இன்பன் கொஞ்சமும் இளக்கம் காட்டாமல் அவளை முறைக்க, தானாக வாயை திறந்து இருந்தாள். தட்டிலிருந்த மொத்தத்தையும் அவன் ஊட்டி முடிக்க, எழுந்து கொள்ள பார்த்தவளிடம் “இங்கே உட்காரு.. நான் பேசணும்..” என்று அவன் அழுத்தமாக கூற

                   அவன் எதிரில் சிபி அமர, “அடுத்து என்ன செய்ய போற.. ” என்றவன் அவள் முகம் பார்க்க, புரியாத மொழி பேசுவதை போல அவனை பார்த்திருந்தாள் சிபி.

                     இன்பன் நிதானமாக “அம்மா உன்னோட இல்ல சிபி.. ஆனா, அடுத்து உன் வாழ்க்கை இருக்கே.. அதை பார்க்கணும் இல்லையா.. இப்படி அழுதுட்டே இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா.. எத்த்னை நாள் அழுதுட்டே இருக்க போற..” என்று அவன் கேட்க கேட்க, எதுவுமே பதில் பேசவில்லை அவள்.

                     “சிபிம்மா.. ஒரு சில விஷயங்கள்ல நான் உன்னோட முடிவையும் கேட்டே ஆகணும் இல்லையா.. நான் ஏதாவது செஞ்சிட்டு நாளைக்கு நீ வருத்தப்படக்கூடாது இல்ல.. அதுக்கு தான் பேசிட்டு இருக்கேன்.. அடுத்து என்ன, எப்போ காலேஜ் போக போற.. நம்ம ரெண்டு பேர் விஷயத்துல அடுத்து நான் என்ன செய்யட்டும்..” என்று நிதானமாக அவன் கூற, சிபிக்கு கண்ணை கட்டுவது போல் தான் இருந்தது.

                     இன்னமும் அவள் அன்னை இறந்து போன விஷயமே அவள் கல்லூரிக்கு தெரியாது. ஏதோ உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்ததாக தான் நினைத்து இருந்தனர். இப்போது இன்பன் வரிசையாக சொல்லவும் தான் எதிர்காலம் கண்முன் தோன்றி மிரட்டல் விட்டு கொண்டிருந்தது.

                  இன்பன் பொறுத்து பார்த்தவன் “கல்யாணம் பண்ணிப்போமா..” என்று கேட்க, அவன் கேட்டதே புரியவில்லை அவளுக்கு.

                 அவனை என்ன கேட்டான் இவன் என்பது போல் பார்க்க, “கல்யாணம் செஞ்சுப்போமா…” என்று மீண்டும் கேட்டவன் “உன்னை இங்கே தனியா எல்லாம் விட முடியாது சிபி.. கல்யாணம் பண்ணிப்போம்… நீ நம்ம வீட்ல இருந்து காலேஜ் போயிட்டு வா.. உன் படிப்பு முடியட்டும்.. அடுத்து என்னன்னு அப்புறம் யோசிப்போம்..” என்று இலகுவாக சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.

                   சிபி இன்னமும் அன்னை இறந்த அதிர்ச்சியில் இருந்தே வெளிவராமல் இருக்க, அவளிடம் அவன் திருமணத்தை பற்றிக் கேட்டால் என்ன பதில் சொல்வாள் அவள். அவள் விழித்துக் கொண்டே அமர்ந்திருக்க, அவள் நிலை உணர்ந்தவனாக அவளை தன் அருகில் இழுத்துக் கொண்டவன் அவள் கைகளை தன் கையில் எடுத்துக் கொண்டு

                     “என்னை நம்புற இல்ல..” என்று கேட்க, “உனக்கு தெரியாதா..” என்பது போல் அவன்மீது படிந்தது அவள் பார்வை. அவள் பார்வையை உணர்ந்தவன் “நமக்கு நாளைக்கு கல்யாணம். ஜெகன் கிட்ட எல்லா ஏற்பாடும் செய்ய சொல்லிட்டேன்.. காலையிலே நாம் ரெஜிஸ்டர் ஆபிஸ் போகணும்..” என்று அமைதியாக கூற

                    “ஏன் இத்தனை அவசரமா… உங்க வீட்ல..” என்று அவள் ஆரம்பிக்கும் போதே

                    “என் வீட்டை என்னால சமாளிக்க முடியும் சிபி.. கொஞ்சம் நாள் போனா எல்லாம் சரியாகிடும்.. இப்போதைக்கு என் கவலை எல்லாம் நீதான்.. உன்னை இப்படி விட்டுட்டு, உன்னையே நினைச்சு தவிச்சுட்டு இருக்கறதெல்லாம் முடியாது என்னால.. அதுக்கு தான் சொல்றேன்.. கல்யாணம் பண்ணிப்போம்..” என்றவன் அவள் கண்களை பார்க்க

                     “பயமா இருக்குங்க…” என்றவள் கண்களில் அப்பட்டமான பீதி தான்…

                      “ஏன் பயப்படணும்.. நாந்தான் கூடவே இருக்கேனே..” என்றபோதும் கூட அவள் பாவனை மாறவே இல்லை.

