வால்பாறையில் இருந்த தனது வீட்டின் பால்கனியில் நின்று புலர தொடங்கி இருந்த அந்த காலை வேளையை ஆவலோடு வரவேற்றுக் கொண்டிருந்தான் இன்பன். கிட்டதட்ட நடுசாமம் முதலே அங்குதான் நின்றிருக்கிறான் அவன். லாரன்ஸ் மற்றும் ஜெகன் உறங்க செல்லும் வரை பொறுத்திருந்தவன் அவர்கள் உறங்க சென்று விடவும் எழுந்து வந்து இங்கு நின்றுவிட்டிருந்தான்.
ஆனால் அவனின் அவசரத்திற்கு ஏற்றபடி உலகம் சுழலாமல், அதன் வரையறை படியே சுழல இப்போதுதான் புலர தொடங்கி இருந்தது காலை.. மெல்ல மெல்ல, சற்றே சோர்வாக சூரியன் மேலெழ, இனியனை மனதில் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டிருந்தான் அவன். நிமிடத்திற்கு ஒருமுறை நேரத்தை பார்க்கவும், பின் சூரியனை பார்க்கவும் என்று இருக்க, இன்னமும் அவனின் நண்பர்கள் எழுந்து இருக்கவில்லை.
இவன் நிலை இப்படி இருக்க , சிபி காலையில் இனியனுக்கு முன்பே எழுந்து விட்டவள் குளித்து முடித்து சமையலறையில் நின்றிருந்தாள். முந்தைய நாள் போட்ட ஆட்டத்தின் விளைவால் அலுப்பாக உறங்கி கொண்டிருந்தான் இனியன். அவன் எழுவதற்குள் துணி வேலையை முடித்துவிட வேண்டும் என்று நினைத்தவள் காலை உணவுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தாள்.
தலையில் கட்டிய துண்டு அப்படியே இருக்க, குளித்து முடித்து வெறும் பொட்டை மட்டும் நெற்றியில் ஒட்டிக் கொண்டு, விபூதி, குங்குமத்தையும் கீற்றாக தீட்டிக் கொண்டிருந்தாள். நெற்றியின் ஓரங்களில் ஆங்காங்கே மெல்லிய நீர்த்துளிகள் இன்னமும் இடம் தேடி ஓடிக் கொண்டிருக்க, அதை புறங்கையால் துடைத்துக் கொண்டே அடுப்பில் இருந்த வாணலிக்கு முன்பாக நின்றிருந்தாள்.
அவள் சமையல் அறையில் இருந்த நேரத்தில் தான் இன்பன் அவள் வீட்டிற்குள் நுழைந்தது.. நேற்று இரவு லாரன்ஸ், ஜெகனின் பேச்சுக்கள் அவனுக்கு அனைத்தையும் புரிய வைத்து இருக்க, இனி எதற்காகவும் பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன்.
எந்த அறிவிப்பும் இல்லாமல், எந்தவித அனுமதியும் இல்லாமல் தடாலடியாக அவள் வீட்டிற்குள் நுழைந்திருந்தான் இன்பன்.. என் மகன் என்பது மட்டுமே நினைவில் இருக்க, மனைவி சற்று தூரமாகவே தோன்றினாள்.. இன்னும் மகன் அளவு நெருக்கம் இல்லையே..
இப்போதும் மகனை கண்ட நொடி, கண்களில் துளிர்த்த கண்ணீர் கரையுடக்க நினைக்க, கண்களை மூடி தன்னை நிலைப்படுத்தியவன் அந்த சிறிய வீட்டின் ஒற்றை அறைக்குள் அடியெடுத்து வைத்திருந்தான். ஒரு சிறிய பஞ்சு மெத்தை மகனின் அளவுக்கு ஏற்றதாக தைக்கப்பட்டு இருக்க, அதுவும் ஒரு போர்வையின் மேல் விரிக்கப்பட்டு இருந்தது…
மகன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, தானாகவே மனம் அந்த அறையையும் தன் வீட்டில் தன்னுடைய அறையையும் ஒப்பிட்டு பார்த்தது. பெற்ற பிள்ளை கூட நினைவில் இல்லாமல் இத்தனை வேதனை படும் அளவுக்கு என்ன தவறு செய்தேன் நான்.. என்று மனம் குமுறிக் கொண்டிருக்க, அவனை தவிர வேறு எதுவும் யாரும் நினைவில் இல்லை.
