முகம் நிறைந்த சிரிப்புடன் அவன் கார்கதவை திறந்துவிட, அவனுக்கு சற்றும் குறையாத புன்னகையுடன் அவன் அருகில் ஏறி அமர்ந்தாள் சிபி. காரை வேகமாக கிளப்பியவன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவளை பீச்சிற்கு அழைத்து வந்திருக்க, மதிய நேரம் என்பதால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
இன்பன் காரை நிறுத்தியவன் காரில் இருந்து இறங்காமல், தன் கைகளை நீட்டி சிபியை தன்னருகே இழுத்துக் கொள்ள அவர்களின் முதல் நெருக்கம், சிபிக்கு அதற்கே உடல் எல்லாம் நடுங்கி போக, மெல்ல அவளை விடுவித்தவன் அவளின் முகத்தை பார்த்ததும் சத்தமாகவே சிரித்து விட்டான்.
“என்ன பண்ணிட்டேன் இப்போ.. இந்த ரியாக்க்ஷன் கொடுக்கிற ரசி..” என்றவன் அவள் உணரும் முன்பாகவே அவளின் வலது உள்ளங்கையில் தன் இதழை அழுத்தமாக பதித்து இருந்தான்… “இதுதான் பெஸ்ட் கிப்ட்..” என்று சிரிக்க, வெட்கத்துடன் கைகளை இழுத்துக் கொண்டவள் தன் கைப்பையில் இருந்த ஜாமூனை அவனுக்கு கொடுக்க, அவளை ஊட்டிவிட சொல்லவும், வெட்கத்துடன் ஸ்பூனில் ஊட்டிவிட்டாள் அவள்.
இருவரும் உண்டு முடிக்கவும், அவளின் கையை பிடித்து அழைத்து சென்றவன் கடல் அலையில் நிற்க, அவன் கையை தன் கையுடன் கோர்த்துக் கொண்டு நின்றவள் முகத்தில் தான் எத்தனை நிறைவு.. இன்பனின் கைக்குள் இருக்கும் தன் கையை அவ்வபோது பார்த்துக் கொண்டே அவள் நிற்க, இன்பன் “என்னடா..” என்று புருவம் உயர்த்தியபோது கூட, ஒன்றுமில்லை என்றவள் அவன் கையை இருகைகளாலும் தழுவிக் கொண்டு அவன் தோளில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
அவர்களின் பொழுது இனிமையாக கழிய, அவளின் வழக்கமான நேரத்தில் இன்பன் அவளை அவளின் வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டு சென்றுவிட, அவளும் வீடு வந்து சேர்ந்திருந்தாள்.
அவள் வீட்டிற்குள் வந்த அடுத்த ஒருமணி நேரத்தில் அவள் மாமா ஞானமும், அவர் மனைவி மேகலையும் தம்பதி சமேதராக ஜெயந்தியின் வீட்டிற்குள் நுழைந்தனர். சிபி அவர்களை வாங்க என்று அழைத்தவள் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, உள்ளே இருந்த அறைக்குள் சென்றுவிட,
ஞானம் மெல்ல தன் அக்காவிடம் தான் வந்த விஷயத்தை ஆரம்பித்தார். அவரது தறுதலை மகனுக்கு தன் அக்காவின் மகளை கேட்டு வந்திருந்தார் ஞானம். ஜெயந்திக்கு இதில் விருப்பம் இல்லையென்றாலும் கூட, வீடு தேடி வந்திருப்பது தன் தம்பி என்பதால் அமைதியாக இருந்தார் அவர்.
