப்படுவதாக சேர்த்துவிட்டிருந்தார் அவர். ஆனால், அது அவருக்கான ஆணி என்று அப்போது அவருக்கு தெரியவே இல்லை…

                                அடுத்த நாள் காலையிலும், இன்பன் வீட்டிற்கு செல்வதற்கு ஆர்வமே இல்லாதவன் போல், அந்த அறையிலேயே குளித்து முடித்து, உடைமாற்றிக் கொண்டு வெளியே கிளம்பிவிட, சிபி தன் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

                   இனியனுக்கு காலை உணவை வரவழைத்து ஊட்டியவள் அறையில் இருந்த தொலைக்காட்சியில் கார்ட்டூன் சேனலை வைத்துவிட, அவன் சமத்தாக அதில் மூழ்கி போயிருந்தான். நேற்று அவன்மீது இருந்த கோபம் இப்போது ஆதங்கமாக மாறி இருக்க, நான் கோபமா இருந்தா என்கிட்டே பேசமாட்டாங்களா??? என்னை அப்படியே விட்டுவாங்களா ?? என்று தனக்குள் கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்தாள் அவள்.

                  அவளின் நேரம் இப்படி கழிய, தனது அலுவலக அறையில் இருந்த இன்பனை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அழைத்து இருந்தனர். எதிர்பார்த்தது தான் என்பதால் எந்த அதிர்ச்சியும் இல்லாமல் நிதானமாகவே ஜெகனையும், லாரன்ஸையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான் அவன்.

                     இன்பன் கமிஷனர் அலுவலகத்தை அடையும் நேரம் கலையரசனும், மாதவியும் அங்கு ஏற்கனவே அமர்ந்து இருந்தனர். இருவருமே பணத்தின் பாதுகாப்பு பெற்றவர்கள் என்பதால் கமிஷனர் கேஸ் எதுவும் இன்னமும் பதிந்து இருக்கவில்லை.

                      இவர்களின் உறவுமுறையும் அறிந்தவர் என்பதால், பேசி சமாதானம் செய்யவே அழைத்து இருந்தார் அவர். ஆனால் கலையரசன் எதற்கும் தயாராக இல்லை.. “நான் கேஸ் கொடுக்கறேன்.. இவனை உள்ளே தள்ளுங்க… இவன்தான் என் மில்லை நாசம் பண்ணது..” என்று அவர் குதிக்க

                    இன்பன் அப்போதும் சிரிப்பு மாறாமல் தான் அமர்ந்திருந்தான்… அவனின் வழக்கறிஞர் “எதை வச்சு சார் நாங்க செஞ்சதா சொல்றிங்க… என்ன ஆதாரம் இருக்கு உங்ககிட்ட.. முதல்ல மரியாதை கொடுத்து பேசுங்க..” என்று எகிற

                   கமிஷனர் இருவரையும் அமைதிப்படுத்தியவர் “என்ன இன்பா.. என்ன இதெல்லாம்… உங்க குடும்ப விஷயம் இது.. இவ்ளோதூரம் கொண்டு வரணுமா??” என்று இண்பனிடம் கேட்க

               “நான் உங்ககிட்ட வரவே இல்லையே அங்கிள்… அவர்தானே கம்பளைண்ட் கொடுத்தாரு.. என்ன எவிடேன்ஸ் இருக்காம்.. கேட்டிங்களா… ” என்று அவன் பேசும்போதே

                  “ஆதாரமா…நேத்து காலையில மில்லை உன் பேருக்கு மாத்தி கொடுக்க சொல்லி நீ என்னை மிரட்டல.. என்னை கொன்னுடுவேன் ன்னு சொல்லல..” என்று அவர் ஒன்றுக்கு இரண்டாக சொல்லி வைக்க

                     “உங்களை கொன்னுடுவேன் ன்னு நான் சொன்னேனா” என்று ஆச்சர்யமாக புருவத்தை ஏற்றி இறக்கியவன் கமிஷனரிடம் திரும்பினான். தன் அலைபேசியை இயக்கி அதில் இருந்த ஒரு ஆடியோவை அவன் ஓடவிட, கலையரசன் இன்பனை முடிப்பதற்காக பேரம் பேசிய நிமிடங்களின் தொகுப்பு அது.