                     “ஹேய் குட்டிப்பொண்ணு கல்யாண வயசு ஆகிடுச்சுடா உனக்கு.. இன்னும் குட்டிப்பொண்ணு னு நிரூபிச்சிட்டே இருக்காத.. காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்.. தூங்கு வா..” என்று அவளை அழைத்து சென்றவன் அதற்குமேல் அவளை யோசிக்கவே விடவில்லை.

                    அவனுக்கு தெரியாதா.. சற்றே நிதானமாக யோசித்தால் கூட, அவள் நிச்சயம் இப்படி ஒரு திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவே மாட்டாள் என்பது. தன் வீட்டில் பேசி சம்மதம் கிடைத்து திருமணம் செய்ய எல்லாம் பொறுமை இல்லை அவனுக்கு..

           அந்த ஒரு காரணத்திற்காகவே எதையும் பற்றி கவலை கொள்ளாமல், முடிவெடுத்து விட்டிருந்தான். இப்போதும் அவளை தனியே விடாமல் ஒரு பாய் எடுத்து வந்து அங்கே விரித்தவன் தான் அமர்ந்து தன் மடியில் அவளை கிடத்திக் கொள்ள, மெல்ல தட்டி கொடுத்தே அவளை உறங்க வைத்து விட்டிருந்தான்.

                    அடுத்த நாள் காலையும் அவளை அவசர கதியில் எழுப்பி குளிக்க அனுப்பியவன், அதே அவசரத்துடன் அவளை கிளப்பிக் கொண்டு வந்து சார் பதிவாளரின் முன் நிறுத்தி இருந்தான். ஜெகன் ஏற்கனவே  வேண்டிய அளவு பணத்தால் அவர்களின் வாயை அடைத்து இருக்க, ஒரே நாளில் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து இருக்க, இன்பன் தன் கழுத்தில் இருந்த கனத்த தங்க சங்கிலியை அவள் கழுத்தில் போட்டு விட்டான்.

                ஜெகன் மாலையை கையில் கொடுக்கவும் இருவரும் அந்த பதிவாளரின் முன் மாலையை மாற்றி கொள்ள, அவர் கட்டிய இடத்தில கையெழுத்திட்டு தங்கள் திருமண பந்தத்தை உறுதி செய்து கொண்டு வெளியே வந்திருந்தனர். சிபி இந்த நிமிடம் வரையும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் தான் இருந்தாள்.

                  இரண்டு நாட்களுக்கு முன் அன்னை இறந்திருக்க, இதோ இன்று காலையில் அவளின் திருமணமே முடிந்து விட்டிருந்தது. இன்பனும் அவளின் நிலையை உணர்ந்தே தாலி, கோவில் என்று எதையும் இழுக்காமல், சட்டப்படி அவளை தனதாக்கி கொண்டிருந்தான். அவனுக்கு வேண்டியது அப்போதைக்கு அவள் மீதான உரிமை மட்டுமே.. அதை கச்சிதமாக முடித்துக் கொண்டிருந்தான்.

                      ஜெகன் இருவருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவிக்க, அப்போதுதான் சிபி அவனை நன்றாக பார்த்தாள். இன்பனை கேள்வியாக பார்க்க “என் பிரெண்ட் ரசிகா..ரெண்டு நாளா நம்மகூடதான் இருக்கான்..” என்றான் இன்பன்..

                      சிபி புரிந்து கொண்டவளாக தலையசைத்து அவனை பார்த்து லேசாக புன்னகைத்தாள். ஜெகன் அவள் வலது கையை பிடித்தவன் “உன்னை மாதிரி ஒரு குட்டி பொண்ணு தங்கச்சியா இருக்கணும்ன்னு ரொம்ப ஆசை எனக்கு.. இன்னைக்கு தான் இவன் மூலமா நடந்திருக்கு.. சந்தோஷமா இரு.. என்ன நடந்தாலும் இன்பா மட்டும் இல்ல, உனக்கு அண்ணனா நானும் உன்கூட இருப்பேன்.. சரியா..” என்று அவன் கேட்க

                கண்கள் கலங்கி போனது அவளுக்கு.. கண்ணீருடன் “தேங்க்ஸ் அண்ணா…” என்று மரியாதையாக அவள் அழைக்க,

                     ஜெகன் இலகுவாக “இவ்ளோ மரியாதையெல்லாம் வேண்டாம் சிபிம்மா.. சும்மா ஜெகா ன்னே கூப்பிடு.. உன் புருஷன் அப்படிதான் கூப்பிடுவான்..” என்றான். மெல்ல தலையசைத்தாளே தவிர, எதுவும் பேசவில்லை  சிபி.

