இன்பன் முதன்முதலில் சிபியை பார்த்தது ஒரு கோவிலில் தான். அவன் அன்னையின் சொல்படி அன்றைய தினம் கோவிலுக்கு வந்திருந்தான் அவன். கடவுளை வணங்கி முடித்து அங்கிருந்த மண்டபத்தில் அவன் அமர்ந்திருந்த போது தான் அவனுக்கு எதிரே இருந்த சன்னதியில் வந்து அமர்ந்தாள் சிபி.
அவளுடன் இருந்தவர் அன்னையாகத் தான் இருப்பார் என்பது இவனாக கணித்து கொண்டது. இருவரின் உருவ ஒற்றுமையை வைத்து அவன் ஊகித்துக் கொள்ள, அவன் விழிகளை அங்குமிங்கும் அசைய விடாமல் அழகாக தன்னிடமே பிடித்து வைத்துக் கொண்டாள் அவள்.
முகத்தில் வந்து விழுந்த முடியை ஒதுக்கி விட்டு கொண்டே அவள் அன்னையிடம் பேசிக் கொண்டிருக்க, அவளை கண்டதும் அவன் நினைவில் வந்து நின்றது பாரதி தான்…
பட்டு கருநீல – புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் – தெரியும்
நட்ச்த்திரங்கலடி
சோலை மலர் ஒலியோ – உனது
சுந்தரபுன்னகை தான்
நீல கடலலையே – உனது
நெஞ்சின் அலைகளடி….
என்று அவன் கவியை இவன் சற்றே கடன் பெற்றுக் கொள்ள, அந்த வரிகள் அவளை நினைத்து எழுதப்பட்டதோ என்று ஐயம் கொள்ளும் அளவுக்கு அத்தனை கச்சிதமாக பொருந்தியது எதிரில் இருந்தவளுக்கு.
ஒரு பெண்ணை இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறோமே என்று உறுத்தினாலும், அவனால் அவளிடம் இருந்து பார்வையை திருப்பவே முடியவில்லை. அவள் அந்த கோவிலில் இருந்து வெளியேறும் நேரம் வரை அவளை தொடர்ந்தவன் அவள் கிளம்பிய சற்று நேரத்தில் தானும் கிளம்பி விட்டான்.
ஆனால், அந்த நங்கையின் பாதிப்பு ஏதோ ஒரு மூலையில் அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. அவனை விடாமல் தொடர்ந்து இம்சித்துக் கொண்டிருந்தன அவளின் விழிகள்.. அந்த பாதிப்புடனே சுற்றி வந்தவன் அடுத்த நாள் அவன் நண்பனுக்கு சொந்தமான திரையரங்கு ஒன்றிற்கு சென்றிருக்க, அங்கே மீண்டும் அவள்.
இந்த முறை ஒரு பாந்தமான காட்டன் சுடிதாருடன் ஆண், பெண் பேதமில்லாமல் ஒரு பட்டாளத்துடன் உள்ளே நுழைந்தாள். கல்லூரி மாணவர்கள் போல் தெரிய, “எந்த காலேஜ் தெரிஞ்சா நல்லா இருக்குமே..??” என்று தான் ஓடியது அவன் சிந்தனை. இவன் கடைசி வரிசையில் அமர்ந்திருக்க, இவனுக்கு சற்றே முன்னால் சென்று அமர்ந்தனர் அவர்கள்.
இன்பன் அவளை கண்ட நொடியே அவன் கவனம் திரையில் இல்லாமல், அவளின் பால் சென்றுவிட, அவள் தலையில் சூடி இருந்த அந்த மல்லிகைசரம் ஈர்த்துக் கொண்டிருந்தது அவனை.
அவள் உடன் வந்திருந்த இளைஞர்கள் கையை தட்டிக் கொண்டும், விசிலடிப்பதுமாக இருக்க, அவர்களை வேடிக்கை பார்ப்பதும் படத்தை பார்ப்பதும் என்று மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தவள் சுற்றி இருந்தவர்களை கவனிக்கவே இல்லை.
ஒருவழியாக படத்தின் இடைவேளை நேரம் வர, அந்த குழுவினர் வெளியேறவும், எதேச்சையாக நடப்பது போல், இன்பனும் சற்று தள்ளி அவர்களின் பின்னால் நடந்தான்.