சமையல் அறையில் இருந்தவள் ஏதோ உள்ளுணர்வில் எட்டி பார்க்க, யாரோ தங்கள் அறையின் வாசலில் நிற்பது தான் தெரிந்தது.. சட்டென கிச்சனை விட்டு வெளியே வந்தவள் தன் புறங்கையால் நெற்றியை துடைக்க, அந்த குங்கும கீற்றல் அழகாக தன்னை அப்பி கொண்டது.
“யாரு..” என்று கேட்டுக் கொண்டே அவள் வர, ஒருநொடி உடல் மொத்தமாக நடுங்கி போனது இன்பனுக்கு.. என் காதலி… நானே அறியாத என் காதலி, என் மனைவி, என் குழந்தையின் தாய்.. ஆனால் அவளின் முகம் கூட அறியாதவன் நான்… என்று வேதனையாக நினைத்தவன் அசையாமல் நிற்க, இதற்குள் அவனை நெருங்கி இருந்தாள் அவள்.
மீண்டும் ஒரு முறை அவனுக்கு ஓரடி தொலைவில் நின்று “யார் நீங்க.. ” என்று கேட்டிருக்க, கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் திரும்பி பார்க்கும் தைரியம் அற்றவனாக இனியனை நோக்கி நடக்க, “யாருன்னு கேட்கிறேன்ல..” என்று சொல்லிக் கொண்டே வேகமாக அவனுக்கு முன்னால் சென்று இனியனை காப்பது போல் நின்றுவிட்டவள் அதன்பிறகே அவன் முகத்தை பார்த்தாள்.
அவன் முகம் கண்ட அந்த நிமிடம் மனதை போலவே உடலும் தள்ளாட, கால்கள் தடுமாறி இனியன் மீதே விழப் பார்த்தாள் சிபி.. அவள் கைகளை முழங்கைக்கு மேலாக பற்றி அவளை சரியாக நிறுத்தியவன் அவள் தன்னை நிலைப்படுத்தி கொள்ள நேரம் கொடுக்க, மலங்க மலங்க விழித்து கொண்டிருந்தாள் அவள்.
முதற்கட்ட அதிர்ச்சி அடுத்து என்னவென்பதை யோசிக்க முடியாமல் அடித்திருக்க, இன்னமும் அவன் கைப்பிடியிலேயே நின்று கொண்டிருந்தாள் சிபி. மெல்ல மெல்ல இயல்பு திரும்ப “இனியன்..” என்று மெல்ல முணுமுணுத்தது இதழ்கள்..
இன்பனின் கைகளில் இருந்தவள் பின்னால் இரண்டு அடிகள் எடுத்து வைக்க, தானாகவே கைகளை விலக்கி கொண்டான் இன்பன்… மெல்ல நகர்ந்தவள் சுவற்றில் மோதி நிற்க, முற்றாக உணர்ச்சிகளின் பிடியில் இருந்தாள் அந்த நிமிடம்..
மூன்று ஆண்டுகால காத்திருப்பு என்று மனம் உரக்க சத்தமிட, எங்கே கதறி விடுவோமோ என்று பயந்தவளாக வாயை கை கொண்டு மூடிக் கொண்டாள் இறுக்கமாக. கண்களில் கண்ணீரும், புன்னகையும் சரிக்கு சரியாக போட்டி இட, உடல் அழுகையில் குலுங்கியது..