                   அதை கேட்டதும் ஒரு நொடி மௌனம் காத்தவர் அடுத்த வினாடியே “இது நான் பேசினதே இல்ல.. எதையோ காட்டி இவன் ஏமாத்த பார்க்கிறான்..” என்று ஒரேடியாக மறுத்துவிட்டிருந்தார்.

                     இன்பன் இதை எதிர்பார்த்தவன் போல, சிறு சிரிப்புடன் “ஒன்னும் பிரச்சனை இல்ல… நான் மாரியை வர சொல்றேன்… அவன் என்ன பேசுனீங்க ன்னு சொல்லுவான்..” என்றுவிட,அப்போதுதான் பதட்டம் கூடியது கலையரசனுக்கு.

                  இன்பன் சொன்னது போல அடுத்த அரைமணி நேரத்தில் மாரி அங்கே வந்து சேர்ந்துவிட, அவன் கலையரசன் பேசியதை ஒப்புக் கொண்டதோடு தன் அலைபேசியில் இருந்த அவரின் அழைப்பையும் காட்டிவிட, கமிஷனர் உக்கிரமாக ஒரு பார்வை பார்த்தார் கலையரசனை.

                    “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க கலையரசன்.. வேலை இல்லாம இங்கே உக்காந்துட்டு இருக்கோமா… நீங்க எல்லாத்தையும் செஞ்சிட்டு அவன் மேல பழியை போட்டுட்டு இருக்கீங்களா.. உங்க மேல கேஸ் பைல் பண்ணட்டுமா?? ” என்று அவர் மிரட்ட, கலையரசனுக்கு தானாகவே வந்து ஆப்பில் அமர்ந்த உணர்வு தான்.

                  மாதவி இப்போது குறுக்கிட்டவர் “சார் ப்ளீஸ்.. தெரியாம ஏதோ பண்ணிட்டாரு.. அவரை விட்டுடுங்க..” என்று கணவரை முறைத்து கொண்டே கமிஷனரிடம் பேச

                    “நீ சொல்லு இன்பா.. என்ன செய்யலாம்.. கம்ப்ளெயிண்ட் கொடுக்க போறியா.. இல்ல என்ன பண்ணலாம்..” என்று அவர் கேட்டதும், ஒரு நொடி யோசித்தவன் தன் வழக்கறிஞரிடம் தலையை அசைக்க, கலையரசனுக்கு எதிரான ஆவணங்களை கமிஷனரிடம் சமர்ப்பித்தார் அவர்.

                    கலையரசனுக்கு ஒன்றும் புரியாத நிலை.. மாதவிக்கு கணவரின் முட்டாள் தனத்தை எண்ணி ஆத்திரம் என்றால், இன்பன் முகத்தில் எதையும் காட்டாமல் கல்லுளி மங்கனாக அமர்ந்திருந்தான்.

                      கமிஷனர் தன்னிடம் இருந்த ஆவணங்களை சரிபார்த்தவர் பத்து நிமிடங்கள் கழித்தே நிமிர்ந்தார். ” மது என்ன முட்டாளா??” என்று கோபமாக அவர் இன்பனிடம் கேட்க, அப்போதும் எதுவும் பேசவில்லை இன்பன்.

                      “நீ என்ன செய்ய போற.. கம்ப்ளெயிண்ட் கொடு.. வெளியவே வர முடியாதபடி நான் பண்றேன்..” என்று ஆத்திரமாக அவர் கலையரசனை முறைக்க

                       “என்ன சார்.. என்ன சொல்றிங்க… நீங்க அவனுக்கே சப்போர்ட் பண்ணி பேசிட்டு எங்களை இன்சல்ட் பண்றீங்க..” என்று கலையரசன் வாயை திறந்து தான் தாமதம்..

                         மாதவி “வாயை மூடுங்க..” என்று அதட்டியவர் “என்னாச்சு கமிஷனர் சார்.. என்ன விஷயம்..” என்று கூர்மையாக கேட்க

                         “இதெல்லாம் உங்க அண்ணன் கம்பெனில உங்க வீட்டுக்காரர் பண்ண ஏமாத்து வேலைக்கான ஆதாரம்.. இவ்ளோ பணத்தை கையாடல் பண்ணதுக்கு அவன் தான் உங்கமேல கம்ப்ளெயிண்ட் கொடுக்கணும்.. ஆனா, நீங்க உப்பு பெறாத உங்க யூனிட்டை எரிச்சதா அவன் மேல கம்ப்ளெயிண்ட் கொடுத்து இருக்கீங்க..” என்று கையிலிருந்த பைலை மாதவி முன்னால் போட, எடுத்து மேலோட்டமாக பார்த்தவருக்கு புரிந்து விட்டது.