அவர்களின் பேச்சு காதில் விழும் தொலைவிலேயே இவன் தொடர, அவர்கள் பேசியதில் இருந்து நேற்று அவளின் பிறந்தநாள் என்பதையும் தெரிந்து கொண்டான். அன்றும் முன்தினம் போலவே படம் முடியும் வரை பார்வையால் அவளை தொடர்ந்து கொண்டிருந்தவன் படம் முடிந்து அவர்கள் வெளியேறவும், மெல்ல அவர்களின் பின்னால் நடந்தான்.
அவனுக்கு முன்னே சிபி தன் தோழமைகளுடன் நடக்க, அந்த கூட்டத்தில் இருந்தவன் ஏதோ கேட்கவும், தன் கைப்பையின் உள்ளே இருந்து அவள் பர்ஸை எடுக்க, அதனோடு ஒட்டிக் கொண்டே கீழே விழுந்தது அவளின் லைப்ரரி கார்டு..
தவற விட்டவள் அதை கவனிக்காமல் கூட்டத்தில் இருந்து முன்னேறி சென்று விட, பின்னால் வந்த இன்பனின் கையில் சிக்கியது அவளின் நூலக அட்டை. கையில் எடுத்து பார்த்தவன் சற்றே விரிந்த சிரிப்பை இதழ்களில் தேக்கி கொண்டு மௌனமாக தனது காரை நோக்கி நடந்து விட்டான்.
காரில் அமர்ந்து கொண்டே தன் நண்பனுக்கு அழைத்து கிளம்புவதாக சொல்லி விட்டவன் தன் கையில் இருந்த அந்த அடையாள அட்டையை ரசிப்புடன் நோக்கி கொண்டிருந்தான்.. சிற்பிகா… என்று அவன் இதழ்கள் மெல்ல முணுமுணுக்க, “சிற்பமே தான்.. செதுக்கி இருக்காங்க” என்று குரல் கொடுத்தது மனது..
அவள் கல்லூரியின் பெயரை மீண்டும் பார்த்துக் கொண்டவன் “எப்படி மிஸ் பண்ணேன் இவளை..” என்று தன்னையே கேட்டுக் கொண்டான். அவன் பொறுப்பேற்று கொண்டதில் இருந்து நான்கைந்து முறை அவர்களின் கல்லூரிக்கு சென்றிருக்க, ஒருமுறை கூட கண்ணில்பட்டதே இல்லை அவள்.
ஆனால், “அதனால என்ன.. இனி பார்ப்போம் சிற்பிகா… ” என்று புன்னகையோடு அவளிடம் பேசிக் கொண்டவன் அந்த அட்டையில் இருந்த அவளின் மிகச்சிறிய அந்த நிழற்படத்தில் மொத்தமாக மூழ்கி போயிருந்தான்.
வெகுநேரம் கழித்தே அங்கிருந்து புறப்பட்டவன் வீட்டிற்கு வந்தும் கூட, அவளின் நினைவில் தான் பொழுதை கழித்தான். அடுத்த நாள் காலையிலேயே வீட்டில் இருந்து கிளம்பியவன் நேராக தங்களின் கல்லூரியை வந்தடைய, கல்லூரி முதல்வர் அவனை வரவேற்று அமர வைத்தார்.
அவரிடம் சில நிமிடங்கள் கல்லூரி விஷயங்கள் குறித்து ஆலோசித்தவன், மெல்ல தன் கையில் இருந்த சிற்பிகாவின் அடையாள அட்டையை அவரிடம் கொடுத்தான். அவர் அந்த அட்டையை கையில் வாங்கி பார்த்தவர் “சிபியோடதா.. காலேஜ்ல எங்கேயும் கிடைச்சுதா இன்பா..” என்று அவனிடம் கேட்டு வைக்க
“எப்படி அங்கிள்.. பார்த்த உடனே…” என்று கேள்வியாக அவன் நிறுத்த
“சிபியை காலேஜ்ல எல்லாருக்கும் தெரியும் இன்பா… நிச்சயமா யூனிவர்சிட்டி ரேங்க் எடுப்பா… ரொம்ப அருமையான பொண்ணு…” என்று அவர் புகழ்ந்து தள்ள
“அவ்ளோ பெரிய படிப்பாளியா இவ..” என்று தான் சிந்தனை ஓடியது இன்பனுக்கு. அதோடு நேற்று அவளை திரையரங்கில் பார்த்ததும் நினைவு வர, சட்டென “உங்க படிப்பாளி.. நேத்து படம் பார்க்க தியேட்டர்க்கு போயிருந்தாங்க.. அங்கே தான் மிஸ் பண்ணிட்டாங்க…” என்று சிரிப்புடன் அவன் சொல்ல, அவனை நம்பாத பார்வை தான் பார்த்தார் அந்த கல்லூரி முதல்வர் நரேந்திரன்.