எப்படி தன்னை வெளிப்படுத்துவது என்பது கூட அந்த நொடி தெரியவே இல்லை அவளுக்கு.. எதிரில் நின்றிருந்த இன்பனுக்கும் அந்த நொடிகள் அவஸ்தை தான்.. தன் கனவுப்பெண் கண்முன் இருக்க, அவளின் முகம் பார்த்த நினைவு கூட இல்லை அவனுக்கு..
சட்டென தோன்றிய எண்ணத்தில் இங்கே வந்து விட்டிருக்க, கண்முன் அழுது கொண்டிருப்பவளின் நிலைமை பூதாகரமாக தோன்றியது இப்போது.. தனக்கு அவள் நினைவே இல்லை என்பதை தாங்கி கொள்வாளா இவள்?? என்பதே பெரிய கேள்வியாக இருக்க, நிச்சயம் பதில் இல்லை.
தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவன் ஒவ்வொரு அடியாக அவளை நெருங்க, மடிந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தவள் நிமிரவே இல்லை. இன்பனுக்கு ஏனோ அந்த நிமிடம் அவளின் கண்ணீர் சகிக்க முடியாததாக இருக்க, அவளின் தலையில் கையை வைத்தவன் அவளுக்கு முன்னால் மண்டியிட, ஒருநொடி துடித்து அடங்கியது அவள் உடல்..
இன்பன் அவள் தோளை தொட்டு அவளை நிமிர்த்த முயற்சிக்க, அவன் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டவள் அந்த கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்..அவன் கைகள் லேசாக அவளின் முன்பக்கத்தை உரசிக் கொண்டிருக்க, இன்பனுக்கு தான் அவஸ்தையாக இருந்தது..
அவனை பொறுத்தவரை எதிரில் இருப்பவள் ஐந்து நிமிடத்திற்கு முன்னால் அறிமுகம் ஆனவளாக இருக்க, அவளின் கைகளுக்குள் தன் கை அதுவும் அவளின் நெஞ்சை கிட்டத்தட்ட தொட்டுக் கொண்டு இருப்பதை ஏனோ ஏற்க முடியவில்லை அவனால்.
மெல்ல அவன் கைகளை பின்னால் இழுக்க, அப்போது தான் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் அவள்.. இன்பன் எதுவும் பேசாமல் அவள் முகம் பார்க்க, அவன் பார்வையில் இருந்த வித்தியாசத்தில் தானாகவே அவன் கையை விட்டுவிட்டாள் சிபி.. ஆனால் பார்வை இன்னமும் அவனிடம் தான்..
இன்பன் அதே அந்நிய பார்வையோடு “ப்ளீஸ் அழாத..” என்று விட, அவனின் பேச்சு, செயல் அத்தனையும் ஆயிரம் வித்தியாசங்களை எடுத்து கூறியது அவளுக்கு..
கண்முன் இருப்பவன் காதலன் தான். ஆனால்… என்று ஏதோ ஒன்று தொக்கி கொண்டு நின்றது அங்கே.. இன்பனின் முகம் அவளுக்கு மறந்துவிட்டதா?? சாத்தியமா அது??? என்று கேள்விகள் எழ, கண்ணீரோடு அவன் முகம் பார்த்தவள் “இனியன்..” என்று உயிரை உருக்கும் குரலில் அழைக்க
அவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது இன்பனுக்கு.. அந்த இனியன் என்ற அழைப்பு தனக்கானது என்பதையே அவன் அறியாமல் போனது யாரின் குற்றம்.. அவளின் கண்ணீர் தன்னையே வெறுக்க வைக்க “கடவுளே..” என்று தலையில் அடித்துக் கொள்ளத்தான் முடிந்தது அவனால்..
அவன் தலையில் வேகமாக அடித்துக் கொள்ள இன்னுமே பயந்து போனவளாக அவனை பார்த்திருந்தாள் சிபி. அவளின் பார்வையை தாங்க முடியாமல் எழுந்து கொண்டவன் தன் கையை அவள் எழுந்து கொள்வதற்காக நீட்ட, அவன் கைகளை பிடிக்கவில்லை அவள்.
