நாட்கள் தொடங்குவதும், முடிவதும் இன்பனின் வாழ்த்துக்களோடு தான் என்று ஆகி இருந்தது சிபியின் நிலை. இன்பன் அவளிடம் பேசியதையோ, அவளுக்கு நாள் தவறாமல் வந்து விடும் கவிதை வரிகளை குறித்தோ இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டிருக்க வில்லை அவள்.
அவளின் மொபைல் பெரும்பாலும் பையிலேயே இருப்பதால், அவளின் நண்பர்கள் கூட பெரிதாக அதில் கவனம் செலுத்தியது கிடையாது. அதோடு சிபி அந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டா என்று ஒரு எண்ணமும் அவர்களுக்கு இருக்க, இன்றுவரை அவளின் அலைபேசியை யாரும் ஆராய்ந்தது இல்லை.
ஆனால், சில நாட்களாக சிபியே தன் அலைபேசியை பத்திரப்படுத்த ஆரம்பித்து இருந்தாள். அவனின் குறுஞ்செய்திகளை யாரேனும் பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள் என்று ஒரு எண்ணம் அவளிடம்… கூடவே அந்த கவிதை வரிகளும் நல்லா இருக்கே என்று தான் நினைக்க வைத்து அவளை.
காலை விடிந்தவுடன் கையில் அலைபேசியை எடுத்து பார்ப்பது பழகி போயிருந்தது. இரவும் அதே நிலை தான். ஆனால், காதலா?? பிடித்தமா?? என்றெல்லாம் கேட்டால் நிச்சயம் பதிலில்லை அவளிடம்.. அந்த வயதுக்கே உரிய ஒரு பூரிப்பு..
என்னதான் தங்களின் நிலை உணர்ந்து தன் மனதை அடக்கி அவள் படிப்பில் கவனம் செலுத்தினாலும், இன்பனின் வரவு மெல்லிய சாரலை கொடுத்ததென்னவோ நிஜம் தான்.. பத்தொன்பது வயதே ஆன அந்த சிறுபெண்ணின் மனம் பேரின்பனின் கவிதை வரிகளில் மெல்ல மெல்ல மயங்குவது இயல்பை மீறிய செயல் இல்லையே…
அவனின் ரசனைகளும், கவிதை வரிகளும் தனக்கானது என்ற கர்வம் அந்த வயதுக்கே உரிய இயல்புதானே… வீட்டிலிருக்கும் நேரங்களில் எல்லாம் அன்னையை எதிர்கொள்ளவே சிரமமாக இருந்தது அவளுக்கு. அவனின் வரிகளை ரசிப்பதே ஏதோ கொலைக்குத்தம் போல் அவள் எண்ணிக் கொண்டிருக்க, அவர் முகத்தை பார்க்கையில் லேசான உறுத்தல் தொடங்கி இருந்தது.
அவனின் குறுஞ்செய்திகளை படிப்பதற்கே இந்த நிலை என்றால், எங்கிருந்து அவள் அவனுக்கு பதில் அனுப்புவது… அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. ஆனால், இன்பனும் அவள் பதில் கொடுக்கமாட்டாள் என்று தெரிந்து தான் சேதி அனுப்பி கொண்டிருந்தான்.
அவள் தன் குறுஞ்செய்திகளை உடனுக்குடன் பார்த்து விடுவதே அவனை மேலும் மேலும் கிறுக்க சொன்னது… இவன் சேதி கொடுத்த மறுநிமிடம் அவள் அதை படித்து விடுகிறாள் என்பது வரை தெளிவு தான் அவனுக்கு..
இன்று என் வரிகளை ரசிப்பவள், நாளை என்னையும் ரசிப்பாள் என்று நிச்சயமாக நம்பியது அவன் மனம்.. ஆனால், சிபிக்கு அவன் எழுத்துக்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது. அதற்குமேல் எல்லாம் அவள் யோசிக்கவே இல்லை. இன்பனை பிடித்திருக்கிறதா?? காதலிக்கிறோமா?? என்று பெரிதாக எந்த ஆராய்ச்சியும் இல்லை அவளிடம்.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக இதே நிலை தொடர, இந்த விளையாட்டை முடித்து வைக்க நினைத்தான் இன்பன். அவளுக்கு நாள் தவறாமல் வாழ்த்து செய்தியும், கவிதை வரிகளும் அனுப்பி வைப்பவன் இரண்டு நாட்களாக எதையுமே அனுப்பாமல் விட்டுவிட, சிபி தவித்து போனாள் என்று சொல்ல முடியாவிட்டாலும், என்னவாக இருக்கும் என்று இன்பனை குறித்து மட்டுமே சிந்திக்க தொடங்கி இருந்தாள்.
அவனுக்கு என்னவாகி இருக்கும்?? உடல்நிலை சரியில்லையா, வெளியூர் சென்றிருக்கிறானா?? என்றெல்லாம் எண்ணம் சுற்றிவர, ஒருவேளை தான் நினைத்தது போல தன்னை விட்டுவிட்டானோ என்றும் தோன்றியது. ஆனால், அந்த யோசனையே சகிக்கவில்லை அவளுக்கு.