ஞானம் அக்காவின் அமைதியில் தானாகவே அவரின் கையை பிடித்துக் கொண்டு “நீ யோசிக்கிறது எனக்கு புரியுதுக்கா.. ஆனா.. ஒத்தப் பிள்ளையை பெத்து அவனையும் ஒழுங்கா வளர்க்க துப்பில்லாதவங்களா ஆகிட்டோம்க்கா… அவனை எப்படியாவது நல்லவழி படுத்திடனும் ன்னு எனக்கு ஆசை இருக்க கூடாதா.. அவனை நம்ம சிபியை தவிர, யாராலயும் மாத்த முடியதுக்கா…
“இத்தனை நாள் பொறுப்பில்லாம தெரிஞ்சவன் இப்போ அவனாகவே சிபியை எனக்கு கட்டி வைங்க.. நான் ஒழுங்கா இருக்கேன், உங்ககூட வந்து தொழிலை பார்க்கிறேன் ன்னு சொல்றானே க்கா… எனக்கு என் சிபிம்மா மேல அக்கறை இருக்கும்தானே.. நான் அவளை பார்த்துக்கறேன்க்கா.. என்னை நம்பி நீ அவளை என் மருமகளா அனுப்பி வைக்க கூடாதா..” என்று அவர் தன் அக்காவை பற்றி தெரிந்தவராக உணர்ச்சி பூர்வமாக பேசி வைக்க, உள்ளே அமர்ந்திருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கி கொண்டிருந்தாள்…
அவளுக்கு உயிர் கொடுப்பது போல ஜெயந்தி “இதுல நான் பேச என்ன இருக்கு ஞானம்.. சிபி விருப்பம் தான் எல்லாம்.. நான் அவகிட்ட பேசிட்டு உனக்கு சொல்றேனே… ” என்று முடிக்க பார்க்க
“சிபி உங்க வளர்ப்பு அண்ணி.. அது என்ன சொல்லிட போகுது.. உங்க திருப்திக்காக வேணா, நானே என் மருமககிட்ட கேட்கிறேனே..” என்று மேகலை எழ
“இல்ல மேகலை இரு…” என்று அவரை நிறுத்தியவர் “நான் கேட்கிறேன் மேகலை.. அவ உன்கிட்ட சொல்ல தயங்குவா… அதோட எனக்கும் நானே கேட்டதானே திருப்தி.. நான் அவகிட்ட பேசுறேன்..” என்று தானே எழுந்து விட்டார்.
சிபிக்கு இதற்குள்ளாகவே உள்ளம் பதறி போயிருக்க, தன் அன்னையின் காலடி ஓசை தன்னை நெருங்க நெருங்க உள்ளுக்குள் புயலே அடித்தது… எப்படி இதை கடந்து வரப்போகிறேன் இறைவா என்று அவள் பதறிக் கொண்டிருக்க, ஜெயந்தி அந்த அறைக்குள் நுழைந்திருந்தார்…
மகளின் கலங்கிய முகமே அவளின் மறுப்பை சொல்லிவிட, அப்போதே உள்ளம் பிசைந்தது ஜெயந்திக்கு.. இருந்தாலும், வெளியே இருப்பவர்களுக்காக அவர் சிபியை நெருங்க “ம்மா..” என்று மெல்லிய குரலில் விசும்பியவள் கன்றுக்குட்டியை போல் அவரிடம் ஒண்டிக் கொண்டு காரணமே இல்லாமல் கதறி அழ, ஜெயந்திக்கு இதில் வேறு எதுவும் இருக்குமோ என்று நூலிழையாக சந்தேகம் தோன்றியது அந்த நிமிடம்.
தன் மகளை அனைத்திருந்த கையை விலக்கியவர் அவளின் முகத்தை நிமிர்த்தி “எதுக்கு இந்த அழுகை சிபி… என்ன சொல்லணும் அம்மாகிட்ட…” என்று அவள் கண்களை பார்த்து கேள்விகேட்க
“ம்மா.. சாரிம்மா..” என்று மீண்டும் அவர் வயிற்றில் புதைந்து கொண்டவள் மெல்லிய குரலில் “ம்மா.. எனக்கு.. எனக்கு வேற ஒருத்தரை பிடிச்சிருக்குமா… நான் அவரை..” என்றவள் அதற்குமேல் எதுவம் சொல்லாமல் அழ, ஜெயந்திக்கு மகளை தெரிந்த வரையில் இனி எது நடந்தாலும் அவள் மாற மாட்டாள் என்று புரிந்தது.
தன் மகள் இப்படி செய்வாள் என்று எதிர்பார்த்தே இராத வேதனை அவரை வாட்டினாலும், வெளியே அமர்ந்திருப்பவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டுமே… அதற்காகவே தன்னை தேற்றிக் கொண்டு அவர் வெளியே வர, ஞானம் ஆவலாக அவர் முகத்தை பார்த்திருந்தார்.