அவளுக்கு நடப்பவைகளை கிரகித்து கொள்ளவே இயலாமல் போக, கனவோ இவையெல்லாம் என்று மீண்டும் கலங்க ஆரம்பித்து இருந்தாள். இன்பன் அவள் அருகில் மீண்டும் மண்டியிட்டவன் அவள் தலையை லேசாக தடவி, “நான் இன்பன் தான்…ஆனா.. ” என்று மீண்டும் கைகளை இறுக்கமாக மூடிக் கொண்டான்..
பின் அவனே “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. வா..” என்று அழைத்து விட்டு அந்த அறையை விட்டு வெளியேற, செல்லும் அவனையே பார்த்திருந்தவள் ஏதோ விசைக்கு கட்டுப்பட்டவள் போல, அவனை தொடர்ந்து வந்து அந்த வீட்டின் ஹாலில் நின்றாள்..
அவளை திரும்பியும் பார்க்காமல், வாசலை பார்த்தவாறு வெளியில் தெரிந்த தோட்டத்தை பார்த்து நின்றிருந்தான் அவன்.. இதயம் துடிப்பது வெளியில் கேட்டுவிடுமோ என்று அச்சமாக இருந்தது இன்பனுக்கு.
எப்படி இவளுக்கு என்னை புரிய வைப்பேன் என்பதே தலைவேதனையாக இருக்க, என்ன சொல்லி இவளை தேற்ற முடியும்.. இப்போதே மொத்தமாக குழம்பி நிற்கிறாள்.. இதில் என்னை பற்றி முழுதும் அறிந்தால் என்று அவன் கலங்கி நிற்க,
அவன் முகம் வெளிக்காட்டிய வேதனையில் மொத்தமாக தனக்குள் சுருண்டு கொண்டாள் அவள்.. இவன் பாட்டி சொன்னது போல, தன்னை மறந்து விட்டானோ, அந்த மஞ்சரியை திருமணம் செய்து கொண்டானோ அதை சொல்லத்தான் தயங்குகிறானா??
ஆனால் என்னை ஏன் தேடி வர வேண்டும்.. ஒருவேளை இனியன்.. அவனுக்காகவா.. இறைவா… யார் சொல்லி இருக்க முடியும்.. எப்படி என் பிள்ளையை.. என்று அவள் மனம் சம்பந்தமே இல்லாமல் சுழல, எதையோ நினைத்து கலங்கி கொண்டிருந்தாள் அவள்.
அவள் மனதில் ஓடிய எண்ணங்கள் அவள் முகத்தில் வேதனையை படிய வைக்க, அடுத்து என்ன என்பது போல் அவனை பார்த்து நின்றாள் சிபி… அவளின் மொத்த நம்பிக்கையும் சிதற போகிறதோ என்று துடித்துக் கொண்டிருந்தது மனம்.. அவன் பாட்டி வென்றுவிட்டாரோ என்றும் தோன்ற, என் காதல் தோற்று போனதா என்று மௌனக்கண்ணீர் வடித்தது மனம்..
இன்பனின் வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காக அவள் காத்து நிற்க “எனக்கு நடந்த ஆக்சிடென்ட் தெரியுமா உனக்கு??” என்று நிதானமாக கேட்டான் அவன்..
“நாந்தான் உங்களை ஆஸ்பிடல்ல சேர்த்தேன்.. உங்க வீட்டுக்கும் நான்தான் தகவல் கொடுத்தேன்..” என்று மரக்கட்டையை போல உணர்வுகள் அற்றவளாக அவள் கூறி முடிக்க
“அப்புறம் ஏன் இந்த மூணு வருஷமா என்னை பார்க்க வரல..” என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவன் கேட்க
அவனை வெறுமையாக பார்த்தவள் “இந்த கேள்வியை உங்க பாட்டிகிட்ட கேட்டு இருக்கலாமே… சரியா பதில் சொல்வாங்க.. ” என்றுவிட்டாள்..