அவரின் பார்வையை உணர்ந்தவன் “என்னை நம்பமாட்டீங்களா அங்கிள்.. எனக்கு முன்னாடி தான் இருந்தாங்க.. கார்டை மிஸ் பண்ணவும் கொண்டு வந்தேன்..” என்று நல்லபிள்ளையாக கூற
சிற்பிகாவின் வகுப்பாசிரியரை அழைத்தவர் அவளின் வருகைப்பதிவேட்டை சரிபார்க்க, அவளின் மொத்த குழுவும் நேற்று விடுப்பு எடுத்திருப்பது தெரிய, ஏழு பேரும் அடுத்த பத்து நிமிடத்தில் அந்த அறையில் இருந்தனர்..
அவர்களின் முழியே அவர்களை காட்டிக் கொடுக்க “எதுக்காக நேத்து லீவ் நந்தா..” என்று முதல்வர் விசாரிக்க, “அவனுக்கு பீவர் சார்..” என்று ஆளுக்கு முன்னதாக மகேஷ் வாயை விட்டிருந்தான்..
“அவனுக்கு பீவர்.. ஓகே.. நீ ஏன் லீவ்..”
“அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன் சார்..”
“அப்படியா.. மெடிக்கல் ரிப்போர்ட் எங்கே…”
“கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் சார். ரிப்போர்ட் எங்கே கொடுத்தாங்க.. ரெண்டே ரெண்டு மாத்திரை தான் கொடுத்தாங்க சார்..” என்று பவ்யமாக அவன் பதில் கூற
“அப்படியே மத்தவங்களுக்கும் சரியா ரீசன் சொல்லு மகேஷ்… ஏழு பேருக்குமே ஒரே நாள்ல உடம்பு முடியாம போய்டுச்சா.. இல்ல வேற எதுவுமா…” என்று சற்றே கடினமாக அவர் கேட்க, சிபிக்கு கண்களில் கண்ணீர் தேங்கி விட்டது.
நின்ற இடத்தில இருந்து சற்றே முன்னால் வந்து “சாரி சார்… எங்க யாருக்கும் எதுவும் இல்ல.. என்னோட பர்த்டேக்காக நேத்து எல்லாரும் சேர்ந்து வெளியே போயிருந்தோம்.. அதுக்குதான் லீவ் எடுத்தோம் சார்…” என்று உண்மையை கூறிவிட்டாள்.
முதல்வர் அவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்க்க “சாரி சார்..” என்று கோரஸாக குரல் கொடுத்தனர் அத்தனை பேரும். மகேஷை இன்னமும் குறையாத காரத்துடன் அவர் முறைக்க, “சார்… சாரி சார்..” என்று மீண்டும் அவன் மன்னிப்பு கேட்க
தன் முன்னால் இருந்த சிபியின் நூலக அட்டையை எடுத்து அவளிடம் நீட்டியவாறு “ஹாப்பி பர்த்டே சிபி… நல்லா படிக்கணும்..” என்று அவர் கூற
கையை நீட்டி தன் கார்டை பெற்றுக் கொண்டவள் “தேங்க் யூ சார்…” என்று கண்ணீரோடு கூற,
தலையசைத்து கொண்டவர் “இதெல்லாம் இந்த வயசுல சாதாரணம் தான்.. ஆனா, இதெல்லாம் உங்களோட சுயத்தை பாதிக்காம பார்த்துக்கணும்.. ஏழு பேருமே நல்லா படிக்கிற பசங்க.. அந்த ஒரே காரணத்துக்காக வார்ன் பண்ணி விடறேன்.. இனி இப்படி நடக்கக்கூடாது..” என்று கண்டிப்புடன் கூறி அவர்களை அனுப்பி வைத்தார் அவர்..