                     அதற்குமேல் மரியாதையை மட்டுமாவது காப்பாற்றிக் கொள்வது என்ற எண்ணத்தில் “விட்டுடு இன்பா… இனி அவர் உன்பக்கமே வரமாட்டார்…விட்டுடு..” என்று அவனிடமே நேரடியாக கெஞ்சலாக கேட்க

                     “அதெப்படி அத்தை விட முடியும்… உங்களுக்கு பாட்டி செஞ்சதே அதிகம்.. இதுல நீங்க சொத்து கேட்டு கோர்ட்டுக்கு போவீங்க.. உங்க புருஷன் லாபத்துல பங்கும் வாங்கிகிட்டு, எங்க சொத்தை ஏமாத்தி பணம் பார்ப்பார்… நான் எல்லாத்தையும் வேடிக்கை பார்ப்பேனா..” என்று காட்டமாக கேட்க

                   “நான் தான் கேஸ் வாபஸ் வாங்கிட்டேனே..” என்று அவர் வாதிட

                     “உங்களை எப்படி நான் நம்புறது.. திரும்பவும் கேஸ் போடமாட்டிங்க ன்னு என்ன நிச்சயம்..” என்று அவர் கண்களை பார்த்தான் இன்பன்…”

                       “உனக்கு என்ன வேணும் இன்பா.. நேரடியா பேசு… ஏன் சுத்தி வளைக்கனும்…எனக்கு என் புருஷன் பேர் எதுலயும் வரக்கூடாது அவ்ளோதான்..” என்று மாதவி முடிவாக கூற, அதிலேயே அவரின் பாசம் புரிந்தது இன்பனுக்கு.

                      அவரை பார்த்து பரிதாபப்பட்டவன் தன் மனதை இறுக்கி கொண்டு “எனக்கு எழுத்து பூர்வமாக நீங்க எழுதி கொடுக்கணும்… சொத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல ன்னு எழுதி கொடுக்கணும்.. கூடவே உங்க புருஷன் என் கம்பெனி பணத்துல வாங்கின அத்தனை சொத்தையும் இன்னும் இரண்டே நாள்ல என் பேருக்கு மாத்தி கொடுக்கணும்…” என்று ஒரே போடாக போட்டு இருந்தான்.

                     மாதவிக்கு தங்களின் கையறு நிலைதான் தெளிவாக தெரிந்ததே. இந்த மனிதரை கட்டிக் கொண்டதற்கு தனக்கு இது தேவை தான் என்று நொந்து கொண்டவர், கணவரை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு இன்பனிடம் திரும்பினார்.

                     “நீ சொன்னது போலவே நான் எழுதிக் கொடுக்கிறேன்… இவரும் ரெண்டு நாளுக்குள்ள சொத்தை எழுதி கொடுப்பாரு… நீ இந்த கேஸை இதோட விட்டுடனும்…” என்று கூற, லேசாக தோளை குலுக்கி சம்மதித்தான் மருமகன்.

                     இன்பனின் வழக்கறிஞர் ஏற்கனவே தான் கொண்டு வந்திருந்த பத்திரத்தை மாதவியிடம் நீட்ட, அதை படித்தவர் கசப்புடன் சிரித்துவிட்டு மெல்ல கையெழுத்திட்டு கொடுத்தார். கலையரசன் ஏதோ சொல்ல வந்தபோது கூட பார்வையால் அவரை அடக்கியவர் கமிஷனரிடம் விடை பெறும் விதமாக தலையசைத்து எழுந்து கொள்ள “இன்பன் உயிருக்கு இனி ஏதாவது லேசா ஆபத்து வந்தா கூட, லிஸ்ட்ல முதல் ஆளா உங்க புருஷன் பேரை நானே சேர்த்திடுவேன்… பார்த்து இருந்துக்க சொல்லுங்க…” என்றவர்

                    “அவன் கேட்டது போல, ரெண்டு நாள்ல சொத்து அவன் கைக்கு போயிருக்கணும்..” என்று கலையரசனையும் மிரட்டி அனுப்ப, அந்த நேரம் அண்ணனின் நிழல் இல்லாமல் தாங்கள் எதுவுமே இல்லை என்ற நிதர்சனம் புத்தியில் அடித்தது போல உரைத்தது மாதவிக்கு.