“அதுக்காக இறந்து போனவர்களை திரும்ப கூட்டிட்டு வர முடியாது இல்லையா.” என்று கேள்வியாக நிறுத்தினான் அவன்.
“உங்க பாட்டி நேத்துதான் இறந்து போனார்களா.. இல்ல, உங்களுக்கு என்னை இன்னிக்குதான் நியாபகம் வந்ததா..??” என்று கூர்மையாக வினவியவள் முகத்தில் துளிகூட வசந்தாவுக்காக வருத்தமே இல்லை.
“இப்போகூட எனக்கு நீ நியாபகத்தில இல்ல.. சொல்ல போனா உன் முகம் கூட பார்த்த மாதிரி இல்ல எனக்கு..” என்று தன்னையும் மீறி சொல்லிவிட
மொத்தமாக உடைந்து போனாள் பெண்.. விரக்தியாக சிரித்தவள் “எதற்காக என்னை தேடி வந்திங்க.. நினைவே இல்லாத என் முகத்தை பார்க்க எதுக்காக வந்திங்க..”
“இவனுக்காக… இவனுக்காக மட்டும்தான் வந்தேன்…” என்று வெளிப்படையாகவே அவன் கூறிவிட, நெஞ்சுக்குள் பேய்மழை பெய்து கொண்டிருப்பதை போல, ஒரு நடுக்கம் அவளிடம்…
“அவன் என்னோட மகன்.. அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்…நீங்க எதுக்காக அவனை தேடணும்.. என் சத்தியம் உங்களோட முடிஞ்சுது… என் மகனுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்ல..” என்று சற்று பதட்டத்துடன் அவள் படபடக்க
“என்ன சத்தியம்.. ” என்று அவன் கூர்மையாக கேட்டு நிற்க, சட்டென மௌனமாகி விட்டாள் அவள்.
அவள் மௌனம் கோபத்தையே கொடுத்தது இன்பனுக்கு.. அவனை பற்றி அத்தனையும் அறிந்தவள், இப்படி மௌனம் காப்பது அவன் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது.. இன்னமும் தன்னை பற்றி முழுதாக எதையும் அவளிடம் சொல்லவில்லை என்பதே நினைவில் இல்லை அவனுக்கு..
அவள் எப்படி பதில் சொல்லாமல் போகலாம் என்பதே முன்னிற்க “ஏதாவது பேசு.. நான் உன்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்… என்ன சத்தியம் என்னோட முடிஞ்சுது..” என்று அழுத்தமாக கேட்டுக்கொண்டு அவன் நிற்க
“எவ்ளோ சீக்கிரமா கேட்டுட்டீங்க நீங்க… ஆனா, சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்ல..” என்றவள் குரலில் மொத்தமாக வெளிப்பட்டது அவள் வெறுமை.
இன்பனுக்கு அவனது பொறுமை போய்க்கொண்டு இருக்க, அவளை நெருங்கி அவள் கையை அழுத்தமாக பற்றி இருந்தான்… அவள் கைகளை முழங்கைக்கு மேலாக அழுத்தமாக அவன் பிடித்ததில் வலித்தது அவளுக்கு.. ஆனாலும் அப்படியே நிற்க “உன் பேர் என்ன…” என்று அதே அழுத்தத்துடன் அவன் கேட்க
தலையை சுற்றியது அவளுக்கு… “இனியன்..” என்று அவள் அதிர்ச்சியாக அவள் முணுமுணுக்க , “ம்ச்..உன் பேர் சொல்லு முதல்ல..” என்று அதட்டினான் அவன்.
அவன் கண்களை பார்த்தவள் “சிற்பிகா..” என்றாள் மெதுவான குரலில்..