                       பேசிக் கொண்டே காரில் ஏறியவர்கள் இன்பனின் வீட்டிற்கு செல்ல, இப்போதுதான் நடுங்கியது சிபிக்கு. இரு ஆன் மகன்களும் அவளுக்கு பாதுகாப்பாக நிற்க, அவர்கள் வாசலில் கால் வாய்த்த நிமிடம் வசந்தா தன் உரத்த குரலில் “நில்லுடா அங்கேயே..” என்று கத்தி இருந்தார்.

                        சிபி பயந்து போய் இன்பனின் கையை அழுத்தமாக பற்ற, அவள் கையை தானும் அழுத்தமாக பற்றிக் கொண்டான் இன்பன். “ஒன்னுமில்லடா.. ஒண்ணுமில்ல..” என்று அவளிடம் மெல்லிய குரலில் அவன் கூற, அதே நேரம் அவன் அன்னை, தந்தை, பாட்டி மூவரும் வாசலுக்கு வந்திருந்தனர்.

                        அவன் அன்னை கண்ணீருடன் நிற்க, வசந்தா தான் குதித்துக் கொண்டிருந்தார். “என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க இன்பா நீ…உன்னையே நம்பி இருக்க மஞ்சரிக்கு நான் என்ன பதில் சொல்வேன்.. என் பேத்தி வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு, எங்கேயோ கிடந்த ஒருத்தியை தாலி கட்டி கூட்டிட்டு வந்திருக்கியா…”  என்று அவர் அவனை பேசவே விடாமல் சத்தம் போட

                           இன்பனின் பார்வை ஆங்காங்கே நின்றிருந்த வெள்ளைக்காரர்களின் மீதுதான் படிந்து மீண்டது. அவன் அமைதியாக “உள்ளே போய் பேசுவோம் பாட்டி..” என்று கூற

                           “ஏன் மானம் போகுதா.. நம்ம குடும்பத்து மானத்தை நீ ஏற்கனவே கப்பல் ஏத்திட்டு தான் வந்திருக்க… கேவலம்,.. இந்த நாய்க்காக என் பேத்தியை கலங்க வைப்பியாடா நீ..” என்று அவர் கத்திக் கொண்டே இருக்க

                          “மரியாதையா பேசுங்க பாட்டி.. அவளை பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கு.. அவ யாரு என்ன ன்னு கூட தெரியாது உங்களுக்கு.. எப்படி இப்படி பேசறீங்க… ” என்றவன்

                        தன் தந்தையிடம் “என்ன சொல்ல போறீங்கபா… ஏன் இவங்களை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறிங்க.. நான் என்ன செய்யட்டும்.” என்று அவன் கேட்க, அவன் தந்தை தன் தாயின் முகம் பார்த்தே நின்றார் அப்போதும்.

                       வசந்தா “அவன்கிட்ட என்னடா கேட்கிற… கண்டவளும் வந்து தங்கிட்டு போக இது சத்திரம் இல்ல… என் குடும்ப கௌரவத்துக்கு கேடு வர்ற எதையும் நான் ஒத்துக்கவே மாட்டேன்… வெளியே போங்க…”  என்று ஆத்திரத்துடன் கூறிவிட, இன்பன் அப்போதும் தன் தந்தையின் முகம் பார்த்து தான் நின்றான்.

                       மதுசூதனன் “உன்கிட்ட இதை எதிர்பார்க்கல இன்பா… நம்ம அந்தஸ்துக்கு உன்னால எப்படி இப்படி ஒரு முடிவை எடுக்க முடிஞ்சுது… இதை செய்யுறதுக்கு முன்னாடி என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா..” என்றவர் “என்னால உன்னைமாதிரி என் அம்மாவை நோகடிக்க முடியாது..” என்று முடித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.

                      வசந்தா “இவளை இப்படியே துரத்தி விட்டுடு இன்பா.. என் கண்ணில்லை நீ.. நமக்கு இது வேண்டாம்டா.. நம்ம குடும்பத்துக்கு இவ ஒத்து வரமாட்டா இன்பா..நீ அவளை விட்டுட்டு உள்ளே வா…” என்று கெஞ்சலாக கேட்க

                        இன்பன் அமைதியாக சிரித்தானே தவிர எதுவும் பேசவே இல்லை. சிபியை பிடித்திருந்த கையை விட்டு, அவளை தோளோடு அணைத்து கொண்டு நின்றவன் தன் பாட்டியை அற்பமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, தள்ளி நின்று கண்ணீர் விட்ட தன் தாயையும் அமைதியாக பார்த்துவிட்டு வெளியேறி இருந்தான்.

                          வசந்தாவிற்கு அவன் பார்வையில் இருந்த ஏளனமும், அவன் உறுதியும் அத்தனை கொதிப்பை கொடுத்துக் கொண்டிருந்தது. அவர்களின் திருமண விஷயம் அரைமணி நேரத்திற்கு முன்பே கலையரசன் வாயிலாக அவருக்கு தெரிந்து விட்டிருக்க அப்போதிலிருந்தே கொதிப்பு தான் அவருக்கு.

                       பேரன் தன்னை மதிக்காமல் சென்றதில், மஞ்சரிக்கு என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்தில்  நின்றிருந்தார் அவர்.