ஏதோ ஆண்டாண்டுகளாக அவனுடன் வாழ்ந்தவள் போல் இருக்காது, நிச்சயம் அப்படி என்னை விட முடியாது அவரால் என்று ஒரு மனம் கூப்பாடு போட, நீ வேண்டாம் ன்னு சொல்லியும் எத்தனை நாளைக்கு உன்பின்னாலேயே சுத்துவாங்க, அவங்களுக்கு வேலை வெட்டி இல்லையா?? என்று இடித்துரைத்து மற்றோர் மனம்.
எது எப்படியோ, இன்பனின் எண்ணம் கச்சிதமாக நிறைவேறி இருந்தது அவ்விடம். அவன் எதிர்பார்த்ததை போலவே, அல்லும், பகலும் அவன் எண்ணத்திலேயே கழிந்தது சிபியின் நாட்கள். தன் மனம் அவனை இத்தனை தேடுவது அவளுக்கே அதிர்ச்சியாக இருக்க, தன் மனம் போகும் பாதையும் மெல்ல பிடிபட தொடங்கியது அவளுக்கு.
அவனிடம் அன்று பெரிதாக கடவுள் என்றெல்லாம் பேசிவிட்டு, இப்படி அவனை நினைத்து உருகி கொண்டிருப்பது மடத்தனமாக தோன்றினாலும், மாற்றி கொள்ள முடியவில்லை அவளால். கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி?? அவர் என் கண்ணிலேயே படாம இருந்திருக்க கூடாதா?? இது தப்புதானே.. என்னை ஏன் இப்படி இக்கட்டில் நிறுத்துகிறாய்?? என்று ஊமையாய் அழுதது அவளின் மனம்.
அன்னையின் கூட்டில் நல்லது கேட்டது இதுவென்று சொல்லி வளர்க்கப்பட்ட அந்த சிறுபறவை, காதலுக்கும், நிதர்சனத்திற்கும் நடுவில் நின்று தள்ளாடி கொண்டிருக்க, அது முழுதாக சிறகொடிந்து கீழே விழுமுன் ஆபத்பாண்டவனாக அவள் முன்னால் வந்து நின்றான் இன்பன்..
முகம் சற்றே களையிழந்து காணப்பட, உணவில் கூட கவனம் குறைந்திருந்தது. கல்லூரி பாடங்களும் தேங்கி போயிருக்க, காலையில் சாப்பிடாதது, வெயிலில் காலை பேருந்தில் பயணித்தது என்று அவள் மொத்தமாக டல்லடிக்க, கல்லூரிக்கு அருகில் பேருந்தை விட்டு இறங்கும்போதே தலையை சுற்றி கண்ணை இருட்டுவது போல் இருந்தது அவளுக்கு..
எப்போதுமே மாலையில் தான் தோழிகளுடன் செல்வது. அதுவும் இவள் வீடு சற்றே தள்ளி இருந்ததால் பேருந்து ஏறும்வரை தான் தோழிகளின்உடனிருப்பும். காலை வேளைகளில் தனித்து வருவதே பழக்கமாக இருக்க, இன்றும் அப்படிதான் வந்திருந்தாள்.
காலையில் அன்னையிடம் உணவையும் மறுத்து விட்டு கிளம்பியதால் கல்லூரி ஆரம்பிக்கும் நேரத்திற்கு வெகு முன்னதாகவே அவள் கல்லூரியை அடைந்து விட்டிருக்க, பெரிதாக ஆட்களும் இல்லை. எப்படியோ அவள் தன்னை சமாளித்துக் கொண்டு கல்லூரியை நோக்கி நடக்க ஆரம்பிக்கும் போதே கண்களில் பூச்சி பறப்பது போலிருக்க, கையில் வைத்திருந்த புத்தகங்கள் நழுவுவது கண்கூடாக தெரிந்தாலும், அதை பிடிக்கும் நிலையில் இல்லை அவள்.
மெல்ல மெல்ல சுயநினைவை இழந்தவளாக அவள் மயங்கி கீழே விழுந்துவிட, சற்று தூரத்தில் இருந்து அவளை கவனித்துக் கொண்டிருந்த இன்பன் அவளை நோக்கி ஓடிவர, கல்லூரி வளாகத்தில் இருந்த ஒன்றிரண்டு மாணவர்களும் அவளை நெருங்கி இருந்தனர்.
இன்பன் அவளை சட்டென கைகளில் தூக்கி கொண்டவன் அருகில் இருந்த வகுப்பறையில் ஒரு பெஞ்சில் அவளை கிடத்த, உடன் வந்த மாணவர்களிடம் இருந்து தண்ணீரை வாங்கி அவளின் முகத்தில் தெளித்தான். அதில் சற்றே அவள் தெளிய, மெல்ல கண்களை திறந்து பார்த்தாள்.
இன்பன் சுற்றி இருக்கும் மாணவர்களை கவனத்தில் வைத்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தான். இந்த இந்து நிமிட நேரத்தில் அவன் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பது அவனால் மட்டுமே கூற முடியும்..