“நான் என்ன சொல்லி கூப்பிடுவேன்..” என்று மீண்டும் ஒரு அழுத்தம் கொடுக்க, அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை அவளுக்கு..
ஆனால் இந்த நிலை கொடுமையாக தோன்ற, மறுப்பாக தலையசைத்து விட்டாள்.அதன் அர்த்தம் தெரியாது என்பதா, சொல்ல முடியாது என்பதா அவளுக்கே வெளிச்சம்…
இன்பன் இன்னமும் அவள் கையை விட்டிருக்க வில்லை.. ஆனால் பெண் தளர்ந்து போயிருந்தாள்… “ஏதாவது புரியுதா…” என்று அவன் மீண்டும் சற்றே சீற்றத்துடன் வினவ
கண்களை விரித்து அவனை பார்த்தாளே தவிர, வார்த்தை வரவில்லை.. “இன்னமும் பைத்தியம் பிடிக்கல… அதுமட்டும் தான் மிச்சம்.. அதைத்தவிர எல்லா பிரச்சனையும் இருக்கு… எதுவுமே தெரியல எனக்கு.. உன்னை, உன் பிள்ளையை, என்னை, என்னோட வாழ்க்கையை எதுவுமே தெரியல…. கடைசி நம்பிக்கையா தான் உன்கிட்ட வந்திருக்கேன்.. எனக்கு பதில் சொல்லு… என்னை தெரியுமா உனக்கு…
“எனக்கும், உனக்கும் என்னதான் சம்பந்தம்… இனியன் என் மகன் தானே.. சொல்லு.. ” என்று அவளை உலுக்கி கொண்டிருந்தான் இன்பன்…
சிபி அதிர்ச்சியாக அவனை பார்த்திருக்க, “எனக்கு பதில் சொல்லு சிற்பிகா… எனக்கு சொல்ல முடியுமா, முடியாதா… இல்லை நீயும் என்னை பைத்தியம் ன்னு சொல்ல போறியா.. சொல்லு…” என்று கண்களில் துளிர்த்து விட்ட ஒரு துளி கண்ணீருடன் உருக்கும் குரலில் அவன் கேட்க, உருகி போனாள் அவள்…
“இனியன்…” என்றவள் அவன் முகத்தை இருகைகளாலும் பற்ற, அவன் கைகள் மெல்ல தொய்ந்து போனது… நிற்க கூட சக்தியில்லாதவனாக அவன் தொய்வடைந்து கீழே சரிய, அவள் முன் மண்டியிட்ட நிலையில் இருந்தான்…
“இனியன்..” என்று மீண்டும் அழைத்தவள் அவன் முகத்தை தாங்கி இருந்த கையால், அவன் முகத்தை துடைத்துவிட, வியர்த்து வழிந்து, கண்களில் கண்ணீருடன் பார்க்கவே ஏதோ போல இருந்தான் அவன்… அவனை இப்படி ஒரு நிலையில் காண்போம் என்று கனவில் கூட நினைத்து இருக்காதவள், அவன் முகத்தை அவளாகவே தன் வயிற்றோடு அணைத்து கொண்டாள்…
சற்று நேரத்திற்கு முன் அவள் கைகளை பிடித்திருந்ததையே மறுத்து விட்டவன், இப்போது மொத்தமாக அவளின் அணைப்பில் இருந்தான் என்பதை விட, அவனும் அவளை கட்டிக் கொண்டிருந்தான் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.. அவளை இடையோடு கட்டிக் கொண்டிருந்தவன் கண்ணீரால் அவள் இடையை ஈரமாக்க, அவனை அணைத்து கொண்டு அவள் உச்சந்தலையில் தன் தாடையை பதித்திருந்தவளும் கலங்கித்தான் போயிருந்தாள்…
“என் இனியன்… ” என்று அவள் மனம் உரக்க கூச்சலிட, இன்பனுக்கும் ஏனோ வீடு வந்து சேர்ந்து விட்ட நிறைவு.