மேகலை “என்னண்ணி.. என்ன சொல்றா என் மருமக..” என்று கேட்க
“என்னை மன்னிச்சுடு ஞானம்.. சிபிக்கு இதுல விருப்பம் இல்ல… என்னால அவளை கட்டாயப்படுத்த முடியாது..இந்த பேச்சை விட்டுடுங்க..” என்று இருவரையும் பார்த்து கூறிவிட
“என்னண்ணி.. அவ சின்னப்பொண்ணு.. அவளுக்கு என்ன தெரியும்.. நாம பார்த்து நல்லது பண்றது தானே..” என்று மேகலை அப்போதும் பேச
“என்னால என் மக விருப்பத்துக்கு மாறா, எதுவும் செய்ய முடியாது மேகலா.. இந்த பேச்சை பேசாத..” என்று அழுத்தமாக கூறிவிடவும், மேகலைக்கு வந்ததே ஆத்திரம்…
“என்னண்ணி.. இருந்ததை மறந்துட்டு பேசறீங்களா.. இன்னிக்கு உங்களோட வாழ்க்கை என் புருஷன் கொடுத்தது.. அன்னிக்கு வயசுப்பிள்ளையோட தனியா நின்ன உங்களுக்கு ஆதரவு கொடுத்ததும் நல்ல நன்றியோட இருக்கீங்க அண்ணி…
“என் மகனை கட்டிக்க கசக்குதா அந்த சீமையில இல்லாதவளுக்கு.. இவளுக்கு என் மகனை விட மேல, எவன் கிடைச்சிடுவான்.. இல்ல, ஏற்கனவே எவனையாவது வளைச்சு போட்டுட்டாளா..” என்று நாக்கில் நரம்பில்லாமல் அவள் பேச
“என் மகளை பத்தி ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது மேகலா… அவ வாழ்க்கையை முடிவு பண்ண அவளுக்கு அதிகாரம் இருக்கு.. அதோட நன்றி மறைக்கிற பழக்கமும் எனக்கு இல்ல.. என் நிலைமையை புரிஞ்சிக்கோ..” என்று அவர் வேண்டுதலாக கேட்க
“என்னக்கா.. என்ன உன் நிலைமை.. என் மகன் நாசமா போறானே.. அது தெரியலையா உனக்கு… அவன் வாழ்க்கையை சீராக்க தானே உன்கிட்ட வந்து நிற்கிறேன்.. உன் பொண்ணுன்னு வரவும் சுயநலம் பெருசா போய்டுச்சா அக்கா… உன் பொண்ணு புடிச்சிருக்கா, அழகா இருக்கா.. அதான் என் மகனை வேண்டாம் ன்னு சொல்றியா..” என்று பொங்கியது ஞானம் தான்..
மேகலையும், ஞானமும் அதன்பின்பு பேசிய எந்த பேச்சுக்கும் பதில் சொல்லாமல் அமைதியாகவே ஜெயந்தி அமர்ந்துவிட, அவர்கள் காதில் கேட்க முடியாத அளவுக்கு பேசிவிட்டு கிளம்பிய நொடி, மகளை நெருங்கி இருந்தார் அவர்.
நடந்த எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அழுத்தமான குரலில், “யார் அவன்.. எத்தனை நாளா தெரியும் உனக்கு…” என்று அவர் மகளை உலுக்க
இன்பனை பற்றிய விவரங்களை தெளிவாக கூறியவள் அவனுக்கு அலைபேசியில் அழைத்து கொடுக்க, அத்தனை நம்பிக்கையாக பேசினான் இன்பன். அந்த சில நிமிடங்களிலேயே அவன் மீது ஒரு நம்பிக்கை வந்துவிட, திருப்தியுடன் பேசி முடித்து அலைபேசியை மகளிடம் கொடுத்தவர் மகளை அணைத்து கொண்டார்.
இருவரும் பிரச்சனை முடிந்தது என்று ஆசுவாசமாக ஒருவரை ஒருவர் சற்றே தேற்றிக் கொண்டு அமர்ந்திருந்த வேளையில் தான், புயலாக அந்த வீட்டின் கதவை தட்டி இருந்தான் யாதவ்.
அன்னையின் மடியில் உறங்க தொடங்கி இருந்த சிபி, பதறிப்போய் விழித்து பார்க்க “அத்தை.. அத்தை..” என்ற அவனின் கத்தலில் சிபியை உள்ளே செல்லுமாறு கூறியவர் தான் மட்டும் வெளியே வந்தார். அவன் போட்ட கூச்சலில் இதற்குள் அக்கம் பக்கத்து வீட்டினரும் வெளியே வந்திருக்க, ஜெயந்தி அவனை உள்ளே விடாமல் தான் வெளியே வந்து நின்று கொண்டார்.