துடித்து போனவனாக அவன் நிற்க, கண் விழித்து எழுந்தவளும் அந்த நேரத்தில் அவனை எதிர்பார்த்திருக்கவே இல்லை. அவனின் முகத்தில் தெரிந்த உணர்வுகள் முதல் பார்வையிலேயே அவளுக்கு புரிந்து விட, அதனை முழுதாக உணரவிடாமல் உடன் நின்றிருந்த மாணவிகள் “என்ன பண்ணுது சிபி.. இப்போ ஓகே வா… உடம்பு சரியில்லையா..” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கி கொண்டிருந்தனர்.
அதன்பிறகே அவர்களின் இருப்பை உணர்ந்தவள் அவர்களிடம் ஒன்றுமில்லையென தலையசைக்க, அதுவரையும் கூட இன்பன் வாயைத் திறந்து எதையுமே பேசி இருக்கவில்லை. அமைதியாக கையை கட்டிக் கொண்டு அவன் வேடிக்கை பார்த்து நிற்க, மெல்ல அவள் எழுந்து அமரவும், “ஓகே பார்த்துக்கோங்க..” என்று அருகில் நின்றிருந்த மாணவர்களிடம் கூறி விட்டு மெல்ல விலகி சென்றிருந்தான்.
அவனுக்கு அதற்குமேல் அந்த இடத்தில எதுவும் பேசுவது சரியாகப்படவில்லை. அது அவனுடைய கல்லூரி.. அங்கு நிற்கும் மாணவர்கள் அத்தனை பெரும் அவனை விட சிறியவர்கள்.. அதுவும் அங்கு படிக்க வந்திருப்பவர்கள்.. அவர்களுக்கு முன்னால் காட்சி பொருளாக நிற்க விரும்பாமல் தான் அவன் விலகி சென்றது.
ஆனால், சிபி தன்னை பிடிக்காமல் அவன் விலகி செல்வதாக நினைத்துக் கொள்ள, கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு தான் நின்றது.. அங்கே நின்றிருந்த மற்றவர்களிட ம் சொல்லிக் கொண்டு மெல்ல எழுந்து தன் வகுப்பறையை அடைந்தவள் தன் இடத்தில அமர்ந்து தலையை டேபிளில் கவிழ்ந்து கொண்டாள்.
முயன்றும் கூட முடியாமல் கண்களில் கண்ணீர் பெருக, அவன் உனக்கு வேண்டாம் என்று ஆயிரம் முறைஅவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தாள் அந்த அப்பாவி.. ஆனால் அவள் வேண்டாம் என்று உறுப்போடும் ஒவ்வொரு முறையும் முன்பை விட அழுத்தமாக அவளில் புதைந்து கொண்டிருந்தான் பேரின்பன்.
இன்பன் முதல்வர் அறைக்கு வெளியே நின்று வேடிக்கை பார்த்திருந்தவன் அவள் அவளுடைய வகுப்பிற்கு செல்வதை கண்டவுடன், மெல்ல அங்கிருந்து நழுவி தன் காரில் வந்து அமர்ந்திருந்தான். காரில் நிமிடம் அவளுக்கு அழைத்து விட, அவள் எங்கே அதை கவனித்தாள்.
முதலில் அலைபேசி அழைப்பதே கேட்கவில்லை அவளுக்கு. அவன் விடாது நான்கைந்து முறை அழைக்கவும் தான், மெல்ல சுயத்திற்கு வந்தவள் தன் அலைபேசியை வெளியில் எடுக்க, இன்பனின் எண்ணை கண்டதும் ஒரு வெட்டி ரோஷம் வந்து ஒட்டிக் கொண்டது..
இன்பன் ஆறேழு முறை அழைத்து பார்த்தவன் பொறுக்க முடியாமல், “இப்போ போனை எடுக்கறியா, இல்ல உன் கிளாஸ்க்கு வந்து உன்னை தூக்கிட்டு போகவா சிபி…” என்று அவன் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவைக்க, அவள் பார்த்துவிட்டதற்கான குறி தெரியவும், “செல்லம்மா.. என் தங்கம் இல்ல.. போன் எடுடா..” என்று கொஞ்சலாக அடுத்த செய்தி..
அடுத்த இரண்டாவது நொடி அவனின் அழைப்பு.. சிபி திணறி போய் இருந்தாள் அவனின் செல்லத்திலும், தங்கத்திலும்.. அழைப்பை எடுக்க மறந்து அதிர்ச்சியாக அலைபேசியை பார்த்திருந்தவள் கடைசி ரிங்கில் தெளிந்து அழைப்பை ஏற்று அலைபேசியை காதில் வைக்க,
“ஹேய் சிபிம்மா.. என்னடா.. என்ன ஆச்சு உனக்கு.. என்ன பண்ணுது சிபி…” என்று உருகி கரைந்தது அவன் குரல். அவனின் பதட்டம் அவன் குரலில் தெரிய, சிபிக்கு பேச்சு வராமல் திக்கி கொண்டது அந்த நிமிடங்களில்.