“சொல்லு யாதவ்..” என்று தன்மையாக அவர் கேட்க
“என்ன என்னை ஏமாத்த பார்க்கிறிங்களா.. அவ அந்த நாயோட ஊர் சுத்துவா, என்னை கட்டிக்க மாட்டாளா… இத்தனை நாள் என் அத்தைபொன்னுன்னு சொல்லிட்டு இப்போ அவன்கூட கூத்தடிப்பாளா அவ.. என்னை தவிர யாரையும் அவ கட்டிக்க முடியாது.. நான் விடவும் மாட்டேன்…
“அவ எனக்கு மட்டும்தான்… என்ன ஆனாலும் அவளுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தே ஆகணும்..” என்றவன் மீதிருந்த வந்த மது வாசனை அவன் குடித்திருப்பதை காட்ட, ஆனால் அத்தனை தெளிவாக இருந்தது பேச்சு. அவன் கையோடு கொண்டு வந்திருந்த தாலியை பார்த்த ஜெயந்தி, அவனை பிடித்து வெளியே தள்ளி இருந்தார்..
அவன் சற்றே தடுமாறி நிற்க, “நீ நிறைய குடிச்சு இருக்க… மரியாதையா வீட்டுக்கு போ யாதவா.. காலையில பேசுவோம்.. உன் அப்பனை வரச்சொல்லு..” என்று அவனை அங்கிருந்து அனுப்பிவிட பார்க்க
“உன் பொண்ணு இல்லாம இங்கே இருந்து போக மாட்டேன் நான்… இன்னிக்கே அவ எனக்கு பொண்டாட்டி ஆகணும்..” என்றவன் அவரை மீறிக் கொண்டு உள்ளே நுழைய பார்க்க, வாசலுக்கு நடுவில் நின்றவர் அவனை உள்ளே விடாமல் தடுக்க, சிபி “அம்மா…” என்று பயத்தோடு அவரை பின்னிருந்து நெருங்கினாள்..
அவளிடம் திரும்பியவர் “சிபி.. உள்ளே போ.. உள்ளே போன்னு சொன்னேன் சிபி..” என்று கடுமையான குரலில் அவர் அதட்ட, இதற்குள் அங்கே நின்று வேடிக்கை பார்த்த சில ஆண்கள் யாதவை பிடித்து இழுத்திருந்தனர்.. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஜெயந்தி கதவை வெளிப்பக்கமாக தாளிட்டு விட்டு வீட்டிற்கு வெளியே நின்றுவிட, சிபி வீட்டினுள் இருந்தாள்.
யாதவ் அவர்களை மீறிக் கொண்டு உள்ளே செல்ல முற்பட, “தம்பி போப்பா.. காலையில வா.. காலையில பேசு.. போ..” என்று ஆளுக்கு ஒன்றாக சொல்லி அவனை அதட்ட, அவனுக்குள் புகுந்திருந்த சாத்தான் கொடுத்த வேகத்தில், அத்தனை பேரையும் மீறிக் கொண்டு ஜெயந்தியை நெருங்கியவன் அவரை பிடித்து அசுர பலத்தோடு தள்ளிவிட, மெல்லிய உடலமைப்பை கொண்ட அவர் அங்கு சற்று தள்ளி, அமர்வதற்காக திண்ணை போன்று அமைக்கப்பட்டிருந்த கடப்பா கல் மேடையின் முனையில் பலமாக மோதி தன்னிலை இழந்து கீழே விழுந்திருந்தார்.
தலையின் பக்கவாட்டில் அடி பட்டு இருக்க, ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. அங்கே நின்றிருந்தவர்கள் பதறிப்போய் ஜெயந்தியை நெருங்க, வீட்டின் கதவை திறந்திருந்தான் யாதவ். அங்கே நின்றிருந்த ஆண்கள் அவனை இழுத்து வெளியே போட்டு சகட்டு மேனிக்கு அடிக்க, பெண்கள் ஜெயந்தியை நெருங்கி இருந்தனர்.
சிபி “அம்மா…” என்று கதறிக் கொண்டிருக்க, எதையுமே உணராமல் மூர்ச்சையாகி இருந்தார் ஜெயந்தி.. அவள் கதறல் கேட்டுவிட்டவன் போல் இன்பன் அந்த நேரம் அங்கு வந்து சேர, சிபி அவனை பார்த்ததும் இன்னும் அழ, ஜெயந்தியை கைகளில் தூக்கி கொண்டவன், தன் காவல்துறை நண்பனிடம் யாதவை கண்காட்டிவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.